போர்ட்ரேட்—ஃபோட்டோகிராஃபி சிறப்பாக எடுப்பது எவ்வாறு
அன்பான நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கத்தினர்களின் ஃபோட்டோவைக் காட்டிலும் எந்தப் பொருட்களும் அதிகமாக விரும்பப்படுவதில்லை. என்னயிருந்தாலும், தரமான ஒரு போர்ட்ரேட் வெறுமனே ஒரு ஸ்நாப்ஷாட்டைக் காட்டிலும் அதிகத்தைக் குறிக்கிறது; அது, ஒருவருடைய முழு இயல்பையும் அவ்வாறே காண்பிக்க முயலும் ஒரு உருவப்படமாகும்!
பிரச்சினை என்னவென்றால், தொழில்ரீதியான புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்படும் போர்ட்ரேட்டுகளுக்கு அதிக செலவாவதால், நம்மில் சிலருக்கு அவை கட்டுப்படியாவதில்லை. நீங்களாகவே போர்ட்ரேட் புகைப்படங்களை எடுக்க முயற்சிசெய்யும்போது, வெறுமனே குறிபார்த்து படம்பிடிப்பதைக் காட்டிலும் அதில் அதிகம் உட்பட்டிருக்கிறதென்பதை சீக்கிரத்தில் தெரிந்துகொள்வீர்கள். ஏனெனில் ஒரு நல்ல போர்ட்ரேட், ஒரு நபரை மாத்திரமல்ல ஆனால் வெளிச்சம், பின்னணி, செட்டிங், போஸ், முகபாவனை, கலர் ஆகியவற்றையும்கூட உள்ளடக்குகிறது.
இருந்தாலும், நீங்கள் ஒரு காமிராவை வைத்திருந்து, சில அடிப்படை டெக்னீக்குகளை கற்றுக்கொள்வற்கு முயற்சியெடுக்க மனமுள்ளவராக இருந்தால், திருப்தியளிக்கும் போர்ட்ரேட்டுகளை நீங்கள் எடுக்கலாம். எப்படி? இதற்கு பதிலளிக்க, இந்தத் துறையில் பத்து வருடங்களுக்கும் அதிகமான அனுபவம்பெற்ற, தொழில்ரீதியான போர்ட்ரேட் புகைப்படக் கலைஞர் ஒருவரை நாம் சில கேள்விகள் கேட்போம்.
• முதலில், காமிராவுக்கு ஒருவரை சிரிக்கவைக்க சிறந்த வழி என்ன? நீங்கள் ஃபோட்டோ எடுக்கப்போகும் நபர், அவ்வாறு படம் பிடித்துக்கொள்வதற்கான மனநிலையில் இருக்கிறாரா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்! உதாரணத்திற்கு, ஒரு சிறு பெண்ணை ஃபோட்டோ எடுக்க நீங்கள் விரும்புவதாக வைத்துக்கொள்ளலாம். அவள் களைப்பாகவோ பசியாகவோ இருந்தால், அவளை நன்றாக ஃபோட்டோ எடுப்பது சிரமம். அது மாத்திரமல்லாமல், சோர்வு அவளது முகத்திலும் கண்களிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும்; அது படத்தைக் கெடுக்கும். ஆகவே ஃபோட்டோ எடுப்பதற்கு முன், ஒரு குட்டித்தூக்கம் போட்டு, கொஞ்சம் பலகாரம் சாப்பிடும்படி அவளை உற்சாகப்படுத்துங்கள்.
அந்தப் பெண்ணோடு பேசுவதும்கூட உதவுகிறது. மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் இருங்கள். அவளோடு பேசுவதன் மூலம் அவளது பதற்றத்தை நீக்குங்கள், ஆனால் அவளை விழுந்துவிழுந்து சிரிக்கவைக்க முயற்சி செய்யாதீர்கள். இது அவளது கண்களை சுருங்கச் செய்து, முகத்தை சிவக்க வைக்கிறது. அநேக முகபாவனைகளை படம் பிடிக்க முயலுங்கள். எவ்வளவதிக ஃபோட்டோக்களை நீங்கள் எடுக்கிறீர்களோ, அவ்வளவதிகமாக அந்தப் பெண்ணை சிறப்பாக காண்பிக்கும் தோற்றத்தை பெறும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது.
• உடை மற்றும் சிகையலங்காரத்தைப் பற்றியென்ன? அநேக ஆட்கள் ஒன்றுசேர்ந்து ஃபோட்டோ எடுக்கையில், நிற பொருத்தம் இருந்தால் நன்றாக இருக்கும். உதாரணத்திற்கு, ஒரு குடும்ப ஃபோட்டோவை நீங்கள் எடுக்கிறீர்களென்றால், ஒருவருக்கொருவர் பொருத்தமான நிறங்களில் ஆடை அணிந்துகொள்ள வேண்டுமென ஆலோசனை சொல்லுங்கள். அல்லது ஒருவேளை அனைவரும் ஒரே நிறத்தில் உடுத்திக்கொள்ள சொல்லுங்கள். எனினும், தடித்த ஆட்கள் கறு நிறங்களிலும் மெலிதான ஆட்கள் வெளிர் நிறங்களிலும் சிறப்பாக தோற்றமளிப்பர் என்பதை நினைவில் வையுங்கள்.
சிறு விஷயங்களுக்கும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்: ஆடை, சுருக்கமின்றி நேராக அணியப்பட்டிருக்கிறதா? கழுத்தில் டை நேராக தொங்குகிறதா? முடி நன்கு வாரப்பட்டிருக்கிறதா? கலைந்த முடிகளை உங்கள் கண் ஒருவேளை பார்க்காது, ஆனால் காமிரா பார்க்கும்! ஃபோட்டோ எடுத்துக்கொள்வது ஒரு பெண்ணாக இருந்தால், அவள் நன்றாக மேக்கப் போட்டிருக்கிறாளா?
• கண்ணாடிகள் அணிந்துகொள்ளும் நபர்களைப் பற்றியென்ன? க்ளேர் அடிப்பதால் இது ஒரு பிரச்சினையாக இருக்கலாம். முதலில், தேவையில்லாத க்ளேர் இருக்கிறதா என்பதை உங்கள் வியூஃபைண்டர் மூலம் பாருங்கள். இருந்தால், கண்ணின் மையப்பகுதியிலிருந்து அது விலகும்வரை அல்லது அங்கிருந்து மறைந்துபோகும்வரை மெதுவாக தலையைத் திருப்பும்படி அந்த நபரிடம் சொல்லுங்கள். சிலசமயங்களில், அந்த நபரின் நாடியை கொஞ்சம் கீழேயிறக்க சொல்வது உதவும்—ஆனால் இரட்டை நாடியைப்போல் அது தோன்றிவிடாமலிருக்க கவனமாயிருங்கள்!
• பின்னணியில் என்ன தெரிகிறதென்பது முக்கியமா? நிச்சயமாகவே! எலக்ட்ரிக் கேபிள்கள், சாலைகள் அல்லது வாகனங்கள் நிறைந்த ஒரு பின்னணி இருக்குமானால், அது படத்திலிருந்து நம் கவனத்தை திருப்பும். ஆகவே நீங்கள் ஃபோட்டோ எடுக்கப்போகும் நபரை தனித்துக்காட்டுகிற அல்லது அழகாக தெரியவைக்கிற பின்னணியான மரம், பூச்செடி, மர வேலி அல்லது ஒரு பழைய கட்டிடத்தின் ஒரு பகுதி போன்றவற்றை தேர்ந்தெடுங்கள்.
• வீட்டிற்குள் நீங்கள் ஃபோட்டோ எடுப்பதைப் பற்றியென்ன? வெளிர்நிற சுவரருகே அல்லது அறையிலுள்ள செடியருகே ஒரு நாற்காலியிலோ சோஃபாவிலோ அந்த நபரை உட்காரவைத்து ஃபோட்டோ எடுக்க நீங்கள் முயற்சி செய்யலாம். வர்க் டேபிள், டெஸ்க் அல்லது தையல் பொருட்களை பின்னணியாகக் கொண்டு, அவர் வேலை செய்துகொண்டிருக்கும் விதமாகவோ அவருக்குப் பிடித்த ஒரு ஹாபியை அல்லது செயலை செய்துகொண்டிருக்கும் விதமாகவோ ஃபோட்டோ எடுப்பது குறிப்பாக நன்றாயிருக்கும்.
• அழகான பின்னணி கிடைக்கவில்லையென்றால் என்ன? பின்னணியை மங்கலாக்க முயலுங்கள். ஃபோட்டோ எடுக்கப்போகும் நபரை பின்னணியிலிருந்து தூரமாக நிற்க வைத்து வெளிப்புறத்தில் ஃபோட்டோ எடுக்கும்போது இதைச் சிறப்பாக செய்யலாம். f-ஸ்டாப்பையோ லென்ஸ் அபெட்சரையோ சரிசெய்வதன் மூலம் இதை நீங்கள் செய்யலாம். f5.6 போன்ற சிறிய f-ஸ்டாப் எண், நபரை தெளிவாக ஃபோக்கஸ் செய்து பின்னணியை மங்கலாக்கும்.—ஃபோட்டோ 1-ஐக் காண்க.
• செட்டிங்கைக் குறித்து ஏதாவது குறிப்புகள்? முதலாவதாக, காமிரா ஸ்டாண்டில் உங்கள் காமிராவை வைப்பது உதவியாயிருக்கும்; அதன்பின் செட்டிங்கிற்கு நீங்கள் அதிக கவனம் செலுத்தலாம். பொதுவாக, போர்ட்ரேட்டுகள் முழு அளவிலோ முக்கால்வாசி அளவிலோ (இடுப்பிலிருந்து) க்ளோசப்பிலோ (முகமும் தோள்களும் அல்லது வெறுமனே முகம்) இருக்கலாம். (ஃபோட்டோ 2-ஐக் காண்க.) 105-லிருந்து 150 மில்லிமீட்டருக்கு இடையேயுள்ள எந்த லென்ஸும் போர்ட்ரேட் படங்களுக்கு பொருத்தமாக இருக்கும். உங்களது காமிராவிலுள்ள லென்ஸை சரிசெய்யவோ மாற்றவோ முடியாதென்றால், உங்களுக்கு வேண்டிய இமேஜ் வரும்வரை அந்த நபரின் பக்கமாக காமிராவை கொண்டு போகவோ அவரைவிட்டு பின்னால் கொண்டு செல்லவோ முயற்சி செய்யுங்கள். ஃப்ரேமில், தலைக்கு மேலேயும் சுற்றிலும் பாதங்களுக்கு கீழேயும் கொஞ்சம் இடம்விடுவது புத்திசாலித்தனமானது. இந்த விதத்தில், ஃபோட்டோவை பெரிதாக்கும்போது தலையோ பாதமோ உடம்போ வெட்டப்படுவதை நீங்கள் தவிர்ப்பீர்கள். நீங்கள் எந்தளவுக்கு பெரிதாக்குகிறீர்களோ அந்தளவுக்கு, ஃபோட்டோவின் ப்ரேம் அளவைப் பொருத்து அதிக இமேஜும் வெட்டப்படுகிறது.
உதவியளிக்கும் ஒரு வழிமுறை, மூன்றிலொரு பாக சட்டம் என்பதாக அழைக்கப்படும் ஒன்றாகும். ஃபோட்டோ எடுத்துக்கொள்பவரின் முகத்தையோ கண்களையோ, படத்திற்கு மேலிருந்து, கீழிருந்து அல்லது இருபக்கங்களிலிருந்தும் மூன்றிலொரு பாக இடைவெளி விட்டு ஃபோகஸ் செய்வதை இது அர்த்தப்படுத்துகிறது. (ஃபோட்டோ 3-ஐயும் பாருங்கள்.) எனினும், சிலசமயங்களில் போர்ட்ரேட்டின் நடுவில் கண்கள் தெரியும்படி எடுப்பது நன்றாக இருக்கும்.
• ஃபோட்டோ எடுத்துக்கொள்ளப்போகிறவரை போஸ் கொடுக்க வைப்பதைப் பற்றியென்ன? அந்த நபர் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ சாய்ந்துகொண்டோ ஆனால் ஒரு பக்கமாக கொஞ்சம் திரும்பிக்கொண்டு, கஷ்டமில்லாத ஒரு நிலையில் காமிராவைப் பார்க்கும்படி சொல்லுங்கள். முகம் மிகவும் வட்டமாக இருந்தால், பாதி முகத்தின்மீது மாத்திரமே வெளிச்சம் விழும்படி, அந்த நபரின் தலையையோ உடம்பையோ இலேசாக திருப்பச் சொல்லுங்கள். இருள் படிந்த மறுபாதிதான் காமிராவுக்கு அருகில் இருக்க வேண்டும். இது முக அகலத்தை குறைத்துக் காண்பிக்கும். மறுபட்சத்தில், முகம் இன்னும் முழுமையாக தெரிய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், முகம் முழுவதன்மீதும் வெளிச்சம் விழும்வரை தலையையோ உடம்பையோ திருப்பச் சொல்லுங்கள்.
கைகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். அவை விறைப்பாக இல்லாமல், நாடியின்மீதோ கன்னத்தின்மீதோ இலேசாக வைத்திருப்பதுபோன்ற இயல்பான நிலையில் இருக்கவேண்டும். ஃபோட்டோ எடுத்துக்கொள்கிறவர் நின்றுகொண்டிருந்தால், எப்போதும் செய்யப்படுவதுபோல் கைகளை நேராக தொங்கவிட்டுக்கொண்டு நிற்கும் தவறைத் தவிர்த்திடுங்கள். கைகளில் எதையாவது பிடித்துக்கொண்டோ இயல்பான நிலையில் கைகளை வைத்துக்கொண்டோ இருப்பது மேலானது.
• தம்பதிகளை ஃபோட்டோ எடுப்பதன்பேரில் ஏதாவது குறிப்புகள்? ஒருவரை நோக்கி ஒருவர் தலைகளை இலேசாக சாய்க்கும்படி அவர்களுக்கு சொல்லுங்கள். இருவரும் ஒரே மட்டத்தில் நிற்பதைத் தவிர்ப்பது பொதுவாக சிறந்ததாயிருக்கும். ஒரு நபரின் கண்கள், மற்ற நபருடைய மூக்கின் மட்டத்திற்கு சமமாக இருக்கும்படி நிற்கச்சொல்லுங்கள்.—ஃபோட்டோ 4-ஐக் காண்க.
• வெளிச்சத்தைப் பற்றி பேசலாம். வெளிப்புறத்தில் ஃபோட்டோக்கள் எடுப்பதற்கு எது சிறந்த நேரம்? பிந்திய பிற்பகல். பொதுவாக காற்று அமைதலாகவும், வெளிச்சம் சிவப்பு-மஞ்சள் நிறத்திலும் இருக்கிறது. சூரியவொளி முகத்தின் ஒரு பக்கத்தில் விழுந்து, நிழல் படிந்த மறுபக்கத்தில் வெறுமனே ஒரு முக்கோண வடிவில் வெளிச்சம் தோன்றும்படி செய்யும் ஒரு நிலையில் உங்கள் நண்பரை நிற்கவையுங்கள். அந்த நபர் கண்களை சுருக்கிவிடுவதை இது தவிர்க்கும். பக்கவாட்டில் படம் எடுக்க நீங்கள் விரும்பினால், காமிராவை முகத்தின் நிழல்படிந்த பக்கத்தை நோக்கி திருப்புங்கள். மேலும், சூரியவொளி உங்கள் காமிரா லென்ஸில் விழாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
• அதிகமான வெளிச்சம் இருந்தால் என்ன செய்வது? சூரியன் உங்களது நண்பருக்கு பின்புறம் இருக்கும்படி அவரை நிற்கவையுங்கள்.
• இதனால் அவரது முகத்தில் நிழல் விழாதா? விழும், ஆனால் நிழல்படிந்த பகுதிகளுக்கு வெளிச்சமளிக்க உங்களது ஃபிளாஷை நீங்கள் பயன்படுத்தலாம். சில காமிராக்கள் இதைத் தானாகவே செய்கின்றன. மற்றொரு தீர்வு, ஒரு நண்பரை உதவியாளராக வைத்துக்கொள்வதாகும். அவர் ஒரு ரிஃப்ளெக்டரை அல்லது வெள்ளை நிற பெரிய கார்ட்போர்ட் ஒன்றைப் பிடித்துக்கொண்டு, அதில் விழும் சூரிய ஒளியை ஃபோட்டோ எடுத்துக்கொள்கிறவர் முகத்தில் பிரதிபலிக்கச் செய்யலாம்.
• இன்டோர் லைட்டிங்கைப் பற்றியென்ன? ஃபோட்டோ எடுத்துக்கொள்பவரை ஒரு ஜன்னலருகே நிற்கவைப்பதன் மூலம் இயற்கை ஒளியை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு மெல்லிய திரை, ஒளியை எங்கும் பரவச்செய்யலாம். தேவைப்பட்டால், மிகக் கருமையாகத் தெரியும் முக பாகங்களுக்கு வெளிச்சமூட்ட, ஃப்ளாஷ் லைட்டையோ கார்ட்போர்ட் ரிஃப்ளெக்டரையோ நீங்கள் பயன்படுத்தலாம்.—ஃபோட்டோ எண் 5-ஐக் காண்க.
• போதுமான வெளிச்சம் இல்லையென்றால் என்ன? அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நீங்கள் ஃப்ளாஷை பயன்படுத்த வேண்டியிருக்கலாம். பக்கவாட்டில் வெள்ளை சுவரைக் கொண்டிருக்கும் ஒரு இடத்தில் அந்த நபரை நிற்கவைக்க முயற்சி செய்யுங்கள். ஒளி அந்தச் சுவரில்பட்டு பிரதிபலிக்கும்படி உங்களது ஃப்ளாஷை சாய்த்திடுங்கள். பக்கவாட்டிலிருந்து வெளிச்சம் வருவதால், முகத்தின்மீது விழும் வெளிச்சத்தின் அளவை நீங்கள் அதிகமாக கட்டுப்படுத்தலாம்.
ஒப்புக்கொள்ளவேண்டிய விதமாக, நன்றாக ஃபோட்டோ எடுக்க, தப்பும் தவறுமாகப் படம் எடுத்து நாமாகவே திருத்திக்கொள்ள வேண்டும். ஆனால் போர்ட்ரேட் ஃபோட்டோகிராஃபியின் அடிப்படை நியமங்கள் எளிமையானவை. கவனமாக திட்டமிடுவதன் மூலமும் சிறு விஷயங்களுக்குக் கவனம் செலுத்துவதன் மூலமாகவும், மிக எளிமையான காமிராவை வைத்தும்கூட, நல்ல போர்ட்ரேட்டை நீங்கள் உண்டாக்கலாம்—வரவிருக்கும் ஆண்டுகளெல்லாம் நீங்களும் உங்களது அன்பானவர்களும் பார்த்து மகிழும் ஒன்றாக அது இருக்கும்!