உலகை கவனித்தல்
தொற்று வியாதிகளின் பெரும் துயர்
சென்ற வருடம் நிகழ்ந்த 5.2 கோடி இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, தொற்று வியாதிகளால் ஏற்பட்டது என்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) சொல்கிறது. இறந்துபோன 1.7 கோடி ஆட்களில் பெரும்பான்மையினர் சிறுபிள்ளைகளாவர். WHO வெளியிட்ட தி உவர்ல்டு ஹெல்த் ரிப்போர்ட் 1996-ன்படி, கடந்த 20 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 30 புதிய தொற்று வியாதிகளாவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன; இவற்றில் எபோலா வைரஸ் மற்றும் எய்ட்ஸும் உள்ளடங்கும். காசநோய், காலரா, மலேரியா போன்ற பெரிய வியாதிகள் தடுக்கப்படவோ குறைந்த செலவில் சிகிச்சையளிக்கப்படவோ முடியுமென்றாலும், அவை மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன; மருந்துகளை அதிகம் எதிர்ப்பவையாகவும் ஆகியிருக்கின்றன. அதற்கான காரணம், சர்வதேச பிரயாணம் மற்றும் கொசு-மொய்க்கும் உஷ்ணப் பிரதேசங்களில் ஜனத்தொகை அதிகரிப்பு போன்ற காரணக்கூறுகளோடுகூட “நோய் எதிர்ப்பு மருந்துகளை (antibiotic drugs) கட்டுப்பாடின்றியும் தவறாகவும் பயன்படுத்துவது,” என்பதாக அந்த அறிக்கை சொல்கிறது.
புத்தகக்கடையில் பாவமன்னிப்பறைகள்
மத சம்பந்தமான புத்தகக்கடைகளில் பாவமன்னிப்பறைகளை ஏற்படுத்த இத்தாலிய கத்தோலிக்க குழு ஒன்று தீர்மானித்திருக்கிறது; அவை ஒவ்வொன்றிலும், பாவமன்னிப்பளிக்கும் ஒரு பாதிரி இருப்பார். பரிசோதனை இத்தாலியில் ஆரம்பமானது. நகரின் மையப்பகுதியிலுள்ள ஒரு புத்தகக்கடையில், சர்ச்சில் பாதிரியாரை சந்திக்க விரும்பாத அனைவருக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும், “ஆன்மீக புத்திமதியை கேட்பதற்கு அல்லது பாவ ஒப்புதலை செய்வதற்குக்கூட” ஒரு பாதிரி இருப்பார் என்பதாக கடையின் மானேஜர் சொன்னார். அவர் இவ்வாறு கூடுதலாக சொன்னார்: “ஆரம்ப விளைவுகள், நாங்கள் மிகவும் எதிர்ப்பார்த்திருந்ததைவிட அமோகமாக இருந்தன.” ஏன் இது துவக்கப்பட்டது? “பிராயச்சித்த சடங்கு அழிந்துவருவதைத் தடுப்பதற்காக,” என லா ரேப்பூப்ளிக்கா என்ற இத்தாலிய செய்தித்தாள் விளக்குகிறது.
எதுவும் வீணாக்கப்படுவதில்லை
சுமார் 270 கிலோகிராம் மாம்சம் எடுக்கப்பட்ட பின், பசுவின் மீதிபாகம் என்ன செய்யப்படுகிறது? சில உள்ளுறுப்புகளான தைராய்டு, பான்கிரியாஸ், நுரையீரல்கள், மண்ணீரல், அட்ரினல் சுரப்பி, ஓவரிகள், அடிமூளைச் சுரப்பி, ஈரல் மற்றும் பித்த நீர்ப்பையிலிருந்து பித்தநீர் போன்றவை மருந்துகளைத் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. எலும்புகள், குளம்புகள், தோல்கள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் கொலாஜன், மாஸ்ச்சுரைஸர்களுக்கும் லோஷன்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. குருத்தெலும்பும் கொழுப்பும் அநேக மேக்கப் மற்றும் கேச சம்பந்தமான பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் ப்யூடைல் ஸ்டியரேட், PEG-150 டிஸ்டியரேட், க்ளைகால் ஸ்டியரேட் ஆகிய பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான சோப்புகள் மிருக கொழுப்புகளிலிருந்து செய்யப்படுகின்றன. எலும்புகளும் குளம்புகளும் அரைக்கப்பட்டு ஜெலடின்னாக செய்யப்படுகின்றன; இது ஐஸ்கிரீம், சில கற்கண்டுகள், அநேக “கொழுப்பில்லாத” பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கும் நூற்றுக்கணக்கான உணவு வகைகளை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படுகிறது. பசுவின் உடலுறுப்புகள், இதுபோன்ற அநேக பொருட்களைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன: க்ரயான்கள், தீக்குச்சிகள், தரை மெழுகுகள், மெழுகு துணி, ஆன்டிப்ரீஸ், சிமெண்ட், களைக்கொல்லிகள், செல்லோஃபேன், புகைப்படத்தாள், விளையாட்டுப் பொருட்கள், சோபா துணி, உடை. பித்தக்கற்களுக்கு மிகப் பெரிய விலை கொடுக்கப்படுகிறது—ஒரு அவுன்ஸுக்கு $600 (ஐ.மா.)! தொலை கிழக்கு நாடுகளின் வர்த்தகர்கள், பாலுணர்வு ஊக்கியாக பயன்படுத்துவதற்கு அவற்றை வாங்கிச் செல்கின்றனர்.
பிரசவத்தின் சோக முடிவு
கர்ப்பமாய் இருக்கும்போதோ பிள்ளை பெறும்போதோ சுமார் 5,85,000 பெண்கள் ஒவ்வொரு வருடமும் இறக்கின்றனர் என்பதாக UNICEF-ஆல் (ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பால்) நடத்தப்பட்ட விரிவான ஒரு புதிய சுற்றாய்வு சொல்கிறது. தேசங்களின் முன்னேற்றம் 1996 (ஆங்கிலம்) என்ற அறிக்கையின்படி, பிள்ளைபெறுவதில் உண்டாகும் பெரும்பாலான துயரம் தடுக்கப்படலாம். அது இவ்வாறு குறிப்பிடுகிறது: “பெரும்பாலும், இது வியாதிப்பட்ட அல்லது மிகவும் வயதான அல்லது மிகவும் இளம்வயது சாவுகள் அல்ல ஆனால் வாழ்க்கையின் சிறந்தப் பகுதியிலுள்ள ஆரோக்கியமான பெண்களின் சாவாக இருக்கிறது.” ஒவ்வொரு வருடமும் சுமார் 75,000 பெண்கள் அரைகுறையான கருச்சிதைவின் காரணமாக இறக்கிறார்கள்; அடைப்பட்ட பிரசவத்தால் 40,000 பேர் சாகின்றனர்; இரத்தத்தில் நச்சு கலப்பதால் 1,00,000 பேர் சாகின்றனர்; பிரசவ கால ஜன்னியினால் (பிரசவத்தின் பிற்பகுதியில் வலிப்புகளும் உயர்ந்த இரத்த அழுத்தமும்) உண்டாகும் மூளை மற்றும் சிறுநீரக சேதத்தால் 75,000 பேர் இறக்கின்றனர்; இரத்தப்போக்கினால் 1,40,000-க்கும் அதிகமானோர் இறக்கின்றனர். அநேக நாடுகளில், மகப்பேறு வசதி குறைவாக இருப்பது இதற்கு மிக முக்கிய காரணம். தென் ஆசியாவில் ஒவ்வொரு 35 பேருக்கு ஒரு பெண்ணும், ஆப்பிரிக்காவின் தென்சஹாராவில் ஒவ்வொரு 13 பேருக்கு ஒரு பெண்ணும், கருத்தரிப்பு மற்றும் பிரசவம் சம்பந்தப்பட்ட காரணங்களால் இறக்கின்றனர்; கனடாவில் 7,300 பேரில் ஒருவரும், ஐக்கிய மாகாணங்களில் 3,300 பேரில் ஒருவரும், ஐரோப்பாவில் 3,200 பேரில் ஒருவரும் இதே காரணத்திற்காக இறக்கின்றனர். இந்தத் தொகை இதற்கு முந்தி கணக்கிடப்பட்டதற்கு கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகமாக இருக்கிறது; இதற்குமுன், வருடத்திற்கு சுமார் 5,00,000 பேர் இறந்தனர்.
எய்ட்ஸ் நோயாளிகள் இன்னும் அதிகரிக்கின்றனர்
“எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் உலகத்தின் பெரும் பகுதிகளில், விசேஷமாக ஆசியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில், விரைவாக பரவிவருகிறது; எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்திருக்கிறது,” என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. ஹெச்.ஐ.வி.-எய்ட்ஸ்-ஐப் பற்றி ஐ.நா. கூட்டுத் திட்டத்தால் சேகரிக்கப்பட்ட விவரம், 1995-ல் சுமார் 13 லட்சம் மக்கள் எய்ட்ஸ் அறிகுறியால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதாகவும் அது சென்ற வருடத்தைவிட 25 சதவீத அதிகரிப்பு என்பதாகவும் காண்பித்தது. உலகம் முழுவதிலுமுள்ள வயதுவந்தோரில் 2.1 கோடி பேர், ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதாகவும் அவர்களில் சுமார் 42 சதவீதத்தினர் பெண்கள் என்பதாகவும் இப்போது கணக்கிடப்பட்டிருக்கிறது. கூடுதலான 7,500 ஜனங்கள் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அநேக லட்சக்கணக்கான பிள்ளைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்ட பின், கடும் நோய் தாக்க சுமார் பத்து வருடங்கள் எடுக்கிறது. 1995-ல் எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட வியாதிகளால் 9,80,000 மக்கள் இறந்ததாகவும் 1996-ல் இது 11,20,000-ஆக உயரும் என்பதாகவும் ஐ.நா. அறிக்கை கணக்கிடுகிறது. வைரஸ் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் பரவலாக பரவிவருகிறது, சீனாவிலும் வியட்நாமிலும் இதுவேதான் எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆப்பிரிக்க தேசங்களில் பாதிப்பு அளவு ஏற்கெனவே 16-லிருந்து 18 சதவீதத்தின் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. பாதிக்கப்படும் இளம் பெண்களின் எண்ணிக்கை உலகளாவிய விதத்தில் வேகமாக அதிகரிக்கிறது என்பது வருந்தத்தக்கது. இப்படிப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதி, இந்த வைரஸைப் பெற்றிருக்கும்.
அந்த வேகத்தைக் குறித்து ஜாக்கிரதை!
பிரிட்டனில், மிக வேகமாக வாகனம் ஓட்டுவது, 1,000 பேரைக் கொன்று, 77,000 பேரைக் காயப்படுத்துகிறது என்பதாக லண்டனின் தி டெய்லி டெலிகிராஃப் அறிக்கை செய்கிறது. வேகத்தை வரம்புக்குள் வைத்துக்கொள்வதும் குறிப்பிட்ட நிலைமைகளின்கீழ் பாதுகாப்பற்றதாய் இருக்கலாம். ஹை-ஸ்பீட் ரோடுகளில் நடக்கும் விபத்துகளில் 10 சதவீதத்திற்கு அதிகமானவை முன்சென்றுகொண்டிருக்கும் வாகனத்திற்கு மிக அருகில் செல்வதன் காரணமாக ஏற்படுகின்றன. உங்களுக்கும் உங்களுக்கு முன் செல்லும் காருக்கும் இடையே இரண்டு-நொடி இடைவெளி விடவேண்டும், ஆனால் ஈரமான அல்லது வழவழப்பான ரோடுகளிலோ தெளிவற்ற பாதையிலோ செல்லும்போது இந்த இடைவெளி இரண்டு மடங்காக இருக்க வேண்டும் என்பதாக பிரிட்டிஷ் நெடுஞ்சாலை சட்டம் பரிந்துரைக்கிறது. மிக அருகில் செல்வது பாதுகாப்பற்றதாக இருப்பது மாத்திரமல்லாமல் அது களைப்பூட்டுவதாயும் அழுத்தம் தருவதாயும்கூட இருக்கிறது. பாதுகாப்பிற்காக இடைவெளி விடும்போது இன்னொரு கார் நடுவில் புகுந்துவிடுகிறது என்பதாக ஓட்டுனர்கள் அடிக்கடி குறைகூறுகிறார்கள். எனினும், நமக்குப் பாதுகாப்பான ஒரே செயல், வேகத்தைக் குறைத்துக்கொண்டு இன்னும்கொஞ்சம் இடைவெளி விடுவதே ஆகும். திடீரென ப்ரேக் போடுவது விபத்துகளை உண்டாக்கலாம், ஆகவே வரவிருக்கும் ஆபத்துக்களைக் குறித்து விழிப்புடன் இருங்கள். ஆன்டிலாக் ப்ரேக்கிங் சிஸ்டம் வைத்திருப்பது, நிறுத்தும்போது வாகனம் எவ்வளவு தூரம் சென்று நிற்கிறதோ அந்த தூரத்தைக் குறைப்பதில்லை. டிரைவிங் போதனையாளரான பவுல் ரிப்லே இவ்வாறு சொல்கிறார்: “எந்தக் குறிப்பிட்ட சூழ்நிலைமைக்கும் ஏற்ற பாதுகாப்பான வேகம், பெரும்பாலான ஓட்டுனர்கள் நினைப்பதைக் காட்டிலும் பொதுவாக அதிக குறைவானதாக இருக்கிறது.”
அறுவை மருத்துவர்களே, ஜாக்கிரதையாக பேசுங்கள்
நெதர்லாந்திலுள்ள ஏராஸ்மஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அறுவை சிகிச்சை செய்யப்படும் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்களால் “கேட்க” முடிகிறது என்பதைக் கண்டனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 240 நோயாளிகளுக்கு, சிகிச்சையின்போது பேசப்பட்ட ஒரு வார்த்தையின் முதல் அசை (syllable) சொல்லப்பட்டு, அவர்கள் மனதுக்கு வந்த முதல் வார்த்தையைச் சொல்லி அதை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். 24 மணிநேரங்களுக்குப் பிறகும்கூட, ஒரேவொரு முறை மாத்திரமே சொல்லப்பட்ட வார்த்தைகளைக்கூட பெரும்பாலான நோயாளிகள் ஞாபகத்தில் வைத்திருந்தனர். இது, மயக்கமருந்து அளிக்கப்பட்ட நோயாளிகள் ஆபரேஷனின்போது “ஒட்டுக்கேட்க” முடியும் என்பதையும் எதிர்மறையான புண்படுத்தும் பேச்சுகள் அவர்களுக்கு வேதனையளிக்கலாம் என்பதையும் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அறிவியல் ஆராய்ச்சிக்கான நெதர்லாந்து அமைப்பால் வெளியிடப்பட்ட ரிஸர்ச் ரிப்போர்ட்ஸ் ஃப்ரம் தி நெதர்லாண்ட்ஸ், இவ்வாறு முடிவுசெய்கிறது: “ஆகவே, மருத்துவ பணியாளர்கள் ஆபரேஷனின்போது பேசும் பேச்சைக் குறித்து கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.”
“பசு பித்து நோய்”
◼ பிரிட்டனில் “பசு பித்து நோய்” ஆரம்பமாயிருப்பது, கால்நடை வளர்ப்பு பற்றிய நீண்டநாளைய உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளது. இயற்கையாகவே செடிகொடிகளை உண்ணும் மிருகங்களுக்கு மற்ற மிருகங்களின் உடற்பகுதியை உணவாகக் கொடுப்பதன் மூலம், மாம்ச உண்ணிகளாக அவை மாற்றப்பட்டிருக்கின்றன. உறைந்த இரத்தமும் நொறுக்கப்பட்ட எலும்பும் மாம்ச உணவு அல்லது தீனியும் அவற்றிற்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன; இத்தீனி, அரைக்கப்பட்ட குடல்களையும் முதுகெலும்புகளையும் மூளைகளையும் கணையம் (pancreas), மூச்சுக்குழாய், சிறுநீரகங்கள் போன்ற மற்ற உள்ளுறுப்புகளையும் உள்ளடக்குகிறது. இவை, வளங்களைப் பாதுகாக்கவும், லாபத்தை அதிகரிக்கவும் மிருகத்தின் வளர்ச்சியை தீவிரப்படுத்தவும் முயல்வதற்கு தொடர்ந்து உணவாகக் கொடுக்கப்படுகின்றன. கன்றுக்குட்டிக்கு ஆறு மாதங்கள் ஆகும்போது, மற்ற மிருகங்களின் எஞ்சிய பகுதிகளிலிருந்து செய்யப்படும் பன்னிரண்டு கிலோகிராம் தீனி கொடுக்கப்படுகிறது என்பதாக அந்த வியாதியைக் குறித்து முதலில் எச்சரித்த நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ஹராஷ் நரங் சொல்கிறார். இறைச்சிக்காக மிருகங்கள் வெட்டப்படும் இடத்தை பார்த்ததைப் பற்றி அவர் இவ்வாறு சொன்னார்: “நான் ஆச்சரியமடைந்தேன். நாம் உண்மையில் கால்நடைக்கு கால்நடையை தீனியாக்கிவந்திருக்கிறோம். என்னைப் பொருத்தவரையில், இது தன் இனத்தையே தின்னும் ஒரு செயலாக இருக்கிறது.”
◼ ஒளிமயமான மறுபக்கத்தில், “பசு பித்து நோய்” காரணமாக வயதான பசுக்களை லாபத்திற்கு விற்க முடியாத பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த பால் பண்ணைக்காரர் ஒருவர், அவற்றைப் பயன்படுத்துவதற்கான ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறார். நியூஸ்வீக் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் பிரகாரம், அவர் அவற்றை விளம்பரப் பலகைகளாக பயன்படுத்துகிறார். நெரிசலான நெடுஞ்சாலைகளுக்கு அருகே மேயும் தனது கால்நடைகளின்மீது விளம்பரத்தாள்களை ஒட்டி, இவ்வாறு அவர் ஒவ்வொரு பசுவிற்கும் வாரத்திற்கு $40 பெற்றுக்கொள்கிறார். “நாங்கள் வருமானத்திற்கு புதிய வழிகளைத் தேட வேண்டும். அவற்றின் பராமரிப்புக்குத் தேவையானவற்றை அவைதாமே சம்பாதித்துக்கொள்வதற்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கிறது” என்பதாக அந்த விவசாயி சொல்கிறார்.