உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 2/8 பக். 28-29
  • உலகைகவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகைகவனித்தல்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • போப் கூறுகிறார், குற்றஞ்சாட்டப்படவேண்டியது சர்ச் அல்ல, தனிநபர்களே
  • “குடும்பங்கள் மாற்றத்தில்”
  • மாயமந்திரத்தில் பிரான்ஸின் வசீகரம்
  • ஜப்பானின் சரக்கு விற்கும் இயந்திரங்கள்
  • அடுத்த பருவவயது “குற்றச்செயல் நெருக்கடி”
  • இரத்தமேற்றப்படாத அறுவை மருத்துவம் பிரபலமடைதல்
  • நீங்கள் தொழில்நுட்ப அழுத்தத்திற்கு ஆளாகிறீர்களா?
  • மைனாவின் கார் ஹார்ன்
  • புறமத ஆசரிப்பு இன்னும் பிரபலம்
  • இரத்தமேற்றாமல் ஆபரேஷன் டாக்டர்களின் புதிய கண்ணோட்டம்
    விழித்தெழு!—1998
  • இரத்தமில்லா சிகிச்சைக்கு அமோக வரவேற்பு
    விழித்தெழு!—2000
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1993
  • இருபதாவது நூற்றாண்டு ஃபேக்ஸ் இயந்திரம்
    விழித்தெழு!—1992
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 2/8 பக். 28-29

உலகைகவனித்தல்

போப் கூறுகிறார், குற்றஞ்சாட்டப்படவேண்டியது சர்ச் அல்ல, தனிநபர்களே

சர்ச் தலைவர்கள், சிவில் அதிகாரிகள், ருவாண்டா மக்கள் ஆகியோருக்கு போப் ஜான் பால் II எழுதிய ஒரு கடிதத்தில், 1994-ல் செய்யப்பட்ட இனப் படுகொலைக்கான குற்றத்திலிருந்து ரோமன் கத்தோலிக்க சர்ச்சை விடுவிக்க முயன்றார். “சர்ச்சின் உறுப்பினர்கள் சுவிசேஷ சட்டத்திற்கு எதிராக, தவறான செயல்களில் ஈடுபடுவதற்காக சர்ச்சையே குற்றப்படுத்த முடியாது” என்று அவர் உறுதியுடன் கூறினார். என்றபோதிலும், போப் மேலும் கூறினார்: “இனப் படுகொலையின்போது பாவம் செய்திருக்கும் சர்ச் உறுப்பினர் அனைவரும் தாங்கள் செய்திருக்கும் செயல்களின் பின்விளைவுகளை ஏற்கும் தைரியம் உடையவர்களாய் இருக்க வேண்டும்.” சுமார் 5,00,000 பேரின் உயிர்களைக் கொள்ளைகொண்ட படுகொலையில் பங்கு வகித்து, முன்னின்று உற்சாகப்படுத்திய ருவாண்டா மதகுருக்களின் மீதான குற்றச்சாட்டையும், அதை நிறுத்துவதற்கு வேண்டி ஆவண செய்யாதிருந்த கத்தோலிக்க குருக்களாட்சியின் மீதான குற்றச்சாட்டையும் போப் வெளிப்படையாகப் பேசியிருப்பது இதுவே முதல் தடவையாகத் தோன்றுகிறது. வத்திகன் உரையாசிரியர் லுயீஜி ஆகாட்டோலி, கோரியிரே டேல்லா சேரா என்ற இத்தாலிய செய்தித்தாளுக்கு எழுதுகையில், நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது என்று கத்தோலிக்கர்களிடம் போப் கூறினது, “நெஞ்சைத் தொடும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது,” ஏனெனில் “இனப் படுகொலை குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களில், வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள மதகுருமார்களும் அடங்குவர்” என்று அவர் கூறினார். ருவாண்டாவின் பெரும்பாலானோர்கள் கத்தோலிக்கர்.

“குடும்பங்கள் மாற்றத்தில்”

“கனடாவைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்தின் அமைப்பு வெகுவாய் மாறியிருப்பது தெளிவாக இருக்கிறது. ஏனெனில் பிள்ளைகளையுடைய திருமணமான தம்பதிகள் எல்லா குடும்பங்களிலும் 44.5 சதவீதமாக மட்டுமே இருக்கின்றனர்” என்று தி குளோப் அண்ட் மெய்ல் அறிக்கை செய்கிறது. அதற்கு முரணாக, “1961-ல், திருமணமான கணவன் மனைவிகள், பிள்ளைகளோடு சேர்ந்து கனடாவின் எல்லா குடும்பங்களிலும் கிட்டத்தட்ட 65 சதவீதமாய் இருந்தனர்.” வியப்பில் ஆழ்த்தும் மற்றொரு எண்ணிக்கையானது, வட்டார உடன்பாட்டுத் திருமணங்களின் (common-law marriages) எண்ணிக்கையில் அதிகரிப்பு. அது கிட்டத்தட்ட மூன்று மடங்காகிவிட்டது. அதாவது, 1981-ல் 3,55,000 ஆக இருந்தது, 1995-ல் 9,97,000 ஆகிவிட்டது. கனடாவின் புள்ளியியல் துறையால் நடத்தப்பட்ட சுற்றாய்வு மேலும் குறிப்பிட்டதாவது: “மணவிலக்கு, மறுமணம் மற்றும் வட்டார உடன்பாட்டு ஜோடியிணைப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தால், குடும்ப அமைப்புகளில் தீவிர மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.”

மாயமந்திரத்தில் பிரான்ஸின் வசீகரம்

“வருவதை எடுத்துரைப்பவர்களுடனும் ஆவியுலகத் தொடர்பு கொண்டுள்ளவர்களுடனும் பிரெஞ்சுக்காரர்கள் ஏன் அவ்வளவு நேரத்தைச் செலவிடுகின்றனர்?” என்று தி நியூ யார்க் டைம்ஸ் கேட்கிறது. “புலனாகாதவற்றைக் காணும் ஆற்றல் வாய்ந்தவர்களையும் மாயமந்திர எண் கணிப்பாளர்களையும் அணுகும் பிரெஞ்சுக்காரர்கள் எண்ணிக்கையில் எல்லா காலத்தையும்விட இப்போது பெருகிவருகிறார்கள் என்று அறிக்கை செய்யப்படுகிறது. . . . மந்திரவித்தை வேகமாய் வளர்ந்து வருகிறது என்பதற்கான நிரூபணம் அரசிடம் இருக்கிறது. கடந்த ஆண்டில், இதுவரையில் மிகப் பெரிய எண்ணிக்கையாய் இருக்கும் கிட்டத்தட்ட 50,000 வரிசெலுத்தும் ஆட்கள், தாங்கள் ஜோதிடர்களாக, மாயவித்தையால் குணமளிப்பவர்களாக, ஆவியுலகத்தொடர்பு கொள்பவர்களாக, மற்றும் அதைப்போன்ற வேலைகளிலிருந்து தங்களுக்கு அதிக வருமானம் கிடைத்திருந்ததைத் தெரிவித்ததாக வரி அலுவலக அதிகாரிகள் கூறினர். ஒப்பிடுகையில், அந்த நாட்டில் 36,000-த்துக்கும் குறைவான ரோமன் கத்தோலிக்க குருமாரும் சுமார் 6,000 மனநோய் மருத்துவர்களுமே இருந்தனர்.” சிலர் இவ்வாறு அணுகுவதற்குக் காரணம், ஆயிர ஆண்டு ஆட்சியின் முடிவில் என்ன நேரிடலாம் என்பதைப் பற்றிய பயம் என்பதாக எடுத்துக்காட்டியது. மதத்தைப் போன்ற ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் மறைந்துபோவதன் விளைவாக அவ்வாறு அணுகினர் என்று மற்றவர்கள் கருதுகின்றனர். சமீப ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் வேறுபட்டவர்களாய் ஆகியிருப்பதாக இந்த வித்தைகளைப் பழக்கமாய்ச் செய்துவருபவர்கள் கூறுகின்றனர். கடந்த காலங்களில், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பெண்களாய் இருந்தனர். இப்போது இருபாலாருமே சரிசமமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். வியாதி, காதல் விவகாரம் ஆகியவற்றைப் பற்றிக் கேட்பதைக் காட்டிலும், மக்கள் இப்போது தங்கள் வேலைகளைப் பற்றி கேட்கின்றனர்.

ஜப்பானின் சரக்கு விற்கும் இயந்திரங்கள்

“ஜப்பானில் நாணயத்தால் இயங்கும் சரக்கு விற்கும் இயந்திரங்களில் (vending machines) கிடைக்காத பொருள் கிட்டத்தட்ட ஒன்றுமேயில்லை” என்று தி வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது. நாணயத்தால் இயங்கும் இயந்திரங்களின் மூலம், பரிசுப்பொருட்கள், CD-க்கள், பியர், குத்துச்சண்டை வீரர் அணிவது போன்ற கால்சட்டைகள், முட்டைகள், முத்துக்கள், யானை பொம்மைகள், முழுநீளக் காலுறைகள் இணைக்கப்பட்ட பெண்களுக்கான பேன்ட்டீஸ்கள், உபயோகித்தபின் எறிந்துவிடக்கூடிய கேமராக்கள், மற்றும் உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிற பொருட்கள் அனைத்தும் விற்கப்படுகின்றன. இந்த இயந்திரங்களில், “குனிவதற்குத் தேவைப்படாத வண்ணம் நெஞ்சளவு உயரத்தில்” பொருட்களை வெளியே கொண்டுவரும் இயந்திரங்களும், பார்வையை மறைக்காத வண்ணம் தாழ்வான உயரத்தில் அமைக்கப்பட்ட இயந்திரங்களும், பூக்களாலும் பிற கலைவேலைப்பாடுடைய பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட இயந்திரங்களும்கூட உள்ளன. “மொன்டானாவின் பரப்பளவையுடைய ஜப்பானில், ஐக்கிய மாகாணங்கள் முழுவதிலும் உள்ள எண்ணிக்கையின் அளவான சரக்கு விற்கும் இயந்திரங்கள் இருக்கின்றன” என்று அந்தக் கட்டுரை மேலும் கூறுகிறது. “ஜப்பானின் சரக்கு விற்கும் இயந்திரங்களில் பெரும்பாலானவை வெளியே வைக்கப்பட்டுள்ளன; பனிப்படர்ந்த பியூஜீ மலை உச்சியிலும்கூட ஒன்று இருக்கிறது.” அதிக விலையுள்ள பொருட்கள் வெளியே வைத்து அளிக்கப்படலாம், ஏனெனில் பொது உடைமைகளை அழிக்கும் சம்பவங்களின் வீதங்கள் ஜப்பானில் குறைவு. இடத்தின் விலையோ அதிகம், ஆகவே கடைக்காரர்கள் தங்கள் கடை அலமாரிகளில் இடத்தை அதிகரித்துக்கொள்ளும் விதத்தில் சரக்கு விற்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். டோக்கியோவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு தெரு மூலையிலும் இவற்றைக் காணலாம். என்றபோதிலும், கொஞ்சம் நாணயத்தை செருக முடிந்த எந்தவொரு குழந்தையாலும், மதுபானம், பியர், சிகரெட்டுகள் போன்றவற்றை எளிதில் பெறமுடிகிறதே என்று சில மக்கள் தொகுதியினர் வருத்தப்படுகின்றனர்.

அடுத்த பருவவயது “குற்றச்செயல் நெருக்கடி”

“ஐக்கிய மாகாணங்களில் நடைபெறும் வன்முறைக் குற்றச்செயல், அடுத்த சில ஆண்டுகளில் வெடிக்கவிருக்கும் ‘மறைவான டைம் பாம்’” என்று வழக்கறிஞர்களும் சட்டத்தை அமலாக்கும் நிபுணர்களும் அடங்கிய ஓர் அமைப்பான, அமெரிக்கக் குற்றச்செயல் ஆலோசனைக் குழு ஒன்றின் அறிக்கை பற்றி தி நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. “வயதுவந்தவர்கள் குறைவான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களாய் இருக்க, பருவவயதினரிடையே நடைபெறும் வன்முறையான குற்றச்செயல் கடந்த பத்தாண்டுகளில் மிக அதிகமாகியிருக்கிறது. . . . 1950-களிலிருந்து வந்த பருவவயதினர்களின் ஒவ்வொரு சந்ததியும், முந்தின சந்ததியைவிட அதிக வன்முறையானதாய் இருந்திருக்கிறது.” 2005-வது ஆண்டு வாக்கில், 14 முதல் 17 வயது ஆண்கள் 23 சதவீதம் அதிகரிப்பர். இந்த அதிகரிப்பே நிபுணர்களுக்கு கவலையை உண்டாக்குகிறது. குற்றம் புரியும் தங்களுடைய வழிகளை மிகச் சிறிய வயதிலேயே ஆரம்பிக்கும் மிக ஆபத்தான குற்றவாளிகள் ஆண்களே என்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொது விவகாரங்கள் துறையில் ஒரு பேராசிரியராய் பணியாற்றும் ஜான் ஜே. டியூல்யோ, இளையவர் கவலை தெரிவிப்பவராய், இவ்வாறு குறிப்பிட்டார்: “குற்றச்செயல் நெருக்கடிக்கு முன்பு உள்ள அமைதிக்காலத்தில் நாம் இருக்கிறோம்.” அமெரிக்கக் குற்றச்செயல் ஆலோசனைக் குழுவுக்காக தொகுத்துள்ள அவருடைய அறிக்கை காட்டியதாவது, வன்முறைக் குற்றச்செயல்கள் அனைத்திலும் சுமார் மூன்றில் ஒரு பங்கு, கைதுசெய்யப்பட்டு ஆனால் தற்காலிக அனுமதியின்பேரில் குறுகிய கால விடுதலை பெற்றிருக்கும், அல்லது நன்னடத்தையின் பேரில் அதிகாரியின் மேற்பார்வையின்கீழ் தண்டனைக்கு இடைக்கால நிறுத்தம் பெற்றிருக்கும், அல்லது நீதிமன்ற விசாரணைக்கு முன்பு வெளியில் விடப்பட்டிருக்கும் ஆட்களாலேயே செய்யப்படுகிறது. குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது, ஆனால், அவ்வாறு செய்யத் தவறுகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இரத்தமேற்றப்படாத அறுவை மருத்துவம் பிரபலமடைதல்

1996-ன் பிற்பகுதியில், அ.ஐ.மா.-வின் ஹார்ட்ஃபோர்ட்டிலுள்ள ஓர் ஆஸ்பத்திரி, “யெகோவாவின் சாட்சிகளுக்கு இரத்தமேற்றாத அறுவை மருத்துவ மையங்கள்” கொண்ட, நாடு முழுவதிலுமுள்ள 56 ஆஸ்பத்திரிகளுடன் சேர்ந்துகொண்டது என்பதாக தி ஹார்ட்ஃபோர்ட் கொர்ரன்ட் அறிக்கை செய்தது. “இரத்தமேற்றாமல் செய்யப்படும் அறுவை மருத்துவத்தைப் பற்றி ஆய்வு செய்த பிறகு, மற்ற நோயாளிகளின் விருப்பங்களைக் காட்டிலும் யெகோவாவின் சாட்சிகளின் விருப்பங்கள் இனிமேலும் அவ்வளவு வித்தியாசமானவையாய் இல்லை என்று ஆஸ்பத்திரி நிர்வாகிகள் உணர்ந்துகொண்டனர்.” மருந்துகளின் உதவியுடனும், முன்னேற்றமடைந்த அறுவை தொழில்நுட்பங்களின் உதவியுடனும், மருத்துவர்கள் அயலுறுப்பு பொருத்தும் அறுவை மருத்துவத்தைச் செய்திருக்கின்றனர். மேலும் இணை மாற்று அறுவை மருத்துவத்தையும் திறந்த இதய அறுவை மருத்துவத்தையும், புற்றுநோய் மற்றும் பிற அறுவை மருத்துவங்களையும்—அனைத்தையும் இரத்தம் ஏற்றாமலேயே—மருத்துவர்கள் செய்திருக்கின்றனர். அதோடு, இரத்தம் ஏற்றிக்கொள்வதால் விளையும் ஆபத்துக்களையும் பல உடல்நல நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஹார்ட்ஃபோர்ட் ஆஸ்பத்திரியின் தலைமை அறுவை மருத்துவரான டாக்டர் டேவட் கிராம்பீ, இளையவர் இவ்வாறு வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார்: “இரத்தம் ஒரு டானிக் என்பதாக கருதிவந்த நாட்களில் நான் பயிற்சிபெற்றேன். இப்போது அது நச்சாகக் கருதப்படுகிறது.” இதற்கு ஒத்தவாறே இரத்தத்தை உடலுக்குள் ஏற்கும் பழக்கத்தை பைபிள் தடை செய்கிறது.—ஆதியாகமம் 9:4; லேவியராகமம் 17:14; அப்போஸ்தலர் 15:28, 29; 21:25.

நீங்கள் தொழில்நுட்ப அழுத்தத்திற்கு ஆளாகிறீர்களா?

செல்லுலார் ஃபோன்கள், பேஜர்கள், ஃபாக்ஸ் மெஷின்கள், வீட்டுக் கம்ப்யூட்டர்கள், மோடம்கள் ஆகியவை தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. என்றபோதிலும், இந்தப் புதிய தொழில்நுட்பம் மக்களின் தனிமையையும், இளைப்பாறும் நேரத்தையும் ஆட்கொண்டுவிட்டதாக அழுத்தத்தைக் கையாளுவதில் விசேஷித்த அக்கறை செலுத்துபவரான டாக்டர் சஞ்சய் ஷார்மா உணருகிறார். அதன் விளைவே தொழில்நுட்ப அழுத்தம். தி டோரன்டோ ஸ்டார் அறிக்கை செய்ததன்படி, “வியாதி, உற்பத்தித்திறன் இழப்பு மற்றும் குறைமாதப் பிரசவம் ஆகியவை ஏற்படுவதற்கு அழுத்தம் ஒரு பெரிய காரணி.” அதன் பாதிப்புகள், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மனோநிலையில் ஏற்ற இறக்கம், தலைவலிகள், தசை இறுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, மற்றும் நோய்க் காப்பு முறை பலவீனமடைதல் போன்றவை. நீங்கள் தொழில்நுட்ப அழுத்தத்திற்குள்ளாவதை எப்படி தவிர்க்கலாம்? சந்தேகமின்றி உங்கள் டாக்டரை அணுகுவதே ஞானமானது. அதோடு, தவறாமல் உடற்பயிற்சி செய்தல், வாரயிறுதி ஒன்றில் விடுமுறையில் செல்லுதல், தினசரி சூரிய ஒளியைப் பெறுதல் ஆகியவை, “மனச்சோர்வையும் அழுத்தத்தையும் எதிர்த்துப் போராடும் ஹார்மோன்களை விடுவிப்பதைத் தூண்டுவிக்கின்றன” என்று அந்த அறிக்கை சிபாரிசு செய்கிறது. முடிவாக, “உங்கள் ஃபோனிலும் ஃபாக்ஸ் மெஷினிலும் இருக்கும் அழைப்பு மணியை ஆஃப் செய்துவிடுங்கள். பதிலளிக்கும் மெஷின் அழைப்புக்களைப் பதிவு செய்யட்டும்.”

மைனாவின் கார் ஹார்ன்

இங்கிலாந்தின் கிஸ்பராவைச் சேர்ந்த வட யார்க்‍ஷயர் நகரில் ஒரு விநோத பிரச்சினையை மைனா வகையைச் சேர்ந்த பறவைகள் எழுப்பிவருகின்றன—அவை கார் ஹார்னைப் போன்று ஒலி எழுப்பி மக்கள் தங்களின் அதிகாலை தூக்கநிலையிலிருந்து திடுக்கிட்டு எழும்படி செய்கின்றன. “வீட்டுக்காரர்கள் திருடர்களை எதிர்த்துச் சண்டையிட ஓடிவருகையில், பெரும்பாலும் ஒரு மைனா பாடிக்கொண்டிருப்பதைக் காண்கின்றனர்,” என்பதாக லண்டனின் தி டைம்ஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது. “அதன் குரலும் தொனியும் கார் ஹார்னைப் போன்றே இருக்கிறது” என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார். “நாங்கள் அனைவரும் பயித்தியமாகிவிடுவோம்.” மேலும் அதிக இடைவெளி இருப்பதில்லை. ஒரு பறவை ஒரு புதிய பாடலை மற்றொரு பறவையிடம் பாடிக்காட்ட, அந்த ஒலி பொதுவாக அடிக்கடி ஒலிக்கப்படுவதாய் ஆகலாம். உண்மையில், பிரிட்டனின் பறவைகளில் சுமார் 30 பறவைகளுக்கு பிற ஒலிகளைப் போன்ற போலி ஒலியெழுப்பும் திறன் உள்ளது. அவை அனைத்திலும் பொதுவான ஸ்டார்லிங் பறவை (Sturnus vulgaris) மிக அதிக திறமை வாய்ந்தவை. பிற பறவைகளைப் போன்ற ஒலிகளை எளிதில் எழுப்பக்கூடும். அவற்றில் ஒன்று, ஒரு தொலைபேசி மணியைப் போலவே ஒலியெழுப்புவதாய் அறியப்பட்டிருந்ததால், உண்மையான தொலைபேசி மணியின் ஒலியிலிருந்து அந்தப் போலி ஒலியைப் பகுத்தறிய முடியவில்லை.

புறமத ஆசரிப்பு இன்னும் பிரபலம்

முழுக்காட்டுபவரான புனித யோவானின் தினத்துக்கும், “கத்தோலிக்கப் புனிதரான அவருக்கும் ஒருவர் கற்பனை செய்துபார்ப்பதைவிட மிகக் குறைவான சம்பந்தமே இருக்கிறது,” என்பதாக பிரேஸிலின் ஃபோல்யா டீ எஸ் பாலோ அறிக்கை செய்கிறது. இந்த ஆசரிப்பு “அந்தப் புனிதர் பிறந்த தினமாகச் சொல்லிக்கொள்ளப்படும் அதே தினத்தில் வருகிறதாக இருந்தாலும், . . . உண்மையான ஆசரிப்பு வேளாண்மை மற்றும் புறமத அம்சங்களைக் கொண்டது.” மனிதயின வல்லுநர் காமாரா காஸ்கூடூவின் கண்டுபிடிப்புகளைத் தொகுத்துக்கூறுவதாய், அந்தச் செய்தித்தாள் இவ்வாறு கூறுகிறது: “ஜெர்மானிய மற்றும் இந்தோ-ஐரோப்பிய சோலார் பண்பாட்டுத்தொகுதியினர்” இந்த ஆசரிப்பை அறுவடைக் காலத்தில் கொண்டாடினர். “மலட்டுத்தன்மை, தானியங்களுக்கு ஏற்படும் நோய்கள், வறட்சிகளை ஏற்படுத்தும் பிசாசுகள் ஆகியவற்றை விரட்டியடிப்பதற்காக” அவ்வாறு கொண்டாடினர். பல ஆண்டுகளுக்குப் பின்பு, இந்தக் கொண்டாட்டம் போர்ச்சுகீஸியரால் பிரேஸிலில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில நாடுகளில் இந்த ஆசரிப்பில் இன்னும் நிலவி வரும் ஒரு பழக்கம், புனித யோவானின் தீயை எரிப்பது. இந்தப் பழக்கம் எங்கிருந்து வந்தது? “இந்தப் பாரம்பரியப் பழக்கம் . . . சூரியக்கடவுளின் வணக்கத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அக்கடவுள் பூமியிலிருந்து மிகத்தொலைவு சென்றுவிடாதபடியும், கடுங்குளிரை உண்டாக்காமல் இருக்கும்படியும் பூஜிப்பதாகும்” என்று அந்தச் செய்தித்தாள் கூறுகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்