உலகத்தைக் கவனித்தல்
விடுமுறை நாட்களின் அழுத்தம்
விடுமுறை நாட்களைச் செலவழிப்பதற்கு செல்வதைக்காட்டிலும் ஒருசில பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதுதானே அழுத்தத்திலுள்ள நபருக்கு நன்மைபயக்கக்கூடும். பிரேஸிலுள்ள சாவ் பாலோவின் மருத்துவப் பள்ளியின் பேராசிரியராகிய சற்ழ டஃபிக் என்பவர் வேழ பத்திரிகையில் இப்படிச் சொல்வதாக மேற்கோள் காட்டப்பட்டது: “நம்முடைய உடலின் இயங்குமுறை ஒரு கடிகாரத்தைப் போல ஓடுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. எந்த ஒரு மாற்றமும், கரீபியனில் ஒரு வாரம் செலவழிக்கும் ஒரு சொகுசான வாழ்க்கையும் உடலுக்கு களைப்பாயிருக்கும்.” ஒரு வேலை சவால்விடும் வேலையாயிருந்தாலும்சரி அவ்வாறு இல்லாவிட்டாலும்சரி தீங்கான அழுத்தத்தை தவிர்ப்பதற்கு அவர் இதைப் பரிந்துரை செய்கிறார்: “[நீங்கள்] செய்துகொண்டிருப்பவற்றின்பேரில் திருப்தியுள்ளவர்களாயிருங்கள்.” வழக்கமாக செய்யும் வேலையைவிட அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் வேறு வேலையை செய்வதற்கு எப்போதும் முயற்சிப்பதற்கு பதிலாக இந்த மருத்துவர் ஆலோசனை கூறுகிறார்: “ஒருவேளை இரகசியம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் ‘விடுமுறை கழிக்க செல்வது’தான். அதாவது, வேலையைத் தவிர, திருப்தியளிக்கும் வித்தியாசப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும்.” (g92 10/8)
பெற்றோரை அடித்தல்
பெற்றோருக்கு “பருவவயதினருடைய மூர்க்கத்தனமே மறைந்திருக்கும் அச்சம்” என்பதாக விவரிக்கப்பட்டிருக்கும் காரியம் ஆஸ்திரேலியாவில் உயர்ந்துகொண்டே இருக்கிறது. பெற்றோரை அடிக்கக்கூடிய பருவவயதினரின் எண்ணிக்கை இந்த நாட்டில் வெகு வேகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது என்று போலீஸ்காரரும் மக்கள்நலத் தொகுதிகளும் அறிக்கை செய்கின்றனர். சாதாரணமாக தாய்மார்கள் இதற்கு பலியாவதோடு, தகப்பன்மார்களும் தாத்தாமார்களும் பாட்டிமார்களுங்கூட கொடிதாக தாக்கப்படுகிறார்கள். சன்டே டெலகிராஃப் என்ற சிட்னி செய்தித்தாள் மக்கள்நல அமைப்பின் இயக்குநர் இப்படிச் சொல்வதாக மேற்கோள் காட்டுகிறது: “10 வயதிலிருக்கும் இளம் பிள்ளைகளே சரீரப்பிரகாரமான வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று கேள்விப்படுவது மக்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது—தங்கள் தாயையும் மற்ற நெருங்கிய உறவினரையும் மிரட்டுகிறார்கள்.” ஒரு சமுதாய மக்கள்நல சேவை, அடிக்கப்பட்ட பெற்றோரிடமிருந்து வரும் அநேக அழைப்புகளின் காரணமாக அது அதற்கு பலியானவர்களுக்கும் மீறி நடக்கிறவர்களுக்கும் ஒரு விசேஷ திட்டத்தைத் தீட்டுகிறது. (g92 10/8)
இராணுவக் கற்பழிப்பு
இரண்டாம் உலக யுத்தத்தின்போது, யுத்த களத்திலிருந்த இராணுவப்படையினரின் உபயோகத்திற்காக ஜப்பானிய இராணுவம் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சிறு பெண்களையும் இளம் பெண்களையும் கைப்பற்றினர். “ஆறுதல் பெண்கள்” என்று மறைமுகமாக அழைக்கப்பட்ட பெண்களில், சேனைகள் பின்வாங்கியவுடன் மேகநோயினால் சாகாதவர்களை இறப்பதற்கு அப்படியே விட்டுவிட்டனர். ஐம்பது வருடங்களுக்குப் பிற்பாடு, ஒரு மனிதன், தான் வகித்த பங்கை எல்லோருக்கும் முன்பாகவும் ஒப்புக்கொள்ள முன்வந்து, மிகவும் மனஸ்தாபப்பட்டான். “ஜப்பானிய பேரரசின் கூட்டுச் சேனைக்குப் பால் அடிமைகளாக ஆவதற்கு தங்கள் இளம் தாய்மார்களை டிரக் வண்டிகளில் அதன் ஆட்கள் ஏற்றுவதைக் கண்டு புலம்பும் கொரிய நாட்டுப் பிள்ளைகளை பிடித்து உதைப்பது போன்ற நினைவுகளை மறக்கமுடியவில்லை,” என்று 78 வயதுடைய சழே யோஷிடா என்பவரைப் பற்றி மாய்னிச்சி டெய்லி நியூஸ் சொல்கிறது. அப்போது அவன் எப்படி உணர்ந்தான் என்று கேட்கப்பட்டதற்கு யோஷிடா இப்படி பதிலுரைத்ததாக செய்தித்தாள் அறிக்கை செய்கிறது: “நாங்கள் வெறுமென கொடுக்கப்பட்ட கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தோம். உள்ளம் மரத்துப்போனது. அது வெறும் வியாபாரமாக இருந்தது. வேறு கருத்து சொல்வதற்கு இயலவில்லை. நான் வெறுமையாய் உணர்ந்தேன். நான் மிகவும் வேலையாயிருந்தேன், நான் நம்பிக்கை இழந்தவனானேன், நான் ஒன்றும் பேசாமலிருக்க வேண்டியிருந்தது.” அநேக தேசங்களின் இராணுவ அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட பெண்களையோ வேசிகளையோ தங்களுடைய சேனைகள் கொண்டிருக்குமாறு பார்த்துக்கொண்டனர். (g92 10/8)
நல்ல பூமி—அழிந்துகொண்டிருக்கிறது
விஞ்ஞானம் என்ற பத்திரிகையிலுள்ள அறிக்கையின் பிரகாரம் உலகின் சாகுபடி நிலம் குறைந்து, “சீக்கிரமாக துடைத்தழிக்கப்பட்டோ காற்றோடு தூசியாகவோ ஆகிறது.” உவாஷிங்டன் D.C.-யிலுள்ள உலக வளஆதார நிறுவனம் (WRI) மார்ச் மாதத்தில் மூன்று-வருட ஆராய்ச்சியின் பயன்களை வெளியிட்டது, அதில் இரண்டாம் உலக யுத்தம் நடந்தது முதல், நிலத்தின் நிலைமைகள் உலகமுழுவதும் எப்படி மாற்றத்தை அடைந்திருக்கின்றன என்று நூற்றுக்கணக்கான வல்லுநர்கள் விமர்சித்தனர். விளைவுகள்? மனிதன் பெரும்பாலும் காட்டை அழிப்பதனாலும் அதிகமான மேய்ச்சலினாலும் தீங்கிழைக்கும் விவசாய செயல்முறைகளினாலும் நிலத்தை துர்ப்பிரயோகம் செய்வதன் காரணமாக, சீனா மற்றும் இந்தியாவின் மொத்த நிலப்பரப்புக்கு ஒப்பான முன்பு செழிப்பாயிருந்த நிலம் இப்போது மிக மோசமாக சீரழிந்திருக்கிறது. இந்தப் போக்கு தீங்கானது. ஏனெனில், வளர்ந்துவரும் மக்கள்தொகைக்கு உணவு வழங்க அடுத்த அரை நூற்றாண்டில் உலகம் உணவு உற்பத்தியை மும்மடங்கு அதிகரிக்கவேண்டும் என்று உணவு வளஆதார நிறுவனத்தின் தலைவரான கஸ் ஸ்பெத் மதிப்பீடு செய்கிறார். (g9210/8)
“குழந்தைகளாகிய உங்கள்மீது தீங்கான செல்வாக்கு செலுத்தினோம்”
பிள்ளை துர்ப்பிரயோகம்? பொதுவான கருத்தில் அல்ல. மேலே கூறப்பட்டுள்ள வார்த்தைகள் டேவிட் கர்லிட்ஸ் என்பவரால் கூறப்பட்டன. பாறையிலிருந்து தொங்கும்போது சிகரெட்டை பற்றவைக்கும் மலை ஏறுபவனாக அவர் வின்ஸ்டன் சிகரெட் விளம்பரங்களில் ஒரு நடிகராக நடித்திருக்கிறார். கர்லிட்சும் வேன் மெக்லாரனும் (மார்ல்போரொ சிகரெட் விளம்பரங்களுக்கு தோன்றியவர்கள்) பள்ளிப் பிள்ளைகளடங்கிய குழுக்களுக்குத் தோன்றி அவர்களைப் புகைபிடிக்காது இருக்கும்படி மாற்றிவருகிறார்கள். கர்லிட்ஸ் விளக்கமாக சொல்பவராய், “பையன்களே, நீங்கள் புகைபிடிப்பீர்களானால் மாக்கோவாக இருப்பீர்கள் என்று நாங்கள் உங்களை நம்பச்செய்தோம்,” என்றார். மெக்லாரன், நுரையீரல் ஒன்றை புற்றுநோயின் காரணமாக இழந்தவராய், “நான் புகைபிடிக்க தெரிந்துகொண்டதனிமித்தம் என்னுடைய வாழ்க்கை மிகவும் குறுகியது,” என்று பரிதாபகரமாய் ஒப்புக்கொண்டார். (g92 10/8)
வெறிசார்ந்த காந்தம்
எருசலேமின் பழைய நகரம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுப்பதோடு மட்டுமல்லாமல், எண்ணிறந்த மூளை குழம்பிய ஆட்களையும் கவர்ந்திழுக்கிறது. இவர்களே தாங்கள் பைபிள் பாத்திரங்கள் என்ற நம்பிக்கையுடையவர்களாகவோ உலக சமாதானத்திற்கு திறவுகோல் தங்களிடமே உடையவர்களாய், அதை எருசலேமின் சுவர்களில் வெளிப்படுத்தவேண்டும் என்று நம்புகின்றனர். “கிறிஸ்தவர்கள் தங்களை இயேசுவாகவோ அந்தக் கன்னிகையாகவோ, அல்லது சாதாரணமாக அடையாளப்படுத்துவதுபோல யோவான் ஸ்நானகனாகவோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். வையா டோலொரொசா மற்றும் கார்டன் டோம்ப் போன்று இயேசுவோடு சம்பந்தப்பட்ட இடங்களில் தங்கள் உணர்ச்சிகளின்மீது கட்டுப்பாட்டை அவர்கள் இழந்துவிடுகிறார்கள்,” என்று தி நியூ யார்க் டைம்ஸ் சொல்கிறது. “யூதர்கள் தங்களை மோசேயாகவோ தாவீது அரசராகவோ பழைய ஏற்பாட்டிலுள்ள மற்ற பாத்திரங்களாகவோ அடையாளப்படுத்திக்கொண்டு, ஒலிவ மலையிலோ அந்த மேற்கத்திய சுவரிலோ தங்கள் உணர்ச்சிகளின்மீது கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறார்கள்.” ஒரு சுற்றுலாப்பயணி சமீபத்தில் ஹோலி செப்பல்ச்சர் சர்ச்சில், சிலுவையை வெடுக்கென்று இழுத்துப்போட்டு, விளக்குகளை உடைத்து, விக்கிரகங்களை வணங்கக்கூடாது என்று கத்தினவராக ஒரு சிலையை தகர்க்க முயற்சித்துப் பித்துப் பிடித்தவராக ஓடினார். ஒவ்வொரு வருடமும் 50 முதல் 200 ஆட்கள், மனநோய் மருத்துவர்கள் எருசலேம் கோளாறு என்று அழைக்கும் நோயினால் அவதியுற்று கேஃபர் ஷால் என்ற ஒரு மனநோய் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படுகிறார்கள். மனநோய் இருப்பவர்களோடு அந்நோயில்லாதவர்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் 4-க்கு 1 என்று எண்ணிக்கையில் அவர்கள் இருக்கிறார்கள், 2-க்கு 1 என்ற எண்ணிக்கையில் ஆண்கள் பெண்களைவிட மிஞ்சிவிடுகிறார்கள். (g92 9/22)
“யாவே” ஒருவரே கடவுள் என்று போப் அறிவிக்கிறார்
“கடவுள் மனிதவர்க்கத்துக்குத் தன் பெயரை வெளிப்படுத்துகிறார்.” இப்படி லாஸர்வாடொரெ ரோமானொ என்ற வத்திக்கன் இதழின் மேற்பக்கத்தில் தடித்த எழுத்துக்களில் காணப்பட்ட தலையங்கம் வாசித்தது. போப் ஜான் பால் II என்பவர் ரோமிலுள்ள பாரீசில் புனித லியோனார்டு மரியள்டுவை விஜயம் செய்தபோது கொடுத்த பிரசங்கத்தின் செய்தி ஒன்று அதன்கீழ் இருந்தது. “யாத்திராகமப் பகுதியிலிருந்து கடவுள் அவருடைய பெயரை நமக்குத் தெரிவிக்கிறார்” என்று கூறி அந்தப் போப் தொடங்கினார். பின்பு, “இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார்,” என்று யாத்திராகமம் 3-வது அதிகாரம் 13-ம் 14-ம் வசனங்களில் இஸ்ரவேலரிடம் சொல்லும்படியாக கடவுள் மோசேயிடம் சொன்னதை மேற்கோளாக காட்டி, போப் சொன்னார்: “யாவே என்ற சொல்லிலும் கூறப்பட்டுள்ள ‘இருக்கிறேன்’ என்ற இந்த வார்த்தை கடவுள் இருக்கிறார் என்றும் அவர் உன்னதராயிருக்கிறார் என்றும் சொல்கிறது . . . யாவே ஒருவரே கடவுளாக இருக்கிறாரே தவிர வேறு யாருமில்லை என்பதை புரிந்துகொள்ள இது நமக்கு உதவுகிறது.” (g92 9/22)
குப்பைக்கூளத்தில் தங்கம்
ஓர் இத்தாலிய ஸ்தாபனம் இப்போது தொழிற்கூளங்களிலிருந்து விலையுயர்ந்த உலோகங்களைப் பிரித்தெடுக்கிறது, நவீன தொழில்நுட்பவியலுக்கு நன்றி. எல் மெசாஜார என்பதன் பிரகாரம், இத்தாலியில் அரெஸ்ஸொவிலுள்ள நகரத்தில் ஒரு தொழிற்சாலை உலகத்திலுள்ள வெவ்வேறு பாகங்களிலிருந்து கூளங்களைப் பெற்று அதிலிருந்து தங்கம், வெள்ளி மற்றும் வேறுபல விலையுயர்ந்த அடிப்படைக் கூறுகளை பிரித்தெடுக்கிறது. அந்த விலையுயர்ந்த உலோகங்களைக் கொடுக்கும் உருப்படிகள் போட்டோகிராஃபிக் தாள், ஈயத்தாள்கள், மைக்ரோசிப்ஸ்கள், களையப்பட்ட ஒளிப்படக்கருவிகள், கம்ப்யூட்டர்கள், மற்றும் மற்ற மின்மம் சார்ந்த கருவிகளை உள்ளடக்குகின்றன. அரெஸ்ஸொவிலுள்ள இந்த ஒரு தொழிற்சாலையே வருடத்திற்கு சராசரியாக சில 120 டன் தங்கம், 200 டன் வெள்ளி, 4 டன் பல்லேடியம், ஒரு டன் பிளாட்டினம், 100 கிலோ ரோடியம் மற்றும் சிறிய அளவில் இரிடியம் ருதினியம் போன்றவற்றைப் பெறுகிறது என எல் மெசாஜார அறிக்கை செய்கிறது. (g92 9/22)
இன வெறி இருப்பதற்கு ஒரு காரணமுமில்லை
விஞ்ஞானிகள் மரபியலில் செய்யப்பட்ட நவீன முன்னேற்றத்தின் உதவியோடு மனிதனின் மரபு நூலில் வெகு காலமாக மறைத்து வைக்கப்பட்ட தகவலை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் கண்டெடுத்த தகவல்கள் இனம் சம்பந்தப்பட்டதில் உள்ள பாரம்பரிய கருத்துகளைத் துடைத்தழித்துவிட்டது என்று லி ஃபிகேரோ என்ற பிரெஞ்சு செய்தித்தாள் குறிப்பிடுகிறது. மனிதவர்க்கத்தினரின் இடையே உயரம், தோல் நிறம், மற்றும் அவர்களிடத்தில் உள்ள வேறுபல அம்சங்களாக இருக்கும் காணப்படத்தக்க வெளிப்புற வித்தியாசங்களோடுகூட எண்ணிறந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், பூமியில் வாழும் எல்லோரும் உண்மையில் பொதுவான பெற்றோர்களிலிருந்து வந்திருக்கிறோம் என்றும் சில காலத்திற்கு முன்னால் ஒரு பொதுவான இடத்திலிருந்து வந்திருக்கிறோம் என்றும் மரபியல் வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். “இன வெறியை ஆதரிப்பதற்கு எடுக்கப்பட்ட சூழ்ச்சியுடன்கூடிய சமரச முயற்சிகள் அனைத்துமே ஒன்றுமில்லாமைக்கு கொண்டுவரப்பட்டது,” என்று லி ஃபிகேரோ கருத்துத் தெரிவிக்கிறது. (g92 9/22)
செளந்தரியமும் ஊட்டச்சத்தும்
“ஊட்டச்சத்தும் தோல் மென்மையாவதும் மக்கள் சாப்பிடுவதன் தரத்தை சார்ந்தே இருக்கிறது. முக்கியமாய் அழகுண்டாக்குவது சரியாக சாப்பிடுவதுதான்,” என்று பிரேஸிலில் உள்ள சவ் பாலோவின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருந்தியல் விஞ்ஞானத்தின் பேராசிரியை ஈடா கரமீக்கு உரிமைப்பாராட்டுகிறார். குளோப் சையென்சிய என்ற பிரேஸிலிய பத்திரிகையின் பிரகாரம், தூய்மைக்கேடு, நச்சு தரும் உணவு, உணர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்னைகள், மட்டுமீறிய சூரியஒளி, மற்றும் வஞ்சப்புகழ்ச்சியாக கூறினால், ஒப்பனைப் பொருட்களை மட்டுமீறி உபயோகிப்பதே தோலை முதுமையடையச் செய்கிறது. தோலை மென்மையாக்கிப் புதுப்பிக்க, ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று அந்தப் பத்திரிகை தெரிவிக்கிறது. அதோடு பழங்கள், காய்கறிகள், மேலும் முழு-தானிய கூலம்கள் ஆகியவற்றை போதுமான அளவில் உட்கொள்ளும் உணவுபழக்கத்தையும் கொண்டிருக்கவேண்டும். அது மேலும் சொல்கிறது: “தோற்றத்தை முன்னேற்றுவிக்க எல்லாவிதமான வெளிப்புற கவனிப்பும் உபயோகிக்கப்படலாம், ஆனால் எந்தப் பொருளும்—இயற்கையானாலுஞ்சரி செயற்கையானாலுஞ்சரி—நல்ல போஷாக்கை விஞ்சுவதில்லை.” (g92 9/22)
“கண்ணுக்குக் கண்”
டென்னெஸ்ஸி, மெம்ஃபிஸைச் சேர்ந்த நீதிபதியாகிய ஜோ B. ப்ரெளன் என்பவர் சாதாரணமாக சிறைச்சாலைகளில் இருப்பது உணர்ச்சியற்ற குற்றவாளிகளுக்கு எதையும் அர்த்தப்படுத்தாததன் காரணமாக, கள்வர் தண்டனை விதிக்கப்படுவதற்கு தனக்கு முன்பாக நிற்கையில் அவர் தன்னுடைய கொள்கையை மாற்றியிருக்கிறார். தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்-ல் அறிக்கை செய்தபடி, “திருட்டுக்கு ஆளான ஆட்கள் திருடனுடைய வீட்டிற்குச் சென்று எதையாவது ‘திருடிக்கொண்டு’ வரும்படியாக அவர்களை அவர் அழைக்கிறார். சமீபத்தில் நடந்த வழக்குகளில், . . . கண்ணுக்குக் கண் என்று பைபிளிலுள்ளதை, ஒரு தங்க ரோலக்ஸ்-க்கு இரண்டு குளிர்கால மேற்சட்டைகள், சைக்கிள் ஜோடிக்கு ஸ்டீரியோ ஒலிபெருக்கிகள் போன்று பொருட்களை மாற்றீடாக கொடுக்கவேண்டும் என்று குற்றவியல் வழக்கு நீதிபதி கூறியிருக்கிறார். ஒரு திருடன் தன்னுடைய சொந்த காரைப் பயன்படுத்தித் தப்பியோடுகிறானென்றால், உடை, நகை மற்றும் வேறுபல விலையுயர்ந்த பொருட்களோடு கூட அதுவும் கிடைக்கும்.” திருட்டுக்கு ஆட்பட்ட நபர் அந்தத் திருடனுடைய வீட்டிற்குப் பகலிலோ இரவிலோ எப்பொழுது வேண்டுமானாலும், கடனை ஈடுசெய்யும் வரை அடிக்கடி செல்வதை அவருடைய சட்டங்கள் அனுமதிக்கின்றன. என்றாலும் குறிப்பிட்ட வழிமுறைகள் இருக்கின்றன. மேலும் எடுக்கப்பட்ட சரக்குகள்தானே மற்றவர்களிடமிருந்து திருடப்படாதவையாய் இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள மாநகரண்ணலின் துணைவர் ஒருவர் செல்வார். (g92 9/22)