உலகத்தைக் கவனித்தல்
ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியில் விருப்பமுள்ள குருமார்
பல ஆண்டுகளாக ஜெர்மனியிலுள்ள ஹானோவரின் இவான்ஜலிக்கல் லூத்தரன் சர்ச்சின் குருமார் பேரவை, ஒரு ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி துணைவரைக் கொண்டில்லாத வரை மதகுருமாரின் உறுப்பினர்களாக செயல்பட ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியில் விருப்பமுள்ளவர்களை அனுமதித்துவந்திருக்கிறது. ஆனால் தி வீக் இன் ஜெர்மனி பிரசுரத்தின்படி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சுறுசுறுப்பான ஒத்த பாலினத்தவர் புணர்ச்சிக்காரரை அவருடைய குருமார் கடமைகளிலிருந்து நீக்கியது அதிகமான வாக்குவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. தி வீக்-ன்படி, ஹானோவரிலுள்ள அதிகாரிகள், “ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியில் விருப்பமுள்ள பாதிரிகளும் அவர்களுடைய துணைவர்களும் குருமார் குழுவில் உட்பட, சர்ச்சில் வேலைக்குத் தகுதியுள்ளவர்களாக இருப்பார்கள்,” என்பதாகச் சொல்லும் ஒரு புது கருத்தை சமீபத்தில் அங்கீகாரம் செய்திருக்கின்றனர்.
எய்ட்ஸ் கறைபட்ட இரத்தத்தோடு விபத்துக்கள்
சமீபத்தில் ஜப்பானின் சுகாதார மற்றும் மக்கள் நலத் துறை, மருத்துவ பணியாளர்களை உட்படுத்தும், HIV கிருமிகளைக்கொண்ட இரத்த விபத்துக்கள் எத்தனை அடிக்கடி நிகழுகின்றன என்பதன்பேரில் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி மருத்துவமனைகளைக் கேட்டுக்கொண்டது. குறிப்பாக கடந்தப் பத்தாண்டுகளில் நடந்த விபத்துக்களைப்பற்றியே அது அக்கறையுடையதாயிருந்தது. தி டெய்லி யோமியூரி-யின்படி, இதற்குப் பிரதிபலித்த 276 மருத்துவமனைகளில், “ஊசி விபத்துக்களின் மொத்த எண்ணிக்கை 12,914 என்றும் தற்செயலான இரத்தத் தொடர்பு 2,997” என்றும் அறிக்கைசெய்திருந்தன. இந்த விபத்துக்களில் நூறுக்கும் அதிகமானவர்களின் இரத்தம் HIV கறைப்பட்டதாய் இருந்தது. இது வரையாக பரிசோதிக்கப்பட்ட இந்த விபத்துக்களின் எல்லா பலி ஆட்களும் எய்ட்ஸ் உண்டுபண்ணும் கிருமியான HIV-க்கு பரிசோதிக்கப்பட்டபோது அது அவர்களுக்கு இல்லாதிருப்பது தெரியவந்துள்ளது.
புற்றுநோய்—குறித்த நேர வெடிகுண்டு
தோல் மற்றும் புற்றுநோய் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் நடத்திய ஆராய்ச்சி, அந்தத் தேசத்தில் இப்பொழுது தோல் புற்றுநோயே மிகச் சாதாரணமாயுள்ள ஒரு புற்றுநோய் வகை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. சுமார் 1,000 ஆஸ்திரேலியர்கள் ஆண்டுதோறும் தோல் புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர் என்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில், சிட்னியில் வெளியாகும் தி டெய்லி டெலிகிராஃப் மிரர் சொல்கிறபடி, அநேக ஆஸ்திரேலிய மக்கள் “கடந்தகாலத்தில் அளவுக்கு அதிகமாக சூரியனில் காய்வதிலிருந்து தங்கள் தோலைப் பாதுகாப்பதன் சம்பந்தமாக கொண்டிருந்த கவலையற்ற மனநிலையே, குறித்த நேரத்தில் வெடிக்கவல்ல புற்றுநோய் குண்டை உருவாக்கியுள்ளது,” என்று அந்த ஆய்வு சொல்கிறது. இன்றைய பெரும்பாலான பலியாட்கள் 60, 70 மற்றும் 80-களில் தங்களுடைய பருவவயதில் வெயிலில் காய்ந்தவர்கள்.
உறக்கமின்மை நோயுள்ளவர்களுக்கு உதவி
உறங்குவதில் வினைமையான பிரச்னையுள்ள மக்களுக்கு, ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் ஆலோசனைகளின் ஒரு பட்டியலைத் தொகுத்திருக்கின்றனர். தி ஹார்வர்ட் மென்டல் ஹெல்த் லெட்டர் சொல்கிறபடி, உறங்குவதற்கு சுமார் 80 நிமிடங்கள் எடுத்துக்கொண்ட நோயாளிகளின் ஒரு தொகுதி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அனுபவித்திருக்கிறது. பல வாரங்களுக்குச் சிகிச்சையை முயற்சி செய்தப் பிறகு, “உறங்கிப்போவதற்கு சராசரியாக பத்தொன்பது நிமிடங்களே அவர்களுக்கு எடுத்திருக்கிறது (75 சதம் குறைப்பு),” என்பதாக லெட்டர் குறிப்பிடுகிறது. பரிந்துரைக்கப்பட்ட முறைகளில் இவையும் அடங்கும்: படுக்கையில் ஏழு மணிநேரங்களுக்கு அதிகமாக செலவிடுவதை தவிர்க்கவும்; சராசரியாக நீங்கள் உறங்கும் நேரத்தைவிட ஒரு மணிநேரத்துக்கு மேல் படுக்கையில் இருப்பதை தவிர்க்கவும்; வார இறுதிநாட்கள் உட்பட ஒவ்வொரு நாளும் ஒரே சமயத்தில் எழுந்திருக்கவும்; தூக்கக் கலக்கமாக இருக்கும்போது மட்டுமே படுக்கைக்குச் செல்லவும்; படுக்கைக்குச் சென்று 20 நிமிடங்களுக்குள் உறக்கம் வரவில்லையென்றால் எழுந்து மறுபடியுமாக தூக்கம் வரையாக ஓய்வாக எதையாவது செய்துகொண்டிருக்கவும்.
வால் நட்சத்திர முத்துக்கள்
தொலைநோக்காடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் முத்து ஆரம்போல தோன்றும் வால்நட்சத்திரத்தின் 20-க்கும் மேற்பட்ட ஒரு தொகுதியான முறிந்த துண்டுகள் வியாழன் கோளோடு மோதிக்கொள்ளும் பாதையில் இருக்கிறது என்பதாக தி உவாஷிங்டன் போஸ்ட் அறிவிப்பு செய்கிறது. வால் நட்சத்திரத்தின் கெட்டித் துண்டுகள், குறுக்கில் ஒருவேளை மூன்று கிலோமீட்டர் அளவுள்ள சில துண்டுகள், கண்டுபிடித்தவர்களுடைய பெயர் கூட்டப்பட்டு ஷூமேக்கர் லிவி 9 என்பதாக கூட்டாக அழைக்கப்படுகின்றன. தனியொரு வால் நட்சத்திரம் சமீபத்தில் வியாழன் கோளைத் தாண்டிப் பறந்து ஈர்ப்பு சக்தியினால் சின்னாபின்னமானபோது வால்நட்சத்திர ஆரம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். உற்றுநோக்கும் மனிதருக்கு அபூர்வமான ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் வால்நட்சத்திர துண்டுகளின் தாக்குதல்கள் விளைவு, 1994 ஜூலை பிற்பகுதியில் பல நாட்களுக்கு இருக்கும். வியாழன் கோளின் பின்புறத்தில் தாக்குதலின் விளைவு ஏற்பட இருந்தாலும், இதன் விளைவாக தோன்றும் மின்வெட்டொளிகள் வியாழன் கோளின் சந்திரனைப் பிரகாசிக்கச் செய்யக்கூடும், இதைப் பூமியிலிருந்து தொலைநோக்காடியில் ஒருவேளை பார்க்கமுடியும்.
பெண்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள்
பதினாறு அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ள கனடா நாட்டுப் பெண்களில் 51 சதவீதத்தினர் தங்களுடைய முழுவளர்ச்சிப் பருவ வாழ்க்கையில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது ஆண்வர்க்கத்தின் வன்முறைச்செயலுக்கு பலியாட்களாக இருந்திருக்கின்றனர் என்பதை சமீப கால சுற்றாய்வு ஒன்று வெளிப்படுத்துவதாக தி க்ளோப் அண்ட் மெயில் தெரிவிக்கிறது. அது ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்குச் சமமாக இருக்கிறது. பேட்டி காணப்பட்ட ஏறக்குறைய பாதிப்பேர் தாக்குதல்கள் “காதலர்கள், கணவர்கள், நண்பர்கள், குடும்ப அங்கத்தினர்கள் அல்லது தங்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஆண்களிடமிருந்து” வந்ததாகச் சொன்னதை இந்தக் கனடா நாட்டு செய்தித்தாள் அறிவித்தது. சுற்றாய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட பெண்களில் பத்து சதவீதத்தினர் கடந்த ஆண்டில் மட்டுமே பலியாகியிருக்கின்றனர், மேலும் 5 தாக்குதல்களில் ஒன்று சரீரப்பிரகாரமாக காயத்தை உண்டுபண்ண போதுமான அளவு வினைமையாக இருந்திருக்கிறது. அநேக பெண்கள், தங்கள் கணவன்மாரினால் அல்லது விவாகம் செய்யாத ஆண் துணைவர்களினால் தள்ளப்பட்டு, இறுக பிடிக்கப்பட்டு, அறையப்பட்டு, உதைக்கப்பட்டு, கடிக்கப்பட்டு அல்லது அடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
ஆயிரக்கணக்கான தாவரங்கள் புறக்கணிக்கப்படுகின்றன
“பல ஆயிரக்கணக்கான தாவர இனங்கள் வரலாற்றில் மனிதனால் உணவாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, ஆனால் இப்பொழுது சுமார் 150 மட்டுமே பயிர்செய்யப்படுகின்றன, இவற்றில் தாவரங்களிலிருந்து பெறப்படும் ஏறக்குறைய 60 சதவீத கலோரிகளையும் புரதச்சத்தையும் மூன்று மட்டுமே தருகின்றன,” என்பதாக ஐநா உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் சொல்கிறது. சர்வதேச வேளாண்மை ஆய்வுகள் இதை உறுதிசெய்கின்றன. மனிதர்கள் இயற்கையில் காணப்படும் ஆயிரக்கணக்கான மற்ற ஊட்டச்சத்துள்ள தாவரங்களைப் புறக்கணித்துவிட்டு அவர்களுக்கு மிகவும் பழக்கமான அரிசி, சோளம் மற்றும் கோதுமையை மட்டுமே எப்பொழுதும் பயன்படுத்துகின்றனர்.
தங்கள் சொந்த வாழ்க்கையின் மீதே அதிகாரம் இல்லை
குடியாட்சிகளுக்கு ஆதரவாக ஏற்பட்டுள்ள சமீபகால மாற்றங்களின் மத்தியிலும், இன்றைய உலக மக்கள் தொகையில் 90 சதவீதத்தினருக்கு தங்கள் வாழ்க்கையை உருப்படுத்தும் விஷயங்களில் கருத்துத்தெரிவிக்க எந்த உரிமையும் இல்லை. இதுவே ஐநா வளர்ச்சித் திட்டம் (UN Development Program) வெளியிட்ட மனித வளர்ச்சி அறிக்கை 1993-ன் முடிவாகும். UNDP-ன் முன்னாள் நிர்வாகி வில்லியம் டிரேப்பர், அறிக்கையின் முகவுரையில், பெரும்பாலோருடைய வாழ்க்கை இன்னமும் “நிலம், நீர், வேலை, உறையிடம் மற்றும் அடிப்படை சமுதாய பணிகள் ஆகிய வாழ்க்கையின் சாதாரணமான வாய்ப்புகளைப் பெற செய்யப்படும் இடைவிடாத போராட்டங்களினால்” உருவமைக்கப்பட்டுவருகிறது என்று குறிப்பிட்டார். “சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள், ஏழைகள், கிராமவாசிகள், பெண்கள் இன்னும் ஊனமுற்றவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்,” என்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
பாக்கெட் அளவு வீடியோ ஜெபமாலை
இத்தாலியைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்க குரு, இசையோடும் மதசம்பந்தமான உருவங்களைக் கொண்ட இயங்கு படக்காட்சியோடும் முழுமையான ஓர் எலக்ட்ரானிக் வீடியோ ஜெபமாலையைக் கண்டுபிடித்திருக்கிறார். போலக்னா தினசரி செய்தித்தாளான இல் ரெஸ்டோ டெல் கார்லினோ-வின்படி, பேட்டரியினால் இயங்கும் இந்தக் கருவி, “எளிமையாகயும் கையடக்கமாகவும்” (பாக்கெட்டிலோ கைப்பையிலோ வசதியாக அடங்குவதாய்) இருக்கிறது. காரோட்டிச் செல்லுகையில் ஜெபங்களைச் சொல்ல விரும்புகிறவர்களுக்கு, “காரின் சிகரெட் லைட்டர் கருவியோடு பொருத்தப்படக்கூடிய ஒரு விசேஷித்த அடாப்டரும்கூட இருக்கிறது.” விசுவாசி தான் ஒப்பிக்க விரும்புகிற ஜெபமாலையின் பகுதியைத் தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக “மரியே வாழ்க,” பொத்தான், திரையில் வார்த்தைகள் தோன்றுகையில் ஜெபத்தின் பல்வேறு பகுதிகளைப் படிப்படியாக சொல்ல அதைப் பயன்படுத்துபவருக்கு உதவுகிறது. “எல்லா ஜெபங்களையும் சொல்லி முடிப்பதற்கு முன்னால் ஒருவர் களைப்பாகிவிட்டால்,” அவர் அதை நிறுத்திவிடலாம், என்று இல் ரெஸ்டோ டெல் கார்லினோ சொல்லுகிறது. எலக்ட்ரானிக் நினைவாற்றலின் காரணமாக, “திரும்ப போடும்போது நிறுத்திய இடத்திலிருந்து தொடரமுடிகிறது.”
சர்வலோகத்தில் மிகவும் குளிர்ச்சியான இடம்
சர்வலோகம் முழுவதிலும் மிகவும் குளிர்ச்சியான சீதோஷணம் 0.000,00,00,00,28 கெல்வின் என்பதாக சமீபத்தில் அளவிடப்பட்டுள்ளது. அதீதமான இந்தக் குறைந்த சீதோஷணம் மூல பூஜ்யத்துக்கு மேலே மிகச் சிறிய டிகிரியின் ஒரு பின்னமாக இருக்கிறது. இந்த மிகக் குளிர்ச்சியான சீதோஷண நிலை எங்கே அனுபவிக்கப்பட்டது? நியூ ஸ்காண்டிநேவியன் டெக்நாலஜி-யின் பிரகாரம், ஸ்காண்டிநேவிய பகுதியைச் சேர்ந்த பின்லாந்திலாகும். இருந்தபோதிலும் பின்லாந்திலுள்ள பெரும்பாலான மக்கள் இந்நிகழ்ச்சியை அறியாதவர்களாகவே இருந்தனர், ஏனென்றால் இந்தக் குறைந்த சீதோஷண நிலையானது செயற்கை முறையில் ஹெல்சிங்கி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் குறைந்த வெப்ப இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் பெறப்பட்டது. மூல பூஜ்யத்தை விஞ்ஞானிகளால் ஒருபோதும் முயன்று அடையமுடியவில்லை. இதை நியூ ஸ்காண்டிநேவியன் டெக்நாலஜி “அணுக்களுக்குள் எல்லா வெப்பஞ்சார்ந்த இயக்கமும் இல்லாதிருப்பதைக் குறிக்கும் சீதோஷணமாக இருப்பதாக,” விவரிக்கிறது.
ஜன்னல் காட்சியின் மதிப்பு
ஆய்வாளர்கள் அ.ஐ.மா., மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஓர் ஆய்வின்படி, ஜன்னல் இருக்கும் இடங்களில் வேலைசெய்யும் பணியாளர்கள் மேம்பட்ட விதமாக வேலைசெய்கின்றனர். பொதுவான நம்பிக்கைக்கு எதிர் மாறாக, வெளியே பார்க்க முடிவது பகல் கனா காண்பதைக் கட்டாயமாகவே ஊக்குவிப்பது கிடையாது. 1,200 பேரை வைத்துசெய்யப்பட்ட சுற்றாய்வு, “வெளி உலகத்தைக் காண முடிகிற பணியாட்கள் தங்கள் வேலைகளில் அதிகமான உற்சாகத்தையும், குறைந்த அளவு ஏமாற்றத்தையும், அதிகமான பொறுமையையும், மேம்பட்ட ஒருமுகச் சிந்தனையையும், குறைந்த சரீர நோய்களையும் கொண்டிருப்பதை” வெளிப்படுத்துவதாக பிஸ்னஸ் வீக் பத்திரிகை அறிவிப்பு செய்கிறது. மாறாக, ஜன்னல் இல்லாத தடுக்கப்பட்ட தனி அறைகளில் வேலைசெய்பவர்கள் “குறைந்த கற்பனைத் திறமுடையவர்களாகவும் அதிக எரிச்சலடைகிறவர்களாகவும்,” ஒருமுகச் சிந்தனையில் அதிக பிரச்னைகளை உடையவர்களாகவும் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.
அறிவுத்திறனுக்குகந்த விளையாட்டுச் சாமான்கள்
“முழுவதும் நேரப்போக்குக்காகவே இருப்பவற்றை கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக எதிர்காலத்தில் போட்டி அனுகூலத்தைக் கொடுக்கிற மதிக்கூர்மைக்குப் பயன்படுகிறவைகளை பெற்றோர் வாங்குவதால், திறமைகளைக் கற்றுக்கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட விளையாட்டுச் சாமான்களின் விற்பனை வானளவு உயர்ந்துகொண்டிருக்கிறது,” என்பதாக கனடாவில் இருந்து வெளிவரும் செய்தித்தாளாகிய தி க்ளோப் அண்ட் மெயில் குறிப்பிடுகிறது. ஒருசில பெற்றோர் “வெறுமனே நேரப்போக்குக்காக விளையாடப்படும்” விளையாட்டுச் சாமான்களை வைத்து தங்கள் பிள்ளைகள் விளையாடுவதை தடையும்கூட செய்வதாக அறிக்கை கூறுகிறது. “மாறாக, விளையாட்டில் ஒவ்வொரு கணமும் திறமைகளைக் கற்பதற்கான வாய்ப்புகள் நிறைந்தவையாக இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.” இந்தப் போக்கு அதிகளவான புத்திக்கூர்மையையும் மேம்பட்ட திறமைகளையும் கொண்ட பிள்ளைகளை உருவாக்கக்கூடும் என்பதாக அநேகர் நம்புகையில், ஒருசில நிபுணர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். மதிப்புள்ள ஒழுங்கமைக்கப்படாத விளையாட்டு நேரத்தைப் பிள்ளைகளிடமிருந்து பறித்துவிடுவது அவர்களுடைய ஆக்கத்திறமைகளை அடக்கிவிட, “இதன் விளைவாக அவர்கள் குறைவாகவே கற்றுக்கொள்வர்,” என்பதாக அவர்கள் உணருவதாக அந்தச் செய்தித்தாள் சொல்லுகிறது.
கடற்கொள்ளை அதிகரித்துவருகிறது
லண்டனை தலைமையகமாகக் கொண்டுள்ள பன்னாட்டுக் கடல் கழகம், கடற்கொள்ளையையும் ஆயுதந்தரித்து கப்பல்களைக் கொள்ளையடிப்பதையும் எதிர்த்துப் போராடும் ஐக்கிய நாடுகளின் ஓர் ஏஜென்ஸி, கடற்கொள்ளை “சமீப ஆண்டுகளில் எண்ணிக்கையிலும் சிப்பந்திகளுக்கு இழைக்கப்படும் கொடுமையிலும் கணிசமான அளவு,” அதிகரித்திருப்பதாக அறிக்கைச் செய்கிறது. அறிவிக்கப்பட்ட 400 கடற்கொள்ளைச் சம்பவங்கள் மலாக்காவின் தென்கிழக்கு ஆசிய ஜலசந்தியில் நடைபெற்றபோதிலும், கடற்கொள்ளைக்காரர்கள் ஆப்பிரிக்காவின் மேற்கத்திய கரை நெடுகிலும் தென் அமெரிக்காவின் வடகிழக்குக் கரை நெடுகிலுமாகக்கூட நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். கடற்கொள்ளை, “உலகளாவிய பிரச்னையாக மாறுகின்ற அச்சுறுத்தல் இருந்துவருகிறது,” என்பதாக யுஎன் க்ரானிக்கள் பத்திரிகை எழுதுகிறது.