உலகத்தைக் கவனித்தல்
இழிவான இலக்கியமும் வன்முறையும்
ஐக்கிய மாகாணங்களின் நீதித் துறை நடத்திய ஆராய்ச்சி ஒன்று, கணிசமான அளவு இழிவான இலக்கியங்களை வாசிக்க அனுமதித்தல் தீங்கிழைப்பதாகவும் “பாலின வன்முறை செயல்களுக்கு” வழிநடத்துவதாகவும் இருக்கக்கூடும் என்று உறுதி செய்திருக்கிறது என்பதாக தி நியு யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது. 11 உறுப்பினர்களைக் கொண்ட குழு, இழிவான இலக்கியங்களைப் பார்வையிடுவது இதைப் பார்க்கிறவர்கள், “கற்பழித்தல் அல்லது வேறு விதமான பால் சம்பந்தமான வன்முறை செயல்களை மற்றபடி அவர்கள் கருதுவதைவிட குறைந்த அளவு வினைமையானதாகவே கருதுவதற்கு வாய்ப்பிருக்கிறது” என்பதாகக் குறிப்பிட்டது. என்றபோதிலும் இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளின் மத்தியிலும் இழிவான இலக்கியங்களின் விற்பனையைத் தடை செய்யும் எண்ணத்தோடு கொண்டுவரப்படும் அநேக சட்டங்கள் அமுல்படுத்தப்படாமலே போய்விடுகிறது. இழிவான இலக்கியங்களின் வியாபாரம், திட்டமிட்டு குற்றச் செயல்களைச் செய்பவர்களால் “நேரடியாக நடத்தப்படுகிறது அல்லது மிகவும் கவனமாக அவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது” என்பதற்குப் பலமான சான்றுகள் இருப்பதாகவுங்கூட அந்தக் குழு குறிப்பிட்டிருக்கிறது.
எரிமலையின் இயற்கையான அபாய அறிவிப்பு
எரிமலைகள் செயல்திறமுள்ளதாக இருக்கும் பகுதிகளில், உள்ளுர் வாசிகளுக்குத் திறம்பட்ட அபாய அறிவிப்பு முறை ஒன்று வெகுவாக தேவைப்படுகிறது. பாரீஸ் இயற்கை சரித்திர அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளர் க்ளாட் சாஸ்திரி, எரிமலை சரிவுகளில் வளரும் தாவரங்களை ஆராய்வது, எரிமலை வெடிப்புகளை முன்னறிவிப்பதற்கு உதவியாக இருக்கக்கூடும் என்பதாக ஆணித்தரமாகத் தெரிவிக்கிறார். இதற்கு உதாரணத்துக்கு குவாடிலோப்பிலுள்ள சூப்ரேர் எரிமலையை அவர் குறிப்பிடுகிறார். பிப்ரவரி 1976-குள்ளாக, இது வெடிக்கப் போவது தாவரவியல் வல்லுநர்களுக்குத் தெரிந்திருந்தது. எரிமலைச் சரிவில் சில இடங்களில் வளர்ந்திருந்த தாவரங்கள் கருகியிருந்தன. ஆறு மாதங்களுக்குப் பின்பு, சரியாக தாவரங்கள் எங்கே கருகியிருந்ததோ அதே இடங்களில் பிளவுகள் தோன்றி, எரிமலை குழம்பு வெளிப்பட்டது.
ஹெட் ஃபோன்களின் அபாயங்கள்
எச்சரிக்கை! ஹெட் ஃபோன்களைப் பயன்படுத்துவது உங்கள் செவிக்கு ஆபத்தாக இருக்கக்கூடும். ஸ்டீரியோ இசையை இதில் கேட்கும் பருவ வயதினரை வைத்து செய்யப்பட்ட சுற்றாய்வில், பரிசோதனை செய்யப்பட்டவர்களில் பாதிப்பேர் தற்காலிகமாகக் கேட்கும் ஆற்றலை இழந்துவிடுவது தெரியவந்தது. மூன்று மணிநேரங்கள் தொடர்ந்து நடுத்தர ஒலியிலிருந்து உரத்தக் குரலில் இசையை இதில் கேட்கும் பருவ வயதினரை வைத்து செய்யப்பட்ட சுற்றாய்வில், பரிசோதனை செய்யப்பட்டவர்களில் பாதிப்பேர் தற்காலிகமாக கேட்கும் ஆற்றலை இழந்துவிடுவது தெரியவந்தது. மூன்று மணிநேரங்கள் தொடர்ந்து நடுத்தர ஒலியிலிருந்து உரத்தக் குரலில் இசையை இதில் கேட்ட பிறகு, முக்கால் வாசிப்பேர் தங்கள் காதுகளில் இசை ஒலித்துக் கொண்டே இருப்பதாகச் சொன்னார்கள். அமெரிக்க செவி அமைப்பு இயல் கழகம், ஒலியின் அளவு 120 டெஸிபில்ஸுக்கும் மேல் அதிகமாகிவிடும்போது, செவிக்கு தீங்கு ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறது. பெரும்பாலான வானொலிகள் இந்த அளவு ஒலியை உண்டுபண்ணுகிறவையாக இருக்கின்றன. செவியைப் பாதுகாக்க, இந்தக் கருவியின் மூலமாக இசையை தாழ்ந்த தொனியில் குறைவான நேரம் கேட்கும்படியாகச் சிபாரிசு செய்யப்படுகிறது.
அழிவோடு நாட்குறித்தல்
ஏப்ரல் 26-ம் தேதி செர்நாபில் அணுசக்தி தொழிற்சாலையில் நடந்த விபத்தினால் வளிமண்டலத்திற்குள் அவிழ்த்துவிடப்பட்ட மின்காந்த அலைகளின் அழிவுண்டாக்கும் விளைவுகள், ஆயிரக்கணக்கானோரைப் பாதிக்கும் என்பதாக நிபுணர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள். செர்நாபில் விபத்தின் சீஸியம் 137 கதிரியக்கத்தாளின் மூலமாக 4000 பேர் புற்றுநோயினால் தாக்கப்பட்டு 2000 பேர் உயிரிழப்பார்கள். கறையம் (Iodine) 131-ஐ சுவாசிப்பதால் சுமார் 24,000 பேருக்கு தைராயிட் கோளாறுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. கலப்பட உணவையும் பாலையும் உட்கொள்பவர்களின் மத்தியில் இந்த எண்ணிக்கை 1,20,000 ஆக உயர்ந்துவிடும். தைராய்ட் புற்றுநோய் 2000-க்கும் மேற்பட்ட மரணங்களுக்கு வழிநடத்தக்கூடும். இந்த மதிப்பீடுகள், மின்காந்த அலைகளைக் குறுகிய காலமே எதிர்படுகிறவர்களை வைத்து செய்யப்பட்டவை என்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். மூன்று அல்லது அதிகமான வாரங்கள் மின்காந்த அலைகளால் பாதிக்கப்பட்டால் புற்று நோயாளிகளின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நான்கு மடங்கு வரையாக அதிகரிக்கும் என்பதாக அவர்கள் சொல்கிறார்கள். கிழக்கத்திய ஐரோப்பா ஸ்கன்டநேவியா மற்றும் சோவியத் யூனியனிலுள்ள மக்களே அதிகமாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதாகச் சொல்லப்படுகிறது.
“கத்தோலிக்க” ஸ்பயின்
இதன் உள்நாட்டு மற்றும் குடியேற்ற சரித்திரம் கத்தோலிக்க சர்ச்சோடு நெருங்கிய விதத்தில் பிணைக்கப்பட்டிருப்பதால், பொதுவாக நிலவும் கருத்தின்படி ஸ்பயின் உலகிலேயே ஒரு முக்கிய கத்தோலிக்க தேசமாக இருந்து வருகிறது. 1978 வரையாக கத்தோலிக்க மதமே இதன் அரசாங்க மதமாக இருந்து வந்தது. என்றபோதிலும் ஸ்பயினிலுள்ள கத்தோலிக்க சர்ச்சின் மனித சமுதாய ஆராய்ச்சி மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, இன்று அந்நாட்டு மக்கள் தொகையில் 46 சதவிகிதத்தினர் மட்டுமே கத்தோலிக்க மதத்தை அப்பியாசித்து வருவதாக கருதுவதைத் தெரிவித்தது. இவர்களில் 18 சதவிகிதத்தினர், மாத்திரமே ஒழுங்காக பூசைக்கு சென்று வருபவர்கள். “ஸ்பயின் ஒரு கத்தோலிக்க தேசம் என்ற கருத்தின் மீது, இந்த முடிவுகள் சந்தேகத்தை எழுப்பிவிட்டிருக்கிறது என்பதாக சர்ச்சின் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டார்” என்று பாரிஸில் தினசரி வெளியாகும் இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் தெரிவிக்கிறது. 1979 முதற்கொண்டு கத்தோலிக்க மதபோதனை ஸ்பனிலுள்ள பள்ளிகளில் கட்டாய பாடமாக கற்பிக்கப்படுவதில்லை.
கண் உறுத்தலும் காட்சிக் கருவியும்
காட்சிக் கருவியை இயக்கும் ஐந்து பேரில் ஒருவர் “கண்ணில் உறுத்தல், கண்ணில் கூச்சம், மங்கலான பார்வை மற்றும் கண்ணில் எரிச்சலினாலும்” அவதிப்படுவதாக இலண்டனின் தி டைம்ஸ் அறிவிக்கிறது. இதைக் குறித்து என்ன செய்யப்படலாம்? இலண்டனின் மூர்பீல்ட்ஸ் கண் மருத்துவமனையிலுள்ள முக்கிய கண் மருத்துவர், ஒவ்வொரு மணி நேரத்திலும், இடையில் ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரையாக இதை இயக்குபவர் திரைக்கு வெளியே பார்க்க வேண்டும் என்பதாக சிபாரிசு செய்கிறார். கூசுகின்ற ஒளியை தவிர்க்க ஒளியையும் வேறுபாட்டு அமைப்பையும் சரி செய்வதும், திரையை சரியான இடத்தில் வைப்பதும் சிபாரிசு செய்யப்படுகிறது. இதில் வேலையை ஆரம்பிக்க இருப்பவர்கள், கண்ணை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் இதைத் தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர் சிபாரிசு செய்கிறார்.
ஆப்பிரிக்காவில் ஏய்ட்ஸ்
உகாண்டா தலைநகரில், மூலாகோ மருத்துவமனை கடந்த “நவம்பர் மாதம் முதல் ஏய்ட்ஸ் நோயைக் கொண்ட ஒரு நோயாளியை ஒவ்வொரு நாளும் மருத்துவமனையில் சேர்த்துக்கொண்டு வருகிறது” என்பதாக 1986 ஏப்ரல் 20-ம் தேதி இலண்டனின் தி சன்டே டைம்ஸ் அறிவிக்கிறது. “ஏய்ட்ஸ் நோய், மருத்துவப் பிரிவில் மிகப் பெரிய கொல்லியாக கருதப்படுகிறது” என்பதாக டைம்ஸ் குறிப்பிடுகிறது. உகாண்டாவில் பரிசோதிக்கப்படும் பத்து பேரில் ஒருவர் ஏய்ட்ஸ் கிருமிகளை உடையவராக இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதற்கு அவர்கள் தரும் விளக்கம்? ஓரின புணர்ச்சியால் இது கடத்தப்படுவதோடுகூட, பலரோடு பாலுறவு கொள்வதாலும், இரத்தமேற்றுதலாலும் இந்தக் கொடிய நோய் வேகமாக பரவுவதாகச் சொல்லப்படுகிறது. இரத்தமேற்றுதலுக்குப் பயன்படுத்தப்படும் இரத்தம், ஏய்ட்ஸ் கிருமிகளுக்குச் சோதிக்கப்படாததன் காரணமாக, “தினந்தோறும் செய்யப்படும் 20 இரத்தமேற்றுதலில் . . . ஒவ்வொரு நாளும் இரண்டு புதியவர்களுக்கு இது கடத்தப்பட முடியும்” என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது!
உயரமான நாற்காலியின் பாதுகாப்புறுதி
உயரமான நாற்காலிகள் பாதுகாப்பாக இருக்கிறதா? மருத்துவமனை அவசர உதவிப் பிரிவு 1984-ல் மட்டுமே ஐந்து வயதிற்குட்பட்ட 8,000 குழந்தைகளுக்கு உயரமான நாற்காலி சம்பந்தப்பட்ட காயங்களுக்காகச் சிகிச்சை அளித்திருக்கிறது என்பதாக பெற்றோர்கள் என்ற பத்திரிகை அறிவிக்கிறது. ஐக்கிய மாகாணங்கள் நுகர்வோர் பொருட்கள் காப்புறுதி குழுவின் பிரகாரம் ஒரு குழந்தை கண்காணிக்கப்படாதபோது அல்லது நாற்காலியில் சரிவர உட்கார வைக்கப்படாதபோதுதான் கவலைக்கிடமான காயம் ஏற்படுகிறது. அநேகமாக காயம் ஏற்படுவதற்குரிய காரணங்கள்: நாற்காலியிலிருந்து கீழே விழுவது, நாற்காலி கீழே நொறுங்கி விழுவது, நாற்காலியை தள்ளிவிடுதல் மற்றும் நாற்காலி எதிலாவது சிக்கிக்கொள்வது. விபத்துக்களைத் தவிர்க்க பாதுகாப்புக்காக அதில் செய்யப்பட்டுள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதையும் குழந்தை அதில் அமர்ந்திருக்கும்போது அதைக் கவனமாக கண்காணிப்பதையும் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
புகையிலை விளம்பரங்களைத் தடைசெய்தல்
ஐக்கிய மாகாணங்களிலுள்ள அநேக சுகாதார அமைப்புகளும் “சிகரெட்டுகள் மற்றும் புகையில்லா புகையிலை பொருட்களின் எல்லா விளம்பரங்களையும் முழுவதுமாக ஒழித்துக்கட்டிவிடும்படி” வேண்டுகோள் விடுத்திருப்பதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் அறிவித்திருக்கிறது. புகைபிடிப்பதனால், நோய், தீ, மற்றும் விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தடுமாறச் செய்வதாக இருப்பதாக சங்கத்தின் தலைவர் டாக்டர் லா மேஸ்திரி குறிப்பிட்டார். லா மேஸ்திரியின் பிரகாரம், சிகரெட் புகைப்பதால் “முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், கொரியா மற்றும் வியட்நாமில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஒவ்வொரு வருடமும் அதிகம்பேர் உயிரிழப்பதாகவும்” “ஒவ்வொரு வருடமும் ஐக்கிய மாகாணங்களில் எல்லா மோட்டார் வண்டி விபத்துக்களில் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகம் பேர் உயிரிழப்பதாகவும் தெரிகிறது.”
பெண்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்
இங்கிலாந்திலும் வேல்ஸிலும் நீண்ட காலம் வாழ்வது அதிகரித்திருக்கிறது என்பதாக இலண்டனின் தி டைம்ஸ் பத்திரிகை அறிக்கை செய்தது. 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலையோடு ஒப்பிடுகையில், நூற்றாண்டு வாழும் ஜனங்களின் எண்ணிக்கை ஒன்பது மடங்காக இருக்கிறது என்று பிரிட்டனின் ராயல் காலேஜ் மருத்துவர்களின் ஆராய்ச்சி பிரிவைச் சேர்ந்த இயக்குநர் சர்ச்சில் க்ளார்க் சொன்னார். என்றாலும் இவர்களில் 15 சதவிகிதத்தினர் மட்டுமே ஆண்களாய் இருக்கிறார்கள். ஆண்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் வாழ்க்கை முறையைப் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று க்ளார்க் குறிப்பிட்டார். பருமனாக இருப்பதாலும் உடற்பயிற்சி குறைவுபடுவதாலும் அவர்கள் தங்கள் உயிரை ஆபத்திற்குள்ளாக்குகிறார்கள். மறுபட்சத்தில் பெண்கள் தங்கள் வீட்டைச் சுற்றி செய்யும் வேலைகளில் சுறுசுறுப்பாக இருப்பதால் நீண்ட காலம் வாழ்கிறார்கள்.
பஞ்ச நிவாரணம்
எர்த்ஸ்கான் புல்லெட்டின் (Earthscan Bulletin) என்பதன் பிரகாரம் வறுமையில் வாடும் ஆப்பிரிக்கர்களுக்கு உணவை விநியோகிப்பதற்குப் பெரும் தடையாக இருப்பது உயர்ந்த போக்குவரத்து செலவாகும். ஆப்பிரிக்காவில் பணிபுரியும் நிவாரண அமைப்பு ஒன்று உணவை எடுத்துச் செல்வதற்காக மட்டுமே 22,10,00,000 ரூபாய் செலவழித்திருப்பதாகச் சொல்கிறது. இதற்கு நீண்ட கால தீர்வு சாலை அமைப்பதாகும். சாஹலில் மட்டுமே இதைச் செய்வதற்குச் சுமார் 360 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. என்றபோதிலும் குறைந்த செலவில் இவற்றை எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 16,90,00,000 ரூபாய் செலவில் பிரிட்டிஷ் தொழிற்கூடம் ஒன்று பரிதியத்தால் (helium) நிரப்பப்பட்டு உலோகத்தால் கட்டப்பட்ட விமான கப்பல் ஒன்றைக் கட்டி வருகிறது. இதனால் 27 டன்கள் உணவு பொருட்கள் மணிக்கு 145 மைல்கள் வேகத்தில் (மணிக்கு/230 கி.மீ.) 5000 மைல்கள் (8000 கி.மீ.) தொலைவுக்கு எடுத்துச் செல்ல முடியும். ஒரே சமயத்தில் இதனால் 200 ஆட்களை விமானம் மூலம் எடுத்துச் செல்ல முடியும். விமான கப்பல்கள் பஞ்ச நிவாரணங்களைத் துரிதப்படுத்த முடியும் என்பதாகப் புல்லெட்டின் குறிப்பிடுகிறது.
இரண்டு ஹேலிஸ் நட்சத்திரங்கள்?
ஹேலிஸ் வால்நட்சத்திரம் 1910-ல் தோன்றியபோது இருந்ததோடு ஒப்பிடுகையில் இப்பொழுது அதிக மங்கலாக இருந்ததால் அநேக ஆட்கள் ஏமாற்றமடைந்தார்கள். ஆனால் நிலவுலக தென் அரை கோளத்தில் வால்நட்சத்திரத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தவர்கள் ஏதோ ஒன்றைப் பார்த்து கிளர்ச்சியடைந்தார்கள். “ஹேலிஸின் மங்கலான தோற்றத்தைப் பார்த்து ஏமாற்றமடைவதற்குப் பதிலாக நகரவாசிகளில் சிலர் இரண்டு வால்நட்சத்திரங்களைப் பார்த்தாகத் தெரிவிக்கிறார்கள்” என்பதாக ஒரு தென் ஆப்பிரிக்க செய்தித்தாளாகிய தி நேட்டல் விட்நஸ் சொல்கிறது. ஏப்ரல் மாத மத்திபத்தில் வானத்தில் தெற்கே இரண்டு மங்கலான வடிவங்களை அருகருகே காணமுடியும். அதில் ஒன்று நிச்சயமாகவே ஹேலிஸ் வால்நட்சத்திரமாக இருந்தது. மற்றொன்று? அது பொதுவான ஒரு மையத்தைச் சுற்றிவரும் சுமார் பத்து இலட்சம் நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு நட்சத்திரக் கூட்டமாகும். ஹேலிஸ் வால்நட்சத்திரம் போலில்லாமல், இதைக் காண நாம் 76 வருடங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. உள்ளூர் வானூலர் க்ரிஸ் லேக் விளக்கிய விதமாகவே: “இது மிகப் பெரியதும் சாதாரண கண்களுக்குப் புலப்படுகிற ஒரு சில உருண்டையான விண்மீன் கூட்டங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.”
பிரிட்டிஷ் பள்ளிகளில் பிராத்தனைகள்
பிராத்தனைகள் இனிமேலும் அநேக பிரிட்டிஷ் பள்ளிகளில் தினந்தோறும் மாறாமல் கடைபிடிக்கப்படும் அலுவல்களின் ஒரு பாகமாக இல்லை. “பிரிட்டிஷ் கூட்டரசிலுள்ள பெரும்பாலான பள்ளிகள் தினந்தோறும் வகுப்புகளுக்கு முன்னால் ஒன்றாகச் சேர்ந்து செய்ய வேண்டிய காலை-நேர பிராத்தனைகளைச் செய்யாமல் சட்டத்தை மீறுகிறார்கள்,” என்பதாக ஒரு பிரெஞ்சு கத்தோலிக்க தினசரியான லா க்ராக்ஸ் விளக்கியது. இந்த விஷயத்தில் அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்க சட்டத்தை ஏன் கடைபிடிப்பதில்லை? போதிய வசதிகள் இல்லாமை ஒரு காரணமாகச் சொல்லப்படுவதோடுகூட, மாணவர்கள் “அநேக இனங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதில் அநேக முகமதியர்களும் இந்துக்களும் உள்ளடங்குவர். இது பிராத்தனையைத் தெரிந்து கொள்வதைக் கடினமாக்கிவிடுகிறது” என்பதாகக் கட்டுரை சொல்கிறது. “இது போன்ற கூட்டங்களைப் பழமைப்பட்டதாகக் கருதி இதை எதிர்க்கும் அநேக அரசாங்க ஆசிரியர்களின் தயக்கம் மற்றொரு காரணமாகும்.” (g86 8/22)