எரி நட்சத்திரங்கள் எங்கிருந்து வருகின்றன?
“அதோ, பார்! அங்கே வேறொன்று போகிறது!” “எங்கே? எங்கே?” இரவு நேர வானில் எரி நட்சத்திரங்களைத் தேடும்போது நீங்கள் இதுபோன்ற வார்த்தைகளை எப்போதாவது சொன்னதுண்டா? ஒருவேளை திடீரென உங்களுக்கு மேலேயுள்ள நட்சத்திரம் நிறைந்த வானின் குறுக்காக பிரகாசமான கோடு ஒன்றைக் கவனித்தபோது முதல் தடவையாக ஒன்றைப் பார்த்திருப்பீர்கள். அது நட்சத்திரங்களில் ஒன்று திடீரென வானத்தின் குறுக்காகப் பாய்ந்து சென்றுவிட்டதைப் போலத் தோன்றியது. சந்தேகமின்றி எரிநட்சத்திரங்கள் தவறாக பெயரிடப்பட்டிருக்கின்றன. அவை “பாய்ந்து செல்லலாம்,” ஆனால் அவை நட்சத்திரங்களே கிடையாது.
வானவியல் நிபுணர்கள் அவற்றை மீடியர்கள் (meteors) என்றழைக்கின்றனர். ஒரு சராசரி நட்சத்திரம், நம்முடைய முழு கோளைப் பத்து லட்சம் முறை விழுங்கக்கூடும். என்றாலும் நம்முடைய கோள் லட்சக்கணக்கான மீடியர்களை விழுங்குகிறது. மீடியர்கள் என்றால் என்ன? அவை எங்கிருந்து வருகின்றன?
சரி, அவை வால்நட்சத்திரங்களோடு அதிகம் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஒரு பிரபல எடுத்துக்காட்டாக, ஹாலி வால்நட்சத்திரம் (Halley’s comet), சூரியனைச் சுற்றிவரும் தனது 76 வருட நீள்வட்ட பயணத்தின்போது 1986-ல் பூமியை வேகமாகக் கடந்து சென்றது. வால்நட்சத்திரங்கள் பெரும்பாலும் பனிக்கட்டிகளாலும் தூசுகளாலும் ஆகியிருப்பதாகத் தோன்றுவதனால், அவை சிலசமயங்களில் அழுக்குப் பனிக்கட்டி பந்துகள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு வால்நட்சத்திரம் சூரியனை அணுகும்போது, அதன் மேற்பரப்பு உஷ்ணமடைந்து, தூசுகளையும் வாயுக்களையும் விடுவிக்கிறது. சூரிய ஒளியின் கதிர்வீச்சு அழுத்தம், அதிலுள்ள திடப்பொருட்களைப் பின்னோக்கி தள்ளுகிறது. இதனால் பளபளப்பான வாலைப்போன்ற ஓர் அமைப்புத் தூசிகளால் ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு வால்நட்சத்திரம் புழுதிகளாலான ஒரு நீண்ட வால்பகுதியைத் தனக்குப் பின் விட்டுச் செல்கிறது. இந்தத் துகள்கள் இன்னும் விண்வெளியில் இருக்கும்போதே எரிகற்கள் (meteoroids) என்றழைக்கப்படுகின்றன. பெரும்பாலான வால்நட்சத்திர துகள் மிகச் சிறியதாயிருப்பதால் கண்ணுக்குப் புலப்படும் மீடியர்களாக இருப்பதில்லை. ஒரு சிறு பகுதி ஒரு மணற்பொடியின் அளவில் இருக்கின்றன. இன்னும் சில, சிறிய கூழாங்கற்களின் அளவுடையவையாக இருக்கின்றன.
ஒருசில சந்தர்ப்பங்களில், ஒரு வால்நட்சத்திரத்தின் நீள்வட்ட பாதை பூமியின் நீள்வட்ட பாதையைக் குறுக்கிடுகிறது. அதாவது ஒவ்வொரு முறை பூமி வால்நட்சத்திரத்தின் நீள்வட்ட பாதையைக் கடந்து செல்லும்போதும், அது புழுதிகளாலான அதே நீண்ட வால்பகுதியைச் சந்திக்கிறது. இது சம்பவிக்கும்போது மிகச் சிறிய எரிகற்கள் அதிவேகத்தில்—நொடிக்கு 71 கிலோமீட்டர் வரையான வேகத்தில்—வளிமண்டலத்திற்குள் திடீரென விழுகிறது. அவை விழும்போது, பெரிய அளவுடையவை வெப்பமடைந்து எரிகிறது. இது மீடியர்கள் என்று அறியப்படும் வெள்ளையான வெப்பமிகுந்த கோடுகளை வானத்தின் குறுக்கே உருவாக்குகின்றன.
பூமி ஒரு வால்நட்சத்திரத்தின் பாதையைக் கடக்கும்போது, அந்த மீடியர்கள் வானில் ஒரே புள்ளியிலிருந்து எல்லா திசைகளிலும் பாய்வதுபோலத் தோன்றும். இது கதிர்வீச்சு என்றழைக்கப்படுகிறது. இக்கதிர்வீச்சுகளிலிருந்து வருடத்தின் முறையான காலங்களில் மீடியர் பொழிவு ஏற்படுகிறது. பெர்சீட்களின் பொழிவு (Perseids shower) பிரபலமான ஒரு காட்சியாகும். இதற்கு இவ்வாறு பெயரிட்டிருப்பதன் காரணம், அதனுடைய கதிர்வீச்சு பெர்சியஸ் வீண்மீன் மண்டலத்தில்கூட காணப்படுவதாகும். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12 அல்லது 13-ம் தேதியளவில், பெர்சீட்களின் பொழிவு அதன் உச்சநிலையை அடையும்போது, அது பகட்டான ஒரு காட்சியாக இருக்கிறது. ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 60-க்கும் மேற்பட்ட மீடியர்கள் விழலாம்.
அக்டோபர் 21-ம் தேதியளவில், ஓரியனிட்களின் பொழிவை (Orionids shower) நீங்கள் காணலாம். இது முற்பட்ட அக்வேரிட்களின் பொழிவை (Aquarids shower) போலவே, ஹாலி வால்நட்சத்திரத்திலிருந்து வரும் கற்களால் உருவாக்கப்படுகிறது என்பதாகக் கூறப்படுகிறது. அஸ்ட்ரானமி பத்திரிகையின்படி, ஹாலி வால்நட்சத்திரம் “தனது எல்லா கற்களையும் இழக்குமுன் 1,00,000 முறை நீள்வட்ட பாதையைச் சுற்றிவரமுடியும்.” அவர்களுடைய ஊகம் சரியாக இருக்கமானால், ஹாலி வால்நட்சத்திரம் அடுத்த 76,00,000 வருடங்களுக்கு முறையாக திரும்பிவரும்! அது அழிந்துபோய் அதிக காலத்திற்குப் பிறகும், சந்தேகமின்றி அதன் புழுதிகளாலான நீண்ட வால்பகுதி, பூமியிலுள்ள ஜனங்களுக்குக் காலாகாலத்திற்கும் எரி நட்சத்திரங்களைக் காண்பித்துக்கொண்டிருக்கும். தற்காலம் நாம் காண்கிற அநேக மீடியர்கள், தெளிவாகவே வெகுகாலத்திற்கு முன்பே செயலற்றுப் போன வால்நட்சத்திரங்களிலிருந்தே வருகின்றன.
ஒவ்வொரு நாளும் கண்ணுக்குப் புலப்படும் சுமார் 20 கோடி மீடியர்கள் இருக்கின்றன என விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர். மிகவும் கண்ணைக் கவரும் மீடியர் பொழிவுகளைப் பொருத்தளவில்—அடுத்த வருடம் எப்பொழுதுமே இருக்கிறது—லட்சக்கணக்கில் வரவிருக்கின்றன! (g93 3/22)