குறுங்கோள்கள், வால்நட்சத்திரங்கள், பூமி—மோதிக் கொள்ளும் பாதையில்?
“ஜூன் 30 அதிகாலை நேரம், சைபீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் நூதனமான காட்சி வானத்தில் தோன்றியது. உயர வானத்தில், பளபளக்கும் ஒரு பொருளை விவசாயிகள் பார்த்தார்கள்; அதை நேரடியாக பார்க்க முடியாதளவுக்கு பிரகாசமாய் இருந்தது. அதே திசையில் அடிவானத்தில், ஒரு சிறு கருமேகமும் தென்பட்டது. பளபளக்கும் அந்தப் பொருள் தரையை நெருங்கி, தூள் தூளாகியது போன்றிருந்தது. அந்த இடத்தில் கரும்புகைமண்டலம் எழுந்தது. பெரிய பனிப்பாறைகள் வெடிப்பது போல, காதைப் பிளக்கும் பெரிய சத்தம் கேட்டது. கட்டிடங்கள் அதிர்ந்தன, மேகத்தைப் பிளக்கும் அளவிற்கு அக்கினி பிளம்புகள் வெளிப்பட்டன. கிராமத்தார் பீதியடைந்து தெருக்களில் அங்குமிங்கும் ஓடினர். மூதாட்டிகள் அழுதனர். உலகமே முடிவுக்கு வந்துவிட்டதென அனைவரும் நினைத்து அல்லோலகல்லோப்பட்டனர்.”—1908, ஜூலை 2-ந் தேதி, ரஷ்யாவில் உள்ள இர்குட்ஸ்க்கில் சிபிர் செய்தித்தாளில் வெளிவந்த அறிக்கையின் சுருக்கம்.
விண்வெளியிலிருந்து வந்த ஒரு பொருளே அவர்களுடைய தலைக்கு மேலே வெடித்தது என்பதை அந்த கிராமத்தினர் சற்றேனும் அறியவில்லை. சுமார் 90 வருடங்களுக்கு பிறகு இன்றும், உலக பேரழிவைப் பற்றிய பரபரப்பூட்டும் கற்பனைக்குரிய அறிவிப்புகள் அவ்வப்போது வந்தவண்ணமாய் இருக்கின்றன. குறுங்கோளோ வால்நட்சத்திரமோ பூமியை சுக்குநூறாக்குவதைப் பற்றிய அறிவிப்புகளே இவை. என்இஓ (பூமிக்கு அருகில் இருக்கும் சடப்பொருள்கள்), பிஹெச்ஓ (பயங்கர ஆபத்து விளைவிக்கும் சடப்பொருள்கள்) போன்ற சுருக்கெழுத்துகள் அடிக்கடி காதில் அரசல்புரசலாக விழுகின்றன. விண்வெளிக் கோளங்கள் மோதி பூமி பூண்டோடு அழிக்கப்படும் என்னும் பெரும்நாச அறிவிப்புகளில் இச்சுருக்கெழுத்துக்கள் அடிபடுகின்றன. இந்த பயத்தையும் கலக்கத்தையும் காசாக்க டீப் இடிபோல், அர்மகெதோன் போன்ற சினிமாக்களை தயாரித்திருக்கிறது ஹாலிவுட் சினிமா உலகம்.
வானத்திலிருந்து விழும் நெருப்புக் கோளம் உங்களையோ உங்கள் பிள்ளைகளையோ துவம்சமாக்கும் சாத்தியம் இருக்கிறதா? உங்கள் வீட்டு கொல்லைப்புறம் இரும்பு, பனிக்கட்டிப் பாளங்கள் கலந்த மழையால் தாக்கப்படும் என விதிர்விதிர்க்க வேண்டுமா? நீங்கள் கடலோரமாய் வாழ்கிறீர்கள் என்றால், பாதையை விட்டு விலகிய குறுங்கோள் ஒன்று கடலில் விழுந்து, அதனால் பொங்கி எழும் கடல் அலை உங்கள் வீட்டை தரைமட்டமாக்கிவிடுமா?
கோள் துகள்களுக்கிடையே சுற்றிவருதல்
நம்முடைய சூரிய மண்டலத்தில் சூரியன், ஒன்பது கோள்கள், அவற்றின் துணைக்கோள்கள் தவிர இன்னும் பல கோள்கள் இருக்கின்றன. வால்நட்சத்திரங்கள் (பனிக்கட்டியும் துகள்களும் சேர்ந்த திரட்சி), குறுங்கோள்கள் (சிறுகோள்கள்), எரிநட்சத்திரங்கள் (பெரும்பாலும் குறுங்கோள்களின் சிறு துண்டுகள்) ஆகியவையும் சூரிய மண்டலத்தில் சுற்றிவருகின்றன. விண்வெளியில் இருந்து வரும் பொருள்களால் பூமி தாக்கப்பட்டு வருகிறது என்பதை விஞ்ஞானிகள் வெகு காலமாகவே அறிந்திருக்கின்றனர். சந்திரனின் நிலப்பரப்பு சிதைந்த நிலையில் இருக்கிறது. இதைப் பார்த்தாலே போதும் நாம் விண்கற்கள் தாக்கும் தாறுமாறான நிலப்பரப்பை உடைய அண்டை கோள்களுக்கு நடுவேதான் வாழ்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம். காற்றுமண்டலம், புவியின் பாறை அமைப்புகளில் ஏற்படும் தொடர்ச்சியான மாறுதல், மண் அரிப்பு காரணமாக பூமியின் மேற்பரப்பு சீராக இருக்கிறது. இல்லையெனில், சந்திரனைப் போல பூமியின் மேற்பரப்பும் குண்டும் குழியுமாகத்தான் இருக்கும்.
பூமியின் காற்றுமண்டலத்தில் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 20 கோடி எரிநட்சத்திரங்கள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். காற்றுமண்டலத்தில் புகும் பெரும்பாலான பொருள்கள் சிறியவையாய் இருப்பதால், நம் கண்ணுக்கு புலப்படாமலேயே எரிந்து விடுகின்றன. இருப்பினும், இவற்றில் சில காற்று மண்டலத்தில் நுழைவதால் ஏற்படும் பயங்கர வெப்பத்தைத் தாண்டி விடுகின்றன. அதோடு காற்றின் உராய்வினால் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு, மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறைக்கப்படுகிறது. அப்படி இதிலும் மிஞ்சும் துகள்களே விண்கற்களாக பூமியில் விழுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சமுத்திரலோ அல்லது மனித சஞ்சாரமற்ற இடங்களிலோ விழுகின்றன. இதனால், இவை அநேகமாக மக்களுக்கு கேடு விளைவிப்பதில்லை. இப்படி நம்முடைய காற்றுமண்டலத்தில் புகும் பொருள்கள் பூமியின் எடையை தினந்தோறும் அதிகரிக்கின்றன. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான டன் எடை கூட்டப்படுகிறது.
மேலும், 1 கிலோ மீட்டருக்கும் அதிகமான விட்டம் உடைய, சுமார் 2,000 குறுங்கோள்கள், பூமியின் சுற்றுப்பாதையை குறுக்கே கடக்கின்றன, அல்லது அதை மிக நெருங்கி வருகின்றன என்பதாக வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். ஆனால், அவற்றில் சுமார் 200-ஐ மட்டுமே கண்டுபிடித்திருக்கின்றனர். அவற்றின் பாதையும் அறியப்பட்டிருக்கின்றன. வியப்பூட்டும் விஷயம் என்னவெனில், 50 மீட்டருக்கும் அதிகமான விட்டமுள்ள பத்து லட்சம் குறுங்கோள்கள், பூமியின் சுற்றுப்பாதைக்கு மிக அருகே, ஆபத்தான அளவிற்கு நெருங்கி வருகின்றன. இந்த அளவு குறுங்கோள்கள் பூமியில் மோதினால், பெரும்சேதத்தை விளைவிக்கும். இச்சின்னஞ்சிறிய எறிகோள் சுமார் பத்து மெகா டன் சக்தி உள்ளது. இதன் சக்தி, ஒரு பெரிய அணுகுண்டின் சக்திக்கு இணையானது. சிறு சிறு பொருள்கள் மோதுவதால் ஏற்படும் விளைவுகளிலிருந்து பூமியின் காற்றுமண்டலம் நம்மை பாதுகாக்க முடியும். ஆனால், பத்து மெகா டன் அல்லது அதற்கும் அதிகமான சக்தி உடைய பொருள்கள் தாக்கும்போது அதிலிருந்து காப்பாற்ற முடியாது. சராசரியாக, நூற்றாண்டுக்கு ஒரு முறை இப்படிப்பட்ட பத்து மெகா டன் பொருள் தாக்குவதை எதிர்பார்க்கலாம் என புள்ளிவிவரத் தொகுப்பு கூறுவதாக சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் விட்டமுள்ள குறுங்கோள் பூமியில் மோதும் நிகழ்ச்சி 1,00,000 ஆண்டிற்கு ஒரு முறையே நேரும் என்பதாக சில மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.
எரிவிண்மீன் குழிகள், வெடிப்புகள், மோதல்கள்
கடந்த காலங்களில், விண்வெளியில் இருந்து விழும் பெரிய பொருட்களால் நம்முடைய கிரகம் தாக்கப்பட்டிருக்கும் என்பது நம்புவதற்கு கஷ்டமானதல்ல. இதற்கான நிரூபணங்கள் நிறைய இருக்கின்றன. பூமியின் மேற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 150-க்கும் அதிகமான எரிவிண்மீன் குழிகளுக்கான தடங்களே இதை பறைசாற்றுகின்றன. அவற்றில் சில நன்றாக கண்ணுக்கு புலப்படும் வகையில் இருக்கின்றன. சில விமானத்தில் இருந்தோ அல்லது செயற்கை கோள்களில் இருந்தோதான் காணமுடியும். இன்னும் சில, வெகு காலமாக புதையுண்டோ அல்லது கடல் ஆழத்திலோ இருக்கின்றன.
இந்த எரிவிண்மீன் குழிகளிலேயே மிகப் பிரசித்தி பெற்றது சிக்ஸூலூப் ஆகும். இது, பூமியின் மேற்பரப்பில் 180 கிலோ மீட்டர் குறுக்களவுடைய குழியை ஏற்படுத்தியுள்ளது. இது, மெக்ஸிகோவின் யுகேடன் தீபகற்பத்தின் வடக்கு முனையில் இருக்கிறது. இக்குழி, 10 கிலோ மீட்டர் அகலமுடைய குறுங்கோள் அல்லது வால்நட்சத்திரம் மோதியதால் ஏற்பட்ட விளைவு என நம்பப்படுகிறது. இம்மோதல், சீதோஷ்ண நிலையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கலாம். இதுவே, டினோசார்கள் மற்றும் பல நில, நீர்வாழ் மிருகங்களின் மறைவுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர்.
அ.ஐ.மா.-வில் உள்ள அரிஜோனாவில், எரிவிண்மீன் பிரமாண்டமான ஒரு குழியை உண்டாக்கியது. இது 1,200 மீட்டர் குறுக்களவும் 200 மீட்டர் ஆழமும் உடையது. இப்படிப்பட்ட எரிவிண்மீன் ஒன்று ஜனசந்தடியுள்ள ஒரு நகரத்தில் விழுந்தால் எவ்வளவு உயிர்ச்சேதம் ஆகும்? இப்படிப்பட்ட ஒரு பொருள் மான்ஹட்டன் மீது விழுந்தால், ஜனநெருக்கடி நிறைந்த அந்தத் தொகுதியே முற்றிலுமாக துடைத்தழிக்கப்படும் என்பதை நியூ யார்க் நகரிலுள்ள அமெரிக்கன் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரியில் இருக்கும் பிரபலமான கண்காட்சி காட்டுகிறது.
இக்கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி, 1908, ஜூன் 30-ம் தேதி, 100 மீட்டருக்கும் குறைவான குறுக்களவுடைய ஒரு குறுங்கோள் அல்லது ஒரு வால்நட்சத்திரத்தின் துண்டு, காற்றுமண்டலத்திற்குள் சீறிப்பாய்ந்தது. சைபீரியாவின் ஜனசந்தடியற்ற டுங்குஸ்கா பிராந்தியத்திற்கு சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்தில் பெரும் முழக்கத்தோடு வெடித்தது. இது, 15 மெகா டன் ஆற்றல் உடையது என கணக்கெடுப்பு கூறுகிறது. 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை தீக்கிரையாக்கியது. வானளாவிய மரங்களை தரையில் சாய்த்தது, அப்பகுதியில் இருந்த கலைமான்களை கசாப்பு போட்டது. தீப்பிழம்புகள் புறப்பட்டன. ஜனநெருக்கடியுள்ள இடத்தில் அது வெடித்திருந்தால், எவ்வளவு பேரை பலி வாங்கியிருக்கும்?
1994-ம் வருடம், ஜூலை மாதத்தில், ஷூ மேக்கர்-லெவி 9 என்ற வால் நட்சத்திரத்தின் துண்டுகள் வியாழன் கோளில் மோதின. உலகம் முழுவதும் தொலைநோக்கி மூலம் அனைவருடைய கண்களும் வியாழன் கோள்மீதே மொய்த்தன. அதன்மேல் ஏற்படுத்தப்பட்ட தடங்கள் என்னவோ தற்காலிகமானதே. ஆனால், அந்த மோதலை கண்கூடாக பார்த்தவர்களின் மனதில் இருந்து அது எளிதில் நீங்கிவிடாது. இவ்வாறு வியாழன் மீது வால் நட்சத்திரத் துண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதால் அந்த கிரகத்தில் ஏற்பட்ட பாதிப்பை அநேகர் கவனித்தனர். இதே மோதல் பூமிமேல் ஏற்பட்டால் அதன் கதி என்னவாகும் என வல்லுநர்களும்சரி சாதாரண மக்களும்சரி ஒரேவிதமாக வியக்கின்றனர்.
பேரழிவின் விவரக்காட்சிகள்
குறுங்கோளோ அல்லது வால் நட்சத்திரமோ மோதுவதால் நம்முடைய கிரகத்திற்கு ஏற்படும் நாச விளைவுகளைப் பற்றி விஞ்ஞானிகள் நடுக்கத்தோடும் பீதியோடும் இருக்கின்றனர். மாபெரும் மோதலால் உடனே ஏற்படும் விளைவுகளை இப்படித்தான் அவர்கள் படம்பிடித்துக் காட்டுகின்றனர். வெடித்து சிதறிய பாறைகளும் துகள்களும் முதலில் விழ ஆரம்பிக்கும். அதைத் தொடர்ந்து, எரிவிண்மீன் மழையாகப் பொழியும். இது ஆகாயத்தையே செக்கச்செவேல் கம்பளமாக்கும். புல்தரைகளையும் காடுகளையும் தீ பட்சிக்கும். நிலத்தில் வாழும் பெரும்பான்மையான உயிரினங்களைக் கொன்று குவிக்கும். காற்றுமண்டலத்தில் வெகு நேரத்திற்கு மிஞ்சி நிற்கும் துகள்கள் சூரிய ஒளியை தடுக்கும். இதனால், வெப்பநிலை கர்ணம் அடித்து, மிகவும் குறைந்துவிடும். பூமியை மை இருட்டிற்குள் தள்ளிவிடும். இது தாவரங்களில் நடக்கும் ஒளிச்சேர்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். இதனால், கடல் உணவு சுழற்சி ஸ்தம்பித்து, கடலில் வாழும் உயிரினங்கள் பெரும்பாலானவற்றை அழித்துவிடும். இந்த விவரக்காட்சிப்படி, சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் நாசம் உலகளாவிய அமில மழையோடும் ஓசோன் படலம் அழிவதோடும் முழுமைப் பெறும்.
இதே குறுங்கோள் கடலில் விழுந்தால்? கடல் அலைகள் பொங்கி எழும். இப்படிப் பயங்கரமாக பொங்கி எழும் அலைகள் பேரளவில் நாசத்தை ஏற்படுத்தும். இதோடு சூனாமீஸ் என்ற பெயருள்ள பேரலைகள், மோதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து வெகு தூரத்திற்கு செல்லும். இது ஆயிரக்கணக்கான கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள கடலோரப் பகுதிகளில் நாசம் விளைவிக்கும். “எங்கே நகரங்கள் கம்பீரமாய் நின்றிருந்தனவோ, அங்கே எல்லாம் மண்மேடுகள்தான் காணப்படும்” என்று வானவியல் நிபுணர் ஜாக் ஹில் சொல்லுகிறார்.
இருந்தபோதிலும், இப்படிப்பட்ட விவரிப்புகளைக் குறித்து நாம் கவனமாய் இருக்கவேண்டும். இவற்றில் பெரும்பாலானவை ஊகிக்கப்பட்டவையே. குறுங்கோள் ஒன்று பூமியோடு மோதிக்கொள்வதை எவரும் பார்த்ததோ அல்லது நேரடியாக கவனித்ததோ இல்லை என்பதுதான் உண்மை. மேலும், இன்றைய செய்தித்தொடர்புச் சாதனங்கள் பரபரப்பான தலையங்கச் செய்திகளைத் தந்து ஜனங்களை கிளுகிளுப்பூட்ட நினைக்கின்றன. இவை, அரைகுறையான அல்லது தவறான தகவல்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிடுகின்றன. (மேலே உள்ள பெட்டியைக் காண்க) உண்மையில், கார் விபத்து ஒன்றில் மாட்டி சாகும் அபாயத்தைவிட விண்வெளியில் இருந்து விழும் ஒரு பொருளால் கொல்லப்படும் அபாயம் மிக மிகக் குறைவானதே.
என்ன செய்யப்பட வேண்டும்?
ஒரு வால் நட்சத்திரம் அல்லது குறுங்கோள், பூமியின்மேல் மோதுவதால் ஏற்படும் நாச விளைவுகளை பின்வரும் முறையில் தவிர்க்கலாம் என்பதாக அநேக நிபுணர்கள் நம்புகின்றனர். ஏவுகணை ஒன்றை விண்ணில் செலுத்தி, பூமியை நோக்கி படையெடுக்கும் எதிராளியை தடுக்கலாம், அல்லது குறைந்தபட்சம் அதனுடைய போக்கையாவாது மாற்றலாம் என்று அவர்கள் நம்புகின்றனர். அப்படி வரும் குறுங்கோள் சிறியதாக இருந்து, பூமியில் எவ்விதம் மோதும் என்பதை கணக்கிட்டு, பல ஆண்டுகளுக்கு முன்னரே அதைக் கண்டுபிடித்துவிட்டால், இந்த இடைமறிப்பு போதுமானதே.
என்றபோதிலும், பூமியோடு மோதும் பொருள் பெரியதாக இருந்தால், அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இப்படிப்பட்ட சமயத்தில், கவனமாக, சரியான இலக்கு பார்த்து மேற்கொள்ளப்படும் அணு வெடிப்பு, குறுங்கோளை பாதுகாப்பான சுற்றுப்பாதைக்குள் திருப்பிவிடும், பூமியோடு மோதுவதிலிருந்தும் காத்துவிடும் என நம்பப்படுகிறது. எந்தளவு அணுசக்தி வெடிப்பு தேவை என்பதை குறுங்கோளின் அளவும் அது பூமியிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதுமே தீர்மானிக்கும்.
இந்த எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளுமே சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்றால், போதியளவு எச்சரிக்கை முன்கூட்டியே கிடைக்கவேண்டும். இல்லையென்றாலோ, எல்லா முயற்சிகளுமே விழலுக்கு இரைத்த நீராய் போய்விடும். ஸ்பேஸ் வாட்ச், நியர் இயர்த் அஸ்டிராய்ட் ட்ராக்கிங் போன்ற விண்வெளி ஆய்வுக் குழுக்கள், இப்படிப்பட்ட பாதை தவறிய குறுங்கோள்களை வேட்டையாடுவதில் தங்களையே அர்ப்பணித்து இருக்கின்றன. இந்தப் பணியில் இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டுமென அநேகர் கருதுகின்றனர்.
இந்த விண்வெளிக் கோள்களின் இடங்கள், இயக்கங்களைப் பற்றிய அபூரண மனிதர்களின் அறிவு குறைவு என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அதேசமயம், பூமியில் வாழும் உயிரினங்களின் எதிர்காலமே கேள்விக்குறிதான் என்ற அச்சுறுத்தல்களினால் அளவுக்குமீறி பயப்படவோ அல்லது கலங்கவோ தேவையில்லை. எந்தவொரு குறுங்கோளோ அல்லது வால் நட்சத்திரமோ இந்த பூமியிலுள்ள எல்லா உயிரினங்களையும் துடைத்தழிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்ற பாதுகாப்பிற்கு உறுதியான உத்தரவாதம், இப்பிரபஞ்சத்தின் படைப்பாளராகிய யெகோவா தேவனிடம் இருந்தே வருகிறது. a பைபிளின் வாக்குறுதி இதுவே: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:29: ஏசாயா 45:18.
[அடிக்குறிப்புகள்]
a இந்தப் பொருளின்பேரில் பைபிளின் கருத்து பற்றிய கூடுதல் தகவல்களுக்கு டிசம்பர் 8, 1998 விழித்தெழு! பிரதியில், பக்கங்கள் 22-3-ஐக் காண்க.
[பக்கம் 27-ன் பெட்டி]
1997 XF11 நிகழ்வு
1998, மார்ச் 12-ம் நாள், உலகம் முழுவதும் துயரச் செய்திகள் விறுவிறுப்பாக ஒலி பரப்பப்பட்டன: ஒன்றரை கிலோ மீட்டர் குறுக்களவுடைய குறுங்கோள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது, அக்டோபர் 26, 2028, “வியாழக்கிழமை அன்று” பூமியை மோதும். அந்த குறுங்கோளுக்கு, 1997 XF11 என்ற சிறப்புப்பெயர் புனையப்பட்டது. 1997, டிசம்பர் 6-ம் தேதி, அரிஜோனாவின் பல்கலைக்கழகத்தின் ஸ்பேஸ்வாட்ச் குழுவைச் சேர்ந்த வானவியல் நிபுணர் ஜிம் ஸ்காடி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்தகால புள்ளிவிவரங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்தி, ஹார்வர்ட்-ஸ்மித்ஸோனியன் வான்கோளவியல் மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் சில தகவல்களை வெளியிட்டனர். இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிலர் ஒரு சுற்றுப்பாதையை கணித்தனர். அச்சுற்றுப்பாதையில் அந்தக் குறுங்கோள் வரும்போது பூமியில் இருந்து சுமார் 50,000 கிலோ மீட்டர் தூரத்தில் அது வரலாம் என்று கணித்தனர். இந்த தூரம் வானாராய்ச்சி அளவுகளின்படி, “மிக மிகக் குறைவான மயிரிழை தூரமே.” குறுங்கோள் பூமியோடு மோதுவது போன்ற கிடுகிடுக்க வைக்கும் கற்பனை காட்சிகளே முழுக்க முழுக்க தொலைக்காட்சி செய்திகளை ஆக்கிரமித்தன. ஆனால், இருபத்து-நான்கு மணிநேரத்திற்குள்ளாகவே அந்த ஆபத்தும் விலகிப்போனது. அந்தக் குறுங்கோள் பூமியில் இருந்து 10,00,000 கிலோ மீட்டர் தூரம் விலகிச் செல்லும் என புதிய புள்ளிவிவரங்களும் கணிப்புகளும் காட்டின. இதற்கு முன் கவனிக்கப்பட்ட இதே அளவு குறுங்கோள்கள் இருந்த தூரத்தைவிட இது குறைவானதே. இருந்தாலும் இது மோத முடியாத அளவிற்கு சற்று பாதுகாப்பான தூரமே. செய்தித் தொடர்பு சாதனங்களில் தலைப்புச் செய்திகள் இவ்விதமாய் வந்தன. “ஓகே, புள்ளிவிவரமும் கணிப்பும் சிறிதளவே தவறாகிவிட்டன.”
[பக்கம் 26-ன் படம்]
1. ஹாலி வால் நட்சத்திரம்
2. வால் நட்சத்திரம் இகெயா-ஸேகி
3. குறுங்கோள் 951 காஸ்ப்ரா
4. எரிவிண்மீன் குழி—சுமார் 1200 மீட்டர் குறுக்களவும் 200 மீட்டர் ஆழமும் உடைய குழி
[படத்திற்கான நன்றி]
நன்றி: ROE/Anglo-Australian Observatory, photograph by David Malin
NASA photo
NASA/JPL/Caltech
Photo by D. J. Roddy and K. Zeller, U.S. Geological Survey
[பக்கம் 25-ன் படங்களுக்கான நன்றி]
NASA போட்டோ