கிரகங்களுக்கு அப்பால் இருப்பதென்ன?
எக்ஸ் கிரகம். இந்தப் பெயர், பர்சவல் லோவெல் என்ற வானவியல் நிபுணரால், நெப்ட்யூன் கிரகத்தையும் தாண்டி சுற்றிக்கொண்டிருப்பதாக ஊகித்த இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஒரு கிரகத்திற்கு கொடுக்கப்பட்டது. அரிஜோனாவிலுள்ள ஃபிளாக்-ஸ்டாஃப் என்ற இடத்திலிருந்த தன்னுடைய ஆராய்ச்சி மையத்தில், 1905-ல் எக்ஸ் கிரகத்தைக் கண்டுபிடிப்பதற்கான வேட்டையை லோவெல் ஆரம்பித்தார். எக்ஸ் கிரகத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே லோவெல் இறந்தபோதிலும் அவர் ஆரம்பித்து வைத்த வேட்டை தொடர்ந்தது. கடைசியில், லோவெல்லுடைய ஆராய்ச்சி மையத்திலிருந்தே கிளைட் டாம்பாஹ் என்பவர் 1930-ல் புளூட்டோ கிரகத்தைக் கண்டுபிடித்தார். ஆம், எக்ஸ் கிரகம் உண்மையில் அங்கு இருந்தது!
‘இன்னொரு எக்ஸ் கிரகம் இருக்குமோ?’ என வானவியல் நிபுணர்கள் தங்கள் மூளையைக் கசக்க ஆரம்பித்தனர். அறுபது வருடங்கள் சளைக்காமல் தேடினர்; இந்தத் தேடும்படலத்தின் பிற்காலங்களில் விண்கலங்களையும் உபயோகிக்க ஆரம்பித்தனர். அதன் விளைவாக, ஆயிரக்கணக்கான குறுங்கோள்கள், நட்சத்திரங்கள், பால்மண்டலங்கள், நெபுலாக்கள் ஆகியவற்றைத்தான் கண்டுபிடித்தனரே தவிர ஒரு புதிய கிரகம்கூட அகப்படவில்லை.
ஆனாலும் வேட்டையை நிறுத்துவதாக இல்லை. புதிய தொழில்நுட்பங்களையும் அதிக சக்தியுள்ள தொலைநோக்கிகளையும் விஞ்ஞானிகள் உபயோகித்தனர். வெறும் கண்களால் பார்க்க முடிந்தவற்றைவிட லட்சக்கணக்கான மடங்குகள் மங்கலாக இருக்கும், சுற்றிக்கொண்டிருக்கும் பொருட்களையும் அவற்றால் கண்டுபிடிக்க முடியும். அவர்களுடைய முயற்சிகளுக்கு கைமேல் பலன் கிடைத்தது. புளூட்டோ கிரகத்திற்கு அப்பால் டஜன் கணக்கான சிறிய கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
அந்தச் சிறிய கிரகங்கள் எங்கே உள்ளன? இன்னும் அதிகத்தைக் கண்டுபிடிக்க போகிறார்களோ? நம் சூரிய மண்டலத்திலேயே மிகவும் தொலைவில் இருப்பவை அவைதானா?
மிகத் தொலைவிலுள்ளவை
சூரியனைச் சுற்றிவரும் ஒன்பது கிரகங்கள் கொண்டதே நமது சூரிய மண்டலம். அதோடுகூட, பாறையாலான ஆயிரக்கணக்கான குறுங்கோள்களும் விண்ணில் வலம் வருகின்றன. முக்கியமாய் செவ்வாய், வியாழன் ஆகிய கிரகங்களுக்கு இடையில் அவை ஒரு கூட்டமாக காணப்படுகின்றன. அதுமட்டுமா, சுமார் ஆயிரக்கணக்கான வால் நட்சத்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோள்களுள் சூரியனிலிருந்து வெகுதூரம் பிரயாணம் செய்பவை எவை? வால் நட்சத்திரங்களே என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
“வால் நட்சத்திரம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை, “நீண்ட முடியுள்ள” என்ற அர்த்தம் கொண்ட காமீடீஸ் என்பதாகும். இது, வால் நட்சத்திரங்களின் பிரகாசமான தலையிலிருந்து பின்னே நீண்டிருக்கும் நீளமான, பெரிய வால்களைக் குறிக்கிறது. வால் நட்சத்திரங்கள் என்றாலே முதலில் மனதிற்கு வருவது பேரளவான மூடநம்பிக்கையும் பயமுமே. இன்றும் அவற்றைக் காண்பவர்கள் அவற்றை அபசகுணங்களாகவே கருதுகின்றனர். அவை பேய்த்தனமானவை என்ற ஆரம்பகால நம்பிக்கைகளிலிருந்தே இப்படிப்பட்ட கருத்துகள் தோன்றின. அவற்றைக் கண்டாலே மக்கள் ஏன் நடுங்கினர்? அவை தோன்றிய அதே சமயங்களில் கோரமான ஏதாவது நிகழ்ச்சிகளும் நிகழ்ந்திருப்பதே அதற்கு ஒரு காரணம்.
இன்றும்கூட வால் நட்சத்திரங்கள் வெறித்தனத்தைக் கிளப்புகின்றன. உதாரணமாக மார்ச் 1997-ல், அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள கலிபோர்னியாவில் ஹெவன்ஸ் கேட் என்ற மதக் குழுவினரில் 39 பேர், ஹேல்-பாப் என்ற வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கிய சமயத்தில் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொண்டனர். என்ன காரணம்? அந்த வால் நட்சத்திரத்திற்கு பின்னால் வேற்று கிரக விண்கலம் ஒன்று ஒளிந்திருந்ததாகவும் அது வந்து தங்களை அழைத்துச் செல்லும் எனவும் அவர்கள் எதிர்பார்த்ததே காரணம்.
ஆனால் எல்லாருமே வால் நட்சத்திரங்களை முட்டாள்தனமாக நோக்கியதில்லை. பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில், வானத்தின் மிக உயரத்திலிருந்த பிரகாசிக்கும் வாயு மேகங்களே வால் நட்சத்திரங்கள் என்று கூறினார். ரோம தத்துவ ஞானியான செனேகா சில நூற்றாண்டுகள் கழித்து, வால் நட்சத்திரங்கள் என்பவை வலம் வந்துகொண்டிருக்கும் விண்கோள்கள் என புத்திசாலித்தனமாக கூறினார்.
தொலைநோக்கிகள், புவியீர்ப்பு பற்றிய நியூட்டனின் விதிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் வால் நட்சத்திரங்கள் பற்றிய ஆராய்ச்சி அதிக துல்லியமான அறிவியலானது. வால் நட்சத்திரங்கள் சூரியனைச் சுற்றி நீண்ட, நீள்வட்ட பாதையில் வலம் வருகின்றன என்று எட்மண்ட் ஹேலி 1705-ல் தீர்மானித்தார். மேலுமாக, 1531, 1607, 1682 ஆகிய வருடங்களில் தோன்றிய வால் நட்சத்திரங்கள் ஒரே மாதிரியான கோளப்பாதைகள் உள்ளவையும் சுமார் 75 வருடங்கள் இடைவெளியில் தோன்றியவை என்பதையும் அவர் கண்டார். இந்த எல்லாச் சமயங்களிலும் தோன்றியது, சுற்றிக்கொண்டிருக்கும் அதே வால் நட்சத்திரம்தான் என ஹேலி சரியாக கருத்து தெரிவித்தார். பின்னர் அவர் பெயராலேயே ஹேலியின் வால் நட்சத்திரம் என்று அதற்கு பெயரிடப்பட்டது.
வால் நட்சத்திரங்களுக்கு கெட்டியான ஒரு மையக் கரு உள்ளது என இன்று ஆராய்ச்சியாளர்கள் அறிந்திருக்கின்றனர். அது பொதுவாக 1 முதல் 20 கிலோமீட்டர் விட்டம் கொண்டது. அந்தக் மையக் கருவை, கருமையான, அழுக்கான பனிக்கட்டி என்றே சொல்லலாம். அது தூசியோடு கலந்த பனிக்கட்டிகள் நிறைந்தது. 1986-ல் ஜியோடோ விண்கலம் ஹேலியின் வால் நட்சத்திரத்தை மிக அருகில் படம் பிடித்தது. அந்தப் படங்களில், வால் நட்சத்திரத்திலிருந்து வாயுவும் தூசியும் பீச்சியடித்துக் கொண்டு வெளிப்படுவதைக் காணமுடிகிறது. இவ்வாறு வெளிவரும் வாயுவும் தூசியுமே, பூமியிலிருந்து பார்க்கும்போது தோன்றும் வால் நட்சத்திரத்தின் பளபளக்கும் தலையையும் வாலையும் உருவாக்குகின்றன.
வால் நட்சத்திர குடும்பங்கள்
வால் நட்சத்திரங்களின் இரண்டு குடும்பங்கள் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றன. வால் நட்சத்திரங்களின் கோளப்பாதைக் காலங்களை வைத்தே, அதாவது சூரியனை ஒருமுறை சுற்றிவர அவை எடுக்கும் சமயத்தைப் பொறுத்தே வகைப்படுத்தப்படுகின்றன. குறுகிய கால அல்லது குறிப்பிட்ட இடைவெளியுடன் தவறாமல் வருகின்ற வால் நட்சத்திரங்கள், சூரியனை வலம்வர 200-க்கும் குறைவான வருடங்கள் எடுக்கின்றன. ஹேலியின் வால் நட்சத்திரம் இதற்கு ஓர் உதாரணமாகும். அவற்றின் கோளப்பாதைகள் நீள்வட்ட பாதைகள் போலவே உள்ளன; அதாவது, சூரியனைச் சுற்றி பூமியும் மற்ற கிரகங்களும் வலம்வரும் கோளப்பாதைகள் போலவே உள்ளன. குறுகிய கால வால் நட்சத்திரங்கள் எண்ணிக்கையில் நூறு கோடிக்கும் அதிகமாக இருக்கலாம். அவற்றில் பெரும்பாலானவை, கடைக்கோடியில் உள்ள கிரகங்களாகிய நெப்ட்யூன், புளூட்டோ ஆகியவற்றிற்கும் அப்பால் சூரியனிலிருந்து கோடிக்கணக்கான மைல் தூரத்தில் சுற்றிவருகின்றன. எங்க்கின் வால் நட்சத்திரம் போன்ற அவற்றில் சில, எப்போதாவது ஒரு சமயம் கிரகங்களுக்கு நெருக்கமாக வருவதால் அவற்றின் கோளப்பாதை சூரியனுக்கு அருகில் இழுக்கப்படுகிறது.
நீண்ட கால வால் நட்சத்திரங்களின் கோளப்பாதைகளைப் பற்றியென்ன? குறுகிய கால வால் நட்சத்திரங்களைப் போலில்லாமல் இவை எல்லா பக்கங்களிலிருந்தும் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றன. ஹயகுடாகே, ஹேல்-பாப் போன்ற வால் நட்சத்திரங்கள் இதில் அடங்கும். அவை சமீபத்தில் காணப்பட்டபோது கண்கவர் காட்சிகளைத் தோற்றுவித்தன அல்லவா? ஆனால் அவற்றை மறுபடியும் பார்க்க வேண்டுமென்றால் ஆயிரக்கணக்கான வருடங்கள் காத்திருக்க வேண்டுமாம்!
நீண்ட கால வால் நட்சத்திரங்களில் எக்கச்சக்கமானவை நம் சூரிய மண்டலத்தின் எல்லையில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இந்தக் கும்பலுக்கு ஓர்ட் மேகம் என்று பெயர். 1950-ல் அது இருப்பதாக ஊகித்த முதல் நபரான டச் நாட்டைச் சேர்ந்த வானவியல் நிபுணரின் பெயரே அதற்கு கொடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எத்தனை வால் நட்சத்திரங்கள் உள்ளன என்று உங்களால் ஊகிக்க முடியுமா? ஒரு லட்சம் கோடிக்கும் அதிகம் என வானவியல் நிபுணர்கள் கருதுகின்றனர்! இவற்றுள் சில, சூரியனிலிருந்து ஒன்று அல்லது அதற்கும் அதிகமான ஒளியாண்டுகள் தூரம் வரை செல்கின்றன. a அவை இவ்வளவு தூரம் சென்றால், ஒருமுறை சூரியனைச் சுற்றிவரவே பத்து லட்சம் வருடங்களுக்கும் அதிகமாகும்!
கோடானுகோடி சிறிய கிரகங்கள்
ஆரம்பத்தில் சொன்ன சிறிய கிரகங்கள் உங்கள் நினைவில் நிற்கின்றனவா? அவை, புளூட்டோவிற்கும் அப்பாலிருக்கும் குறுகிய கால வால் நட்சத்திரங்களோடு குடித்தனம் நடத்துகின்றன. வானவியல் நிபுணர்கள் 1992-லிருந்து அவற்றில் சுமார் 80 சிறிய, கிரகம்போன்ற கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் நூறு கிலோமீட்டருக்கும் அதிக விட்டமுள்ள ஆயிரக்கணக்கானவை இருக்கலாம். இந்தச் சிறிய கிரகங்கள்தான் கௌப்பர் தொகுதியை உருவாக்குகின்றன. சுமார் 50 வருடங்களுக்கு முன்பே அவை இருப்பதை ஊகித்த விஞ்ஞானியின் பெயரே அவற்றிற்கு சூட்டப்பட்டுள்ளது. கௌப்பர் தொகுதியிலுள்ள கோள்கள் பனிக்கட்டியும் பாறையும் கலந்தவையாக இருக்கலாம்.
இந்தச் சிறிய கிரகங்களைக் கண்டுபிடித்திருப்பதால், சூரிய மண்டலத்தை நாம் பார்க்கும் விதமும் மாறியிருக்கிறதா? ஆம், அதிகளவில்! ஏனென்றால், புளூட்டோ, அதன் சந்திரனான ஷாரன், நெப்ட்யூனின் துணைக்கோளான ட்ரைடன், சூரிய மண்டலத்திலுள்ள பனிக்கட்டியாலான இன்னும் மற்ற கோள்கள் ஆகியவை கௌப்பர் தொகுதியிலிருந்து தப்பிவந்தவை என்றே கருதப்படுகின்றன. புளூட்டோவை ஒரு பெரிய கிரகமாகவே கருதக்கூடாது என்றும்கூட சில விஞ்ஞானிகள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்!
அவை எங்கிருந்து வந்தன?
கௌப்பர் தொகுதியில் இத்தனை அநேக வால் நட்சத்திரங்களும் சிறிய கோள்களும் நிறைந்திருக்கக் காரணம் என்ன? தூசிகளும் கெட்டியாகும் பனிக்கட்டிகளும் நிறைந்த மேகங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு பெரிய கோள்களாக வளர்ந்திருக்கலாம் என வானவியல் நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனாலும் இவை பெரிய கிரகங்களாக தொடர்ந்து வளரமுடியாத அளவுக்கு தூரமாக விலகியிருந்தன.
நீண்ட கால வால் நட்சத்திரங்களும் நம் சூரிய மண்டலத்திற்கு கணிசமான அளவு விஜயம் செய்கின்றன. இந்த வால் நட்சத்திரங்களின் மொத்த பொருண்மை பூமியைவிட ஏறக்குறைய 40 மடங்கு அதிகமாகும். சூரிய மண்டலம் தோன்றிய ஆரம்ப காலத்திலேயே, வெளிப்புறத்திலுள்ள ராட்சத வாயு கிரகங்களின் பகுதியில் இவற்றில் பெரும்பாலானவை தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த வால் நட்சத்திரங்களின் கோளப்பாதை இன்று இருப்பதுபோல சூரியனிலிருந்து இவ்வளவு தூரம் விலகியிருக்க காரணம் என்ன? வியாழன் போன்ற பெரிய கிரகங்கள் சக்தியுள்ள புவியீர்ப்பு கவன்கற்களைப் போல செயல்பட்டு அவற்றின் அருகில் வரும் வால் நட்சத்திரங்களை சுழற்றி வீசியிருக்கலாம்.
வால் நட்சத்திரங்களை ஆராய்தல்
சூரிய மண்டலத்தில் காணப்படுவதிலேயே மிகவும் பழமையான பொருட்களை இந்த வால் நட்சத்திரங்களில் காணமுடியும். கவனத்தைக் கவரும் இந்தக் கோள்களை இன்னும் அதிகமாக ஆராய்வதற்கு சாத்தியம் உள்ளதா? சில வால் நட்சத்திரங்கள் எப்போதாவது ஒருமுறை சூரிய மண்டலத்திற்குள் வந்து நம்மைச் சந்திக்கும்போது அவற்றை அருகிலிருந்து ஆராய்வதற்கு வாய்ப்பு கொடுக்கின்றன. வால் நட்சத்திரங்களை ஆராய்வதற்கென்றே அடுத்த பல ஆண்டுகளில் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் அநேக விண்கலங்களை அனுப்ப திட்டமிட்டிருக்கின்றன.
நம் சூரிய மண்டலத்தில் இன்னும் எதையெல்லாம் கண்டுபிடிக்கப்போகிறார்களோ யாருக்கு தெரியும்? இந்தப் புதிய கண்டுபிடிப்புகளும் சூரியனைச் சுற்றிவரும் தொலைதூர கோள்களைப் பற்றி நாம் அதிகமாக அறிந்துகொள்வதும் பைபிளில் ஏசாயா 40:26-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டவில்லையா? “உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே.”
[அடிக்குறிப்புகள்]
a ஒரு வருடத்தில் ஒளி செல்லக்கூடிய தூரமே ஓர் ஒளியாண்டாகும். அதாவது 9,50,000 கோடி கிலோமீட்டர்.
[பக்கம் 27-ன் பெட்டி]
வால் நட்சத்திரங்களும் எரிமீன் வான வேடிக்கைகளும்
வானத்தினூடே ஓர் எரிமீன் கண்கவர் தோற்றத்துடன் கடந்துசெல்வதைப் பார்க்கையில் அது ஒரு வால் நட்சத்திரத்திலிருந்து வந்திருக்குமோ என நீங்கள் யோசிக்கிறீர்களா? ஒருவேளை அவ்வாறு வந்திருக்கலாம். ஒரு வால் நட்சத்திரம் சூரியனை நெருங்குகையில் பனிக்கட்டியாலான அதன் மையக் கரு சிதைய ஆரம்பிக்கிறது. அதன் விளைவாக சிறு பாறைகளின் அல்லது சிறிய எரிமீன்களின் வால் ஒன்று உருவாகிறது. இந்தப் பாறைகள் அந்த வாலிலிருக்கும் தூசிகளைப் போல மிகவும் சிறியதாக இருப்பதில்லை, அதனால் சூரியனின் வெப்பக் காற்றினால் விண்வெளிக்கு தள்ளப்படுவதில்லை. மாறாக குப்பைகளின் பட்டையான ஒரு பெல்டைப்போல் கூடி, தாய் வால் நட்சத்திரத்தின் பாதையிலேயே சூரியனைச் சுற்றிவருகின்றன.
இந்த எரிமீன்களின் அநேக கும்பல்கள் ஒவ்வொரு வருடமும் பூமியைச் சந்திக்கின்றன. டெம்பல்-டட்டல் வால் நட்சத்திரம் விட்டுச்சென்ற பொருட்களின் விளைவாக தோன்றியதே நவம்பர் மாதத்தின் மத்திபத்தில் ஏற்பட்ட லீயோனிட் எரிமீன் வீழ்ச்சியாகும். 33 வருடங்களுக்கு ஒருமுறை இந்த எரிமீன்கள் பகட்டான காட்சியுடன் விழுகின்றன. 1966-ல் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியைத் தரிசித்தவர்கள், ஒரு நிமிடத்தில் 2,000-த்திற்கும் அதிகமான எரிமீன்களைக் கண்டதாக அறிக்கை செய்தனர். உண்மையில் ஒரு விண்மீன் புயல் என்றே சொல்லலாம்! 1998-ல் அவை பளபளக்கும் எரிபந்தங்களைத் தோற்றுவித்தன. இந்த நவம்பர் மாதமும் அவை கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
[பக்கம் 24-26-ன் வரைப்படம்/படங்கள்]
1. 1997-ல் சந்தித்த ஹேல்-பாப் வால் நட்சத்திரம்
2. எட்மண்ட் ஹேலி
3. பர்சவல் லோவெல்
4. 1985-ல் தோன்றிய ஹேலியின் வால் நட்சத்திரம்
5. 1910-ல் சந்தித்த ஹேலியின் வால் நட்சத்திரம்
6. ஹேலியின் வால் நட்சத்திரத்திலிருந்து வாயுவும் தூசிகளும் பீச்சியடித்துக்கொண்டு வெளிவருகின்றன
[படத்திற்கான நன்றி]
1) Tony and Daphne Hallas/Astro Photo; 2) கல்வர் போட்டோக்கள்; 3) நன்றி: லோவெல் ஆராய்ச்சி மையம் /Dictionary of American Portraits/Dover
4) நன்றி: Anglo-Australian Observatory, photograph by David Malin; 5) National Optical Astronomy Observatories; 6) the Giotto Project, HMC principal investigator Dr. Horst Uwe Keller, the Canada-France-Hawaii telescope
[வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
7. அநேக வால் நட்சத்திரங்களின் கோளப்பாதைகள்
காஹுடெக் வால் நட்சத்திரம்
ஹேலியின் வால் நட்சத்திரம்
சூரியன்
பூமி
எங்க்கின் வால் நட்சத்திரம்
வியாழன்
[படம்]
8. 1994-ல் வியாழன்மீது மோதுவதற்கு முன்பு ஷூமேக்கர்-லீவீ 9, 21 துண்டுகளாக உடைந்தது
9. புளூட்டோவின் மேற்பரப்பு
10. காஹுடெக் வால் நட்சத்திரம், 1974
11. ஐடா குறுங்கோள், அதன் சந்திரனான டாக்டைலுடன்
[படங்களுக்கான நன்றி]
8) Dr. Hal Weaver and T. Ed Smith (STScI), and NASA; 9) A. Stern (SwRI), M. Buie (Lowell Obs.), NASA, ESA; 10) NASA Photo; 11) NASA/JPL/Caltech