பைபிளின் கருத்து
மின்காந்த அலைகளினால் நம்முடைய உலகம் அழிந்து விடுமா?
“ஆபத்து! 1.5 கிலோமீட்டர் விட்டமுள்ள குறுங்கோள் பூமியின்மீது மோதலாம்.” இந்த அச்சுறுத்தலான செய்தி உலகமுழுவதும், மார்ச் 12, 1998-ல் செய்தித்தாள்களின் தலையங்கத்திலும் சின்னத்திரையிலும் இன்டர்நெட்டிலும் பரவியது. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இது எந்தளவுக்கு உண்மை என்பதை அறிந்து கொள்ள துடித்தனர். ஆனால் வானவியல் நிபுணர்களோ இதற்கு கொஞ்சமும் வாய்ப்பில்லை என்பதாக கூறிவிட்டனர்.
இருப்பினும் இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலைமைகள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வு தோன்றியது. “இது திகிலூட்டுவதாக இருந்தபோதிலும் அநேகர் இதை ஒரு பெரிய ஆச்சரியமான விஷயமாக கருதவில்லை என்பதே இந்த புரளியின் சிறப்பம்சமாகும்” என்பதாக யு.எஸ்.நியூஸ் & உவர்ல்ட் ரிபோர்ட் சொன்னது. “பூமியிலுள்ள நாம் இப்படிப்பட்ட விண்பொருட்களை இன்னும் அதிகமாகவே எதிர்பார்ப்போம். அதை குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என திட்டமிடுவோம் என்ற கருத்தெல்லாம் சில பத்தாண்டுகளுக்கு முன்பாகவே புஸ்வானமாகிவிட்டது. ஆனால் இன்றோ, இப்படிப்பட்ட அழிவிற்கான சாத்தியம் அவ்வளவு இல்லாதிருந்தும் விஞ்ஞானிகளும் அதிகமான அரசியல்வாதிகளும் இதைக் குறித்து யோசிக்கின்றனர்.”
உலகளாவிய பேரழிவை ஏற்படுத்தும் அளவுக்கு பெரியதாக உள்ள ஏறக்குறைய 2,000-ம் விண்பொருட்கள் இருக்கின்றன. இவை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் குறுக்கிடலாம் அல்லது அதை நெருங்கி வரலாம் என்பதாக சில வானவியல் நிபுணர்கள் நம்புகின்றனர். இவற்றில் மிகச்சிறிய ஒன்று இப்பூமியில் மோதினால் போதும், அவ்வளவுதான்! பல அணுகுண்டுகள் ஒரே சமயத்தில் வெடித்து சிதறியதுபோல இருக்கும். இப்படிப்பட்ட பேரழிவின் விளைவு நமது பூமிக்கும் அதில் குடியிருக்கும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒட்டுமொத்தமாக சமாதிக்கட்டிவிடும்.
இப்படிப்பட்ட தெளிவற்ற முன்னறிவிப்புகளும் கணக்குகளும் இப்பிரபஞ்சத்தை படைத்தவராகிய யெகோவா கடவுளுடைய கருத்திற்கு காதை அடைத்துக்கொள்கின்றன. (சங்கீதம் 8:3; நீதிமொழிகள் 8:27) பூமிக்காகவும் மனித இனத்திற்காகவும் கடவுள் தம்முடைய விருப்பத்தையும் நோக்கத்தையும் பைபிளில் தெளிவாக தெரியப்படுத்தியிருக்கிறார். மின்காந்த அலைகளினால் நம்முடைய பூமி அழிவதை அவர் அனுமதிப்பாரா?
தெய்வீக கட்டுப்பாட்டில் பிரபஞ்சம்
யெகோவா இப்பிரபஞ்சத்தின் சர்வ வல்லமையுள்ள படைப்பாளராக இருக்கிறார். ஆகவே விண்ணுலக பொருட்களை கட்டுப்படுத்தும் சக்திகளை முழுமையாக அடக்கி ஆள்பவராக இருக்கிறார் என்பது நியாயமானதாய் தோன்றவில்லையா? யெகோவாவைக் குறித்து ஞானமுள்ள அரசனாகிய சாலொமோன் சொன்னார்: “புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.” (நீதிமொழிகள் 3:19) தீர்க்கதரிசியாகிய எரேமியா கடவுளைக் குறித்து இவ்வாறு அறிவித்தார்: “வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார்.”—எரேமியா 51:15.
விண்ணுலக படைப்புகளாகிய நட்சத்திரங்கள், வால்நட்சத்திரங்கள், கோள்கள், குறுங்கோள்கள், வால்மீன்கள் போன்றவற்றின் செயல்பாட்டுக்கு பின்னாலுள்ள சக்திகளையும் சட்டங்களையும் யெகோவா இயக்கிவிட்டிருக்கிறார். (ஏசாயா 40:26) இருப்பினும் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் தோற்றம், வாழ்நாட்காலம், அழிவு போன்ற இயற்கை சுழற்சிகளில் கடவுள் தொடர்ச்சியாக தலையிட்டுக்கொண்டில்லை. இது விண்வெளியில் கோளங்கள் பயங்கரமாக மோதிக்கொள்ளுவதையும் உட்படுத்துகிறது. ஜூலை 1994-ல் ஷூ மேக்கர்-லெவி 9 என்ற வால் நட்சத்திரத்தின் துண்டுகள் வியாழன் கோளில் மோதிய சம்பவம் சமீபத்திய உதாரணமாகும்.
மனிதன் உண்டாவதற்கு முன்பே விண்ணிலிருந்த பெரும்பாறைகள் பூமியை தாக்கின என்பதற்கு புவியியல் ஆதாரம் இருக்கிறது. ஜனக்கூட்டத்தால் நிறைந்து வழியும் நமது கிரகம் இப்படிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகுமா? உதாரணமாக 1.5 கிலோமீட்டர் விட்டமுள்ள குறுங்கோள், பூமியோடு மோதினால் ஏற்படும் விளைவுதான் என்ன? வானவியல் நிபுணரான ஜாக் ஹில்ஸ், ஹிரோஷிமாவை தரைமட்டமாக்கிய அணுகுண்டை விட லட்சக்கணக்கான மடங்கு அதிகமான நாசத்தை இது ஏற்படுத்தும் என்பதாக முன்னறிவிக்கிறார். இது ஒருவேளை கடலை தாக்குமேயானால் பேரலைகளின் சீற்றம் கரையோரத்தை வெள்ளக்காடாக்கி விடும். “நிமிர்ந்து நின்ற நகரங்கள் தரைமட்டமாகி விடும்” என்பதாகவும் ஹில்ஸ் கூறுகிறார். இத்தகைய கோரமான காட்சி மனித இனத்தின் முற்றிலுமான அழிவை முன்னறிவிக்கிறது. இத்தகைய அழிவின் முன்னறிவிப்பு, பூமிக்கான கடவுளுடைய நோக்கத்தில் எவ்விதமாக பொருந்துகிறது? யெகோவாவுடைய நோக்கத்தில் பூமிக்கு விசேஷித்த இடம் இருப்பதாக பைபிள் காட்டுகிறது.
நமது பூமி—ஒரு நோக்கத்திற்காக படைக்கப்பட்டது
நமது பூமியைக்குறித்து சங்கீதக்காரன் சொல்லுகிறார்: “வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.” (சங்கீதம் 115:16) யெகோவாவைக்குறித்து விவரிப்பவராய் ஏசாயா பின்வருமாறு கூறினார்: ‘பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவன்.’ (ஏசாயா 45:18) யெகோவா பூமியை மனிதகுலத்திற்கு பரம்பரைச் சொத்தாக கொடுத்திருக்கிறார். கடவுள் பயமுள்ள மனிதர்களுடைய நித்திய எதிர்காலத்தை நமது சிருஷ்டிகர் மனதில் கொண்டிருக்கிறார். ஆகவே பூமி அவர்களுடைய நிரந்தர வீடாக என்றென்றும் நிலைத்திருக்கும். “[யெகோவா] பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்” என்பதாக சங்கீதம் 104:5 நமக்கு உறுதியளிக்கிறது.
உண்மைதான், நமது கிரகத்தில் சில பேரழிவுகள் நடப்பதை கடவுள் அனுமதித்து இருக்கிறார். இவை எண்ணற்ற மக்களின் உயிரை பறித்திருக்கின்றன. யுத்தங்கள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் போன்றவை அவற்றில் சில. மனிதர்களுடைய பேராசை, முட்டாள்தனம், கொடுஞ்செயல்கள் போன்றவை இப்படிப்பட்ட பேரழிவுகளுக்கு முழுமையாகவோ அல்லது ஓரளவுக்கோ காரணமாயிருக்கின்றன. (பிரசங்கி 8:9) பூமியதிர்ச்சிகள், எரிமலை வெடிப்புகள், வெள்ளப்பெருக்குகள், புயல் போன்ற மற்ற இயற்கை பேரழிவுகளை மனிதனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. கடவுளுடைய ஆதி நோக்கத்திற்கிசைய இன்று மனிதர்கள் பரிபூரணராக இல்லை. மாறாக பாவமுள்ளவர்களாக இருக்கின்றனர். தனிநபர்கள் இப்படிப்பட்ட இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுவதிலிருந்து தெய்வாதீனமாக பாதுகாக்கப்படுவார்கள் என்பதாக இந்த சமயத்தில் எதிர்பார்க்க முடியாது.
இருப்பினும், பூமியில் மனித இனத்தை பூண்டோடு அழித்துவிடுவதாக அச்சுறுத்தும் எதையும் கடவுள் அனுமதித்தது இல்லை. மனிதன் படைக்கப்பட்டதிலிருந்து, மனித இனம் முழுவதையும் துடைத்தழித்த இயற்கை பேரழிவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பதாக வரலாறு உறுதிசெய்கிறது.a
மனிதகுலம் நிலைத்திருக்கும் என்பதற்கு உத்தரவாதம்
மனித வரலாற்றின் ஆரம்பம் முதற்கொண்டே “பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்”துவது மனிதனுக்கான கடவுளுடைய நோக்கமாகும். (ஆதியாகமம் 1:28; 9:1) “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என்பதாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். (சங்கீதம் 37:9, 11, 22, 29) தம்முடைய நோக்கத்தைக்குறித்து யெகோவா இவ்வாறு உறுதியளிக்கிறார்: “என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்.”—ஏசாயா 46:10; 55:11; சங்கீதம் 135:6.
மின்காந்த அலைகளினால் ஏற்படும் சிறியளவிலான இயற்கை அழிவுகள் தாக்குவதற்கு வாய்ப்பே இல்லை என்பதாக பைபிள் சொல்லவில்லை. இருப்பினும் இப்படிப்பட்ட பேரழிவுகள், பூமி மற்றும் மனித இனத்திற்கான யெகோவாவின் நோக்கத்தை தடை செய்ய முடியாது என நாம் நிச்சயமாக இருக்கலாம். பைபிள் வாக்களித்திருக்கிறபடி, நம்முடைய பூமியில் மனிதர்கள் என்றென்றும் குடியிருப்பார்கள். ஆம், பூமி நித்திய காலமாக மனிதவர்க்கத்திற்கு வீடாக இருக்கும்!—பிரசங்கி 1:4; 2 பேதுரு 3:13.
[அடிக்குறிப்புகள்]
a நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயம் கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் செயலாகும். ஆனால் சில மனிதர்களும் மிருகங்களும் தப்பிப்பிழைக்கும்படி யெகோவா பார்த்துக்கொண்டார்.—ஆதியாகமம் 6:17-21.