பறக்கும் பாறைகள்
தெளிந்த ஓர் இரவில் வானத்தில் ஓர் எரி நட்சத்திரம் திடீரென்று சுடர்வீசிச் செல்வதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? விரைவில் நீங்கள் ஒன்றைக் காணக்கூடும். அறிவியலாளர்களின்படி இயற்கையின் இந்த வாணவேடிக்கைகள் பூமியினுடைய வானங்களின் குறுக்கே ஒவ்வொரு நாளும் சுமார் 20,00,00,000 தடவைகள் தடம்பதிக்கின்றன!
அவை என்ன? அவை விண்கற்கள் என்றழைக்கப்பட்ட பாறையாலான அல்லது உலோகப் பொருட்களாலான வெறும் துண்டுகளாக இருக்கின்றன; அவை பூமியின் வளிமண்டலத்தில் புகும்போது வெண்தழலில் சுடர்விட்டு எரிகின்றன. பூமியிலிருந்து நோக்கும்போது வானத்தின் குறுக்கே அவை விட்டுச்செல்கிற பளிச்சிடும் ஒளிக் கீற்று எரிவிண்மீன் (meteor) எனப்படுகிறது.
பெரும்பாலான மீட்டியராய்டுகள் (meteoroids) பூமியை வந்தடைவதற்குள் முழுவதுமாக எரிந்துவிடுகின்றன; ஆனால் சில அந்தக் கடும் வெப்பத்தைத் தாங்கி, பூமியின் மேற்பரப்பை வந்தடைகின்றன. இவை விண்கற்கள் (meteorites) எனப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் இந்தப் பறக்கும் பாறையின் சுமார் 1,000 டன் பூமியில் வந்து சேருவதாக சில அறிவியலாளர் கணக்கிடுகின்றனர்.a
முக்கியமாக இந்தப் பறக்கும் பாறைகளின் அளவு, ஒப்பிடுகையில் சிறியதாக இருப்பதன் காரணமாக இவ்வாறு இவை விழுவது மனிதருக்கு அவ்வளவு ஆபத்தானவையாக இருப்பதில்லை. உண்மையில், ஒரு மண் துகளைவிடவும் அவ்வளவு பெரிதாக இராத விண்கற்களாலேயே பெரும்பாலான எரிவிண்மீன்கள் உண்டாக்கப்படுகின்றன. (“புறவெளியிலிருந்து பாறைகள்” என்ற பெட்டியைப் பார்க்க.) ஆனால் விண்ணில் பறக்கும் ஆயிரக்கணக்கான பெரிய பாறைகளைக் குறித்து என்ன? உதாரணமாக, சுமார் 1,000 கிலோமீட்டர் குறுக்களவை உடைய சிரீஸ் என்றறியப்பட்ட ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்! மேலும் 190 கிலோமீட்டருக்கும் அதிகமான ஒரு குறுக்களவை உடையதாக அறியப்பட்டிருக்கும் சுமார் 30 பாறைகள் இருக்கின்றன. இந்தப் பெரிய பாறைகள் உண்மையில் சிறிய கோள்களாக இருக்கின்றன. அறிவியலாளர்கள் இவற்றைக் குறுங்கோள்கள் (asteroids) என்றழைக்கின்றனர்.
இந்தக் குறுங்கோள்களில் ஒன்று பூமியில் விழுந்தால் என்ன ஆகும்? அச்சுறுத்தலாகத் தோன்றும் இதுவே, அறிவியலாளர்கள் குறுங்கோள்களைப் பற்றி ஆராய்வதற்கு ஒரு முக்கிய காரணம். செவ்வாய் மற்றும் வியாழனுக்கு இடைப்பட்ட ஒரு பகுதியில் பெரும்பாலான குறுங்கோள்கள் சுற்றினாலும், வானவியலர்களால் கவனிக்கப்பட்ட சில, உண்மையில் பூமியின் சுற்றுப்பாதையைக் குறுக்கிடுகின்றன. அ.ஐ.மா.-வின் அரிஜோனாவிலுள்ள ஃப்ளாக்ஸ்டாஃப்பிலுள்ள (பாரின்ஜர் க்ரேட்டர் என்றும் அழைக்கப்பட்ட) எரிவிண்மீன் குழிகளைப் போன்ற பெரிய குழிகள் இருப்பது மோதலுக்கான அச்சுறுத்தலை உறுதிசெய்கிறது. டைனாசார்கள் இனமற்றுப்போனதைக் குறித்த ஒரு கோட்பாடு என்னவென்றால், ஒரு பெரிய மோதல் வளிமண்டலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, பூமியை ஒரு நீண்டகால குளிரான வானிலைக்குள் ஆழ்த்தியது என்றும் அதில் டைனாசார்களால் உயிர்வாழ முடியவில்லை என்பதாகும்.
இன்று அப்படிப்பட்ட பேரழிவுக்குரிய மோதல் மனிதகுலத்தை அழித்துவிடக்கூடும். என்றபோதிலும், “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என்பதாக பைபிள் குறிப்பிடுகிறது.—சங்கீதம் 37:29.
[அடிக்குறிப்பு]
a கணக்குகள் வித்தியாசப்படுகின்றன.
[பக்கம் 23-ன் பெட்டி]
வீடியோடேப்பில் ஒரு தீப்பந்து
சில எரிவிண்மீன்கள் வழக்கத்திற்குமாறாக பிரகாசமாகவும் பெரியவையாகவும் இருக்கின்றன. இவை தீப்பந்துகள் எனப்படுகின்றன. அக்டோபர் 9, 1992 அன்று, மேற்காணும் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள தீப்பந்து, ஐக்கிய மாகாணங்களிலுள்ள பல மாகாணங்களின் வானங்கள்மீது ஒளிக்கீற்றை வீசிச் சென்றது. அந்தத் தீப்பந்து முதலில் மேற்கு வர்ஜீனியாவுக்கு மேல் காணப்பட்டு, 700-கிலோமீட்டர் நிலப்பரப்புள்ள பகுதிக்கு மேலாகத் தென்பட்டது. சுமார் 12 கிலோகிராம் எடையுள்ள ஒரு துண்டு, நியூ யார்க்கிலுள்ள பீக்ஸ்கில்லில் நிறுத்திவைக்கப்பட்ட காரின் மீது வந்து விழுந்தது.
அந்த மீட்டியராய்ட் வளிமண்டலத்தில் புகுந்த உராய்வு கோணத்தின் காரணமாக, 40 நொடிகளுக்கும் மேலாக நிலைத்திருந்த பிரகாசமான தீப்பந்து ஒன்று உருவாக்கப்பட்டது என்பதே இந்த நிகழ்ச்சியைப் பற்றிய தனிச்சிறப்பாக இருக்கிறது. இதை வீடியோவில் பதிவுசெய்வதற்கான அபூர்வமான வாய்ப்பை இது அளித்தது; குறைந்தது 14 வித்தியாசமான நோக்குமிடங்களிலிருந்தாவது இது பதிவு செய்யப்பட்டது. இயற்கை (ஆங்கிலம்) என்ற பத்திரிகையின்படி, “ஒரு விண்கல் எதிலிருந்து பெறப்பட்டதோ அந்தத் தீப்பந்தின் முதல் இயங்கு படக்காட்சிகள் இவையே.”
அந்தத் தீப்பந்து குறைந்தது 70 துண்டுகளாகவாவது உடைந்தது; அவை சில வீடியோடேப்புகளில் பிரகாசிக்கும் தனிப்பட்ட ஏவுகணைகளைப்போல் காணப்படுகின்றன. இந்த நிகழ்விலிருந்து ஒரு விண்கல் மட்டுமே காணப்பட்டிருக்கிறபோதிலும், ஒன்று அல்லது அதிகமான துண்டுகள் பூமியின் வளிமண்டலத்தைத் துளைத்து நிலத்தில் விழுந்திருக்கக்கூடும் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர். முன்னர் சுமார் 20 டன் எடையுடையதாயிருந்த பெரிய மீட்டியராய்டிலிருந்து அவ்வளவே எஞ்சியதாக இருக்கக்கூடும்.
[பக்கம் 24-ன் பெட்டி]
புறவெளியிலிருந்து பாறைகள்
குறுங்கோள்: ஒரு ப்ளானட்டாய்ட் அல்லது ஒரு சிறிய கோள் என்றும் அழைக்கப்படுகிறது. மிகவும் சிறிய இந்தக் கோள்கள் சூரியனைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையில் சுற்றுகின்றன. ஒருகாலத்தில் பெரிய பொருட்களாய் இருந்தவற்றின் சிறிய துண்டுகள் என்பதைக் குறிப்பிடக்கூடிய வகையில் பெரும்பாலானவை ஒழுங்கற்ற வடிவங்களை உடையவை.
மீட்டியராய்ட்: விண்ணில் மிதக்கிற அல்லது வளிமண்டலத்திற்குள் விழுகிற உலோகத்தாலான அல்லது பாறையாலான ஓரளவு சிறிய துண்டு. மோதல்களால் உருவாக்கப்பட்ட குறுங்கோள்கள் அல்லது இல்லாமற்போன வால்விண்மீன்களின் பாறை சிதைவுகளிலிருந்து உண்டான சிறு துண்டுகளே பெரும்பாலான மீட்டியராய்டுகள் என்பதாகச் சில அறிவியலாளர்கள் எண்ணுகின்றனர்.
எரிவிண்மீன்: பூமியின் வளிமண்டலத்தை ஒரு மீட்டியராய்ட் ஊடுருவும்போது, காற்றின் உராய்வு, கடும் வெப்பத்தையும் பிரகாசமான சுடரொளியையும் உண்டுபண்ணுகிறது. வெப்பமுள்ள பிரகாசிக்கும் வாயுக்களின் இந்தத் தடம் வானத்தில் ஒரு ஒளிக்கற்றையைப்போல கணநேரம் காணப்படுகிறது. அந்த ஒளிக்கற்றை எரிவிண்மீன் எனப்படுகிறது. அநேகர் அதை எரிநட்சத்திரம் என்றோ வீழ்நட்சத்திரம் என்றோ அழைக்கின்றனர். அநேக எரிவிண்மீன்கள் பூமியின் மேற்பரப்பிற்குமேல் சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கையில் முதலாவதாகத் தென்படுகின்றன.
விண்கற்கள்: சில சமயங்களில் ஒரு மீட்டியராய்ட் அவ்வளவு பெரியதாக இருப்பதால், நம் வளிமண்டலத்தில் புகும்போது முற்றிலுமாக எரிந்துவிடாமல், பூமிக்குள் விழுகிறது. அப்படிப்பட்ட ஒரு மீட்டியராய்டுக்கு விண்கல் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. சில மிகப் பெரியவையாயும் கனமாயும் இருக்கலாம். ஆப்பிரிக்காவிலுள்ள நமிபியாவில் ஒரு விண்கல் 60 டன்னுக்கும் அதிகமான எடையுள்ளது. 15 டன் அல்லது அதற்கு அதிகமான எடையுள்ள மற்ற பெரிய விண்கற்கள் ஐக்கிய மாகாணங்கள், கிரீன்லாந்து, மற்றும் மெக்ஸிகோவில் காணப்பட்டிருக்கின்றன.
[பக்கம் 24-ன் பெட்டி/படம்]
ஐடாவும் அதன் குழந்தை நிலாவும்
ஐடா என்ற பெயருடைய ஒரு குறுங்கோளைப் படம் பிடிக்கையில், வியாழனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த காலலேயோ என்ற விண்கலம், எதிர்பாராத ஒரு கண்டுபிடிப்பைச் செய்தது—ஒரு குறுங்கோளை ஒரு நிலா சுற்றிவருவதற்கு முதல் ஆதாரப்பூர்வ உதாரணம். வானம் மற்றும் தொலைநோக்கி (ஆங்கிலம்) என்பதில் அறிக்கை செய்யப்பட்டபடி, டாக்டல் என்று பெயரிடப்பட்ட இந்த முட்டை-வடிவ நிலா 1.6 கிலோமீட்டருக்கு 1.2 கிலோமீட்டர் என்ற அளவுடையது. 56 கிலோமீட்டருக்கு 21 கிலோமீட்டர் அளவுள்ள குறுங்கோளாகிய ஐடாவின் மையத்திலிருந்து அதன் சுற்றுப்பாதை சுமார் 100 கிலோமீட்டர். ஐடாவும் அதன் சிறிய நிலாவும், விண்ணில் ஏற்பட்ட ஒரு மோதலால் சிதறப்பட்ட ஒரு பெரிய பாறையின் சிதறிய துண்டுகளாக எண்ணப்படுகிற கரோனிஸ் என்ற குறுங்கோள் குடும்பத்தின் பாகமாக இருக்க வேண்டும் என்பதாக அவற்றின் அகச்சிகப்பு நிற தன்மைகள் உணர்த்துகின்றன.
[படத்திற்கான நன்றி]
NASA photo/JPL
[பக்கம் 25-ன் படம்]
எரிவிண்மீன் குழி, ஃப்ளாக்ஸ்டாஃப்பின் அருகில், அரிஜோனா, அ.ஐ.மா.-விலுள்ள இது 1,200 மீட்டர் குறுக்களவும் 200 மீட்டர் ஆழமும் உடையது
[படத்திற்கான நன்றி]
Photo by D. J. Roddy and K. Zeller, U.S. Geological Survey
[பக்கம் 23-ன் படத்திற்கான நன்றி]
Sara Eichmiller Ruck