உங்கள் செவித் திறனைக் காத்துக்கொள்ளுங்கள்!
பிரான்ஸில் 400 இளைஞர்களிடம் நடத்திய சுற்றாய்வு ஒன்று, அவர்களில் ஒவ்வொரு 5 பேருக்கும் ஒருவர் கேட்கும் திறன் இழப்பால் கஷ்டப்படுகிறார் என்பதைத் தெரியப்படுத்தியது. பத்தாண்டுகள் முன் செய்யப்பட்ட அப்பேர்ப்பட்ட ஆய்வு, ஒவ்வொரு 10 இளைஞருக்கு ஒருவர் மட்டுமே அப்படி கஷ்டப்பட்டதாக காண்பித்தது. இளைஞருக்கு ஏற்படும் கேட்கும் திறன் இழப்பு குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகரிப்பதன்பேரில் நடவடிக்கை எடுத்து, தனிப்பட்ட ஸ்டீரியோக்களிலிருந்து வரும் ஒலி அளவை 100 டெசிபல்கள் என்ற வரையறைக்குள் வைக்கும்படி பிரெஞ்சு தேசிய பேரவை கடந்த ஆண்டு தீர்மானித்தது.
சொந்த ஸ்டீரியோக்களிலுள்ள ஹெட்ஃபோன்களின் உயர் ஒலி அளவுகளே கேட்கும் திறன் இழப்பிற்கு அதிகப்படியான காரணம் என்று கூறப்படுகிறது. 100 டெசிபல்களுக்கு அதிக அளவான சப்தம், ஒருசில மணிநேரத்திற்குப்பின் நிரந்தரமான சேதத்தில் விளைவடையலாம் என்று காது அறுவை மருத்துவர் ஷான்பயர் காவ் கூறுகிறார். சத்தமானது சுமார் 115 டெசிபல்களுக்கு அதிகமாக இருக்கையில் அப்படிப்பட்ட சேதம் சில நிமிடங்களிலேயே ஏற்பட்டுவிடுகிறது. அதன் தனிப்பட்ட ஸ்டீரியோக்கள் பெரும்பாலானவற்றிலிருந்து, 100 டெசிபல்களுக்கு அதிகமான சத்தமே வெளிவருவதாக FNAC என்ற பிரபல பிரெஞ்சு மின்னணுவியல் சம்பந்தமான வியாபார கழகம் கூறுகிறது. தனிப்பட்ட ஸ்டீரியோக்கள் சில 126 டெசிபல்களை ஒலிக்க முடியும்; இது 100 டெசிபல்களுடையதைவிட 400 மடங்கு அதிக சக்தி உடையது!
பிரான்ஸைச் சேர்ந்த கேட்கும் திறன் ஆய்வு நிபுணராகிய கிறிஸ்டியான் மேயர் பிஷ் சொல்லுகிறபடி, தனிப்பட்ட ஸ்டீரியோக்களைவிட ராக் இசைக் கச்சேரிகள் இளைஞரை இன்னுமதிகமாகப் பாதித்துவரக்கூடும். உண்மையில், ஆரோக்கியமான 18 வயது இளைஞருடன் ஒப்பிடுகையில், ராக் இசைக் கச்சேரிகளுக்கு ஒழுங்காகச் சென்றுவந்தவர்கள் கேட்கும் திறனில் குறிப்பிடத்தக்க இழப்பை உடையவர்களாய் இருந்தனர். பிரெஞ்சு தேசிய பேரவை துணைத் தலைவராகிய ஷான்-ஃப்ரான்ஸ்வா மாட்டே இவ்வாறு எச்சரித்ததில் எவ்வித ஆச்சரியமுமில்லை: “காது கேளாதவர்களின் சந்ததி ஒன்றை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.”
ஆகவே, உங்கள் கேட்கும் திறனைக் காத்துக்கொள்ள, அந்த ஒலி அளவைக் குறித்து கவனமாயிருங்கள்!