உங்கள் செவியுணர்வு—பேணிக் காக்கவேண்டிய ஒரு பரிசு
நகர்ப்புறத்தின் இரைச்சலிலிருந்து தூரமாக விலகியிருக்கும் நாட்டுப்புறத்தில் ஒரு அமைதியான மாலைப்பொழுதை கழிப்பது, இரவின் இனிமையான ஒலிகளை அனுபவிக்க நமக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது. தென்றல் காற்று இலைகளை மெதுவாக சலசலக்கச் செய்கிறது. தொலைதூரத்திலிருக்கும் பூச்சிகளும், பறவைகளும், மிருகங்களும் அவற்றின் சப்தத்தை சேர்க்கின்றன. இப்படிப்பட்ட மென்மையான ஒலிகளைக் கேட்பது எப்படிப்பட்ட ஓர் அற்புதமான உணர்வாக இருக்கிறது! உங்களால் அவற்றை கேட்க முடிகிறதா?
மனிதனுடைய செவியுணர்வு அமைப்புத் திறன் திகைப்பில் ஆழ்த்துவதாய் இருக்கிறது. எதிரொலியற்ற ஒரு கூடத்தில்—எல்லா ஒலியையும் உள்வாங்கும்படி அமைக்கப்பட்ட மேற்பரப்புகளைக் கொண்ட ஒலியியல் ரீதியில் தனியாக பிரிக்கப்பட்ட ஓர் அறையில்—அரைமணிநேரம் செலவு செய்தால், உங்கள் உடலுக்குள்ளேயே ஏற்படும் வினோதமான ஒலிகளை கேட்கக்கூடும் அளவுக்கு ‘உங்கள் செவியுணர்வுத் திறன் அதிகரித்திருக்கும்.’ ஒலியியல் விஞ்ஞானி எஃப். ஆல்டன் எவரஸ்ட் அந்த அனுபவத்தை ஒலியியலின் முக்கிய கைப்புத்தகம் (ஆங்கிலம்) என்பதில் விளக்குகிறார். முதலில், உங்கள் இதயத் துடிப்பே அதிக சப்தமாக கேட்க ஆரம்பிக்கும். அந்த அறையில் ஒருமணிநேரம் இருந்தபிறகு, உங்கள் ரத்தம் அதன் நாளங்களில் பாய்ந்தோடும் சப்தத்தை கேட்கிறீர்கள். முடிவாக, உங்களுக்கு கூர்மையான செவியுணர்வு இருந்தால் “இதயத் துடிப்பின் சப்தத்திற்கும், இரத்த ஓட்டத்தின் சப்தத்திற்கும் இடையில் ஒரு வினோதமான ஹிஸ் என்ற சப்தம் கேட்கும்போது உங்கள் பொறுமை பலனளிக்கப்படுகிறது. அது என்ன? உங்கள் செவிப்பறைகளில் காற்றுத் துகள்கள் மோதுவதன் சப்தம்தான் அது” என்று எவரஸ்ட் விளக்குகிறார். “இந்த சப்தத்தால் ஏற்படும் செவிப்பறை அசைவு நம்பமுடியாதளவு சிறியதாகும்—ஒரு சென்டிமீட்டரில் பத்து லட்சத்தில் நூற்றில் ஒரு பங்கு மட்டுமே!” இதுவே “செவியுணர்வின் எல்லை” அதாவது ஒலியை கேட்பதற்கான உங்கள் திறமையின் அடிமட்ட அளவு. ஒலியைக் கேட்பதற்கான இதைவிட அதிக உணர்வு அவசியமற்றது, ஏனென்றால் காற்றுத் துகள்கள் மோதும் சப்தத்தில் இந்தப் பலகீனமான ஒலிகள் மங்கிப்போய்விடும்.
செவியுணர்வானது புறச்செவி, நடுச்செவி, உட்செவி ஆகியவற்றின் ஒத்துழைப்பினாலும், ஒலியை உணர்ந்து அதற்குப் பொருள்கொடுக்கும் நம்முடைய நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் திறனாலும் சாத்தியமாக்கப்படுகிறது. அழுத்தத்தின் அதிர்வு அலைகளாக ஒலி காற்றில் பயணம் செய்கிறது. இந்த அலைகள் நம்முடைய செவிப்பறையை முன்னும் பின்னும் அசைக்கின்றன; இந்த அசைவை நடுச்செவி உட்செவிக்கு கடத்துகிறது. அங்கு இந்த அசைவுகள், மூளையால் ஒலி என்று பொருள்படுத்தப்படும் நரம்புத் துடிப்புகளாக மாற்றப்படுகின்றன. a
முக்கியமான உங்கள் புறச்செவி
உங்கள் காதின் எளிதில் வளையக்கூடியதும், மடிப்புகளுடன் கூடியதுமான வெளிப்புறம் செவிமடல் (pinna) என்று அழைக்கப்படுகிறது. செவிமடல் ஒலியை சேகரிப்பது மட்டுமல்லாமல், அதைவிட இன்னும் அதிகத்தையும் செய்கிறது. உங்கள் காதுகளில் ஏன் இத்தனையநேக சிறிய மடிப்புகள் இருக்கின்றன என நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? செவிமடலின் வித்தியாசமான மேற்பரப்புகளிலிருந்து எதிரொலிக்கும் ஒலி அலைகள், அவை வந்துசேரும் கோணத்தைப் பொருத்து நுட்பமான விதத்தில் மாற்றமடைகின்றன. இந்தச் சிறிய மாற்றங்களை புரிந்துகொண்டு அந்தச் சப்தத்தின் ஊற்றுமூலத்தின் நிலையை மூளையால் அடையாளம் காணமுடிகிறது. இதோடு, உங்கள் ஒவ்வொரு காதிலும் வந்துசேரும் ஒலியின் நேரத்தையும் செறிவையும்கூட மூளை ஒப்பிடுகிறது.
இதை விளக்கிக்காட்ட, தன் கண்களை மூடியிருக்கும் ஒருவர் முன்னால் உங்கள் கையை மேலும் கீழுமாக அசைத்துக் கொண்டே விரலை சொடுக்குங்கள். உங்கள் கை அவருடைய ஒவ்வொரு காதிலிருந்தும் அதே தூரத்தில் இருந்தாலும், சப்தம் மேலிருந்து, கீழிருந்து அல்லது இடையில் எங்கிருந்து வருகிறது என்று அவரால் சொல்லமுடியும். உண்மையில், ஒரு காது மட்டுமே கேட்கக்கூடிய ஆளும்கூட சப்தம் எங்கிருந்து வருகிறது என்று தெளிவாக கூறமுடியும்.
உங்கள் நடுச்செவி—ஒரு இயக்கமுறை அதிசயம்
உங்கள் உட்செவியை நிரப்பும் திரவத்திற்கு செவிப்பறையின் அசைவுகளை கடத்துவதே நடுச்செவியின் முக்கிய வேலையாகும். அந்தத் திரவம் காற்றைவிட அதிக எடையுள்ளது. ஆகவே, ஒரு செங்குத்தான மலையில் ஏறும் சைக்கிள் ஓட்டுபவருடைய விஷயத்தில் உண்மையாய் இருப்பதுபோலவே, ஒலி ஆற்றலை மிகச்சிறந்த விதத்தில் கடத்த சரியான கியர் விகிதம் (gear ratio) அவசியமாக இருக்கிறது. நடுச்செவியில், அவற்றின் வடிவங்கள் காரணமாக பொதுவாக சுத்தி எலும்பு, பட்டை எலும்பு, அங்கவடி எலும்பு என்றழைக்கப்படுகிற மூன்று சிறிய எலும்புகள் மூலம் இந்த ஆற்றல் கடத்தப்படுகிறது. இந்தச் சின்னஞ்சிறிய இயக்கமுறை சார்ந்த இணைப்பு, உட்செவிக்கு கிட்டத்தட்ட பொருத்தமானதாக இருக்கும் ஒரு ‘கியர் விகிதத்தை’ எட்டுகிறது. இது இல்லையென்றால், ஒலி ஆற்றலில் 97 சதவீதம் வீணாகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது!
உங்கள் நடுச்செவியின் இணைப்புடன் இரண்டு மென்மையான தசைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சப்தமான, குறைஅலையதிர்வு ஒலி உங்கள் செவியை வந்தடையும் அந்த ஒருநொடியின் நூற்றில் ஒருபாக சமயத்திற்குள், இந்தத் தசைகள் தாமாகவே இறுகிக்கொள்ளுகின்றன; அதனால் இந்த இணைப்பு அசைவது அதிகமாக தடுக்கப்பட்டு, உங்கள் செவியுணர்வுக்கு வரக்கூடிய சாத்தியமான பாதிப்பை தவிர்க்கிறது. இயற்கையில் ஏற்படக்கூடிய எல்லா சப்தமான ஒலியிலிருந்தும் உங்களை பாதுகாக்கக்கூடிய அளவு இந்த அனிச்சைச் செயல் போதுமான விரைவுடையது; ஆனாலும் எல்லா இயந்திரங்களும், மின்னியக்க கருவிகளும் உண்டாக்கும் சப்தத்திலிருந்தல்ல. மேலுமாக, இந்தச் சிறிய தசைகள் இந்தப் பாதுகாப்பான நிலையை பத்து நிமிடங்களுக்கு மட்டுமே தக்கவைக்க முடியும். ஆனால், எரிச்சலுண்டாக்கும் சப்தத்திலிருந்து விலகிவிடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை இது உங்களுக்குக் கொடுக்கிறது. அக்கறைக்குரிய விதமாக, நீங்கள் பேசும்போது, உங்கள் செவியுணர்வை குறைத்துவிடும்படி மூளை இந்தத் தசைகளுக்கு செய்தி அனுப்புகிறது; அப்போதுதான் உங்கள் பேச்சே உங்களுக்கு அதிக சப்தமாக இல்லாமல் இருக்கும்.
வியக்கத்தக்க உங்கள் உட்செவி
செவியுணர்வில் சம்பந்தப்பட்ட உங்கள் உட்செவியின் ஒரு பகுதி, நத்தை-ஓட்டு வடிவமைப்பில் இருப்பதால் காது நத்தை எலும்பு (cochlea) என்று அழைக்கப்படுகிற ஒன்றுக்குள் இருக்கிறது. அதன் மென்மையான இயக்கமுறையை பாதுகாக்கும் மேலுறைதான் உங்கள் உடலிலேயே அதிக வலுவான எலும்பு. அந்த எலும்பு அமைப்பிற்குள், காது நத்தை எலும்பின் நீளத்தை பல கால்வாய்களாக பிரிக்கும் அநேக திசுக்களில் ஒன்றான பேசிலார் சவ்வு காணப்படுகிறது. பேசிலார் சவ்வு நெடுக ஆயிரக்கணக்கான உரோமச் செல்களை—காது நத்தை எலும்பில் நிரம்பியிருக்கும் திரவத்திற்குள் நீண்டுகொண்டிருக்கும் உரோமங்களைப் போன்ற நுனிகளையுடைய நரம்புச் செல்களை—கொண்டிருக்கும் கார்ட்டி உறுப்பு இருக்கிறது.
நடுச்செவியிலிருக்கும் எலும்புகளின் அசைவு காது நத்தை எலும்பிலுள்ள முட்டைவடிவ திறப்பை அதிரச்செய்யும்போது, திரவத்தில் அது அலைகளை உண்டுபண்ணுகிறது. ஒரு குட்டையிலுள்ள சிற்றலைகள் மிதந்துகொண்டிருக்கும் இலைகளை மேலும் கீழுமாக அசைப்பதைப்போல, இந்த அலைகள் சவ்வுகளை அசைக்கின்றன. குறிப்பிட்ட அலையதிர்வுகளுக்கு ஒத்த இடங்களில் பேசிலார் சவ்வை இந்த அலைகள் வளைக்கின்றன. பிறகு அந்த இடங்களிலிருக்கும் உரோமச் செல்கள் மேலிருக்கும் போர்வை சவ்வுமீது உரசுகின்றன. இந்தத் தொடர்பு உரோமச் செல்களை தூண்டிவிடுகிறது; பிறகு அவை செய்தித்துடிப்புகளை உண்டுபண்ணி உங்கள் மூளைக்கு அனுப்புகின்றன. ஒலியின் செறிவு அதிகமாக இருக்கும்போது, உரோமச் செல்கள் அதிகமான அளவிலும் வேகமாகவும் தூண்டப்படுகின்றன. இவ்வாறாக, மூளையானது அதிக சப்தமான ஒலியை உணருகிறது.
உங்கள் மூளையும் செவியுணர்வும்
உங்கள் மூளையே உங்கள் செவியுணர்வு அமைப்பின் அதிக முக்கியமான பகுதி. நரம்பு விசைகளாக அதனிடம் வந்துசேரும் வெள்ளம்போன்ற செய்திகளை ஒலி என்ற மனப்புலனுணர்வாக மாற்றக்கூடிய பிரம்மாண்டமான திறமை அதற்கு இருக்கிறது. மூளையின் இந்த முக்கிய வேலை சிந்தனைக்கும் செவியுணர்வுக்கும் உள்ள விசேஷித்த தொடர்பை சுட்டிக்காட்டுகிறது; உள-ஒலியியல் (psychoacoustics) என்று அறியப்பட்ட துறையில் இந்தத் தொடர்பு ஆராயப்படுகிறது. உதாரணமாக, கூட்டமான ஒரு அறையில் நடக்கும் பல சம்பாஷணைகளில் ஒன்றை கேட்க உங்கள் மூளை உதவுகிறது. ஒரு ஒலிவாங்கிக்கு இந்த ஆற்றல் இல்லை; ஆகவே அதே அறையில் ஒரு பதிவுநாடாவில் செய்யப்பட்ட ஒலிப்பதிவு முற்றிலும் புரியாததாக இருக்கலாம்.
தேவையற்ற ஒலிகளால் ஏற்படும் எரிச்சல் இந்தத் தொடர்பின் மற்றொரு அம்சத்தை மெய்ப்பித்துக் காட்டுகிறது. அந்தச் சப்தத்தின் செறிவு எவ்வளவுதான் குறைவாக இருந்தாலும், நீங்கள் அதை கேட்க விரும்பாதபோது, காதில் கொஞ்சம் விழுந்தாலும் எரிச்சலூட்டுவதாய் இருக்கலாம். உதாரணமாக, ஒரு ஒழுகும் குழாய் ஏற்படுத்தும் சப்தமானது மிகவும் குறைந்த செறிவுடையதே. ஆனால் நடுராத்திரி நிசப்தத்தில் அது உங்கள் தூக்கத்தை கெடுத்தால், அதை மகா எரிச்சலூட்டுவதாக காண்பீர்கள்!
உண்மையில், நம்முடைய உணர்ச்சிகள் நம் செவியுணர்வோடு நெருக்கமான தொடர்புடையவை. உளங்கனிந்த சிரிப்பின் தொற்றும் தன்மையையும், உள்ளார்ந்த அன்பையோ போற்றுதலையோ தெரிவிக்கும் வார்த்தை மனதிற்கு இதமளிப்பதையும் சிந்தித்துப் பாருங்கள். அதேபோல, அறிவுப்பூர்வமாக நாம் கற்றுக்கொள்ளும் காரியங்களில் அநேகம் நம் செவிகள் மூலம் கேட்பவையே.
பேணிக் காக்கவேண்டிய ஒரு பரிசு
நம்முடைய செவியுணர்வின் அநேக வியக்கத்தக்க ரகசியங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன. ஆனால் கிடைத்திருக்கும் அறிவியல் புரிந்துகொள்ளுதலானது, அதில் காணப்படும் அறிவுக்கூர்மைக்கும் அன்புக்குமான நம்முடைய போற்றுதலை அதிகரிக்கிறது. ஒலியியல் ஆராய்ச்சியாளரான எஃப். ஆல்டன் எவரஸ்ட் எழுதுகிறார்: “மனித செவியுணர்வு அமைப்பை முழுமையாக நோக்குகையில், அதன் கடுஞ்சிக்கலான செயல்பாடுகளும் அமைப்புகளும், அது நன்மைசெய்யும் எவரோ ஒருவரால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வரும்படி நம்மை கட்டாயமாக வழிநடத்துகின்றன.”
நம்முடைய செவியுணர்வின் உள்ளியக்கங்களைப் பற்றிய தற்கால அறிவியல்பூர்வமான அறிவு பூர்வீக இஸ்ரவேலின் அரசனாகிய தாவீதுக்கு இல்லை. என்றபோதிலும், தன்னுடைய சரீரத்தையும் அதன் அநேக வரங்களையும் பற்றி ஆழ்ந்த சிந்தனை செய்தவராக, தன்னை படைத்தவருக்கு இவ்வாறு பாடினார்: ‘நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்[டிருக்கிறேன்]; உமது கிரியைகள் அதிசயமானவைகள்.’ (சங்கீதம் 139:14) செவியுணர்வு உட்பட, சரீரத்தின் அதிசயங்களும் ரகசியங்களும் பற்றிய அறிவியல் ஆராய்ச்சியானது, தாவீது சொன்னது சரியே என்பதற்கான கூடுதலான அத்தாட்சியை சேர்க்கிறது—ஒரு அன்புள்ள, ஞானமான சிருஷ்டிகரால் நாம் அற்புதகரமாக உண்டாக்கப்பட்டோம்!
[அடிக்குறிப்பு]
a ஜனவரி 22, 1990 தேதியிட்ட ஆங்கில விழித்தெழு!-வில் 18-21 பக்கங்களைக் காண்க.
[பக்கம் 24-ன் பெட்டி/படம்]
செவியுணர்வு பாதிக்கப்பட்டோருக்கு உதவி
அதிகமான சப்தத்தை நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கும்போது செவியுணர்வில் நிரந்தரமான பாதிப்பு ஏற்படுகிறது. மிகவும் அதிக சப்தமான இசையை கேட்பது அல்லது சப்தம் ஏற்படுத்தும் கருவிகள் அருகில் எந்தப் பாதுகாப்புமின்றி வேலைசெய்வது, இப்படிப்பட்ட ஒரு இழப்பைவிட முக்கியமானவை அல்ல. செவியுணர்வு பாதிக்கப்பட்டவர்களுக்கும், செவிடாக பிறந்தவர்களுக்கும்கூட, கேட்க உதவும் கருவிகள் கொஞ்சம் உதவியாக இருக்கலாம். வித்தியாசப்பட்ட அநேக ஒலிகளை அனுபவிக்கக்கூடிய திறமையை இந்தக் கருவிகள் அநேகருக்கு திரும்ப கொடுத்திருக்கின்றன. முதல் முறையாக கேட்கும் கருவிகள் பொருத்தப்பட்ட ஒரு பெண், தன் சமையலறை ஜன்னலுக்கு வெளியே ஒரு வினோதமான சப்தத்தை கேட்டாள். “அது பறவைகளின் சப்தம்! பல வருடங்களாக நான் பறவைகள் ஒலியை கேட்டதேயில்லை!” என்று உணர்ச்சிபொங்க கூறுகிறாள்.
அதிகப்படியான சேதம் ஏற்படாவிட்டால்கூட, நமக்கு வயதாகும்போது உச்ச ஸ்தாயி (high pitch) ஒலிகளை கேட்கும் நம் திறன் பொதுவாக குறைகிறது. வருத்தகரமாக, பேச்சைப் புரிந்துகொள்வதற்கு பெரும்பாலும் அத்தியாவசியமாக இருக்கும் ஒலிகளாகிய மெய்யெழுத்து ஒலிகளின் அலையதிர்வுகளையும் இது உட்படுத்தும். ஆகவே, முதிர் வயதானவர்கள் வீட்டில் ஏற்படும் சாதாரண சப்தங்களாகிய ஒழுகிக்கொண்டிருக்கும் தண்ணீர் அல்லது கசக்கப்படும் பேப்பர் போன்றவற்றால் பேச்சுத்தொடர்பு பாதிக்கப்படுவதை காணலாம்; ஏனென்றால் மெய்யெழுத்து ஓசைகளுடன் குறுக்கிடும் உச்ச அலையதிர்வுகளை அவை உடையவையாய் இருக்கின்றன. கேட்கும் கருவிகள் கொஞ்சம் உதவியாக இருக்கலாம், ஆனால் அவற்றிலும் சில பிரச்சினைகளுண்டு. ஒரு பிரச்சினை என்னவென்றால், நல்ல தரமான கேட்கும் கருவிகள் அதிக விலையுயர்ந்தவையாக—அநேக நாடுகளில் நடுத்தர வகுப்பை சேர்ந்த மக்களால் வாங்க முடியாத அளவு விலையுயர்ந்தவையாக—இருக்கும். எப்படியிருந்தாலும், எந்தவிதமான கேட்கும் கருவியும் முழுமையான செவியுணர்வை உங்களுக்குத் திரும்ப கொடுக்க முடியாது. ஆகவே, என்ன செய்யப்படலாம்?
கரிசனை காட்டுவது அதிக உதவியாக இருக்கலாம். செவியுணர்வு பாதிக்கப்பட்டவர்களிடம் பேசுவதற்கு முன், நீங்கள் பேசப்போகிறீர்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார் என்று நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த நபரைப் பார்த்து பேச முயற்சி செய்யுங்கள். உங்கள் சரீரத்தின் மற்றும் உதட்டின் அசைவுகளை பார்ப்பதற்கும், உங்கள் வார்த்தைகளில் இருக்கும் மெய்யெழுத்துக்களின் முழு வலிமையையும் புரிந்துகொள்வதற்கும் இது அவருக்கு உதவியாக இருக்கும். கூடுமானால், அந்த நபருக்கு அருகில் சென்று, மெதுவாகவும் தெளிவாகவும் பேசுங்கள்; சப்தம்போட்டு பேசாதீர்கள். பாதிக்கப்பட்ட செவியுணர்வுள்ள அநேகருக்கு சப்தமான ஒலிகள் உண்மையில் வேதனையளிப்பவையாய் இருக்கும். ஒரு வாக்கியம் புரிந்துகொள்ளப்படவில்லை என்றால், அதையே மறுபடியும் சொல்வதற்கு பதிலாக வேறு வார்த்தைகளில் கூற முயலுங்கள். அதேபோல, உங்கள் செவியுணர்வு முன்போல் இல்லையென்றால், பேசுபவருக்கு அருகில் செல்வதன்மூலமும் பொறுமையாய் இருப்பதன் மூலமும் மற்றவர்கள் உங்களிடம் பேசுவதை அதிக சுலபமாக்க நீங்கள் உதவலாம். இந்த அதிகப்படியான முயற்சிகள் மேம்பட்ட உறவுகளில் விளைவடைந்து, உங்கள் சுற்றுப்புறத்திற்கேற்ப அனுசரித்துப்போக உங்களுக்கு உதவி செய்யும்.
[படம்]
செவியுணர்வு பாதிக்கப்பட்டவர்களிடம் பேசும்போது, அவரைப் பார்த்து, மெதுவாகவும் தெளிவாகவும் பேசுங்கள்
[பக்கம் 23-ன் படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
உங்கள் காது
செவிமடல்
முட்டைவடிவ திறப்பு
கேள் நரம்பு
சுத்தி எலும்பு (மேலியஸ்)
பட்டை எலும்பு (இன்கஸ்)
அங்கவடி எலும்பு (ஸ்டேபீஸ்)
கேள் குழாய்
செவிப்பறை
காது நத்தை எலும்பு
கார்ட்டி உறுப்பு
வட்டவடிவ திறப்பு
கேள் நரம்பு
உரோமச் செல்கள்
போர்வைச் சவ்வு
நரம்பு நாரிழைகள்
பேசிலார் சவ்வு