உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g89 7/8 பக். 19-21
  • ஓர் அமைதியான உலகத்திலிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஓர் அமைதியான உலகத்திலிருந்து
  • விழித்தெழு!—1989
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நோய்க்குறி ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது
  • என்னுடைய அமைதியான உலகில் பிரவேசித்தல்
  • ஓட்டோஸ்க்லெரோஸிஸ்—அது என்ன?
  • அங்கவடி எலும்பை நீக்குதல்
  • உங்கள் செவியுணர்வு—பேணிக் காக்கவேண்டிய ஒரு பரிசு
    விழித்தெழு!—1997
  • உங்கள் செவி செய்தித்தொடர்புக்குச் சிறந்த இணைப்புச்சாதனம்
    விழித்தெழு!—1991
  • செவியுணர்வை பாதுகாத்திடுங்கள்!
    விழித்தெழு!—2002
  • கடவுளின் பரிசாகிய சமநிலை
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1989
g89 7/8 பக். 19-21

ஓர் அமைதியான உலகத்திலிருந்து

விடியற்காலை ஐந்து மணி போலிருக்கும். என்னுடைய கணவர் பேசிலும் நானும் படுக்கையில் முழுவதுமாய்ப் போர்த்திக்கொண்டு சொகுசாகத் தூங்கிக்கொண்டிருந்தோம். அப்பொழுது என்னுடைய கணவர் என்னைத் தட்டி எழுப்பி, மென்மையான குரலில், “அன்பே, மழை பெய்கிறது,” என்றார். அப்பொழுது நான் படுக்கையிலிருந்தபடியே பெய்யும் மழையின் இதமான ஓசையைக் கேட்டுக்கொண்டிருக்க எவ்வளவாய் ஆசைப்பட்டேன்! ஆனால் எட்டு வருடங்களாக எப்பொழுது மழை பெய்கிறது என்று பேசில் எனக்குச் சொல்ல வேண்டியதாயிருந்தது, காரணம் நான் காது கேளாதவளானேன். என்றபோதிலும் இம்முறை அதில் ஒரு வித்தியாசம், அதைக் கேட்டு, நான் திடுக்கென்று எழுந்து உட்கார்ந்தேன்! கடந்த பல ஆண்டுகளில் முதல் முறையாக இப்போது நான் அந்த அருமையான ஓசையைக் கேட்டேன்!

பல வருடங்களாக நான் கேட்டிராத பழக்கப்பட்ட சத்தத்தைக் கேட்க ஆரம்பித்த அனுபவத்தில் இதுதானே என்னுடைய முதல் அனுபவம் அல்ல. அதற்கு முந்தின வாரம், சத்தங்கள் இசைந்து எனக்கு இசையாக இருந்தன—அடுப்பின் விசிறி சுழலும் சப்தம், தொலைப்பேசியின் மணி தொடர்ந்து அடிக்கும் சப்தம், சமையலறையில் நடக்கும்போது என்னுடைய சொந்த கால்களின் நடை சப்தம். இந்தச் சப்தங்கள் அநேகருக்குப் பழகிப்போன ஒன்றாயிருக்க, என் காதுகளுக்கு இவை இசையாக இருந்தன. என்னுடைய செவியுணர்வைத் திரும்பவும் பெற்றேன்! என்னுடைய கதையைச் சொல்லுகிறேன்.

நோய்க்குறி ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது

இளமையும் ஒப்புக்கொடுத்தவளாயும் இருந்த நான் 1958-ல் ஒரு முழுநேர பைபிள் போதகராக என்னுடைய வாழ்க்கைப் பணியை ஆரம்பித்தேன். இப்பொழுது 30 ஆண்டுகள் கழிந்தும், நான் அதே வாழ்க்கைப் பணியில் தொடர்ந்திருக்கிறேன். 1970-களின் ஆரம்பத்தில், பேசிலும் நானும் மக்கள் ஆவிக்குரிய பார்வை அடைவதற்காக அவர்களுக்கு உதவிக்கொண்டும் கடவுளுடைய வார்த்தையின் அற்புதமான சத்தியங்களைக் கேளாத செவிகளைத் திறந்துகொண்டும் இருக்கும் அந்த நாட்களில் என் சொல்லர்த்தமான காதுகள் எரிச்சலூட்டுமளவுக்கு மந்தமடைந்துவிட்டன.

1977-ல் நான் கலிபோர்னியாவிலுள்ள சான் பெட்ரோவில் ஒரு மருத்துவரை சந்தித்தேன். அவர் “ஓட்டோஸ்க்லெரோஸிஸ்” (otosclerosis) என்ற வார்த்தையை எனக்கு அறிமுகப்படுத்தினார், அதாவது புதிய எலும்பு வளர்ச்சியினால் உட்செவியின் திருக்குமருக்கான துளை பாதிக்கப்பட்டிருப்பதாகும். அது பொதுவாகப் பரம்பரை நோய் என்றும், ஓர் அறுவை சிகிச்சை மூலம் அதைக் குணப்படுத்திட முடியும் என்றும் அவர் சொன்னார். ஆனால் அதன் பக்க பாதிப்புகள் என்னவாக இருக்கக்கூடும் என்பதை அவர் எனக்கு விளக்கிய போது, ‘அது எனக்கு அல்ல! அப்படிப்பட்ட காரியங்கள் எனக்கு வராது,’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டே அவருடைய அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தேன்.

என்னுடைய அமைதியான உலகில் பிரவேசித்தல்

அடுத்த மூன்று வருடங்கள், நான் படிப்படியாக ஒரு மெதுவான, அமைதியான உலகிற்குள் பிரவேசித்தேன். அது எந்தவித பின்னணி சப்தமும் இல்லாத ஓர் உலகம். ஆட்கள் எனக்குப் பின்னேயிருந்து மெதுவாக எட்டிப்பார்ப்பதாகவும் திடீரென்று எனக்கு முன் தோன்றுவதாகவும் இருந்தது. எனக்குப் பழக்கமாயிருந்த என்னுடைய கணவருடைய கார் உள்ளே வரும்போது இருக்கும் பட்பட் சப்தம் கேட்கப்படாமல் போய்விட்டது. அவருங்கூட திடீரென்று வீட்டுக்குள் வருவார், எனக்குக் கபீர் என்றாகிவிடும்! ஆட்கள் பேசும்போது, நான் அவர்களுடைய உதடுகளைப் பார்க்கமுடியாதிருக்கையில், அது எனக்குக் கோபத்தை ஏற்படுத்தும், ஏனென்றால், அவர்களுடைய சப்தம் வேறு பக்கமாய் வருவது போல் இருந்தது. அவர்கள் பேசின பின்பு நான் அவர்களுடைய முகபாவனையைக் கூர்மையாகக் கவனித்துக்கொண்டிருப்பேன், நான் தவறான நபருக்குப் பிரதிபலிக்காமல் இருப்பதற்காக அப்படிச்செய்தேன். நான் உணவை மென்றுகொண்டிருந்தால், சம்பாஷணைகளைக் கேட்பதற்காக மெல்லுவதை நிறுத்திவிடுவேன். மிக மோசமான காரியம், மெதுவாகப் பேசும் ஆட்களிடம் நான் பைபிள் படிப்பு எடுக்கும்போது எனக்கு ஏற்படும் எரிச்சலும் பயமும்தான், காரணம் அவர்கள் சொல்லுவது எனக்குப் புரிவதில்லை. நான் சோர்ந்து விடுவதுண்டு, களைப்பு ஏற்பட்டுவிடும்—ஒரு மணிநேரத்துக்குள்.

1980-ல் நான் காவற்கோபுர சங்கத்தால் இரண்டு வார ஊக்கமான பைபிள் போதனையைக் கொண்ட பயனியர் பள்ளிக்கு வரும்படி அழைக்கப்பட்டதுதான் ஒரு திருப்புக்கட்டமாக இருந்தது. இந்த வாய்ப்புக்காக நான் பல வருடங்கள் காத்திருந்தேன், ஆனால் என்னால் தெளிவாகக் கேட்க முடியவில்லை. அப்பொழுதுதான் மற்றொரு மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல தீர்மானித்தேன்.

மருத்துவரின் அலுவலகத்தில் இந்த முறை நான் ஓர் உயரமான, செம்பட்டை முடி கொண்ட செவி நோய் மருத்துவர் முன்னால் உட்கார்ந்துகொண்டிருந்தேன். அவருடைய முகத்தில் தயை காணப்பட்டதுடன் அவர் அணுகக்கூடியவராயும் இருந்தார். “சான் பெட்ரோ மருத்துவர் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்,” என்றார். “உங்களுக்கு “ஓட்டோஸ்க்லெரோஸிஸ்” (otosclerosis) இருக்கிறது. அவர் மேல் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது, ஏனென்றால் அவர் என்னுடைய கேள்விகளுக்குச் செவிகொடுத்தார், நான் என்ன கேட்கிறேன் என்பதைப் பதில் சொல்லுவதற்கு முன் நிச்சயப்படுத்திக்கொண்டார். அவர் நன்கு செவிகொடுப்பவராயிருந்தார்! ஓட்டோஸ்க்லெரோஸிஸ் என்பது என்ன என்று நேரமெடுத்து விளக்கினார், வாசிப்பதற்கு ஒரு புத்தகமும் கொடுத்தார். அவர் அக்கறை காண்பிப்பவராயிருந்ததால், நான் கஷ்டமாக உணரவில்லை.

ஓட்டோஸ்க்லெரோஸிஸ்—அது என்ன?

ஓட்டோ (“காது” என்பதற்கு கிரேக்க வார்த்தை) மற்றும் ஸ்க்லெரோஸிஸ் (“கடினமாகுதல்” என்பதற்கான கிரேக்க வார்த்தை) ஆகிய வார்த்தைகள் என்னுடைய காதில் என்ன ஏற்பட்டுக்கொண்டிருந்தது என்பதை அறிய உதவியது. நடுச்செவியிலுள்ள அந்தச் சின்னஞ்சிறு எலும்புகளைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டதுண்டா—சுத்தி, பட்டை, அங்கவடி எலும்பு? என்னைப்போலவே ஒருவேளை நீங்களும் இந்தச் சிறிய அமைப்புகளைக் குறித்து கவலைப்படாதவர்களாக இருக்கக்கூடும். நான் தனிப்பட்டவிதத்தில் பாதிக்கப்பட்ட சமயம் வந்தபோதுதானே அவற்றின் பெயர்களை—சுத்தி, பட்டை, அங்கவடி எலும்பு—கற்றுக்கொண்டேன். நடுச்செவியில் ஒலியதிர்வுகளின் விசை மாற்றப்பட்டு கடத்தப்படும் சங்கிலித்தொடரில் கடைசி இணைப்பாக இருப்பதுதான் அங்கவடி எலும்பு. பொதுவாக ஓட்டோஸ்க்லெரோஸிஸ் அங்கவடி எலும்புக்குப் பரவிட, எலும்பு கடினமாகும்போது, உட்செவியின் திரவத்துக்கு அது மாற்றியனுப்பும் அதிர்வுகள் வலுவிழக்கிறது. இதுதான் ஒலியதிர்வு கடத்தலில் குறை ஏற்படுவதால் விளையும் செவிட்டு நிலையாகும். அங்கவடி எலும்பு சார்ந்த செவிட்டு நிலை ஒலியதிர்வு கடத்தலில் குறை ஏற்படுவதால் விளையும் ஒருவகை கோளாறு, இது பொதுவாக அறுவை சிகிச்சையால் சரிசெய்யப்படுகிறது.

நான் கற்றுக்கொண்ட முதல் காரியங்களில் ஒன்று கடத்துநிலை செவிக் கோளாறு என்றால் என்ன என்பது. ஒலி நடுச்செவி மூலம் கடத்தப்படுவதில்லை, ஏதோ சில நிலைமையினிமித்தம் அவைத் தடுக்கப்படுகிறது என்பதுதான் அதன் அர்த்தம். ஆனால் நரம்புகளின் இயக்கம் நல்லவிதத்தில் இருக்குமானால், அந்த நபர் அறுவை சிகிச்சைக்குத் தகுதியானவர். மகிழ்ச்சிக்குரிய காரியம், என்னில் நரம்புகளின் இயக்கம் நன்றாக இருந்தது.

அங்கவடி எலும்பை நீக்குதல்

அங்கவடி எலும்பு அறுவை சிகிச்சையின்போது எல்லாமே அமைதலாக இருக்கும் என்று நான் நினைத்தேன், ஆனால் எதிர்விதமாகவே நடந்தது. மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்க, மருத்துவர் ஒரு நுண்ணோக்காடியைப் பயன்படுத்தி செவிக்குழல் வழியாய்ச் செயல்படுகிறவராய் அங்கவடி எலும்பை நீக்கி, மாற்றீடாக ஒரு செயற்கைக் கம்பியைப் பொருத்தினபோது எனக்கு உரத்த சப்தங்கள் கேட்டன. பின்பு, நான் அந்த மேசையில் இருக்கும்போதே திடீரென்று மணியோசை போன்று தெளிவான ஒரு சத்தம் கேட்டேன்—மருத்துவர் நர்சிடம் பேசிக்கொண்டிருந்த சத்தம். அடுத்து அவர் என்னிடம், “எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். “எல்லாமே கேட்கிறது!” என்றேன். என்றபோதிலும் செவியில் வீக்கத்தின் காரணத்தால் செவி சற்று மந்தப்படக்கூடும், ஆனால் ஒரு சில வாரங்களில் முன்னேற்றம் தெரியும் என்று அவர் முன்னெச்சரிப்பாய்க் கூறினார். மருத்துவர் அறுவை சிகிச்சை அறையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, என்னுடைய அங்கவடி எலும்பை ஒரு சிறிய ப்ளாஸ்டிக் உறையில் போட்டு என்னிடம் கொடுத்தார். எனக்கு ஆச்சரியமாயிருந்தது. அவ்வளவு சிறியது! அவ்வளவு சிறியதும் ஆனால் முக்கியமானதுமான காரியங்களைச் செய்வதில் யெகோவா எவ்வளவு மேன்மை பொருந்தியவர் என்பதைச் சற்று சிந்தித்துப்பார்த்தேன். சங்கீதக்காரனின் வார்த்தைகளை நினைவுபடுத்தினேன்: “நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு . . . உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; . . . அவைகள் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.” ஆம், இந்த சிறிய அங்கவடி எலும்பு, மனித உடலிலேயே மிகச் சிறிய எலும்பு, கருவிலேயே கவனம் செலுத்தப்பட்டது.—சங்கீதம் 139:15, 16.

கேள்வித்திறனும் பேச்சுத்தொடர்பு கொள்ளும் திறமையும் நம்முடைய சிருஷ்டிகரிடமிருந்து கிடைத்திருக்கும் ஓர் அற்புதமான ஈவு. அந்தத் திறமையை இழப்பது என்பது உண்மையிலேயே ஒரு பெரிய இழப்பாகும். அதை இழந்த பின்பு மீண்டும் பெறுதலில் அதிக கிளர்ச்சி உண்டு. என்னுடைய அமைதியான உலகை விட்டு வெளியேறியதற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவளாயிருக்கிறேன்!—பெட்டி E. ஸ்டரட் கூறியது. (g88 7⁄8)

[பக்கம் 19-ன் பெட்டி]

நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

செவியிழப்புக்குக் கொடுக்கப்படும் சிகிச்சையில் பின்வரும் காரியங்களைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

◼ மெனியர் நோய் (Meniere’s disease), ஓர் உட்செவிப் பிரச்னை. இதில் ஒலிகளை சமநிலையாகக் கேட்பதில் பிரச்னைகள் இருக்கும், கடைசியில் செவித்திறன் இழக்கப்படும். இந்த நோய் இப்பொழுது டாக்டர் வில்லியம் ஹெளஸ் மற்றும் லாஸ் ஆன்ஜல்ஸிலுள்ள ஹெளஸ் செவி நிறுவனம் சேர்ந்து உருவமைத்திருக்கிற ஒரு மூடு குழாயை உட்செலுத்தி அறுவை சிகிச்சை மூலம் இது சிகிச்சையளிக்கப்படுகிறது.

◼ முழுவதுமாகக் காது கேளாதவர்களுக்கு நத்தை எலும்பு மாற்று சிகிச்சை நம்பிக்கையளிப்பதாயிருக்கிறது. அது மிகச்சிறிய மின்துகள் சாதனம் கொண்டது. அறுவை சிகிச்சை மூலம் செவியில் பொருத்தப்படுகிறது. அது உடலில் மாட்டிக்கொள்ளும் ஒரு ஒலிப்பெருக்கியாலும் பேச்சு சம்பந்தப்பட்ட கருவியாலும் செயல்படுத்தப்படுகிறது. இந்தச் சாதனங்கள் ஒலியலைகளை மின்விசையாக மாற்றுகிறது. செவியில் பொருத்தப்பட்ட அந்த மின்துகள் சாதனம் மூலம் மின்விசை ஒலி நரம்புகளை ஊக்குவித்து மூளைக்கு செய்திகளை அனுப்பச்செய்கிறது, அது இந்த ஒலியலைகளை உணர்ந்துகொள்ள முடிகிறது. இப்படியாக மாற்று உறுப்பு பொருத்தப்பட்ட இந்த நோயாளி அமைதியின் உலகிலிருந்து ஒலி உலகத்துக்கு மாற்றப்படுகிறார். பேச்சை ஓரளவுக்கு மட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும், நோயாளி தன்னுடைய சுற்றுப்புறத்துடன் தொடர்புகொள்ள உதவப்படுகிறான். அது பேச்சுத்தொடர்புக்கு உதவுகிறது, சுற்றுப்புற சப்தங்களை வித்தியாசப்படுத்த முடிகிறது, தன்னுடைய சொந்த குரலையும் கட்டுப்படுத்த முடிகிறது. இதுவரையில், ஏறக்குறைய 400 நோயாளிகள் நத்தை எலும்பு மாற்று உறுப்பைப் பொருத்தியிருக்கின்றனர். இந்த மாற்று உறுப்பு பொருத்தப்பட்டு பயன்பெறும் காரியத்தில் இன்னும் சிறந்த முன்னேற்றங்கள் இருக்குமாதலால் எதிர்காலம் பிரகாசமுள்ளதாய்க் காணப்படுகிறது.

[பக்கம் 20-ன் பெட்டி]

செவி பாதிக்கப்பட்ட ஒருவருடன் எப்படி தொடர்புகொள்ளலாம்*

◼ உங்களுடைய செய்தியின் பொருளைக் கூறி ஆரம்பியுங்கள். அதைத் தொடர்ந்து அதிக முக்கியமாயிருக்கும் குறிப்புகளை எழுதிக் காண்பியுங்கள்.

◼ தெளிவாகப் பேசுங்கள், ஆனால் சாதாரண குரலில் சற்று மெதுவாகப் பேசுங்கள்.

◼ அவருடைய முகத்தைப் பார்த்து பேசுங்கள், உங்களுடைய முகம் நல்ல வெளிச்சத்தில் இருப்பது நல்லது.

◼ பேசும்போது மெல்லவோ அல்லது உங்கள் கைகளை உங்கள் முகத்தில் வைக்கவோ கூடாது.

◼ இன்னொரு அறையிலிருந்து பேசுவதைத் தவிருங்கள், அல்லது குழாயிலிருந்து தண்ணீர் ஊற்றுவது போன்ற பின் இரைச்சல் சப்தத்தைத் தவிருங்கள்.

[அடிக்குறிப்புகள்]

*நியு யார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு உடல்நல குறிப்புகள் அளிக்கும் உடல்நல நிபுணர் ஜேன். E. புரோடி அளித்த ஆலோசனைகள்.

[பக்கம் 21-ன் வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

அங்கவடி எலும்பு அறுவைசிகிச்சை

படி 1: அங்கவடி எலும்பு ஓட்டோஸ்க்லெரோஸிஸ்

படி 2: அங்கவடி எலும்பு நீக்கப்பட்டது

படி 3: அங்கவடி எலும்புக்கு மாற்றாகக் கம்பி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்