உங்கள் செவி செய்தித்தொடர்புக்குச் சிறந்த இணைப்புச்சாதனம்
நீங்கள் பார்க்க விரும்பவில்லையென்றால் உங்கள் கண்களை மூடிக்கொள்ளலாம். வாசனையை முகர விரும்பவில்லையென்றால், உங்கள் மூச்சைச் சற்று அடக்கிக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் கேட்க விரும்பவில்லையென்றால் உங்கள் செவிகளை உண்மையிலேயே மூடிக்கொள்ள முடியாது. “காதில் வாங்கிக்கொள்ளாதிருத்தல்,” என்ற சொல்லமைப்பு வெறுமென ஓர் உருவக வழக்குத்தான். நீங்கள் நித்திரை செய்யும்போது உங்களுடைய இருதயத்துடிப்பைப்போன்றே உங்களுடைய செவிகளும் தொடர்ந்து வேலைசெய்கிறது.
ஆம், நம்மைச் சூழ இருக்கும் உலகத்தோடு தொடர்பு கொண்டிருப்பதற்காகவே நம்முடைய செவிகள் எந்தச் சமயத்திலும் வேலைசெய்துகொண்டிருக்கின்றன. அவை நாம் கேட்கும் தகவல்களைத் தெரிவு செய்து, ஆய்வுசெய்து, பகுத்துப் பிரித்து மூளைக்கு அனுப்புகின்றன. ஒரு கன அங்குலப் பகுதியில் நம்முடைய செவிகள் ஒலிவியல், இயக்கவியல், நீரியல், மின்னியல் மற்றும் உயர்தர கணிதவியலைப் பயன்படுத்தி சாதனைப்புரிகின்றன. நம்முடைய செவிகள் பாதிக்கப்படவில்லையென்றால், அவை செய்யக்கூடிய சில காரியங்களைக் கவனியுங்கள்.
◻ மென்மையான தாழ்குரலிலிருந்து ஒரு ஜெட் விமானத்தின் இடிமுழக்க சப்தம் வரையிலுமான 10,00,000,00,00,000 வித்தியாசமான அளவுகளில் வரும் சத்தத்தை நம்முடைய செவிகள் சமாளித்திட முடியும். அறிவியல் ரீதியில் குறிப்பிடுகையில், இது 130 டெசிபிள்களாகும்.
◻ ஓர் அறை நிறைய மக்கள் இருக்க, அந்தப் பேச்சு சப்தத்தில் ஓர் உறையாடலைத் தனிப்படுத்தி அதனிடமாகக் கவனத்தைத் திருப்பிடவும் அல்லது நூற்றுக்கணக்கான இசைக்கருவிகள் இசைக்கப்படும் ஓர் இசையணியில் தவறாக இசைக்கப்பட்ட ஓர் இராகத்தைக் கணித்திடவும் முடியும்.
◻ ஒலி வரும் திசையில் இரண்டு டிகிரி வித்தியாசத்தில் வரும் சத்தத்தையும் மனித செவிகள் அடையாளங்காட்டிட முடியும். இவற்றை அவை ஒலி வந்துசேரும் நேரத்திற்கும் இரு செவியின் உச்ச வேகத்திற்குமுள்ள மிக நுண்ணிய வித்தியாசத்தைக் கணித்து செய்கின்றன. நேர வித்தியாசம் ஒரு வினாடியில் ஒரு கோடி என்பதாக இருக்கக்கூடும், ஆனால் செவிகள் இதைக் கணித்து மூளைக்குத் தகவலை அனுப்ப முடிகிறது.
◻ நம்முடைய செவிகள் ஏறக்குறைய 4,00,000 ஒலிகளைக் கணித்து வித்தியாசம்காண முடியும். செவிகளில் அமைந்த இயக்கமுறைகள் தாங்களாகவே ஒலியலைகளை ஆய்வுசெய்து நம்முடைய ஞாபகத்தின் வங்கியில் சேமிக்கப்பட்டிருப்பவற்றுடன் அவற்றைப் பொருத்திப் பார்க்கின்றன. எனவேதான் ஓர் இசை வயலின் இசையா அல்லது புல்லாங்குழலின் இசையா அல்லது தொலைபேசியில் உங்களை அழைப்பது யார் என்பதை உங்களால் சொல்ல முடிகிறது.
நம்முடைய தலையின் பக்கவாட்டில் நாம் பார்க்கும் “செவி” நம்முடைய காதின் ஒரு பகுதிதான், காணக்கூடிய ஒரு பகுதி. நம்முடைய செவி மூன்று பகுதிகளைக் கொண்டது என்பதை நாம் நம்முடைய பள்ளிப் பருவத்திலிருந்தே அறிந்திருக்கிறோம்: புறச் செவி, நடுச் செவி, உட்செவி என்று அவை அழைக்கப்படுகின்றன. புறச் செவி என்பது நாமறிந்த தோலலான “காது”ம், குருத்தெலும்பும், செவிப்பறக்குச் செல்லும் செவிக்குழலும் கொண்டது. நடுச்செவியில் மனித உடலிலேயே மிகச் சிறிய எலும்புகள்—சுத்தி, பட்டை, அங்கவடி என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் மேலியஸ், இன்கஸ் மற்றும் ஸ்டப்ஸ்—ஒரு பாலமாக அமைந்து, உட்செவிக்கு வாயிலாக அமையும் முட்டைவடிவத் திறப்பையுடைய செவிப்பறையை இணைக்கிறது. உட்செவி இரண்டு விநோதமான பகுதிகளாலானவை: மூன்று அரைவட்டக் குல்லியங்கள் அடங்கிய பகுதியும் நத்தை எலும்புமாகும்.
புறச் செவி—அலைமாற்றுப்பொறி
தெரிந்தபடியே, புறச் செவி காற்றிலிருக்கும் ஒலியலைகளை வாங்கி செவியின் உட்பகுதிகளுக்கு அனுப்புகிறது. ஆனால் இது அதைவிட அதிகத்தைக் குறிக்கிறது.
புறச்செவியின் மடிப்புகள்கொண்ட பகுதி குறிப்பாக என்ன நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்று நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா? புறச்செவியின் மையத்தில் காணப்படும் உட்குடைவும் செவிக்குழலும் அம்மாதிரியாக அமைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், அவை சப்தத்தைப் பன்முறைப் பெருக்குகின்றன, அல்லது ஒரு குறிப்பிட்ட அலையதிர்வு அளவில் ஒலியதிர்வைப் பெருக்குகின்றன. அது நமக்கு எந்தவிதத்தில் பயன்படுகிறது? மனித பேச்சின் சப்தங்களின் முக்கியமான தன்மைகளில் பெரும்பகுதி அந்த அளவிற்குள்ளாகவே அமைகின்றன.a இந்த ஒலிகள் புறச் செவியின் வழியாகவும் செவிக்குழல் வழியாகவும் செல்லுகையில், ஆரம்பத்திலிருந்ததைவிட அவை இரண்டுமடங்காகப் பெருக்கப்படுகின்றன. இதுதான் மிக உயர்ந்த வகை ஒலிப்பொறியியலாகும்!
ஒலியின் மூலத்தைக் கணித்திடவும் புறச்செவி மிக முக்கியமான பாகத்தை வகிக்கிறது. ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, தலைக்கு வலது பக்கத்திலிருந்து அல்லது இடது பக்கத்திலிருந்து வரும் ஒலிகள் அவற்றின் உச்சளவிலிருக்கும் வேறுபாட்டிலிருந்தும் இரண்டு செவிகளை அவை வந்தடையும் நேரத்திலிருந்தும் கணிக்கப்படுகின்றன. ஆனால் பின்புறத்திலிருந்து வரும் ஒலிகளைப்பற்றியது என்ன? மீண்டும், செவிகளின் வடிவம் முக்கிய பாகத்தை வகிக்கிறது. செவியின் ஓரம் பின்னாலிருந்துவரும் ஒலிகளுடன் செயலாற்றுகின்றவிதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, இது 3,000- முதல் 6,000-Hz அளவில் ஓர் இழப்பை ஏற்படுத்துகிறது. இது ஒலியின் தன்மையை மாற்றுகிறது, பின்னிருந்து வரும் ஒலியென மூளை விளக்கமளிக்கிறது. தலைக்கு மேலிருந்து வரும் ஒலிகளும் மாற்றப்படுகின்றன, ஆனால் வித்தியாசமான ஓர் அலைவரிசையில்.
நடுச் செவி—ஓர் இயந்திர வல்லுநரின் கனவு
நடுச்செவியின் வேலை, ஒலியலையின் அதிர்வுகளை இயக்க அதிர்வுகளாக மாற்றி நடுச்செவிக்குக் கடத்துவதாகும். இந்தப் பட்டாணியளவான அறையில் என்ன நடைபெறுகிறது என்பது உண்மையிலேயே ஓர் இயந்திர வல்லுநரின் கனவு.
சப்தமான ஒலிகள் செவிப்பறையை குறிப்பிடத்தக்கவிதத்தில் அதிர்ச்சியுறச்செய்கிறது என்ற பொதுவான கருத்துக்கு முரணாக, ஒலியலைகள் உண்மையில் மிக நுண்ணிய அளவிலேயே அவ்விதம் செய்கின்றன. அப்படிப்பட்ட மிகச்சிறியளவான அதிர்வுதானே திரவமுடைய உட்செவி பிரதிபலிப்பதற்குப் போதுமானது. இந்தத் தடை மேற்கொள்ளப்படும் முறைதானே செவியின் ஞானமான வடிவமைப்பை மீண்டும் வெளிக்காட்டுகிறது.
நடுச்செவியின் மூன்று சிறு எலும்புகளின் இணைப்பு அதிக உணர்வுள்ளவையாயிருப்பதுமட்டுமின்றி, திறமையோடு செயல்படக்கூடியதாயுமிருக்கிறது. ஒரு நெம்புக்கோல் இயக்க முறையில் செயல்பட, உட்பிரவேசிக்கும் எந்த ஒலியாற்றலையும் இது 30 சதவீதமாக வலுப்படுத்துகிறது. மேலும் அங்கவடியின் அடித்தட்டைவிட செவிப்பறை பரப்பில் 20 மடங்கு அதிகமாயிருக்கிறது, இப்படியாக செவிப்பறையில் செலுத்தப்படும் ஒலியாற்றல் முட்டைவடிவத் திறப்பில் மிகவும் சிறிய பரப்பில் சுருக்கப்படுகிறது. இந்த இரண்டு அம்சங்களும் ஒன்றுசேர்ந்து அதிர்வுறும் செவிப்பறையில் அழுத்தத்தை முட்டைவடிவத் திறப்பிலிருப்பதைவிட 25 முதல் 30 மடங்கு பெருக்குகின்றன, இது நத்தை எலும்பிலுள்ள திரவத்தை இயக்குவதற்குப் போதுமானது.
சில சமயங்களில் ஜலதோஷம் உங்கள் செவியைப் பாதிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இதற்குக் காரணம், செவிப்பறை சரியாக இயங்குவதற்கு அதன் இருபக்கங்களிலுமுள்ள அழுத்தம் சமமாக இருக்கவேண்டியதை உட்படுத்துகிறது. பொதுவாக இது மூக்குக்குச் செல்லும் பாதையை இணைக்கும் நடுச் செவிக்குழல் என்றழைக்கப்படும் ஒரு சிறிய திறப்பால் காக்கப்படுகிறது. நாம் ஒவ்வொரு முறை விழுங்கும்போதும் இந்தக் குழல் திறந்து, நடுச்செவியில் உண்டாகும் எந்த ஒரு காற்று அழுத்தத்தையும் நிவர்த்திசெய்கிறது.
உட்செவி—செவியின் செயல்பகுதி
முட்டைவடிவத் திறப்பிலிருந்து நாம் உட்செவிக்கு வருகிறோம். அரை வட்டக் குல்லியங்கள் என்றழைக்கப்படும் மூன்று மடிப்பு வளையங்கள் நாம் சமநிலையையும் ஒத்திசைவையும் காத்துக்கொள்ள உதவுகின்றன. என்றபோதிலும் நத்தை எலும்பில்தானே கேள்வியின் செயல் ஆரம்பமாகிறது.
நத்தை எலும்பு (கிரேக்கில் ko·khliʹas, நத்தை) அடிப்படையில் மூன்று திரவக் குழாய்கள் அல்லது குல்லியங்களாகும், இது ஒரு நத்தை ஓட்டைப்போன்று சுருண்டிருக்கிறது. இரண்டு குல்லியங்கள் அந்தச் சுருளின் மேல் முனைப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கிறது. சுருளின் அடித்தளத்தில் அமைந்த முட்டைவடிவத் திறப்பு அங்கவடி எலும்பால் இயக்கப்பட, இது ஓர் உந்துதண்டுபோல உள்ளும் புறமுமாக இயங்குகிறதால் திரவத்தில் திரவ நீரழுத்த அலைகளை ஏற்படுத்துகிறது. இந்த அலைகள் நத்தை எலும்பின் அடித்தளத்திலிருந்தும் அடித்தளத்திற்கும் பயணப்படுகையில் குல்லியங்களைப் பிரித்திடும் சுவர்களில் அலையலையாகப் பாய்கிறது.
பேசிலார் சவ்வு எனப்படும் இந்தச் சுவர்களில் ஒன்றினூடே இருப்பதுதான் கார்ட்டி என்னும் மிக நுட்ப உணர்வுடைய உறுப்பு, இதற்கு 1851-ல் உண்மையிலேயே கேட்கச்செய்யும் செவியின் இந்த மையத்தைக் கண்டுபிடித்த அல்ஃபோன்சோ கார்ட்டி என்பவர் பெயர் கொடுக்கப்பட்டது. இதன் முக்கிய பகுதி உணர்ச்சி உரோமச் செல்களின் வரிசைகளைக் கொண்டது, ஏறக்குறைய 15,000-ற்கும் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த உரோமச் செல்களிலிருந்துதான் ஆயிரக்கணக்கான நரம்பு இழைமங்கள் ஒலியின் அளவு, மற்றும் பண்பு குறித்த தகவல்களை மூளைக்கு எடுத்துச்செல்கின்றன, இங்குதான் செவியுணர்வு ஏற்படுகிறது.
இரகசியம் வெளியாகிறது
சிக்கலான தகவலைக் கார்ட்டி என்ற உறுப்பு மூளைக்கு எவ்வாறு கடத்துகிறது என்பது வெகுகாலமாக இரகசியமாகவே இருந்தது. மூளை இயக்க அதிர்வுகளுக்குப் பிரதிபலிப்பதில்லை, ஆனால் வேதியல் சார்ந்த மின்னதிர்வுகளுக்குத்தான் பிரதிபலிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர். கார்ட்டி என்ற உறுப்பு பேசிலார் சவ்வின் அலையியக்கத்தை அதற்கொத்த மின்விசையாக ஏதோ ஒரு வழியில் மாற்றி இவற்றை மூளைக்கு அனுப்பவேண்டும்.
இந்த நுண்ணிய உறுப்பின் இரகசியத்தை வெளியாக்கிட ஹங்கேரியைச் சேர்ந்த ஜார்ஜ் வான் பெக்கசி என்ற விஞ்ஞானிக்கு ஏறக்குறைய 25 ஆண்டுகள் எடுத்தன. அவர் கண்டுபிடித்த ஒரு காரியம் என்னவென்றால், நீரழுத்தம் சார்ந்த அலைகள் நத்தை எலும்பினூடே அமைந்த குழாய்கள் வழியாய்ச் சென்று, வழியில் ஓரிடத்தில் உச்சக்கட்டத்தை எட்டி பேசிலார் சவ்வைத் தள்ளுகிறது. பேரளவான வேகம் கொண்ட ஒலிகளால் ஏற்படுத்தப்படும் ஒலியலைகள் நத்தை எலும்பின் அடித்தளத்திலுள்ள சவ்வைத் தள்ளுகின்றன, குறைந்த வேகமுடைய ஒலிகள் நத்தை எலும்பின் மேல்பகுதியிலமைந்த சவ்வைத் தள்ளுகின்றன. இப்படியாக ஒரு குறிப்பிட்ட வேகமுடைய ஒலி பேசிலார் சவ்வை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிரச்செய்வது அங்குள்ள உரோமச் செல்களைப் பிரதிபலிக்கச் செய்கிறது, இப்படியாக மூளைக்குத் தகவல் குறிகளை அனுப்பும்படிச் செய்கிறது என்று பெக்கெசி முடிவுசெய்தார். உரோமச் செல்கள் அமைந்திருக்கும் இடம் ஒலியின் வேகத்திற்கு இணையாக இருக்கும், தூண்டப்பட்ட உரோமச் செல்களின் எண்ணிக்கை ஒலியின் உச்ச அளவுக்கு இணையாக இருக்கும்.
இந்த விளக்கம் சாதாரண தொனிகளுக்குப் பொருந்துகிறது. என்றபோதிலும், இயற்கையில் எழும் ஒலிகள் சாதாரணமாயிருப்பது அரிது. ஓர் ஆண் தவளையின் சப்தம் மேளத்தின் சப்தத்திலிருந்து வெகுவாக வித்தியாசப்பட்டிருக்கிறது, அவை ஒரே வேகத்தையுடையதாயிருந்த போதிலும் அப்படி இருக்கிறது. இதற்குக் காரணம் ஒவ்வொரு ஒலியும் அடிப்படையில் ஒரு தொனியையும், பல மேல் தொனிகளையும் கொண்டவை. மேல் தொனிகளின் எண்ணிக்கையும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட வன்மையும் ஒவ்வொரு ஒலிக்கும் அதன் தனிப் பண்பை உரித்தாக்குகிறது. இப்படியாகத்தான் நாம் கேட்கும் ஒலிகளை அடையாளங்கண்டுகொள்கிறோம்.
பேசிலார் சவ்வு ஓர் ஒலியின் எல்லா உச்சதொனிகளுக்கும் ஒரே சமயத்தில் பிரதிபலிக்கக்கூடும், அதே சமயத்தில் என்ன உச்சதொனிகள் எத்தனை இருக்கின்றன என்பதையும் கணித்து இப்படியாக ஒலியை அடையாளங்கண்டிடும். இந்த முறையை ஃபோரியர் ஆய்வு என்பதாகக் கணிதவியலர் குறிப்பிடுகின்றனர், இது 19 நூற்றாண்டு பிரஞ்சு கணித நிபுணர் ஜீன்-பாப்டிஸ்ட்-ஜோசஃப் ஃபோரியர் பெயரில் அழைக்கப்பட்டது. என்றபோதிலும், கேட்கப்படும் ஒலிகளை ஆய்ந்து, தகவல்களை மூளைக்கு அனுப்புவதற்குச் செவி காலாகாலமாக இந்தச் சிறப்புக் கணித முறையைப் பயன்படுத்திவந்திருக்கிறது.
இப்பொழுதுங்கூட, உட்செவி மூளைக்கு எப்படிப்பட்டத் தகவல் குறிகளை அனுப்புகிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் அவ்வளவு நிச்சயமாயில்லை. எல்லா உரோமச் செல்களாலும் அனுப்பப்படும் தகவல் குறிகள் எல்லாமே ஒரே அளவையும் வன்மையையும் கொண்டவை என்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இப்படியாக, தகவல் குறிகளில் அடங்கியிருக்கும் பொருள் அல்ல, ஆனால் எளிய தகவல் குறிகள் தாமே மூளைக்கு ஒரு செய்தியை அனுப்புகின்றன.
இது எதைக் குறிக்கிறது என்பதைப் போற்றுவதற்கு, வரிசையாக இருக்கும் பிள்ளைகளில் ஒருவர் ஒரு கதையை மற்றொருவருக்குச் சொல்ல, இப்படியாக அது ஒவ்வொருவராகக் கடத்தப்படும் பிள்ளைகளின் விளையாட்டை ஞாபகப்படுத்திப்பாருங்கள். வரிசையின் மறுபக்கத்திலிருக்கும் பிள்ளை கேட்கும் தகவல் பெரும்பாலும் முதல் சொல்லப்பட்ட தகவலுக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டதாயிராது. சிக்கலான ஒரு கதைக்குப் பதிலாக ஓர் எண் போன்ற ஒரு குறியீட்டுச் செய்தி கடத்தப்படுமாயின், அது அநேகமாக தெளிவை இழக்காது. அதைத்தான் உட்செவி செய்வதாகத் தெரிகிறது.
அக்கறைக்குரிய ஒரு காரியம், மிகவும் முன்னேறிய பேச்சுத்தொடர்பு இணைப்பு முறைகளில் கையாளப்படும் ஓர் உத்தி இதே நியமத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இதனை நாடித்துடிப்புக் குறியீட்டுத் தொனி என்று அழைக்கின்றனர். ஒரு நிகழ்வின் முழு விளக்கத்தையும் அனுப்புவதற்குப் பதிலாக, அந்த நிகழ்வைப் பிரதிநிதித்துவஞ்செய்யும் ஒரு குறியீடு அனுப்பப்படுகிறது. செவ்வாய்க் கிரகத்தின் படங்கள் இந்த முறையில்தான் அனுப்பப்பட்டன, அதாவது இரண்டிணைவுத் துண்டுகளாக, அல்லது பதிவு செய்வதற்கும் அவற்றை மீண்டும் கேட்பதற்கும் ஒலிகளைத் துணுக்குகளாக மாற்றக்கூடிய ஒரு முறையில் அனுப்பப்பட்டன. ஆனால், மறுபடியும் நாம் கவனிப்பது, அதைச் செவிகள் ஏற்கெனவே கொண்டிருந்தன!
தலைசிறந்த ஒரு படைப்பு
செவிகளிலேயே நம்முடைய செவிகள்தானே அதிக நுண்ணிய உணர்வு மிகுந்தவையாக இல்லாதிருக்கலாம், ஆனால் நம்முடைய மிகப் பெரிய தேவைகளில் ஒன்றைப் பூர்த்திசெய்வதற்கு—பேச்சுத்தொடர்புக்கு அது மிகப் பொருத்தமாக இருக்கிறது. மனிதரின் பேச்சுக் குரல்களின் பண்புகளுக்கு நல்ல விதத்தில் பிரதிபலிக்கக்கூடியவிதத்தில் அவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சரியான விதத்தில் வளருவதற்குக் குழந்தைகள் தங்களுடைய தாயின் சப்தத்தைக் கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அவர்கள் வளர்ந்துவருகையில், தங்களுடைய பேச்சித் திறமைகளை விருத்திசெய்துகொள்வதற்கு மற்றவர்களுடைய சப்தங்களைக் கேட்கவேண்டும். ஒவ்வொரு மொழியின் தொனியிலும் இருக்கும் வித்தியாசங்களை அவ்வளவு திருத்தமாகப் பகுத்தறிந்து அவற்றை சொந்த ஊரார் மட்டுமே பேசுகிறவிதமாய் பேசி வளருவதற்கு அவர்களுடைய செவிகள் இடமளிக்கிறது.
இந்த அனைத்துக் காரியங்களும் குருட்டுப் பரிணாமவாதத்தின் விளைவு அல்ல. மாறாக, நம்முடைய இந்தச் செவித்திறன் கொண்ட இந்த அதிசய உறுப்புக்கு நாம் நம்முடைய சிருஷ்டிகராகிய யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். (நீதிமொழிகள் 20:12) நம்முடைய செவிகள் உண்மையிலேயே தலைசிறந்த ஒரு படைப்பு நம்முடைய சிருஷ்டிகரின் ஞானம் மற்றும் அன்பின் வெளிக்காட்டு. அவற்றால் நம்முடைய உடன் மானிடருடன் பேச்சுத் தொடர்பு கொள்ள முடிகிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் ஞானத்திற்குச் செவிகொடுத்து, நம்முடைய பரம பிதாவாகிய யெகோவா தேவனிடமிருந்து கற்றுக்கொள்வதற்காக நாம் அவற்றைப் பயன்படுத்துவோமாக. (g90 1/22)
[அடிக்குறிப்புகள்]
a மனிதர் பேச்சு ஒலிகளின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் பெரும்பாகம் 2,000 முதல் 5,000 Hz (வினாடிக்கு சுழற்சிகள்) இது புறச் செவியின் செவிக்குழலும் மையக் குழியும் அதிரும் ஏறக்குறைய அதே ஒலியதிர்வு வேகத்தைக் கொண்டிருக்கின்றன.
[பக்கம் 19-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
உட்செவி
அரைவட்டக் குல்லியங்கள்
சுத்தி
புறச் செவி
பட்டை
முட்டைவடிவத் திறப்பு
நத்தை எலும்பு
செவிக் குழல்
அங்கவடி எலும்பு
செவிப் பறை
நடுச்செவிக் குழல்
செவி
நடுச் செவி
[பக்கம் 20-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
உருவரைப்படம் விரிக்கப்பட்ட மூன்று நாளங்களைக் காட்டுகிறது
நத்தை எலும்பு
மையப் புழை
நத்தை எலும்பு நாளம்
செவிப்பறைப் புழை