உலகை கவனித்தல்
புகைபிடித்தலால் நஷ்டம் கோடிக்கணக்கில்
அநேக நாடுகளில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தாலும், ஸ்விட்சர்லாந்தில் இந்த எண்ணிக்கை குறையாமல் அப்படியே இருக்கிறது என பெர்னே ஓபர்லாண்டே செய்தித்தாள் அறிவிக்கிறது. அந்நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகத்தினர் புகைபிடிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் 8,000-க்கும் மேற்பட்டோர் புகைபிடித்தல் காரணமாக சாகின்றனர். எய்ட்ஸ், ஹெராய்ன், கொகெய்ன், மது, தீ விபத்துகள், கார் விபத்துகள், கொலை, தற்கொலை போன்றவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்தாலும் வரும் எண்ணிக்கையைவிட இது அதிகம். 1995-ல், புகைபிடித்தலால் நாட்டிற்கு ஏற்பட்ட நஷ்டம் 1,000 கோடி ஸ்விஸ் பணம் (ஃப்ராங்க்) என்றும், இது 600 கோடி ஐ.மா. டாலரைவிட அதிகம் என்றும் ஸ்விட்சர்லாந்தின் கூட்டு பொதுநலத்துறை நடத்திய ஆய்வு குறிப்பிடுகிறது. மருந்துக்கும் ஆஸ்பத்திரிக்கும் ஆகும் செலவுகள், உற்பத்தியில் நஷ்டம், நோயில் அவதிப்படும் புகைபிடிப்போர், அவருடைய குடும்பத்தாருடைய வாழ்க்கைத் தரம் தாழ்வடைதல் போன்ற இவற்றின் மதிப்பை கணக்கிட அந்த ஆய்வு முயன்றது.
உங்கள் இருதயத்தை காத்துக்கொள்ளுங்கள்
“உஷ்ணமான சீதோஷ்ணநிலை, மாரடைப்பை அதிகப்படுத்துகிறது என்பது நாங்கள் ஏற்கெனவே அறிந்ததே—ஆனால், குளிரான சீதோஷ்ணநிலையும் மாரடைப்பை அதிகரிக்கிறது என இப்பொழுது தெரிகிறது” என்று இருதய நோய் மருத்துவரும் கனடாவில் உள்ள இருதயம் மற்றும் ஸ்ட்ரோக் நிறுவனத்தின் பிரதிநிதியுமாகிய டாக்டர் அந்தோணி க்ரஹாம் சொல்கிறார். சராசரி வெப்பத்தைவிட பத்து டிகிரி செல்ஷியஸ் அதிகமோ அல்லது குறைவோ ஆனால், “முதல் முறையாக வரும் மாரடைப்பை 13 சதவீதம் அதிகரிக்கும் அபாயம்” இருப்பதாக 2,50,000 ஆண்களை உன்னிப்பாக ஆராய்ந்த பிரான்ஸில் மேற்கொண்ட பத்து வருட ஆய்வு தெரியப்படுத்துகிறது என த க்ளோப் அண்ட் மெயில் செய்தித்தாள் அறிவிக்கிறது. தட்பவெப்பநிலை குறையும்போது, இருதயம் வெகு வேகமாகவும் கடினமாகவும் இயங்குகிறது. ஏனெனில், உஷ்ணத்தை பாதுகாக்க தோல் பகுதியில் இருந்து இரத்தத்தை உடலின் உட்பாகங்களுக்கு உடனடியாக அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒருவர் அளவுக்கதிகமாக கடின வேலைகளில் ஈடுபடும்போதும் அல்லது சீதோஷ்ண நிலைக்கு பொருத்தமாக உடுத்தாதபோதும், ஆபத்து அதிகரிக்கிறது. “நீங்கள் ஐந்து மாதங்களுக்கு சோம்பேறித்தனமாக இருந்துவிட்டு, திடுதிப்பென்று வெளியே குளிரில் சென்று, பனியை வாரிகொட்டிக் கொண்டிருக்க முடியாது. அதற்கேற்றவாறு படிப்படியாக உங்கள் உடம்பை தேற்றிக் கொள்ள வேண்டும்” என டாக்டர் க்ரஹாம் எச்சரிக்கிறார்.
விருப்பமற்றவை காதில் விழாதிருக்க
காது ஜவ்வே கிழிந்துபோகிற மாதிரி அதிக சத்தமாக இசையை கேட்பது “உடலை பாதிக்கும்” என டாக்டர்கள் எச்சரித்தபோதிலும், அதிகமதிகமான இளைஞர்கள் வாக்-மேன் இல்லாமல் முடியவே முடியாது என்ற நிலையில் இருக்கின்றனரென போலந்து நாட்டு வாராந்தர பத்திரிகை சியாசுக்கா தெரிவிக்கிறது. காரணம்? சிலர் வாக்-மேன்களை உபயோகிப்பது, “தங்களை சுற்றியுள்ள சூழலில் இருந்து விட்டேற்றியாய் இருக்கவே. டீனேஜர்கள் இவற்றைக் காதுகளில் மாட்டிக்கொண்டால், தங்கள் பெற்றோரின் வசவுகளை காதில் இனியும் வாங்கிக்கொள்ள வேண்டியதில்லை, அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. உதாரணமாக, பெற்றோர் ஏதாவது வேலை சொல்லும்போது அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் இருக்கலாம்” என அப்பத்திரிகை கூறுகிறது. மிக உச்ச சத்தத்தில் இசையை கேட்பது, “சோர்வு, தலைவலி, கவனம் செலுத்த முடியாமை, அல்லது தூக்கமின்மை” போன்றவற்றை உருவாக்கும் என்று குறிப்பிடுகிறது. ஒரேடியாக வாக்-மேனை பயன்படுத்தவே கூடாது என்று தடுக்காமல், தங்களுடைய பிள்ளைகள் மட்டாக பயன்படுத்த பெற்றோர் கற்றுத்தர வேண்டுமென சியாசுக்கா அறிவுறுத்துகிறது. “வாக்-மேனை பிள்ளையிடமிருந்து அவ்வப்போது வாங்கி நீங்கள் உபயோகியுங்கள்” என அந்தப் பத்திரிகை ஆலோசனை கூறுகிறது. “இது வாக்-மேன் உலகத்தில் இருந்து பிள்ளைகள் கொஞ்ச நேரத்திற்கு வெளியே வரவும் நீங்கள் அவர்களுடைய உலகத்தை தெரிந்து கொள்ளவும் உதவும்.”
‘மறந்து போகும்’ மொழிகள்
“என்னுடைய பிள்ளைகளுக்கு என் தாய் மொழியை கற்றுக் கொடுக்காததற்காக சில சமயங்களில் என்னை நானே நொந்துகொள்ளுகிறேன்” என்று அலாஸ்காவில் இயாக் மொழி பேசும் கலாச்சாரத்தின் கடைசி ஆளான தலைவி மரீ ஸ்மித் ஜோன்ஸ் கூறுகிறார். உலகம் முழுவதிலும் பேசப்படுகிற 6,000 மொழிகளில், 40 முதல் 50 சதவீதமான மொழிகள் அடுத்த நூற்றாண்டுக்குள் சுவடு தெரியாமல் மறைந்துவிடுமென உலகப் போக்கு சுட்டிக்காட்டுகிறது. ஒரு சமயத்தில் ஆஸ்திரேலியாவில் 250 மொழிகள் பேசப்பட்டு வந்தன. ஆனால், இப்பொழுதோ அது சுமார் 20 ஆக குறைந்துள்ளது. ஏன் இந்த நிலை? “ஆங்கிலம் மற்றும் ‘பரவலாக பேசப்படும்’ மற்ற மொழிகள் இந்த மொழிகளை “இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடுகின்றன” என்று நியூஸ்வீக் பத்திரிகை தெரிவிக்கிறது. “சிறுபான்மை வகுப்பினரின் ‘அரிதாக பேசப்படும் மொழிகளுக்கு’ அதிக மதிப்பில்லாததால், அவற்றை நீங்கள் மறக்க வேண்டும் என்ற அபிப்பிராயம் பொதுவாக நிலவி வருகிறது” என்று ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞானம், மற்றும் கலாச்சார அமைப்பு வெளியிட்டுள்ள உலக மொழிகளின் வரைபடம் மறையும் அபாயம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் நிருபர் பேராசிரியர் ஸ்டீஃபன் வூர்ம் குறிப்பிடுகிறார்.
உங்கள் மழலைகளோடு பேசுங்கள்
தினம் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் குழந்தைகளோடு பேசினால் அவர்களுடைய புத்திக்கூர்மையும் மொழியைக் கற்றுக்கொள்ளும் திறமையும் பெருமளவில் அதிகரிக்கும் என லண்டனின் டெய்லி டெலிகிராஃப் அறிவிக்கிறது. ஒன்பது மாதக் குழந்தைகள் 140 பேரை ஆராய்ச்சியாளர்கள் கூர்ந்து ஆராய்ந்தனர். குழந்தைகளிடம் எப்படி மிக நல்ல முறையில் பேசுவது என்று குழந்தைகளின் பெற்றோரில் பாதி பேருக்கு ஆலோசனை சொல்லப்பட்டது. மீதி பாதி பேருக்கோ எந்த ஆலோசனையும் கொடுக்கப்படவில்லை. ஏழு வருடங்களுக்குப் பிறகு, “ஆலோசனைப் பெறாத பெற்றோருடைய குழந்தைகளின் சராசரி புத்திக்கூர்மையைவிட [ஆலோசனை கொடுக்கப்பட்டவர்களுடைய] குழந்தைகளின் சராசரி புத்திக்கூர்மை ஒரு வருடம் மூன்று மாதங்கள் அதிகமாக இருந்தது” என்றும் அவர்கள் மொழியைக் கற்றுக்கொள்ளும் திறமை “குறிப்பிடத்தக்கவகையில் அதிகமாக” இருந்தது என்றும் அந்த அறிக்கை சொல்லுகிறது. சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பெருமளவு மாற்றங்களால், அந்த காலத்தில் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளோடு கொஞ்சிக் குலாவி பேசியதுபோல் இன்று செய்வதில்லை என்று ஆராய்ச்சியாளர் டாக்டர் வார்ட் நம்புகிறார். உதாரணமாக, அதிகமான தாய்மார்கள் சம்பாதிக்க போய்விடுகிறார்கள். அநேக வீடுகளில் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளுவதற்கு பதிலாக வீடியோ டேப்புகளே பேசுகின்றன.
காட்டுத்தனமான காரோட்டிகள்
“காட்டுத்தனமாக ஓட்டும் டிரைவர்களை லேசாக எடைபோட்டுவிடக் கூடாது” என்று ஃப்ளீட் மெய்ன்டனன்ஸ் அண்ட் சேஃப்டி ரிபோர்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது; இது அனுபவம் வாய்ந்த கார்-ரேஸ் சாதனையாளரின் ஆலோசனை. நிதானம் இழக்காதிருப்பதும் சாதகமற்ற சூழ்நிலைகளை தவிர்ப்பதும் சாலை சீற்றத்தால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க உதவும். பாதுகாப்பு அம்சங்களை ஆதரித்து வாதாடுபவர்கள் பின்வரும் குறிப்புகளை தருகின்றனர்:
◼ எல்லா சமயங்களிலும் நிதானமாக ஓட்டுங்கள்.
◼ மூர்க்கத்தனமாக ஓட்டும் டிரைவரை ஜாக்கிரதையாக தவிர்த்திடுங்கள்.
◼ முன்னால் போகும் வாகனத்தை ஒட்டி பின்னாடியே செல்லுவது அல்லது திடீரென வேகத்தை அதிகரிப்பது போன்ற செயல்களால் ஒருபோதும் மற்றொரு டிரைவரை வம்புக்கு இழுக்காதீர்கள்.
◼ கோபமுண்டாக்கும் சைகைகளை கண்டும் காணாமல் விட்டுவிடுங்கள், தப்பர்த்தம் கொடுக்கக்கூடிய சைகைகளை தவிர்த்திடுங்கள்.
◼ கோபத்திலிருக்கும் டிரைவரை நேருக்கு நேர் பார்க்காதீர்கள்.
◼ மற்றொரு டிரைவரோடு போட்டிப் போட வாகனத்தை சாலையின் ஓரத்திற்கு கொண்டு செல்லாதீர்கள்.
கருக்கலைப்பு + காயங்கள் = மரணம்
மெக்ஸிகோவில், ஒவ்வொரு வருடமும் சுமார் 5,00,000 கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன என்று அந்நகரத்தில் உள்ள ஆரோக்கிய மற்றும் சமூக நல குழுவின் தலைவர் ஃப்ரான்ஸிஸ்கோ ஹேவ்யர் செர்னா அல்வாராடோ சொல்கிறார். இவை பெருமளவில் தாய்மார்களின் உயிரைப் பறித்துவிடுகின்றன எனவும் மற்றவை மருத்துவ சிகிச்சை, ஏன் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கும் அளவிற்கு மிக சிக்கலான கோளாறுகளில் முடிவடைகின்றன எனவும் எல் யூனிவர்சல் செய்தித்தாள் அறிக்கையிடுகிறது. மெக்ஸிகோவில் தாய்மார்கள் சாவிற்கு மூன்றாவது முக்கிய காரணம், கள்ளத்தனமாக கருக்கலைப்பு செய்துகொள்வதே. சில சமயங்களில், முரட்டுத்தனமான கருக்கலைப்பு முறைகள்—மிகக் கூர்மையான பொருட்களை உபயோகித்தல், கருக்கலைப்பு மாத்திரைகளை அல்லது மூலிகை கஷாயத்தை குடித்தல், படிகளில் உருட்டிவிடுதல் போன்ற முறைகள்—பின்பற்றப்படுகின்றன. இதன் விளைவு பெரும்பாலும் “மிகக் கடுமையான இரத்தப்போக்கு, கர்ப்பப்பையில் ஓட்டை, மலட்டுத்தன்மை, தொற்றுநோய்கள், கருப்பையையே இழத்தல்” போன்றவை அடங்கும் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
புரிந்துகொள்ளும் விதத்தில் பேசுதல்
எவ்வளவுதான் முக்கியமான விஷயமாக இருந்தாலும்சரி, நீங்கள் பேசும்விதம் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் சொல்லுவது நிறைய பேர் காதில் ஏறவே ஏறாது என குரல் ஒலி நிபுணர் டாக்டர் லில்லியன் க்ளாஸ் சொல்கிறார். குழறி, வாய்க்குள்ளேயே பேசிக்கொள்ளுதல், தவறான இலக்கணம், ஒரே தொனியில் பேசுதல், எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேசுதல், கொச்சையான பேச்சு, மற்றவர்களுக்கு சான்ஸ் தராமல் தானே பேசிக்கொண்டிருத்தல் போன்ற இவையனைத்தும் கேட்போரை உற்சாகமிழக்கச் செய்யும் என தென் ஆப்பிரிக்க செய்தித்தாள் த சிடிஸன் தெரிவிக்கிறது. அதற்கு மாறாக, கேட்போர், பதட்டமில்லாமல் அமைதியான நிலையில் கவனிக்க புன்னகை புரிதல், தெளிவாகவும் நிதானமாகவும் பேசுதல், கேட்போரை நேராக பார்த்தல், நடுவில் குறுக்கிடாமல் கேட்போரின் கருத்தை கவனமாக கேட்டல் ஆகியவை நீங்கள் பேசுவதை ஜனங்கள் கவனிக்கும்படி தூண்டும். “பேசுவதற்கு முன்னால் நன்றாக யோசித்து பேசுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் சொல்ல விரும்புவதை நம்பிக்கையோடு விளக்கமுடியும்” என்று அந்த கட்டுரை சொல்கிறது.
அளவுக்கு மிஞ்சினால் உணவும் நஞ்சே
மாசுபட்ட உணவை அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியம் கெடும் அபாயம் அதிகம் என்று மெக்ஸிகோவில் இருக்கும் சால்வடார் ஸூபிரான் தேசிய சத்துணவு நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ஆடோல்ஃபோ ஷெவேஸ் சொல்கிறார். பொதுவாக நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் பாக்டீரியாக்கள் எல்லாம் நம் இரைப்பையில் சுரக்கும் திரவத்தால் அழிக்கப்பட்டு விடுகின்றன என்று அவர் கூறுகிறார். ஆனால், மூக்குமுட்ட சாப்பிடும்போது, இரைப்பையில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை அதிகப்படியான உணவிற்கு போதாததாக இருப்பதால் பாக்டீரியாக்களை கொல்லும் இரைப்பை திரவத்தின் செயல்திறனை குறைத்துவிடுகிறது. “ஒருவர் 15 சமோசாக்கள் சாப்பிடுகிறார். அதில் ஒன்று கெட்டுப்போனது. அவர் அளவுக்கதிகமாக சாப்பிட்டிருப்பதால் அந்த நபர் உணவு நச்சுப்படுதலால் பாதிக்கப்படுவார். ஆனால், அதேசமயம் கெட்டுப்போன ஒரே ஒரு சமோசா அவர் சாப்பிட்டால், எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்கலாம்” என டாக்டர் ஷெவேஸ் விழித்தெழு! நிருபரிடம் சொன்னார்.
சிரிப்புக்குக்கூட பஞ்சம்
1950-களின் பொருளாதார சீர்குலைவின்போது, சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 18 நிமிடங்கள் சிரித்தான். ஆனால், செல்வ செழிப்புமிக்க 1990-களில், ஒரு நாளைக்கு 6 நிமிடங்களே சிரிக்கிறான் என்று ஸ்விட்சர்லாந்தில் சமீபத்தில் கூடிய சர்வதேச நகைச்சுவை மாநாடு ஒன்றில் அளிக்கப்பட்ட சான்றுகள் குறிப்பிடுகின்றன. ஏன் இந்த நிலை? “எப்போது பார்த்தாலும் பொருள் சேர்த்துக்கொண்டே போவதும், தனிப்பட்ட, தொழில் வெற்றியில் குறியாய் இருப்பதுமே, சிரிப்புப் பஞ்சத்தின் முக்கிய குற்றவாளி. பணத்தால் சந்தோஷத்தை வாங்கமுடியாது என்ற பழமொழிக்கு நிரூபணமாக இது இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்” என லண்டனின் சன்டே டைம்ஸ் விளக்குகிறது. எனவே, “பணத்தையே பெரிதாக நினைப்பவர்கள் வாழ்க்கையில் திருப்தியற்றவர்களாகவும் மன ஆரோக்கியத்தில் குன்றியவர்களாகவும் இருக்கின்றனர். இது ஏனென்றால், பணம் மேலோட்டமான திருப்தியை மட்டுமே தருகிறது” என எழுத்தாளர் மைக்கேல் ஆர்கில் முடிக்கிறார்.
மருத்துவ சிகிச்சைக்கான உரிமை காக்கப்படுதல்
மருத்துவ சிகிச்சைப் பெற வேண்டுமானால் நோயாளிகள் இரத்ததானம் செய்ய வேண்டும் என்ற சமூக பாதுகாப்பு மருத்துவமனை ஒன்றின் விதியை சட்டவிரோதமானது என எல் சால்வடாரின் சுப்ரீம் கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ் சமீபத்தில் அறிவித்தது. இதற்குமுன், எல்லா நோயாளிகளும் அறுவை சிகிச்சைக்கு முன் இரண்டு யூனிட் இரத்தம் தானமாக கொடுக்க வேண்டும் என்று அந்த மருத்துவமனை விதி கட்டாயப்படுத்தியது. ஆனால், இப்பொழுது அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புவோர், இரத்தம் கொடுக்க விரும்பவில்லையெனில் அதற்கான சட்டப்படி உரிமை உடையவர்களாய் இருக்கின்றனர்.