செர்னோபில் துயருக்கு மத்தியில் திட நம்பிக்கை
உக்ரேனிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஏப்ரல் 26, 1986-ல், வரலாற்றிலேயே மிக மோசமான மின்னணு உலை விபத்து உக்ரேனைச் சேர்ந்த செர்னோபில் என்ற இடத்தில் சம்பவித்தது. அந்த அவல நிகழ்ச்சி, “மனிதகுலம் கண்டுபிடித்திருக்கும் ராட்சத சக்திகளை இதுவரை கட்டுப்படுத்த முடிவதில்லை” என்ற உண்மையின் கொடூர நினைப்பூட்டுதலாய் இருந்ததாக அப்போதைய சோவியத் ஜனாதிபதி மிக்கேல் கோர்பச்சேவ் அந்த ஆண்டு பிற்பகுதியில் குறிப்பிட்டார்.
செர்னோபில் பேரழிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறுவதாய், பிப்ரவரி 1987 தேதியிட்ட சைக்காலஜி டுடே பத்திரிகையின் ஜெர்மன் பதிப்பு அறிக்கை செய்ததாவது: “செர்னோபில்லில் அந்த உலை விபத்து . . . நவநாகரிக வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனையாய் இருந்தது. மேலும், நூற்றாண்டுக் கணக்கில் நம்மைப் பெரிதளவில் பாதிக்கவிருக்கும் ஒரு துயர சம்பவமாய் இருந்தது.” “இதுவரை எந்தளவுக்கு அணுக்கரு ஆய்வுகளும் அணுகுண்டு வெடிப்புகளும் கதிரியக்கத்தை வெளியிட்டு இருக்கின்றனவோ, அந்தளவுக்கு, காற்று, மேல்மண், நீர் ஆகியவற்றின்மீது நீண்ட கால கதிரியக்கம் உலகளவில் இருந்தன [வெளிவிடப்பட்டிருந்தன]” என்று தி நியூ யார்க் டைம்ஸ் கூறினது.
“அடுத்த 50 ஆண்டுகளில், சோவியத் உலை உருகினதன் காரணமாக உலகளவில், கணக்குப்படி 60,000 பேர் புற்றுநோயால் இறப்பர். . . . மேலும் 5,000 பேர் தீவிர மரபுவழி சேதத்தால் துன்புறுவர்; 1,000 பேர் வரையில் பிறப்பிலேயே ஏற்படும் உடல்நலக் கோளாறுகளால் துன்புறுவர்” என்று ஜெர்மன் செய்தித்தாளான ஹானோஃபெர்ஷ ஆல்கமைனா முன்குறிப்பிட்டது.
செர்னோபில்லில் ஏற்பட்ட அந்தத் துயர சம்பவம் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் பயம், கவலை, நிச்சயமின்மை ஆகியவற்றால் மூடிப்போடும் மேகத்தைத் தோற்றுவித்திருக்கிறது. ஆனாலும், அப்படிப்பட்ட மிதமிஞ்சிய துயரத்தின் மத்தியிலும் சிலர் ஒரு திட நம்பிக்கையைக் கொண்டிருந்திருக்கின்றனர். விக்டர், ஆனா என்பவர்களையும், அவர்களின் இரண்டு மகள்களான ஈலனா, ஆன்யா என்பவர்களையும் கொண்ட ருட்னிக் குடும்பத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஏப்ரல் 1986-ல் ருட்னிக் குடும்பத்தார் செர்னோபில் உலையிலிருந்து மூன்று கிலோமீட்டரை விடக் குறைந்த தூரத்தில் இருந்த பிரிப்பெட் என்ற பகுதியில் வசித்துவந்தனர்.
விபத்து நாள்
அந்த அவல நாளான சனிக்கிழமை காலை, இயங்காமற்போன உலையில் தீயணைக்கும் படையினர் செய்த வீரச்செயலே, இன்னும் மோசமாகியிருந்திருக்கும் விளைவைத் தடுத்தது. சில மணிநேரத்திற்குள் அந்தத் தீயணைக்கும் படையினர் கதிரியக்க நோயால் தாக்கப்பட்டனர்; அவர்களில் பலர் பின்பு இறந்துவிட்டனர். 1970-களில் செர்னோபில்லில் இணை முதன்மை பொறியியலராகப் பணிபுரிந்த கிரிகோரி மெட்வடெஃப், எரிந்த ஆன்மாக்கள் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் விவரித்ததாவது: “அந்தக் கதிரியக்க மேகம், உலை இருக்கும் இடத்தை நகர்ப்பகுதியிலிருந்து பிரிக்கும் ஊசியிலைக் காடுகளினூடே மெதுமெதுவாய் காற்றினால் கொண்டு செல்லப்பட்டு, சாம்பல் மழையாகப் பெய்து, அந்தச் சிறிய காட்டைக் கதிரியக்கப் பொருட்களால் மூடியது.” டன் கணக்கில் ஆவியாகியிருந்த கதிரியக்கப் பொருட்கள் வளிமண்டலத்தில் வெளிவிடப்பட்டதாக அறிக்கை செய்யப்பட்டது!
குறிப்பிடத்தக்க வகையில், 40,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் பிரிப்பெட் பகுதியில், அந்த சனிக்கிழமையன்று, வாழ்க்கை எப்போதும்போல் சாதாரணமாகவே இருந்தது. சிறார்கள் தெருக்களில் விளையாடிக்கொண்டிருந்தனர், மக்கள் மே 1, சோவியத் விடுமுறை தினக் கொண்டாட்டத்துக்காக தயாரித்துக்கொண்டிருந்தனர். அந்த விபத்தைப் பற்றிய அறிவிப்போ, ஆபத்தைப் பற்றிய எச்சரிக்கையோ விடுக்கவில்லை. ஆனா ருட்னிக் தன் மூன்று வயது மகள், ஈலனாவுடன் உல்லாசமாய் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஆனாவின் வளர்ப்புத் தந்தையை அவர்கள் சந்தித்தனர். ஆனாவின் தந்தை அந்த விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். கதிரியக்க அபாயத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால், சுமார் 16 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் தன் வீட்டுக்கு அவர்களைச் சீக்கிரமாய் அழைத்துச் சென்றார் அவர்.
அந்தக் கதிரியக்க மேகம் வளிமண்டலத்துக்குள் எழும்பி உக்ரேன், பெலாருஷ்யா (இப்போது பெலாருஸ்), ரஷ்யா, போலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்விட்ஸர்லாந்து ஆகிய நாடுகளெங்கும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வரை பரவியது. அதைத் தொடர்ந்து வந்த திங்கட்கிழமை, ஸ்வீடனிலும் டென்மார்க்கிலும் இருந்த விஞ்ஞானிகள் பெருமளவில் கதிரியக்கத்தைப் பதிவு செய்தபோது கவலையுற்றவர்களாயினர்.
பின்விளைவு
சோவியத் நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களும், தீயணைப்புப் படை வீரர்களும், கட்டுமானத் தொழில் வல்லுநர்களும், இன்னும் மற்றவர்களும் செர்னோபில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தத் தொகுதியினர்—கிட்டத்தட்ட 6,00,000 பேர் அடங்கியவர்கள்—“தீர்த்துக்கட்டுபவர்கள்” என்று அறியப்படலாயினர். அவர்கள், ஸ்டீலையும் சிமெண்ட் கலவையையும் வைத்துக் கட்டப்பட்ட கல் சவப்பெட்டி (sarcophagus) ஒன்றால் சேதமுற்ற உலையை மூடுவதன் மூலம் ஐரோப்பாவுக்கு நேரிடவிருந்த இன்னும் மோசமான பேரழிவைத் தடுத்தனர். அது பத்து மாடி உயரமும் இரண்டு மீட்டர் அடர்த்தியும் கொண்டது.
அடுத்த சில நாட்களுக்குள் அதையடுத்த பகுதியைவிட்டு காலி செய்யும் வேலை தொடங்கப்பட்டது. “எங்கள் வீட்டையும், எங்களுக்கிருந்த எல்லாவற்றையும்—துணிமணிகள், பணம், ஆவணங்கள், உணவு—நாங்கள் அப்படியே விட்டுவிட நேரிட்டது” என்று விக்டர் விவரித்தார். “ஆனா இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்ததால் நாங்கள் மிகவும் கவலைக்குள்ளானோம்.”
சுமார் 1,35,000 பேர் இடம் மாறிச் செல்ல வேண்டியிருந்தது—அந்த உலையிலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருந்த எல்லா குடியிருப்புப் பகுதிகளும் அப்படியே கைவிட்டுவிடப்பட்டன. ருட்னிக் குடும்பத்தார் தங்களுடைய உறவினர்களின் இடத்தை அடைந்தனர். என்றபோதிலும், ருட்னிக் குடும்பத்தார் தங்களிடமும் கதிரியக்கத்தைப் பரப்பிவிடுவார்களோ என்றெண்ணி, இந்த உறவினர்கள் மிகவும் பயப்பட ஆரம்பித்தனர். “அவர்கள் கவலைப்பட ஆரம்பித்தனர்; முடிவில் நாங்கள் அவர்களைவிட்டுப் போய்விடும்படி எங்களைக் கேட்டுக்கொண்டனர்” என்று ஆனா சொன்னார். காலி செய்த மற்றவர்களுக்கும் அதைப்போலவே வேதனைதரும் அனுபவங்கள் இருந்தன. கடைசியாக, செப்டம்பர் 1986-ல் ருட்னிக் குடும்பத்தார், ரஷ்யாவைச் சேர்ந்த மாஸ்கோவுக்குத் தென்மேற்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில் இருந்த கலூகாவிற்கு குடிபெயர்ந்தனர்.
“திரும்பிச் செல்லப்போவதில்லை என்று முடிவில் எங்களுக்குத் தெரியவந்தது” என்று ஆனா குறிப்பிட்டார். “நாங்கள் பிறந்து வளர்ந்த வீடாகிய, எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான வீட்டை நாங்கள் இழந்திருந்தோம். அது, எங்குப் பார்த்தாலும் பூக்களும் புல்வெளிகளும் நிறைந்தும், சிற்றோடையில் நீர்த் தாவரங்கள் நிறைந்தும் காணப்பட்ட வெகு அழகியதோர் இடம். அந்தக் காட்டுப் பகுதி, பெரி வகைகளும் காளான்களும் அடர்ந்ததாய்க் காணப்பட்டது.”
உக்ரேனின் அழகு பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, சோவியத் நாட்டிலேயே ஏராளமாய் தானியம் விளையும் பகுதியாய் இருந்த அதன் ஸ்தானத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. உக்ரேனில் அந்த இலையுதிர் காலத்தில் செய்யப்படவிருந்த அறுவடையின் பெரும்பகுதி மாசுபடுத்தப்பட்டிருந்தது. அதைப் போலவே, ஸ்காண்டிநேவியாவிலும், 70 சதவீத கலைமான் கறி உண்பதற்குப் பொருத்தமற்றதாய் எங்கும் தெரிவிக்கப்பட்டது; ஏனெனில் கதிரியக்கத்துக்குட்பட்டிருந்த கற்பாசியை அந்த விலங்குகள் மேய்ந்திருந்தன. மேலும் ஜெர்மனியின் சில பகுதிகளில், மாசுபடுத்தப்பட்டிருக்குமோ என்ற பயத்தால், காய்கறிகள் விளைச்சல் நிலத்திலேயே அழுகிப்போகும்படி விட்டுவிடப்பட்டன.
கதிரியக்கத்தால் உடல்நல பாதிப்புகள்
அந்த விபத்து நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ எண்ணிக்கையின்படி, 5,76,000 பேர் கதிரியக்கத்துக்கு உள்ளாகியிருந்தனர். புற்றுநோயை விளைவிக்கும் அல்லது விளைவிக்காத தன்மையுடைய நோய்கள் அப்படிப்பட்ட மக்களைத் தாக்கும் சாத்தியம் அதிகமாய் இருப்பதாக அறிக்கை செய்யப்படுகின்றன. பிரத்தியேகமாக, இளைஞர் பாதிக்கப்பட்டுள்ளனர். “செர்னோபில்லிலிருந்து எங்கும் பரவிவந்த கதிரியக்கப் பொருட்களால் அதிகளவு பாதிக்கப்பட்டிருந்த, ஒரு வயதுக்கும் குறைவாய் இருந்த குழந்தைகளில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தினருக்கு, அவர்கள் பெரியவர்களாகையில், தைராய்டு புற்றுநோய் வளர்ந்துவரக்கூடும்” என ஐரோப்பாவின் பிரசித்தி பெற்ற தைராய்டு நிபுணர்களில் ஒருவர் நம்புவதாக, டிசம்பர் 2, 1995 தேதியிட்ட நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்தது.
ஆனா கருவுற்றிருந்த சமயத்தில் கதிரியக்கத்திற்கு உள்ளாகியிருந்ததால், கருச்சிதைவு செய்துவிடும்படி மருத்துவர்களால் வற்புறுத்தப்பட்டார். விக்டரும் ஆனாவும் மறுத்தபோது, அந்தக் குழந்தை உருக்குலைந்து பிறந்தால், அதற்கான எல்லா கவனிப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று வாசிக்கும் ஒரு வாக்குமூலத்தில் அவர்கள் கையெழுத்துப் போட வேண்டியிருந்தது. ஆன்யா உருக்குலைந்தவளாய் பிறக்காவிட்டாலும், அவளுக்குக் கிட்டப்பார்வை குறைபாடு, மூச்சுவிடுதல் சம்பந்தமான பிரச்சினைகள், இதய இரத்தக்குழாய் சம்பந்தமான நோய்கள் போன்றவை இருக்கின்றன. அதோடு, ருட்னிக் குடும்பத்தைச் சேர்ந்த பிற உறுப்பினரின் உடல்நலம் அந்தப் பேரழிவு ஏற்பட்டதிலிருந்தே குன்றிவந்திருக்கிறது. விக்டர், ஈலனா ஆகிய இருவருக்குமே இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டன; செர்னோபில் கதிரியக்கத்தால் நோய்வாய்ப்பட்டவர்களாக பதிவு செய்யப்பட்ட அநேகரில் ஆனா ஒருவரே.
கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட பலருள், சிதைவுற்ற அந்த உலையை மூடிப்போட்ட தீர்த்துக்கட்டுபவர்களும் அடங்கியிருந்தனர். துப்புரவு செய்ய உதவிய ஆயிரக்கணக்கானோர் தங்கள் ஆயுளுக்கு முன்னதாகவே இறந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தப்பிப்பிழைத்த பலருக்கு நரம்பியல் சார்ந்த, உளவியல் சார்ந்த குறைபாடுகள் இருந்திருக்கின்றன. மனச்சோர்வு வெகுபரவலாய் காணப்படுகிறது, தற்கொலையும் சர்வசாதாரணம்.
தப்பிப்பிழைத்தவர்களில், ஆஞ்சலாவும் ஒருவர். அவருக்கு தீவிர உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தன. அந்தப் பேரழிவின்போது, அவர் உக்ரேனின் தலைநகரான கீவில் வசித்துவந்தார். அது செர்னோபில்லிலிருந்து 80 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தொலைவில் இருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு, அந்தத் தீர்த்துக்கட்டுபவர்களுக்கு அந்த உலை இருந்த இடத்தில் பொருட்களை விநியோகித்ததில் நேரம் செலவிட்டார். தப்பிப்பிழைத்த மற்றொருவர் ஸ்வெட்லானா என்பவர். அவர் கீவுக்கு அருகிலிருந்த இர்ப்பனில் வசித்துவருகிறார். அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சைக்குள்ளானார்.
முந்தினவற்றை நிதானமாய் நினைத்துப் பார்த்தல்
அந்தப் பெரிய விபத்து ஏற்பட்டு பத்தாண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 1996-ல், மிக்கேல் கோர்பச்சேவ் ஒப்புக்கொண்டதாவது: “அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு நாங்கள் தயாராய் இருக்கவே இல்லை.” அதே சமயத்தில், ரஷ்ய ஜனாதிபதி யெல்ட்சன் குறிப்பிட்டதாவது: “தவிர்க்க முடியாத படுமோசமான, படுசிரமமான விளைவை ஏற்படுத்திய இப்பேர்ப்பட்ட துயர சம்பவத்தை மனிதகுலம் ஒருபோதும் அனுபவித்ததில்லை.”
குறிப்பாக, சயன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையின் ஜெர்மன் பதிப்பு, செர்னோபில் பேரழிவின் பின்விளைவை, நடுத்தர அளவில் அணு யுத்தம் ஏற்பட்டிருந்தால் விளைவடைந்திருக்கும் சேத அளவுடன் ஒப்பிட்டது. இந்த அவல நிகழ்ச்சியால் சுமார் 30,000 பேர் இறந்திருப்பதாக சிலர் கணிக்கின்றனர்.
கடந்த ஆண்டு செய்யப்பட்ட ஒரு செய்தியறிக்கையின்படி, அந்த விபத்தின் பத்தாவது ஆண்டு நிறைவேற்றத்தின்போது, அந்த உலையைச் சுற்றிலும் 29 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பகுதி முழுவதுமே மனித வாழ்வுக்கு ஏற்றதல்லாததாய் இருந்தது. என்றபோதிலும், “தைரியம் கொண்ட குடியிருப்பாளர்களில் 647 பேர், தந்திரமாகவோ, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தோ, அல்லது நேரடியாகவோ அந்தப் பகுதிக்குள் நுழைந்தனர்” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. அது குறிப்பிட்டதாவது: “அந்த உலையிலிருந்து 10 கிலோமீட்டர் ஆரத் (radius) தொலைவுக்குள் எவருமே வசிப்பதில்லை. திரும்பிவந்த சிலர் வசிப்பதோ, அந்த 10 கிலோமீட்டர் தூரத்தைச் சுற்றிலும் மற்றொரு 20 கிலோமீட்டர் தூரப் பகுதியில்தான்.”
பரவலான பயத்தின் மத்தியில் நம்பிக்கை
செர்னோபில்லுக்கு அருகில் முன்பு வசித்துவந்த ஆயிரக்கணக்கானோருக்கு, வாழ்வு இன்னும் மிக சிரமமாகவே இருக்கிறது. 80 சதவீதத்தினர் தங்களுடைய புதிய வீடுகளைப் பற்றி மகிழ்ச்சியற்றவர்களாய் இருக்கின்றனர் என்பதாக காலிசெய்பவர்களைப் பற்றிய ஆய்வு அறிக்கை ஒன்று காட்டியது. அவர்கள் துக்கமாகவும், களைப்பாகவும், கவலையாகவும், எரிச்சலாகவும், தனிமையாகவும் உணருகின்றனர். செர்னோபில் வெறும் ஓர் அணுசக்தி சம்பந்தப்பட்ட விபத்தாக இருக்கவில்லை—அது சமூகம் சார்ந்த ஒன்றாயும், திணறச்செய்யும் அளவுகளில் ஏற்பட்ட உளவியல் சார்ந்த நெருக்கடியாயும் இருந்தது. குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை, செர்னோபில்லுக்கு முன்பு நடந்தவை என்றோ, அல்லது செர்னோபில்லுக்குப் பின்பு நடந்தவை என்றோ பலர் குறிப்பிட்டுக் காட்டுவது ஆச்சரியத்துக்குரியதாய் இல்லை.
ஏராளமான மற்றவர்களுக்கு மாறாக, ருட்னிக் குடும்பத்தார் இந்தச் சூழ்நிலையை குறிப்பிடத்தக்க அளவுக்கு நன்றாக சமாளித்துவருகின்றனர். அவர்கள் பைபிளை யெகோவாவின் சாட்சிகளுடன் படிக்க ஆரம்பித்தனர்; அதன் பலனாக, கடவுளுடைய வார்த்தையில் காணப்படும், நீதியுள்ள ஒரு புதிய உலகத்தைப் பற்றிய வாக்குத்தத்தங்களில் பலமான விசுவாசத்தை வளர்த்துவந்திருக்கின்றனர். (ஏசாயா 65:17-25; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4) பிறகு, 1995-ல், விக்டரும் ஆனாவும் கடவுளுக்குத் தாங்கள் ஒப்புக்கொடுத்திருந்ததைத் தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்திக் காட்டினர். பின்பு, அவர்களுடைய மகள் ஈலனாவும் முழுக்காட்டுதல் பெற்றார்.
விக்டர் விவரிப்பதாவது: “பைபிளைப் படித்ததிலிருந்து, நம் படைப்பாளர், யெகோவா தேவனைப் பற்றியும், பூமியில் மனிதவர்க்கத்துக்கான அவருடைய நோக்கங்களைப் பற்றியும் எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. நாங்கள் இனிமேலும் மனச்சோர்வுற்றவர்களாய் இல்லை, ஏனெனில் கடவுளுடைய ராஜ்யம் வரும்போது, அப்படிப்பட்ட பயங்கரமான விபத்துக்கள் இனி ஒருபோதும் நிகழப்போவதில்லை என்று எங்களுக்குத் தெரியும். செர்னோபில்லுக்கு அருகில், எங்களுக்குப் பிரியமாய் இருந்த வீட்டைச் சுற்றிலும் இருந்த நாட்டுப்புறப் பகுதி, அதன் பாழ்நிலையிலிருந்து மாறி, ஓர் அற்புதமான பரதீஸின் பாகமாகப் போகும் நாளுக்காக நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்.”
ஆஞ்சலாவும், ஸ்வெட்லானாவும்கூட நீதியுள்ள ஒரு புதிய உலகைப் பற்றிய கடவுளின் வாக்குத்தத்தங்களில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்; கதிரியக்கத்தின் விளைவாக ஏற்பட்ட நோய்களுக்கு மத்தியிலும், அப்படிப்பட்ட மகிழ்ச்சியான எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றனர். “படைப்பாளரைப் பற்றியும், அவருடைய நோக்கங்களைப் பற்றியும் தெரிந்திராவிட்டால் வாழ்க்கை வெகு சிரமமாய் இருக்கும். ஆனால் யெகோவாவுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பது நான் நம்பிக்கையுடன் நிலைத்திருக்க எனக்கு உதவுகிறது. முழு நேர பைபிள் பிரசங்கியாக அவரைத் தொடர்ந்து சேவிப்பதே என் ஆவல்” என்று ஆஞ்சலா குறிப்பிட்டார். ஸ்வெட்லானா மேலும் தெரிவித்ததாவது: “என் கிறிஸ்தவ சகோதரசகோதரிகள் எனக்கு மிகவும் உதவியாய் இருக்கின்றனர்.”
மக்கள் எங்கு வாழ்ந்தாலும்சரி, எப்படிப்பட்டவர்களாய் இருந்தாலும்சரி, ‘சமயத்தாலும் எதிர்பாரா சம்பவத்தாலும்’ ஏற்படும் விபத்துக்கள் அவர்களைப் பாதிக்கிறது என்பதை பைபிள் படிப்பு இப்படிப்பட்டவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறது. (பிரசங்கி 9:11, NW) ஆனால், தங்களுடைய துன்பங்கள் எத்தகைய நிலைகுலைவிக்கச் செய்யும் தன்மையுடையவையாய் இருந்தாலும், யெகோவா தேவன் சரிப்படுத்த முடியாத எந்தவொரு சேதமும் இல்லை, அவர் குணப்படுத்தாத எந்தவொரு காயமும் இல்லை, அவர் ஈடுசெய்யாத எந்தவொரு இழப்பும் இல்லை என்று பைபிள் மாணாக்கர்கள் அறிந்திருக்கின்றனர்.
நீங்களும்கூட, எவ்வாறு கடவுளுடைய வாக்குத்தத்தங்களில் நம்பிக்கையை வளர்க்கவும், அதன் மூலம் ஒரு பிரகாசமான நம்பிக்கையை உடையவர்களாக இருக்கவும் முடியும்? பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளின் எழுத்தாளர் பதிலளிப்பதாவது: “உன் நம்பிக்கை யெகோவாமேல் இருக்கும்படி, இன்றையதினம் அறிவை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.” (நீதிமொழிகள் 22:19, NW) ஆம், ஓர் ஒழுங்கான பைபிள் படிப்பின் மூலம் நீங்கள் அறிவைப் பெற வேண்டியது அவசியம். நீங்கள் இதைச் செய்வதற்கு, உங்கள் பகுதியிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைவார்கள். உங்களுக்கு வசதியாய் இருக்கும் நேரத்திலும் இடத்திலும் நடத்தப்படும் ஓர் இலவச பைபிள் படிப்பு திட்டத்தை அவர்கள் அளிக்கிறார்கள்.
[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]
“தவிர்க்க முடியாத படுமோசமான, படுசிரமமான விளைவை ஏற்படுத்திய இப்பேர்ப்பட்ட துயர சம்பவத்தை மனிதகுலம் ஒருபோதும் அனுபவித்ததில்லை.” ரஷ்ய ஜனாதிபதி யெல்ட்சன்
[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]
செர்னோபில் வெறும் ஓர் அணுசக்தி சம்பந்தப்பட்ட விபத்தாக இருக்கவில்லை—அது சமூகம் சார்ந்த ஒன்றாயும், திணறச்செய்யும் அளவுகளில் ஏற்பட்ட உளவியல் சார்ந்த நெருக்கடியாயும் இருந்தது
[பக்கம் 12-ன் படத்திற்கான நன்றி]
Tass/Sipa Press