இளைஞர் கேட்கின்றனர்
எனக்கு ஏன் இந்தத் தீராத வியாதி?
ஜேஸன் தனது 13-ம் வயதில், என்றாவது ஒருநாள் பெத்தேலில் முழுநேர ஊழியம் செய்யப்போவதாக மனதில் தீர்மானித்துக்கொண்டான்; பெத்தேல் என்பது நியூ யார்க், ப்ரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது உலகத் தலைமை அலுவலகமாகும். ஜேஸன் தனக்குத்தானே ஒரு மரப் பெட்டியை செய்து அதற்கு பெத்தேல் பெட்டி என்று பெயர் வைத்தான். பெத்தேலில் ஊழியம் செய்யும்போது என்னென்ன சாமான்களெல்லாம் உபயோகமாய் இருக்குமென அவன் நினைத்தானோ அவற்றையெல்லாம் அதில் சேகரிக்க ஆரம்பித்தான்.
ஆனால் 18 வயது முடிந்து வெறும் மூன்று மாதங்களிலேயே, ஜேஸனுக்கு க்ரான்ஸ் நோய்—கடுமை தணியாத, வலியுண்டாக்கும் குடல் நோய்—இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவன் நினைவுகூருகிறான்: “என் தலையில் திடீரென இடிவிழுந்ததுபோல் இருந்தது. என்னால் செய்ய முடிந்ததெல்லாம் ஆபீஸிலிருந்த அப்பாவைக் கூப்பிட்டு அழுததுதான். எது என்ன ஆயிற்றோ, பெத்தேலுக்கு போகவேண்டுமென்ற என் கனவு சின்னாபின்னமானது எனக்குத் தெளிவாய் புரிந்தது.”
‘இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுவதற்கு’ அடிப்படைக் காரணம் வியாதி. (ரோமர் 8:22) எண்ணற்ற கோடிக்கணக்கான இளைஞர்களும் வியாதிப்பட்டோரின் பட்டியலில் இடம்பெறுகிறார்கள். அநேக இளைஞர்கள் இறுதியில் சுகமடைகிறார்கள். ஆனால் மற்றவர்கள் தீராத வியாதியுடனோ உயிர் பறிக்கும் கொடிய வியாதியுடனோ பல்லைக் கடித்துக்கொண்டு வாழ வேண்டியிருக்கிறது. பொதுவாக இளைஞர்களுக்கு வரும் வியாதிகளில் சில, ஆஸ்துமா, சக்கரை வியாதி, இரத்த சோகை, தொற்று வியாதிகள், வலிப்பு, மனக்கோளாறு மற்றும் புற்றுநோய் ஆகும். சில இளைஞர்கள் ஒரே சமயத்தில் பல வியாதிகளால் பாதிக்கப்படுகின்றனர்.
‘எனக்கு ஏன் இந்தக் கதி?’
வியாதியால் உடல் வலி மாத்திரமல்ல மன வேதனையும் உணர்ச்சிப்பூர்வ அழுத்தமும்கூட ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, உடல் சுகமில்லாமல் நீங்கள் பல மாதங்களாக பள்ளிக்குச் செல்லமுடியாத நிர்ப்பந்தம் ஏற்படும்போது, பள்ளிப் படிப்பில் பின்தங்கிவிடுவது மாத்திரமல்லாமல் மற்ற அனைவரிலிருந்தும் தள்ளிவைக்கப்பட்டவர்களாகவும் நீங்கள் உணரலாம். 12 வயது சன்னி அவ்வப்போது ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவதன் காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் போகும்போது, ‘என் ஃப்ரென்ட்ஸ் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? என்னால் இன்றைக்கு எதைக் கற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது?’ என்றெல்லாம் நினைத்துக் கவலைப்படுகிறான்.
அதேபோல், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்ல முடியாதளவுக்கோ பைபிளை வாசிக்க முடியாதளவுக்கோகூட நீங்கள் சுகமில்லாமல் இருந்தால் உங்களது ஆன்மீக வளர்ச்சி குன்றலாம். இந்தச் சூழ்நிலையில் உங்களுக்கு மனரீதியிலும் ஆன்மீகரீதியிலும் அதிகப்படியான ஆதரவு தேவை. உங்களுக்கு அந்த வியாதி இருப்பதையே முதலில் நீங்கள் நம்பமாட்டீர்கள். அதன் பிற்பாடு, அந்த வியாதியை எப்படியாவது தவிர்த்திருக்கலாமே என நினைத்து உங்கள்மீதேகூட உங்களுக்கு பயங்கர கோபம் உண்டாகலாம். ‘ஏன் கடவுள் என்னைக் கைவிட்டுவிட்டார்?’ என உங்களுக்குக் குமுற வேண்டும்போல் இருக்கும். (மத்தேயு 27:46-ஐ ஒப்பிடுக.) சொல்லப்போனால், சிறிதளவாவது மனச்சோர்வு இருப்பது சகஜம்.
இவை மட்டுமா, ஏதாவது விசேஷ முயற்சி எடுத்தால், உதாரணத்திற்கு மிகவும் நல்ல பிள்ளையாக இருக்க முயற்சி செய்தால் கடவுள் வியாதியை நீக்கிவிடுவார் என்றும்கூட ஒரு இளைஞர் கற்பனை செய்துகொள்ளலாம். ஆனாலும், அந்த நினைவு ஏமாற்றத்தை உண்டாக்கலாம், ஏனென்றால் இந்தக் காலத்தில் கடவுள் அற்புத சுகமளிப்பதாக வாக்களிப்பதில்லை.—1 கொரிந்தியர் 12:30; 13:8, 13.
நான் சாவை சந்திக்கப்போவதே இல்லை, கடவுள் ‘மகா உபத்திரவத்தை’ கொண்டுவருகையில் நான் உயிருடனிருப்பேன் என்றெல்லாம் நீங்கள் ஒருவேளை நினைத்திருக்கலாம். (வெளிப்படுத்துதல் 7:14, 15; யோவான் 11:26) அவ்வாறிருந்தால், உயிரை பறிக்கும் கொடிய வியாதியால் தாக்கப்பட்டிருப்பதை உங்களால் ஜீரணிக்க முடியாது. ஏதோவொரு விதத்தில் யெகோவாவை புண்படுத்திவிட்டதாக நினைத்து உங்கள் மனம் தத்தளிக்கலாம், அல்லது விசேஷ முறையில் கடவுள் உங்களது உத்தமத்தன்மையை சோதிக்கிறாரென நீங்கள் ஒருவேளை நினைத்துக்கொள்ளலாம். எனினும், இப்படியெல்லாம் நினைப்பது தவறு. “தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல,” என கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:13) வியாதியும் மரணமும் தற்போதைய மனித வாழ்வின் மகிழ்ச்சியற்ற அம்சங்களாய் இருக்கின்றன; நம் அனைவருக்கும் “நேரமும் எதிர்பாரா சம்பவமும்” நிகழும்.—பிரசங்கி 9:11, NW.
பயத்தைச் சமாளித்தல்
உங்களுக்கு தீராத வியாதி இருப்பதை அறிந்தவுடன் புது விதமான பயம் வயிற்றைக் கலக்கும். உங்கள் உயிருக்காக போராடுவது எப்படி இருக்கும் என்ற ஆங்கிலப் புத்தகம், தீராத வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் 14 இளைஞர்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்திருக்கிறது. உதாரணத்திற்கு, ஆடான் என்ற பத்து வயது சிறுவன் தான் ஆஸ்த்மா நோயினால் சாகப்போவதாக பயப்பட்டான். எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 16 வயது எலிசபெத், மீண்டும் கண் விழிக்க முடியாதபடி ஒரேயடியாக தூங்கிவிடுவாளோ என பயப்பட்டாள்.
ஆனாலும், சில இளைஞர்களை வேறு விதமான பயம் பற்றிக்கொள்கிறது; அதாவது, தங்களை யாரும் திருமணம் செய்துகொள்ள மாட்டார்களோ அல்லது பிற்கால வாழ்க்கையில் ஆரோக்கியமான பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதோ போன்ற பயம் அவர்களைப் பற்றிக்கொள்கிறது. இன்னும் மற்ற இளைஞர்கள், தங்களுக்கிருப்பது தொற்று நோயாக இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி, தங்களால் மற்ற குடும்ப அங்கத்தினர்களுக்கும் அந்த வியாதி வந்துவிடுமோவென பயப்படுகின்றனர்.
வியாதி முற்றிப்போயிருந்தாலும்சரி, குறைந்திருந்தாலும்சரி, திடீரென ஏற்படும் எந்த விதமான மாற்றங்களாலும் பயங்கள் மீண்டும் துளிர்விடலாம். ஏற்கெனவே நீங்கள் இப்படி பயந்திருந்தால் இதெல்லாம் எவ்வளவு உண்மையென்பதை நீங்களே அறிவீர்கள். நல்லவேளையாக, முதன்முதலில் உண்டாகும் நம்பிக்கையற்ற உணர்ச்சிகள் நாளடைவில் மறைந்துவிடும். அப்போது நீங்கள் இன்னுமதிக நியாயப்படி உங்கள் சூழ்நிலைகளை மதிப்பிட ஆரம்பிக்கலாம்.
சுகமின்றி இருப்பதன் சவால்
“நம்மை யாரும் அசைக்க முடியாதென்று சிறுவயதில் நாம் நினைக்கிறோம்,” என முன்பு குறிப்பிட்ட ஜேஸன் சொல்கிறான். “பின் திடீரென, தீராத வியாதியிருப்பதை அறிந்ததும் உங்களுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. உங்களால் பழையபடி ஓடியாட முடியாததால், பொழுது விடிவதற்குள் தள்ளாத காலம் வந்துவிட்டதுபோல் உங்களுக்குத் தோன்றலாம்.” ஆம், புதிதாய் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகளைச் சமாளிப்பது ஒரு சவால்.
மற்றவர்கள் உங்களது நிலைமையைப் புரிந்துகொள்ளாதபோது மற்றொரு பெரிய சவால் உங்கள்முன் ரூபமெடுத்து நிற்கிறது என ஜேஸன் சொன்னான். ஜேஸனைத் தாக்கியிருப்பது “உள் வியாதி” என சொல்லலாம். அவனைப் பார்த்தால் உடல் சுகமின்றி இருப்பவன்போலவே தெரியாது. “ஜீரணிக்க வேண்டிய வேலையை என் உடல் சரியாகச் செய்வதில்லை, அதனால் நான் அடிக்கடி சாப்பிட வேண்டியதாயிருக்கிறது, மற்றவர்களைவிட அதிகமாகவும் சாப்பிடுகிறேன். ஆனாலும் சதைபோட்ட பாடில்லை. அதுமட்டுமல்ல, சில சமயங்களில் நான் அதிகச் சோர்வடைவதால் மதிய வேளையில் தூக்கத்தைக் கட்டுப்படுத்துவது பெரும்பாடாகிவிடுகிறது. ஆனால் மற்றவர்கள், நான் சிறிதும் கட்டுப்பாடில்லாமல் இருக்கிறேன் என்பதாகவோ சோம்பேறியாய் இருக்கிறேன் என்பதாகவோ வார்த்தைகளால் குத்திக்காண்பிக்கிறார்கள். இப்படிப்பட்ட எதையாவது அவர்கள் சொல்கிறார்கள்: ‘உன்னால் எவ்வளவோ செய்ய முடியும். ஆனால் நீ முயற்சிகூட எடுக்க மாட்டேன் என்கிறாய்!’ ” என ஜேஸன் விளக்குகிறான்.
ஜேஸனுக்கு தம்பிகளும் தங்கைகளும் இருக்கிறார்கள், பந்து விளையாடுவதற்கு முன்பெல்லாம் அவர்களை கூட்டிச்சென்றதுபோல் ஏன் இப்போது ஜேஸன் கூட்டிச்செல்வதில்லை என அவர்களுக்கு எல்லா சமயத்திலும் புரிவதில்லை. “விளையாடும்போது காயம் ஏற்பட்டுவிட்டால் குணமாக பல வாரங்களெடுக்கும் என்பது எனக்குத்தான் தெரியும். என் வலியை அவர்களுடையதோடு ஒப்பிட்டுப்பார்த்துவிட்டு, ‘பார்க்கிறவர்களெல்லாம் அவனைத் தாங்க வேண்டுமென்பதற்காகவே இப்படி முனங்குகிறான்,’ என்று சொல்கிறார்கள். மிஞ்சிமிஞ்சிப்போனால் கால் சுலுக்குதான் அவர்கள் அனுபவிப்பதிலேயே மிகக் கடுமையான வலியாய் இருக்கலாம், இப்படியிருக்கும்போது எனக்கிருக்கும் வலியை அவர்களால் எப்படி புரிந்துகொள்ள முடியும்” என ஜேஸன் குறிப்பிடுகிறான்.
நீங்கள் வியாதிப்பட்டிருப்பது உங்களது குடும்பத்திற்கு ஒரு பாரமாக இருந்தால், குற்றவுணர்வினால் நீங்கள் அவதிப்படலாம். உங்கள் பெற்றோருக்கும் குற்றவுணர்வு ஏற்படலாம். “என் அம்மா அப்பா இருவருமே எனக்கிருக்கும் பிரச்சினைக்கு தாங்கள்தான் காரணமென நினைக்கிறார்கள்,” என ஜேஸன் சொல்கிறான். “வேறுவழியில்லை எனத் தெரிந்தவுடன் பிள்ளைகள் தங்கள் வியாதியை பொதுவாக அனுசரித்துக்கொள்கின்றனர். ஆனால் பெற்றோர்தான் திண்டாடுகின்றனர். என் அம்மா அப்பா என்னிடம் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கேட்கின்றனர். அவர்களது குற்றவுணர்வைப் போக்க என்னால் முடிந்ததையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.”
ஆஸ்பத்திரிக்குச் செல்வது—கசப்பான அனுபவம்
எப்போதுபார்த்தாலும் டாக்டரிடம் செல்வது வேதனையளிக்கலாம். உங்களை இலாயக்கில்லாதவர்களாகவும் உதவியற்றவர்களாகவும் உணரச்செய்யலாம். ஆஸ்பத்திரியில் வெயிட்டிங் ரூமில் காத்திருப்பதுதானே கொடுங்கனவாக இருக்கலாம். “நீங்கள் . . . மிகவும் தனிமையாய் உணருவீர்கள், உங்களுடன் யாராவது இருக்கமாட்டார்களா என ஏங்குவீர்கள்,” என்று இருதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 14 வயது நிரம்பிய ஜோசஃப் சொல்கிறான். வருந்தத்தக்க விதத்தில், சில இளைஞர்களுக்கு அப்படிப்பட்ட ஆதரவு அவர்களது பெற்றோரிடமிருந்துகூட கிடைப்பதில்லை.
அதேபோல் மருத்துவ பரிசோதனைகள் கவலையை அதிகரிக்கலாம். உண்மையைச் சொன்னால், சில பரிசோதனைகள் வெறுப்பேற்றுபவையாய் இருக்கலாம். அதற்குப்பின், பயத்துடன் நாள்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் ரிசல்ட்டுக்காக நீங்கள் காத்திருக்கையில் ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாக தோன்றலாம். ஆனால் இதை மனதில் வைத்திருங்கள்: மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது பள்ளியில் பரீட்சை எழுதுவதுபோல் இல்லை; ஏதோவொரு உடல்நலக் கோளாறு இருப்பதுதானே நீங்கள் தோல்வியடைந்துவிட்டதைக் குறிப்பதில்லை.
உண்மையில், பரிசோதனை அதிக உதவியளிக்கும் விவரங்களை அளிக்கலாம். சிகிச்சையில் சுலபமாக குணமாக்கத்தக்க உடல்நலக் கோளாறுதான் உங்களுக்கு இருக்கிறது என்பதை அது காண்பிக்கலாம். அல்லது அவ்வாறு இல்லாவிட்டாலும், உங்களுக்கு இருக்கும் கோளாறை நீங்கள் எவ்வாறு சமாளிக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் பரிசோதனை உதவலாம். சந்தேகிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வியாதி உங்களுக்கு இல்லையென்பதையும்கூட அது உங்களுக்குக் காண்பிக்கலாம். ஆகவே உங்களுக்கிருக்கும் கோளாறு இதுதான் என அவசரப்பட்டு முடிவெடுத்துவிடாதீர்கள்.
அளவுக்கதிகமாக கவலைப்பட்டால் உங்கள் பலம்தான் குறையும். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்.” (நீதிமொழிகள் 12:25) கவலைகளை மனதில் வைத்துப் புழுங்காமல் தம்மிடம் சொல்லுமாறு கடவுள் நம்மை அழைக்கிறார். அவருக்கு நம்மீது அக்கறை இருக்கிறது என்பதையும் பிரச்சினையை சிறந்த விதத்தில் கையாள தேவைப்படும் வழிநடத்துதலையும் ஞானத்தையும் அவர் நமக்குக் கொடுப்பாரென்பதையும் நாம் நம்ப வேண்டும்.—சங்கீதம் 41:3; நீதிமொழிகள் 3:5, 6; பிலிப்பியர் 4:6, 7; யாக்கோபு 1:5.
நீதி வாசமாயிருக்கும் ஒரு புதிய உலகத்தை கொண்டுவர நமது சிருஷ்டிகரான யெகோவா தேவன் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதில் நாம் சந்தோஷப்படலாம். இறந்தவர்களையும்கூட அவர் உயிர்த்தெழுப்பி, அந்தப் புதிய உலகில் சந்தோஷமாக வாழ்வதற்கான வாய்ப்பைத் தருவார். அந்தச் சமயத்தில் ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லமாட்டார்கள்,’ என பைபிள் நமக்கு வாக்களிக்கிறது.—ஏசாயா 33:24.
அதுவரைக்கும், தீராத வியாதியை நீங்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும், உங்கள் நிலைமையை சிறந்த விதத்தில் கையாள அநேக நடைமுறையான காரியங்களை நீங்கள் செய்யமுடியும். அடுத்த இதழில் நாம் இவற்றைக் குறித்து சிந்திக்கலாம்.
[பக்கம் 18-ன் படம்]
‘ஏன் கடவுள் என்னைக் கைவிட்டுவிட்டார்?’ என நீங்கள் கேட்கலாம்