இளைஞர் கேட்கின்றனர் . . .
தீராத வியாதியை என்னால் எப்படி சமாளிக்க முடியும்?
ஜேஸனுக்கு வயது 18 தான் ஆகியிருந்தது; ஆனால், அவனுடைய வாழ்வின் இலட்சியங்கள் அனைத்தும் அடையப்பட முடியாதவை போல் தோன்றின. ஒரு கிறிஸ்தவ ஊழியனாய் முழுநேர சேவை செய்ய அவன் எதிர்நோக்கியிருந்தான். ஆனால், தனக்கு கிரான்ஸ் நோய் (Crohn’s disease)—கடுமை தணியாத வலியுண்டாக்கும் குடல்நோய்—இருந்ததை பின்பு தெரிந்துகொண்டான். என்றாலும், இன்று ஜேஸன் தன்னுடைய சூழ்நிலையை வெற்றிகரமாய்ச் சமாளித்து வருகிறான்.
ஒருவேளை நீங்களும் ஏதாவதொரு தீவிர நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கலாம். முந்தின விழித்தெழு! வெளியீடு ஒன்றில், உங்களைப் போன்ற இளைஞர் எதிர்ப்படும் சவால்களைப் பற்றி கலந்தாராயப்பட்டது. a உங்களாலானமட்டும் மிகச் சிறந்த விதத்தில் எப்படி உங்கள் சூழ்நிலையைச் சமாளிக்க முடியும் என்று இப்போது நாம் கவனிப்போம்.
நம்பிக்கையான ஒரு மனநிலை
எந்தவொரு வியாதியையும் வெற்றிகரமாய்ச் சமாளிப்பது, நம்பிக்கையான ஒரு மனநிலையை உட்படுத்துகிறது. பைபிள் கூறுவதாவது: “மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?” (நீதிமொழிகள் 18:14) இருண்ட, எதிர்மறையான சிந்தனைகளும் உணர்வுகளும் குணமடைவதை இன்னும் கடினமாகவே ஆக்குகின்றன. இதை ஜேஸன் உண்மையென கண்டான்.
முதலில், கோபமடைவது போன்ற எதிர்மறையான உணர்வுகளோடு ஜேஸன் போராட வேண்டியிருந்தது; அவை அவனை இன்னும் மனச்சோர்வடையும்படியே செய்தன. எது உதவியது? அவன் விளக்குவதாவது: “மனச்சோர்வு பற்றிய காவற்கோபுரம், விழித்தெழு! கட்டுரைகள் உண்மையிலேயே நான் நம்பிக்கையான ஒரு மனநிலையைக் காத்துக்கொள்ள எனக்கு உதவின. இப்போது, அந்தந்த நாளுக்கான பாடே போதுமானது என்றிருக்க முயலுகிறேன்.” b
அதைப் போன்றே பதினேழு வயது நிரம்பிய கார்மென், தன் சூழ்நிலையிலிருந்து நம்பிக்கை கொள்ள உதவும் அம்சங்களை மட்டுமே பார்ப்பதற்குக் கற்றுக்கொண்டாள். அரிவாள் செல் சோகை வியாதியால் (sickle-cell anemia) அவள் அவதிப்பட்டாலும், தனக்கு மகிழ்ச்சியூட்டும் விஷயங்களை நினைத்துப் பார்க்கிறாள். “என்னைவிட மோசமான நிலையில இருக்கறவங்களையும், என்னால் செய்யமுடிஞ்சளவுக்குக்கூட செய்யமுடியாதவங்களையும் பத்தி நான் நினச்சுப் பாப்பேன்” என்றும், “அப்படி பாக்கும்போது, நன்றியுள்ளவளாய் உணர்றேன்; அதுமட்டும் இல்ல, என்னையவே பாத்துப் பரிதாபப்படவும் மாட்டேன்” என்றும் அவள் கூறுகிறாள்.
‘மனமகிழ்ச்சி நல்ல மருந்து’ என்று நீதிமொழிகள் 17:22, (NW) கூறுகிறது. தீவிர வியாதியில் இருக்கையில் சிரிப்பது பொருத்தமற்றது என்று சிலர் உணரலாம். ஆனால் இனிய நகைச்சுவையும் இனிய நட்பும் உங்கள் மனதுக்குப் புத்துயிரளித்து, வாழ வேண்டும் என்ற உங்கள் ஆவலைப் பெருகச் செய்யலாம். உண்மையில், மகிழ்ச்சி என்பது, தெய்வீக பண்பு; கடவுளுடைய பரிசுத்த ஆவியின் கனிகளில் ஒன்று. (கலாத்தியர் 5:22) நீங்கள் ஒரு வியாதியில் போராடிக்கொண்டிருந்தாலும், மகிழ்ச்சியாக உணருவதற்கு அந்த ஆவி உங்களுக்கு உதவ முடியும்.—சங்கீதம் 41:3.
புரிந்துகொள்ளுதலோடு செயல்படும் டாக்டரைக் கண்டுபிடிப்பது
இளைஞரைப் புரிந்துகொள்ளும் ஒரு டாக்டரைக் கண்டுபிடிப்பது மிகவும் பயன்தரும். ஓர் இளம் நபரினுடைய மன சம்பந்தமான, உணர்ச்சிப்பூர்வமான தேவைகள் வயதுவந்தவரினுடையதிலிருந்து பொதுவாக வேறுபட்டிருக்கின்றன. ஆபத்தான மூளைக் கட்டி சிகிச்சைக்கென ஆஸ்பத்திரிக்குப் போக நேர்ந்தபோது, ஆஷ்லிக்கு வயது பத்துதான் ஆகியிருந்தது. ஆஷ்லியின் டாக்டர் அவளிடம் இரக்கத்துடன் நடந்துகொண்டதோடு, அவளால் புரிந்துகொள்ள முடிந்த விதத்திலும் பேசினார். சிறுபிராயத்தில் தனக்கு வந்திருந்த நோய்தான் ஒரு டாக்டராகும்படி தன்னை உந்துவித்திருந்தது என்பதைப் பற்றியெல்லாம் அவளிடம் சொன்னார். அவளுக்கு அளிக்கப்போகும் சிகிச்சையைப் பற்றி கனிவாகவும், அதே சமயத்தில் தெளிவாகவும் அவளிடம் விளக்கினார். ஆகவே அவள் தான் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதை அறிந்திருந்தாள்.
உங்களை மதித்து, உங்கள் தேவைகளைப் பற்றிப் புரிந்துகொள்ளும் ஒரு டாக்டரைக் கண்டுபிடிக்கவே நீங்களும் உங்கள் பெற்றோரும் விரும்புவீர்கள். எந்தவொரு காரணத்தை முன்னிட்டும் உங்களுக்குக் கிடைக்கும் கவனிப்பால் நீங்கள் சௌகரியமாக உணரவில்லையென்றால், உங்கள் கவலைகளைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கத் தயங்காதீர்கள்.
உங்கள் உடல்நலத்தில் ஊக்கம் கைவிடேல்!
உங்களால் முடிந்த வழிகளிலெல்லாம் உங்கள் வியாதியிலிருந்து குணமடைவதில் ஊக்கம் கைவிடாதிருப்பது மிகவும் அவசியம். உதாரணமாக, உங்கள் நிலைமையைக் குறித்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு விஷயத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ளுங்கள். “அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்” என்று பைபிள் நீதிமொழி ஒன்று குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 24:5) அறியாதவற்றைப் பற்றிய பயத்தை அறிவு அகற்றிவிடுகிறது.
அதோடு, விஷயம் தெரிந்த ஓர் இளம் நபர், தனக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் அதிகளவு ஈடுபாட்டுடன் இருக்க முடியும்; அவரால் எளிதில் ஒத்துழைக்கவும் முடியும். உதாரணமாக, தன் டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்தை, அவர் சொல்லாமல் நிறுத்தக்கூடாது என்று அவர் தெரிந்துகொள்ளலாம். முன்பு குறிப்பிடப்பட்ட கார்மென், அரிவாள் செல் சோகையைப் பற்றிய புத்தகங்களை வாசித்தாள்; அவளைப் போலவே, அவளுடைய பெற்றோரும் வாசித்தார்கள். அவர்கள் வாசித்து அறிந்துகொண்ட விஷயம், கார்மெனுக்கு அதிகளவில் உதவிசெய்யக்கூடிய சிகிச்சை முறையைப் பெற அவர்களுக்கு உதவியது.
ஏதாவதொரு விஷயம் உங்களுக்குத் தெளிவாய் இல்லாவிட்டால்—தேவைப்பட்டால் ஒரு தடவைக்கும் மேலாகவே—திட்டவட்டமான கேள்விகளை உங்கள் டாக்டரிடம் கேளுங்கள். டாக்டரின் காதுக்கு இனியதாய் இருக்குமென்று நீங்கள் நினைக்கும் விஷயத்தைச் சொல்வதைவிட, நீங்கள் நினைக்கும், உணரும் விஷயங்களை நேர்மையுடன் விளக்குங்கள். ஏனெனில், “ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்” என்று பைபிள் கூறுகிறது.—நீதிமொழிகள் 15:22.
ஒரு கட்டத்தில், ஆஷ்லி தன்னுடைய வியாதியைப் பற்றி யாருடனும் பேசப்பிடிக்காதவளாகத் தோன்றினாள். அவளுடைய அம்மாவிடம் மட்டுமே அதைப் பற்றி பேசுவாள். ஞானமான ஒரு சமூக சேவகி, “ஏம்மா, உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லலைன்னு நீ நினைக்கிறியாம்மா?” என்று அவளிடம் தனியாகக் கேட்டார். அப்படி நினைப்பதாகவே ஆஷ்லி அவரிடம் மனம்விட்டுச் சொன்னாள். ஆகவே, அந்தப் பெண்மணி ஆஷ்லியிடம், அவளுடைய மருத்துவ ரிக்கார்டுகளைக் காட்டி அவற்றையெல்லாம் பற்றி அவளுக்கு விளக்கமாகச் சொன்னாள். ஆஷ்லியைப் பற்றி அவளுடைய பெற்றோருடன் அதிகம் பேசுவதைக் காட்டிலும், அவளிடமே நேரடியாகப் பேச அதிக நேரமெடுத்துக்கொள்ளும்படியாக அந்தப் பெண்மணி டாக்டர்களைக் கேட்டுக்கொண்டார். முடிவில் தன் மனதில் இருந்ததை வெளிப்படையாய்ச் சொன்னதன் மூலம், தனக்குத் தேவையான உதவியை ஆஷ்லியால் பெறமுடிந்தது.
உடன் இருப்பவர்களிடமிருந்து உதவி
ஒரு குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினராவது கடுமையாய் வியாதிப்பட்டிருந்தால், அது ஒரு குடும்ப விவகாரமாகிறது, ஆகவே குடும்பத்தின் ஒன்றுபட்ட முயற்சியைத் தேவைப்படுத்துகிறது. ஆஷ்லிக்கு உதவ, அவளுடைய குடும்பமும் அந்தக் கிறிஸ்தவ சபையும் ஒன்றுதிரண்டன. அவள் ஆஸ்பத்திரியில் இருக்கிறாள் என்ற செய்தி அந்தச் சபைக்கு அவ்வப்பொழுது நினைப்பூட்டப்பட்டது. சபை உறுப்பினர் தவறாமல் அவளைப் போய்ப் பார்த்தனர்; அந்தக் குடும்பம் வழக்கமுறைப்படி மீண்டும் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தது வரையிலுமாக வீட்டுவேலையிலும், சாப்பாடு தயாரித்தலிலும் அவர்கள் உதவி செய்தனர். ஆஷ்லியின் வியாதி, அவளுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து அளவளாவ முடியாதளவுக்கு தீவிரமாய் இல்லாமல், சற்று குறைவாகும்போது, சபையிலிருந்த சிறுபிள்ளைகளும்கூட ஆஸ்பத்திரியில் ஆஷ்லியைப் போய்ப் பார்த்தனர். இது ஆஷ்லிக்கு நன்றாயிருந்ததோடு, அவளுடைய இளம் நண்பர்களுக்கும் நன்றாயிருந்தது.
என்றாலும், மற்றவர்கள் உங்களுக்கு உதவுவதற்கு முன்னதாகவே, உங்களுக்கு உதவி தேவை என்று அவர்கள் அறிந்திருக்க வேண்டும். கார்மென், உணர்ச்சிப்பூர்வ, ஆவிக்குரிய உதவிக்காக பெற்றோரையும் சபை மூப்பர்களையுமே நம்பிக் காத்திருக்கிறாள். பள்ளியிலிருக்கும் உடன் கிறிஸ்தவர்களும் தனக்கு உதவியாக இருப்பார்களென்று உறுதியுடன் எதிர்பார்க்கிறாள். “அவங்கதான் என்னை ரொம்ப கரிசனையோட பாத்துக்குறாங்களே; அதனால, எனக்கு ஒரு குறையுமில்ல” என்று கார்மென் சொல்கிறாள்.
உங்களுக்குப் பயன்தரும் வகையிலான மருத்துவ, நிதி சம்பந்தமான ஆலோசனையையும் தனிப்பட்ட உதவிகள் சிலவற்றையும் உங்கள் பள்ளி நிர்வாகம் அளிக்கலாம். உதாரணமாக, ஆஷ்லியின் ஆசிரியை, அவளுக்குக் கடிதம் எழுதவும் அவளைப் போய்ப் பார்க்கவும் தன் வகுப்பை உற்சாகப்படுத்தினார். நீங்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளைப் பற்றி உங்கள் ஆசிரியர்கள் புரிந்துகொள்ளாதிருந்தால், உங்கள் சூழ்நிலையைப் பற்றி பள்ளி நிர்வாகத்திடம் உங்கள் பெற்றோர் மரியாதையுடன் கலந்தாலோசிக்க வேண்டியிருக்கலாம்.
மனதையும் உடலையும் ஞானமாய் பயன்படுத்துவீர்
உங்களுக்குக் கடும் வியாதி இருந்தால், இருக்கின்ற கொஞ்சநஞ்ச சக்தி அனைத்தையுமே குணமடைவதற்காக பயன்படுத்துவதால், உங்களால் வேறொன்றுமே செய்ய முடியாமல் போகலாம். நீங்கள் ஒன்றுமே செய்ய முடியாதளவுக்கு பலவீனமடையாமல் இருந்தால், ஆக்கபூர்வமான பலவற்றை உங்களால் செய்ய முடியும். உங்கள் உயிருக்காகப் போராடுவது எப்படியிருக்கும் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்துக்கான ஆராய்ச்சியின்போது, ஆசிரியர் ஜில் க்ரெமெண்ட்ஸ் தான் கவனித்தவற்றைப் பற்றிக் குறிப்பிட்டதாவது: “இரண்டு ஆண்டுகளாக, ஆஸ்பத்திரி வராந்தாவில் இங்குமங்குமாய் நடமாடிச் சென்றபோது, பல சிறார்கள் டிவி பெட்டிகளையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டது என்னை வருத்தமடையச் செய்திருக்கிறது. இப்படிப்பட்ட இளைஞர்கள் அதிகமான விஷயங்களை வாசித்து அறிந்துகொள்ளும்படி நாம் உற்சாகப்படுத்த வேண்டும். ஒருவருடைய மூளைக்கு வேலை கொடுக்க ஆஸ்பத்திரி படுக்கை மிகச் சிறந்ததோர் இடமாய் இருக்கிறது.”
நீங்கள் ஆஸ்பத்திரியில் இருந்தாலும் சரி வீட்டில் இருந்தாலும் சரி, உங்கள் மனத்திறத்திற்கு பயிற்சியளிப்பது பெரும்பாலும் நீங்கள் நன்றாக உணர உங்களுக்கு உதவக்கூடும். கடிதங்களையோ, கவிதைகளையோ எழுதிப்பார்க்க முயன்றிருக்கிறீர்களா? சித்திரம் வரைவதையோ, வண்ண ஓவியம் தீட்டுவதையோ முயன்றிருக்கிறீர்களா? உங்கள் சூழ்நிலை அனுமதித்தால், ஓர் இசைக்கருவியை இசைக்கக் கற்றுக்கொள்வதைப் பற்றியென்ன? குறைந்தளவான உடல்நலம் இருந்தாலும், பற்பல சாத்தியங்கள் இருக்கின்றன. கடவுளிடம் ஜெபிக்கும் பழக்கத்தையும், அவருடைய வார்த்தையாகிய பைபிளை வாசிக்கும் பழக்கத்தையும் வளர்ப்பதே உங்களால் செய்ய முடிந்த மிகச் சிறந்த செயலாகும்.—சங்கீதம் 63:6.
உங்கள் சூழ்நிலை அனுமதித்தால், பொருத்தமான உடல் உழைப்பைக் கேட்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் நீங்கள் நன்றாய் உணர உங்களுக்கு உதவும். இந்தக் காரணத்தினாலேயே, இளம் நோயாளிகளுக்கு, உடற்பயிற்சி சார்ந்த சிகிச்சைமுறைகளும் மருத்துவமனைகளில் அளிக்கப்படுகின்றன. பல நோயாளிகளின் விஷயத்தில், முறைப்படியான உடற்பயிற்சி உடல் சார்ந்த நிவாரணத்தை மேம்படுத்துவதோடு, மனம் சார்ந்த நிவாரணத்தையும் அளிக்க உதவுகிறது.
நம்பிக்கை இழந்துவிடாதீர்!
துன்பப்புயலில் சிக்கிக்கொண்டபோது, இயேசு கடவுளிடம் ஜெபித்தார்; அவரில் தம் நம்பிக்கையை வைத்தார்; வேதனைக் கடலில் மூழ்கிவிடுவதற்கு மாறாக, தமக்கு முன் வைக்கப்பட்டிருந்த எதிர்கால சந்தோஷக் கரையைச் சென்றடைவதற்காக தம் கவனத்தை ஒருமுகப்படுத்தினார். (எபிரெயர் 12:2) தாம் பட்ட பாடுகளிலிருந்து பல காரியங்களை அவர் கற்றுக்கொண்டார். (எபிரெயர் 4:15, 16; 5:7-9) அவருக்கு அளிக்கப்பட்ட உதவியையும் உற்சாகத்தையும் ஏற்றுக்கொண்டார். (லூக்கா 22:43) தமக்கிருந்த அசௌகரியத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதற்கு மாறாக, மற்றவர்களுடைய நலனில் தம் கவனத்தைச் செலுத்தினார்.—லூக்கா 23:39-43; யோவான் 19:26, 27.
உங்கள் வியாதி கடுமையாய் இருந்தாலும்கூட, மற்றவர்களை உற்சாகப்படுத்தும் ஓர் ஏதுவாக நீங்கள் இருக்கலாம். பள்ளி அறிக்கை ஒன்றில், ஆஷ்லியின் அக்காவான அபிகேய்ல் எழுதினதாவது: “நான் மெச்சத்தக்க ஒரு நபர் யாரென்றால், அது என் தங்கையே. ஆஸ்பத்திரிக்குச் சென்று சிறைவழி மருந்துகளையும், ஏராளமான ஊசிமருந்துகளையும் எடுத்துக்கொண்டவளாய்த் திரும்பிவந்தாலும், வெளியே வரும்போது, சிரித்த முகத்துடனேயே வருவாள்!” c
ஜேஸன் தன் இலட்சியங்களை அடைவதில் நம்பிக்கையிழந்துவிடவில்லை. அவற்றை ஏதோவொரு விதத்தில் மாற்றியமைத்துக்கொண்டான். இப்போது அவனுடைய இலட்சியம், கடவுளுடைய ராஜ்ய பிரசங்கிப்பாளர்களுக்கான தேவை எங்கு அதிகமாய் இருக்கிறதோ, அங்குச் சென்று ஊழியம் செய்ய வேண்டும் என்பதே. ஜேஸனின் விஷயத்தைப் போலவே, நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறாமல் போகலாம். அளவுக்கு மிஞ்சி கவலைகொள்ளாமலும், அதே சமயத்தில் அலட்சியமாய் இராமலும், உங்கள் சொந்த வரைமுறைக்குட்பட்டு வாழக் கற்றுக்கொள்வதே முக்கியம். உங்களால் செய்ய முடிந்த மிகச் சிறந்தவற்றைச் செய்வதற்கான ஞானத்தையும் பலத்தையும் அருளும்படி யெகோவாவின்மீது சார்ந்திருங்கள். (2 கொரிந்தியர் 4:16; யாக்கோபு 1:5) இந்தப் பூமி, ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாத’ ஒரு பரதீஸாகப் போகிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். (ஏசாயா 33:24) ஆம், நீங்கள் மீண்டும் ஒரு நாள் ஆரோக்கியமடைவீர்கள்!
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு! ஏப்ரல் 22, 1997, பக்கங்கள் 17-19-ஐக் காண்க.
b காவற்கோபுரம், ஜனவரி 1, 1992, பக்கங்கள் 14, 15; மார்ச் 1, 1990, பக்கங்கள் 3-9, (ஆங்கிலம்); விழித்தெழு!, நவம்பர் 8, 1988, பக்கங்கள் 10-24; நவம்பர் 8, 1987, பக்கங்கள் 12-16, (ஆங்கிலம்) ஆகியவற்றைக் காண்க.
c உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் வெளியிடப்பட்ட குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தில் பக்கங்கள் 116-27-ஐயும் காண்க.
[பக்கம் 26-ன் படம்]
அக்காவான அபிகேய்ல், ஆஷ்லியின் தைரியத்தை மெச்சுகிறார்