உயிருடனிருப்பதில் இப்போது எனக்கு சந்தோஷம்!
“நீ சாகப்போகிறாய் என்பது உனக்குத் தெரியும்தானே?” என டாக்டர் கேட்டார். இதற்குமுன், இரண்டு முறை சாவைத் தழுவ விரும்பினேன். ஆனால் இந்த முறை அல்ல. ஏன் என்று சொல்கிறேன்.
நியூயார்க், லாங் தீவு, புறநகர்ப்பகுதியில் நான் வளர்ந்தேன், என் அப்பா கார் பந்தயத்தில் பேரும் புகழும் பெற்றவர். போட்டிகளில் வெற்றி முத்திரை பதித்த பரிபூரணவாதி அவர். முன்கோபி, அவரைப் பிரியப்படுத்துவது பெரும்பாடு. மறுபட்சத்தில் அம்மா சாந்தமும் அமைதியுமே உருவானவர். அப்பா கார் பந்தயத்திற்கு சென்றபோதெல்லாம் அம்மாவின் அடிவயிறு கலங்கியது, அந்தக் காட்சியைப் பார்ப்பதற்குக்கூட அவருக்கு தெம்பு இருந்ததில்லை.
என் அண்ணனும் நானும் சிறு வயதிலிருந்தே வீட்டில் வாயில்லா பூச்சிகளாக இருக்க கற்றுக்கொண்டோம், அம்மாவோ ஏற்கெனவே அப்படித்தான் இருந்தார்கள். ஆனால் அது சாமானியமான காரியமாய் இல்லை. நாங்கள் எல்லாரும் அப்பாவைப் பார்த்து மிரண்டோம். என்னால் எதையும் உருப்படியாக செய்ய முடியாதென்ற ஒரு மனநிலை என்னுள் உருவானதுதான் அதன் பாதிப்பு. பருவமடைந்த கொஞ்ச காலத்திற்குள் எங்கள் குடும்ப “நண்பர்” ஒருவர் என்னிடம் பாலின சம்பந்தமாக தவறாக நடந்துகொண்டார், அப்போது எனக்கிருந்த கொஞ்சநஞ்ச தன்மதிப்பும் அடிமட்டத்திற்கு சென்றது. அவமானத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தேன். அப்போதுதான் முதன்முறையாக சாவைத் தழுவ விரும்பினேன்.
எதற்கும் லாயக்கில்லாதவள்போல், அன்பை ருசிபார்க்காதவள்போல் நான் உணர்ந்தேன்; குறைந்த தன்மதிப்புள்ள இளம் பெண்களுக்கு பொதுவாக இருக்கும் உணவுக் கோளாறு என்னையும் பாதித்தது. திகில் கலந்த இன்பத்தைத் தேடி, போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, தகாத பாலுறவுகொண்டு, கருக்கலைப்புகள் செய்வதையே என் வாழ்க்கையாய் அமைத்துக்கொண்டு, ஒரு பாடல் வரி சொல்லும் விதமாக, “தப்பான இடங்களிலெல்லாம் அன்பைத் தேடி அலைந்தேன்.” மோட்டார்சைக்கிள் ஓட்டிக்கொண்டும், கார் பந்தயத்தில் கலந்துகொண்டும், ஸ்க்யூபா டைவிங் செய்துகொண்டும், சூதாடுவதற்கென்றே அவ்வப்போது லாஸ் வேகாஸுக்குச் சென்றுகொண்டும் இருந்தேன். ஒரு ஜோசியக்காரர் பேச்சைக் கேட்டு, ஆவியுலகத் தொடர்பின் ஆபத்தை உணராமல் விளையாட்டுக்காக ஊஜா பலகையால் பேய்களுடன் பேசினேன்.—உபாகமம் 18:10-12.
அதுமட்டுமல்ல, திகில் வேண்டுமென விரும்பியதால் போதைப்பொருட்கள் விற்பனை, கடைத் திருட்டு போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டேன். பாசத்திற்காகவும் ஒப்புதலுக்காகவும் ஏங்கியதால், விரல்விட்டு எண்ண முடியாத அத்தனை வாலிபப் பையன்களுடன் நட்பும் காதலும் மலர்ந்தன. ஆக மொத்தத்தில் என் வாழ்க்கைப் படகு அழிவைக்காண மிதந்துசென்றுகொண்டிருந்தது.
ஒரு இரவு, பந்தயச்சாலையில் கார் பழுதுபார்க்கும் இடத்தில் மதுபானத்தையும் போதைப்பொருட்களையும் சாப்பிட்ட பிறகு, காரில் என்னை வீட்டில் விடும்படி என் நண்பனை அனுமதிப்பதன்மூலம் முட்டாள்தனமாய் செயல்பட்டுவிட்டேன். முன்னிருக்கையில் முதலில் நான் போதையில் மயங்கிவிழுந்தேன், அதன்பின் என் நண்பனும் மயங்கிவிழுந்தான். கார் ஏதோவொன்றில் பயங்கரமாக மோதியபோது நான் திடுக்கிட்டு விழித்தேன். நிறைய காயங்களுடன் நான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன், ஆனால் படிப்படியாக குணமானேன். வலது முழங்கால் மாத்திரம் சேதமடைந்திருந்தது.
மேம்பட்ட ஒன்றில் நாட்டம்
என் சொந்த உயிரை நான் மதிக்கவில்லையென்றாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குறித்தும் பிள்ளைகளுக்கும் மிருகங்களுக்கும் இருக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் உரிமைகளைக் குறித்தும் நான் அதிக அக்கறையாயிருந்தேன். மேம்பட்ட ஓர் உலகுக்காக நான் ஏங்கினேன், அப்படிப்பட்ட ஒன்றை உருவாக்குவதில் உதவியாயிருப்பதற்கு அநேக அமைப்புகளில் சேர்ந்தேன். ஒரு மேம்பட்ட உலகைக் காண எனக்கு விருப்பம் இருந்ததால்தான் என்னுடன் வேலைபார்த்த யெகோவாவின் சாட்சி ஒருவர் சொன்ன விஷயங்கள் என்னைக் கவர்ந்தன. வேலையில் பிரச்சினை ஏற்பட்டபோதெல்லாம் அவர் வெறுப்போடு “இந்த உலகம் இருக்கே” என சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் எதை அர்த்தப்படுத்துகிறார் என நான் கேட்டபோது, விரைவில் ஒருநாள் வாழ்க்கையில் எந்தப் பிரச்சினைகளுமே இருக்காது என விளக்கினார். நான் அவரை எப்போதுமே உயர்வாக மதித்ததால் ஆர்வத்துடன் அவர் சொன்னதைக் கேட்டேன்.
எங்களுக்கிருந்த தொடர்பு விட்டுப்போனது சோகமான விஷயம், ஆனால் அவர் சொல்லிய காரியங்களை நான் மறக்கவே இல்லை. கடவுளைப் பிரியப்படுத்துவதற்காக ஒருநாள் என் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்குமென உணர்ந்தேன். ஆனால் அதற்கு நான் தயாராயில்லை. இருந்தபோதிலும், என்னைக் கல்யாணம் செய்துகொள்ளவிருந்த ஆட்களிடம், நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறுவேன் என்றும் அவர்களுக்கு அது பிடிக்கவில்லையென்றால் இப்போதே பிரிந்துவிடலாம் என்றும் சொல்லிவந்தேன்.
அதன் விளைவாக, என் கடைசி தோழன், எனக்கு எதில் பிரியமோ அதில்தான் தனக்கும் பிரியம் எனச் சொல்லி நான் கற்றுக்கொண்டதைக் குறித்து அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினான். ஆகவே நாங்கள் சாட்சிகளைத் தேட ஆரம்பித்தோம். நாங்கள் அவர்களை சந்திப்பதற்கு மாறாக அவர்கள் எங்களை என் வீட்டிலேயே சந்தித்தார்கள். பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் கடைசியில் என் நண்பன் படிப்பை நிறுத்திவிட்டு தன் மனைவியுடன் திரும்ப வாழ தீர்மானித்தான்.
என் பைபிள் படிப்பு பெரும்பாலும் ஒழுங்கற்று நடந்தது. உயிரை யெகோவா எவ்வளவு பரிசுத்தமாய் கருதுகிறார் என புரிந்துகொள்வதற்கு எனக்கு சமயம் எடுத்தது. என் நினைப்பை நான் மாற்றிக்கொண்டபோது, வானில் தலைகுப்புறப் பாய்ந்திறங்குவதையும் புகைபிடிப்பதையும் விட்டுவிட வேண்டிய தேவையை நான் உணர்ந்தேன். உயிரை நான் அதிகமாக மதிக்க ஆரம்பித்ததால், வாழ்க்கையை நல்ல விதத்தில் அமைத்துக்கொண்டு இனியும் உயிருக்கு ஆபத்தளிக்கும் எதையும் செய்யாமலிருக்க தயாரானேன். அக்டோபர் 18, 1985-ல், யெகோவாவிற்கு என்னை ஒப்புக்கொடுத்து தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றேன். ஆனால் சீக்கிரத்தில் என் உயிர் ஊசலாடும் என்பதை நான் அப்போது அறியவில்லை.
மறுபடியும் சாக விரும்புதல்
ஒருசில மாதங்களுக்குப் பிற்பாடு, மார்ச் 22, 1986 இரவன்று, வீட்டிற்கு வெளியே நின்ற என் காரிலிருந்து சலவைத் துணிகளை எடுத்துக்கொண்டிருந்தபோது, வேகமாய் வந்த மற்றொரு கார் என்மீது மோதி 30 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு என்னை தரதரவென்று இழுத்துச்சென்றது! என்னை மோதி இழுத்துச்சென்ற கார் நிற்காமலேயே சென்றுவிட்டது. எனக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டபோதும், அந்த முழு சம்பவத்தின்போதும் நான் சுய உணர்வுடன் இருந்தேன்.
இருள் நிறைந்த சாலையில் முகம் குப்புற விழுந்தபடி, என் மனதில் இருந்ததெல்லாம் இன்னொரு கார் என்னை மோதிவிடுமோ என்ற பயம்தான். அது மரண வேதனையாக இருந்தது, என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அதனால் நான் செத்துப்போக வேண்டுமென யெகோவாவிடம் ஜெபம் செய்துகொண்டே இருந்தேன். (யோபு 14:13) நர்ஸாக இருந்த ஒரு பெண் அங்கு தற்செயலாக வந்தார்கள். என் கால்கள் கண்டபடி சிதைந்திருந்ததால் அவற்றை கொஞ்சம் சரிப்படுத்தும்படி நான் அவர்களிடம் சொன்னேன். அவர்களும் அதைச் செய்தார்கள், ஒரு காலில் தாறுமாறாக எலும்பு முறிந்ததால் ஏற்பட்ட இரத்தக்கசிவை நிறுத்துவதற்கு அவர்களது ஆடையைக் கிழித்து கட்டுப் போட்டார்கள். என் பூட்ஸ் இரத்தம் நிரம்பிய நிலையில் சற்று தொலைவில் கிடந்தது!
அவ்வழியே சென்றோர், நான் சாலையில் நிற்கும்போதுதான் விபத்து நடந்ததென்பதை அறியாமல் என் கார் எங்கே என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் எவ்வளவு தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டேன் என்பதை அறியாமல், இன்னும் என் காருக்குப் பக்கத்தில் இருப்பதாகவே யோசித்துக்கொண்டேன்! அங்குவந்த மருத்துவர்கள் நான் சாகப்போவதாக நினைத்துக்கொண்டார்கள். ஆகவே துப்பறியும் போலீஸை வரவழைத்தார்கள், ஏனெனில் வாகன விபத்தில் ஒருவரது உயிர்போனால் அது பெருங்குற்றம். டிரைவர் கடைசியில் கைதானார். அப்பகுதி குற்றச்செயல் நடந்த இடமாக தடுப்பெல்லை போடப்பட்டது; என் கார் அத்தாட்சிக்காக பறிமுதல் செய்யப்பட்டது. என் காரின் ஒருபுறத்திலிருந்த இரு கதவுகளுமே உடைந்து கிடந்தன.
நெருக்கடியை எதிர்ப்படுதல்
இதற்கிடையில், அப்பகுதியிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, ஆக்ஸிஜன் மாஸ்க் வழியாகக்கூட “இரத்தம் வேண்டாம், இரத்தம் வேண்டாம். நான் யெகோவாவின் சாட்சி!” என திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தேன். எனக்கு கடைசியாக ஞாபகமிருப்பது, நர்ஸுகள் என் ஆடையை பெரிய கத்திரிக்கோலால் வெட்டியெடுத்ததையும் அறுவை சிகிச்சைக் குழு பரபரப்பில் ஒருவரையொருவர் சத்தமாக உத்தரவிட்டுக்கொண்டிருந்ததும்தான்.
கண் விழித்தபோது, இன்னும் உயிருடனிருப்பதை நினைத்து வியப்படைந்தேன். மயக்கம் அவ்வப்போது தெளிந்தது. நான் நினைவுக்குவந்த சமயத்திலெல்லாம் எனக்கு பைபிளைக் கற்பித்த தம்பதியினரைக் கூப்பிடுமாறு என் குடும்பத்தாரிடம் சொன்னேன். நான் ஒரு சாட்சியாக மாறியதில் என் குடும்பத்தாருக்கு விருப்பமில்லை, ஆகவே அந்தத் தம்பதியினருக்கு தகவலளிக்க சௌகரியமாக “மறந்துவிட்டனர்.” ஆனால் நான் விடாப்பிடியாய் இருந்தேன்—ஒவ்வொரு முறை கண் விழித்தபோதும் முதலில் நான் அதைத்தான் கேட்பேன். கடைசியில் அதற்குப் பலன் கிடைத்தது, ஒருநாள் கண் விழிக்கையில் அந்தத் தம்பதியினர் அங்கிருந்தனர். நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன்! ஒருவழியாக, நான் எங்கிருக்கிறேன் என்பது யெகோவாவின் சாட்சிகளுக்கு தெரிந்துவிட்டது.
ஆனாலும் என் சந்தோஷம் நீண்டகாலம் நிலைத்திருக்கவில்லை, ஏனெனில் என் இரத்த அளவு குறைய ஆரம்பித்தது, ஜூரம் நெருப்பாய் கொதித்தது. சீழ் உண்டாக்கலாமென சந்தேகிக்கப்பட்ட எல்லா எலும்புகளும் அகற்றப்பட்டு நான்கு கம்பிகள் என் காலில் பொருத்தப்பட்டன. மறுபடியும் ஜூரம் அதிகமானது, என் கால் கறுப்பானது. கால் சதை அழுக ஆரம்பித்திருந்தது, என் காலை வெட்டி எடுத்தால்தான் உயிர் பிழைக்கமுடியும்.
இரத்தம் ஏற்றிக்கொள்ள வற்புறுத்தப்படுதல்
என் இரத்த அளவு ஒரேயடியாக குறைந்துவிட்டதால், இரத்தம் ஏற்றிக்கொள்ளாமல் அறுவை சிகிச்சை செய்வது முடியாத காரியமாக கருதப்பட்டது. என்னைக் கட்டாயப்படுத்துவதற்கு டாக்டர்களும், நர்ஸுகளும், குடும்ப அங்கத்தினர்களும், பழைய நண்பர்களும் அழைக்கப்பட்டனர். பின், என் அறை கதவருகே இரகசியப் பேச்சு ஆரம்பித்தது. டாக்டர்கள் எதையோ திட்டம்போட்டுக்கொண்டிருந்தனர் என்பது மாத்திரம் எனக்குப் புரிந்தது, ஆனால் அது என்ன என்பதுதான் புரியவில்லை. நல்லவேளையாக, அந்தச் சமயத்தில் என்னைப் பார்க்க வந்த ஒரு சாட்சி, டாக்டர்கள் எனக்கு வலுக்கட்டாயமாக இரத்தம் ஏற்றுவதைக் குறித்து திட்டமிட்டுக்கொண்டிருந்ததைக் கேட்டார். அவர் உடனடியாக உள்ளூர் கிறிஸ்தவ மூப்பர்களைத் தொடர்புகொண்டார், அவர்கள் என் உதவிக்காக வந்தனர்.
என் மனநிலையை சோதிக்க ஒரு மனநோய் மருத்துவர் வரவழைக்கப்பட்டார்; தெளிவாகவே அதன் நோக்கம், நான் சுய உணர்வோடு இல்லை என்பதாக சொல்லி இவ்வாறு என் விருப்பங்களை புறக்கணித்துவிடலாம் என்பதே. இந்தத் திட்டம் தோல்வியடைந்தது. அதன்பின், தனக்குத்தானே இரத்தம் ஏற்றியிருந்த ஒரு பாதிரி, அதில் தப்பேதுமில்லை என சொல்லி என் மனதை மாற்ற வரவழைக்கப்பட்டார். இறுதியில், வலுக்கட்டாயமாக எனக்கு இரத்தம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை என் குடும்பத்தார் நாடினர்.
அதிகாலை சுமார் இரண்டு மணிக்கு, ஒரு டாக்டர் குழு, நீதிமன்ற சுருக்கெழுத்தாளர், அமீனா (bailiff), மருத்துவமனை தரப்பு வக்கீல்கள், ஒரு நீதிபதி என அனைவரும் என் ரூமுக்குள் நுழைந்தார்கள். விசாரணை ஆரம்பமானது. எனக்கு எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லை, பைபிள் இல்லை, வக்கீல் இல்லை, போதாக்குறைக்கு வலியைக் குறைக்க மிக ஸ்ட்ராங் மருந்துகள் கொடுக்கப்பட்டிருந்தன. தீர்ப்பு? நீதிமன்ற உத்தரவை நீதிபதி புறக்கணித்துவிட்டார்; முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு யெகோவாவின் சாட்சிகளது உத்தமத்தன்மையால் தான் கவரப்பட்டதாகச் சொன்னார்.
எனக்கு சிகிச்சையளிக்க நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த காம்டனிலுள்ள ஒரு மருத்துவமனை ஒப்புக்கொண்டது. நியூ யார்க்கிலுள்ள மருத்துவமனை நிர்வாகம் பொல்லாத கோபமுற்று, எனக்கு வலிப்போக்கியும் உட்பட எந்தவித சிகிச்சையும் அளிக்க மறுத்துவிட்டது. நியூ ஜெர்ஸி மருத்துவமனைக்கு என்னை எடுத்துச்செல்லவிருந்த ஹெலிகாப்டரையும் தரையிறங்கவிடாமல் செய்தது. நல்லவேளையாக, ஆம்புலன்ஸில் நான் எடுத்துச்செல்லப்பட்டதால் உயிர்தப்பினேன். அங்கு சென்ற பிறகு, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டிருந்த வார்த்தைகளைக் கேட்டேன்: “நீ சாகப்போகிறாய் என்பது உனக்குத் தெரியும்தானே?”
அறுவை சிகிச்சை—வெற்றிபெறுதல்
நான் அந்தளவுக்கு பலவீனமாய் இருந்ததால், அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிப்பதற்காக ஒப்புதல் ஃபார்மில் X குறியிடுவதற்குக்கூட ஒரு நர்ஸின் உதவி எனக்குத் தேவைப்பட்டது. என் வலது கால் முழங்காலுக்கு மேல் வெட்டியெடுக்கப்பட வேண்டியிருந்தது. அதன்பின், என் ஹீமோக்ளோபின் அளவு 2-க்கும் கீழ் குறைந்தது, மூளை படு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கலாமென டாக்டர்கள் சந்தேகித்தார்கள். மருத்துவமனை நுழைவு சீட்டில் என் பெயரைப் பார்த்துவிட்டு, என் காதுகளில் “வர்ஜின்யா, வர்ஜின்யா,” என அவர்கள் கூப்பிட்டபோது என்னிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்காததால் அவர்கள் இவ்வாறு நினைத்தனர். ஆனால் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு “ஜின்ஜர், ஜின்ஜர்,” என கூப்பிட்டதைக் கேட்டு நான் கண் விழித்தபோது அதுவரை சந்தித்திராத ஒரு நபர் அங்கு நிற்பதைப் பார்த்தேன்.
நியூ ஜெர்ஸியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது ஓர் உள்ளூர் சபையைச் சேர்ந்தவர்தான் பில் டர்பன். என் செல்லப்பெயர் ஜின்ஜர் என்பதையும் என் சிறு வயது முதற்கொண்டே அனைவருமே என்னை அவ்வாறுதான் அழைத்தார்கள் என்பதையும் நியூ யார்க்கிலுள்ள சாட்சிகளிடமிருந்து அவர் அறிந்துகொண்டார். மூச்சுக்கருவி பொருத்தப்பட்டு சிறிதும் பேச முடியாத நிலையில் நான் இருந்ததால், கண் சிமிட்டுவதன் மூலமாகவே பதிலளிக்கும் விதத்தில் அவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார். “உங்களை தொடர்ந்து வந்து பார்த்துச்செல்கிறேன், நியூ யார்க்கிலுள்ள சாட்சிகளுக்கும் உங்களைப் பற்றிய தகவல் சொல்கிறேன், இதில் உங்களுக்கு சம்மதம்தானே?” என அவர் கேட்டார். படபடவென கண் சிமிட்டினேன்! என்னைப் பார்க்க எந்த சாட்சியும் வரக்கூடாதென என் குடும்பத்தார் சொல்லிவிட்டனர், ஆனாலும் சகோதரர் டர்பின் துணிந்து என் ரூமுக்குள் இரகசியமாக நுழைந்தார்.
ஆறு மாதங்கள் மருத்துவமனையில் இருந்த பிறகும் சாப்பிடுவது, பல் துலக்குவது போன்ற அன்றாட வேலைகளைத்தான் என்னால் சொந்தமாக செய்ய முடிந்தது. இறுதியில் எனக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது; கைத்தடியால் சிறிது நடமாட ஆரம்பித்தேன். செப்டம்பர் 1986-ல் நான் மருத்துவமனையை விட்டு என் அப்பார்ட்மெண்டிற்கு வந்த பிறகு, கிட்டத்தட்ட இன்னொரு ஆறு மாதங்களுக்கு எனக்கு உதவியாய் இருக்க ஒரு ஆயா என்னுடன் தங்கினார்கள்.
சகோதர சகோதரிகள் அளித்த உதவி
வீட்டிற்கு திரும்புவதற்கு முன்னரே, கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் ஒரு பாகமாக இருப்பதன் அர்த்தமென்ன என்பதை நான் உண்மையிலேயே நன்றியுணர்வோடு போற்ற ஆரம்பித்தேன். (மாற்கு 10:29, 30) சகோதர சகோதரிகள் என் உடல்நலத் தேவைகளை மாத்திரமல்லாமல் ஆன்மீக தேவைகளையும் அன்பாக கவனித்துக்கொண்டனர். அவர்களது அன்பான உதவியால், நான் மீண்டும் கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன்; காலப்போக்கில் துணைப் பயனியர் சேவையிலும் பங்குகொண்டேன்.
கார் டிரைவர்மீது தொடரப்பட்ட உரிமையியல் வழக்கிற்கு சில மாதங்களிலேயே தீர்ப்பு கிடைத்தது; இதில் என் வக்கீலுக்கே ஆச்சரியம், ஏனென்றால் இப்படிப்பட்ட வழக்குகள் வெறுமனே நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்கே பொதுவாக ஐந்து வருடங்களாவது பிடிக்கும். கிடைத்த அபராதத் தொகையைக்கொண்டு எனக்கேற்றபடி அதிக சௌகரியமாயிருந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து சென்றேன். அதோடுகூட, சக்கர நாற்காலியை ஏற்றும் வசதியையும் கைகளால் இயக்கும் வசதியையும் கொண்ட ஒரு வேன் வாங்கினேன். இவ்வாறு 1988-ல் நான் ஒழுங்கான பயனியர் ஊழியம் ஆரம்பித்து, அதுமுதற்கொண்டு ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 1,000 மணிநேரங்கள் ஊழியத்தில் செலவிடுகிறேன். கடந்து பல வருடங்களாக, வட டகோடா, அலபாமா, கென்டகி போன்ற நகரங்களில் ஊழியம் செய்து மகிழ்ச்சி கண்டிருக்கிறேன். இதுவரை என் வேனில் 1,50,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக பயணம் செய்திருக்கிறேன், பெரும்பாலும் கிறிஸ்தவ ஊழியத்திற்காகத்தான்.
எனது எலக்ட்ரிக் மூன்றுசக்கர ஸ்கூட்டரில் செல்கையில் அநேக வேடிக்கையான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இரு முறை பயணக் கண்காணிகளின் மனைவிகளோடு செல்லும்போது நான் விபத்துக்குள்ளானேன். அலபாமாவில் ஒருமுறை, ஒரு சிறிய ஓடையைத் தாண்டிவிடலாம் என தப்புக்கணக்கு போட்டு ஸ்கூட்டரில் பாய்ந்தேன், ஆனால் தரையில் விழுந்து மண்ணினால் மூடப்பட்டதுதான் மிச்சம். ஆனாலும் நகைச்சுவை உணர்வோடு இருப்பதும் அளவுக்கதிகமாக என்னைப் பற்றியே யோசிக்காமல் இருப்பதும் நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள எனக்கு உதவியிருக்கின்றன.
உறுதியான நம்பிக்கையால் நிலைகுலையாதிருத்தல்
சிலசமயங்களில் உடல்நலப் பிரச்சினைகள் தாங்க முடியாதவையாய் இருந்திருக்கின்றன. ஒருசில வருடங்களுக்குமுன் இரு முறை நான் பயனியர் ஊழியம் செய்வதை நிறுத்த வேண்டியிருந்தது, ஏனென்றால் எனது இன்னொரு காலையும் வெட்ட வேண்டியது அவசியமாய் தோன்றியது. இன்னொரு காலும் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் இப்போது என்னைப் பற்றிக்கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக நான் சக்கரநாற்காலியே கதியென்று கிடக்கிறேன். 1994-ல், என் கை முறிந்தது. குளிப்பதற்கும், ஆடை அணிந்துகொள்வதற்கும், சமைப்பதற்கும், சுத்தம் செய்வதற்கும் எனக்கு உதவி தேவைப்பட்டது; எங்கு செல்ல வேண்டுமானாலும் வாகனமும் தேவைப்பட்டது. ஆனாலும் சகோதரர்களின் உதவியால், இந்த ஊனத்தின் மத்தியிலும் தொடர்ந்து என்னால் பயனியர் ஊழியம் செய்ய முடிந்தது.
என் வாழ்நாள் முழுவதும் திகில் கலந்த இன்பத்தைத் தேடினேன், ஆனால் மிகுந்த இன்பமளிக்கும் காலங்கள் எதிர்காலத்தில் காத்திருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். சீக்கிரத்தில் வரவிருக்கும் புதிய உலகில் தற்போதைய உடல்நலக் குறைபாடுகள் அனைத்தையும் கடவுள் நீக்குவார் என்ற நம்பிக்கைதான் இப்போது என்னை சந்தோஷமாக வாழவைக்கிறது. (ஏசாயா 35:4-6) அந்தப் புதிய உலகில், திமிங்கலங்களுடனும் டால்ஃபின்களுடனும் நீந்திச்செல்வதையும், புலியுடனும் அதன் குட்டிகளுடனும் சேர்ந்து மலைகளை சுற்றிவருவதையும், கடற்கரையில் நடந்துசெல்வதைப்போன்ற ஒரு எளிய காரியத்தை செய்வதையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அந்தப் பரதீஸிய பூமியில் நாம் அனுபவித்து மகிழ்வதற்காகவே கடவுள் படைத்திருக்கும் அனைத்து காரியங்களையும் கற்பனை செய்து பார்ப்பது எனக்கு ஆனந்தமளிக்கிறது.—ஜின்ஜர் க்ளாஸ் என்பவரால் சொல்லப்பட்டது.
[பக்கம் 21-ன் படம்]
சூதாட்டம் என் வாழ்க்கையின் பாகமாக இருந்தபோது
[பக்கம் 23-ன் படம்]
கடவுளின் வாக்குறுதிகள் என்னை பராமரிக்கின்றன