உலகைகவனித்தல்
போப் பரிணாமத்தை மறுவுறுதி செய்கிறார்
போப் இரண்டாம் ஜான் பால் சமீபத்தில் மனித பரிணாமத்தின் பேரில் ஒரு குறிப்பை வெளியிட்டார்; தனிப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் “சேகரிக்கப்பட்ட முடிவுகளை,” “இந்தக் கொள்கைக்குச் சாதகமாயிருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க விவாதமாய்” மேற்கோள் காட்டுகிறார் அவர். இந்தப் போதனையை முழுவதுமாய் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், போப் பன்னிரெண்டாம் பையஸ்-ன், 1950-வது ஆண்டின் சுற்றுக்கடிதத்திலுள்ள விஷயத்தையே மறுவுறுதி செய்தார் இரண்டாம் ஜான் பால். அந்தக் கடிதத்தில், “ ‘பரிணாம’ கோட்பாடு ஒரு முக்கியமான கொள்கையாகவும், ஆய்வு செய்யத் தகுதியானதாகவும் கருதப்பட்டது” என லாஸேர்வாட்டோரே ரோமானோ குறிப்பிட்டது. மனித பரிணாமத்தில் கடவுளையும் உட்படுத்த வேண்டி, அழியா ஆத்துமா ஒன்று மனிதருக்கு இருக்கிறது என்ற பிளேட்டோனிய போதனையிடம் போப் திரும்பினார். மறுபடியும் பன்னிரெண்டாம் பையஸ்-ன் சுற்றுக்கடிதத்திலிருந்து மேற்கோள் காட்டி அவர் கூறினதாவது: “மனித உடல், அதற்கு முன் உயிர்வாழ்ந்த பொருளிலிருந்து பரிணமித்தால், அந்த அழியா ஆத்துமா கடவுளால் உடனடியாக படைக்கப்படுகிறது.”
திருமண வீதங்கள் குறைந்துவருகின்றன
“திருமணம் ஓர் ஏற்பாடாய் இருப்பது மறைந்துவருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று கனடாவின் புள்ளியியல் துறை, மக்கட்தொகையியல் பிரிவின் தற்போதைய தலைவர், ஸான் டியூமாஸ் கூறுகிறார். கனடாவில், குறிப்பாக க்யுபெக்கில் திருமண வீதங்கள் குறைந்துவருகின்றன என தி டோரன்டோ ஸ்டார் கூறுகிறது. சில சந்தர்ப்பங்களில், நிலையான திருமணத்துக்காக தனக்கிருக்கும் கடமையை வேண்டாவெறுப்புடன் ஏற்றுக்கொள்வதற்கான காரணம், தங்கள் பெற்றோரின் திருமணங்களைப் பற்றி தாங்கள் கொண்டிருக்கும் சாதகமற்ற அபிப்பிராயமே என்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. 25 ஆண்டு காலமாக சேகரிக்கப்பட்ட தகவல் காட்டுவது என்னவென்றால், 1969-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளில் 30 சதவீதத்தினர், 1993-ல் ஒன்றாக சேர்ந்து வாழவில்லை. சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளில் பலர் மணவிலக்கு செய்துவருவதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கனடாவில் செய்யப்பட்ட அனைத்து மணவிலக்குகளிலும், திருமணமாகி ஐந்தாண்டுக்குக் குறைவாய் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த தம்பதியரின் விகிதம் 1980-ல் நான்குக்கு ஒன்று என இருந்தது, 1993-ல் மூன்றுக்கு ஒன்று என அதிகரித்திருக்கிறது. ஒன்டாரியோவைச் சேர்ந்த குவெல்ஃப் பல்கலைக்கழகத்தில், திருமண-குடும்ப சிகிச்சை மையத்தின் இயக்குநராகப் பணிபுரியும் மார்ஷல் ஃபைன் குறிப்பிடுவதாவது: “இது இளைஞர்களுக்கு மிகப் பாதுகாப்பான உலகமாய்த் தோன்றவில்லை.”
தூக்கமில்லாத டீனேஜர்கள்
டிவி பார்ப்பது, கலகம் செய்வது, அல்லது சோம்பேறித்தனமாய் இருப்பதோடுகூட, காலையில் இன்னும் கொஞ்சம் தூங்கவேண்டும் என இளைஞர்கள் விரும்புவதற்கு வேறு காரணங்களும் இருக்கக்கூடும் என்று ஆஸ்திரேலியாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும் தூக்கச் சீர்குலைவைப் பற்றி ஆய்வுசெய்யும் நிபுணர்கள் நம்புகின்றனர் என ஏசியாவீக் பத்திரிகை அறிக்கை செய்கிறது. இன்னும் கொஞ்சம் தூங்கவேண்டும் என பல இளைஞர்கள் உணருவதற்கு, ஹார்மோன் சம்பந்தப்பட்ட மாற்றங்களும், உடலிலுள்ள பல்வேறு உறுப்புகளின் திடீர் வளர்ச்சியும் காரணங்களாய் இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய தூக்க நிபுணர், டாக்டர் கிறிஸ் ஸெட்டன் கூறுகிறார். ஓர் இளைஞர் தூங்குவதற்கான தேவை, ஒன்பது வயதில் அதிகரிக்கத் தொடங்குகிறது. என்றபோதிலும், 17 வயது முதல் 19 வயது வரையான 3,000 ஐ.மா. மாணவர்களிடம் நடத்தப்பட்ட சுற்றாய்வு ஒன்று, 85 சதவீதத்தினர், தேவைக்கும் குறைவாகவே தூங்குவதைக் காட்டியது. அதன் விளைவாகவே, குறிப்பாக அதிகாலையில் நடத்தப்படும் வகுப்புகளில் மாணவர்கள் தொடர்ந்து தூக்கக் கலக்கத்துடன் போராட வேண்டியிருக்கிறது என்று தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. “நம் இளைஞர் தூக்கமில்லாத சிறுசுகளாய் இருக்கின்றனர்” என்றும், “அது, கிட்டத்தட்ட அவர்கள் போதையில் இருப்பதைப்போல் இருக்கிறது” என்றும் கார்னல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜேம்ஸ் பி. மாஸ் குறிப்பிடுகிறார். டீனேஜர்களுக்கு இரவில் எட்டரை மணிநேரமாவது தூக்கம் தேவை என நிபுணர்கள் நம்புகின்றனர்.
உணவுத்திட்டம் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது
ஒரு நபர், ஒரு நாளுக்கு ஐந்து கப் அளவாவது பழங்களையும் காய்கறிகளையும் உண்ணுவது, நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், அல்லது பிறவகை புற்றுநோய் ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்கிறது என்பதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. இதற்கான “சக்திவாய்ந்த நிரூபணம்,” குறைந்தபட்சம் 17 நாடுகளில் நடத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட ஆய்வுகளின் மூலம் பெறப்பட்ட முடிவிலிருந்து கிடைக்கிறது. அந்த ஆய்வுகளிலிருந்து, இந்த உணவுத்திட்டத்தால் பயன் விளைவது உறுதிசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதிக அளவுகளில் உண்ணவேண்டிய அவசியம் இல்லை. ஐ.மா. தேசிய புற்றுநோய் பயிற்சித் திட்டம் ஒன்றின்படி, சரியான அளவு விகிதங்கள் உட்படுத்துவதாவது: “ஒரு மிதமான அளவு பழத்துண்டு, முக்கால் கப் பழச்சாறு, அரை கப் வேக வைத்த காய்கறிகள், சாலட்டுகளில் போடப்படும் ஒரு கப் பச்சைக் கீரை, அல்லது கால் கப் பழ வற்றல்.” அப்படிப்பட்ட உணவுத்திட்டத்தின்படி உண்ணவேண்டும் என கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தப் பயிற்சி மையம் சிபாரிசு செய்திருக்கிறது; ஆனால் தற்சமயம் ஐக்கிய மாகாணங்களில், பெரியவர்களில் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்திலும், குழந்தைகளில் ஐந்துக்கு ஒன்று என்ற விகிதத்திலுமே, இந்த வழிகாட்டுக் குறிப்புக்கு இசைவாக உண்ணுபவர்கள் இருக்கின்றனர். விரைவில் சமைக்கக்கூடிய துரித உணவுக்கான கொள்ளைப் பிரியம், இந்தத் திட்ட உணவை ஏற்றுக்கொள்வதைத் தடைசெய்வதாகத் தோன்றுகிறது. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “உருளைக்கிழங்கு சுருள் வறுவலை, கெச்சப்புடன் (ketchup) சேர்த்து உண்ணுவது, இரண்டு கப் அளவு காய்கறிகளை உண்ணுவதற்குச் சமமாகாது.”
நிலையான ஜனத்தொகையா?
வியன்னாவிலுள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் அப்ளைட் சிஸ்டம்ஸ் அனாலிசிஸ் (IIASA)-ன் படி, தற்போதைய உலக ஜனத்தொகை இரண்டு மடங்காவதற்கான சாத்தியமில்லை. அவர்களுடைய கணக்குப்படி, “2050-வது ஆண்டுவாக்கில், தற்போதுள்ள 575 கோடியிலிருந்து 1,000 கோடியாக ஜனத்தொகை வளர்ச்சியடைந்து, 2075-வது ஆண்டில் கிட்டத்தட்ட 1,100 கோடி என்ற உச்சக்கட்ட எண்ணிக்கையை அடையும்; பிறகு 2100-வது ஆண்டில் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் நிலைத்திருக்கும், அல்லது கொஞ்சம்கொஞ்சமாகக் குறையும்” என்று நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது. IIASA-ன்படி, தற்போதைய உலக ஜனத்தொகை ஒருபோதும் இரண்டு மடங்காக அதிகரிக்காது என்பதற்கு 64 சதவீத சாத்தியம் இருக்கிறது. 1995-ல் உலகின் ஒவ்வொரு பகுதியிலும், பிறப்பு விகிதங்கள் குறைந்திருப்பதாக அவர்களுடைய எண்ணிக்கைகள் காட்டுகின்றன.
பாட்டரி இல்லாத ரேடியோ
ஆப்பிரிக்காவின் நாட்டுப்புறங்கள் பலவற்றில், மின்வசதி இல்லாதிருப்பதையும், குறைந்தளவான பாட்டரிகள் கிடைப்பதையும் சமாளிக்க, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேப் டௌனுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய தொழிற்சாலை, கையால் சுழற்றும் ஜெனரேட்டர் ஒன்றைத் தன்னகத்தே கொண்டிருக்கும் (built-in) ஒரு கையடக்கமான ரேடியோவை உற்பத்தி செய்கிறது. “அந்தக் கைப்பிடியை வேகவேகமாய்ச் சுற்றிய பிறகு, அந்த ரேடியோ அரை மணிநேரத்திற்கு வேலை செய்யும்” என்று தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. மதிய உணவு எடுத்துச் செல்லும் டப்பாவின் அளவாகவும், மூன்று கிலோகிராம் எடையுமாக இருந்தபோதிலும், இந்தப் புதிய மாடல், வெற்றியடையப்போவதுபோல் தோன்றுகிறது. அந்தத் தொழிற்சாலையின் மார்க்கெட்டிங் வேலையை நிர்வகிக்கும் சீயாங்கா மாலூம்மா கூறுகிறபடி, இந்த ரேடியோவை, ஒரு நாளுக்கு ஐந்து முதல் பத்து மணிநேரம் வேலைசெய்யவிட்டால், சுமார் மூன்று ஆண்டு காலத்தில் பாட்டரிகளுக்காக செலவிடப்படுவதில் 500 முதல் 1,000 டாலர் வரை மிச்சப்படுத்தலாம். சைக்கிளுடனும் மோட்டார்சைக்கிளுடனும், “ரேடியோவையும் வைத்திருப்பது, ஆப்பிரிக்க அந்தஸ்துக்கான மூன்று பெரிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது” என மாலூம்மா கூறுகிறார். வெறுமனே ஒரு ரேடியோவை வைத்திருப்பதன் மூலம், “நீங்கள் ஒரு மனைவியைக் கண்டடையலாம்” என்பதில் “நீங்கள் நிச்சயமாய் இருக்கலாம்” என்று அவர் உறுதியுடன் கூறுகிறார்.
கொல்லும் மழை
அமில மழை, ஸ்காண்டிநேவியாவின் எல்க் மான்கள் பலவற்றின் மரணத்துக்கு மறைமுகமான காரணமாய் இருந்திருக்கிறது, என்பதாக ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஆட்ரியான் ஃபிராங்க் கூறுகிறார். அமிலம் கலந்த மழையால் ஏற்படும் பின்விளைவுகளைத் தடுப்பதற்காக, வயல்களிலும் ஏரிகளிலும் சுண்ணாம்பு போடப்படுகிறது. என்றபோதிலும், சுண்ணாம்பு போடப்பட்ட மண்ணில் வளரும் தாவரங்களில் குறிப்பாக மாலிப்டினம் போன்ற மூலகங்களின் அளவு கூடுதலாய் இருப்பதாகக் காட்டுகிறது. எல்க் மான்கள் அதிகளவு மாலிப்டினத்தை உட்கொள்கையில், மரணத்தை விளைவிக்கக்கூடிய தாமிர சத்துக்குறைவு ஏற்படுகிறது; அது அந்த விலங்குகளின் நோய்த் தடுப்பாற்றல் அமைப்புகளைக் கடுமையாய் பாதிக்கிறது. அதோடு, அமில மழை பெய்வதனால், ஸ்வீடனின் 4,000-க்கும் மேற்பட்ட ஏரிகளில் இப்போது மீன்கள் உயிர்வாழ முடிவதில்லை, உணவுக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் பயன்படும் மீன்களின் எண்ணிக்கை நார்வேயில் முன்பிருந்ததைவிடப் பாதியாகக் குறைந்திருக்கிறது. அமில மழையின் முக்கியக் காரணியைக் கட்டுப்படுத்துவதற்காக, அதன் மின் நிலையங்களிலிருந்து வெளிவரும் கந்தகத்தின் அளவை பிரிட்டிஷ் அரசு குறைத்துவருகிறபோதிலும், ஏற்கெனவே பெய்திருக்கும் அமில மழையின் எஞ்சிய விளைவுகள் பல்லாண்டுகளுக்குத் தொடரலாம் என்பதாக லண்டனின் தி சன்டே டெலிகிராஃப் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
ஆப்பிரிக்க யானைகளைப் பழக்குவித்தல்
அவற்றைப் பழக்குவிப்பதில் வெற்றி கிடைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆப்பிரிக்க யானைகள், ஜிம்பாப்வி நாட்டைச் சேர்ந்த ஈமீர்ரெ வனவிலங்கு பாதுகாப்பு எல்லைப்பகுதியில், வயல்களை உழுவதற்கும், சென்றெட்டுவதற்குக் கடினமாயுள்ள பகுதிகளில் வன இலாகா அதிகாரிகளை சுமந்துசெல்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைப் பழக்குவிக்கும் முறை, “அன்பும் சன்மானமும்” என்று அழைக்கப்படுகிறது. நியாஷா என்ற யானை, மூச்செம்வா என்ற தொழிலாளியை தன் முதுகில் ஏற்றிக்கொண்டு, வயலை உழுவதை ஆப்பிரிக்க செய்தித்தாளொன்றின் நிருபர் ஒருவர் கவனித்தார். “அவ்வப்பொழுது, அந்த யானை அதன் துதிக்கையைப் பின்புறமாக நீட்டியது; மூச்செம்வாவும், புரதச் சத்து மிக்க உணவுத்துண்டை அதில் திணித்தார்” என்று அந்த நிருபர் விவரித்தார். தொடர்ந்து அந்த அறிக்கை தெரிவிப்பதாவது: “நியாஷாவும் ஈமீர்ரெயில் உள்ள பழக்குவிக்கப்பட்ட மற்ற ஆறு யானைகளும் அடுத்த மழைக்காலத்துக்கு முன்பு வயல்களை உழுது, பண்படுத்தப் பயன்படுத்தப்படும்; அந்நிலத்தில் சோளம் போன்ற தானியங்களை விளைவிக்கலாம்; அத் தானியங்கள் அந்தப் பண்ணையிலுள்ள யானைகளுக்கும் பிற விலங்குகளுக்கும் உணவாகப் பயன்படுத்தப்படும்.”
இரத்தத்திலிருந்து சத்துப்பொருட்கள் தயாரித்தல்
சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புரோத்தெமால் என்ற புரதச் சத்துப்பொருள், பிரேஸிலின் வடகிழக்குப்பகுதியிலுள்ள ஊட்டக்குறைவு பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் உதவுவதற்காக அங்கு பயன்படுத்தப்பட்டுவருகிறது. அசோஸியேட்டட் பிரஸ் அறிக்கை ஒன்றின்படி, இந்தப் பொருள், கறிக்கடைகளிலிருந்து பெறப்படும் பசுவின் இரத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது; அது, “கறியைக் காட்டிலும் ஊட்டச்சத்து மிக்கது” என கூறப்படுகிறது. அதைப்போன்ற பரிசோதனைகள் குவாதமாலாவில் 1990-ல், “ஆரீனா டி சாங்க்ரா” (இரத்த மாவு) என்ற ஒரு பொருளைக் கொண்டு செய்யப்பட்டன. பிரேஸிலில், வீட்டுக்குவீடு சென்று புரோத்தெமால் வழங்கப்படும்படி அரசு ஏற்பாடு செய்தது; “சத்துப்பொருளைக் கொடுத்து, அதை உட்கொள்ளும் குழந்தைகளை உன்னிப்பாக மேற்பார்வை செய்யும்படியும்” ஏற்பாடு செய்தது. முன்பெல்லாம், பிரேஸிலின் வடகிழக்குப்பகுதியிலுள்ள கறிக்கடைகள், பைபிளில் கட்டளையிட்டுள்ளபடி, வெறுமனே இரத்தத்தைக் கீழே ஊற்றிவிட்டன.—லேவியராகமம் 17:13, 14.
சிறார் படை
ஏழு வயதே ஆகியிருந்தவர்களை உள்ளடக்கிய இரண்டரை லட்சம் சிறார்கள், உலக முழுவதிலும் ராணுவப் படைகளில் சேவை செய்கின்றனர் என்பதாக 26 நாடுகளில் ஆராய்ச்சி செய்யப்பட்டு, இங்கிலாந்து, மான்செஸ்டரின் கார்டியன் வீக்லி பத்திரிகையில் அறிக்கை செய்யப்பட்டது. புதிதாக வேலைக்குச் சேர்க்கப்பட்ட சிறார்கள் மிருகத்தனமாக நடத்தப்பட்டனர்; பெரும்பாலும் தங்கள் கண்களுக்குமுன்பாகவே, தங்கள் உறவினர்களின் துன்புறுத்தலையும் மரணத்தையும் காணும்படி வற்புறுத்தப்பட்டனர். அதற்குப்பிறகு, அவர்கள் சட்டப்படி தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுகிறவர்களாகவும், கொலை செய்பவர்களாகவும், உளவாளிகளாகவும் பயன்படுத்தப்பட்டனர் என்பதாக ஐக்கிய நாட்டு சங்கத்தால் நடத்தப்பட்ட இரண்டாண்டு ஆய்வுகளின் ஒரு பகுதியான இந்த அறிக்கை காட்டியது. ஒரு நாட்டில், “பெரும்பாலான சிறார் ராணுவ வீரர்கள், தப்பிச்செல்ல முயலும் சிறார்களை அல்லது பெரியவர்களை துன்புறுத்தும்படியோ, கால்-கையை முறிக்கும்படியோ, கொல்லும்படியோ கட்டளையிடப்பட்டிருந்தனர்.” போரிடுவதற்கு முன்பு போதைப்பொருட்களோ மதுபானங்களோ கொடுக்கப்பட்ட சிறார்கள், “தாங்கள் சாவாமையுடையவர்கள் என்பது போலவும், தாங்கள் கொல்லப்படவோ, காயப்படவோ போவதில்லை என்பது போலவும்” வேகமாய் போரிடச் செல்பவர்களாகக் காணப்பட்டிருக்கின்றனர்.