வியா எக்னாடியா—விரிவாக்கத்திற்கு துணைபுரிந்த ஒரு நெடுஞ்சாலை
கிரீஸிலிருந்து விழித்தெழு! நிருபர்
கிறிஸ்தவ மிஷனரிகளின் ஒரு குழு, பொ.ச. 50-ல், ஐரோப்பாவில் முதன்முதலாக காலடியெடுத்து வைத்தது. ‘நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டும்’ என்று அப்போஸ்தலனாகிய பவுலுக்கு தரிசனத்தில் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு பிரதிபலிப்பவர்களாய் அவர்கள் அங்கு சென்றிருந்தனர். (அப்போஸ்தலர் 16:9) பவுலும் அவரது கூட்டாளிகளும் எடுத்துச்சென்ற, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தி ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியது.
மக்கெதோனியாவில் கிறிஸ்தவம் பரவுவதற்கு உறுதுணையாக இருந்தது பெருங்கற்களால் பதிக்கப்பட்ட ரோம நெடுஞ்சாலையான வியா எக்னாடியா ஆகும். அந்த மிஷனரிகள், சந்தேகமின்றி, ஈஜியன் கடலின் வட முனையிலிருந்த நெயாப்போலியின் (இப்போது கவல்லா, கிரீஸ்) கப்பற்துறையில் இறங்கிய பின்னர், அந்த நெடுஞ்சாலை வழியாக மக்கெதோனியா தேசத்து நாடுகளில் பிரதான பட்டணமாகிய பிலிப்பிக்கு பயணம் செய்தனர். அச்சாலை, அம்பிபோலி, அப்பொலோனியா, தெசலோனிக்கே ஆகிய பட்டணங்களுக்குச் சென்றது; இப்பட்டணங்களுக்குத்தான் பவுலும் அவரது கூட்டாளிகளும் அடுத்ததாக சென்றார்கள்.—அப்போஸ்தலர் 16:11–17:1.
இந்தப் பழங்காலத்திய நெடுஞ்சாலையின் சில பகுதிகள் இன்றுவரையாக காணப்படுகின்றன; அதுமட்டுமல்ல, தினந்தோறும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பண்டைய சாலையின் பாதையிலேயே, அதே பெயரைத் தாங்கும் ஒரு நவீன நெடுஞ்சாலையைக் கட்டுவதற்கு இப்போது திட்டமிடப்பட்டிருக்கிறது.
அந்த முதல் நெடுஞ்சாலையைக் கட்டியது யார்? அது எப்போது, எதற்காக கட்டப்பட்டது?
தேவை என்ன
ரோம சாம்ராஜ்யம் கிழக்கிலுள்ள பகுதிகளை தொடர்ந்து கைப்பற்றிக்கொண்டே செல்கையில், பொ.ச.மு. 146-ல் மக்கெதோனியாவும் ரோம மாகாணமானது. எனினும், அவ்வாறு கைப்பற்றியதால் அந்த சாம்ராஜ்யத்திற்கு ஒரு புதிய தேவை ஏற்பட்டது; அதாவது, கைப்பற்றப்பட்ட புதிய பகுதிகளுக்கு உடனுக்குடனடியாக ராணுவ படைகளை நிறுத்தும் திறன் தேவைப்பட்டது. இத்தாலிய தீபகற்பத்திலிருந்த வியா ஆப்பியா அல்லது ஆப்பியன் சாலை, ஏற்கெனவே ரோமையும் தென்கிழக்கு ஏட்ரியாடிக் கரையையும் இணைத்தது. ஆனால் இப்போது பால்கன் தீபகற்பத்தில் அதேபோன்ற ஒரு நெடுஞ்சாலை இந்த சாம்ராஜ்யத்திற்குத் தேவைப்பட்டது; ஆகவேதான் வியா எக்னாடியா திட்டமிடப்பட்டது. அது, அத்திட்டத்தின் தலைமை என்ஜினியரும் ரோமின் மாகாண ஆளுநருமாயிருந்த க்னையுஸ் எக்னாடியுஸ் என்பவரின் நினைவாக பெயரிடப்பட்டது.
வியா எக்னாடியா, இல்லிரிக்கம் தேசத்திலுள்ள டராக்கியும் என்ற துறைமுகப் பட்டணத்தில் (டுரஸ், அல்பேனியா) ஆரம்பித்து, பூர்வ நகரமாகிய பைசான்டியம் (இஸ்தான்புல், துருக்கி) வரையாக 800-க்கும் அதிகமான கிலோமீட்டர் தூரத்திற்கு அமைந்திருந்தது. கட்டுமான வேலை பொ.ச.மு. 145-ல் ஆரம்பமானது; முடிவடைவதற்கோ கிட்டத்தட்ட 44 வருடங்கள் ஆயின. திட்டமிடப்பட்டபடியே, கிழக்கில் விரிவடைவதற்கான ரோம பாலிஸிக்கு வியா எக்னாடியா விரைவிலேயே மிக முக்கிய கருவியாக ஆனது.
சாலையமைக்க சிரமமான நிலம்
எனினும், அந்த நிலம், நெடுஞ்சாலை அமைப்பதை ஒரு சவாலாக்கியது. உதாரணத்திற்கு, ஆரம்ப கட்டத்தில், இந்தச் சாலை ஓக்ரிட் ஏரியைச் சந்திக்கிறது; ஏரியின் வட எல்லைநெடுக அது செல்கிறது. பிறகு, கணவாய்களுக்கு இடையே வளைந்துசென்று, ஆழ்பள்ளங்கள், மரங்களற்ற மலைகள், பகுதியளவு ஏரிகளைக்கொண்ட பள்ளத்தாக்கு நீர்ப்படுகைகள் ஆகியவை அடங்கிய தரிசு நிலங்களைத் தாண்டி கிழக்கே செல்வதாய், இறுதியில் மத்திய மக்கெதோனிய சமவெளியை அடைகிறது.
நெடுஞ்சாலை தெசலோனிக்கே பட்டணத்தை நெருங்குகையில், ஒரே சமமான பரந்த நாட்டுப்புற நிலப்பரப்பைத் தொடர்ந்து செல்கிறது. ஆனால் அப்பட்டணத்தின் கிழக்கு நிலப்பகுதி, குன்றுகள் நிரம்பியதாக இருக்கிறது. இந்தக் குன்றுகளைச் சுற்றி வளைந்துசெல்வதாய், வியா எக்னாடியா, தெளிவான வடிவமற்றதும் சுற்றிவர சேறு நிரம்பியதுமான ஏரிகளைக்கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் தாழ இறங்குகிறது. இவ்வாறே, பள்ளத்தாக்குகள் வழியாகவும் சதுப்புநிலங்கள் வழியாகவும் வளைந்து சென்று இறுதியில் பூர்வ பட்டணமாகிய நெயாப்போலியை சென்றடைகிறது.
அங்கிருந்து அது ஈஜியன் கடற்கரையின் கிழக்கே சென்று த்ரேஸ் பகுதிக்குச் செல்கிறது. கடைசியில், அந்த நெடுஞ்சாலை அதன் சேருமிடமான பைசான்டியத்திற்கு, சற்று நேராகவும் சமமாகவும் போய்சேருகிறது.
நோக்கத்திற்கிசைய சேவித்தல்
வியா எக்னாடியா, ரோமிற்கும் ஏட்ரியாடிக் கடலின் கிழக்கே ரோம் கைப்பற்றிய இடங்களுக்கும் இடையே மிக நேரடியான சௌகரியமான வழியாக ஆனது. மக்கெதோனியா பட்டணங்களில் ரோம குடியிருப்புகள் உருவாக அது உதவியது; மேலும், அப்பகுதியின் பொருளாதாரம், மக்கட்தொகை, கலாச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சியை பெருமளவில் பாதித்தது. செம்பு, தார் (asphalt), வெள்ளி, மீன், எண்ணெய், திராட்சரசம், ச்சீஸ்கள் மற்றும் பிற பொருட்களை கொண்டுசெல்வதை இந்த நெடுஞ்சாலை சுலபமாக்கியது.
அப்படிப்பட்ட வணிகத்தால் செழிப்படைந்ததன் காரணமாக, அச்சாலைநெடுக அமைந்திருந்த பட்டணங்களான தெசலோனிக்கே, அம்பிபோலி போன்றவை, பால்கனின் மிகப் பெரிய நகர்ப்பகுதிகளின் பட்டியலில் சேர்ந்தன. குறிப்பாக தெசலோனிக்கே, கலை மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் செழித்தோங்கிய ஒரு முக்கிய வணிக மையமாக உருவானது. இந்தச் சாலைக்கான பராமரிப்பு செலவின் ஒரு பகுதியை, அதன் வழியே அமைந்திருந்த சமுதாயங்கள் ஏற்கவேண்டியிருந்தது உண்மைதான். ஆனால், அதற்குப் பிரதிபலனாக, இந்தச் சமுதாயங்கள் சர்வதேச வணிகத்தால் பேரளவான அனுகூலங்களைப் பெற்றன.
கிறிஸ்தவத்தை விரிவாக்குவதில் அதன் பங்கு
எனினும், வியா எக்னாடியா அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு பொருளாதார செழுமையைக் காட்டிலும் அதிக நன்மையை அளித்தது. உதாரணத்திற்கு, செல்வச்செழிப்பாக வியாபாரம் செய்துவந்த லீதியாள் என்ற பெண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். அவர், ஐரோப்பாவில் பவுல் நற்செய்தியைப் பிரசங்கித்த முதல் பட்டணமான பிலிப்பியில் வாழ்ந்தார். பொ.ச. 50-ல் நெயாப்போலியை அடைந்த பிறகு, அப்போஸ்தலனாகிய பவுலும் அவரது கூட்டாளிகளும் வியா எக்னாடியா வழியாக வடமேற்கே 16 கிலோமீட்டர் பயணம் செய்து பிலிப்பிக்குச் சென்றனர்.
லூக்கா எழுதினார்: “ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.” செவிகொடுத்துக் கேட்ட பெண்களில் லீதியாளும் ஒருவர். அதே நாளில், அவரும் அவரது குடும்பத்தாரும் விசுவாசிகளானார்கள்.—அப்போஸ்தலர் 16:13, 14.
பிலிப்பியிலிருந்து, பவுலும் அவரது கூட்டாளிகளும் வியா எக்னாடியா வழியே அம்பிபோலி மற்றும் அப்பொலோனியாவைக் கடந்து தெசலோனிக்கே பட்டணத்திற்குச் சென்றார்கள்; ஆக மொத்தமாக சுமார் 120 கிலோமீட்டர் தூரம் பிரயாணம் செய்தனர். (அப்போஸ்தலர் 17:1) தெசலோனிக்கே பட்டணத்தில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு, உள்ளூர் ஜெப ஆலயங்களில் ஓய்வுநாளுக்காக யூதர்கள் கூடிவந்த சமயத்தைப் பவுல் பயன்படுத்திக்கொண்டார். இவ்வாறு சில யூதர்களும் திரளான கிரேக்கர்களும் விசுவாசிகளானார்கள்.—அப்போஸ்தலர் 17:2-4.
அதேவிதமாய் இன்று, அல்பேனியாவிலும் கிரீஸிலும் வாழும் யெகோவாவின் சாட்சிகள் இந்தப் பிராந்தியங்களில் வாழும் ஜனங்களுக்குப் பிரசங்கிப்பதற்காக இதே நெடுஞ்சாலையின் சில பகுதிகளை பயன்படுத்துகின்றனர். அவர்களது லட்சியம், அப்போஸ்தலனாகிய பவுலும் அவரது மிஷனரி கூட்டாளிகளும் செய்ததுபோலவே கடவுளது ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் என்பதுதான். (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 1:8) உண்மையிலேயே, வியா எக்னாடியா, முதல் நூற்றாண்டிலும் இந்த 20-ம் நூற்றாண்டு வரையாகவும்கூட ஆவிக்குரிய விரிவாக்கத்திற்கு உதவியிருக்கும் ஒரு ரோம நெடுஞ்சாலை!
[பக்கம் 16, 17-ன் வரைப்படம்]
பிரிட்டன்
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
மக்கெதோனியா
பால்கன்
தெசலோனிக்கே
அப்பொலோனியா
அம்பிபோலி
பிலிப்பி
கிரீஸ்
பிலிப்பியை நோக்கிச் செல்லும் சாலை
தீபகற்பம்
த்ரேஸ்
நெயாப்போலி (கவல்லா)
ஈஜியன் கடல்
துரோவா
கருங்கடல்
பைசான்டியம் (இஸ்தான்புல்)
மார்மரா கடல்
துருக்கி
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.
[பக்கம் 16-ன் படம்]
நெயாப்போலியை நோக்கிச் செல்லும் சாலை
[பக்கம் 17-ன் படம்]
டராக்கியும், இல்லிரிக்கம் (டுரஸ், அல்பேனியா)