ரோம சாலைகள் —பூர்வகால பொறியியலின் நினைவுச்சின்னங்கள்
ரோம நினைவுச்சின்னங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது எது? ரோமில் இடிபாடுகள் மட்டுமே எஞ்சியுள்ள கொலோசியம் என்பீர்களா? ரோமர்களின் கட்டமைப்புகளில் பல்லாண்டு காலம் நீடித்தவற்றை அல்லது சரித்திரத்தில் முக்கிய பங்கு வகித்தவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதன் சாலைகளைக் குறித்துச் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும்.
ரோம நெடுஞ்சாலைகள் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கும் படைகள் அணிவகுத்து செல்வதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படவில்லை. கிறிஸ்தவ மதம் உட்பட “மத கோட்பாடுகளும், கருத்துகளும், கலைகளும், தத்துவங்களும் பரவுவதற்கு இந்தச் சாலைகள் பயன்பட்டன” என்கிறார் கல்வெட்டுகளை ஆராயும் ரோமோலோ ஏ. ஸ்டாகோலி.
ரோமர்கள் அமைத்த சாலைகள் பூர்வ காலங்களில் நினைவுச்சின்னங்களாகக் கருதப்பட்டன. ரோமர்கள் பல நூற்றாண்டுகள் பாடுபட்டு, போக்குவரத்துக்கு மிகச் சிறந்த சாலைகளை அமைத்தார்கள். 80,000-க்கும் அதிக கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டோடிய இந்தச் சாலைகள் இப்போது 30-க்கும் அதிகமான நாடுகளின் வழியே செல்கின்றன.
ரோமர்கள் முதன்முதலில் அமைத்த வியா புப்ளிகா, அதாவது முக்கிய சாலை அப்பியன் சாலை ஆகும்; இதை இன்று நெடுஞ்சாலை என்று அழைக்கிறோம். சாலைகளின் ராணியாக அறியப்படுகிற இச்சாலை ரோம் நகரத்தையும் பிரன்டிஸியம் நகரத்தையும் இணைத்தது. துறைமுக பட்டணமான இந்தப் பிரன்டிஸியம் இன்று பிரன்டிஸி என அழைக்கப்படுகிறது, இந்தத் துறைமுகத்திலிருந்தே மக்கள் கிழக்கே உள்ள இடங்களுக்குச் சென்றார்கள். சுமார் பொ.ச.மு. 312-ல் ரோம அதிகாரியான அப்பியஸ் க்லாடியஸ் ஸ்ஸீகஸ் என்பவர் இச்சாலையை அமைக்கும் பணியைத் துவங்கினார்; அதனால் இவருடைய பெயரே இச்சாலைக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. வியா ஸலாரியா, வியா ஃபிலமினியா ஆகிய சாலைகளும் ரோமுக்குப் பேருதவியாய் இருந்தன. இச்சாலைகள் கிழக்கே உள்ள ஏட்ரியாடிக் கடல் நோக்கிச் சென்றதால் பால்கன் நாடுகளுக்கும் ரைன், டேன்யூப் நதி பாயும் பகுதிகளுக்கும் செல்ல உதவின. ஆரேலியா சாலை, வடக்கே கால் மாகாணம் மற்றும் ஐபீரியன் தீபகற்பம்வரை சென்றது. ஆஸ்டென்ஸிஸ் சாலை ஆஸ்டியா துறைமுகம்வரை சென்றது. ஆப்பிரிக்காவுக்குச் சென்றுவர ரோம் இந்தத் துறைமுகத்தையே அதிகம் பயன்படுத்தியது.
ரோமின் மாபெரும் கட்டுமானப் பணி
ரோம குடிமக்கள் புதிய சாலைகளை அமைப்பதற்கு முன்பிருந்தே சாலைகளை முக்கியமானவையாய் கருதினார்கள். டைபர் ஆற்றை நடந்தே கடக்க முடிந்த ஒரே இடமான தென் பகுதியில்தான் பூர்வகால சாலைகள் சந்தித்தன; இந்த இடத்தில்தான் ரோம் நகரம் உருவானது. ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த சாலைகளின் தரத்தை உயர்த்த, கார்தேஜ் மக்களைப் பார்த்து ரோமர்கள் காப்பியடித்ததற்குப் பூர்வகால அத்தாட்சிகள் உள்ளன. ஆனால், உண்மையில் இட்ருஸ்கான் மக்களே சாலைகள் அமைப்பதில் ரோமர்களுக்கு முன்னோடிகளாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் அமைத்த சாலைகளின் இடிபாடுகள் இன்றுவரை உள்ளன. அதுமட்டுமல்ல, ரோமர்களின் காலத்திற்கு முன்பே பயணிப்பதற்குப் பலமுறை பயன்படுத்தப்பட்ட சாலைகள் அங்கு இருந்தன. ஒருவேளை ஒரு மேய்ச்சல் இடத்திலிருந்து இன்னொரு மேய்ச்சல் இடத்திற்கு மந்தையை ஓட்டிச் செல்ல மேய்ப்பர்கள் இந்தச் சாலைகளைப் பயன்படுத்தியிருக்கலாம். மழையில்லாத காலத்தில் இந்தச் சாலைகள் புழுதிபடிந்ததாகவும் மழைக்காலத்தில் சேரும்சகதியுமாகவும் இருந்ததால் இவற்றில் பயணிப்பது மிகக் கடினமாயிருந்தது. பெரும்பாலும் இப்படிப்பட்ட பாதைகள் மீதே ரோமர்கள் சாலைகளை அமைத்தார்கள்.
சாலை அமைப்பதற்கு ரோமர்கள் மிகக் கவனமாகத் திட்டமிட்டார்கள். உறுதியாகவும், பயனுள்ளதாகவும், நேர்த்தியாகவும் இருக்கும்படி அவற்றை அமைத்தார்கள். பொதுவாக, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல, முடிந்தவரை குறைந்த தூரமுள்ள சாலைகளையே அமைத்தார்கள்; அநேக சாலைகள் நேராக அமைக்கப்பட்டதற்கான காரணத்தை இது விளக்குகிறது. என்றாலும், இயற்கை அமைப்புக்கு ஏற்ற விதமாகவே பெரும்பாலான சாலைகள் அமைக்கப்பட்டன. மலைப்பாங்கான பகுதிகளில் முடிந்த இடங்களிலெல்லாம் ரோம பொறியியலாளர்கள் மலைகளின் பாதி உயரத்தில் வெயில் அடிக்கும் பக்கத்தில் சாலைகளை அமைத்தார்கள். இதனால், சாலைகளின் வழியாகப் பயணித்தவர்கள் மோசமான சீதோஷ்ண நிலைமைகளினால் வரும் அசெளகரியங்களை முடிந்தளவு தவிர்த்தார்கள்.
அப்படியானால், ரோமர்கள் இந்தச் சாலைகளை எப்படி அமைத்தார்கள்? அவர்கள் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தினார்கள். எனினும், புதைபொருள் ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம்.
முதலாவதாக, சாலை மார்க்கங்கள் திட்டமிடப்பட்டன; அக்காலத்தில் இருந்த நிலம் அளப்பவர்களுக்கு இந்த வேலை நியமிக்கப்பட்டது. அடுத்ததாக, இடுப்பு ஒடிய பள்ளம் தோண்டுகிற கடினமான வேலைக்கு ரோம காலாட்படையினர், அடிமைகள் அல்லது தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். பாதையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டது. அவற்றிற்கு இடையில் பொதுவாக 4 மீட்டர் இடைவெளி விடப்பட்டது; முடியாதபட்சத்தில் 2.4 மீட்டர் இடைவெளியாவது விடப்பட்டது. பாதைகளின் திருப்பத்தில் இன்னுமதிக இடைவெளி விடப்பட்டது. இருபுறமும் நடைபாதைகள் உட்பட பணி முடிவடைந்த சாலைகளின் அகலம் 10 மீட்டர் இருந்தது. அடுத்ததாக, அந்த இரண்டு பள்ளங்களுக்கும் இடையே உள்ள பாதையிலிருந்த மண் தோண்டியெடுக்கப்பட்டது. உறுதியான அடித்தளத்தை எட்டும்வரை இவ்வாறு தோண்டப்பட்டது; பிறகு அக்குழியில் ஒன்றன் மீது ஒன்றாக மூன்று அல்லது நான்கு அடுக்குவரை ஒவ்வொரு அடுக்கிலும் வித்தியாசமான கற்கள் நிரப்பப்பட்டன. முதல் அடுக்கில், பெரிய பெரிய கற்கள் அல்லது கற்கூளங்கள் நிரப்பப்பட்டன. இரண்டாவது அடுக்கில், கூழாங்கற்கள் அல்லது தட்டையான கற்கள் நிரப்பப்பட்டன; அவை ஒருவேளை கான்க்ரீட்மீது பரப்பப்பட்டிருக்கலாம். மேல் அடுக்கில் தட்டையான கருங்கற்களோ சல்லிக் கற்களோ நிரப்பப்பட்டன.
ரோமர்கள் அமைத்த சில சாலைகளின் மேற்பரப்பில் சல்லிக் கற்கள் மட்டுமே இருந்தன. என்றாலும், தளவரிசை போடப்பட்ட சாலைகளே அக்காலத்து மக்களின் மனதைக் கொள்ளைக் கொண்டன. இந்தச் சாலைகளின் மேற்பரப்பு பெரிய பெரிய கற்பாளங்களால் ஆனது; அவை பெரும்பாலும் உள்ளூரில் கிடைக்கும் பாறைகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டவை. சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்காமல் இருபுறத்திலும் இருந்த கால்வாய்களுக்கு வழிந்தோடுவதற்காக அவை நடுவில் சற்று மேடாக அமைக்கப்பட்டன. இவ்விதமான கட்டமைப்பினால் சாலைகள் நீண்ட காலம் நிலைத்திருந்தன; அதுமட்டுமல்ல அவற்றில் சில நம் காலம் வரையிலும் தாக்குப்பிடித்திருக்கின்றன.
அப்பியன் சாலை கட்டப்பட்டு சுமார் 900 வருடங்களுக்குப் பிறகு பைசாண்டியம் நாட்டைச் சேர்ந்த சரித்திராசிரியரான ப்ராகோபியஸ் அதனை “அற்புதத்திலும் அற்புதம்” என்று புகழ்ந்தார். கற்பாளங்களால் பாவப்பட்ட அதன் மேற்பரப்பைக் குறித்து அவர் இவ்வாறு எழுதினார்: “காலங்கள் உருண்டோடின, தினந்தினம் சரக்கு வண்டிகள் பல அவற்றின்மீது உருண்டன, ஆனாலும் அவற்றின் தோற்றமும் மாறவில்லை, அவற்றில் மேடுபள்ளங்களும் ஏற்படவில்லை.”
இந்தச் சாலைகள், ஆறுகள் போன்ற இயற்கையின் தடைகளை எவ்வாறு தாண்டின? பாலங்கள் அதற்கு முக்கிய வழியாக இருந்தன. பூர்வ ரோமர்களின் தலைச்சிறந்த தொழில்நுட்பத் திறமைக்குச் சான்று பகரும் விதமாக இவற்றில் சில இன்றும் கம்பீரமாய் நிற்கின்றன. ரோமர்கள் அமைத்த சாலைகளில் சுரங்கங்களும் இருக்கின்றன, இவை அந்தளவுக்குப் பிரபலமடையவில்லை. எனினும், அக்காலத்து தொழில்நுட்ப உத்திகளையும் கருவிகளையும் பார்க்கையில் சுரங்கங்கள் அமைப்பது ரோமர்களுக்கு மிகச் சிரமமாக இருந்திருக்கும். இதைக் குறித்து ஒரு புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “பல நூற்றாண்டுகளாக ரோமர்களின் பொறியியல் சாதனைகளுக்கு . . . நிகராக எதுவும் இருக்கவில்லை.” அதற்கு ஓர் உதாரணம், ஃபர்லோ கணவாயில் உள்ள சுரங்கம்; இந்தக் கணவாய், ஃபிலமினியா சாலையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பொ.ச. 78-ல் பொறியியலாளர்கள் நன்கு திட்டமிட்டு, ஒரு பெரிய பாறையைக் குடைந்து 40 மீட்டர் நீளம், ஐந்து மீட்டர் அகலம், ஐந்து மீட்டர் உயரம் உள்ள ஒரு சுரங்கத்தை அமைத்தார்கள். அந்தக் காலத்தில் இருந்த கொஞ்சநஞ்ச கருவிகளை வைத்தே இதை செய்திருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது! இப்படிப்பட்ட ஒரு சாலை அமைப்பு மனிதனின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று.
பயணிகளுடன் கருத்துகளும் “பயணித்தன”
படை வீரர்கள், வணிகர்கள், பிரசங்கிகள், சுற்றுலாப் பயணிகள், நடிகர்கள், கத்திச் சண்டை வீரர்கள் என எல்லாருமே இந்தச் சாலைகளின் வழியாகப் பயணித்திருக்கிறார்கள். இச்சாலைகளில் ஒருவர் ஒரு நாளில் சுமார் 25-30 கிலோமீட்டர் தூரம்வரை நடந்து செல்ல முடிந்தது. பயணிகள் தூரத்தைக் கணக்கிட ஆங்காங்கே மைல்கல் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த மைல்கல் வித்தியாசமான வடிவங்களில் இருந்தாலும் பொதுவாக நீள் உருளை வடிவிலேயே காணப்பட்டன. 1,480 மீட்டர் இடைவெளியில் இவை நிறுத்தப்பட்டிருந்தன; ரோமர்களின் கணக்குபடி, ஒரு மைல்தூரம் என்பது 1,480 மீட்டருக்குச் சமம். ஓய்வெடுப்பதற்கு அந்தச் சாலைகளில் வசதியான இடங்களும் இருந்தன. பயணிகள் அங்கு குதிரைகளை மாற்றிக்கொள்ளவோ, உணவை வாங்கவோ முடிந்தது, சில இடங்களில் இரவு தங்குவதற்கு விடுதியும் இருந்தது. பிற்பாடு இந்த இடங்களில் சில, சிறு சிறு பட்டணங்களாக மாறின.
இயேசு கிறிஸ்து பிறந்து கொஞ்ச காலத்திற்குள் அகஸ்டஸ் சீசர் சாலை பராமரிப்பு திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தார். ஒன்று அல்லது அதற்கும் அதிகமான சாலைகளைக் கவனித்துக்கொள்ள அதிகாரிகளை நியமித்தார். மில்யார்யும் ஔராயியும் என்ற பெயரில் பொன்னாலான மைல்கல்லை ரோம அரங்கத்தில் நிறுத்தினார். பொன்னாலான அந்த மைல்கல்மீது வெண்கல எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன; இந்தக் கல் நிறுத்தப்பட்ட இடத்தில்தான் இத்தாலியிலுள்ள ரோம் நகரின் எல்லா சாலைகளும் வந்து முடிவடைந்தன. இதனால்தான், “எல்லாச் சாலைகளும் ரோமில் போய் முடிவடைகின்றன” என்ற ஆங்கிலப் பழமொழி உருவானது. ரோம பேரரசினுடைய சாலைகளின் வரைபடத்தையும் அகஸ்டஸ் பொதுவிடங்களில் வைத்தார். இந்தச் சாலைகள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ததோடு நல்ல நிலையிலும் அக்காலத்துக்கேற்ற தரத்திலும் இருந்ததாகத் தெரிகிறது.
பூர்வகால பயணிகள் சிலர் பயணத்திற்கு உதவியாக வழிகாட்டி புத்தகங்களைக்கூட பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு நிறுத்துமிடத்திற்கும் இடையே உள்ள தூரம், அங்கு கிடைக்கும் வசதிகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் இந்தப் புத்தகங்களில் இருந்தன. எனினும், இப்புத்தகங்களின் விலை அதிகமாக இருந்ததால் எல்லாராலும் இவற்றை வாங்கிப் பயன்படுத்த முடியவில்லை.
ஆனாலும், கிறிஸ்தவ சுவிசேஷகர்கள் தூர இடங்களுக்குப் பல முறை திட்டமிட்டுப் பயணித்தார்கள். அப்போஸ்தலன் பவுல் தன் காலத்தில் வாழ்ந்தவர்களைப் போலவே கிழக்கு நோக்கி சென்றபோதெல்லாம் வழக்கமாக வீசும் கடல் காற்றை சாதகமாக்கிக்கொண்டு கடலில் பயணித்தார். (அப்போஸ்தலர் 14:25, 26; 20:3; 21:1-3) கோடை காலங்களிலோ, மத்தியதரைக் கடலில் இந்தக் காற்று மேற்கிலிருந்து வீசும். எனவே, பவுல் மேற்கு நோக்கி பயணிக்கையில் ரோமர்கள் அமைத்த இச்சாலைகளைப் பயன்படுத்தி பெரும்பாலும் தரை மார்க்கமாகவே பயணித்தார். இந்த விதத்திலேயே பவுல் தன்னுடைய இரண்டாவது, மூன்றாவது மிஷனரி பயணங்களைத் திட்டமிட்டார். (அப்போஸ்தலர் 15:36-41; 16:6-8; 17:1, 10; 18:22, 23; 19:1)a சுமார் பொ.ச. 59-ல் ரோமுக்கு செல்லும் அப்பியன் சாலை வழியாக பவுல் பயணித்தார். அப்போது சுறுசுறுப்பாக இயங்கி வந்த அப்பியுபுரத்தில் அல்லது அப்பியஸ் சந்தைவெளியில் சகோதரர்களைச் சந்தித்தார். இது ரோமிலிருந்து தென்கிழக்கில் 74 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இன்னும் சிலரோ ரோமிலிருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மூன்று சத்திரத்தில் பவுலை சந்திப்பதற்காகக் காத்திருந்தார்கள். (அப்போஸ்தலர் 28:13-15) சுமார் பொ.ச. 60-ல் அப்போது அறியப்பட்ட “உலகமெங்கும்” நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டிருப்பதாக பவுலால் சொல்ல முடிந்தது. (கொலோசெயர் 1:6, 23) இதில் ரோமர்கள் அமைத்த சாலைகளுக்கும் பங்கு உண்டு.
ஆக, ரோமர்களின் சாலைகள் நிகரற்ற, நிலைத்திருக்கும் நினைவுச்சின்னங்களாக நிரூபித்திருக்கின்றன. கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பரப்புவதிலும் பங்கு வகித்திருக்கின்றன.—மத்தேயு 24:14.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற சிற்றேட்டில் பக்கம் 33-ல் உள்ள வரைபடத்தைக் காண்க.
[பக்கம் 14-ன் படம்]
ரோமர் காலத்து மைல்கல்
[பக்கம் 15-ன் படம்]
இத்தாலியில் பூர்வகால ஆஸ்டியாவிலுள்ள ஒரு சாலை
[பக்கம் 15-ன் படம்]
ஆஸ்திரியாவில் பூர்வகால வண்டிகள் சாலைகளில் ஏற்படுத்திய தடயங்கள்
[பக்கம் 15-ன் படம்]
ஆங்காங்கே மைல்கல் நிறுத்தப்பட்ட ரோம சாலையின் ஒரு பகுதி, ஜோர்டான்
[பக்கம் 15-ன் படம்]
ரோமின் புறநகரில் அப்பியன் சாலை
[பக்கம் 16-ன் படம்]
ரோமின் புறநகரில் அப்பியன் சாலையில் கல்லறைகளின் இடிபாடுகள்
[பக்கம் 16-ன் படம்]
ஃபிலமினியா சாலையில் ஃபர்லோ சுரங்கம், மார்ஷ் பகுதி
[பக்கம் 16, 17-ன் படம்]
இத்தாலியில் ரிமினி என்ற இடத்தில் வியா எமிலியாவில் உள்ள டைபீரியஸ் பாலம்
[பக்கம் 17-ன் படம்]
சந்தடிமிக்க அப்பியுபுரத்தில் பவுல் சகோதரர்களைச் சந்தித்தார்
[பக்கம் 15-ன் படங்களுக்கான நன்றி]
இடக்கோடி, ஆஸ்டியா: ©danilo donadoni/Marka/age fotostock; வலக்கோடி, மைல்கல் நிறுத்தப்பட்ட ஒரு சாலை: Pictorial Archive (Near Eastern History) Est.