பிள்ளைகள் ஏன் திறமையான போராளி ஆகிறார்கள்
நீ கொல செஞ்சியா? “இல்ல.”
உன்கிட்ட துப்பாக்கி இருந்துச்சா? “ஆமா.”
நீ அதுல குறிபாத்தியா? “ஆமா.”
நீ அதால சுட்டியா? “ஆமா.”
என்ன நடந்துச்சு? “அவங்க அப்படியே விழுந்துட்டாங்க.”—உவர்ல்டு பிரஸ் ரிவ்யூ, ஜனவரி 1996.
ஆப்பிரிக்காவில் ஒரு சமூக சேவகருக்கும் குழந்தைப் போராளிக்கும் இடையே நடந்த திகிலூட்டும் இவ்வுரையாடல், கடந்தகாலத்தில் நடந்ததையெல்லாம் மறக்கப்போராடும் ஒரு இளம் மனதின் குழப்பத்தை வெளிக்காட்டுகிறது.
சமீப ஆண்டுகளில், 25 நாடுகளில், 16 வயதுக்கும் கீழேயுள்ள பிள்ளைகள் போரில் சேர்ந்துள்ளனர். 1988-ல் மட்டுமே, சுமார் 2,00,000 பிள்ளைகள் போர்களில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். பெரியவர்களால் துர்ப்பிரயோகிக்கப்படுவதன் காரணமாக, பிள்ளைப் போராளிகள் போருக்கு பலியாட்களாகிறார்கள்.
போராளிகளாக அவர்களுடைய மதிப்பு
முற்காலங்களில், படைகள் ஈட்டியையும், வாளையும் வைத்துக்கொண்டு போரிட்டபோது, அத்தகைய ஆயுதத்தால் பெரியவர்களை சரிக்குசமமாய் எதிர்த்து நிற்பதற்கான வாய்ப்பு பிள்ளைக்கு குறைவாகவே இருந்தது. ஆனால், கனமற்ற போர்க்கருவிகளின் யுகமன்றோ இது. இன்று, சோவியத் தயாரிப்பான ஏகே-47 அல்லது அமெரிக்கத் தயாரிப்பான எம்-16 என்ற பயங்கர துப்பாக்கிகளில் ஒன்றை ஏந்திக்கொண்டிருக்கும் பிள்ளை வயதுவந்த ஒருவரை சமாளிக்கிறது.
இந்த ஆயுதங்கள் கனமற்றவையாக இருப்பதோடு, பயன்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் சுலபமானவையாகவும்கூட இருக்கின்றன. பத்து வயது பையன், ஒருவன் ஏகே-47 துப்பாக்கியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப்போட்டு மறுபடியும் ஒன்றுசேர்த்துவிடுவான். இந்த துப்பாக்கிகள் ஏராளமாகவும் கிடைக்கின்றன. ஏறத்தாழ 5.5 கோடி ஏகே-47 துப்பாக்கிகள் விற்கப்பட்டுள்ளன. ஒரு ஆப்பிரிக்க நாட்டில், 6 டாலர் (ஐ.மா.) என்ற மிகக் குறைந்த விலைக்கு அவற்றை விற்கின்றனர். எம்-16 துப்பாக்கிகளும்கூட மிகுதியாகவும், மலிவாகவும் கிடைக்கின்றன.
பிள்ளைகள் பயங்கரமான துப்பாக்கிகளைக் கையாள முடிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதோடுகூட, போராளிகளாக அவர்கள் மதிக்கப்படுவதற்கு மற்ற காரணங்களும் உள்ளன. அவர்கள் ஊதியத்திற்காக கோரிக்கை விடுக்கிறதில்லை; மேலும் அவர்கள் அரிதாகவே தப்பியோடுகிறார்கள். கூடுதலாக, பிள்ளைகளுக்கு தங்களைவிட மூத்தவர்களை பிரியப்படுத்த வேண்டுமென்கிற கடும் ஆவல் இருக்கிறது. சரி எது, தவறு எது என்பது பற்றிய அவர்களின் உணர்வு, அவர்களுடைய “குடும்பமாக” ஆகிவிட்டிருக்கும் ஏதாயினும் விடுதலை இயக்கத்தாலோ கொரில்லா படையாலோ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆசையால் புறக்கணிக்கப்படுகிறது.
அவர்களில் பெரும்பான்மையோர் பயமற்றவர்களாய் இருப்பதுபோலவே தெரிகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் இராணுவ கருத்தறிவிப்பாளர் ஒருவர் இவ்வாறு விளக்குகிறார்: “மரணத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் மூத்த போர்வீரர்களுக்கு இருக்கும் அதே அளவில் [பிள்ளைகளுக்கு] இல்லாததால், நம்பிக்கையிழந்த சூழ்நிலைகளில் சரணடைவதற்கான சாத்தியம் இவர்களிடம் குறைவே.” காப்டன் கில்லிங் மெஷின் என்ற பட்டப்பெயரைப் பெற்றிருந்த ஒரு லைபீரியச் சிறுவன் இவ்விதமாக மார்தட்டிக் கொண்டான்: “பெரியவங்கல்லாம் பயந்து ஓடிட்டாங்க; நாங்க, பொடிப்பசங்க விடாம சண்டை போட்டோம்.”
எதிர்பார்ப்புக்கு முரணாக, பையன்கள் சிறந்த போர்வீரர்களாக ஆகமுடிந்தாலும்கூட, இவர்கள் ஏராளமாக கிடைக்கும் கிள்ளுக்கீரையாக கருதப்படுகிறார்கள். மத்திய கிழக்கில் நடந்த ஒரு போரில், குழந்தைப் போராளிகள் அடங்கிய ஒரு படைப்பிரிவினர் வெடிமருந்துள்ள சுரங்கப்பகுதியின் வழியாக செல்லும்படி உத்தரவிடப்பட்டனர்.
ஆள்சேர்ப்பும் அதற்கேற்ற சூழ்நிலையும்
சில பிள்ளைகள் துணிகரச் செயலில் ஈடுபடவேண்டும் என்ற ஆசையால் படைகள் அல்லது புரட்சி இயக்கங்களில் சேர்ந்துகொள்கிறார்கள். கூடுதலாக, ஆபத்தின் பயமுறுத்தலிலும், குடும்பங்கள் ஒழுங்கற்ற நிலையிலும் இருக்கும்போதும், ஒரு படைப்பிரிவு பாதுகாப்பான உணர்வை அளித்து ஒரு குடும்பமாக மாறிவிடுகிறது. ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல அமைப்பு இவ்வாறு சொல்கிறது: “வன்முறை நிறைந்த சூழலில் வளர்ந்துவந்த பிள்ளைகள் இதை ஒரு நிரந்தரமான வாழ்க்கைமுறையாக காண்கிறார்கள். தனிமரமாகவும், அனாதையாகவும், பயமுறுத்தப்பட்டவர்களாகவும், சலிப்படைந்தவர்களாகவும், ஏமாற்றப்பட்டவர்களாகவும் இவர்கள் கடைசியில் போர்வீரர்களாவதையே பொதுவாய் தெரிவுசெய்கின்றனர்.”
இதைவிட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில்தான் மற்ற பிள்ளைகள் படையில் சேர்ந்துகொள்கிறார்கள். சிலசமயங்களில், உணவுத் தட்டுப்பாடும், ஆபத்து பயமுறுத்திக்கொண்டும் இருக்கும்போது, ஒரு படையைச் சேர்ந்துகொள்வதே உயிர்ப்பிழைப்பதற்கான ஒரே வழியாகத் தோன்றக்கூடும்.
சமுதாய நீதி, மத நம்பிக்கைகள், அல்லது கலாச்சார தனித்துவங்கள் ஆகியவற்றுக்காக தாங்கள் போரிடுவதாக சிலசமயங்களில் பிள்ளைகளுக்கு தெரியக்கூடும். உதாரணமாக, பெருவில் கொரில்லா படைகளில் சேர்ந்துகொள்ளுமாறு பலவந்தப்படுத்தப்படும் பிள்ளைகள் நீண்ட காலங்களுக்கு அரசியல்ரீதியில் கற்பிக்கப்படுகிறார்கள். இருந்தபோதிலும், பெரும்பாலும், இவ்வாறு கற்பிக்கப்படும் தேவை ஏற்படுவதில்லை. தென்கிழக்கு ஆசியாவில் குழந்தைப் போராளிகளைக் குறித்து ஆய்வுசெய்த, சமுதாய மனித இன நூலர் பிரயன் மில்ன் இவ்வாறு சொன்னார்: “குழந்தைகளுக்கு கோட்பாடுகளோ கொள்கைகளோ கிடையாது. ஏதாவது ஒருபக்கம் இழுக்கப்பட்டு வேலைவாங்கப்படுகிறார்கள்.”
இவர்களைத்தவிர மற்ற பிள்ளைகளும்கூட சேர்ந்துகொள்ளும்படியாக வற்புறுத்தப்படுகின்றனர். ஆப்பிரிக்காவில் நடந்த சில போர்களில், தன்னலக் கும்பல்கள் பிள்ளைகளைப் பிடிப்பதற்காகவே கிராமங்களைத் தாக்குகின்றன. பிறகு, இப்பிள்ளைகள் தங்களுடைய சொந்த குடும்பங்கள் துன்புறுவதையும் கொல்லப்படுவதையும் நேரில் பார்க்கும்படியோ, தாங்களே அதில் ஈடுபடும்படியோ செய்யப்படுகிறார்கள். சிலசமயங்களில், தங்களுடைய பெற்றோர்களை சுடும்படியோ, அவர்களுடைய குரல்வளையை அறுக்கும்படியோ கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஒருமுறை பயங்கரவாதிகளாகிவிட்டால், பின்பு இப்பையன்கள் இயல்பாகவே மற்றவர்களிடம் பயங்கரமாக நடந்துகொள்ள ஆரம்பிக்கின்றனர். இந்த மிருகத்தனமாக்கப்பட்ட இளைஞர்கள், அனுபவம் வாய்ந்த பெரிய போர்வீரர்கள் செய்ய மறுக்கும் கொடூரமான செயல்களைக்கூட பெரும்பாலும் செய்வார்கள்.
இயல்பு வாழ்க்கைக்கு திரும்புதல்
வன்முறையற்ற வாழ்க்கைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்வது இத்தகைய பிள்ளைகளுக்கு எளிதல்ல. மேற்கு ஆப்பிரிக்க தேசம் ஒன்றிலுள்ள குழந்தைகள் அமைப்பு ஒன்றின் இயக்குநர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நாங்க சிகிச்சையளித்திருக்கிற பிள்ளைங்க எல்லாருமே வித்தியாசப்பட்ட அளவுகள்ல மன அதிர்ச்சியடைந்திருக்கிறாங்க. அவங்க கற்பழிப்பு, கொலை, சித்திரவதை போன்ற செயல்களிலெல்லாம் ஈடுபட்டிருக்காங்க. அவங்கள்ல அநேகருக்கு மதுபானமோ போதைப்பொருளோ கொடுக்கப்பட்டிருக்குது, பெரும்பாலும் மரிஜூவானா, ஆனால் சிலசமயங்களில் ஹெராயின். . . . இந்தப் பிள்ளைங்களோட மனசில இவையெல்லாம் ஏற்படுத்தியிருக்கிற பயங்கரமான பாதிப்புகளை கொஞ்சம் கற்பனை செஞ்சுபாருங்க. இவங்கள்ல சிலருக்கு எட்டோ, ஒன்பதோ வயசுதான் இருக்கும்.”
இதன் அண்டைநாடான லைபீரியாவிலும் சூழ்நிலை இவ்விதமாகத்தான் உள்ளது. இங்குள்ள ஆயிரக்கணக்கான பிள்ளைகள் நாட்டுப்புற குடிமக்களுக்கு கொடுமை செய்வதிலேயே தங்களுடைய குழந்தைப்பருவத்தை கழித்திருக்கிறார்கள். டீனேஜ் மேஜர்களுக்கும் ஜெனரல்களுக்கும் ஒரு ஏகே-47 கொடுத்திருக்கும் அந்தஸ்தையும் அதிகாரத்தையும் விட்டுவருவது அவ்வளவு சுலபமல்ல. சோமாலியாவில் வாழும் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “உங்ககிட்ட ஒரு துப்பாக்கி இருந்தா நீங்க பிழைச்சுக்கலாம். துப்பாக்கி இல்லேனா, உங்ககதி அதோகதிதான்.”
பெரும்பாலும், பழிவாங்கப்படுவதாலோ, தங்கள் குடும்பத்தாரால் ஒதுக்கித்தள்ளப்படுவதாலோ பிள்ளைப் போராளிகள் தங்களுடைய வீட்டுக்கு திரும்ப முடிகிறதில்லை. லைபீரியாவிலுள்ள ஒரு பிள்ளை ஆலோசகர் சொன்னார்: “தாய்மார்கள் எங்களிடம் சொல்வார்கள், ‘அவனை உங்ககிட்டயே வெச்சுக்கோங்க. இந்தமாதிரியொரு ராட்சசன் எங்களுக்கு வேண்டவே வேண்டாம்.’ ”
சில பிள்ளைகள் அமைதியான வாழ்க்கைக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டபோதிலும்கூட, அவ்விதம் செய்வதற்கு, அவர்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து மிகப்பெரிய அளவில் அன்பும், ஆதரவும், புரிந்துகொள்ளுதலும் தேவைப்படுகிறது. இவ்விதம் செய்வது அந்தப் பிள்ளைகளுக்கோ அவர்களுடைய குடும்பங்களுக்கோ சுலபமல்ல. மொஸாம்பிக்கிலுள்ள ஒரு சமூக சேவகர் இவ்வாறு விளக்குகிறார்: “உங்களுக்கு வேணுங்கிறத எடுத்துகிட்டு, செய்ய வேண்டியத மத்தவங்ககிட்ட சொல்லிகிட்டு இருக்கிற வாழ்க்கையோட, கிராமத்துக்கு திரும்பி வந்ததுக்கப்புறம் உள்ள வாழ்க்கையை ஒத்துப்பாருங்க. முக்கியமா 17 வயசுலே, படிக்கத் தெரியாம, எந்தத் திறமையும் இல்லாம இருந்துச்சுன்னா சொல்லவே வேண்டாம். உங்கள சலிப்புத்தட்டற வாழ்க்கைக்குள்ள தள்ளிட்டமாதிரி இருக்கும். என்ன செய்யனும்ன்னு மத்தவங்க சொல்றத கேட்கணும், மொத வகுப்புல இருந்து படிக்கணும் அப்படிங்கிறதனாலேயே திரும்பி வரது ரொம்பவும் கஷ்டமான விஷயம்தான்.”
[பக்கம் 5-ன் பெட்டி]
பதிமூன்று வயதான அன்வர் ஆப்கானிஸ்தானத்தில் வாழ்கிறான். ஆறு தடவை போரில் ஈடுபட்டிருந்த அவன், ஏழாவது போரில் முதல் தடவையாக கொன்றான். மிக அருகில் இரண்டு போர்வீரர்களைக் கொன்றான்; பிறகு அவர்கள் செத்துவிட்டார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள துப்பாக்கி முனையால் அவர்களுடைய உடலில் குத்தினான். இந்த சம்பவத்தைக் குறித்து அவன் எப்படி உணர்ந்தான் என்று கேட்டபோது, அன்வர் அந்தக் கேள்வியால் குழப்பமடைந்தது போல தெரிந்தான். “அவங்கள கொன்னதுல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு” என்று அவன் சொன்னான்.
அதே போரில், அன்வரின் கூட்டாளிகள் நான்கு எதிரி வீரர்களைப் பிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட இவர்கள் பின்பு கட்டப்பட்டு, குருடாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அதைக் குறித்து அன்வர் எப்படி உணர்ந்தான்? இந்த இளம் வீரன் இதென்ன முட்டாள்தனமான கேள்வி என்பதைப்போல தன்னுடைய புருவங்களை உயர்த்தி, மெதுவாகவும் நிதானமாகவும் பதிலளித்தான்: “எனக்கு சந்தோஷமாயிருந்துச்சு.”
[பக்கம் 6-ன் பெட்டி]
மேற்கு ஆப்பிரிக்காவில், விரைவில் விடுதலை செய்யப்படவிருந்த ஒரு கைதி விலங்கிடப்பட்டிருந்தான்; ஆனால் இராணுவ தளபதியோ அவ்விலங்கினுடைய சாவிகளைத் தொலைத்துவிட்டான். அந்தக் கைதியின் கைகளை வெட்டும்படி ஒரு பிள்ளைப் போர்வீரனுக்கு கட்டளையிடுவதன்மூலம் அத்தளபதி அப்பிரச்சினையைத் தீர்த்தான். அந்தப் பையன் இவ்வாறு சொல்கிறான்: “கனவுலகூட அந்த ஆள் அலறின சத்தம் கேட்டுக்கிட்டேயிருக்கு. அவனை நெனச்சுப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு வருத்தமா இருக்கு.”