குழந்தைப்பருவம் ஒரு கொடுங்கனவாக இருக்கும்போது
ஸ்பெய்னிலுள்ள விழித்தெழு! நிருபர்
இன்று—1990-களில் ஒரு சாதாரண தினத்தன்று—2 லட்சம் பிள்ளைகள் கொரில்லா யுத்தங்களில் போராடுவர், பள்ளி-வயதை அடைந்த 10 கோடி பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பர், 15 கோடி பிள்ளைகள் பட்டினியாக படுக்கைக்குச் செல்வர், மூன்று கோடி பிள்ளைகள் தெருக்களில் உறங்குவர், மேலும் 40 ஆயிரம் பிள்ளைகள் மரிப்பர்.
மேற்காணும் புள்ளிவிவரங்கள் அச்சுறுத்துபவையாக தோன்றுமானால், அப்புள்ளிவிவரங்களின் பின்னால் மறைந்திருக்கும் முகங்கள் கடும் வேதனை அளிப்பவையாய் இருக்கின்றன. கீழே ஐந்து பிள்ளைகளின் சுருக்கமான கதைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய துயரகரமான வாழ்க்கைப் போராட்டங்கள் அச்சுறுத்தும் இந்தப் புள்ளிவிவரங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவிசெய்கின்றன.
ஒரு பிள்ளை போர்வீரன். முகமதுக்கு 13 வயதுதான் ஆகிறது. ஆனால் தென்மேற்கு ஆசியாவில் அவன் ஏற்கெனவே நன்கு கைதேர்ந்த போர்வீரனாக, ஏழு யுத்தங்களில் போராடிய அனுபவமுடையவனாக இருக்கிறான். யுத்தத்திற்குச் செல்லுமுன், பத்து வயதில், அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். முகமது இப்போது ஒரு லைட்வெய்ட் “AK-47” துப்பாக்கியை நன்கு கையாளுகிறான். அதை உபயோகிக்க அவன் தயங்குவதில்லை. ஒரு சில்லறைச் சண்டையில் அவன் எதிரிப்படை போர்வீரர்கள் இருவரை மிகவும் அருகாமையில் சுட்டுக்கொன்றான். கொல்லுவதைப்பற்றி அவன் எப்படி உணர்ந்தான் என்று கேட்டபோது அவன் சொன்னான்: “அவர்களைக் கொன்றதனால் நான் மகிழ்ச்சியடைந்தேன்.” பிள்ளைகள் நல்ல போர்வீரர்களாக இருக்கிறார்கள், “ஏனென்றால் அவர்கள் பயப்படுவதில்லை,” என்று அவனுடைய அதிகாரி விளக்குகிறார்.
ஒரு குழந்தைத் தொழிலாளி. நான்கு வயது ஊட்கேபி ஒரு கரிபியன் தீவில் சிமெண்டிலும் நிலக்கரியிலும் கட்டப்பட்ட ஒரு வீட்டில் குடியிருக்கிறான். அவன் தன்னுடைய அனுதின வீட்டுவேலைகளைச் செய்வதற்கு காலை 6:00 மணிக்கு எழுந்திருக்கிறான். சமைத்தல், தண்ணீர் எடுத்தல், தன்னுடைய எஜமானின் வீட்டைச் சுத்தப்படுத்துதல் போன்ற வேலைகளைச் செய்கிறான். அவனுக்குக் கூலி ஒன்றும் கிடைப்பதில்லை. ஒருவேளை பள்ளிக்கு ஒருபோதும் செல்லப்போவதில்லை. தன்னுடைய பெற்றோர் இல்லாத குறையை உணர்வதாக ஊட்கேபி சொல்கிறான். ஆனால் அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவனுடைய வேலை இரவு 9:30 மணிக்கு முடிவடைகிறது. எல்லாம் நல்லபடியாக நடந்தால் அவன் பட்டினியாக படுக்கைக்குப் போகமாட்டான்.
பட்டினி கிடக்கும் ஒரு பிள்ளை. கோமோசாவா என்ற ஒரு ஆப்பிரிக்க கிராமத்தில், 11 வயது சிறுமி ஒருத்தி களைப்பூட்டும் ஒவ்வொரு நாளையும் களைகளைப் பிடுங்குவதில் செலவழிக்கிறாள். வெங்காயத்தின் அந்தத் தண்டுகள் அவளும் அவளுடைய குடும்பத்தினரும் பிழைத்திருக்க உதவுகிறது. அந்த வறண்ட நிலத்தில் வளர்வதெல்லாம் வெங்காயம் மட்டுமே. வெங்காயம் வேகவைக்கப்பட்டோ கூழாக்கப்பட்டோ வறுக்கப்படுகிறது. வறட்சி, உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் ஒரு கொடூரமும் சேர்ந்து, கிராமவாசிகளை பட்டினியின் எல்லைக் கோட்டிற்குக் கொண்டுவந்திருக்கிறது.
ஒரு தெருப்பிள்ளை. எடிசன், ஒரு பெரிய தென் அமெரிக்க நகரத்தின் தெருவில் வாழும் ஆயிரக்கணக்கான தெருப்பிள்ளைகளில் ஒருவனே. ஷூ பாலிஷ் போட்டுக்கொடுத்து கொஞ்சம் பணத்தைச் சம்பாதிக்கிறான். பேருந்து நிலையத்திற்கு அருகேயுள்ள நடைபாதையில் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து உறங்குகிறான். குளிர்மிகுந்த இரவுகளில் அவர்கள் ஒருவரையொருவர் நெருக்கி படுத்துக்கொள்கின்றனர். ஷூ பாலிஷ் போடும் ஒரு பையனாக தன்னுடைய வருமானத்தைச் சிறிது கூட்டுவதற்கு அவ்வப்போது சிறு குற்றச்செயலைச் செய்வதுண்டு. இருமுறை போலீசால் அடிக்கப்பட்டு, மூன்றுமாத ஜெயில் தண்டனையை அனுபவித்திருக்கிறான். இப்போது போதைப் பொருட்களையும் பசைப் புகை உறிஞ்சுவதையும் (+glue sniffing) “கிட்டத்தட்ட” நிறுத்திவிட்டதாக உறுதியாக கூறுகிறான். அவன் ஒரு மெக்கானிக்காக ஆவதற்கும், ஒரு கைத்தொழிலைக் கற்பதற்கும் பேராவலைக் கொண்டிருக்கிறான்.
ஒரு பிள்ளையின் மரணம். மத்தியக் கிழக்கு தேசத்தில் உள்ள ட்யூகன் மலையில் அது குளிர்ந்த ஈரமான காலைநேரமாக இருக்கிறது. சவத்துணியில் பொதியப்பட்ட ஒரு சிறுகுழந்தை, ஆழமில்லாத ஒரு சவக்குழியில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழந்தை, குழந்தைகளின் மரணத்திற்கு ஒரு பொது காரணமாக இருக்கும் வயிற்றுப் போக்கினால் இறந்துவிடுகிறது. அதன் தாய் ஒரு அகதியாக இருக்கிறாள். பாதுகாப்பிடத்தைத் தேடி ஓடிவந்த, ஆற்றலிழக்கச்செய்யும் பயணத்தின்போது அவளுடைய பால் வற்றிப்போய்விட்டது. தன்னுடைய குழந்தையைக் காப்பாற்றும் போராட்டத்தில் சர்க்கரையையும் தண்ணீரையும் கலக்கிக் கொடுத்தாள்; ஆனால் அந்தத் தண்ணீர் நோய்க்கிருமிகளை கொண்டிருந்தது. ஆகவே அந்தக் குழந்தை இறந்துவிட்டது. அதே நாளில் புதைக்கப்பட்ட மற்ற 25,000 பிள்ளைகளைப் போலவே, அவன் தன்னுடைய முதலாவது பிறந்த நாளைக்கூட காணவேயில்லை.
ஆயிரக்கணக்கான மடங்குகளாக பெருக்கினால், இந்தத் துயர சரிதைகள், உலக பிள்ளைகள் அநேகருக்கு வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதை விளக்குகின்றன. அன்பான குடும்பத்தின் அரவணைப்பில் கற்றறிந்து, முதிர்ச்சியடையவேண்டிய ஒரு காலகட்டமாக இருக்கிறது குழந்தைப்பருவம். அப்பருவம் இப்பிள்ளைகளுக்கோ ஒரு கொடுங்கனவாக ஆகிவிட்டிருக்கிறது. அதிலிருந்து அநேகர் ஒருபோதும் விழித்தெழப்போவதில்லை.
உலக பிள்ளைகளின் நிலைமை (The State of the World’s Children) என்ற அறிக்கையின் ஆசிரியர் பீட்டர் ஆடம்ஸன், 1990-ல் இவ்வாறு அறிவித்தார்: “இந்த அளவு மரணமும் துன்பமும் இனி ஒருபோதும் அவசியமாகவே இருக்காது; ஆகவே அவை இனி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படுபவையாக இல்லை. தார்மீகக் கடமை திறமையுடன் கைகோர்த்து நடைபோட வேண்டும்.”