எமது வாசகரிடமிருந்து
சகிப்புத்தன்மை எனக்கு 22 வயது. “சகிப்புத்தன்மை—உலகம் மிதமிஞ்சிப் போய்விட்டதா?” (ஜனவரி 22, 1997) என்ற தொடர் கட்டுரைக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இளம் கிறிஸ்தவர்கள் அநேக சவால்களை எதிர்ப்படவேண்டியுள்ளனர். இந்தக் கட்டுரைகள், அளவுக்குமீறி சென்றுவிடாமலிருப்பதற்கு என்னை உற்சாகப்படுத்தி, உலக அழுத்தங்களின் மத்தியிலும் யெகோவாவை சேவிப்பதற்கான என்னுடைய திடத்தீர்மானத்தை பலப்படுத்தின.
எம். பி., இத்தாலி
ரேவன் “ரேவன்—அதை வேறுபடுத்துவது எது?” (ஜனவரி 8, 1997) என்ற தகவல்நிறைந்த கட்டுரையை நான் உண்மையில் விரும்பி வாசித்தேன். எனக்கு 18 வயது. சமீபத்தில் உள்ளூரிலுள்ள இயற்கை மையம் ஒன்றில் பகுதி நேர இயற்கையியலாளராக வேலைக்கு அமர்த்தப்பட்டேன். நாங்கள் வளர்க்கும் பிராணிகளில், இரண்டு அழகான ரேவன்களும் உள்ளன. உங்கள் கட்டுரையில் விவரித்திருந்தபடியே அவை மிகவும் புத்திசாலித்தனமானவையாக இருப்பதைக் கண்டேன். என்னுடன் வேலை செய்பவர்களோடு அந்தக் கட்டுரையை பகிர்ந்துகொள்ள திட்டமிட்டிருக்கிறேன்.
ஜெ. கே., ஐக்கிய மாகாணங்கள்
நீங்கள் அளித்திருந்த தகவல் மிக உண்மையானதாகவும், ஆர்வத்துக்குரியதாகவும் இருந்தது. காக்கை குடும்பத்தைச் சேர்ந்த இப்பறவைகள் பேர்போன திருடர்கள் என்ற விஷயம், இங்கே, கானாவில் என் யுனிவர்சிட்டி வளாகத்தில் நன்கு அறியப்பட்டிருக்கிறது. இங்கேயுள்ள காகங்கள் மீனில் இருந்து சோப்பு வரையாக எதைவேண்டுமானாலும் திருடும் என்று அறியப்பட்டிருக்கிறது. காகங்கள், சில மாணவர்களுடைய சமையல் பாத்திரத்தின் மூடியைத் தள்ளிவிட்டு, அவர்களுடைய உணவைத் தின்றிருப்பதாகவும்கூட புகார் செய்யப்பட்டிருக்கிறது!
எப். ஏ. ஏ., கானா
மனம் கவரும் சமையலறை “மனம் கவரும் இடமாக்கலாம் சமையலறையை” (ஜனவரி 8, 1997) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. சமையலறையில் நடக்கும் சம்பாஷணைகளால் நானும்கூட பயன் பெற்றிருக்கிறேன். வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் தோலுரிக்கும்போது, யெகோவாவை நேசிக்க என் அம்மா எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். அவரை முழுமையாக சேவிக்கவும் என்னை உற்சாகப்படுத்தினார்கள். அப்பா எங்களை மதசம்பந்தமாக எதிர்த்த அந்தக் கடினமான காலப்பகுதியில் இப்படிப்பட்ட சமையலறை சம்பாஷணைகள் பிரத்தியேக மதிப்புள்ளவையாக நிரூபித்திருக்கின்றன. இப்போது என்னுடைய அப்பாவும் யெகோவாவின் ஒரு ஊழியராக ஆகியிருப்பதைப் பார்ப்பது எனக்கும், அம்மாவுக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. அநேக ருசியான பதார்த்தங்களைச் சமைப்பதற்கும்கூட நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்!
ஏ. எம். எம்., இத்தாலி
கேளிக்கை இண்டஸ்ட்ரியில் முதலாளியாக இருக்கும் ஒருவருடைய வீட்டில் சமையல்காரியாக நான் வேலை செய்கிறேன். சமையலறையில் வேலை செய்யும்போது, அங்குவரும் பார்வையாளர்களிடம் ஆவிக்குரிய உணவை பகிர்ந்து கொள்வதற்கு எனக்கு அநேக வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அப்படிப் பகிர்ந்து கொண்டவர்களில் புகழ் பெற்ற சிலரும் இருந்திருக்கின்றனர். சமையலறை இழுப்பறையில் சில பைபிள் இலக்கியங்களை நான் வைத்திருக்கிறேன். ஒரு சந்தர்ப்பத்தில் பார்வையாளர் ஒருவரோடு பைபிள் கலந்தாலோசிப்பைக் கொண்டிருந்தேன். கூடுதலாக கலந்தாலோசிப்பதற்கு அவர் பின்பு சமையலறைக்குள் வந்தார். நான் கோழியை வறுப்பதில் மும்முரமாக இருந்தபோது, அவர் என்னுடைய வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்திலிருந்து சப்தமாக வாசித்தார். ஆம், நீங்கள் சொன்னது சரியே. சமையலறையை மனம்கவரும் இடமாக்கலாம்.
எ. ஆர்., ஐக்கிய மாகாணங்கள்
பாவ அறிக்கை செய்தல் நான் ஒரு சபை மூப்பராக சேவை செய்கிறேன். “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் பாவ அறிக்கை செய்ய வேண்டுமா?” (ஜனவரி 22, 1997) என்ற கட்டுரைக்காக நான் என்னுடைய போற்றுதலை தெரிவிக்க விரும்புகிறேன். சில காலங்களுக்கு முன்பு அவர்கள் செய்திருந்த வினைமையான பாவங்களை அறிக்கையிடுவதற்கு இந்தக் கட்டுரை அநேக இளைஞர்களை தூண்டியது. அன்பான உதவியைப் பெற்றுக்கொண்ட பிறகு, யெகோவாவோடுள்ள தங்களுடைய உறவை இந்த இளைஞர்கள் புதுப்பித்துக்கொண்டதை காண்பது சந்தோஷமளித்தது. அவர்கள் தங்களை சுத்தமுள்ளவர்களாக வைக்கத் தீர்மானித்திருக்கின்றனர்.
ஓ. பி., இத்தாலி
அமைதியாக இருப்பது அதிக கேடு விளைவிக்கலாம் என்பதை புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை எனக்கு உதவியது. அறிக்கை செய்வது வெட்கத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தக்கூடும்; ஆனால் உங்களுடைய பாவத்தை யெகோவாவிடமும், உங்கள் பெற்றோரிடமும் அறிக்கை செய்துவிட்டீர்களென்றால், அவர்களோடு ஒரு நெருங்கிய, பலமான உறவை அனுபவிப்பீர்கள்.
பி. கே., கயானா
இந்தக் கட்டுரை எனக்கு ஏற்ற சமயத்தில் கிடைத்தது. நான் செய்திருப்பதை என் பெற்றோருக்கும், சபை மூப்பர்களுக்கும் சொல்ல வேண்டியதன் அவசியத்தைக் கண்டுணர அது எனக்கு உதவியது. அந்தக் கட்டுரை எனக்காகவே எழுதப்பட்டதைப் போல உணர்ந்தேன். கடைசியாக என்னுடைய பிரச்சினைகளை அவர்களிடம் தெரிவித்தபோது, நான் மிகவும் நிம்மதியாக உணர்ந்தேன்!
ஏ. ஏ., ஐக்கிய மாகாணங்கள்