உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 12/22 பக். 19-24
  • “வாடிக்கையாளர் சொல்வதே சரி”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “வாடிக்கையாளர் சொல்வதே சரி”
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏழ்மையான பின்னணி
  • சோகமான பிள்ளைப் பருவம்
  • திருமணம் என் வாழ்க்கையை மாற்றுகிறது
  • செல்வமிருந்தும் கடும் பிரச்சினைகள்
  • என் ஜெபங்களுக்கான பதில்
  • உண்மையான மகிழ்ச்சியை கண்டடைதல்
  • மரணம்வரை உண்மையுள்ளவராக இருந்தார்
  • ஆவிக்குரிய இலக்குகளை பின்தொடர்தல்
  • செவிகொடுத்ததற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்
  • எளிமையான ஆரம்பம், செழுமையான முடிவு!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • கடவுளிடம் நெருங்கிவருவது சமாளிக்க எனக்கு உதவிற்று
    விழித்தெழு!—1993
  • யெகோவாவின் வழிகளில் எட்டுப் பிள்ளைகளை வளர்த்த சவாலும் சந்தோஷமும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • ஒன்றுபட்ட குடும்பம்—முடிவில்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 12/22 பக். 19-24

“வாடிக்கையாளர் சொல்வதே சரி”

வைச்சுங்ச்சின் சொன்னபடி

“வீடு வீடாக செல்லும் மத ஆட்களுடன்” எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று என் கணவர் என்னிடம் சொல்வதுண்டு. ஆகவே யெகோவாவின் சாட்சிகள் எங்கள் வீட்டிற்கு வரும்போதெல்லாம், எங்களுக்கு விருப்பமில்லை என்று சொல்லி அவர்களை அனுப்பிவிடுவேன். ஆனால் “வாடிக்கையாளர் சொல்வதே சரி” என்றும் என் கணவர் சொல்லியிருக்கிறார்; ஆகவே ரெட் டிராகன் என்ற எங்கள் உணவகத்திற்கு வந்த ஒரு சாட்சி தன்னுடைய மதத்தைப் பற்றி என்னிடம் பேச விரும்பியபோது, செவிகொடுத்தாக வேண்டும் என்று உணர்ந்தேன்.

ஹாயோ, கிளீவ்லாண்டிலுள்ள செ. கிளார் அவென்யூவில் இருந்த ரெட் டிராகன் என்ற சீன உணவகத்தை என் கணவர் டாங் ஒய். நடத்திவந்தார். அங்கே, எங்கள் திருமணத்திற்கு பிறகு, அவர் எனக்கு இந்த வாசகத்தை கற்றுக்கொடுத்தார்: “வாடிக்கையாளர் சொல்வதே சரி.”

நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக டி.ஒய். அமெரிக்கா வந்திருந்தார். 1927-ல் பட்டம் பெற்றவுடன், நியூ யார்க்கிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இருக்கும் ஒரு உணவகத்தில் வேலைசெய்தார். மருந்துகடை கௌண்ட்டர்களில் ஆட்கள் உணவருந்துவதை கவனித்தார்; அங்கு சமையல் செய்வதற்கான வசதிகள் குறைவே. ஆகவே அவர்களுக்கு சூடான சைனீஸ் நூடுல்ஸ் விற்பதற்கான திட்டம் அவருக்கு உதித்தது.

கிரின்விட்ச் வில்லேஜில் அவர் ஆரம்பித்த சிறிய உணவகம் சீக்கிரத்திலேயே செழித்தோங்க ஆரம்பித்தது. 1932-ல் அவர் தன்னுடைய உணவகத்தை ஒஹாயோவிலுள்ள கிளீவ்லாண்டிற்கு மாற்றி, 200 பேர் அமரக்கூடிய ரெட் டிராகன் உணவகத்தை ஆரம்பித்தார். செப்டம்பர் 1932-ல் கிளீவ்லாண்ட் செய்தித்தாள் ஒன்று இவ்வாறு அறிவித்தது: “கிழக்கிலுள்ள லட்சக்கணக்கானோரின் பசியார்வத்தை திருப்தி செய்தபிறகு கிரேட் லேக்ஸ் பகுதிக்கு வந்திருக்கும் டாங் ஒய். ச்சின், கிளீவ்லாண்டில் தன்னுடைய முதல் மத்தியமேற்கு கிளையை, அதாவது புத்தம்புது சைனீஸ் நூடுல்ஸ் தொழிலை துவங்கியுள்ளார். அதை ஐந்து வருடங்களுக்குள், வருடத்திற்கு பத்து லட்சம் டாலர் லாபம் தரும் தொழிலாக வளர்த்திருக்கிறார்.”

டி.ஒய்.-ம் நானும் சந்தித்ததை விளக்குவதற்கு முன், சீனாவில் நான் வளர்ந்ததைப் பற்றி கூறுகிறேன்; என் வாழ்க்கையை வடிவமைப்பதில் அது முக்கிய பங்கு வகித்தது.

ஏழ்மையான பின்னணி

உணவு தேடுவதற்காக, சீனாவின் முக்கிய பகுதியிலுள்ள எங்கள் சிறிய கிராமத்தைவிட்டு அம்மா செல்வதைப் பார்ப்பதே என்னுடைய ஆரம்பகால நினைவுகள். என் பெற்றோர் அவ்வளவு ஏழைகளாக இருந்ததால் பிள்ளைகளில் சிலரை தத்துகொடுக்க வேண்டியவர்களாய் இருந்தனர். எனக்கு இரண்டு அல்லது மூன்று வயதே இருக்கையில் ஒரு நாள், அப்பா வீடு திரும்பியபோது அவர் பார்வையே வித்தியாசமாக இருந்தது. ‘எனக்கு ஏதோ கெட்ட செய்தி இருக்கிறது’ என்று நினைத்தேன்.

அதற்கு பிறகு சிறிது நேரத்திலேயே அம்மா என் கையை பிடித்து அழைத்துச் சென்றார்; இரண்டு பக்கங்களிலுமிருந்த தண்ணீரில் விழுந்துவிடாதபடி, நெல் வயல்களுக்கு மத்தியிலுள்ள வரப்பில் ஜாக்கிரதையாக நடந்து சென்றோம். ஒரு வீட்டில், சிரித்த முகத்துடனிருந்த ஒரு பெண்ணிடம் அம்மா பேசினார்; பிறகு கடுகடுப்பான, இறுகிய முகமுள்ள இளம்பெண் ஒருத்தியிடம் பேசுவதற்காக இன்னொரு வீட்டிற்கும் சென்றோம். இதற்கு முன்பு இந்தப் பெண்களை பார்த்த ஞாபகமே எனக்கில்லை. அவர்கள் என்னுடைய மூத்த சகோதரிகள். அவர்கள் எனக்கு பிரியாவிடை கொடுத்தபோது, இனி ஒருபோதும் அவர்களை சந்திக்கவே முடியாது என்பதை உணர்ந்தேன்.

நாங்கள் நடந்துபோகையில், தன்னைப் பற்றியும் அப்பாவைப் பற்றியும் என்னுடைய சகோதர சகோதரிகளைப் பற்றியும் அம்மா தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தார். அம்மாவின் தயவான, சோகமான கண்கள் இன்னமும் என் கண் முன் நிற்கின்றன. நாங்கள் சேர வேண்டிய இடத்திற்கு வந்தபோது ஏதோ சரியில்லாததுபோல் தோன்றியது. அந்த வீடு வருத்தத்தில் மூழ்கியதாகவும் துக்கம் நிறைந்ததாகவும் தோற்றமளித்தது. அதுவே என்னுடைய புதிய வீடு. எனக்கு தூங்கப்பிடிக்கவில்லை; ஆனால் என் அம்மாவும் தத்தெடுத்த பெற்றோரும் என்னை தூங்க வைத்தனர். சீக்கிரத்தில் தூக்கம் என்னைத் தழுவியது; கண் விழித்தபோதோ அம்மா அங்கில்லை. அதன்பின் நான் அவரை பார்க்கவேயில்லை.

சோகமான பிள்ளைப் பருவம்

இப்போது சாப்பிடுவதற்கு ஏராளமான உணவு இருந்தபோதிலும் குறைவான அன்பே கிடைத்தது; என் இதயம் கண்ணீர் கடலில் மூழ்கியது. ஒவ்வொரு நாள் காலையும் அழுகையுடன்தான் விடிந்தது. அம்மாவையும் அவருடனே தங்கிவிட்ட அண்ணனையும் பற்றிய நினைவு எனக்கு வந்துகொண்டே இருந்தது. தற்கொலையைப் பற்றியும்கூட அடிக்கடி சிந்தித்தேன். ஏற்ற வயது வந்தபோதோ பள்ளிக்கூடம் செல்ல தீராத ஆசை; ஆனால் என்னை தத்தெடுத்த பெற்றோர் வேலை செய்வதற்காக என்னை வீட்டிலேயே வைத்துக்கொண்டார்கள்.

ஒன்பது வயதாக இருக்கையில் தொலைவில் இருக்கும் ஷாங்காய்க்கு நாங்கள் குடிமாறிச்சென்றோம். “இப்போது நீ பெரியவளாகிவிட்டதால் கடைக்கு போவதையும் சமையல் செய்வதையும் கவனித்துக்கொள்ளலாம்” என்று என்னிடம் சொன்னார்கள். ஆகவே என்னுடைய அன்றாட வீட்டு வேலைகளுடன் இவையும் சேர்ந்துகொண்டன. மூன்று வேளைகளுக்கும் சேர்த்து உணவுவாங்க போதுமான பணத்தை தினமும் என் தத்துப்பெற்றோர் கொடுப்பார்கள். மார்கெட்டுக்கு செல்லும் வழியில் பசியாயிருக்கும் பிச்சைக்காரர்களை பார்க்கும்போதெல்லாம் அவர்களுக்காக இரக்கப்படுவேன். ஆகவே அவர்களுக்கு ஓரிரண்டு காசுகளை கொடுத்துவிட்ட பின்னரும் தேவையான உணவை வாங்குவதற்கு போதுமான பணம் கையிலிருக்கும்.

பள்ளிக்கு சென்று படிக்க எவ்வளவாய் விரும்பினேன்! “இன்னும் ஆறு மாதத்தில் உன்னை பள்ளியில் சேர்த்துவிடுகிறோம்” என்று என் தத்துப்பெற்றோர் உறுதியளித்தனர். ஆறு மாதத்திற்கு பிறகு, “இன்னும் ஆறே மாதத்தில்” என்று சொன்னார்கள். நான் பள்ளிப் பக்கமே போகமுடியாது என்பதை சீக்கிரத்தில் புரிந்துகொண்டேன். என் இதயம் நொறுங்கியது. வீட்டிலிருக்கும் அனைவரையும் வெறுக்க ஆரம்பித்தேன். அடிக்கடி பாத்ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு ஜெபம் செய்தேன். நாங்கள் அநேக கடவுட்களை நம்பினபோதிலும், மற்ற எல்லா கடவுட்களையும்விட அதிக வல்லமையுள்ள ஒரு முக்கியமான கடவுள் இருக்கிறார் என்பதை எப்படியோ நான் அறிந்திருந்தேன். ஆகவே, “ஏன் இவ்வளவு துன்பமும் துயரமும்?” என்று அவரிடம் ஜெபம் செய்தேன். அநேக வருடங்களுக்கு இதுவே என்னுடைய ஜெபம்.

திருமணம் என் வாழ்க்கையை மாற்றுகிறது

ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களே அக்காலங்களில் சீனாவில் பொதுவாக இருந்தன. சீனாவிற்கு திரும்பியிருந்த டி.ஒய்.-ன் பல்கலைக்கழக நண்பர் ஒருவர் அவருக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்: “நீர் 30 வயதை தாண்டியும் திருமணம் ஆகாமல் இருக்கிறீரே.” பின்னர் என்னைப் பற்றி குறிப்பிட்டுவிட்டு இவ்வாறு எழுதினார்: “அவளுக்கு வயது 18; அழகிய தோற்றமுடையவள், குணத்திலும் குறைவற்றவள். . . . நானாக இருந்தால், இந்த வாய்ப்பைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பேன், டாங் ஒய். ச்சின்.” அந்த நண்பர், ஒரு புகைப்படத்தையும் சேர்த்து அனுப்பிவைத்தார்.

“உங்கள் அருமையான மகளுடைய புகைப்படத்தை நான் பார்த்தேன். நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்து பேசியபிறகு எங்கள் இருதயங்களில் காதல் மலர்ந்தால் நான் அவளை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று டி.ஒய். என் தத்துப்பெற்றோருக்கு கடிதம் எழுதினார். டி.ஒய். ஷாங்காய்க்கு வந்தார், நாங்கள் இருவரும் சந்தித்தோம். அவர் என்னைவிட வயதில் மூத்தவர் என்று நான் நினைத்தபோதிலும், அந்த வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு திருமணத்தைவிட்டால் வேறு வழியில்லை என்று நினைத்தேன். ஆகவே நாங்கள் 1935-ல் திருமணம் செய்துகொண்டு, உடனடியாக அமெரிக்காவிற்கு கப்பலில் புறப்பட்டோம். இவ்வாறாகத்தான் நான் கிளீவ்லாண்டிற்கு வந்து சேர்ந்தேன்.

செல்வமிருந்தும் கடும் பிரச்சினைகள்

ஆரம்பத்தில், என் கணவருடன் பேச்சுத்தொடர்பு பிரச்சினைகள் இருந்தன. ஒரு சீன கிளை மொழியான காண்டோனீஸை அவர் பேசினார்; நானோ மற்றொன்றான ஷாங்காயீஸை பேசினேன். இரண்டு வித்தியாசமான பாஷைகளைப் பேசுவதுபோல இருந்தது. அதோடு, நான் ஆங்கில மொழியையும் புதிய பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. என்னுடைய புதிய வேலை என்ன தெரியுமா? வாடிக்கையாளர்களை எப்போதும் திருப்திப்படுத்தும் ஒரு கவர்ச்சிமிக்க, ஏற்கத்தகுந்த உணவகத் தலைவியாக இருக்கவேண்டியதே. ஆம், “வாடிக்கையாளர் சொல்வதே சரி” என்பதை நான் எப்போதும் நினைவில் வைக்கவேண்டும்.

ஒவ்வொரு நாளும் 16 அல்லது அதற்கும் அதிகமான நீண்ட, கடினமான மணிநேரங்கள் என் கணவருடன் வேலைசெய்ய வேண்டியிருந்தது; பெரும்பாலான சமயங்களில் நான் கர்ப்பமாகவும் இருந்தேன். 1936-ல் எங்கள் முதல் மகளான குளோரியா பிறந்தாள். அதற்கு பிறகு ஒன்பதே வருடங்களில் ஆறு பிள்ளைகளை பெற்றேன்—மூன்று பையன்களும், இன்னும் மூன்று பெண்களும்; அவர்களில் ஒருத்தி ஒரு வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டாள்.

இதற்கிடையில், டி.ஒய். அநேக உணவகங்களையும் இரவுநேர கிளப்புகளையும் நடத்த ஆரம்பித்துவிட்டார். இவற்றில் நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தங்கள் தொழிலை ஆரம்பித்த சில பொழுதுபோக்கு கலைஞர்களான கே லூக், ஜாக் சூ, கே பலார்ட் ஆகியோர் பின்னர் பிரபல நட்சத்திரங்கள் ஆனார்கள். அதுமட்டுமல்ல, எங்களுடைய சீன உணவு பதார்த்தங்கள் மிகப் பரவலாக விற்பனை செய்யப்பட்டு பிரபலமாயின.

மத்திப 1930-களுக்குள் டி.ஒய். சைனீஸ் நூடுல்ஸ் மன்னன் என்று அறியப்படலானார். சீன வியாபாரிகள் கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் சீனாவைப் பற்றி விரிவுரையாற்றும் ஒரு பேராசிரியராகவும் இருந்தார். எண்ணற்ற அறக்கொடை, சமூக, நகர மற்றும் சமுதாய நடவடிக்கைகளில் நான் ஈடுபட ஆரம்பித்தேன். பொதுமக்கள் முன் பேசுவதும் ஊர்வலங்களில் பங்குகொள்வதும் என் வாழ்க்கையின் பாகமாயின. கிளீவ்லாண்ட் செய்தித்தாள்களில் எங்கள் படங்களும் பெயர்களும் தோன்றுவது அன்றாட காரியமாகிவிட்டது. நாங்கள் செய்த அல்லது சொன்ன எல்லாமே அறிக்கை செய்யப்பட்டதுபோல் தோன்றியது—வியாபார முதலீடுகள் முதல் விடுமுறைபோவது வரை மேலும் என்னுடைய ஷூவின் அளவும்கூட!

1941-ல் ஜப்பானிய விமானப்படை பேர்ல் ஹார்பரில் குண்டு வீசியபோது, ஐக்கிய மாகாணங்கள் ஜப்பானுக்கு எதிராக போரில் இறங்கியது. நாங்கள் கிழக்குப் பகுதியை சேர்ந்தவர்களாக இருந்ததால் தப்பெண்ணத்தை எதிர்ப்பட்டோம். யுத்தத்திற்கு முன்பேகூட, ஒரு நல்ல சுற்றுப்புறத்தில் எங்களுடைய பெரிய வீட்டை கட்டும்போது, கொலை மிரட்டல் கடிதங்களைப் பெற்றோம். ஆனால் அந்த வீடு கட்டிமுடிக்கப்பட்டு அதில் எங்கள் பிள்ளைகளை வளர்த்தோம்.

ஆக, எனக்கு ஓர் அழகிய, பெரிய வீடு கிடைத்தது, மதிப்புமிக்க கணவனும் குடும்பமும், ஆம் அழகான உடைகளும் நகைகளும்கூட இருந்தன. இருந்தாலும், மகிழ்ச்சியோ எட்டாத கனியாகவே இருந்தது. ஏன்? ஒரு காரணமானது, குடும்பமாக ஒன்றுசேர்ந்து நாங்கள் அதிக நேரத்தை செலவிட முடியவில்லை. ஒவ்வொரு நாள் காலையிலும் நான் எழுந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடிந்தபோதிலும், அவர்கள் படுக்கைக்கு போகும்போது அநேகமாக நாங்கள் வேலைசெய்து கொண்டிருந்தோம். அவர்களுடைய அன்றாட தேவைகளை ஒரு பணிப்பெண் கவனித்துக்கொண்டாள்.

நாங்கள் புத்த மதத்தினராக இருந்தாலும் எங்கள் மதத்தின் கடவுட்கள் எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை. டி.ஒய்.-ம் எங்கள் மூத்த மகனும் வீட்டைச் சுற்றி நடந்து, மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்து, கடவுட்கள் சாப்பிடுவதற்காக சிலைகளுக்கு முன்பாக உணவு படைப்பார்கள். ஆனால் அவை அந்த உணவை சாப்பிட்டதே இல்லை; ஆகவே பிறகு பிள்ளைகளே அந்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வர்.

கடைசியில், சோர்வினால் முழுமையாக துன்புறுகிறவளாய் வெளியேற வழி தெரியாமல், நான் இல்லையென்றால் என் குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். நான் முற்றிலும் நிலைகுலைந்து போய் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தேன். நல்லவேளை, உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டு குணமடைந்தேன்.

என் ஜெபங்களுக்கான பதில்

சில காலம் கழித்து 1950-ல், அழகிய வெண்ணிற முடியுடைய ஒரு பெண்மணி தன் கணவனுடன் உணவகத்திற்குள் நுழைந்தார். அவர்களை வரவேற்று சௌகரியமாக அமர வைத்தபிறகு, அவர் கடவுளைப் பற்றி என்னிடம் பேசினார். எனக்கு விருப்பமில்லை. யெகோவாவின் சாட்சிகள் வீட்டிற்கு வந்து என்னிடம் பேச முயன்றிருக்கின்றனர்; ஆனால் எப்போதும், முகத்தில் அடித்தாற்போல் ஏதாவது சொல்லி அவர்களை அனுப்பிவிடுவேன். என்றாலும் உணவகத்திலோ நிலைமை வேறு—“வாடிக்கையாளர் சொல்வதே சரி!”

நான் பைபிளை நம்புகிறேனா என்று ஹெலன் விண்டர்ஸ் என்ற அப்பெண்மணி கேட்டார். “எந்த பைபிளை?” என்று கேட்டேன். “நிறைய இருக்கின்றனவே!” ஒவ்வொரு முறையும் அவர் உணவகத்திற்கு வரும்போது, ‘வந்துவிட்டது தொல்லை!’ என்று எனக்குள்ளேயே நினைத்துக் கொள்வேன். ஆனால் அவர் தயவாகவும் விட்டுக்கொடுக்காதவராகவும் இருந்தார். இனிமேலும் எந்தத் துன்பமும் கஷ்டமும் இல்லாத ஒரு பரதீஸிய பூமியைப் பற்றி அவர் சொன்னது உண்மையில் மனதைக் கவர்ந்தது.—2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4.

அவர் ஒருமுறை என்னை சந்தித்தபோது, ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு வருவதற்கான ஒரு அழைப்பிதழை விட்டுச்சென்றார். மேலும் அதன் பின்பக்கத்திலிருந்த, கடவுளுடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை விளக்கிய சிறிய செய்தியையும் சுட்டிக்காட்டினார். பிறகு ஒருசமயம் அதைப் பார்த்துவிட்டு, ‘இதுமட்டும் உண்மையாக இருந்தால்!’ என்று சிந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. வீட்டில் என்னுடன் பைபிளை படிக்க அவர் அனுமதி கேட்டார், கடைசியில் நான் ஒப்புக்கொண்டேன்.

அப்போது 5 முதல் 14 வயது வரையிருந்த என்னுடைய ஆறு பிள்ளைகளுடன் நானும் ஹெலனும் ஒவ்வொரு வாரமும் படிப்பதற்காக மேஜையை சுற்றி கூடினோம். சில சமயங்களில் பிள்ளைகள் அக்கறை இழந்தவர்களைப்போல காணப்படுவார்கள்; ஆகையால் நான் அவருக்காக அடிக்கடி பரிதாபப்படுவேன். 1951-ல் ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தோம். நான் கற்றுக்கொண்டிருப்பது என்னுடைய ஜெபங்களுக்கான பதில் என்பதை சீக்கிரத்திலேயே உணர்ந்தேன். ஆகவே, உண்மையில் நல்லவிதமாக ஆங்கிலம் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானித்தேன்; அது ஒரு கடினமான சவாலாகவே இருந்தது.

உண்மையான மகிழ்ச்சியை கண்டடைதல்

அறிவை எடுத்துக்கொள்வதில் வேகமாக முன்னேறி, சீக்கிரத்தில் என் வாழ்க்கையை யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்தேன். பிறகு, அக்டோபர் 13, 1951-ல் வாஷிங்டன் டி.சி.யில் நடந்த ஒரு பெரிய மாநாட்டில் நானும் என்னுடைய இரண்டு மூத்த பிள்ளைகளான குளோரியாவும் டாமும் முழுக்காட்டுதல் பெற்றோம். முதல் முறையாக என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக ஆனது. என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான வருடங்களின் ஆரம்பமாக அது இருந்தது.

என் வாழ்க்கை முழுவதும் நான் மற்ற மனிதர்களையே சேவித்திருக்கிறேன்; ஆனால் இப்போது முதலாவதாக நம் சிருஷ்டிகரை சேவிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தேன்! செவிகொடுத்து கேட்கும் எல்லாருடனும் ராஜ்ய செய்தியை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராவதன் அவசியத்தையும் கடவுளுடைய வார்த்தையிலுள்ள அருமையான காரியங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதன் முக்கியத்துவத்தையும் என் பிள்ளைகளுக்கு உணர்த்த முயற்சித்தேன்.

1953-ல் சபை புத்தகப் படிப்பு எங்கள் வீட்டில் நடக்க ஆரம்பித்தது. ஏறக்குறைய 45 வருடங்களுக்கு பிறகு, இன்றும் படிப்பு இங்குதான் நடக்கிறது. அது வருடங்களினூடாக எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆவிக்குரிய உதவியாக இருந்திருக்கிறது.

ஆவிக்குரிய விதமாக சுறுசுறுப்புடன் இருந்துகொண்டே எங்கள் உணவக தொழிலையும் கவனித்துக் கொள்வது உண்மையில் ஒரு சவாலாகவே இருந்தது. இருந்தபோதிலும், என்னால் அநேகருக்கு பைபிள் படிப்பு நடத்த முடிந்தது. அவர்களில் சிலர் பைபிள் சத்தியத்தை ஏற்று பின்னர் பயனியர்கள் ஆனார்கள்; முழுநேர ஊழியர்கள் அவ்வாறே அழைக்கப்படுகின்றனர். 1950-களில் எங்களுடைய நான்கு இளைய பிள்ளைகளும் யெகோவாவிற்கு தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றார்கள். டி.ஒய்.-க்கு பைபிளில் அக்கறை இருக்கவில்லை; ஆனாலும் நாங்கள் கூட்டங்களுக்கு போகும்போதும் வரும்போதும் அவரே எங்களை காரில் அழைத்துச் செல்வார். அவரிடம் பிரசங்கிக்காமல் இருக்கவும், அதற்கு மாறாக கூட்டங்களில் நாங்கள் அனுபவித்த இரண்டொரு குறிப்புகளைப் பற்றி காரில் வீடு திரும்பும்போது எங்கள் மத்தியிலேயே பேசிக்கொள்ளவும் நாங்கள் முடிவு செய்தோம்.

அந்தச் சமயத்தில் டி.ஒய். வியாபார சம்பந்தமாக அடிக்கடி ஐக்கிய மாகாணங்களிலுள்ள எல்லா நகரங்களுக்கும் போவது வழக்கம். நியூ யார்க், புரூக்ளினிலுள்ள உவாட்ச் டவர் சங்கத்தின் தலைமை அலுவலகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு எங்கள் சூழ்நிலையை விளக்கினேன். அப்போது சங்கத்தின் செயலர்-பொருளாளராக இருந்த கிரான்ட் சுயூட்டர், நாங்கள் நியூ யார்க்கிற்கு வரும்போது அங்கிருக்கும் அலுவலக வளாகத்தை வந்து பார்வையிடும்படி அழைத்தார். டி.ஒய். மிகவும் கவரப்பட்டார்; முக்கியமாக, அப்போது ஏறக்குறைய 500 பேருக்கு உணவளிக்கும்படி தயாரிக்கப்பட்டிருந்த சமையலறையின் சுத்தம் அவரைக் கவர்ந்தது.

எங்களுடைய விஜயத்தின்போது ரஸல் கர்சனை நாங்கள் சந்தித்தோம்; அவர் பின்னர் டி.ஒய்.-க்கு ஒரு பைபிளை தபால் மூலம் அனுப்பிவைத்தார். அதை முடிக்கும்வரை ஒவ்வொரு நாள் இரவும் அவர் வாசித்தார். பிறகு 1958-ல் நியூ யார்க்கில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டில் என் கணவர் முழுக்காட்டுதல் பெற்றார்! அப்போது தலைமை காரியாலய பெத்தேல் குடும்பத்தின் ஓர் அங்கத்தினராக இருந்த எங்கள் மூத்த மகனுக்கு அந்த நிகழ்ச்சிநிரலில் ஒரு சிறிய பங்கு இருந்தது எங்களுக்கு அதிக ஆச்சரியமளித்தது.

மரணம்வரை உண்மையுள்ளவராக இருந்தார்

டி.ஒய்.-ம் நானும் அடிக்கடி சேர்ந்தே வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குகொண்டோம். அவருடைய பார்வை மங்க ஆரம்பித்த பிறகு தெரு ஊழியத்தில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தோம். ஒரு பாதசாரிக்கு காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை கொடுப்பதுபோன்ற எங்கள் புகைப்படத்துடன், “ரெட் டிராகனில் மத மாற்றம்” என்ற ஒரு தலைப்பு செய்தியை த கிளீவ்லாண்ட் பிரஸ் என்ற செய்தித்தாள் வெளியிட்டது. நாங்கள் எவ்வாறு சாட்சிகளானோம் என்பதை அந்தக் கட்டுரை விவரித்தது. அதே சமயத்தில் ரெட் டிராகனுக்கு ச்சின்னுடைய உணவகம் என்று பெயர் மாற்றப்பட்டது.

உலகம் முழுவதிலுமிருந்து வரும் அநேக கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை பல வருடங்களாக என் கணவரும் நானும் எங்கள் உணவகத்தில் உபசரித்திருக்கிறோம். காவற்கோபுர பைபிள் மற்றும் துண்டுப்பிரதி சங்கத்தின் தலைவராக சேவித்த சகோதரர் ஃபிரெட் ஃபிரான்ஸ் கூறிய அறிவுரையை நாங்கள் மறக்கவே மாட்டோம். அவர் எங்களை சந்தித்தபோது இவ்வாறு உந்துவித்தார்: “உண்மையுள்ளவர்களாக யெகோவாவின் அமைப்போடு நெருக்கமாக நிலைத்திருங்கள்.”

ஆரம்ப 1970-களில் டி.ஒய்.-க்கு அநேக முறை ஸ்டிரோக்குகள் ஏற்பட்டு ஆகஸ்ட் 20, 1975-ல் இறந்தார். ஊழியத்தில் அவர் காவற்கோபுரத்தை அளிக்கும் புகைப்படத்துடன் ஒரு நீண்ட இரங்கல் செய்தியை உள்ளூர் செய்தித்தாள் ஒன்று பிரசுரித்தது. நாங்கள் ஒன்றாக கழித்த அந்த முடிவான வருடங்களே எங்களுடைய மிகச் சிறந்தவையாக இருந்தன. 60 வருடங்களுக்கும் மேலாக செயலாற்றிய பின்னர் ச்சின்னுடைய உணவகம் ஏப்ரல் 1995-ல் மூடப்பட்டது. சிலருக்கு அது ஒரு சகாப்தத்தின் முடிவைப்போல இருந்தது.

ஆவிக்குரிய இலக்குகளை பின்தொடர்தல்

எங்களுடைய மூன்று பையன்களும் குடும்பத் தொழிலை எடுத்து நடத்தவேண்டும் என்பதே ஒரு சமயத்தில் எங்கள் விருப்பமாக இருந்தது. என்றாலும், அந்த விருப்பம் மாறியது; இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவர்கள் முழுநேர ஊழியர்கள் ஆகவேண்டும் என்றே விரும்பினோம். நாங்கள் கற்றுக்கொண்டவற்றை மற்ற சீன மக்களும் கற்றுக்கொள்ள உதவுவதற்காக ஹாங் காங்-ல் பயனியர் ஊழியம் செய்ய அவர்கள் விரும்புகிறார்களா என்று எங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரிடமும் கேட்டோம். அதற்காக அவர்களுக்கு பொருளாதார உதவியும் செய்வதாக கூறினோம். அப்போது சீன மொழியை சரளமாக பேச ஒருவரும் அறியாதிருந்தபோதிலும், வின்ஃபிரெட், விக்டோரியா, ரிச்சர்ட் ஆகியோர் ஹாங் காங் மாறிச்செல்ல தீர்மானித்தார்கள்.

எங்கள் மகளான வின்ஃபிரெட் 34 வருடங்களுக்கும் அதிகமாக அங்கு பயனியராக இருந்தாள்! மார்கஸ் கம் என்பவரை விக்டோரியா திருமணம் செய்துகொண்டு, கடைசியில் ஐக்கிய மாகாணங்களுக்கே திரும்பிவிட்டனர். அவர்கள் மூன்று பிள்ளைகளை வளர்த்தனர்—ஸ்டேஃபானி மற்றும் சரெயா, கிளீவ்லாண்டில் முழுநேர ஊழியம் செய்கிறார்கள்; சிமியன் தன் மனைவியாகிய மார்ஃபிட் உடன் நியூ யார்க், வால்கிலிலுள்ள உவாட்ச்டவர் பண்ணையில் வேலை செய்கிறார். என்னை கவனித்துக்கொள்ள உதவியாக விக்டோரியாவும் மார்கஸும் இப்போது அருகிலேயே குடியிருக்கின்றனர். கிளீவ்லாண்டிலுள்ள கவன்ட்ரி சபையில் அவர் நடத்தும் கண்காணியாக இருக்கிறார்.

எங்கள் மூத்த மகளான குளோரியா, 1955-ல் போலியோவால் பாதிக்கப்பட்ட பின்னர் சக்கர நாற்காலியிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. அவளும் அவள் கணவர் பென்னும் கலிபோர்னியாவிலுள்ள எஸ்கண்டிடோவில் வாழ்கின்றனர்; அங்கு பிரசங்க வேலையில் அவள் தொடர்ந்து பங்குகொள்கிறாள். டாம் 22 வருடங்களுக்கும் மேலாக முழுநேர ஊழியராக இருந்திருக்கிறார். அவரும் அவர் மனைவி எஸ்தரும் இப்போது நியூ யார்க், பாட்டர்ஸன்னிலுள்ள காவற்கோபுர கல்வி மையத்தில் வேலை செய்கின்றனர். டி.ஒய். இறப்பதற்குமுன் அவரை கவனித்துக்கொள்வதற்காக ரிச்சர்டும் அவர் மனைவி ஏமியும் ஹாங் காங்கிலிருந்து திரும்பி வந்தனர். இப்போது அவர்களும் பாட்டர்ஸன்னில் சேவிக்கின்றனர். எங்கள் கடைசி மகனான வால்டன் 30 வருடங்களுக்கும் அதிகமாக முழுநேர ஊழியம் செய்திருக்கிறார். கடந்த 22 வருடங்களாக அவரும் அவர் மனைவியான மேரி லூவும் வட்டார மற்றும் மாவட்ட வேலையில் ஐக்கிய மாகாணங்களிலுள்ள சபைகளை சேவித்து வருகின்றனர்.

எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு எந்தத் தொந்தரவும் தரவில்லை என்று நினைத்துவிடாதீர்கள். பருவ வயதில் ஒரு பிள்ளை வீட்டைவிட்டு ஓடி மூன்று மாதங்கள்வரை போன இடமே தெரியவில்லை. சில காலத்திற்கு, மற்றொரு மகன் ஆவிக்குரிய காரியங்களைவிட விளையாட்டில் அதிக அக்கறையுள்ளவனாக இருந்து போட்டி விளையாட்டுகளில் கலந்துகொள்வதற்காக எங்கள் வாராந்திர குடும்ப பைபிள் படிப்பை தவறவிட்டான். போட்டி விளையாட்டிற்கான அநேக ஸ்காலர்ஷிப்புகளும் அவனுக்கு கிடைத்தன. இந்தப் பல்கலைக்கழக ஸ்காலர்ஷிப்பில் ஒன்றை ஏற்றுக்கொள்வதற்கு மாறாக அவன் முழுநேர ஊழியத்தை தெரிவு செய்தபோது, என் தோல்களிலிருந்த மிகப்பெரிய பாரம் குறைந்ததைப்போல உணர்ந்தேன்!

செவிகொடுத்ததற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்

என் பிள்ளைகள் சொல்லர்த்தமாகவே உலகமுழுவதிலும் பரவியிருக்கிறபோதிலும், அவர்கள் யெகோவாவை உண்மையுடன் சேவிக்கிறார்கள் என்று அறிவதே என் இதயத்திற்கு இதமாக இருக்கிறது. எனக்கு இப்போது 81 வயதாகிறது; மூட்டு வீக்கமும் மற்ற உடல் சுகவீனங்களும் என் வேகத்தை குறைத்திருக்கின்றன, ஆனால் யெகோவாவின் சேவையில் என் ஆர்வமோ துளிகூட குறைந்துவிடவில்லை. என்னை கவனிப்பதற்காக என் பிள்ளைகளில் ஒருவரும் முழுநேர ஊழியத்தை விட்டுவிடவேண்டிய அவசியம் ஏற்படாதபடிக்கு என்னை நானே பராமரித்துக் கொள்கிறேன்.

கடவுளுடைய நோக்கங்கள் முழுமையாக நிறைவேறி, என் கணவன், என்னுடைய சொந்த பெற்றோர், எங்களுக்கு பைபிளைக் கற்பித்த ஹெலன் விண்டர்ஸ் உட்பட, இறந்த அன்பானவர்களை மீண்டும் காணும் அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) 46-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்னர் அழகிய வெண்ணிற முடியுடைய பெண்மணிக்கு செவிகொடுத்ததற்கு நான் எவ்வளவு சந்தோஷமுள்ளவளாக இருக்கிறேன்! உண்மையில், அந்த வாடிக்கையாளர் சொன்னது சரியே!

[பக்கம் 21-ன் படம்]

எங்களுக்கு திருமணமானபோது

[பக்கம் 23-ன் படம்]

1961-ல் எங்கள் குடும்பம். இடமிருந்து வலமாக: விக்டோரியா, வை, ரிச்சர்ட், வால்டன், டாம், டி.ஒய்., வின்ஃபிரெட், முன்னால் குளோரியா

[பக்கம் 24-ன் படம்]

இன்று வை ச்சின்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்