இளைஞர் கேட்கின்றனர் . . .
ரேவ்ஸ் வெறும் தீங்கற்ற விளையாட்டா?
“இசை என் உடம்புக்குள் பாய, கைகளை உயர்த்தி டான்ஸ் ஆடும்போது அங்கிருக்கும் மற்றவர்களால் நான் புதுத்தெம்பைப் பெறுகிறேன். அது ஆனந்தப் பரவசமளிக்கிறது.”—ஜீனா.
ஒரு ரேவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் வரும் கிளர்ச்சியை இப்படித்தான் ஜீனா விவரிக்கிறாள். பொதுவாக விடிய விடிய நடக்கும் இந்த டான்ஸ் பார்ட்டிகள், 1980-களில் பிரிட்டனில் முதலாவதாக பிரபலமாயின. பெல்ஜியம், கனடா, ஜெர்மனி, இந்தியா, நியூ ஜீலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய மாகாணங்கள் ஆகியவை உட்பட, பூமியின் எல்லா பகுதிகளிலும் இப்போது தலைதூக்கி வருகின்றன.
கிளப்புகளிலும், காலியான கிடங்குகளிலும், வெட்டவெளிகளிலும் ரேவ்ஸ் நடைபெறுகிறது; ஆட்கள் எங்கெல்லாம் கூடிவரமுடியுமோ அங்கெல்லாம், பித்துப் பிடித்ததைப்போல இராத்திரி முழுக்க சளைக்காமல் டான்ஸ் ஆடுகிறார்கள். “இளைஞர் விரும்பும் பொழுதுபோக்காகிய ரேவ்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக நைட்-கிளப்புகளை ஓரங்கட்டி வருகிறது” என தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோஹன்ஸ்பர்க் ஸண்டே டைம்ஸ் மேகஸின்-ல் ஆதம் லேவின் எழுதினார். “உங்களுடைய இளவட்டங்கள் அதைப் பற்றி இன்னும் உங்களிடம் மூச்சுவிடவில்லை என்றால், உங்கள் மத்தியில் சரியான பேச்சுத்தொடர்பு இல்லை என்றே அர்த்தம்” என்று கூடுதலாக கூறுகிறார்.
ரேவ்ஸ் நிகழ்ச்சியின் ஒரு கண்ணோட்டம்
ரேவ்ஸ் சில சமயங்களில் அந்தரங்கமாக நடைபெறுகின்றன; நிகழ்ச்சி நடக்கும் அந்த நாள் வரைக்கும் இடம் அறிவிக்கப்படுவதே இல்லை. எனினும், பிரமாண்டமான லைட் செட்டுகள் ஒளிவீசி, டெக்னோ மியூசிக் அதிர ஆரம்பிக்கும்போது, டஜன் கணக்கானோரிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வரை வினோத உடை உடுத்திய இளைஞர்கள் அங்கு கூடுவார்கள். “ஒரு பெருங்கூட்டமான ஆட்கள் டான்ஸ் ஆடிக்கொண்டு, தாளத்திற்கேற்ப வெறித்தனத்தை வெளிக்காட்டுவதுபோல இருக்கும்” எனக் கூறுகிறாள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் கேட்டி.
என்றபோதிலும், ரேவ்ஸ் வெறுமனே டான்ஸ் ஆடுவதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. அது ஒரு கலாச்சாரம்கூட, அல்லது ரேவ்ஸ் செல்லும் இளைஞர் அழைக்க விரும்புவதைப்போல ஒரு “வாழ்க்கைமுறை.” பொதுவான கருத்தின்படி, ரேவ்ஸ் நிகழ்ச்சியின் அடிப்படை கொள்கைகள்—இனம், நாடு அல்லது பாலின விருப்பம் என்ற வேறுபாடில்லாமல்—சமாதானம், அன்பு, ஐக்கியம், மரியாதை ஆகியவையே. “இந்தப் பார்ட்டிகளில் கலாச்சாரங்களை ஒருங்கிணைக்க நாங்கள் முயற்சி செய்துவருகிறோம். ஐக்கியமே அதன் லட்சியம்; ஒன்றுகூடி டான்ஸ் ஆடுவதே அதை சாதிப்பதற்கான மிகச்சிறந்த வழி” என்று கூறுகிறார் டான்ஸ் மியூசிக்கில் கவனஞ்செலுத்தும் ஸ்டோர் ஓனர் ஒருவர்.
உயர்ந்த லட்சியங்கள் போல் தோன்றும் இப்படிப்பட்ட காரியங்களைப் பார்க்கையில், ‘ரேவ்ஸ் நிகழ்ச்சிகளில் என்ன தவறு இருக்க முடியும்?’ என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம். ஆனால், ரேவ்ஸ் நிகழ்ச்சியின் மறுபக்கத்தையும் நீங்கள் சிந்திக்க வேண்டும்.
ரேவ்ஸ் நிகழ்ச்சியின் இழிவான பக்கம்
ரேவ்ஸ் நிகழ்ச்சியில் எப்பொழுதாவதுதான் மதுபான வாடை வீசுகிறது என சிலர் அடித்துக் கூறுகின்றனர். என்றாலும், போதைப்பொருட்கள் அங்கு சர்வசாதாரணம். “போதைப்பொருட்களின் உபயோகம் அவ்வளவு அதிகமாக இருந்திருக்காவிட்டால் ரேவ்ஸ் இவ்வளவு சுலபமாக பொதுமக்களால் ஏற்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்” என ஒப்புக்கொள்கிறார் அடிக்கடி ரேவ்ஸ் செல்லும் பிரையன் என்பவர். “அவை இல்லாவிட்டால் ரேவ்ஸ் தோன்றியிருக்கவே முடியாது என்றும் மற்ற அநேகர் நினைக்கின்றனர்” என அவர் மேலுமாக கூறுகிறார்.
ரேவ்ஸ் சிலவற்றில் மரிஹுவானாவும் LSD-யும் பிரபலமாயிருக்கிறபோதிலும் ரேவ்ஸ் செல்பவர்களுக்கு பிடித்தமான போதைப்பொருள், பொதுவாக எக்ஸ்டசி என அழைக்கப்படும் MDMA என்பதாக தோன்றுகிறது. மற்றவற்றோடு ஒப்பிடுகையில் எக்ஸ்டசி பாதுகாப்பானதே என்று உரிமைபாராட்டுகின்றனர் அதன் பிரியர்கள். அது சந்தோஷத்தின் உச்சிக்கு கொண்டுசென்று இரா முழுக்க டான்ஸ் ஆட வெறுமனே தங்களுக்கு தெம்பளிப்பதாய் ஆணித்தரமாக கூறுகின்றனர். ஆனால், “பிரபலமான போதைப்பொருள் மூளையை பாதிக்கலாம்” என்ற தலைப்பில், “பசி, தூக்கம், மனநிலை, தூண்டுதலுணர்வு, இன்னும் மற்ற மனஞ்சார்ந்த செயல்கள் ஆகியவற்றிற்கு நீண்டகால ஆபத்தான விளைவுகளை எக்ஸ்டசி ஏற்படுத்தலாம்” என்று த நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. அது மட்டுமல்ல, “எக்ஸ்டசியால் சில மரணங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அதோடு, இயல்பான அளவில் அதை உட்கொண்ட மற்ற அநேகருக்கு இதய கோளாறு, ஈரல் கோளாறு அல்லது கோமா ஏற்பட்டிருக்கிறது” என டாக்டர் ஹோவார்ட் மக்கின்னி உரிமைபாராட்டுகிறார். “ரேவ்ஸ் செல்பவர்களில் எக்ஸ்டசி உட்கொள்பவர்கள் மரணத்துடன் விளையாடுகிறார்கள்” என்று நல்ல காரணத்துடனேயே டாக்டர் சில்வான் டே மிராண்டா கூறுகிறார்.
ஹர்பல் LSD, ஆக்சிலரேஷன் (Acceleration), ஹர்பல் எக்ஸ்டசி அல்லது ரஷ் (Rush) போன்ற மூலிகை போதைப்பொருட்களும்கூட ஆபத்தானவையாக இருக்கலாம். உதாரணமாக, மூலிகை போதைப்பொருளான ஆக்சிலரேஷன், சில சந்தர்ப்பங்களில் மாரடைப்பையும் சாவையும்கூட ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.
ரேவ்ஸ் கூட்டங்களில் உபயோகிக்கும் போதைப்பொருட்கள் தீங்கற்றவையென வீம்பு பேசுவோர் சிந்திக்க வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. எக்ஸ்டசி என்பதாக விற்கப்படும் போதைப்பொருட்களில் 90 சதவீதம் உண்மையில் எக்ஸ்டசியே அல்லவென கனடாவைச் சேர்ந்த போலீஸ் துப்பறிவாளர் ஈயன் பிரிக்ஸ் உரிமைபாராட்டுகிறார். “அவற்றுள் அதிகமானவை PCP அல்லது மற்ற ஆபத்தான போதைப்பொருட்களே. இவற்றை விற்பவர்கள் கல்நெஞ்சக்காரர்கள். அவை வேலைசெய்ய ஆரம்பிக்கும் சமயம் அவர்கள் தலைமறைவாகி விடுகின்றனர்” என்று கூறுகிறார். a
ரேவ்ஸ் கூட்டங்கள் சிலவற்றில் போதைப்பொருட்களை உபயோகிக்காமல் இருக்கலாம் என்பது உண்மையே. ஆனாலும், அந்தக் கூட்டத்தினரில் சிலர், நிறைய பேர் அல்லது பெரும்பாலானோர், சட்டவிரோதமான பொருட்களை உபயோகித்தார்களா இல்லையா என்று உறுதியாக சொல்வது பெரும்பாலும் கடினம் என்பதை ரேவ்ஸ் செல்பவர்களே ஒப்புக்கொள்வார்கள்.
ரேவ்ஸ் உங்களுக்கு ஏற்றதா?
இசையிலும் நடனத்திலும் அடிப்படையில் எந்தத் தவறும் இல்லை; சந்தோஷமாக இருக்க விரும்புவதிலும்கூட எந்தத் தவறுமில்லை. “நகைக்க ஒரு காலமுண்டு”, “நடனம்பண்ண ஒரு காலமுண்டு” என பைபிள்தானே கூறுகிறது. (பிரசங்கி 3:4) “உன் இளமையிலே சந்தோஷப்படு” என்றும் அது அறிவுறுத்துகிறது. (பிரசங்கி 11:9) ஆகவே நீங்கள் சந்தோஷமாயிருக்க வேண்டும் என்று சிருஷ்டிகர் விரும்புகிறார்! ஆனாலும், “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள்,” பிசாசாகிய சாத்தானுக்குள் “கிடக்கிறதென்றும்” நினைவில் கொள்ளவேண்டும். (1 யோவான் 5:19) ஆகவே, இந்த உலகம் அதிகமாக விரும்பும் சிலவகை பொழுதுபோக்குகளில் அநேகமாக தீங்கிழைக்கும் காரியங்கள் நிறைந்திருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.
உதாரணமாக, ரேவ்ஸ் கூட்டங்களுக்கு செல்பவர்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ‘மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, தங்களை சுத்திகரித்துக்’ கொள்ளவேண்டும் என்ற பைபிளின் அறிவுரையை அவர்கள் பின்பற்றுகிறார்களா? (2 கொரிந்தியர் 7:1) உண்மைதான், சமாதானம், அன்பு, ஒற்றுமை ஆகியவற்றை ரேவ்ஸ் செல்பவர்கள் ஆதரிக்கலாம். ஆனால் ‘பரத்திலிருந்து வரும் ஞானம்’ ‘சமாதானமுள்ளதாக’ மட்டுமல்லாமல் ‘கற்புள்ளதாகவும்’ இருக்கிறது. (யாக்கோபு 3:15, 17, NW) ‘ரேவ்ஸ் கூட்டத்தினரின் ஒழுக்க தராதரம், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளுக்கு இசைவாக இருக்கிறதா? “தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராய்” இருப்பவர்களுடன் இரவு முழுவதையும் செலவழிக்க நான் விரும்புகிறேனா?’ என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.—2 தீமோத்தேயு 3:4; 1 கொரிந்தியர் 6:9, 10; ஏசாயா 5:11, 12-ஐ ஒப்பிடுக.
இவை சிந்திக்கவேண்டிய முக்கியமான கேள்விகள்; ஏனென்றால் “கெட்ட கூட்டுறவுகள் நல்ல பழக்கங்களை கெடுக்கும்” என்று பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 15:33, NW) கடவுளுடைய சட்டங்களை மீறுபவர்களுடன் கூட்டுறவு கொள்வது விபரீதத்தில் போய் முடிவடையும்; ஏனென்றால், “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என்று பைபிள் கூறுகிறது.—நீதிமொழிகள் 13:20.
உண்மை என்னவென்றால், அநேக ரேவ்ஸ் கூட்டங்கள் போதைப்பொருள் பார்ட்டிகளே; அவற்றிற்கு செல்பவர்கள் வேதனையான விளைவுகளை அறுவடை செய்யலாம். உதாரணத்திற்கு, சட்டவிரோதமாக நடப்பதால் அல்லது அங்கு போதைப்பொருட்கள் உபயோகிப்பதால் சில ரேவ்ஸ் கூடங்கள் போலீஸாரால் ரெய்டு நடத்தப்பட்டு மூடப்படுகின்றன. சட்டத்தை மீறுபவர்களுள் ஒருவராக இருக்க நீங்கள் விரும்புவீர்களா? (ரோமர் 13:1, 2) சட்டமீறுதல் இல்லை என்றாலும்கூட, அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் சமயத்தில் “உலகத்தால் கறைபடாதபடி” உங்களை காத்துக்கொள்ள முடியுமா? (யாக்கோபு 1:27) களியாட்டுகள் அல்லது “கட்டுக்கடங்காத நிகழ்ச்சிகள்” (பையிங்டன்) பைபிளில் கண்டிக்கப்படுவதால் ரேவ்ஸ் செல்பவர்களின் மத்தியில் நீங்கள் இருப்பது, கடவுளுக்கும் மனிதனுக்கும் முன்பாக நல்மனசாட்சியை காத்துக்கொள்ள உங்களுக்கு உதவுமா?—கலாத்தியர் 5:21; 2 கொரிந்தியர் 4:1, 2; 1 தீமோத்தேயு 1:18, 19.
தெளிவாகவே, ரேவ்ஸ் நிகழ்ச்சிகளின் ஆபத்தைக் குறித்து கிறிஸ்தவர்கள் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். ஆனால் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். நீங்கள் அனுபவிக்கக் கூடிய பொழுதுபோக்கு காரியங்கள் அநேகம் உண்டு. உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலுள்ள அநேக குடும்பங்கள் கட்டியெழுப்பும் விதத்தில் ஒன்றாக கூடிவருவதற்கு ஏற்பாடு செய்கின்றன. b கவனமான திட்டமும் மேற்பார்வையும் இருக்கும்போது, கூடியிருக்கும் அனைவருக்கும் ஆவிக்குரிய மற்றும் சரீரப்பிரகாரமான புத்துணர்ச்சி அளிப்பவையாக இவை இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக கட்டியெழுப்பும் கூட்டுறவு, தம் மக்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று விரும்பும் ‘நித்தியானந்த தேவனாகிய’ யெகோவாவிற்கு சந்தோஷத்தை கொண்டுவரும்.—1 தீமோத்தேயு 1:11; பிரசங்கி 8:15.
[அடிக்குறிப்பு]
a கூடுதலான விபரங்களுக்கு நவம்பர் 15, 1992 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில் பக்கங்கள் 15-20-யும் மே 22, 1997 தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையில் பக்கங்கள் 8-10-யும் காண்க.
b PCP (ஃபென்சிக்ளடீன்) ஒரு மயக்கமருந்து. சில சமயங்களில் தெளிந்த மனக்காட்சிகளை ஏற்படுத்துவதற்கு சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது.
[பக்கம் 26-ன் பெட்டி]
டெக்னோ என்றால் என்ன?
சுருக்கமாக சொன்னால் டெக்னோ என்பது எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக். அதில் அநேக விதங்கள் உட்பட்டிருக்கின்றன. பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 115 முதல் 160 தாளங்கள் கொண்டிருப்பதால் டெக்னோ மியூசிக் சந்தத்துடன் கூடியதென பெரும்பாலானோர் கூறுவர்.
“டெக்னோவை முன்பு கேட்டிராதவர்களுக்கு அது, பல் டாக்டருடைய துளையிடும் கருவியின் சத்தமும் சோதோம் கொமோரா அழிக்கப்பட்ட அந்த இரவில் இருந்ததாக நீங்கள் கற்பனை செய்யக்கூடிய சத்தங்களும் சேர்ந்து தொனிப்பதைப் போல இருக்கும்” என்று தி யுரோப்பியன் கூறுகிறது. என்றபோதிலும், டெக்னோவின் சீரான தாளம் சிலரை கவர்ந்திழுக்கிறது. “முடிவில்லாத சுய உரிமையையும் சுதந்திரத்தையும் பற்றிய எண்ணங்களை இந்த மியூசிக் எனக்கு தருகிறது” என்று 18 வயதான கிறிஸ்டீனா கூறுகிறாள். சோனியாவும் அவ்வாறே உணர்கிறாள். “ஆரம்பத்தில் எனக்கு டெக்னோ மியூசிக் என்றால் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் அதை நீங்கள் எவ்வளவு அதிகமாக கேட்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக ரசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். சத்தத்தை மிகவும் அதிகமாக கூட்டினால், வேகமான அந்தத் தாளத்திற்கு தப்பவேமுடியாது. நீங்கள் மெய்மறந்து ஆட ஆரம்பித்து விடுவீர்கள். கவனமாய் இல்லையென்றால், அந்தத் தாளம் உங்கள் முழு உடலையும் கட்டுப்படுத்தும்” என்று அவள் ஒப்புக்கொள்கிறாள். 19 வயதான ஷர்லி, டெக்னோவில் இன்னும் அதிகத்தைக் காண்கிறாள். “அது வெறும் மியூசிக் மாத்திரமல்ல. உடையிலும் பேச்சிலும் வெளிப்படும் முழு வாழ்க்கைமுறையாகும்” என்று அவள் கூறுகிறாள்.
“கர்த்தருக்குப் பிரியமானதை தொடர்ந்து உறுதிப்படுத்திக்” கொள்ள கிறிஸ்தவர்கள் விரும்புகிறார்கள். (எபேசியர் 5:10, NW) ஆகவே, மற்ற இசைகளைக் குறித்து கவனமாக இருப்பதைப் போலவே டெக்னோவைக் குறித்தும் கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் டெக்னோவிடம் கவரப்படுகிறீர்கள் என்றால், ‘இந்த விதமான மியூசிக் என்னை எப்படி பாதிக்கிறது? சந்தோஷமாகவும், அமைதியாகவும், சாந்தமாகவும் உணரச் செய்கிறதா? அல்லது என்னை எரிச்சலடையச் செய்து, ஒருவேளை கோபமான அல்லது ஒழுக்கங்கெட்ட எண்ணங்களைத் தூண்டுவிக்கிறதா? இவ்விதமான மியூசிக்கால் வசீகரிக்கப்படுவது, அதன் வாழ்க்கைமுறையிடம் நெருங்கிவர என்னை இழுக்குமா? இவ்வித மியூசிக்கை கேட்பதற்காக அல்லது அதற்கிசைய டான்ஸ் ஆடுவதற்காக, ரேவ்ஸ் கூட்டங்களுக்குப் போக நான் தூண்டப்படுவேனா?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
உண்மையில் முக்கியமான குறிப்பு இதுவே: இசையில் உங்கள் விருப்பம் என்னவாக இருந்தாலும்சரி, உங்களுக்கும் உங்கள் பரலோக தகப்பனுக்கும் மத்தியில் தடையாக இருக்க அதை அனுமதிக்காதீர்கள்.