உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 2/8 பக். 8-12
  • அதன் விளைவுகளை சமாளித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அதன் விளைவுகளை சமாளித்தல்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் ஆதரவு
  • ஆதரவு அளிக்க கற்றுக்கொள்ளுதல்
  • யெகோவாவின் அன்பான ஆதரவுடன் சமாளித்தல்
  • பராமரிப்பவர்கள் ஆதரவை பெறுகின்றனர்
  • கடுமையான குறைபாடுகளை சமாளித்தல்
  • பக்கவாதம்—தாக்குவதற்கான காரணம்
    விழித்தெழு!—1998
  • ஸ்ட்ரோக்!
    விழித்தெழு!—1998
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 2/8 பக். 8-12

அதன் விளைவுகளை சமாளித்தல்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கைகாலுடன் ஒரு மருத்துவமனையிலே படுத்திருந்த கில்பர்ட் இவ்வாறு தன் மருத்துவரைக் கேட்டார்: “என்னுடைய கைகால்களை எப்பொழுதாவது பழைய மாதிரி உபயோகிக்க முடியுமா?” கில்பர்ட்க்கு பின்வரும் சவாலான பதில் கிடைத்தது: “எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு நீங்க முயற்சி எடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் கைகால்களை மறுபடியும் உபயோகிக்க முடியும், சீக்கிரத்திலும் இதனைச் செய்ய முடியும்.” அவருடைய பதில் “இதோ நான் ரெடி!” ஃபிஸியோதெரபியும், சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் சேர்ந்து, 65 வயதில் அவரை சக்கர நாற்காலியிலிருந்து நடை வண்டியைப் போன்ற சாதனத்திற்கும், பின்னர் கோலூன்றி நடப்பதற்கும் கடைசியாக வேலைக்குச் செல்லவும் உதவின.

“பக்கவாதத்தால் தாக்கப்பட்டவர்களுக்கான இன்றைய மறுவாழ்வு மையங்களில் பல, மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டால் மூளையின் மற்ற பகுதிகள், பாதிக்கப்பட்ட பகுதியின் பணியினை செய்ய ஆரம்பிக்கலாம் என்ற பரவலான கருத்தை ஆதரிக்கின்றன. இந்தப் பயிற்சியின் ஒரு நோக்கம், இப்படிப்பட்ட பாதிக்கப்படாத பகுதிகளின் உள்ளான ஆற்றலை வெளிக்கொண்டு வருவதாகும்; அதே சமயம் ஒழுங்கமைத்துக்கொள்ளவும் மாற்றி அமைத்துக்கொள்ளவும் உதவும் தூண்டுதலை இந்தப் பயிற்சி மூளைக்கு அளிக்கிறது” என்று வைனர், லீ, பெல் என்ற ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் உடல்நிலை இயல்பான நிலைக்குத் திரும்புதல் என்பது ஸ்ட்ரோக் மூளையில் தாக்கிய இடம், அதன் கடுமையான பாதிப்பு, அந்த நபரின் உடல் ஆரோக்கியம், மருத்துவ கவனிப்பின் தரம், மற்றவர்களின் ஆதரவு போன்றவற்றிலும் சார்ந்திருக்கிறது.

குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் ஆதரவு

எரிக்கா மூன்று ஆண்டுகளுக்கு மறுவாழ்வு மையத்தில் பயிற்சிகளை பெற்றார்; நடப்பதற்கும், பாதிக்கப்பட்ட இடது கைக்கு பதிலாக தன்னுடைய வலது கையை உபயோகிப்பதற்கும் கற்றுக்கொண்டார். சமாளிப்பதற்கு எது உதவியது என்பதை விளக்குகிறார்: “ரொம்ப முக்கியமான காரியம் என்னன்னா, என் கணவரும் நண்பர்களும் என்னை கைவிட்டுடாம இருந்தாங்க. அவங்கல்லாம் என் மேல் பாசமா இருக்காங்க என்ற உண்மை எனக்கு பலத்தைத் தந்தது; மனம் தளர்ந்துபோய் முயற்சியை கைவிடக்கூடாதுன்னு அவங்க உற்சாகப்படுத்தியது என்னை செயல்பட தூண்டியது.”

அன்பானவர்கள் படிப்படியாக பழைய நிலையடையச் செய்வதில் குடும்ப அங்கத்தினர்களுக்கும் பங்குண்டு. அவர்கள் மருத்துவ அதிகாரிகளைக் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்; கொடுக்கப்படும் பயிற்சிகளை கூர்ந்து கவனித்து அவற்றின் பலனை இழந்துவிடாமல் இருக்க அவற்றை வீட்டில் தொடரவேண்டிய அவசியம் இருக்கிறது. குடும்ப அங்கத்தினரும் நண்பர்களும் காட்டும் பொறுமை, தயவு, புரிந்துகொள்ளுதல், பாசம் போன்றவை உணர்ச்சிப்பூர்வமாக பாதுகாப்பான சூழலை உருவாக்கி, பேச்சு, வாசித்தல், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான மற்ற திறமைகள் ஆகியவற்றை மறுபடியும் கற்றுக்கொள்ள உதவும்.

ஜான் தன் மனைவியாகிய எலனின் உடற்பயிற்சியிலும் சிகிச்சையிலும் உதவுவதற்காக, அதிக கட்டாயப்படுத்தாமலும் அதிக சலுகைகள் கொடுக்காமலும் சமநிலையுடன் இருக்க முயற்சி செய்தார். குடும்ப அங்கத்தினரின் முயற்சியை அவர் இவ்விதம் விவரிக்கிறார்: “எலன் தன் நிலையை எண்ணி பரிதாபப்பட்டு அதிகமா வேதனைப்பட நாங்க அனுமதிப்பதில்லை. சில சமயங்களில் பயிற்சி செய்யச் சொல்லி நாங்க கண்டிப்போடு நடந்துக்குவோம், ஆனா அவளால் எந்தளவுக்கு முடியும் என்ற அளவைக் கவனிச்சு அதற்கு தகுந்தார்போல் உதவி செய்வோம். அவள் ஒரு தொட்டா சிணுங்கி, ஆகவே அவள் வேதனை அடையாதிருப்பதில் கவனமாக இருக்கிறேன்.”

பேச்சு வல்லுனருடைய உதவியுடன் எலன் மறுபடியும் பேசுவதற்கு கற்றுக்கொண்ட சமயத்தில் ஜான் அவளுக்கு உதவினார். “இருவரும் சேர்ந்து ஒரு காரியத்தை செய்தது உற்சாகத்திற்கு வழிவகுத்துச்சு, ஆகவே நாங்க பைபிளை சத்தமாக ஒருத்தருக்கொருத்தர் படிப்போம், இதனால் அவளுடைய பேச்சு திறமை முன்னேறியது. நாங்க யெகோவாவின் சாட்சிகளாக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்தோம். இப்படியாக, எங்களுக்கு இருக்கும் எதிர்கால நம்பிக்கையைப்பற்றி எலன் மத்தவங்களுக்கு சொன்னாள். எலனுக்கு இதுவே ஒரு சிகிச்சையாக அமைந்தது.” மூன்று ஆண்டுகளின் முடிவில் எலன் மிக அதிகமாக முன்னேறியிருந்தார்.

நண்பர்கள் கொடுக்கும் உற்சாகத்தையும் பலத்தையும் லேசாக எடைபோட்டுவிட முடியாது, ஏனெனில் இது ஸ்ட்ரோக்கில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நல முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. “சமுதாய ஆதரவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு வேகமாக உடல்நிலை தேறும், மிகமோசமாக தாக்கப்பட்ட நோயாளிகள்கூட உடல்நிலையின் இயக்கத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள்” என மருத்துவப் பத்திரிகையான ஸ்ட்ரோக் அறிவிக்கிறது.

பெர்னி தனக்கு நண்பர்களால் அளிக்கப்பட்ட ஆதரவை மிகவும் போற்றுகிறார். “சமாளிப்பதற்கு நண்பர்களுடைய வருகை ரொம்ப அவசியம். கரிசனையான குரல் மற்றும் அக்கறையோடு கவனிக்கும் குணம், மனதை அப்படியே பூரிக்கச்செய்யும். ஒருத்தருடைய இயலாமையைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லைன்னாலும் அவர் செஞ்சிருக்கும் முன்னேற்றத்தை பாராட்டினா ரொம்ப உற்சாகமாயிருக்கும்” என்று அவர் நமக்கு நினைப்பூட்டுகிறார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சமாளிப்பதற்கு முயற்சி செய்பவர்களுக்கு நாம் எவ்விதம் உதவலாம்? “மலர்களை எடுத்துச் செல்லுங்கள் அல்லது பைபிளில் இருந்து ஓர் தகவலையோ ஒரு அனுபவத்தையோ எடுத்துச் சொல்லுங்கள். அது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது” என்று பெர்னி யோசனை கூறுகிறார்.

பக்கவாதத்தால் தாக்கப்பட்ட மெல்வா என்ற வயதான பெண்மணி ஆவிக்குரிய சகோதரர்கள் தன்னோடு ஜெபம் செய்தது தனக்கு உதவியாக இருந்ததாய் கூறுகிறார். கில்பர்ட்டும் இதையே பரிந்துரைத்து விளக்குகிறார்: “ஒருவர்மீது உங்களுக்கு எவ்வளவு கரிசனை இருக்குங்கறது அவரோடு சேர்ந்து ஜெபம் செய்யும்போது தெரியும்.” பக்கவாதத்தினால் பார்வை பாதிக்கப்பட்ட பீட்டர், மற்றவர்கள் தன்னுடைய நிலமையைப் புரிந்துகொண்டு கொஞ்ச நேரம் தனக்காக வாசித்துக்காட்டினால் தான் அதை மிகவும் மதிப்பதாகக் குறிப்பிடுகிறார்.

மறுவாழ்வு மையத்திற்கு போவதற்கும் திரும்பி வருவதற்கும் உதவி செய்வதும்கூட ஓர் அன்பான செயலே. பக்கவாதம் தாக்கப்பட்டவரின் வீடு ஒரு பாதுகாப்பான இடம்தானா என்று கவனிப்பதும் அவசியம். அவருக்கு பேலன்ஸ் செய்வது கடினம் என்றால் அடிக்கடி கீழே விழும் அபாயம் இருக்கிறது. உதாரணத்திற்கு, கில்பர்ட் தன் நண்பர்கள் செய்த தயவான உதவிகளையெல்லாம் போற்றினார்; குறிப்பாக குளியலறையில் அவருடைய பாதுகாப்பிற்காக பிடித்துக்கொள்வதற்கு ஒரு கம்பியைப் பொருத்தியது அவற்றில் ஒன்று.

ஆதரவு அளிக்க கற்றுக்கொள்ளுதல்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு, மனநிலை திடீரென மாறுபடுவதாலும் பொங்கி அழுவதாலும் சங்கட உணர்ச்சி ஏற்படலாம்; இதை பார்ப்பவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமடையலாம். அப்படியே நடந்தாலும் நண்பர்கள் ஆதரவு அளிக்க கற்றுக்கொள்வதன் மூலம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் நிலையிலிருந்து மீட்கப்படலாம்; இவ்விதம் செய்யவில்லையென்றால் தனிமை அவர்களை ஆட்டிப்படைக்கும். அவ்வப்போது அழுவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். ஆனால், அவர் அழுதால் நீங்கள் பதட்டப்படாமல் அவர் அருகிலேயே இருப்பது அவசியம்; அந்த நேரத்தில் அவருடைய நிலையில் உங்களை வைத்து, நீங்கள் எதைக் கேட்க விரும்புவீர்களோ அதை அவரிடம் சொல்வது அவசியம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பாதிக்கப்பட்டவர்களிடத்தில் தேவனுக்கேற்ற அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள்; ஏனென்றால், உங்களுக்கு தெரிந்திருந்த அவர்களுடைய குணத்தை இந்தப் பாதிப்பு மாற்றியிருக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும், ஆகவே உங்களிடமாக அவர்களுடைய பிரதிபலிப்பும் வேறுபடும். எரிக்கா விளக்குகிறார்: “நான் முன்போலவே இருக்கவே முடியாது. அப்படித்தான் இருக்கணும்னு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரிடம் கட்டாயமா ஒருத்தரும் எதிர்பார்க்கக் கூடாது. சொந்தக்காரங்களும் நண்பர்களும் அந்த நபரை முன் போலவே ஏத்துக்கிட்டு அன்பு காட்ட கத்துக்கணும். பாதிக்கப்பட்ட ஆண் அல்லது பெண்ணுடைய குணங்களை அவங்க உன்னிப்பாக கவனிச்சுப்பார்த்தால், முன்பு அவரிடத்தில் இருந்த வசீகரிக்கும் குணங்களையெல்லாம் இன்னும் இருப்பதைக் கண்டுபிடிப்பாங்க.”

தன்னால் மற்றவரிடத்தில் பேசவும் மற்றவர்களால் தன்னைப் புரிந்துகொள்ளவும் முடியாது என்ற நிலை ஏற்படும்போது சுயமரியாதை மிகவும் தாழ்ந்துவிடுகிறது. நண்பர்கள் அவர்களிடம் பேசுவதற்கு முயற்சி எடுப்பதன் மூலம் அவர்கள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்த முடியும். டாகாஷி சொல்கிறார்: “என் உள்ளத்தின் எண்ணமும் உணர்வும் மாறிடல. ஆனா என்னோட எப்போதும் பேசற மாதிரி பேசமுடியாது என்பதால் என்னை ஜனங்க ஒதுக்கி வைக்கிறாங்க. நானே போய் மத்தவங்ககிட்ட பேசறது எனக்கு ரொம்ப கஷ்டம், ஆனா அவங்களா வந்து என்னிடம் பேசினா எனக்கு ரொம்ப குஷியா இருக்கும் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன்!”

கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகள், பேச்சு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவும் உற்சாகமும் அளிக்க நம் அனைவருக்கும் உதவும்.

அநேகப் பக்கவாத தாக்குதல் புத்திக்கூர்மையை பாதிப்பது கிடையாது. பக்கவாத தாக்குதலுக்கு ஆளானவர்களில் அநேகர் பேசுவதைப் புரிந்துகொள்வது கடினம் என்றாலும் அவர்கள் தெளிவாக சிந்திக்கிறார்கள். அறிவில் குறையுள்ளவரிடத்தில் பேசுவதைப்போலவோ குழந்தைகளிடத்தில் பேசுவதைப்போலவோ அவர்களிடத்தில் பேசாதீர்கள். அவர்களை மதிப்போடு நடத்துங்கள்.

பொறுமையாக கேளுங்கள். தங்களுடைய எண்ணத்தை மாற்றி அமைத்துக்கொள்ளவோ வார்த்தை, சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றை முடிக்கவோ அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படலாம். உண்மையான அக்கறையுடன் கவனித்துக் கேட்பவர் பொறுமையற்றவராக இருக்கமாட்டார் என்பதை நினைவில் வையுங்கள்.

உங்களுக்கு புரியவில்லையென்றால் புரிந்ததைப்போல் பாவனை செய்யாதீர்கள். “ரொம்ப ஸாரிங்க. எனக்கு புரியமாட்டேங்குது. அப்புறமா திரும்பவும் சொல்லுங்க” என்று தயவான முறையில் ஒப்புக்கொள்ளுங்கள்.

மெதுவாகவும் தெளிவாகவும் சாதாரண தொனியில் பேசுங்கள்.

சிறு வாக்கியங்களையும் தெரிந்த வார்த்தைகளையும் உபயோகியுங்கள்.

ஆம், இல்லை என்று பதில் தரக்கூடிய கேள்விகளைக் கேட்டு பதில் சொல்ல உற்சாகப்படுத்துங்கள். ஒருவேளை நீங்கள் பேசுவது என்ன என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதை நினைவில் வையுங்கள்.

அருகில் ஏற்படும் சப்தங்களைக் குறையுங்கள்.

யெகோவாவின் அன்பான ஆதரவுடன் சமாளித்தல்

பக்கவாதம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது அவசியம்; மறுபடியும் பக்கவாதத்தால் தாக்கப்படுவதை தவிர்ப்பதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கவும், எதிர்காலத்தில் ஸ்ட்ரோக் வருவதன் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்; அதே சமயத்தில் மறுபடியும் பக்கவாதத்தால் தாக்கப்படுவோமோ என்ற பயத்தை கட்டுப்படுத்துவதும் மிக அவசியம். எலன் குறிப்பிடுகிறார்: “ஏசாயா 41:10-ல் உள்ள கடவுளுடைய வார்த்தை எனக்கு முக்கியமா ஆறுதல் அளிக்கிறது. அந்தப் பதிவில், ‘நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்’ என்று அவர் சொல்கிறார். யெகோவா எனக்கு அவ்வளவு நிஜமானவராகத் தெரிவதால் பயப்படறது இல்லை.”

நம்பிக்கையிழந்த நிலையை சமாளிப்பதற்கு பைபிள் ஆனந்துக்கு உதவி செய்கிறது; “பலத்த ஆதரவை பைபிள் எனக்குக் கொடுக்குது, அது எனக்கு தொடர்ச்சியா ஊக்கமளித்து புத்துயிர் ஊட்டுது” என்று சொல்கிறார். ஹீரோயுக்கிக்கு, தொடர்ந்து முழுகவனத்தையும் செலுத்த முடியாதபடியால், பைபிளிலிருந்து அவரால் எவ்விதம் பயனடைய முடியும் என்பதே பிரச்சினையாக இருந்தது. அவர் சொல்கிறார்: “கேஸட்டுகளில் பைபிள் புத்தகங்கள் வாசிக்கப்படுவதை கேட்பதன் மூலம் ஆறுதல் அடைந்தேன்.”

அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்.” (2 கொரிந்தியர் 12:10) யெகோவாவின் ஆவி உதவியதால், தன்னால் சுயமாக சாதிக்க முடியாததையும்கூட பவுலால் நிறைவேற்ற முடிந்தது. பக்கவாதம் தாக்கி தப்பிப்பிழைப்பவர்களும் ஆவிக்குரிய பலத்திற்கு யெகோவாவை சார்ந்திருக்கலாம். எரிக்கா விவரிக்கிறார்: “நாம் ஆரோக்கியமா இருந்து எல்லாத்தையும் சொந்த பலத்திலே செய்யும்போது, நமக்கு உதவி செய்ய யெகோவாவுக்கு அதிகமா வாய்ப்பு கொடுக்கறதில்ல. ஆனா என்னுடைய ஊனம், எனக்கு யெகோவாவிடம் இருந்த உறவை அருமையான முறையிலே பலப்படுத்த உதவியா இருந்துச்சு.”

பராமரிப்பவர்கள் ஆதரவை பெறுகின்றனர்

பராமரிப்பவர்களின் முக்கிய பணியிலே அவர்களுக்கு ஆதரவு தேவை. ஆதரவை எங்கிருந்து பெற்றுக்கொள்ள முடியும்? குடும்ப அங்கத்தினரிடமிருந்து பெறுவது ஒரு வழி. பராமரிக்கும் பாரத்தை ஒவ்வொரு அங்கத்தினரும் பகிர்ந்துகொள்ள வேண்டும். தன்னுடைய மகன்கள் எவ்விதம் உணர்ச்சிப்பூர்வமாக உதவினார்கள் என்பதை யோஷிகோ என்ற பெண் சொல்கிறார்: “என்னோட பிரச்சினையெல்லாம் தங்களுடையதைப்போல் கவனித்துக்கேட்பாங்க.” குடும்ப அங்கத்தினர்கள் பக்கவாதத்தால் தாக்கப்பட்டவர்களை பராமரிக்கவும், அதேபோல் அன்பானவர்களுடைய குணங்களில் ஏற்படும் மாற்றத்தை கையாளவும் கற்றுக் கொள்ள தேவையான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

பராமரிப்பவர்களுக்கு வேறு யார் ஆதரவு அளிக்கலாம்? விக்டருக்கு உதவ டேவிட்டும் அவருடைய குடும்ப அங்கத்தினரும் தங்களுடைய ஆவிக்குரிய குடும்பமான யெகோவாவின் சாட்சிகளுடைய சபையை நாடினர்: “எங்களுக்கு உதவ அவங்க முன்வந்தாங்க. சில சமயம் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் எங்கள் வீட்டுக்கு வந்து தூங்கவும், எங்களுக்கு பதில் அவங்களே விக்டரை இரவு முழுவதும் கவனிச்சுக்கவும் செய்வாங்க.”

ஒவ்வொரு பராமரிப்பாளரும் தன்னுடைய ஆவிக்குரிய குடும்பத்தின் கனிவான அன்பையும் ஆதரவையும் உணரவேண்டியது அவசியம். ஆனால் சிலருக்கு உதவியை கேட்பது கடினமான விஷயம். ஹாரூக்கோ விவரிக்கிறார்: “என்னிடத்தில் வந்து, ‘உதவி ஏதாவது செய்யனும்னா தயங்காம சொல்லுங்க’ என்று பலமுறை சொல்வாங்க. ஆனா அனைவரும் ரொம்ப பிஸியா இருக்காங்கன்னு எனக்கு தெரியும், ஆகவே அவங்ககிட்ட போய் எனக்கு உதவி செய்யுங்கன்னு கேட்கவே எனக்கு சங்கடமாக இருக்கும். ஆனா அவங்களாவே வந்து: ‘நான் சுத்தம் செய்யறேன். எந்த நாள்ல வந்தா உங்களுக்கு வசதியாயிருக்கும்?’ ‘உங்களுக்காக ஷாப்பிங் செய்ய விரும்புகிறேன், இப்ப வரலாமா?’ என்று குறிப்பாக கேட்டால் சந்தோஷத்தோடு நன்றி சொல்வேன்.”

கென்ஜியின் மனைவி ஸ்ட்ரோக்கால் தாக்கப்பட்டார், அவர் தன் மனைவியை நல்லமுறையில் கவனித்துக்கொண்டார். ஜெபத்தில் தன் பாரத்தை யெகோவாவிடம் போட்டுவிடக் கற்றுக்கொண்டார். காலப்போக்கில் அவர் மனைவி பேசும் சக்தியை இழந்தார்; அதனால், பேசுவதற்கு தனக்கிருந்த ஒரே துணையையும் கென்ஜி இழந்தார். ஆனால் அவர் தினமும் பைபிளை படிப்பார். அவர் சொல்கிறார்: “ஆவியிலே நொறுங்குண்டவர்கள்மீது யெகோவாவிற்கு இருக்கும் கனிவான அக்கறையை இது எனக்கு ஞாபகப்படுத்தியது, இது நான் மனச்சோர்வடைவதையும் தனிமையை உணர்வதையும் தவிர்க்க உதவியது.”

உணர்ச்சி வேகங்கள் நம்மை திணறடிக்கச் செய்வதுபோல் தோன்றும் நேரத்தில் யெகோவாவின் ஆவியில் சார்ந்திருப்பது நமக்கு உதவி செய்யும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டபின் தன் கணவனுடைய குணத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும் அவருடைய கொழுந்துவிட்டு எரியும் கோபத்தையும் சமாளிப்பதைக் குறித்து யோஷிகோ சொல்கிறார்: “சில சமயம் ஓ-வென்று சத்தம்போட்டுக் கத்தலாமான்னு எனக்குத் தோணும். அந்த மாதிரி நேரத்திலெல்லாம் யெகோவாவிடம் ஜெபம் செய்வேன், அவருடைய ஆவி சமாதானத்தை எனக்குத் தரும்.” யெகோவாவின் உண்மைத் தன்மையைப் போற்றுபவராக, எதுவும் கிறிஸ்தவ வாழ்க்கையை பாதிப்பதற்கு அவர் அனுமதிப்பதில்லை. அவர் தவறாமல் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு செல்கிறார், ஊழியத்தில் ஈடுபடுகிறார், தனிப்பட்டமுறையில் பைபிள் படிக்கிறார். “என் பங்கில் செய்யவேண்டிதை நான் செய்தால் யெகோவா நிச்சயம் என்னை கைவிடமாட்டார் என்று அறிந்திருக்கிறேன்” என்று யோஷிகோ சொல்கிறார்.

கவலைகள் வந்து வேதனைப்படுத்தும் நேரங்களில், நம் விண்ணப்பங்களைக் கேட்க யெகோவா எப்பொழுதும் தயாராகவே இருக்கிறார். மெடொரியின் கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்; இவர் தான் சிந்திய கண்ணீரை அடையாள அர்த்தத்தில் யெகோவா தன்னுடைய “துருத்தியில்” வைத்திருக்கிறார் என்ற உண்மையில் ஆறுதல் அடைகிறார். (சங்கீதம் 56:8) இயேசுவின் வார்த்தைகளை மீண்டும் நினைவுக்கு கொண்டுவருகிறார்: “நாளைக்காக கவலைப்படாதீர்கள்.” அவர் சொல்கிறார்: “புதிய உலகம் வரும்வரையாகப் பொறுமையாக இருக்க மனதில் முடிவெடுத்துவிட்டேன்.”—மத்தேயு 6:31-34.

கடுமையான குறைபாடுகளை சமாளித்தல்

மறுவாழ்வு மையங்களில் சிலர் நல்ல முன்னேற்றங்களை அடைந்தது உண்மைதான், ஆனால், மற்றவர்கள் பக்கவாத தாக்குதலுக்கு முன்பு இருந்த திறமைகளை மறுபடியும் பெறுவதில் அடையும் முன்னேற்றம் வெகு குறைவே. இப்படிப்பட்டவர்களுக்கு தங்களுடைய கடுமையான குறைகளை மிக நீண்ட காலத்துக்கு சமாளிக்கவேண்டும் என்ற சவாலை சந்திக்க எது உதவும்?

பக்கவாதத்தால் தாக்கப்பட்டு தன் நடக்கும் திறமையை இழந்த பெர்னி பதிலளிக்கிறார்: “பரதீஸாக்கப்பட்ட பூமியிலே நித்திய ஜீவனைப் பெறலாம் என்ற என் சந்தோஷமான நம்பிக்கையும், என் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவிடம் செய்யும் ஜெபமும் என் குறைகளை பொறுமையாக ஏற்றுக்கொள்ள உதவின.”

அந்த நம்பிக்கை எரிக்காவுக்கும் அவர் கணவனாகிய கேயார்க்குக்கும் தங்கள் குறைகளை ஏற்றுக்கொண்டு அவற்றோடு வாழ்க்கையை அனுபவிக்க உதவியது. கேயார்க் விவரிக்கிறார்: “ஒரு நாள் தேவன் முழுவதுமாக சுகமாக்குவார் என்ற அவருடைய வாக்குறுதி எங்களுக்கு இருக்கு. ஆகவே நாங்க எங்களுடைய இயலாமையையே எப்பொழுதும் கவனிச்சுகிட்டு இருப்பது கிடையாது. எரிக்காவின் உடல் நலத்திற்காக எங்களால் முடிந்த எல்லாத்தையும் நாங்க இப்பொழுதும் செய்கிறோம். சரியாக ஒத்துழைக்காத தசைகளோடு வாழ பழகிக்கொண்டு அதிக அளவு நம்பிக்கையூட்டும் விஷயங்களில் கவனத்தை செலுத்தக் கற்றுக்கொள்ள முடியும்.”—ஏசாயா 33:24; 35:5, 6; வெளிப்படுத்துதல் 21:4.

உடல்நிலையில் மிக குறைந்தளவே முன்னேற்றம் செய்ய முடிந்த நபர்களுக்கு குடும்ப அங்கத்தினர் மற்றும் நண்பர்களுடைய ஆதரவு மிக அவசியம். சகலவிதமான உடல்நல பிரச்சினைகளையும் தக்க நேரத்தில் தேவன் சரி செய்யும்வரை பாதிக்கப்பட்டவர் சமாளிப்பதற்கு இவர்கள் உதவ முடியும்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஒரு அருமையான எதிர்காலம் இருக்கிறது என்றும், அப்பொழுது உடல் நலம் சரியாகும் என்றும் அறிந்துகொள்வது, அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுகளைப் பார்த்துக்கொள்ள உதவுகிறது. இவ்வாறு எல்லா வேதனையிலிருந்தும் விடுதலைபெறுவதற்காக அவர்கள் பொறுமையாகக் காத்திருக்கலாம். இந்த விடுதலை விரைவில் வரவிருக்கும் கடவுளுடைய புதிய உலகில் கிடைக்கும். (எரேமியா 29:11; 2 பேதுரு 3:13) அதுவரையாக, யாரெல்லாம் யெகோவா தேவனிடத்தில் திரும்புகிறார்களோ அவர்களெல்லாருக்கும் இப்பொழுதே பக்கவாதத்தின் முடமாக்கும் தன்மைகளை சமாளிக்க அவர் ஆதரவும் உதவியும் அளிப்பார் என்பதில் நம்பிக்கையாக இருக்கலாம்.—சங்கீதம் 33:22; 55:22.

[பக்கம் 12-ன் குறிப்பு]

சகலவிதமான உடல்நலப் பிரச்சினைகளையும் தக்க நேரத்தில் தேவன் சரிசெய்யும்வரை பாதிக்கப்பட்டவர்கள் சமாளிப்பதற்கு, குடும்ப அங்கத்தினரும் நண்பர்களும் உதவலாம்

[பக்கம் 10-ன் பெட்டி/படம்]

பக்கவாதத்தைத் தடுத்தல்

“பக்கவாதம் வராமல் தடுப்பதே அதைக் கையாளுவதற்கான மிகச் சிறந்த வழி” என்று டாக்டர் டேவிட் லவைன் குறிப்பிடுகிறார். பெரும்பாலான ஸ்ட்ரோக்குகள் வருவதற்கான மிக முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தமே.

சரியான உணவை உண்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை அநேகரால் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்; பொட்டாசியம் நிறைவாயுள்ள ஆனால் உப்புச் சத்தும் தெவிட்டிய கொழுப்புச்சத்தும் கொலஸ்ட்ராலும் குறைவாயுள்ள உணவை உட்கொள்வதன் மூலம் இதனைச் செய்யலாம். மதுபானம் குடிப்பதை குறைப்பதும் அவசியம். ஒருவருடைய வயது, சரீரநிலை ஆகியவற்றுக்கு பொருத்தமான உடற்பயிற்சியை தவறாமல் செய்யும்போது அதிக எடையைக் குறைக்க முடியும்; இது இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு உதவும். மருந்துகளை உட்கொள்ள வேண்டி இருக்கலாம்; ஏராளமான மருந்துகள் இருப்பதால், இதை ஒரு மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும்.

கரோடிட் (carotid) தமனி நோய் மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கியமான பாதையை குறுகலாக்குகிறது; இது ஸ்ட்ரோக்கிற்கான முக்கிய காரணமாகிறது. எந்த அளவிற்கு தமனி அடைக்கப்பட்டிருக்கிறது என்ற அடிப்படையில், அடைப்பை நீக்க கரோடிட் தமனிக்குள்ளே கரோடிட் என்டார்டரெக்டமி (carotid endarterectomy) அறுவை சிகிச்சை செய்யப்படலாம். யாருக்கெல்லாம் மிக அதிகமாக அடைப்பு இருந்ததோ யாரிடமெல்லாம் நோய் அறிகுறிகள் வெளித்தெரிந்ததோ அவர்கள் அறுவை சிகிச்சை மூலமும் மருத்துவ சிகிச்சையின் மூலமும் அதிகப் பயனடைந்ததை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அறுவை சிகிச்சையில் சில பிரச்சினைகள் ஏற்படலாம், ஆகவே இதைக் குறித்து கவனமாக சிந்திக்க வேண்டும்.

இருதய நோய், ஸ்ட்ரோக் வரும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆர்டீரியல் ஃபிப்ரிலேஷன் (ஒழுங்கில்லா இதயத்துடிப்பு) காரணமாக இரத்தத்தில் கட்டிகள் ஏற்பட்டு அவை மூளைக்குச் செல்லலாம், இக்கட்டிகளை நீக்க உறைவு எதிர்ப்பிகள் (anticoagulants) பயன்படுத்தப்படலாம். மற்ற இருதய கோளாறுகளுக்கு அறுவை சிகிச்சையும் மருத்துவ சிகிச்சையும் அளிப்பதன் மூலம் பக்கவாதத்தின் அபாயத்தைக் குறைக்கலாம். பக்கவாத தாக்குதலுக்கு இன்னும் ஒரு முக்கிய காரணம் சர்க்கரை வியாதி; அதை கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் பக்கவாத நோய் வருவதை தடுக்கலாம்.

நிலையற்ற இரத்தத் தடை பாதிப்பு, TIA ஆகியவை ஸ்ட்ரோக் வருவதற்கான தெளிவான எச்சரிக்கைகள். அவற்றை சாதாரணமாக எண்ணி அசட்டை செய்து விடாதீர்கள். உங்கள் மருத்துவரை சந்தித்து இதற்கான அடிப்படைக் காரணத்தை அறியுங்கள், ஏனென்றால் TIA-க்கள் ஸ்ட்ரோக் வருவதற்கான அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்கின்றன.

ஆரோக்கியமான, மிதமிஞ்சிப் போகாத வாழ்க்கை பாணி, ஸ்ட்ரோக் வருவதை தடை செய்ய மிகவும் உதவும். சமச்சீர் உணவு, ஒழுங்கான உடற்பயிற்சி, மிகக் குறைவாக மதுபானம் அருந்துதல், சிகரெட்டுகளை முற்றிலும் தவிர்த்தல் ஆகியவை தமனிகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதோடு ஏற்கெனவே பாதிக்கப்பட்ட தமனிகள் சீரடைய உதவும். பச்சை காய்கறிகளையும் பழங்களையும் தானியங்களையும் உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளுதல் பக்கவாத தாக்குதலின் அபாயத்தை மிகவும் குறைக்கிறது என்பதாக அநேக ஆய்வுகள் காட்டுகின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்