பக்கவாதம்—தாக்குவதற்கான காரணம்
“மனித உடலில் மூளையே மிக மென்மையான உறுப்பு” என்பதாக கனடாவைச் சேர்ந்த லண்டனின் மேற்கு ஒன்டாரியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் நரம்பியல் மருத்துவர் டாக்டர் விலாடிமீர் ஹச்சின்ஸ்கி குறிப்பிடுகிறார். மூளை, உடலின் மொத்த எடையில் 2 சதவீதம் மட்டுமே இருந்தாலும் ஆயிரம் கோடி நரம்பு செல்களை உடையது; இவை நம்முடைய ஒவ்வொரு எண்ணத்தையும் அசைவையும் புலனுணர்வையும் உருவாக்க ஒன்றோடொன்று இடைவிடாமல் தொடர்பு கொள்கின்றன. மூளையானது சக்திக்காக ஆக்ஸிஜனையும் குளூக்கோஸையும் சார்ந்திருக்கிறது; இவற்றை சிக்கலான அமைப்புமுறையான தமனிகள் மூலம் சீராகப் பெறுகிறது.
மூளையின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு சில வினாடிகளே ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனாலும், மிக நுண்ணிய நியூரான் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. இதே நிலை சில நிமிடங்களுக்கு நீடித்தால், மூளைச்சேதம் ஏற்படுகிறது; மூளை செல்கள் சாகும்போது அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லா செயல்பாடுகளும் செயலற்று போகின்றன. தமனியில் அடைப்பு ஏற்படுவதால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும் இந்த நிலைக்கு இஸ்கீமியா என்று பெயர். இதைத் தொடர்ந்து மூளை திசுக்கள் பாதிக்கப்படுகின்றன; ஏனென்றால், ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்காதபோது படிப்படியாக பயங்கரமான வேதியியல் மாற்றங்கள் உந்துவிக்கப்படுகின்றன. இதனுடைய விளைவு பக்கவாதம். இரத்த நாளங்கள் வெடிக்கும்போதுகூட ஸ்ட்ரோக் ஏற்படலாம்; இதனால் மூளைப்பகுதியில் ஏராளமாக இரத்தக்கசிவு ஏற்பட்டு, இவற்றோடு தொடர்புடைய பாதைகள் தடைபடுகின்றன. இது தசைகளுக்கு ஒழுங்காகச் செல்லவேண்டிய ரசாயன மற்றும் மின்சார ஓட்டத்தை குலைத்து மூளைத்திசுக்களை சேதப்படுத்துகிறது.
இதன் விளைவுகள்
ஒவ்வொரு ஸ்ட்ரோக்கும் தனித்தன்மை வாய்ந்தது; இவை எண்ணற்ற வழிகளில் ஆட்களை பாதிக்கலாம். ஸ்ட்ரோக்கின் எல்லா விளைவுகளும் ஒரு நபரைப் பாதிப்பதில்லை என்பது உண்மைதான்; ஆனால் அதன் விளைவுகளை, லேசானதும் பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடியாததுமான நிலையிலிருந்து, கடுமையானதும் பார்த்தவுடன் தெரியக்கூடியதுமான நிலைவரை என்று வகைப்படுத்தலாம். மூளையின் எந்தப் பகுதியில் ஸ்ட்ரோக் ஏற்படுகிறதோ அந்தப் பகுதியே உடலின் குறிப்பிட்ட செயல்பாடுகள் சேதப்படுவதைத் தீர்மானிக்கிறது.
கைகால்கள் பெலனற்றுப்போவது, அல்லது விளங்காமற்போவது என்பது சாதாரணமாக அறியப்பட்ட பாதிப்பு. பொதுவாக இது உடலின் ஒரு பக்கத்தை பாதிக்கும்; மூளையின் எந்தப் பகுதியில் ஸ்ட்ரோக் ஏற்படுகிறதோ அதற்கு எதிர் பக்கத்தில் உடல் பாதிக்கப்படும். ஆகவே வலது-மூளை பாதிக்கப்பட்டால் உடலின் இடது பக்கம் பக்கவாதம் ஏற்படும், இடது-மூளை பாதிக்கப்பட்டால் உடலின் வலது பக்கம் பக்கவாதம் ஏற்படும். சிலருடைய கைகால்கள் செயல்படும், ஆனால் அவற்றின் தசைகள் மிக அதிகமாக துடிப்பதால் கைகால்கள் வித்தியாசப்பட்ட திசைகளில் திருகிக்கொள்வதைப்போல் அவர்கள் உணருவர். புதிதாக பனிச்சறுக்கு விளையாடுபவர் விழாமல் சமநிலையை காப்பதற்கு முயற்சிப்பதைப்போல் அவர் செய்கை இருக்கும். நியூ யார்க் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் டாக்டர் டேவிட் லவைன், “தங்களுடைய கைகால்கள் அசைகிறதா என்பதையும் குறிப்பிட்ட சமயத்தில் அவை எங்கே இருக்கின்றன என்பதையும் தங்களுக்கு தெரியப்படுத்தும் உணர்ச்சியை அவர்கள் இழந்துவிட்டார்கள்” என்று சொல்கிறார்.
நோய் தாக்கப்பட்டவர்களில் 15 சதவீதத்தினருக்குமேல் வலிப்பினால் பாதிக்கப்படுகிறார்கள்; இது பெரும்பாலும் இவர்கள் சுயநினைவற்று இருக்கும் சமயத்தில் உடல் உறுப்புகள் கட்டுப்பாடற்ற முறையில் அசைகின்றன. பொதுவாக உடல் வேதனையையும் உணர்ச்சிகளில் மாற்றத்தையும் அனுபவிக்கிறார்கள். எப்பொழுதும் கைகால்கள் மரத்துப்போயிருப்பதாய் உணரும், ஸ்ட்ரோக் தாக்கப்பட்ட ஒருவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “சில நாள் ராத்திரி நேரத்தில ஏதாவது என் கால்களில் பட்டுச்சுனா மின்சாரத்தால் தாக்கப்பட்டதைப்போல் உணர்ந்து எழுந்துகொள்வேன்.”
பக்கவாதத்தினால் சிலருக்கு ஒரு பொருள் இரட்டையாகத் தெரியும், உணவை விழுங்குவது கடினமாக இருக்கும். வாய் மற்றும் தொண்டையின் உணர்ச்சி மையங்கள் பாதிக்கப்பட்டால் எச்சில் ஒழுகுவதைப்போன்ற மதிப்பிழக்கும் நிலை ஏற்படலாம். பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய ஐம்புலன்களில் ஏதாவது ஒன்று பாதிக்கப்படலாம், அதனால் பாதிக்கப்பட்ட புலனில் தடுமாற்றம் ஏற்படலாம்.
உரையாடுவதில் சிக்கல்கள்
வெளிச்சம் குறைவான ஒரு தெருவிலே இரண்டு முரடர்கள் பின்தொடருவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் திரும்பி பார்க்கும்போது அவர்கள் உங்களை நோக்கி ஓடி வருகிறார்கள். நீங்கள் உதவிக்காக கூச்சலிட முயலுகிறீர்கள், ஆனால் ஒரு சத்தமும் வரவில்லை! இப்படிப்பட்ட சூழ்நிலையிலே எந்தளவு விரக்தி அடைவீர்கள் என்பதை உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா? திடீரென்று பேசும் சக்தியை இழக்கும்போது இந்த நிலையைத்தான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அநேகர் அனுபவிக்கிறார்கள்.
மற்றவர்களிடம் தங்களுடைய எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், நம்பிக்கைகளையும், பயங்களையும் சொல்ல முடியாத நிலை—நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து அடையாளப்பூர்வமாக பிரித்து வைக்கப்பட்டதைப்போன்ற நிலை—இது பக்கவாதம் ஏற்படுத்தும் பயங்கர விளைவுகளில் ஒன்று. பாதிக்கப்பட்டவர் இவ்வாறு விளக்குகிறார்: “நான் பேசனும்னு முயற்சி பண்ணப்பல்லாம் சத்தமே வெளியேவரல. நான் அமைதியா இருந்தாகனும்கிற கட்டாய நிலை ஏற்பட்டுடுச்சு, அவங்கல்லாம் சொல்ற அல்லது எழுதிக்காட்டுற உத்தரவுகள் எனக்கு புரியல. பேச்சின் சத்தம் கேட்டுச்சு . . . ஏதோ புரியாத பாஷை பேசற மாதிரி இருந்துச்சு. மொழியைப் பேசவோ புரிஞ்சுக்கவோ என்னால முடியல.”
சார்லஸிடம் பேசியதெல்லாம் அவருக்குப் புரிந்தது. ஆனால் அவர் பதில் சொன்ன விதத்தைக் குறித்து எழுதினதாவது: “நான் சொல்லனும்னு நெனச்ச வார்த்தைகளை மனசுல நிதானிச்சு சொல்லும்போது அவையெல்லாம் தட்டுத்தடுமாறியும் குளறியும் வெளிவரும். அந்த நேரத்துல நான் எனக்குள்ளாகவே ஜெயில்ல மாட்டிக்கிட்டேன்னு நெனச்சேன்.” ஸ்ட்ரோக்: ஆன் ஓனர்ஸ் மானுயல் என்ற தன் புத்தகத்தில் ஆர்த்தர் ஜோஸெப்ஸ் என்ற நூலாசிரியர் இவ்விதம் விளக்குகிறார்: “பேசும்போது நூற்றுக்கும் அதிகமான தசைகள் கட்டுப்படுத்தப்பட்டு ஒத்திசைவிக்கப்படுகின்றன; இந்தத் தசைகள் ஒவ்வொன்றும் சராசரியாக நூற்றுக்கும் அதிகமான இயங்கு நரம்பணுக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. . . . ஒவ்வொரு வினாடி பேசுவதற்கும் 1,40,000 பிரமிப்பூட்டும் நரம்புத் தசையம்சங்களின் செயல்பாடு அவசியம். ஆகவே இந்தத் தசைகளை இயக்கும் மூளை பாகம் பாதிக்கப்பட்டால் பேச்சு தட்டுத்தடுமாறுவதில் வியப்பென்ன?”
பக்கவாதம் தாக்கியதால் திகைப்பை உண்டாக்கும் அநேக சம்பவங்கள் நிகழ்கின்றன. உதாரணத்திற்கு பேச முடியாத ஒரு நபரால் பாட முடியும். இன்னொருவர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து வார்த்தைகளைச் சொல்வார், ஆனால் தானே பேச நினைக்கும்போது அவரால் பேச முடியாது அல்லது அதற்கு நேர்மாறாக நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பார். மற்றவர்கள் வார்த்தைகளையோ சொற்களையோ திரும்பத் திரும்ப சொல்லி அல்லது வார்த்தைகளைத் தவறாக உபயோகிப்பார்கள்; இவர்கள் தவறு என்று சொல்ல நினைக்கும்போது சரி என்று சொல்கிறார்கள், சரியென்று சொல்ல நினைக்கும்போது தவறு என்று சொல்கிறார்கள். சிலருக்கு என்ன வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்பது தெரியும், ஆனால் அவற்றைச் சொல்ல வாய், உதடுகள், நாக்கு ஆகியவை செயல்படுவதற்கு மூளையால் கட்டளை கொடுக்கமுடிவதில்லை. தசைகள் பலவீனமடைந்ததால் தெளிவற்ற முறையில் பேசுவார்கள். சிலர் பேசும்போது வார்த்தைகளை நிறுத்தி நிறுத்திப் பேசுவார்கள் அச்சமயம் உணர்ச்சிப் பொங்க வெடிப்பார்கள்.
மூளையில் உணர்ச்சியோடு தொடர்புடைய மனநிலையைக் கட்டுப்படுத்தும் பகுதியை ஸ்ட்ரோக் தாக்கக்கூடும். இதன் விளைவு உணர்ச்சியற்ற பேச்சு. அல்லது மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படலாம். மேலே குறிப்பிடப்பட்ட முறைகளிலோ வேறு முறைகளிலோ பாதிக்கப்படுவதால் கணவன்-மனைவி போன்ற குடும்ப அங்கத்தினர் மத்தியில் பிளவு ஏற்படலாம். கேயார்க் குறிப்பிடுகிறார்: “பக்கவாதம் முகத்தோற்றத்தையும் சைகைகளையும் சொல்லப்போனா முழு ஆளுமையையே பாதிப்பதால் திடீரென்று எங்களால முன்புபோல ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்துப்போக முடியில. இவள கவனிக்கும் போது ஒரு வித்தியாசமான மனைவியா, நான் புதுசா மறுபடியும் தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு நபர் மாதிரியே உணர்ந்தேன்.”
உணர்ச்சிகளிலும் குணங்களிலும் மாற்றம்
மனநிலையில் திடீர் மாற்றங்கள், பொங்கி வரும் அழுகை அல்லது சிரிப்பு, கோபாவேசம், புதிதாக வரும் சந்தேக உணர்ச்சி, தாங்க முடியாத துக்கம் போன்றவற்றை பாதிக்கப்பட்டவரும் அவர்களுடைய குடும்ப அங்கத்தினர்களும் எதிர்ப்பட வேண்டி இருக்கும்; குழப்பமுண்டாக்கும் உணர்ச்சிகள், ஆள்தன்மையில் மாற்றம் போன்றவை பக்கவாதத்தின் விளைவுகளே.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கில்பர்ட் குறிப்பிடுகிறார்: “சில சமயங்களில் ரொம்ப சாதாரண விஷயத்துக்குக்கூட உணர்ச்சிவசப்பட்டு அழுவேன் அல்லது சிரிப்பேன். சில சமயங்களில் நான் சிரிக்கும்போது ‘நீ ஏன் சிரிக்கிறே?’ என்பதாகக் கேட்பாங்க, ஆனா என்னால பதில் சொல்ல முடியாது.” இதோடுகூட பேலன்ஸ் செய்ய முடியாத நிலை, சற்றே நொண்டுவது ஆகியவையும் சேர்ந்து கொண்டதால், “நான் வேற ஏதோ உடம்புல இருக்கிற மாதிரி, அதாவது ஸ்ட்ரோக் வருவதற்கு முன்னாடி இருந்த நபர் மாதிரி நான் இல்லாமல், வேறு யாரோ ஒரு நபரைப்போல உணருகிறேன்” என்று கில்பர்ட் குறிப்பிடுகிறார்.
உடலும் மனமும் பாதிக்கப்பட்டதால் அநேகர் உணர்ச்சி கொந்தளிப்பை அனுபவிக்கிறார்கள். ஸ்ட்ரோக் தாக்கியதால் பேச்சு தடுமாற்றத்தாலும், ஓரளவான பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்ட ஹீரோயுக்கி குறிப்பிடுகிறார்: “ரொம்ப நாளைக்கப்புறம்கூட என் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. என்னால பழையமாதிரி வேலை செய்ய முடியாதுன்னு தெரிஞ்சப்போ என்னோட நம்பிக்கை எல்லாத்தையும் இழந்துட்டேன். நான் புலம்பவும் எல்லாரையும் குறைசொல்லவும் ஆரம்பிச்சேன்; என்னோட உணர்ச்சிகள் கட்டுப்படுத்த முடியாமல் வெடிச்சுடுமோன்னு நெனச்சேன். என்னால ஒரு ஆம்பளை மாதிரி நடந்துக்கமுடியல்ல.”
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயமும் கவலையும் இருக்கும். எலன் சொல்கிறார்: “என்னோட தலையில அழுத்தத்தை உணரும்போது இன்னொரு ஸ்ட்ரோக்கிற்கான எச்சரிக்கைன்னு அதை நெனக்கும்போது பாதுகாப்பற்ற உணர்ச்சி ஏற்படுது. என்ன நடக்கப்போதோன்னு நான் இதப்பத்தி மோசமா நெனக்க ஆரம்பிச்சுட்டா ரொம்ப பயந்துடுறேன்.” ரான் என்பவர் தனக்கு இருக்கும் கவலையை பற்றி விளக்குகிறார்: “சில நேரங்களில் சரியான முடிவுகளை என்னால எடுக்க முடியாது என்பதுபோல் தோணுது. ஒரே சமயத்தில இரண்டு அல்லது மூன்று பிரச்சினைகளை அலசனும்னா வெறுப்புண்டாகுது. ரொம்ப மறதி வந்துட்டதால் சில நிமிடங்களுக்கு முன்னாடி எடுத்த தீர்மானம் என் நினைவுக்கு வரமாட்டேங்குது. ஆகவே மிக மோசமான சில தவறுகளைச் செய்துவிடுகிறேன், அது எனக்கும் மற்றவர்களுக்கும் சிக்கலுண்டாக்கிவிடுகிறது. அடுத்த சில வருஷங்களில் நான் எப்படி இருப்பேன்? என்னால புத்திசாலித்தனமா பேச முடியுமா அல்லது கார் ஓட்ட முடியுமா? என் மனைவிக்கு நான் பாரமாகிவிடுவேனா?”
குடும்ப அங்கத்தினர்களும் பாதிக்கப்பட்டவர்களே
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் பக்கவாதத்தினால் ஏற்படும் மோசமான விளைவின் போராட்டத்தில் சிக்கிக்கொண்டவர்கள் பாதிக்கப்பட்டவர் மட்டுமல்ல. அவர்களுடைய குடும்ப அங்கத்தினர்களும் பாதிக்கப்பட்டவர்களே. சில சமயங்களில் தங்களுடைய கண் முன்னாடியே புத்திசாலியான, திறமையான ஒரு நபர் படிப்படியாக அழிவதைக்காண நேரலாம். அவர் ஒரு குழந்தையைப்போல எல்லா காரியங்களுக்கும் மற்றவர்களை சார்ந்திருக்கவேண்டிய நிலை ஏற்படலாம். தங்களுக்கு பழக்கமில்லாத பொறுப்புகளை குடும்ப அங்கத்தினர்கள் நிறைவேற்ற வேண்டி இருப்பதால் உறவுகளில் விரிசல் ஏற்படலாம்.
வேதனை நிறைந்த விளைவைப்பற்றி ஹாரூக்கோ விளக்குகிறார்: “கிட்டத்தட்ட எல்லா முக்கியமான விஷயங்களையும் என் கணவர் மறந்துட்டார். அவர் நடத்திவந்த கம்பெனியை திடீரென்று இழுத்துமூடி, வீட்டையும் சொத்துக்களையும் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. என்னை ரொம்ப பாதிச்சது என்னன்னு கேட்டா என் கணவரிடம் பேசவும் ஆலோசனை கேட்கவும் முடியாமல் போனதே. அவருக்கு பகல் எது இரவு எதுன்னு புரிஞ்சிக்க குழப்பமா இருப்பதால் இரவில் அவர் அணிந்திருக்கும் நேப்கின்னை தெரியாமல் அடிக்கடி கழற்றி விடுவார். அவர் இந்த நிலைக்கு ஆளாவார் என்பது எங்களுக்கு தெரிஞ்சிருந்தாலும் உண்மையிலேயே இந்த நிலையில் அவரை பார்க்கையில் எங்களால் நம்பவே முடியல. இப்போ எங்களுடைய நிலை தலைகீழா மாறிப்போச்சு; நானும் என் மகளும்தான் என் கணவருடைய கார்டியனாகிட்டோம்.”
இலேன் ஃபான்ட்ல் ஷிம்பெரக் என்பவர் ஸ்ட்ரோக்ஸ் வாட் ஃபேமிலீஸ் ஷுட் நோ என்ற தன்னுடைய புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பக்கவாதம் தாக்கப்பட்டவரை பராமரிப்பது என்பது—நீங்கள் அவரை எவ்வளவு நேசித்தாலும் சரி—சில சமயங்களில் தாங்க முடியாத அனுபவமாக இருக்கலாம். சிரமமும் பொறுப்புணர்ச்சியும் குறையாது.” சில சமயங்களில், பாதிக்கப்பட்டவரை குடும்ப அங்கத்தினர் மிக அக்கறையுடன் பராமரிப்பதற்காக எடுக்கும் முயற்சியில், பராமரிப்பவருடைய ஆரோக்கியம், உணர்ச்சிகள், ஆவிக்குரியதன்மை ஆகியவை பாதிக்கப்படுகின்றன. தன் தாய் பக்கவாதத்தால் தாக்கப்பட்டதால் தன் வாழ்வில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது என்பதாக மரியா என்பவர் குறிப்பிடுகிறார். அவர் சொல்கிறார்: “நான் தினந்தோறும் அம்மாவைப் பார்ப்பதற்காகப் போவேன், அவங்க ஆவிக்குரிய முறையில் பலப்படுவதற்கு உதவி செய்வேன், அவங்களுக்கு படிச்சுக்காட்டுவேன், அவங்களோட ஜெபம் செய்வேன், அவங்ககிட்ட அன்புமழை பொழிந்து, அணைத்து, முத்தங்குடுப்பேன். ஆனா வீட்டுக்கு வரும்போது ரொம்ப மனம் சோர்ந்திருப்பேன்; ஏன், சில நாட்களில் வாந்தியே எடுத்துடுவேன்.”
சில பராமரிப்பவர்கள், நடந்துகொள்ளும் முறையில் ஏற்படும் மாற்றத்தையே சமாளிப்பதற்கு மிகவும் கடினமாகக் காண்கிறார்கள். நரம்பியல் மனநிலை மருத்துவர் டாக்டர் ரானல்ட் கல்வானியோ விழித்தெழு!-விடம் குறிப்பிடுகிறார்: “பெருமூளையின் இயக்கங்களை—அதாவது ஒரு நபரின் யோசிக்கும் விதத்தை, வாழும் விதத்தை, உணர்ச்சிகளின் பிரதிபலிப்பை—ஒரு நோய் பலமாக பாதிக்குமென்றால் நாம் அந்த நபருடைய முழு இயல்புடன் செயல்பட வேண்டியிருக்கிறது. ஆகவே, மனநிலையில் ஏற்படும் பாதிப்புகள் அந்தக் குடும்ப சூழ்நிலையையே சில வழிகளில் முற்றிலும் மாற்றிவிடும்.” யோஷிகோ சொல்கிறார்: “நோய் வந்தபின் என் கணவர் ரொம்பவே மாறிட்டார், சின்ன விஷயத்துக்குக்கூட ரொம்பக் கோபப்படுகிறார். அந்தச் சமயங்களில் ரொம்ப வேதனைப்படுகிறேன்.”
அநேக சந்தர்ப்பங்களில் குண இயல்புகளில் ஏற்பட்ட மாற்றத்தை குடும்ப அங்கத்தினர் தவிர மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே, சில பராமரிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்து தங்கள் வேதனைகளைத் தனியே சுமக்கிறார்கள். மிடோரி விவரிக்கிறார்: “பக்கவாதம் என் கணவரை உணர்ச்சியிலும் மனதிலும் முடமாக்கிவிட்டது. அவருக்கு உற்சாகம் மிக அவசியமாக தேவை என்பது உண்மையென்றாலும் யாரிடமும் அதைப்பற்றி பேசமாட்டார், தானே தனிமையில் தவிப்பார். ஆகவே அவருடைய உள்ளத்தின் பாரங்களை நானே கையாள வேண்டும். ஒவ்வொரு நாளும் அவருடைய வித்தியாசமான மனநிலைகளை கவனிப்பது எனக்கு கவலையா இருக்கு, சில சமயங்களில் பயமாகவும் இருக்கு.”
பக்கவாதம் தாக்கப்பட்டவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் இதனால் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை எவ்விதம் சமாளித்திருக்கிறார்கள்? நாம் ஒவ்வொருவரும் முடமாக்கும் இந்த நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு எவ்விதம் உதவலாம்? எங்களுடைய அடுத்த கட்டுரை விடையளிக்கும்.
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
எச்சரிக்கும் நோய்க்குறிகள்
• திடீர் சோர்வு, மரத்துப்போதல், அல்லது முகம், கை, கால் ஆகியவற்றில் ஒரு பாதியில் பக்கவாத பாதிப்பு
• குறிப்பாக ஒரு கண்ணில் பார்வை திடீரென்று மங்குதல் அல்லது தெளிவற்று இருத்தல்; திடீரென்று உருவம் இரட்டை இரட்டையாகத் தெரிதல்
• சாதாரண வாக்கியங்களைக்கூட பேசவோ புரிந்துகொள்ளவோ சிரமப்படுவது
• இன்னொரு அறிகுறியோடு சேர்ந்து தலைசுற்றல் அல்லது பேலன்ஸ் இழத்தல்
அரிதான நோய் அறிகுறிகள்
• திடீரென்று விவரிக்க முடியாத, கடுமையான தலைவலி—“இதுவரை அனுபவித்ததிலேயே பயங்கரமான தலைவலி” என்பதாக விவரிக்கப்படுகிறது
• திடீரென்று குமட்டலுடன் காய்ச்சல்—மிக வேகமாக தாக்குவதால் வைரஸ் காய்ச்சலிலிருந்து வேறுபடுகிறது (நாட்கணக்கில் என்று சொல்வதைவிட சில நிமிடங்களில் அல்லது மணிநேரத்தில் பாதிக்கிறது)
•குறைந்த நேரத்திற்கு சுயநினைவை இழப்பது அல்லது மந்தநிலை ஏற்படுவது (மயக்கம், குழப்பம், வலிப்பு, கோமா)
நோய் அறிகுறிகளை அலட்சியப்படுத்த முடியாது
நோய் அறிகுறிகள் தோன்றும்போது, நோயாளி “உடனடியாக மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல வேண்டும். பாரிசவாயு நோய் தாக்கியவருக்கு முதல் சில மணிநேரத்தில் மருத்துவ கவனிப்புக் கொடுக்கப்பட்டால் குறைந்த பாதிப்பே ஏற்படலாம் என்பதாக அத்தாட்சி காட்டுகிறது” என்று டாக்டர் டேவிட் லவைன் வலியுறுத்துகிறார்.
சில சமயங்களில் நோய்க்குறிகள் மிகக்குறுகிய காலத்திற்கு வெளிப்பட்டு பின்னர் மறைந்துவிடும். இவற்றை டிஐஏ (TIA) அல்லது நிலையற்ற இரத்த தடை பாதிப்பு (transient ischemic attacks) என்று அழைக்கின்றனர். அவற்றை அலட்சியப்படுத்தி விடாதீர்கள், அவை பாரிசவாயுவின் அபாயத்தை சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம், விரைவில் ஸ்ட்ரோக் முழுமையாகத் தாக்கலாம். ஒரு மருத்துவர் சிகிச்சை கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் ஸ்ட்ரோக் தாக்கும் அபாயத்தை குறைக்கலாம்.
நேஷனல் ஸ்ட்ரோக் அஸோசியேஷன், இங்கிள்வுட், கொலராடோ, அ.ஐ.மா. அளித்த உதவிக்குறிப்புகளைத் தழுவி எழுதப்பட்டது.