எமது வாசகரிடமிருந்து
பக்கவாதம் “பக்கவாதத்தை சமாளித்தல்” (பிப்ரவரி 8, 1998) என்ற தொடர்கட்டுரை என் ஜெபத்திற்குக் கிடைத்த பதிலே. சில வருடங்களுக்கு முன்பு நானும் என் கணவரும் கிறிஸ்தவ மாநாடு ஒன்றுக்குச் சென்றிருந்தபோது என் கணவருக்கு ‘ஸ்ட்ரோக்’ ஏற்பட்டது. என்னிடம் எதையோ எழுதிக்காட்ட நினைத்த அவர் கை திடீரென்று கோணிக்கொண்டே போனது. அவர் உடலின் வலதுபக்கம் முழுவதும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது. அந்தக் கட்டுரையிலிருந்து நான் பெற்ற உதவி கொஞ்சநஞ்சமல்ல; அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. யெகோவா எங்களை மறக்கவில்லை என்பதை அறிந்துகொள்வது மனதிற்கு இதமளிக்கிறது.
எஃப். எஸ். எச்., ஐக்கிய மாகாணங்கள்
இந்தப் பத்திரிகை கிடைப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்புதான் எனக்கு ‘ஸ்ட்ரோக்’ ஏற்பட்டது. உடலில் என்னவோ வித்தியாசம் தெரிந்தது; அதன் பாதிப்பால் எவ்வளவு முயன்றும் என்னால் என் மனைவியிடம் விளக்கிச்சொல்ல முடியவில்லை. இந்தப் பத்திரிகையை மூன்று தடவை வாசித்துவிட்டேன். என் மனைவியும் வாசித்துவிட்டாள்.
ஆர். ஸெட்., இத்தாலி
பல ஆண்டுகளாக யெகோவாவை உண்மையுடன் சேவித்து வந்த என் அப்பா, கடந்த வருடம்தான் பக்கவாதத்தால் இறந்து போனார். இறப்பதற்கு முன்பு அவர் ஏன் அப்படியெல்லாம் நடந்துகொண்டார் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை எனக்கு உதவியது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உணர்ச்சிரீதியில் ஏற்படும் பாதிப்பைப் பற்றியும் உரையாடுவதில் ஏற்படும் சிக்கல்களைப் பற்றியும் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த விளக்கங்கள் என் அப்பாவுக்கு நேர்ந்ததைப் பற்றி இன்னும் நன்றாக புரிந்துகொள்ள எனக்கு உதவின.
வி. சி., ஐக்கிய மாகாணங்கள்
ஒரு வருடத்திற்கு முன்பு எனக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இன்னும் என் உடலின் இடதுபக்கம் பலவீனமாகவே இருக்கிறது. அதனால் ரொம்ப கஷ்டப்படுகிறேன். இந்தக் கட்டுரையைப் படித்தால் பக்கவாதத்தைப் பற்றி புரியாத சில விஷயங்கள் தெளிவாகும்; அத்துடன், இதனால் ஏற்படும் பயமும் பறந்துபோகும். முதியவர்களுக்குத்தான் பக்கவாத நோய் ஏற்படும் என்பதெல்லாம் தவறான கருத்து. எனக்கு 47 வயதிலேயே பக்கவாதம் ஏற்பட்டுவிட்டது.
ஏ. ஏ., இங்கிலாந்து
என் மகள் லூட்ஸியாவைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை எனக்குப் பெரிதும் உதவியது. அவள் இரண்டு மாதக் குழந்தையாய் இருந்தபோது ஏற்பட்ட கார் விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவளால் தன் உணர்ச்சிகளை வெளியில் சொல்ல முடிவதில்லை. அவளது நிலைமையை புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை எனக்கு உதவியது.
என். கே., ஸ்லோவாகியா
நான் அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு நர்ஸ். மறுவாழ்வுத் துறையில் பணிபுரிவதற்கான லைசென்ஸ் என்னிடம் இருக்கிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பதில் எனக்கு அதிக அனுபவம் உண்டு. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுடைய குடும்பங்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன என்பதைப் புரிந்துகொண்டு, அதை நீங்கள் கரிசனையோடு விளக்கிய விதத்தை உண்மையிலேயே நான் பாராட்டுகிறேன்.
எல். சி., ஐக்கிய மாகாணங்கள்
என் அம்மா நிலையற்ற இரத்த தடை பாதிப்பால் (transient ischemic attack) அவதிப்பட்டார்கள். உடல்ரீதியில் அவர்கள் முற்றிலும் குணமடைந்துவிட்டார்கள். ஆனாலும் மனோவியல் ரீதியில் ஏற்பட்ட தழும்பு மாறவேயில்லை. ஒருகாலத்தில் அவர்கள் நல்ல பலசாலியாகவும், தன்னம்பிக்கையோடும் இருந்தார்கள். ஆனால் இப்போது மிகவும் பலவீனமாகிவிட்டார்கள். இந்த நோயினால் ஏற்படும் மனோவியல் பாதிப்புகளை விளக்கிக் கூறிய உங்களுக்கு நன்றி.
ஆர். சி., இத்தாலி
இரண்டு வருடங்களுக்கு முன்பு என் அம்மாவை இரண்டு முறை ‘ஸ்ட்ரோக்’ தாக்கியது. முதல் முறை பக்கவாதம் தாக்கியபோது, தன் ஞாபகசக்தியை இழந்துவிட்டார். இரண்டாம் முறை தாக்கியபோது வலதுபக்கம் விளங்காமல் போய்விட்டது. சிலசமயங்களில் அவரிடம் பொறுமை இழந்து, அவரை விசனப்படுத்தும் வகையில் எதையாவது பேசிவிடுவேன். அம்மாவிடம் இன்னும் தயவுடன் நடந்துகொள்ள எனக்கு உங்கள் கட்டுரை உற்சாகமூட்டியது.
ஆர். டி. எஸ்., பிரேஸில்
கிறிஸ்தவ பல்வகைமை “பைபிளின் கருத்து: கிறிஸ்தவ ஒருமை பல்வகைமையை அனுமதிக்கிறதா?” (பிப்ரவரி 8, 1998) என்ற கட்டுரைக்காக என் மனமார்ந்த நன்றி. யெகோவாவைப் பற்றி அதிகமாய் அறிய அறிய, அவரது அமைப்பில் இருப்பதை நினைத்து நினைத்து எனக்கு ஆனந்தம் பொங்குகிறது. ஏனெனில் அவரது அமைப்பில் காணப்படும் பல்வகைப்பட்ட மக்களையும், அவர்களது வெவ்வேறு குணங்களையும் கண்டு மகிழ்கிறோம்.
ஐ. பி., ஸ்லோவேனியா
எனக்கு 15 வயது; நான் விழித்தெழு! பத்திரிகையை தவறாமல் வாசித்துவருகிறேன். குறிப்பாக இந்தக் கட்டுரையை நான் பாராட்டினேன். இக்கட்டுரையின் ஒரு பகுதியில் பரதீஸான நிலையைப் பற்றியும் அது எப்படியிருக்கும் என்பது பற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது. எல்லா மனிதரும் எந்தவித குறைபாடும் இல்லாமல், தோற்றத்திலும் சிந்தனையிலும் ஒரேவிதமாய் இருந்தால் எப்படியிருக்கும் என்று என்னை நானே கேட்டுக்கொண்டதுண்டு. ஆனால் மனிதரிலும் மிருகங்களிலும் ஏராளமான பல்வகைமை இருக்கும் என்பதை இப்பொழுது புரிந்துகொண்டேன்.
ஜே. சி., ஐக்கிய மாகாணங்கள்