எமது வாசகரிடமிருந்து
பரிணாமமும் படைப்பும் “நாம் எப்படித் தோன்றினோம்? தற்செயலாகவா வடிவமைக்கப்பட்டதாலா?” (மே 8, 1997) என்ற தொடர்கட்டுரை தெளிவாகவும், எளிதாகவும் முற்றிலும் தர்க்கரீதியாகவும் அளிக்கப்பட்டிருந்தது. படைப்பிற்கான விஞ்ஞானப்பூர்வ நிரூபணம் அடங்கிய பல பக்கங்களைக் கண்டபோது, அவை எனக்கு கிளர்ச்சியூட்டின. படவிளக்கங்கள் திருப்திகரமாய் இருந்தன. குறிப்பாக, செல் மற்றும் அதன் பாகங்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன். மைட்டோகாண்ட்ரியன், கால்கி உறுப்புகள் இவற்றின் வேலையை எண்ணிப்பார்த்தால், அது, நான் பள்ளியில் படித்திராத ஒன்று; ஆகவே அதை முற்றிலும் அனுபவித்தேன்.
ஜே. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
எனது முக்கியப் பாடம் உயிரியல்; நானோ வாழ்நாளெல்லாம் அறியொணாமைக் கொள்கைவாதி; அந்தக் கட்டுரைகளுக்காக உங்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்தக் கட்டுரைகளில் மிகவும் எளிதாக்கப்பட்டு கூறப்பட்டவையும், . . . சில தகவல்கள் அடங்கியிருந்தபோதிலும், அவை தற்போதைய பரிணாம கொள்கையில் காணப்படும் ஒரு உண்மையான பிரச்சினையிடம் கவனத்தைக் கவர்ந்தன. நிரூபிப்பதில் உள்ள பிரச்சினைகளின் மத்தியிலும், இயற்கைத் தெரிவின் மூலமாக தோன்றியுள்ள பரிணாமமே உயர்ந்தது என்று கிட்டத்தட்ட சர்வலோகம் முழுவதுமுள்ள விஞ்ஞான சமுதாயம் கற்பனை செய்துகொண்டது. விஞ்ஞானம் சரியாகவே விஞ்ஞானம் என அழைக்கப்பட வேண்டுமாயின், அது தொடர்ந்து ஐயுறவுவாதிகளின் பரிட்சைக்கு அடிபணிய வேண்டும். நவீன டார்வின் கோட்பாட்டின் குறைபாடுகளுக்குக் கவனத்தை ஈர்ப்பதில், யெகோவாவின்மீது நம்பிக்கை வைப்பதற்கான தர்க்கத்தை மட்டுமே நீங்கள் அளிக்கவில்லை; ஆனால், எதிர்கால விஞ்ஞான ஆய்வுக்கான ஒரு சேவையையும் செய்துவருகிறீர்கள். நன்றி.
ஏ. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
இடம் மாறிச்செல்வது “இடம் மாறிச்செல்வதன் விளைவை சீர்தூக்கிப் பாருங்கள்!” (மே 8, 1997) என்ற கட்டுரையை உண்மையிலேயே பாராட்டினேன். நீங்கள் எழுதிய விஷயங்களையே நான் அனுபவித்து வருகிறேன். ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு இடம் மாறிச் சென்றிருப்பவனாய், தொடர்ந்து இனம், மொழி, நிறம் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, தப்பெண்ணம் ஆகிய வருத்தந்தரும் போராட்டங்களை எதிர்ப்பட்டு வருகிறேன். பிரபல செய்தித்துறை, பொதுவில் ஆப்பிரிக்கர்களைப் பற்றியும், அயல்நாட்டவரைப் பற்றியும் திரித்துக் கூறப்படும் கருத்தையே மக்களுக்கு அளித்துள்ளது.
பி. ஏ. ஜெர்மனி
பொழுதுபோக்கு “தரமான பொழுதுபோக்குக்கு என்ன நேர்ந்திருக்கிறது?” (மே 22, 1997) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. எனக்கு 12 வயது; என் பள்ளி விடுமுறைகளின்போது, டிவி நிகழ்ச்சிகளை எக்கச்சக்கமாய் பார்த்து வந்திருக்கிறேன். வேறு பொழுதுபோக்குகளிலும் நான் ஈடுபடலாம் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை எனக்கு உதவியது.
ஜே. எல்., இங்கிலாந்து
ஆப்பிரிக்க நாட்டுப்புறங்களில் பிரசங்கித்தல் “மழையில் இரைதேடும் கோழிக்கு . . . ” (மே 22, 1997) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நைஜீரியாவில் வசிக்கும் நம் சகோதரர்களின் அர்ப்பணத்தையும் சகிப்புத்தன்மையையும் பாராட்டுகிறேன். பாம்புகள், முதலைகள், அட்டைப்பூச்சிகள் ஆகியவற்றின் மத்தியிலும், ஜனங்களுக்கான அன்பு அவர்களைத் தூண்டியது. அடுத்தமுறை நான் பிரசங்க வேலைக்கென வெளியே செல்லும்போது உஷ்ணமாகவும் களைப்பாகவும் உணருகையில், நைஜீரியாவில் உள்ள நம் அருமை சகோதர சகோதரிகளை நினைத்துக்கொள்வேன்.
எஸ். எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
பாலியல்—மாறிவரும் மனோபாவங்கள் “பாலியல்—மாறிவரும் மனோபாவங்கள் எதை அர்த்தப்படுத்துகின்றன” (ஜூன் 8, 1997) என்ற தொடர்கட்டுரைக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். அது என் விசுவாசத்தை மிகவும் உறுதிப்படுத்த உதவியது. சமீபத்தில், என் அயலகத்தாரில் ஒருவன், எனக்கு 19 வயதாகியும் இன்னும் கன்னியாக இருப்பதனால் ‘சரீரத்தில் ஊனமுற்றவள்’ என்று என்னிடம் [ஒரு பெண்ணிடம்] சொன்னான். யெகோவாவின் கண்களில் நான் சரீரப்பிரகாரமாயும் ஆவிக்குரியபிரகாரமாயும் ஆரோக்கியமாய் இருப்பதை அவனிடம் சொல்ல முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
டபிள்யூ. எம். சி. சி., ஜிம்பாப்வி
பக்கம் 10-ல் உள்ள, ‘பலருடன் பாலுறவு கொள்ளும் ஆவலை நமக்குள் வைத்துப் படைக்காமல்’ என்பது பற்றிய உங்கள் குறிப்பு சரியல்ல. நான்காம் ஆண்டு இளநிலை உயிரியல் மாணவியாக, “பாலுறவு கொள்ளும் ஆவலை நமக்குள் வைத்திருப்பது” என்பது, ஒரு குரோமோசோமில் இருக்கும் ஜீன்கள் அந்தக் குரோமோசோமுக்குள்ளேயோ, அல்லது வேறொரு குரோமோசோமுக்குள் இடம் மாறியோ செல்லுவதைக் குறிக்கிறது என என்னால் சொல்ல முடியும். ஆகவே அதற்கும் நடத்தைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.
எல். பி., கனடா
‘பலருடன் பாலுறவு கொள்ளும் ஆவலை நமக்குள் வைத்துப் படைக்காமல்’ என்ற கூற்று உண்மையில், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த எடின்பர்க்கில் ஆங்கிலிக்கன் சர்ச் பிஷப்பால் ஆற்றப்பட்ட உரையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு குறிப்பே; அதன் ஒரு பகுதி அதே “விழித்தெழு!” பத்திரிகையில் பக்கம் 4-ல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. “கடவுள் . . . பலருடன் பாலுறவு கொள்ளும் ஆவலை நமக்குள் வைத்துப் படைத்திருக்கிறார்” என அந்த பிஷப் கூறினார்; இது ஒழுக்கயீனமான நடத்தைக்கு சாக்குப்போக்கு சொல்வதற்கான ஒரு முயற்சி என்பது தெளிவாய் இருக்கிறது. எமது கட்டுரை அப்படிப்பட்ட உரிமைபாராட்டல்களின் மடமையை அம்பலப்படுத்தியது.—ED.