செவ்வாய் கிரகத்தை—ஆய்வு செய்த ரோபாட்
செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் பாத்ஃபைன்டர் விண்கலத்தை எடுத்துச்செல்லும் ராக்கெட், கேப் கேனவெரல், ஃப்ளாரிடாவிலிருந்து கிளம்பியபோது நானும் என் குடும்பத்தாரும் கிளர்ச்சியுடன் கவனித்தோம். ‘அது வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் இறங்குமா? என்ன புதிய கண்டுபிடிப்புகள் நமக்காகக் காத்திருக்கின்றன?’ என்று நாங்கள் எண்ணினோம்.
செவ்வாய் கிரகத்திற்கு இதற்கு முன்பு அனுப்பப்பட்ட இரண்டு ராக்கெட்டுகள், மார்ஸ் அப்சர்வர், மார்ஸ் 96 ஆகியவை தோல்வி அடைந்ததால் பாத்ஃபைன்டர் வெற்றி அடையவேண்டும் என்ற கவலை இருந்தது. இதற்கும் மேலாக, பாத்ஃபைன்டர் ஒரு கடினமான முறையில் செவ்வாயில் தரை இறங்குவதற்காக முயற்சி எடுக்கவேண்டும்.
அந்த விண்கலம், ஒரு மணிநேரத்திற்கு சுமார் 27,000 கிலோமீட்டர் என்ற வேகத்தில் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தினுள் புகுந்தது. அவ்வாறு புகுந்தவுடன் தன்னுடைய வேகத்தைக் குறைப்பதற்காக பாராசூட்டை விரித்தது. அதன் பின் செவ்வாய் கிரகத்தின் நிலத்திலிருந்து சுமார் 98 மீட்டர் உயரத்திற்கு வந்தவுடன், இன்னும் அதிகமாக வேகத்தைக் குறைக்க ரிட்ரோ ராக்கெட்டுகளை வெடிக்க வைத்தது. அந்தச் சமயத்தில், அந்த விண்கலத்திற்கு பாதுகாப்பாக, அதைச் சுற்றிலும் காற்று நிரம்பிய பிளாஸ்டிக் பைகள் அளிக்கப்பட்டன. ஜூலை மாதம் 4-ஆம் தேதி, 1997-ல் பாத்ஃபைன்டர் விண்கலம் ஒரு மணிநேரத்திற்கு 65 கிலோமீட்டர் என்ற வேகத்தில் செவ்வாய் கிரகத்தை மோதியது.
மோதிய வேகத்தில் அது கிட்டத்தட்ட 15 மீட்டர் தூரத்திற்கு பந்துபோல் எம்பியது. கடற்கரையில் விளையாடப்படும் பந்துபோல் இன்னும் சுமார் 15 முறைகள் எம்பி குதித்து கடைசியாக நின்றது. அந்தப் பிளாஸ்டிக் பைகள் உள்ளடைத்த காற்றை வெளிவிட்டு சுருங்கிக்கொண்டன. ஒருவேளை, குப்புற விழுந்தாலும் எழுந்துகொள்ளும்படி வடிவமைக்கப்பட்டிருந்தாலும் பாத்ஃபைன்டர் சரியான நிலையில் தரை இறங்கி நின்றது. கடைசியாக அது மலர் இதழ்களைப்போன்ற தன்னுடைய இதழ்களை விரித்து, தன்னிடத்திலிருந்த விஞ்ஞானக் கருவிகள், ரேடியோ ஆன்டெனாக்கள், சூரிய பாட்டரிகள், சோஜொனர் என்று பெயரிடப்பட்ட ஒரு குட்டி ரோபாட் ஊர்தி ஆகியவற்றை வெளிக்காட்டியது.
செவ்வாய் கிரகத்தை சோதனை செய்தல்
வெகு சீக்கிரத்தில் பாத்ஃபைன்டரின் காமிராக்கள் சுற்றி இருந்த நிலத்தை நோட்டம் விட்டன. ஏரிஸ் வேல்லிஸ் அல்லது “செவ்வாய் பள்ளத்தாக்கு” என்ற பிரதேசத்திற்கு அருகே க்ருசா பிளானிடியா என்ற பொட்டல் பிரதேசத்தில் ஜம்பமாக நின்ற பாத்ஃபைன்டர், அந்த இடம் பாறை பிரதேசமாக, கரடுமுரடான மேற்பரப்பையுடைய நிலமாக இருந்ததையும் தூரத்தில் மலைகளையும் படம் பிடித்து வெளிக்காட்டியது—இப்படிப்பட்ட இடம்தான் சோஜொனர் ரோபாட் ஆய்வு செய்ய தகுதியான இடம். இப்படிப்பட்ட திறமை வாய்ந்த 65 சென்டிமீட்டர் நீளம் உள்ள சிறிய ரோபாட் காணக்கூடிய சோதனைகளை தன்னுடைய காமிராவைக் கொண்டு செயல்படுத்தவும், பாறை, மண்ணில் இருக்கும் ரசாயனக் கூறுகளை ஸ்பெக்ட்ரோமீட்டர் உதவியுடனும் ஆய்வு செய்யக்கூடும்.
சோஜொனரை இயக்குவதற்கான பொறுப்பில் இருந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் ஆகியோர் அதன் ஆய்வை ஆரம்பித்து வைத்தனர். ரேடியோ சமிக்ஞைகள் பூமியிலிருந்து செவ்வாய்க்கு செல்ல அதிக நிமிடங்கள் எடுத்துக்கொள்வதால் சோஜொனரை இயக்கும் பொறுப்பில் இருந்தவர்களால் அதை நேரடியாக இயக்க இயலவில்லை. ஆகவே சோஜொனர் தன்னுடைய சொந்தக்காலில் நின்று செவ்வாயின் நிலப்பரப்பில் உள்ள இடையூறுகளை எதிர்ப்படவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக இது லேசர் கதிர்களை உபயோகித்து, தான் செல்லும் வழியில் இருந்த பாறைகளின் இட அமைப்பையும், பருமனையும் அளந்தது. இதன் மூலம், இதில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கம்ப்யூட்டர் எதிரே இருந்த பாறையின் மீது ஏறிப்போகலாமா அல்லது அது பெரிதாக இருந்தால் சுற்றிப்போகலாமா போன்ற வழிநடத்துதல்களை அதற்கு கொடுத்தது.
துணிச்சலும் கண்டுபிடித்தலும்
பாத்ஃபைன்டர் படம் பிடித்து அனுப்பிய செவ்வாய் கிரக நிலப்பரப்பின் படங்களை, செய்தித்தாள்களும் பத்திரிகைகளும் அறிக்கைகளுடன் பிரசுரித்தன. ஆகவே கோடிக்கணக்கானோர் அவற்றைக் கண்டு களித்தனர். சிறிய ரோபாட் இங்கும் அங்கும் கேலிக்குரிய முறையில் அலைந்ததும், அங்கிருந்த பாறைப் பிரதேசம், மலைகள் போன்றவை வித்தியாசமான வண்ணத்தில் காட்சி அளித்ததும், செவ்வாய் கிரகத்திலிருக்கும் மேகங்கள், செவ்வாய் வானில் சூரிய அஸ்தமனம் போன்ற புதிய காட்சிகள் தொடர்ந்து பூமிக்கு வந்தபோது அவற்றைப் பார்த்து ஜனங்கள் மகிழ்ந்தனர். பாத்ஃபைன்டர் வேலை செய்த முதல் மாதத்தில், இன்டர்நெட்டில் அதனுடைய வெப்-பக்கத்தில் 50 கோடிக்கும் அதிகமான முறைகள் அந்த விண்கலத்தைப்பற்றி தகவல் அறிந்துகொள்ள அநேகர் தொடர்புகொண்டனர்.
பொறுப்பில் இருந்த விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட அதிகமான தகவல்களை பாத்ஃபைன்டர் அனுப்பி அனைவரையும் திணறடித்தது. உறையவைக்கும் பூஜ்ய டிகிரி செல்ஷியஸிலிருந்து கடுங்குளிரால் விறைத்துப்போகவைக்கும் -80 டிகிரி செல்ஷியஸ் வரையிலுள்ள தட்பவெப்பநிலையில் பணி செய்து, இப்படிப்பட்டத் தகவல்களை அனுப்பியது அதில் குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணப் பணிகள் எவற்றை வெளிப்படுத்தின?
பாறைகள், மண், வித்தியாசமான ரசாயனக் கலவைகள் நிரம்பிய காற்றிலிருக்கும் தூசிகள், போன்றவற்றை காமிராக்களும் கருவிகளும் வெளிப்படுத்தின; இவை சிக்கலான மண்ணியல் மாற்றங்கள் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டிருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்தின. அருகில் இருந்த மண் குவியல்கள் வடகிழக்கிலிருந்து காற்று வீசியதால் குவிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு அத்தாட்சி அளித்தன. வானத்தில் சூரிய உதயத்திற்கு முன் இருந்த மேகங்களில் தண்ணீராலான ஐஸ் இருந்தது. மேகங்கள் சிதறி, அஸ்தமனம் ஆகும் சமயத்தில் வளிமண்டலத்தில் மென்மையான தூசிகள் இருப்பதால் வானம் சிவந்த வண்ணமாக மாறியது. சில சமயங்களில் சிறிய சுழல் காற்று, எதிர் திசையிலிருந்து வரும் காற்று போன்றவை விண்கலத்தின் அருகே வீசின.
செவ்வாயின் பாத்ஃபைன்டர் சொல்லர்த்தமாகவே இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட ஓர் அனுபவத்தை நாம் அடைய உதவியது. அடுத்த பத்தாண்டுகள் முழுவதும் ஐக்கிய மாகாணங்களும் ஜப்பானும் சேர்ந்து செவ்வாய் கிரகத்திற்கு இன்னும் அதிகமான பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றன. செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மார்ஸ் குலோபல் சர்வேயர், செவ்வாய் கிரகத்தின் அருகே வந்துவிட்டது. விண்கலத்திலுள்ள ரோபாட்டின் காமிராக்களுடைய உதவியுடன், செவ்வாய் கிரகத்தில் நாம் சுற்றுலா செல்லும்போது இந்த சிவந்த கிரகத்தைப்பற்றி நாம் இன்னும் துல்லியமாக அறிந்து கொள்வோம்.—அளிக்கப்பட்டது.
[பக்கம் 26-ன் படங்கள்]
புறப்படுதல்
இறங்குதல்
செவ்வாய் கிரகத்தில்
[படத்திற்கான நன்றி]
All pictures: NASA/JPL