சிவப்பு கிரகத்தை மீண்டும் பார்வையிடுதல்
துப்பறியும் இரண்டு ராக்கெட்டுகள் சூரிய குடும்பத்திலுள்ள நம் அண்டை வீடாகிய செவ்வாய் கிரகத்திற்கு பூமியிலிருந்து அனுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றின் கண்டுபிடிப்புகள் செவ்வாய் கிரகத்தின் கடந்தகால பாறை அமைப்பையும் தற்போதைய நிலையையும் பற்றிய சில அடிப்படை வினாக்களுக்கு விடையளிக்க உதவலாம்.
ஆரம்ப காலத்திலிருந்தே சிவப்பு கிரகம் மனிதனின் கற்பனையை தூண்டியுள்ளது. நம் முன்னோர்கள் இதன் ஒளியில் ஏதோ வித்தியாசம் இருப்பதாக கருதினர். அதாவது இந்தச் சிவப்பு விண்வெளிக் கிரகம் இரவு வானில் மற்ற நட்சத்திரங்களைவிட வேகமாக நகர்ந்து சென்றது. அதன் நிலப்பரப்பு இரும்பு ஆக்ஸைட் துகள்களால் மூடியிருப்பதே அந்தச் சிவப்பு நிறத்திற்குக் காரணம். ஆனால் இதை அறியாத பூர்வ பாபிலோனியர்கள், கிரேக்கர்கள் மற்றும் ரோமர்கள் இந்தக் கிரகத்திற்கு தங்களுடைய போர் மற்றும் சாவு கடவுளின் பெயரை சூட்டினர்.
நவீன காலங்களில், வான் ஆராய்ச்சியாளர்கள் அதிக சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளை சூரிய மண்டலத்தை நோக்கி திருப்பினார்கள். இது, நமது அண்டைய சிவப்பு கிரகம் பூமியை போன்றே பருவங்களையும் பனித்துருவங்களையும் மற்ற அம்சங்களையும் கொண்டுள்ளது என்பதை அறிய உதவியது. 20-ம் நூற்றாண்டில் செவ்வாய் கிரகத்தில் ஆரம்ப ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. சோவியத் யூனியனும் ஐக்கிய மாகாணங்களும் அனுப்பிய விண்சுற்றிகள் (orbiter) மற்றும் விண்வெளி கப்பல்கள் (landers) உட்பட அநேக விண் ஆய்வுக் கருவிகள் (space probes) அல்லது விண் கலங்கள் (space craft) மூலம் இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. செவ்வாய் கிரகத்தில் பாத்ஃபைன்டர் மேற்கொண்ட பணி, ஜூலை 1997-ல் கோடிக்கணக்கான தொலைக்காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. a
தற்போது, ‘மார்ஸ் குளோபல் சர்வேயர்’ என்ற விண்சுற்றி சிவப்பு கிரகத்திலிருந்து தகவல்களைச் சேகரித்து வருகிறது. இது ஏராளமான தகவல்களை தந்தபோதிலும், செவ்வாய் கிரகத்தைப் பற்றிய அடிப்படை கேள்விகள் இன்னும் கேள்விக்குறியாகவே தொக்கி நிற்கின்றன.
தண்ணீர் எங்கே?
இந்தக் கேள்விகளில் பொதுவான அம்சம் தண்ணீரே. வெகு காலத்திற்கு முன் செவ்வாய் கிரகம் இன்று பார்ப்பதைவிட அதிக வித்தியாசமானதாக இருந்தது என்பதாக விஞ்ஞானிகள் யோசிக்கிறார்கள். வெதுவெதுப்பான தட்பவெப்பம், ஈரமான காற்று, மேற்பரப்பை அழகுபடுத்தும் ஆறுகள்—இவைகள் இருந்த ஒரு கிரகமாக அதை அவர்கள் விவரித்தனர். இருந்தாலும் எப்படியோ தண்ணீர் மறைந்துபோய், வறண்ட, தூசியால் மூடப்பட்ட, பலத்த சுழல் காற்று வீசும் இடமாக மாறிவிட்டது. இதோடு ஒப்பிட பூமியின் பாலைவனங்கள்கூட செழிப்பாக காட்சியளிக்கும். தண்ணீர் எங்கே போய் விட்டது? செவ்வாய் கிரகத்தில் தற்போது தண்ணீரை எங்கே காண முடியும், எந்த வடிவில்? செவ்வாய் கிரகத்தின் வானிலையிலும் தட்பவெப்பத்திலும் தண்ணீர் எவ்வாறு செயலாற்றுகிறது?
“இது ஒரு துப்பறியும் கதை” என்று கூறுகிறார் கலிபோர்னியாவிலுள்ள பாசடீனாவில் அமைந்துள்ள நாஸாவின் ஜெட் புரொபல்ஷன் லபாரட்டரியின் செவ்வாய் கிரக ஆய்வு பயண அலுவலக முன்னாள் தலைவர் நார்மன் ஹேன்ஸ். “செவ்வாய் கிரகத்தைப் பற்றி கண்டுபிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் தண்ணீருக்கு என்ன சம்பவித்தது என்பதே.” அதற்கான பதிலை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூமியும் செவ்வாய் கிரகமும் ஒரே நேர்கோட்டில் வருகையில், செவ்வாய் கிரகத்தின் இந்தப் புதிரை விடுவிக்க ரோபாட் விண் ஆய்வுக் கருவிகளை (robotic probes) செலுத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிடுகிறார்கள்.
துப்பறியும் இந்த நவீன ஜோடிகளில் ஒன்று துருவங்களை சுற்றிக்கொண்டு வானிலையை கவனிக்கிறது, மற்றொன்று அதே இடத்திலேயே வேதியியல் ஆராய்ச்சி செய்யும் ரோபாட். இவை இரண்டும் செவ்வாய் கிரகத்தின் நிலத்தடியைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவும். மார்ஸ் க்ளைமேட் ஆர்பிட்டர் மற்றும் மார்ஸ் போலார் லேன்டர் ஆகியவை இவற்றின் பெயர்கள்.
மேலே இருந்து ஆராய்தல்
மார்ஸ் க்ளைமேட் ஆர்பிட்டர் டிசம்பர் 11, 1998 அன்று ஃப்ளாரிடாவின் கேப் கேனவெரலிலுள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டரிலிருந்து செலுத்தப்பட்டது. அதோடு செவ்வாய் கிரகத்திற்கு அதன் ஒன்பது மாத பயணம் ஆரம்பமானது. இது 400 கிலோமீட்டர் உயரத்தில் வட்டமிட்டு அங்கிருந்து அந்த கிரகத்தின் காற்று மண்டலம், மேற்பரப்பு அம்சங்கள் மற்றும் துருவ மூடிகளை படமெடுத்து காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சேகரிப்பு ஒரு முழு செவ்வாய் கிரக வருடத்திற்கு நீடிக்கும்—அதாவது பூமிக்குரிய 687 நாட்கள்.
க்ளைமேட் ஆர்பிட்டர் செவ்வாய் கிரகத்தை செப்டம்பர் 23-லிருந்து கண்காணிப்பதற்காக திட்டமிடப்பட்டது. ஆனால், நாஸாவின் ஜெட் புரொபல்ஷன் லபாரட்டரி விஞ்ஞானிகள் வெதர் ஆர்பிட்டரிடமிருந்து அன்றைய தினம் தகவல் தொடர்பை இழந்து விட்டதாக சொன்னார்கள். “விண்வெளிக் கலம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட கீழ்மட்டத்திற்கு வந்துவிட்டதாக நம்புகிறோம்” என இத்திட்டத்தின் தலைவர் ரிச்சர்டு குக் கூறினார். “இதனால் இறுதியில் இத்திட்டம் தோல்வி அடைந்தது.” அக்கிரகத்தின் மேற்பரப்பில் ஏற்படும் பருவகால மாற்றத்தை கண்காணிப்பதற்கும், அக்கிரகத்தின் கடந்தகால சீதோஷ்ண வரலாற்றைப் பற்றி முக்கிய துணுக்குகளை ஆராய்ச்சியாளர்களுக்கு கொடுப்பதற்கும் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
எல்லாமே முற்றிலுமாக தோல்வியடையவில்லை என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஏனென்றால் இரண்டாவது விண்வெளிக் கலமாகிய மார்ஸ் போலார் லேன்டர், செவ்வாய் கிரகத்திற்கு தனது பயணத்தை ஏற்கெனவே துவங்கி விட்டது. இது ஜனவரி 3, 1999-ல் ஏவப்பட்டது. இந்த வருடம் டிசம்பர் மாத ஆரம்பத்தில் இக்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச நன்மைகளை பெறுவதற்கு வசதியாக, இந்தக் கலம் எங்கே தரையிறங்க வேண்டும்?
இறங்குவது எங்கே?
செவ்வாய் கிரக ஆய்வு பயணத்தில் தண்ணீரைப் பற்றிய கேள்வியே எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்தக் கிரகத்தில் தண்ணீரைப் பற்றி ஆய்வு செய்வதற்கு தகுதியான இடம் எது? வித்தியாசப்பட்ட பல இடங்களில் வித்தியாசமான கருவிகளை உபயோகித்து ஆயிரக்கணக்கானோர் தனிப்பட்ட விதமாய் நடத்திய ஆராய்ச்சிகளின் முடிவுகளை ஒப்பிடுவதன்மூலம் பூமியின் காலநிலை, தட்பவெப்பநிலை மற்றும் நீர்சுழற்சி ஆராய்ந்து அறியப்படுகிறது. என்றாலும் மற்ற கிரகங்களுக்கு ஆய்வு பயணம் மேற்கொள்வதற்கு இதைவிட எளிய வழிமுறைகளே தேவைப்படுகிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆய்வு செய்வது என்பது முடியாத விஷயம். ஆகவே என்னென்ன கருவிகளை அனுப்புவது, அவற்றை எங்கு அனுப்புவது என்பதை தீர்மானிக்கையில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
செவ்வாய் கிரகத்தின் தட்பவெப்பநிலை ஆய்வுக்கு ஏற்ற இடம் துருவ பிரதேசங்களே—எனினும் இரண்டு வருடங்களுக்குமுன் பாத்ஃபைன்டர் வந்திறங்கிய இடமாகிய வெள்ளத்தால் சிதைவுற்ற பாறை பிரதேசத்திலிருந்து இது பெருமளவில் வேறுபடுகிறது. துருவ பிரதேசங்களில்தான் பருவகால மாறுதல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. பருவகால புழுதி காற்றுகள் துருவ பிரதேசங்களில் மெல்லிய மண் அடுக்கை ஏற்படுத்துகிறது என்பதாக கருதப்படுகிறது. குளிர் காலத்தின்போது இந்த மண், கார்பன்டை ஆக்ஸைடுக்கும் பனிக்கட்டிக்கும் கீழாக உறைந்துவிடுகிறது. காலப்போக்கில் அநேக அடுக்குகள் உருவானது. “இந்த அடுக்குகள் செவ்வாய் கிரகத்தின் தட்பவெப்ப சரித்திரத்தின் ஒரு பதிவை பேணிக்காத்துள்ளது” என்கிறார் அரிஸோனா பல்கலைக்கழகத்தின் ராஃப் லாரன்ஸ். இந்தப் புதிய பிராந்தியத்தின் ஆய்வு பயணம் செவ்வாய் கிரக ஆய்வுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சிப்படியாக இருக்கும் என நிபுணர்கள் நம்புகிறார்கள். எப்படி? லேன்டர் தரை இறங்கியபின் என்ன செய்யும்?
மேற்பரப்புக்கு கீழே பார்வையிடுதல்
சிலந்தி போன்ற மெஷின் ஒரு மீட்டர் உயரத்தில் நிற்கும். லேன்டருக்கு மூன்று கால்களும் வாரி எடுக்கும் கோப்பையுடன்கூடிய இரண்டு மீட்டர் நீளமுடைய ரோபாட் கைகளும் உள்ளன. செவ்வாய் கிரக மண்ணைத் தொடுமுன் இதன் பணி ஆரம்பமாகும். காற்று மண்டலத்தை அடைவதற்கு சற்று முன்பு, ஏரோஷெல்ஸ் (aeroshells) என அழைக்கப்படும் கூடைப்பந்து அளவிலான ஒரு ஜோடி உறைகளை லேன்டர் கட்டவிழ்த்துவிடும்.
இந்த உறைகள் கட்டுப்பாடின்றி விழுந்து ஒரு மணி நேரத்திற்கு சுமார் 700 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நிலத்தை மோதும். இந்த உறைகள் நிலத்தில் மோதி உடைவதன் விளைவாக சிறிய ஒரு ஜோடி ஆய்வு கருவியை (smaller probes) அவிழ்த்துவிடுகிறது. இந்தக் கருவிகள் மண்ணுக்குள் ஒரு மீட்டர் ஆழம்வரை செல்லும். மண்ணுக்குள் புதைந்தபின் ஆய்வுக் கருவிகள் சின்னஞ்சிறிய துளையிடும் கருவிகளை விடுவித்து செவ்வாய் கிரக மண்ணின் இராசயன அமைப்பை பரிசோதிக்க ஆரம்பிக்கும். முதல் இலக்கானது அடிதளத்தில் நீர் உறைந்த நிலையில் மறைந்திருக்கக்கூடுமா என கண்டுபிடிப்பதாகும்.
ஆய்வுக் கருவிகள் நிலத்தை அடைந்தபின், பாராசூட் மூலம் லேன்டர் கீழே இறங்கும். காமிராக்களையும் மற்றும் நுண்ணலை உணர்விகளையும் (sensors) கொண்ட இந்த லேன்டர் செவ்வாயின் நில இயல்பையும் வானிலையையும் ஆராயும். இது கீழே இறங்குகையிலும் தரை இறங்கிய பின்பும் புகைப்படம் எடுக்கும். இதில் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோபோன்கள் முதல் தடவையாக செவ்வாய் கிரகத்தின் காற்றின் ஒலியை பதிவு செய்யும். லேன்டர் தரை இறங்கிய 90 நாட்களில் தன் வேலையை முடிக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
ஆய்வு பயணத்திற்கான தூண்டுதல்
இத்திட்டத்தின் மூலமாக திரட்டப்பட்ட தகவல்களை பகுத்தாராய விஞ்ஞானிகளுக்கு உண்மையிலேயே பல வருடங்கள் எடுக்கும். இது செவ்வாய் கிரகத்தைப் பற்றி நிறைய கற்றுக்கொள்வதற்கு எடுக்கப்பட்ட 16 வருட முயற்சியின் ஒரு பாகமாகும். நாஸா தவிர ஐரோப்பியர்கள், ஜப்பானியர்கள் மற்றும் ரஷ்ய விண்வெளி ஏஜன்ஸிகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். முடிவாக, பூமியில் ஆய்வுக்கூடங்களில் பகுத்தாராய்வதற்கு எதிர்கால பணித்திட்டம் செவ்வாய் கிரகத்தின் மண் சாம்பிளை எடுத்து வரும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். கடைசியாக இவை நமது அண்டை வீடாகிய சிவப்பு கிரகமாகிய செவ்வாயின் தட்பவெப்ப நிலைக்கு என்ன சம்பவித்துவிட்டது என்ற அவர்களின் கேள்விக்கு விடையளிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a “செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்த ரோபாட்” என்ற கட்டுரையை ஜூன் 22, 1998 விழித்தெழு! இதழில் காண்க.
[பக்கம் 15-ன் பெட்டி/படம்]
உயிர் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்ததா?
1984-ல் அன்டார்க்டிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவிண்மீன் ALH84001 செவ்வாய் கிரகத்திலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. ஆகஸ்ட் 1996-ல் நாஸாவின் ஜான்சன் விண்வெளி மையம் மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் சில ஆராய்ச்சியாளர்கள் உருளைக்கிழங்கு அளவிலான இந்த பாறை கல் செவ்வாய் கிரகத்தில் உயிர் இருப்பதற்கான ஆதாரத்தைக் கொண்டுள்ளது என அறிவித்தனர். ஆனால் செயற்கை கரிமச் சேர்மங்கள், தாதுப் பொருட்கள் மற்றும் புதைபடிவமாக்கப்பட்ட நுண்ணுயிரிகள் இருப்பதற்கான தெளிவான அத்தாட்சி இல்லை. பூமியின் உயிர் செவ்வாய் கிரகத்தில் தோன்றியிருக்கலாம் என்பதே அதன் கருத்து.
இருந்தாலும், உயிர் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தது என்பதற்கு இந்த எரிவிண்மீன் உறுதியான ஆதாரம் அளிக்க முடியாது என்பதாகவே இப்போது விஞ்ஞான சமுதாயத்தில் மற்ற அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். லாஸ் ஏஞ்சலிஸில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலுள்ள வில்லியம் ஸ்காஃப் இவ்வாறு சொன்னார்: “எரிவிண்மீனை பற்றி ஆய்வு செய்பவர்கள் உயிரியல் செயல்பாட்டில் மீந்திருப்பவற்றைக் காண்பது என்பது முடியாத காரியம் என நான் நினைக்கிறேன்.” அதேவிதமாகவே, கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யூனிவர்சிட்டியிலுள்ள ராஃப் பி. ஹார்வி சொன்னார்: “செவ்வாய் கிரகத்தில் உயிரைப்பற்றிய கருத்து நம்மில் அநேகருக்கு கவர்ச்சியூட்டுவதாய் இருந்தாலும், ALH[84001]-ல் அதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.” b
[அடிக்குறிப்பு]
b பூமியில் உயிரின் தோற்றத்தைக் குறித்த கேள்விக்கு நம்பத்தகுந்த ஆதாரம் உவாட்ச் டவர் பைபிள் அன்ட் ட்ராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட உங்கள் மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற புத்தகத்தின் 3 முதல் 5 வரையுள்ள அதிகாரங்களை காண்க.
[பக்கம் 16, 17-ன் பெட்டி/படம்]
நாற்பது வருட செவ்வாய் கிரக ஆய்வு
◼ 1960-ல் சோவியத் யூனியன் செவ்வாய் கிரகத்தை குறிக்கோளாகக் கொண்டு தன் முதல் இரண்டு விண்வெளி ஆய்வுக் கருவிகளை செலுத்தியது. ஆனால் அது பூமியின் ஆரம்ப சுற்றுப் பாதையையே அடைய முடியாமல் போய்விட்டது.
◼ ஜூலை 14, 1965-ல் ஐக்கிய மாகாணங்களிலிருந்து செலுத்தப்பட்ட மாரினர்-4 செவ்வாய் கிரகத்தைக் கடந்து சென்று அதன் புகைப்படங்களையும் அளவுகளையும் பூமிக்கு அனுப்பியது.
◼ 1971-ல் மார்ஸ் 3 என்ற சோவியத் யூனியனின் விண்வெளி ஆய்வுக் கருவி ஒரு பெட்டகத்தை இறக்கியது. குறைந்த விசையுடன் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது இதுவே. அதே வருடத்தில் மாரினர் 9 என்ற ஐ.மா. விண்வெளி ஆராய்ச்சி கருவி செவ்வாய் கிரகத்தை அடைந்து அதன் மேற்பரப்பின் பெரும் பகுதியை புகைப்படம் எடுத்தது. மாரினர் 9 அந்த கிரகத்தின் இரண்டு துணைக் கோள்களான ஃபோபொஸையும் டெய்மோஸையும் கூட புகைப்படம் எடுத்தது.
◼ ஐ.மா.-வின் வைக்கிங் 1 மற்றும் வைக்கிங் 2, 1976-ல் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. இவை இரண்டும் பல வருடங்களாக இயங்கி, உயிரிகளை கண்டுபிடிப்பது போன்ற நுணுக்கமான பரிசோதனைகளை செய்யும்படி வடிவமைக்கப்பட்டது. என்றாலும், இவை உயிர்கள் இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை.
◼ 1988-ல் சோவியத் விஞ்ஞானிகள் ஃபோபொஸ் 1 மற்றும் ஃபோபொஸ் 2 என்ற இரண்டு விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தினர். ஃபோபொஸ் 1 செயலிழந்தது. ஆனால் ஃபோபொஸ் 2 செவ்வாய் கிரகத்தை அடைந்து அதன் கண்டுபிடிப்புகளை பல நாட்களாக பூமிக்கு அனுப்பியது.
◼ 1992-ல் ஐக்கிய மாகாணங்கள் மார்ஸ் அப்சர்வர் என்ற விண்வெளி ஆய்வுக் கருவியை செலுத்தியது. ஆனால் அது தன் பணியை செய்ய முடியாமல் போய்விட்டது.
◼ மார்ஸ் பாத்ஃபைன்டர், சோஜொனர் ஊர்தியையும் எடுத்துக்கொண்டு ஜூலை 4, 1997-ல் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. சிவப்பு கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து திகைக்க வைக்கும் கலர் புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.
[படம்]
மாரினர் 4
வைக்கிங் லேன்டர்களில் ஒன்று
ஃபோபொஸ் 2
[பக்கம் 15-ன் படம்]
மார்ஸ் போலார் லேன்டர்
[பக்கம் 15-ன் படம்]
மார்ஸ் க்ளைமேட் ஆர்பிட்டர்
[பக்கம் 16, 17-ன் படம்]
மார்ஸ் பாத்ஃபைன்டரால் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரக நிலப்பரப்பின் வண்ணக்காட்சி
[பக்கம் 14-ன் படத்திற்கான நன்றி]
பக்கம் 15: எரிவிண்மீன்: NASA photo; பின்னணி: NASA/U.S. பூகோள ஆய்வு; ஆர்பிட்டரும் லேன்டரும்: NASA/JPL/Caltech
பக்கம் 16 மற்றும் 17: நிலப்பரப்பு, மாரினர்-4, வைக்கிங் லேன்டர்: NASA/JPL/Caltech; கிரகம்: NASA photo; ஃபோபொஸ் 2: NASA/National Space Science Data Center