ஏன் அநேகர் இரத்தமேற்க மறுக்கின்றனர்
ஒன்டாரியோ நீதிமன்றம் ஒன்று, கனடாவின் செஞ்சிலுவை சங்கமே பொறுப்பு என குற்றம்சாட்டி திருப்புமுனையான ஒரு தீர்ப்பை வழங்கியது. எதற்கென்றால், ஒரே நபரிடமிருந்து பெற்ற மாசுபடுத்தப்பட்ட இரத்தத்தை ஏற்றியதால் இரண்டு பேருக்கு ஹெச்ஐவி தொற்றியது. “மனிதருடைய வாழ்க்கையை முற்றிலும் நாசமாக்கும் தன்மையுடைய, மாசுபடுத்தப்பட்ட இரத்தம் ஏற்றப்படும் அபாயம் ஏற்படும்போது, உடனடியான நடவடிக்கை தேவைப்படுகிறது” என நீதிபதி ஸ்டீவன் பாரன்ஸ் கூறினார்.
1980-களின் போது, சுமார் 1,200 கனடா நாட்டவர்களுக்கு ஹெச்ஐவி தொற்றியிருந்தது. கூடுதலான 12,000 பேருக்கு ஹெப்படைட்டஸ்-சி தொற்றியது. இவை எல்லாமே மாசுபடுத்தப்பட்ட இரத்தமோ அல்லது இரத்தப் பொருட்களோ ஏற்றப்பட்டதால் வந்த விளைவுதான். நோய் தொற்றுவதைக் குறைப்பதற்காக, இரத்த தானம் செய்பவர்களை இன்னும் ஜாக்கிரதையுடன் பரிசோதனை செய்கின்றனர். ஆனால் தானம் செய்யும் எல்லாருமே தங்கள் பாலியல் வரலாற்றுப் பின்னணியை ஒத்துக்கொள்வதில்லை. உதாரணமாக, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி தானம் செய்பவர்களில் 50 பேருக்கு ஒருவர், ஒத்த பாலினத்தவர் நடவடிக்கை அல்லது வேசியுடன் பாலுறவுகொள்ளுதல் போன்ற ஆபத்தை விளைவிக்கும் காரணிகளைப் பற்றி அறிக்கை செய்யவேயில்லை.
மறுபட்சத்தில், இரத்த தானம் செய்பவரின் இரத்தத்தை பரிசோதனை செய்கையில் ஹெச்ஐவி கிருமிகள் கண்டுபிடிக்கப்படாவிட்டால், அவை இருக்கவே இருக்காது என்பதற்கு அந்தப் பரிசோதனை உத்தரவாதம் அளிப்பதில்லை. இந்நிலையே குழப்பத்தை இன்னும் அதிகரிக்கிறது. நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை சொல்வதன்படி, “ஹெச்ஐவியால் தாக்கப்பட்டு மூன்று வார காலப்பகுதிக்கு உள்ளாக ஒருவர் இரத்த தானம் செய்தால், தற்போதைய சோதனை முறைகளால் அந்த வைரஸ்களைக் கண்டுபிடிக்க முடியாது. ஹெப்படைட்டஸ்-சி கிருமிக்கோ, ‘நோய் தாக்கும் காலப்பகுதியான’ இரண்டு மாதம் தேவைப்படலாம்.”
சமீப ஆண்டுகளில், இரத்த தானம் செய்பவர்களும் இரத்தத்தை தங்கள் உடலில் ஏற்றிக்கொள்பவர்களுமான கனடா நாட்டவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருக்கிறது. எழுத்தாளர் பால் ஷ்ராட்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: “தானம் செய்ய முன்வருபவர்கள் குறைவாக இருப்பதனாலும், தானம் செய்ய முடியாதவர்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாலும், இரத்தத்திற்குப் பதிலான மாற்று மருந்து சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு முன்னிலையில் யெகோவாவின் சாட்சிகளே காரணமாய் இருந்திருக்கின்றனர்.”
அக்கறையூட்டும் விஷயம் என்னவென்றால், சமீபத்தில் ஓராண்டுக்குள், சுமார் 40 பேர், “இரத்தம் ஏற்றிக்கொள்ள விரும்பாததால், தாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று பொய் சொல்லிக்கொண்டு கனடா மருத்துவமனைகளில் சேர்ந்திருக்கின்றனர்” என த டோரன்டோ ஸ்டார் அறிக்கை செய்கிறது. கனடாவில் தானம் வழங்கியவர்களின் இரத்தத்தை ஏற்றிக்கொள்வதற்குப் பதிலாக மாற்று மருந்துகளை விரும்புவோர் சுமார் 90 சதவீதத்தினர் என சுற்றாய்வுகள் காட்டுகின்றன. ஆகவே, இரத்தத்தைப் பயன்படுத்துவது இனியும் ஒரு மதப் பிரச்சினை மட்டுமே அல்ல.