பாதுகாப்பின்மை—உலகளாவிய வியாதி
உங்களுடைய வாழ்க்கை நிலையற்றதென நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? உங்களுடைய வாழ்க்கைப் பாணியும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஒன்று என உணர்ந்திருக்கிறீர்களா? உங்களைப்போல்தான் லட்சக்கணக்கான மக்களும் உணருகிறார்கள். பாதுகாப்பின்மை என்பது தேசிய, மத அல்லது சமூக எல்லைகளைக் கடந்து, ஒரு நோயைப்போல கிழக்கிலிருந்து மேற்குவரை உலகெங்கிலும் உள்ள மக்களை பாதிக்கிறது.
நம் வாழ்க்கை பாதுகாப்பில்லாமல் இருக்கும்போது, “பயமும் கவலையும் நம்மை கவ்விக்கொள்கின்றன” என்பதாக ஒரு அகராதி சொல்கிறது. கவலை ஓர் உணர்ச்சிப்பூர்வ பாரமாகும்; அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு நம் உடல்நலம் பாதிக்கப்படலாம். ஆனால் நாம் கவலையாகவும் பாதுகாப்பில்லாமலும் உணருவதற்கு என்ன காரணம்?
ஐரோப்பியர்களின் கவலைகள்
ஐரோப்பிய கூட்டமைப்பு (ஐகூ) நாடுகளில் ஆறு பேரில் ஒருவர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்; 1.8 கோடி மக்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர்; எண்ணிலடங்காத மற்றவர்கள் வேலை போய்விடுமோ என்ற பயத்தில் வாழ்கின்றனர். குழந்தைகளைப் பாலுறவு கருவிகளாக உபயோகிப்பவர்களால் தங்கள் பிள்ளைகளுக்கு ஆபத்து வருமோ என்று ஐகூ-விலுள்ள அநேக நாடுகளில் இருக்கும் பெற்றோர் பயப்படுகின்றனர். அங்குள்ள ஒரு நாட்டில், 3 பேரில் 2 பேர் குற்றச்செயல் பற்றிய பயத்தில் வாழ்கின்றனர். வன்முறை, பயங்கரவாதம், தூய்மைக்கேடு போன்ற காரியங்கள் மற்றவர்களை ஆட்டிப்படைக்கின்றன.
உயிரும் உயிர் வாழ்வதற்கான ஆதாரமும் ஆபத்தில் இருப்பதற்கு சமூக சீர்கேடுகள் மட்டுமே காரணமல்ல, இயற்கைச் சேதங்களாலும்கூட ஆபத்து ஏற்படுகிறது. உதாரணமாக 1997 மற்றும் 1998-ல், கனத்த மழை, களிமண் வெள்ளம் (mud slides), புயல் காற்று போன்றவை ஐக்கிய மாகாணங்களில் பெரும் பகுதிகளைப் பாழாக்கின. 1997-ல் ஓடர் மற்றும் நைஸா ஆறுகள் சீற்றம் கொண்டதால் மத்திய ஐரோப்பாவில் வெள்ளம் பெருக்கெடுத்தது. போலந்து நாட்டு வாராந்தர பத்திரிகையான போலிட்யிக்கா அறிக்கை செய்ததன்படி, அதிகளவான விவசாய நிலங்களும், 86 நகரங்களும் பட்டணங்களும், சுமார் 900 கிராமங்களும் நீரில் மூழ்கின. சுமார் 50,000 குடும்பத்தினர் பயிர் செய்திருந்த பயிர்கள் அனைத்தும் நாசமாயின. கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்தனர். மேலுமாக, 1998-ன் ஆரம்பத்தில் ஏற்பட்ட களிமண் வெள்ளம் தெற்கு இத்தாலியில் எண்ணற்ற மக்களைக் காவு கொண்டது.
தனிப்பட்ட பாதுகாப்பைப் பற்றியென்ன?
ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இன்று வாழ்க்கை அதிக பாதுகாப்பாக இருக்கிறதென நம்புகிறோம் அல்லவா? பனிப் போர் முடிவுக்கு வந்ததால் ராணுவ தளவாடங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன அல்லவா? உண்மைதான், தேசிய பாதுகாப்பு வேண்டுமானால் அதிகரித்திருக்கலாம். ஆனால், நம் வீட்டிலும் தெருவிலும் என்ன நடக்கிறது என்பதில்தானே தனிமனிதனின் பாதுகாப்பு சார்ந்திருக்கிறது! நம் வேலையை இழந்தால் அல்லது ஒரு திருடனோ பிள்ளைகளைப் பாலுறவு துர்ப்பிரயோகம் செய்பவனோ வெளியில் மறைந்திருக்கிறான் என்று நாம் சந்தேகப்பட்டால், எவ்வளவுதான் ராணுவ தளவாடங்கள் குறைக்கப்பட்டிருந்தாலும் நமக்கு கவலையும் பாதுகாப்பின்மையும்தானே மிச்சம்?
வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையை சிலர் எவ்வாறு சமாளிக்கிறார்கள்? அதையும்விட முக்கியமாக, உங்கள் வாழ்க்கை உட்பட ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிரந்தமான பாதுகாப்பை ஏற்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா? பின்வரும் இரண்டு கட்டுரைகளும் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
UN PHOTO 186705/J. Isaac
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
FAO photo/B. Imevbore