வாழ்க்கையில் நிரந்தரமான பாதுகாப்பு
உங்களுக்கு காய்ச்சல் அடிக்கிறதென்றால், தலைவலியைப் போக்க ஒரு மாத்திரையைப் போட்டு, காய்ச்சலைக் குறைக்க ஈரத் துணியை நெற்றியில் போடுவீர்கள். இது நோயின் அறிகுறிகளை சமாளிக்க உதவலாம், ஆனால் காய்ச்சலுக்கான அடிப்படை காரணத்தை நீக்காது. உங்கள் உடல்நிலை இன்னும் மோசமாகிறது என்றால் ஒரு நல்ல மருத்துவர் உங்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.
பாதுகாப்பின்மை என்ற காய்ச்சல் மனிதவர்க்கத்தைத் தொடர்ந்து தொல்லைப்படுத்தி வருகிறது. நமக்கு கஷ்டத்தைத் தரும் நோயின் அறிகுறிகளை நீக்க நாம் உடனடி நடவடிக்கைகளை எடுப்பது நியாயமானதே. ஆனால், நிரந்தரமாக குணமடைய வேண்டுமென்றால் நம்முடைய சூழ்நிலையை நன்றாக அறிந்த ஒருவரால்தான் ‘டயாக்னோஸ்’ செய்து நமக்கு உதவ முடியும். நம் சிருஷ்டிகரான யெகோவா தேவனைத் தவிர வேறு யார் மனிதவர்க்கத்தை அவ்வளவு நன்றாக அறிந்திருக்க முடியும்? நம்மீது சுமத்தப்பட்ட பிரச்சினைகள் காரணமாகத்தான் வாழ்க்கை பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறதென்று அவருக்கு நன்றாக தெரியும்.
பாதுகாப்பான ஆரம்பம் பாதியில் தடைபட்டது
கடவுள், முதல் மனித தம்பதியைப் பரிபூரணமாக படைத்து பாதுகாப்பான சூழ்நிலையில் அவர்களை வைத்தார் என்று கடவுளுடைய வார்த்தை விளக்குகிறது. அவர்களுக்கு எந்தக் கவலையும் இருக்கவில்லை. மனிதர்கள், பூங்காவனம் போன்ற பரதீஸில் முழுமையான பாதுகாப்புடன் என்றென்றுமாக வாழவேண்டும் என்பதே கடவுளுடைய நோக்கமாகும். மனிதவர்க்கத்தின் முதல் வீட்டில், “பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்க”ளும் இருந்தன. அவர்களுடைய சரீர தேவைகளும் உணர்ச்சிப்பூர்வ தேவைகளும்கூட பூர்த்தி செய்யப்பட்டன என்பதையும் கவனியுங்கள். ஏனென்றால், அந்தச் சூழ்நிலை “பார்வைக்கு அழ”காய் இருந்ததாக வர்ணிக்கப்பட்டது. அந்த முதல் ஜோடி, நிலையான, கஷ்டமில்லாத சூழ்நிலையில் வைக்கப்பட்டார்கள் என்பதை இது தெளிவாக்குகிறது.—ஆதியாகமம் 2:9.
ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய அன்புள்ள சர்வலோக அரசுரிமையை நிராகரித்தனர். அதன் விளைவாக, சந்தேகம், பயம், வெட்கம், குற்றவுணர்வு, பாதுகாப்பின்மை ஆகியவை அவர்களுடைய வாழ்க்கையில் நுழைந்தன. கடவுளை நிராகரித்த பிறகுதான் ஆதாம் ‘பயந்ததாக’ ஒப்புக்கொண்டான். அந்த முதல் ஜோடி தங்கள் சரீரத்தை மூடிக்கொண்டு அன்புள்ள தங்கள் சிருஷ்டிகரிடமிருந்து ஓடி ஒளிந்துகொண்டனர். ஆனால் அக்காரியம் நடப்பதற்கு முன்புவரை அவரோடு ஒரு நெருக்கமான, பலனளிக்கும் உறவை அனுபவித்து வந்திருந்தனர்.—ஆதியாகமம் 3:1-5, 8-10.
யெகோவாவின் ஆதிநோக்கம் இன்னும் மாறவில்லை. ஆகவே, இந்தப் பூமியை ஒரு பரதீஸாக மாற்றி பாதுகாப்புடன் என்றென்றுமாக வாழ கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு அவர் நிச்சயம் உதவுவார். ஏனென்றால், நம்முடைய சிருஷ்டிகர் அன்புள்ளவர் என்று பைபிள் கூறுகிறது. தீர்க்கதரிசியாகிய ஏசாயா மூலம் பின்வருமாறு அவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; . . . நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்.” (ஏசாயா 65:17, 18) இந்தப் புதிய வானத்திலும் புதிய பூமியிலும் “நீதி வாசமாயிருக்கும்” என்று அப்போஸ்தலன் பேதுரு மேலுமாக கூறினார்.—2 பேதுரு 3:13.
இது எவ்வாறு நடைபெறும்? யெகோவா ஏற்படுத்தும் ஓர் அரசாங்கத்தின் மூலமே. இந்த ராஜ்யத்திற்காக ஜெபிக்கும்படிதான் இயேசு கிறிஸ்து தம் சீஷர்களிடம் சொன்னார்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.”—மத்தேயு 6:9, 10.
கடவுளுடைய ராஜ்யம் மனித அரசாங்கங்களை நீக்கி அவருடைய நோக்கத்தை அன்புள்ள விதத்தில் பூமி முழுவதும் நிறைவேற்றும். (தானியேல் 2:44) அப்போது, ஆதாமின் காலத்திலிருந்து மனிதவர்க்கத்தை ஆட்டிப்படைத்த சந்தேகம், பயம், வெட்கம், குற்றவுணர்வு, பாதுகாப்பின்மை ஆகியவை மறைந்துபோகும். அந்த ராஜ்யம் மிகவும் அருகில் இருக்கிறது என்று பைபிள் கூறுகிறது. ஆனால் நிச்சயமற்ற இந்த உலகத்தில், கடவுளுடைய ராஜ்யத்திற்காக ஏங்குபவர்கள் இப்பொழுதேகூட ஓரளவு பாதுகாப்பைப் பெறமுடியும்.
ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுங்கள்
பயத்திலும் துக்கத்திலும் வாழும் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை கடவுளுடைய ஓர் ஊழியனாகிய தாவீது நன்றாக அறிந்திருந்தார். இருந்தாலும், சங்கீதம் 4:8-ல் (NW) அவர் எழுதினார்: “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன்; யெகோவாவே, நீர் ஒருவரே என்னை பாதுகாப்போடு தங்கப்பண்ணுகிறீர்.” தாவீது சில சமயங்களில் பிரச்சினைகளால் சூழப்பட்டிருந்த போதிலும் யெகோவா அவருக்கு பாதுகாப்பான உணர்வைக் கொடுத்தார். இதிலிருந்து நாம் ஏதாவது கற்றுக்கொள்கிறோமா? பாதுகாப்பற்ற இந்த உலகத்திலும்கூட நாம் எவ்வாறு ஓரளவு பாதுகாப்பைப் பெறமுடியும்?
ஆதாம் ஏவாளைப் பற்றி ஆதியாகமம் சொல்வதை மறுபடியும் கவனியுங்கள். தங்களுடைய பாதுகாப்பு உணர்வை அவர்கள் எப்போது இழந்தார்கள்? தங்கள் சிருஷ்டிகரோடிருந்த தனிப்பட்ட உறவை துச்சமாக நினைத்து, மனிதவர்க்கத்திற்கான அவருடைய நோக்கத்திற்கு இசைவாக வாழ மறுத்த அந்த வினாடியிலேயே இழந்தார்கள். ஆகவே, நாம் இந்தக் காரியத்தைத் தலைகீழாக மாற்றினால், அதாவது யெகோவாவோடு ஒரு நெருக்கமான, தனிப்பட்ட உறவிற்குள் வந்து அவருடைய சித்தத்திற்கு இசைவாக வாழ முயற்சித்தால் இப்பொழுதேகூட மிகவும் பாதுகாப்பான ஒரு வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
பைபிளைப் படிப்பதன் மூலம் யெகோவாவை அறிந்துகொள்ள முடியும்; இதன் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளலாம். அப்போதுதான், நாம் யார், ஏன் இங்கே இருக்கிறோம் போன்ற விஷயங்களை முழுமையாக புரிந்துகொள்வோம். கடவுளை நேசித்து, மனிதவர்க்கத்திற்கான அவருடைய நோக்கத்தை அறிந்து, அதில் நம்முடைய பங்கைப் புரிந்துகொண்டால்தான் பாதுகாப்பான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இதைத்தான் பல வருடங்களுக்கு முன்பு பால் என்பவர் அறிந்துகொண்டார்.
பால், ஜெர்மனிக்கு அருகிலுள்ள தீவுகள் ஒன்றில் பிறந்து வளர்ந்தார். இரண்டாம் உலக யுத்தத்தின்போது அவருடைய பெற்றோருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக அவருடைய குடும்பத்தினருக்கு மதத்தில் அக்கறையே இருக்கவில்லை. இளைஞனாய் அவர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதைப் பற்றி பால் கூறுகிறார்: “எனக்கு எதிலுமே நம்பிக்கை இருக்கவில்லை, யாரையுமே மதிக்கவில்லை. குடித்துக் குடித்தே என் துயரத்தையெல்லாம் தீர்த்தேன். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை ஓவராக குடித்தேன். என் வாழ்க்கையில் பாதுகாப்பே இருக்கவில்லை.”
அதற்கு பிறகு, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரோடு கலந்துபேசும் வாய்ப்பு பாலுக்கு கிடைத்தது. அவர் பயங்கரமாக விவாதித்தார். ஆனாலும், “வெறுமையிலிருந்து எதுவும் தோன்ற முடியாது” என அந்தச் சாட்சி கூறியது அவரைச் சிந்திக்க வைத்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால், இயற்கையில் நம்மைச் சுற்றிலும் நாம் பார்க்கும் எல்லாவற்றிற்குமே ஒரு சிருஷ்டிகர் இருக்கவேண்டும்.
“அதைப் பற்றியே திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தேன். கடைசியில் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.” ஆகவே பால், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்து யெகோவாவை அறிந்துகொண்டார். “என் வாழ்க்கையிலேயே என் பெற்றோரைத் தவிர வேறு யாராவது எனக்காக ஏதாவது செய்திருக்கிறார்கள் என்றால் அது யெகோவா மட்டுமே” என அவர் ஒப்புக்கொள்கிறார். ஆகவே, 1977-ல் பால் ஒரு சாட்சியாக முழுக்காட்டுதல் பெற்றார். அவர் கூறுகிறார்: “வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி இப்போது நான் நன்றாக அறிந்திருக்கிறேன். யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாக வாழ்வதில் மகிழ்கிறேன்; பாதுகாப்பாகவும் உணர்கிறேன். ஏனென்றால், எனக்கோ என் குடும்பத்திற்கோ என்ன நடந்தாலும் அதை யெகோவாவால் எதிர்காலத்தில் சரிசெய்ய முடியும்.”
இந்த அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? பால், பாதுகாப்பின்மை என்ற உணர்ச்சிப்பூர்வ பாரத்தின் மீது வெற்றி பெற்றார். பொருட்செல்வங்கள் மீது கவனம் வைப்பதன் மூலம் அல்ல, ஆனால் ஆவிக்குரிய காரியங்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலமே அந்த வெற்றி கிடைத்தது. சிருஷ்டிகரோடு ஒரு பலமான உறவை அவர் ஏற்படுத்திக் கொண்டார். யெகோவாவின் சாட்சிகளில் லட்சக்கணக்கானோர் அப்படிப்பட்ட ஓர் உறவை அனுபவித்து வருகிறார்கள். இது அவர்களுக்கு ஆத்ம பலத்தைக் கொடுப்பதனால் மற்றவர்களோடு பழகுகையில் சுயதியாகத்தை வெளிக்காட்ட அவர்களுக்கு உதவுகிறது. யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய நேரத்தை உபயோகித்து ஆட்களை அவர்களுடைய வீடுகளில் சந்திக்கின்றனர். இவ்வாறு, ஆவிக்குரிய காரியங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையை அதிக பாதுகாப்புள்ளதாக ஆக்கிக்கொள்ள அவர்களுக்கு உதவுகின்றனர். ஆனால் சாட்சிகள் வெறுமனே பிரசங்கிப்பது மட்டுமல்ல, அதைக் காட்டிலும் அதிகத்தை செய்கிறார்கள்.
‘உங்கள் கடவுள் யெகோவாவைக் கூப்பிடுங்கள்’
ஜூலை 1997-ல் ஓடர் ஆறு கரைபுரண்டோடி வட ஐரோப்பாவின் பெரும்பகுதிகளை மூழ்கடித்தது. அருகிலுள்ள போலந்தில் இருந்தவர்களின் கஷ்டங்களைப் பற்றி ஜெர்மனியிலிருந்த சாட்சிகள் கேள்விப்பட்டனர். அவர்கள் எவ்வாறு உதவி செய்தனர்? பெர்லினிலும் அதைச் சுற்றிலும் இருந்த சாட்சிகள் அருமையான உதாரகுணத்தைக் காண்பித்தனர். அதன் விளைவாக, சில நாட்களுக்குள் 46.4 லட்சத்திற்கும் அதிகமான பணம் நன்கொடையாக சேர்ந்தது.
கட்டட வேலையில் அனுபவம் பெற்றிருந்த சாட்சிகள் தங்கள் சொந்த செலவில், பெர்லினிலிருந்து ரோடு வழியாக ஆறு மணிநேரம் பயணம்செய்து போலந்திலுள்ள ரோக்ளாவ் பகுதியை அடைந்தனர். ஒரு சிறிய நகரத்தில் அநேக வீடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. சாட்சிகளாக இருந்த ஒரு குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஆறு மீட்டருக்கும் அதிகமான தண்ணீரில் மூழ்கியிருந்தது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மகள் அதற்கடுத்த மாதம் திருமணம் செய்துகொண்டு அதே வீட்டில் குடியிருப்பதற்காக திட்டமிட்டிருந்தார். அந்த வீட்டைப் பழுதுபார்த்து, அநேகமாக எல்லாவற்றையுமே இழந்திருந்த அந்தக் குடும்பத்தினருக்கு எவ்வாறு உதவ முடியும்?
வெள்ளம் குறைந்ததும் பக்கத்துவீட்டுக்காரர் கிண்டலாக கேட்டார்: “உங்க கடவுள் யெகோவாவ கூப்பிட வேண்டியதுதானே? அவர் வந்து உதவுவாரானு பாப்போமே.” ஆனால் மறுநாள், ஜெர்மனியிலிருந்து வந்த அநேக மோட்டார் வண்டிகள் அந்தச் சாட்சியின் வீட்டிற்கு முன் வந்து நின்றபோது அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோனார்! முன்பின் தெரியாத அநேகர் அந்த வண்டிகளிலிருந்து இறங்கி அந்த வீட்டில் வேலைசெய்ய தொடங்கினர். “யார் இவங்க? கட்டட சாமான் எல்லாம் யார் வாங்கிக் குடுத்தாங்க?” என பக்கத்து வீட்டுக்காரர் கேட்டார். அவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய சகோதரர்கள் என்றும் தங்கள் சொந்த செலவிலேயே எல்லா வேலையையும் செய்கிறார்கள் என்றும் அந்தச் சாட்சி குடும்பத்தினர் விளக்கினர். அந்த வீட்டைப் புதுப்பிக்கையில் அந்நகரத்தின் மக்கள் மூக்கில் விரலை வைத்தவர்களாக பார்த்துக் கொண்டிருந்தனர். திட்டமிட்ட தேதியிலேயே அந்தத் திருமணமும் நடந்து முடிந்தது எல்லாருக்கும் அதிக ஆச்சரியத்தைத் தந்தது.
யெகோவாவின் சாட்சிகளின் சர்வதேச சகோதர கூட்டுறவின் பாகமாக இருப்பது ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை மட்டுமல்ல, பாதுகாப்பற்ற இந்த உலகத்தில் ஓரளவு பாதுகாப்பையும் அளிக்கிறது என்பதை இந்தக் குடும்பத்தினர் தெரிந்து கொண்டனர். இதைப்போன்ற அனுபவம் இவர்களுக்கு மட்டுமல்ல இன்னும் அநேகருக்கும் ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதி முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய வீடுகளும் இராஜ்ய மன்றங்களும் பழுதுபார்க்கப்பட்டன. சாட்சிகளாக இல்லாத அயலகத்தாரையும் மறந்துவிடவில்லை. அவர்களுடைய வீடுகளும் பழுதுபார்க்கப்பட்டன; அதற்காக அவர்கள் அதிக நன்றியுள்ளவர்களாக இருந்தனர்.
நீதியும், அமைதியும், பாதுகாப்பும்
நமக்கிருந்த காய்ச்சல் குணமாகி நல்ல ஆரோக்கியம் திரும்பிய பிறகு நம்மைக் குணப்படுத்திய வைத்தியருக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருப்போம்! அதைப் போலவே, மனிதவர்க்கத்தைப் பீடித்திருக்கும் காய்ச்சலான பாதுகாப்பின்மை கடவுளுடைய ராஜ்யத்தின் மூலம் நிரந்தரமாக நீக்கப்படும்போது நம்முடைய சிருஷ்டிகருக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! நித்திய காலத்திற்கும் “உண்மையான நீதியும், அமைதியும், பாதுகாப்பும்” நிறைந்த வாழ்க்கையை அவர் மட்டுமே நமக்கு வாக்கு கொடுக்கிறார். என்னே அற்புதமான ஓர் எதிர்பார்ப்பு!—ஏசாயா 32:17, NW.
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
பொருளுடைமைகள் மீதல்ல, ஆவிக்குரிய காரியங்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலமே நாம் உணர்ச்சிப்பூர்வ பாரத்தை சமாளிக்க முடியும்
[பக்கம் 8, 9-ன் படம்]
எல்லாரும் நிரந்தரமான பாதுகாப்புடன் வாழும் ஒரு புதிய உலகத்தைக் கடவுள் வாக்கு கொடுக்கிறார்