உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 10/8 பக். 4-6
  • பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடி
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உயர் கல்வி
  • 10,000 உடைமைகள் போதுமா?
  • ஜாக்கிரதை!
  • அறிகுறிகளை மட்டுமல்ல, வியாதியைக் குணப்படுத்துங்கள்
  • நிறைவான வாழ்க்கைக்கு வழி
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
  • கல்வியும் பணமும் நிறைவான வாழ்க்கையைத் தருமா?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
  • வாழ்க்கையில் நிரந்தரமான பாதுகாப்பு
    விழித்தெழு!—1998
  • இன்று பாதுகாப்பான உணர்வு என்றும் பாதுகாப்பான வாழ்வு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 10/8 பக். 4-6

பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடி

பாதுகாப்பு. அது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகிறது. ஒருவருக்கு வேலைதான் பாதுகாப்பு என்றால் மற்றொருவருக்கு செல்வம்தான் பாதுகாப்பு. இல்லையில்லை குற்றச்செயல் இல்லாத சூழ்நிலையே பாதுகாப்பு என்கிறார் மற்றொருவர். உங்களுக்கு அது வேறு ஏதாவது ஒன்றைக் குறிக்கிறதா?

உங்கள் கருத்து என்னவாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையைப் போதுமானளவு பாதுகாப்பு உள்ளதாக்க உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய நீங்கள் விரும்புவீர்கள். ஓரளவு தனிப்பட்ட பாதுகாப்பைப் பெற ஐரோப்பியர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா?

உயர் கல்வி

ஐரோப்பிய கூட்டமைப்பிலுள்ள இளைஞரில் 20 சதவிகிதத்தினர் வேலையில்லாமல் இருக்கின்றனர் என ஐரோப்பிய கமிஷனின் தலைவரான ஷாக் சான்டா கூறுகிறார். ஆகவே இளவட்டங்களின் மனதில் இருப்பது இந்த ஒரு கேள்வியே: என் வாழ்க்கையைப் பாதுகாப்பானதாக்கும் வேலையை நான் எப்படி பெறமுடியும்? உயர் கல்வியின் மூலம் இதை நிச்சயம் அடையலாமென அநேகர் நினைக்கின்றனர். அதன்மூலம், மாணவர்கள் “வேலைபெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது” என லண்டனின் த ஸன்டே டைம்ஸ் கூறுகிறது.

உதாரணமாக, ஜெர்மனியில் “உயர் கல்விக்கும் கல்விசார்ந்த அந்தஸ்திற்கும் எப்போதும் இருந்ததைவிட தற்போது அதிக ஆர்வம் காணப்படுகிறது” என நாசாயுஷ நாய ப்ரெஸெ அறிவிக்கிறது. அந்த நாட்டில், ஒரு மாணவனாக இருந்து பட்டப்படிப்பு முடிப்பதற்குள் சராசரியாக 22,00,000 ரூபாய் செலவாகிறபோதிலும் இந்த ஆர்வம் காணப்படுகிறது.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்பான வேலையைப் பெறவிரும்பும் இளைஞர்களைப் போற்றத்தான் வேண்டும். அதுமட்டுமல்ல, வேலைத்தேடும் சமயத்தில், அதிக திறமையும் தகுதிகளும் உள்ளவர்களுக்கே அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் உயர் கல்வியினால் பாதுகாப்பான வேலை நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லமுடியுமா? ஒரு மாணவி கூறினாள்: “இந்தக் கோர்ஸ் படிக்கிறதனால ஒரு நல்ல வேலையோ பாதுகாப்போ கிடைக்காதுன்னு படிக்க ஆரம்பிக்கும்போதே எனக்கு நல்லா தெரியும்.” அவள் மட்டுமா அவ்வாறு உணருகிறாள்? இல்லை. சமீப காலங்களில், ஜெர்மனியில் வேலையில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்திருக்கிறது.

பிரான்ஸில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருப்பதால் வெறும் பள்ளிப் படிப்பிற்கு மதிப்பே இல்லை என்று இளைஞர் யுனிவர்சிட்டியில் பட்டம்பெற விரும்புகின்றனர் என்று ஒரு செய்தித்தாள் கூறுகிறது. இருந்தாலும், “கையில் பட்டம் இருந்து என்ன பிரயோஜனம்” என்பதைப் படித்துமுடித்த பிறகுதான் அநேக மாணவர்கள் உணருகின்றனர். பிரிட்டனில், “பள்ளிப் படிப்பின் கஷ்டங்கள் மாணவர்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன” என்று தி இன்டிபெண்டன்ட் அறிவிக்கிறது. வாழ்க்கையின் பாதுகாப்பின்மையை எதிர்த்துப் போராட உதவுவதற்கு மாறாக, பல்கலைக் கழக வாழ்க்கை சில சமயங்களில் மனச்சோர்வு, கவலை, தன்னைப் பற்றிய தாழ்வான எண்ணம் போன்ற மற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அறிக்கை செய்யப்படுகிறது.

பொதுவாக, பல்கலைக் கழகப் பட்டத்தை வைத்திருப்பதால் வேலை கிடைப்பதைவிட, ஒரு தொழிற்கல்வி பயிற்சி பெற்றிருந்தாலோ, ஏதாவது ஒரு உற்பத்தித் துறையில் அனுபவம் பெற்றிருந்தாலோ, சீக்கிரம் வேலை கிடைத்துவிடுகிறது.

10,000 உடைமைகள் போதுமா?

பாதுகாப்பான வாழ்க்கைக்கு செல்வமே ஆதாரம் என அநேகர் நினைக்கின்றனர். பேங்கில் போதுமான பணம் இருப்பது பொருளாதார நெருக்கடி சமயத்தில் உதவியாக இருக்கும் என்பதால் இது ஒருவேளை நியாயமானதாக தோன்றலாம். “செல்வமும் ஒரு பாதுகாப்பு” என்று பைபிள்கூட சொல்கிறது. (பிரசங்கி 7:12, NW) ஆனால், அதிக செல்வம் எப்போதுமே தனிப்பட்ட பாதுகாப்பை அதிகரிக்க உதவுமா?

அப்படி சொல்லமுடியாது. கடந்த 50 வருடங்களில் செல்வம் எவ்வாறு அதிகரித்திருக்கிறது என்பதைக் கவனியுங்கள். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு ஜெர்மானியர்களில் பெரும்பாலானோரிடம் அநேகமாக எந்த உடைமையுமே இல்லை. இன்று ஒரு சராசரி ஜெர்மானியரிடம் 10,000 உடைமைகள் இருப்பதாக ஒரு ஜெர்மானிய செய்தித்தாள் கூறுகிறது. பொருளாதாரத்தைப் பற்றிய கணிப்புகள் சரியாக இருந்தால் எதிர்கால சந்ததிகளின் பொருளுடைமைகள் இன்னும் அதிகரிக்கலாம் என ஊகிக்கின்றனர். ஆனால் இவ்வாறு உடைமைகள் அதிகரிப்பது வாழ்க்கையில் பாதுகாப்பை அதிகரித்திருக்கிறதா? இல்லை. ஏனென்றால், 20 அல்லது 30 வருடங்களுக்கு முன்பு வாழ்க்கை எவ்வளவு பாதுகாப்பானதாக இருந்ததோ அவ்வளவு பாதுகாப்பாக இப்போது இல்லை என 3 பேரில் இருவர் நினைப்பதாக ஜெர்மனியில் நடந்த ஒரு சர்வே காண்பிக்கிறது. இவ்வாறாக, செல்வம் பெருமளவு அதிகரித்திருப்பது மக்களின் பாதுகாப்பை அதிகரிக்கவில்லை.

இது நியாயமானதே; ஏனென்றால், முந்தைய கட்டுரையில் நாம் பார்த்தபடி பாதுகாப்பின்மை என்பது உணர்ச்சிப்பூர்வ பாரமாகும். உணர்ச்சிப்பூர்வமான பாரத்தை பொருள் செல்வத்தால் முழுமையாக திருப்தி செய்யமுடியாது. ஏழ்மையின் கஷ்டங்களை சமாளிக்கவும் கடினமான காலங்களில் உதவவும் செல்வம் மிகவும் பிரயோஜனமானது என்பது உண்மையே. ஆனால், குறைவான பணம் இருப்பது வேதனை அளிப்பதைப் போலவே சில சந்தர்ப்பங்களில் அதிக பணம் இருப்பதும்கூட வருத்தம் தரலாம்.

ஆகவே, பொருளாதார செல்வங்களைப் பற்றிய ஒரு சமநிலையான நோக்குநிலை நமக்கு தேவை. அப்போதுதான் செல்வம் ஓர் ஆசீர்வாதம் என்றாலும், பாதுகாப்பான வாழ்க்கைக்கு அதுவே அடிப்படை அல்ல என்பதை நாம் உணர்ந்துகொள்வோம். இயேசு கிறிஸ்து பூமியில் இருக்கையில் தம் சீஷர்களிடம் கூறினார்: “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.” (லூக்கா 12:15) ஆகவே, வாழ்க்கையில் முழுமையான பாதுகாப்பை உணர ஓர் ஆளுக்கு பொருள் செல்வம் மட்டுமே போதாது என்பது தெளிவாக தெரிகிறது.

வயதானோர் உடைமைகள் வைத்திருப்பது அவற்றின் பொருளாதார மதிப்பிற்காக அல்ல, அவற்றினிடம் அவர்களுக்கு இருக்கும் உணர்ச்சிப்பூர்வ பிணைப்பிற்கே ஆகும். செல்வத்தைவிட, அவர்களுடைய கவலையெல்லாம் குற்றச்செயலுக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயம்தான்.

ஜாக்கிரதை!

“குற்றச்செயல் . . . கடந்த 30 வருடங்களில் உலகமுழுவதிலும் பெரும் பிரச்சினையாக வளர்ந்துவருகிறது” என்று பிரிட்டனில் பிரசுரிக்கப்பட்ட பிராக்டிகல் வேஸ் டூ கிராக் கிரைம் (குற்றச்செயலைத் தவிர்க்க நடைமுறையான வழிகள்) என்ற சிறுபுத்தகம் கூறுகிறது. இவற்றைத் தவிர்க்க போலீஸார் முழு மூச்சுடன் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கின்றனர். இவற்றை, சிலர் எவ்வாறு சமாளிக்கிறார்கள்?

தனிப்பட்ட பாதுகாப்பு முதலில் வீட்டில்தான் முக்கியம். உதாரணமாக ஸ்விட்ஸர்லாந்தில், பாதுகாப்பு பூட்டுகள், பலப்படுத்தப்பட்ட கதவுகள், கம்பியிட்ட ஜன்னல்கள் போன்றவை அடங்கிய திருடர்கள் உட்புகமுடியாத வீடுகளை ஒரு கட்டடக் கலைஞர் திறமையோடு வடிவமைக்கிறார். இந்த வீடுகளில் குடியிருப்போர், “என் வீடே என் கோட்டை” என்ற பழமொழியை அப்படியே நம்புகிறார்கள் போலும். ஃபோகஸ் என்ற செய்திப் பத்திரிகையின்படி இந்த வீடுகள் மிகவும் விலையுயர்ந்தவை, ஆனாலும் அவற்றிற்கான மவுசு குறையவில்லை.

வீட்டிலும் வெளியிலும் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக சில இடங்களில் வீட்டுக்காரர்கள் எல்லாம் சேர்ந்து இரவுநேர ரோந்து ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். சில புறநகரங்களில் வசிப்போர், குறிப்பிட்ட நேரங்களில் தங்கள் பகுதிகளில் ரோந்து வருவதற்காக ஸெக்கியூரிட்டி நிறுவனங்களுக்கு பணம் செலுத்தும் அளவுக்குக்கூட செல்கிறார்கள். நகரங்களில், ஆள் நடமாட்டம் இல்லாத வீதிகளில் இரவுநேரத்தில் தனியாக செல்வதை அநேகர் விரும்புவதில்லை. அதுமட்டுமல்ல, தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பில் அக்கறையுள்ள பெற்றோர் அவர்களைப் பாதுகாக்கக் கூடுதலான நடவடிக்கைகளையும்கூட எடுக்கலாம். இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெட்டியிலுள்ள ஆலோசனைகளை கவனியுங்கள்.

ஆனால், திருடர் உட்புகமுடியாத வீடுகளை எல்லாராலுமே வாங்க முடியாதே. அதுமட்டுமா, இரவுநேர ரோந்துகளும் காவலர் ரோந்துகளும் குற்றச்செயலை முழுவதுமாக ஒழிக்கமுடியாது; மாறாக பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் அவை அதிகரிக்கக்கூடும். ஆகவே குற்றச்செயல், தனிப்பட்ட பாதுகாப்பிற்கு பெரும் இடைஞ்சலாக தொடர்ந்து இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை அதிக பாதுகாப்பாக இருப்பதற்கு, குற்றச்செயலை முறியடிக்க முழு மூச்சாக எடுக்கும் முயற்சிகள் மட்டுமே போதாது.

அறிகுறிகளை மட்டுமல்ல, வியாதியைக் குணப்படுத்துங்கள்

இயல்பாகவே நாம் ஒவ்வொருவரும் பாதுகாப்பான வாழ்க்கையை விரும்புகிறோம். இந்த இலக்கை அடைவதற்கு நியாயமான, நடைமுறையான காரியங்களைச் செய்வது சரியானதே. ஆனால், வாழ்க்கையைப் பாதுகாப்பற்றதாக்கும் குற்றச்செயல், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற எல்லா காரியங்களும், மனிதவர்க்கம் முழுவதையும் நோய்போல பாதித்துக் கொண்டிருக்கும் நிலைமையின் அறிகுறிகள் மட்டுமே. இந்நிலைமையைக் குணப்படுத்த வேண்டுமென்றால், அறிகுறிகளை மட்டுமல்ல, அதன் அடிப்படை காரணமான நோயை குணப்படுத்த வேண்டும்.

நம் வாழ்க்கையில் இருக்கும் பாதுகாப்பின்மைக்கு அடிப்படை காரணம் என்ன? அதை எவ்வாறு முழுமையாக துடைத்தழித்து, அதன் மூலம் நம் வாழ்க்கையிலிருந்து பாதுகாப்பின்மையை நிரந்தரமாக நீக்கிப்போட முடியும்? இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.

[பக்கம் 6-ன் பெட்டி]

இளம் பிள்ளைகளைப் பாதுகாக்கும் வழிகள்

பிள்ளைகளைத் தாக்குதல், கடத்துதல், கொல்லுதல் ஆகியவை அதிகரித்திருப்பதன் காரணமாக, அநேக பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு பின்வரும் காரியங்களைக் கற்றுக்கொடுப்பது அதிக பிரயோஜனமானது என கண்டிருக்கின்றனர்:

1. தவறு என தான் உணருவதை யார் செய்யச் சொன்னாலும் செய்யமாட்டேன் என மிகவும் உறுதியாக சொல்ல வேண்டும்.

2. உடலின் இரகசிய பகுதிகளைத் தொட யாரையும் அனுமதிக்கக் கூடாது. அம்மா அல்லது அப்பா இருந்தால் மட்டுமே டாக்டர் அல்லது நர்ஸைக்கூட தொட அனுமதிக்க வேண்டும்.

3. ஆபத்திலிருக்கும்போது ஓடிவிடு, சத்தம்போடு அல்லது அருகிலுள்ள பெரியவர்களிடம் உதவி கேள்.

4. கஷ்டமாக உணரும் எந்தவொரு விஷயத்தையும் அல்லது உரையாடலையும் பெற்றோரிடம் சொல்.

5. பெற்றோரிடம் எதையும் மறைக்கக் கூடாது.

முடிவாக, பெற்றோர், தங்கள் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கும் ஆட்களைப் பற்றியும் கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.

[பக்கம் 5-ன் படங்கள்]

நம் வாழ்க்கை பாதுகாப்பாக இருப்பதற்கு கல்வி, செல்வம் அல்லது குற்றச்செயலை முறியடிப்பதற்கான முழு முயற்சிகள் மட்டுமே போதாது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்