உலகை கவனித்தல்
மறையும் மழைக்காடுகள்
அமேசான் மழைக்காடுகள் படுபயங்கர வேகத்தில் மறைந்து வருகின்றன. கடந்த மூன்று வருடங்கள் ஒவ்வொன்றிலும், 48,00,000 ஏக்கர் காடுகள் மறைந்துவிட்டன. “ஒவ்வொரு நிமிடமும் ஏழு கால்பந்தாட்ட மைதானத்திற்கு” சமமான பரப்பளவு மறைகிறதென நேச்சுரல் ஹிஸ்டரி பத்திரிகை அறிவிக்கிறது. விலையுயர்ந்த மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டு, அவ்விடங்களில் விவசாயம் பண்ணுவதற்காக எஞ்சியிருக்கும் செடி, கொடிகளையும் எரித்துவிடுகின்றனர். இப்படி, “மரம், செடிகொடிகளை எரிக்கும்போதும் அல்லது பாக்டீரியாக்களால் அழுகும்போதும், அவை அதிக அளவில் கார்பன்-டை-ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்களை வெளிவிடுகின்றன. இவை காற்றுமண்டலத்தில் கலந்து பூமியின் வெப்பத்தை, அதாவது, கண்ணாடி அறை விளைவை அதிகரிக்கிறது.” இப்படிப்பட்ட வாயுக்கள் “ஒவ்வொரு வருடமும் கூடுதலாக 10 முதல் 30 லட்சம் ஏக்கர் பரப்புக்கு சமமான மழைக்காடுகளை அழிப்பதாக” அதே பத்திரிகை தெரிவிக்கிறது.
இதிலுமா பெண்கள்?!
1960-கள் வரைக்கும், பிரேஸிலில் இருதய நோய்கள் ஆண்களையே பெரிதும் தாக்கிவந்தன என வேஸா பத்திரிகை அறிவிக்கிறது. ஆனால், பெண்களும் ஆண்களுக்கு சமமாக வேலைக்கு போக ஆரம்பித்தபோதோ, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஆண்களைப் போலவே, “வேலையின் அழுத்தங்கள், புகைபிடித்தல், விரைவு உணவகங்களிலிருந்து கண்டமேனிக்கு சாப்பிடுவது” போன்றவற்றிற்கு இவர்களும் ஆளாகிவருகின்றனர். இதன் விளைவு, பெருகிவரும் இருதய நோய்கள் பெண்களுக்கும்! இருதய நோய்களுக்கு எதிரான ஹார்மோன் பாதுகாப்பு சக்தி இயற்கையாகவே பெண்களுக்கு இருப்பதாக சிலர் நம்புகின்றனர். இருந்தபோதிலும், “35 வயதுக்குமேல், இந்த ஹார்மோன் பாதுகாப்பு சக்தி குறைய ஆரம்பித்து விடுகிறது. அதனால், ஆண்களைப் போல் பெண்களும் அதே அபாயத்தை எதிர்ப்படுகின்றனர்” என அப்பத்திரிகை கூறுகிறது. 1995-ல், மார்பக, கர்ப்பப்பை புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட இருமடங்கு அதிகமான பெண்கள் இருதய நோயால் இறந்திருக்கின்றனர்.
குடும்பச் சிதைவுகளால் கதிகலங்கும் பொலிவியா
எழுபது சதவிகிதத்திற்கும் அதிகமான பொலிவியர்கள் வறுமைக்குள் சிக்கி தவிக்கின்றனரென பொலிவியன் டைம்ஸ் கூறுகிறது. இதன் விளைவாக, நிறைய பிள்ளைகள் “பிளவுபட்ட தங்கள் குடும்பங்களை விட்டு ஓடி படுபயங்கரமான, கொடூரமான சூழ்நிலைகள் நிலவும் தெருக்களில் வாழ்கின்றனர்.” அங்கோ, கொகெய்ன் போன்ற போதை மருந்துகளுக்கு பழக்கப்படுத்தப்படுகின்றனர்; அதுமட்டுமா! தின்னர், வஜ்ரம் போன்ற போதை வஸ்துக்களை உள்ளிழுக்கவும் கற்றுக்கொள்கின்றனர். பொலிவியாவில் உபயோகிக்கப்படும் மொத்த போதைமருந்துகளில் 88 சதவிகிதத்தை இளவயதினரே வாங்குகின்றனர். அதிலும் 5 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களே அதிகம். கடந்த 15 வருடங்களில், சட்டவிரோதமான போதைமருந்துகளின் உபயோகம் சுமார் 150 சதவிகிதம் அதிகரித்துள்ளது. “வழிவழியா வருகிற குடும்பம் என்கிற அமைப்பு இன்று சின்னாபின்னமாகி வருவதே இந்த பிரச்சினையின் ஆணிவேர் என அநேகர் கருதுவதாக” டைம்ஸ் பத்திரிகை விவரிக்கிறது.
நியூட்ரினோவுக்கு உண்டு நிறை
நியூட்ரினோ என்பது மிகச்சிறிய இணை அணுத்துகள்கள். இவை மின்னூட்டம் அற்றவை. எந்தவிதப் பொருளோடும் மோதிக் கொள்ளாமல், கிட்டத்தட்ட ஒளியின் வேகத்திற்கு இணையாக செல்லக்கூடியவை. இந்த நியூட்ரினோக்கள் படுவேகத்தில், எந்தவொரு சின்ன அணுவையும் மோதாமல், சுலபமாக பூமியைக் கடந்து வெளியே வந்துவிடுமென கூறப்படுகிறது. அப்படியிருந்தாலும், ஜப்பானிலுள்ள டகாயமா நகர விஞ்ஞானிகள் இந்நியூட்ரினோக்களுக்கும் நிறை உண்டு என அறிவித்தனர். இவ்வறிவிப்பை சமீப காலத்தில்தான் செய்தனர். இதற்கு பிறகே, எளிதில் நழுவிச் செல்லும் இவ்வணுத்துகள்களின்மீது சர்வதேசத்தின் கவனமும் திரும்பியுள்ளது. இப்பிரபஞ்சம் முழுவதிலும் நியூட்ரினோக்கள் எக்கச்சக்கமாய் இருக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த நிறை பிரபஞ்சத்தின் நிறையை கூட்டுகிறது. இது பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
பண்டைய செயற்கை கல்
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், மக்க்ஷான்-ஷாபீர் என்ற இடத்தில் மனிதன் செய்த கல்லை தோண்டி எடுத்தனர். இம்மாதிரியான கற்களுக்கு இதுவே முதல் சான்று. இந்த பாழடைந்த நகரத்தின் இடிபாடுகள் இன்று தென் ஈராக்கில் இருக்கின்றன. டைகிரீஸ், யூப்ரடீஸ் நதிகளிலிருந்து எடுக்கப்பட்ட வண்டல் மணல் உருகுமளவுக்கு சூடுபண்ணப்பட்டது. பிறகு மெதுமெதுவாக அதை குளிரவிடுவதன்மூலம் “கடினமான பாறைபோன்ற கற்பலகை செய்யப்பட்டது; இது பெசால்ட்டு என்றழைக்கப்படும் ஒருவகையான எரிமலைப் பாறையை ஒத்திருக்கிறது.” இவ்வாறு புவி அமைப்பியலாளரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் கருத்து தெரிவிப்பதாக த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை அறிவிக்கிறது. கட்டடங்கள் கட்டுவதற்கு தேவையான சாமான்கள் அதிக தட்டுப்பாட்டில் இருந்தன; எனவே, இதுபோன்ற செயற்கை பெசால்ட்டுகள் “இயற்கையாக கிடைக்கும் பெசால்ட்டுகளுக்கு பதிலாக கணிசமான அளவு உற்பத்தி செய்யப்பட்டதாக தோன்றுகிறது.” சுமார் 4,000 ஆண்டுகளுக்குமுன் மக்க்ஷான்-ஷாபீர் நகரத்தை கட்ட இக்கற்களே பயன்படுத்தப்பட்டன.
இல்லத்தரசிகளே, ஜாக்கிரதை!
1990 முதல் 1994 வரையான காலப்பகுதியில், மாசசூஸட்ஸ் பொது மருத்துவமனையின் சம்னர் ரெட்ஸ்டோன் தீக்காயங்களுக்கான சிகிச்சைப் பிரிவில் செத்த பெண்களில் பெரும்பாலானோர் சமைக்கும்போது துணிகளில் நெருப்புப் பிடித்ததாலேயே என டஃப்ட்ஸ் யுனிவர்சிட்டி ஹெல்த் அண்ட் நியூட்ரிஷன் லெட்டர் குறிப்பிடுகிறது. இத்தகைய விபத்துகளுக்கு ஆளாபவர்கள் பெரும்பாலும் 60 அல்லது அதற்கும் மேற்பட்ட வயது பெண்களே. இவ்விபத்துகள் எப்படி நேரிடுகின்றன? டீ போடுகிற பாத்திரத்தை எக்கி எடுக்க முயற்சிக்கும்போது, ஸ்டவ்வுக்கு மேலே ஆடிக்கொண்டிருக்கும் இவர்களுடைய தொளதொள ஆடைகளின் கைப்பகுதியில் நெருப்பு பற்றிக்கொள்வதாலேயே. இப்படிப்பட்ட விபத்துக்களை தவிர்க்க இதோ சில நல்ல யோசனைகள்! சமைக்கும்போது, (1) தொளதொளவென தொங்குகிற ஆடைகளை அணியாதீர்கள், (2) பாத்திரங்களை எடுக்க எம்பும்போது துணிகளில் நெருப்பு பிடிப்பதை தவிர்க்க முடிந்த போதெல்லாம் முன்னால் இருக்கும் பர்னர்களை உபயோகியுங்கள், (3) தீப்பிடிக்காத ஆடைகளை அணியுங்கள்.
பொடிசுகளின் பத்து கட்டளைகள்
‘எங்களுக்குத்தான் இது செய்யக்கூடாது, அது செய்யக்கூடாதுன்னு ரூலுக்குமேல ரூல் இருக்குது. ஆனா, பெரியவங்களுக்கு மாத்திரம் அதெல்லாம் ஒண்ணுமில்ல’ என்று மூன்றாம் வகுப்பு பிள்ளை ஒன்று மத கல்வி ஆசிரியையிடம் புகார் செய்தது. பெரியவர்களுக்கான பத்து கட்டளைகளை எழுதும்படி அந்த ஆசிரியை பிள்ளைகளிடம் சொன்னார். நற்குணம், சமாதானம், பாரபட்சமின்மை, நேர்மை, உண்மைத்தன்மை போன்றவற்றையே அநேகம் பிள்ளைகள் விரும்புவதாக க்ரைஸ்ட் இன் டேர் காகென்வார்ட் ஜெர்மானிய கத்தோலிக்க வாராந்தர பத்திரிகை கூறுகிறது. இதோ! ஒரு பொடிசு எழுதிய பட்டியல்: “1. எல்லாத்தையும் சமமா நடத்துங்க. 2. ரொம்ப திட்டாதீங்க. 3. அவசரப்படுத்தாதீங்க. 4. எப்பவும் நச்சரிச்சுகிட்டே இருக்காதீங்க. 5. எங்கள கேலிப் பொருளாக்கிடாதீங்க. 6. முடியாதத எங்கமேல திணிக்காதீங்க. 7. எப்பவாவது நாங்க கரெக்டுங்கறத ஒத்துக்கோங்க. 8. நீங்களாவே நிறைய ரூல்ஸ் போடாதீங்க. 9. ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து ஒத்துப்போங்க. 10. நீங்க முதலாவது சர்ச்சுக்கு போங்க; பிள்ளைங்கள மாத்திரம் போ, போன்னு விரட்டாதீங்க.”
அன்பெனும் போர்வையில்
“அன்பும் பாலுறவுக்கு இணங்குவதும் ஒன்றிணைந்ததென வாலிபர்கள் கருதுவதாக” தென் ஆப்பிரிக்காவின் செய்தித்தாள் இணைப்பு விட்னஸ் இகோ அறிவிக்கிறது. அது மேலும் சொல்வதாவது: “இளம் பெண்கள் பாலுறவு கொள்வதற்கு இணங்காவிட்டால் அவர்கள் அடிக்கப்படுகிறார்கள்.” கேப் டவுனின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் இளைஞர்கள் நடுவே ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அது, “தங்களோடு பாலுறவு கொள்ளும்படி பெண்களை ஆண்கள் வலுக்கட்டாயப்படுத்துகிறார்கள்; வன்முறையை உபயோகிப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை; இப்படி ஆண்களின் ஆதிக்கமே இதிலும் தலைதூக்கி நிற்கிறது” என உண்மை நிலையை படம்பிடித்துக் காட்டுகிறது. மேலும், 60 சதவிகிதம் பெண்கள் அவர்களுடைய துணைகளால் அடிக்கப்பட்டிருக்கின்றனர்; மற்ற ஆண்களோடு பேசிய அற்ப காரணத்திற்காகவும்கூட அடி, உதை வாங்கியிருக்கின்றனரென மற்றொரு ஆய்வு கூறுகிறது. “அடிப்பது சர்வசகஜம். இது அன்பின் வெளிக்காட்டு என சக பெண்கள் கருதுவதாக” அந்த அறிக்கை கூறுகிறது.
இன்னிசையால் வந்த இலாபம்!
மதுக்கடைகளில் போடப்படும் மெல்லிய இன்னிசை, மது வாங்கவருபவர்களை பெரிதும் கவருவதாக இங்கிலாந்திலுள்ள லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் மனோதத்துவ நிபுணர்களின் குழு ஒன்று கண்டுபிடித்தது. “ஃப்ரென்ச் அக்கார்டியன் இன்னிசை போட்டால், ஜெர்மன் ரகத்தைவிட ஃப்ரென்ச் ரகத்திற்கு மவுசு அதிகம்; விற்பனையும் அதிகமாகிறது. 5:1 என்ற விகிதத்தில் விற்பனையாகிறது” என்று நேஷனல் ஜியோக்ரஃபிக் பத்திரிகை கூறுகிறது. “ஆனால், ஜெர்மன் குழு இன்னிசை போட்டாலோ, வாங்குகிற ஒவ்வொரு ஃப்ரென்ச் பாட்டிலுக்கும் ரெண்டு ஜெர்மன் பாட்டில்கள்வீதம் வாங்குகிறார்கள்.” ஆச்சரியமென்னவெனில், “அவங்களோட தீர்மானங்களை இசை எந்தளவுக்கு பாதிக்குதுங்கறது” அவங்களுக்கே தெரியாது என்று இந்த ஆய்வாளர்களில் ஒருவர் சொல்கிறார்.
எல் நினோவின் மறுபக்கம்
கடலில் வெதுவெதுப்பான நீர் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நகருவதுதான் எல் நினோ என்று அழைக்கப்படுகிறது. “ஐக்கிய மாகாணங்களில் ஏற்படும் படுகொலை சூறாவளிகள் முதற்கொண்டு, பிரேஸிலில் பரவும் காட்டுத்தீ, கென்யாவில் காபி உற்பத்தியின் நாசம் வரை எல்லா விபரீத விளைவுகளுக்கும்” எல் நினோவே காரணம் என ராய்டர்ஸ் அறிவிக்கிறது. சூறாவளிகளுக்கும் வறட்சிக்கும் இது காரணமாய் இருந்தபோதிலும், ஒருசில நன்மைகளையும் அளித்திருக்கிறதென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிரேஸிலுடைய காபி உற்பத்தி “இந்த வருடம் 210,00,00,000 கிலோகிராமை எட்டுமென்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கடந்த பத்தாண்டுகளில் இதுவே அதிகபட்ச உற்பத்தி எனவும்” அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் “எதிர்பாராத இடங்களில் எதிர்பாராமல் பெய்த மழையால், நிலத்தின் ஆழத்திலுள்ள நீர்நிலையும் பூமிக்கடியிலுள்ள நீர்த்தேக்கங்களும் நிரம்பின” என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. ஐ.மா. வானிலை முன்னறிவிப்பு மையத்தின் இயக்குநர், ஆண்ட்ஸ் லீட்மா இவ்வாறு கூறினார்: “உலகம்பூரா நிறைய இடங்கள்ல தண்ணிதட்டுப்பாடு இருக்குது. இந்த இடங்கள்லாம் வானம்பாத்த பூமியா மழைய பாத்துட்டிருந்தது. . . . நீர்நிலை நிர்வாகிகள் எல் நினோவையே நம்பி காத்துக்கிடக்காங்க.”
கூட்டிச் சேர்க்க அரிய முயற்சி
பிரிட்டிஷ் கூட்டரசு நாடுகளில் ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 1,500 ஆட்கள் சர்ச்சை விட்டு வெளியேறுகின்றனர். மொத்த மக்கள் தொகையில், 50 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டுகின்றனர்; என்றபோதிலும், சுமார் 10 சதவிகிதத்தினர் மட்டுமே ஒழுங்காக சர்ச்சுக்கு செல்லுகின்றனர். ஏன்? பிரிட்டிஷ் கூட்டரசு நாடுகளிலுள்ள சர்ச்சுகள் “பெரும்பாலும் தேவையற்றவையாகவும், அங்கத்தினர்களுடன் தொடர்பற்றவையாகவும், போரடிப்பவையாகவும் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றனவென” மதகுரு ஸ்டீவ் சாக் கூறுகிறார். கேன்டர்பரியின் ஆர்ச்பிஷப்பும் வெஸ்ட்மின்ஸ்டரின் ஆர்ச்பிஷப்பும் “சர்ச்சுக்கு மக்களை மறுபடியும் வரவழைக்கும்” முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். “சர்ச்சுகள் அதிகம் வரவேற்கப்படுபவையாகவும், மக்களோடு ஒன்றர கலந்துவிடுபவையாகவும், ஆர்வத்தை தூண்டுபவையாகவும் இருக்க ஒரு புதிய முயற்சிக்கான ஆதரவை கொடுத்திருக்கின்றனரென” பிபிசி நியூஸ் அறிவிக்கிறது. ஜனவரி 2, 2000-க்குள் “10 நடைமுறையான இலக்குகளை” சர்ச்சுகள் செயல்படுத்த தயாராய் இருக்கின்றன. இதோ! அவற்றில் ஒருசில: “நீங்கள் வரவேற்கப்படுவீர்கள், உங்கள் குடும்பத்தின்மீதும் அக்கறைகாட்டப்படும், நீங்கள் சர்ச் சர்வீஸை நன்றாக கேட்கமுடியும், . . . உங்களுடைய சில முக்கியமான கேள்விகளுக்கு பதில்களை கண்டுபிடிக்க நாங்கள் உதவுவோம், . . . நீங்கள் சர்ச்சுக்கு வருவது உங்களுக்கு நன்மையும் உற்சாகமும் அளிக்குமென உறுதியளிக்கிறோம்.”