உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 12/22 பக். 10-11
  • யார் இந்தப் பூமியை சுத்தம் செய்வது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யார் இந்தப் பூமியை சுத்தம் செய்வது?
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனிதர்கள் தாங்களாகவே செய்யமுடியுமா?
  • சுத்தமான பூமி—எவ்வாறு?
  • தூய்மைக்கேடு தடுத்து நிறுத்தப்படுகிறது அதன் பாதையிலேயே!
    விழித்தெழு!—1989
  • தூய்மைக்கேடு—இதை உண்டுபண்ணுவது யார்?
    விழித்தெழு!—1991
  • தூய்மைக்கேட்டின் ஆபத்தான விளைவு
    விழித்தெழு!—1989
  • தூய்மைக்கேட்டின் முடிவு அருகாமையில் இருக்கிறதா?
    விழித்தெழு!—1991
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 12/22 பக். 10-11

யார் இந்தப் பூமியை சுத்தம் செய்வது?

“நம்முடைய தொழிற்சாலைகளைப் பொருத்தவரை, வருடம் 2025-க்குள் ‘தூய்மைக்கேடு’ என்ற வார்த்தையே மக்கள் மனதில் இல்லாமற்போய்விடும் என்று நான் முன்னறிவிக்கிறேன்.” ஓர் இரசாயன கம்பெனியின் தலைவர் சமீபத்தில் செய்த முன்னறிவிப்புதான் இது. ஆனால், உண்மையில் அவ்வாறு நடக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நடக்குமென்றால், எப்படி நடக்கும்?

ஆபத்தான பொருட்கள் மார்கெட்டில் வந்து குவிந்துவிடுவதற்கு காரணம் லாபத்திற்கான ஆசைதான். உதாரணமாக, பூச்சிக்கொல்லி தயாரிக்கும் கம்பெனிகள் நல்ல லாபம் தரும் சில ஃபார்முலாக்களை இரகசியமாக வைத்துக்கொள்ள வியாபார இரகசியகாப்பு சட்டங்கள் அனுமதிக்கின்றன. ஆகவே, தாங்கள் உபயோகிக்கும் மூலப்பொருட்களுடைய பெயர்களை வெளியிடாமல், அவற்றை “செயலற்ற” கூட்டுப்பொருள் என்பதாகக் குறிப்பிடுகின்றனர். இந்தச் சொல், “ஆபத்தற்ற” என்று அர்த்தங்கொள்வதாக அநேகர் உடனே நினைத்துவிடுகின்றனர். ஆனாலும், “செயலற்ற மூலப்பொருட்களில் ஏறக்குறைய 394, வீரியமான பூச்சிக்கொல்லிகளாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன” என்று கெமிக்கல் வீக் பத்திரிகை அறிவிக்கிறது. இவற்றுள், மிகவும் ஆபத்தானவை 209, புற்றுநோய் ஏற்படுத்தும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை 21, மேலும் வேலை சம்பந்தப்பட்ட ஆபத்து நிறைந்தவை 127 ஆகும்!

அநேக சமயங்களில் அரசாங்கம் விதிக்கும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் உதவியாக இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், “பொருளாதார வளர்ச்சியும் தொழில்ரீதியான லாபமும்” மட்டுமே என ஒரு எழுத்தாளர் கூறுகிறார். இதனால், ஆபத்துகளா நன்மைகளா என்ற இரண்டுங்கெட்டான் நிலையையே அரசாங்கம் எப்போதும் எதிர்ப்படுகிறது. இதன் காரணமாக, ‘கட்டுப்படுத்தப்பட்ட தூய்மைக்கேடுதான்’ விளைவடைகிறது.

அப்படியென்றால், உதவிக்காக நாம் யாரிடம் செல்வது? யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் சிநேகபான்மையான வீட்டுக்காரர் ஒருவரிடம் இதே கேள்வியை கேட்டார். மனித தலைவர்களிலும் விஞ்ஞானிகளிலும் நம்பிக்கை வைப்பவராக அவர், “அவுங்கதான் என்னைக்காவது ஒருநாள் சரிசெய்வாங்க” என்று கூறினார்.

அந்தச் சாட்சி அவரிடம், “ஆனால் அந்த அவுங்க யாரு? உங்களையும் என்னையும் போல சாதாரண ஆட்கள்தானே. அவுங்க அதிகம் படிச்சவங்களா வேணும்னா இருக்கலாம், ஆனா அவுங்ககிட்டேயும் சில குறைபாடுகளும் பலவீனங்களும் இருக்குதா இல்லையா? அவுங்களும் தப்பு பண்றாங்க.” இந்தப் பட்டியலோடு அவர்கள் எதிர்ப்படும் இமாலய பிரச்சினைகளையும் மனித சமுதாயத்தில் காணப்படும் பேராசையையும் ஊழலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பிரச்சினைகளை அவர்கள் சரிசெய்வார்கள் என்று நீங்களும் நம்புகிறீர்களா? இத்தனை வருடங்களாக அதைச் செய்ய மனிதர்கள் தவறியிருக்கிறார்கள்; இனிமேலாவது செய்வார்கள் என்று நம்புவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ன? “தூய்மைக்கேடு பிரச்சினைகளை ஆராய்ச்சி செய்வதில் விஞ்ஞானிகளும் அவர்களுடைய அமைப்புகளும் பெரும் புலிகள்தான்; ஆனால் அவற்றை சரிசெய்வதில் வெறும் பூனைகளே” என வெளியுலக வாழ்க்கை என்ற ஆங்கில புத்தகம் கூறியது. இந்தப் பெரும் பிரச்சினையை மனிதர்கள் சரிசெய்வார்கள் என்று நம்புவதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?

மனிதர்கள் தாங்களாகவே செய்யமுடியுமா?

இரசாயன தூய்மைக்கேட்டை தடுப்பது உள்ளூர் அதிகாரிகளின் தலைவலி மட்டுமல்ல. ஏனென்றால், ஒரு நாட்டில் உபயோகிக்கப்படும் இரசாயனங்கள் மற்ற நாடுகளையும், ஏன் உலகமுழுவதையும்கூட பாதித்துவிடும்! இப்படிப்பட்ட உலக பிரச்சினைகளை தீர்க்க ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்க மனிதர்கள் தவறியிருக்கிறார்கள். இதன் காரணத்தை பைபிள் மிக தெளிவாக விளக்குகிறது: “மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.” (பிரசங்கி 8:9) மனிதர்கள் சரியான முறையில் தங்களையே ஆண்டுகொள்ள ஏன் தவறியிருக்கிறார்கள்? அதற்கான காரணத்தையும் பைபிள் சொல்கிறது: “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” (எரேமியா 10:23) இதன் அர்த்தம்தான் என்ன?

கடவுளுடைய உதவி இல்லாமல் மனிதர்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும்படி படைக்கப்படவில்லை என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. மனிதன் அநேக வியத்தகு சாதனைகளை செய்திருக்கிறான் என்பது உண்மையே. விண்ணை முட்டும் மாளிகைகளை கட்டியிருக்கிறான், கண்ணைக் கவரும் அற்புத சாதனங்களை தயாரித்திருக்கிறான், சந்திரனிலும் கால் வைத்திருக்கிறான்; ஆனாலும் கடவுளுடைய உதவி இல்லாமல் தன்னைத் தானே ஆண்டுகொள்ளும் திறமை அவனுக்கு இல்லை. இதைத்தான் பைபிள் கூறுகிறது, அது கூறுவது சரி என்பதை சரித்திரமும் நிரூபித்திருக்கிறது.

சுத்தமான பூமி—எவ்வாறு?

நம் சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் மனிதவர்க்கத்திலும் இந்தப் பூமியிலும் எப்போதுமே அக்கறை கொண்டிருக்கிறார். இந்தப் பூமியை மனிதனுக்காக தானே படைத்தார்! மனிதனைப் படைத்தபிறகு பூமியையும் அதிலுள்ள உயிர்களையும் பாதுகாக்கும்படி அவனுக்கு கட்டளை கொடுத்தார். (ஆதியாகமம் 1:27, 28; 2:15) ஆனால், முதல் ஜோடி அவருடைய கட்டளைகளை மீறிய பிறகு நிலத்தை கவனித்துக் கொள்வதைப் பற்றி பூர்வ இஸ்ரவேல் தேசத்திற்கும் கட்டளைகளை கொடுத்தார். ஏழு வருடத்திற்கு ஒரு முறை, ஒரு வருடம் முழுவதும் நிலம் தரிசாக கிடக்கவேண்டும் என்ற கட்டளையும் அதில் அடங்கும். இது, நிலம் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பளிக்கும். (யாத்திராகமம் 23:11; லேவியராகமம் 25:4-6) ஆனால் அந்த மக்கள் பேராசை உள்ளவர்களாகி கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போனார்கள். விளைவு? அவர்களும் சீரழிந்தார்கள் நிலமும் சீர்கெட்டது.

இன்று இருப்பதைப் போன்ற இரசாயன தூய்மைக்கேடு அப்போது இருந்திருக்காது என்பது உண்மைதான். இருந்தாலும், கடவுளுடைய நோக்கத்திற்கு இசைவாக நிலத்தை தரிசாக விட்டுவைக்க இஸ்ரவேலர்கள் தவறியதால் நிலம் சீர்கெட்டது; அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆகவே, பாபிலோனியர்கள் இஸ்ரவேலர்களை சிறைபிடித்து செல்லவும் 70 வருடம் பாபிலோனில் கைதிகளாக இருக்கும்படியும் கடவுள் அனுமதித்தார். நிலம் ஓய்ந்திருந்து இவ்வாறு தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ள இந்தத் தண்டனை உதவியது.—லேவியராகமம் 26:27, 28, 34, 35, 43; 2 நாளாகமம் 36:20, 21.

இந்தச் சரித்திரத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன? மனிதர்கள் பூமியை சீரழித்தால் கடவுள் அவர்களிடம் கணக்கு கேட்பார் என்பதையே அது சுட்டிக்காட்டுகிறது அல்லவா? (ரோமர் 15:4) அதுமட்டுமல்ல, ‘பூமியைக் கெடுத்தவர்களை கெடுக்கப்போவதாக’ கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 11:18) மேலும், பூமியை ‘கெடுப்பவர்கள்’ எப்படிப்பட்டவர்கள் என்றும்கூட பைபிள் விவரிக்கிறது. 2 தீமோத்தேயு 3:1-5-ல் இந்த விவரிப்பு காணப்படுகிறது. அதில் முக்கியமான ஒரு குணம் செல்வத்திலும் சுயநலத்திலும் அளவுக்கு அதிகமான ஈடுபாடாகும். அதன் விளைவாகத்தான், கடவுளைப் பற்றியோ அவருடைய சிருஷ்டிப்பைப் பற்றியோ உடன் மானிடர்களைப் பற்றியோ அப்படிப்பட்டவர்கள் கொஞ்சம்கூட கவலைப்படுவதே இல்லை.

ஆகவே இந்த இரண்டு பைபிள் வசனங்களும், அதாவது 2 தீமோத்தேயு 3:1-5-ம் வெளிப்படுத்துதல் 11:18-ம் இரண்டு திட்டவட்டமான முடிவுகளை சுட்டிக்காட்டுகின்றன. முதலாவதாக, மாசுபட்ட மனங்களின் விளைவாக பூமி மாசுபடுகிறது. இரண்டாவதாக, இந்த இரண்டுவித மாசுபடுதலும் முற்றும்போது இந்தப் பூமியையும் கடவுள் பயமுள்ள மனிதர்களையும் காப்பாற்றுவதற்காக கடவுள் நடவடிக்கை எடுப்பார். ஆனால் கடவுள் எவ்வாறு இதை செய்வார்?

தம்முடைய தீர்க்கதரிசியாகிய தானியேல் மூலம் கடவுள் இவ்வாறு முன்னுரைத்தார்: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, [தெளிவாகவே இன்றுள்ள அரசாங்கங்களை சுட்டிக்காட்டுகிறது] பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் . . . அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) இந்த ராஜ்யம் உண்மையான ஓர் உலக அரசாங்கம். இந்த அரசாங்கத்திற்காகவே ஜெபிக்கும்படி இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்தார்: “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, . . . உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.”—மத்தேயு 6:9, 10.

கடவுளுடைய ராஜ்யத்தின் அன்பான மேற்பார்வையில் இந்த முழு பூமியையும் பூங்காவனம் போன்ற பரதீஸாக மாற்றும் ஒப்பற்ற ஆசீர்வாதம் மனிதர்களுக்கு கிடைக்கும். சுத்தமான காற்று, தெளிந்த நீரோடைகள், மாசுபடாத உயிர் வகைகள் பூத்துக்குலுங்கும் பூமி, அப்பப்பா என்னே அருமை! (சங்கீதம் 72:16; ஏசாயா 35:1-10; லூக்கா 23:43) அதன் பிறகு? “முந்தினவைகள் [இன்றைய வியாதிகள், துன்பம், தூய்மைக்கேடு, மற்ற இன்னல்கள் யாவும்] இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை” என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது.—ஏசாயா 65:17.

[பக்கம் 10-ன் படம்]

சுத்தமான பூமி—அதைக் காண நீங்கள் அங்கு இருப்பீர்களா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்