ட்யூரினில் உள்ள சவப்போர்வை—இயேசுவை சுற்றி வைத்திருந்த சீலையா?
இத்தாலியிலிருந்து விழித்தெழு! நிருபர்
இத்தாலியில் உள்ள ட்யூரினில், சான் ஜோவானி பட்டீஸ்டா கத்தீட்ரலில் 1998, ஏப்ரல் 18 முதல் ஜூன் 14 வரை மக்களின் பார்வைக்காக ஒரு போர்வை அல்லது துணி வைக்கப்பட்டது. அது நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இறந்த பின்பு அவருடைய உடலைச் சுற்ற பயன்படுத்திய துணி என்பதாக உரிமை பாராட்டப்பட்டது. அது காற்றுப் புகமுடியாத, குண்டுத் துளைக்காத, செயலற்ற வாயு நிரம்பிய கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரேவிதமான தட்ப வெப்பநிலையில் பராமரிக்கப்பட்டு வந்தது.
வித்தியாசமான உயரங்களில் கட்டப்பட்டிருந்த மூன்று பாதைகளில் பார்வையாளர்கள் வந்து, மிகபத்திரமாக வைக்கப்பட்டிருந்த சவப்போர்வையை பார்த்தனர். இதை அனைவராலும் நன்றாக பார்க்க முடிந்தது. பார்வையாளர்களுக்கு இரண்டு நிமிடங்களே பார்க்க அனுமதி கிடைத்தது. அதுவும் கண்டிப்பாக முன்பதிவு செய்திருக்க வேண்டும். இதைப் பார்த்த சிலர் பரவசமடைந்தனர், சிலர் கண்கலங்க ஆழ்ந்த யோசனையில் மூழ்கிவிட்டனர், சிலர் அது என்னதான் என்று பார்ப்போமே என்ற ஆவலில் வந்திருந்தனர். சுமார் 25 லட்சம் பேர் இதைப் பார்வையிட்டதாக சொல்லப்படுகிறது.
“அந்தச் சவப்போர்வை உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?” என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்பட்டது. மதத்தைப்பற்றி பேசுவதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த விஷயம் கூர்ந்து ஆராய்வதற்கும், பைபிளில் இயேசுவின் சவ அடக்கத்தைப்பற்றி பேசும் பகுதிகளை மறுபடியும் வாசிக்கவும் ஒரு வாய்ப்பினை அளித்தது.—அடுத்த பக்கத்திலுள்ள பெட்டியைக் காண்க.
சவப்போர்வை 480 சென்டிமீட்டர் நீளமும் 110 சென்டிமீட்டர் அகலமுமுள்ள லினன் என்ற மெல்லிய துணி, இதன்மீது கொடூரமான ஒரு மரணத்தை அனுபவித்த ஒரு மனிதரின் உருவம் பதிந்துள்ளது என்று உரிமை பாராட்டப்படுகிறது. ஆனால் கேள்வி என்னவென்றால் இந்த ட்யூரினின் சவப்போர்வை, 19 நூற்றாண்டுகளுக்கும் முன்பாக இயேசுவின் உடலை சுற்றியிருந்த அதே துணிதானா?
படிப்படியாக பின்னப்பட்டது
“அப்படி ஒரு சவப்போர்வை பாதுகாத்து வைக்கப்பட்டதற்கு கிறிஸ்தவ சகாப்தத்தின் முதல் நூற்றாண்டுகளின் போது எந்த அத்தாட்சியும் இருக்கல்லை” என்பதாக நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. பொ.ச. 544-ல் நவீன நாளைய துருக்கியில் எடஸா என்ற இடத்தில், பொதுவான நம்பிக்கையின்படி மனித கைகளால் வரையப்படாத ஒரு உருவம் ஒன்று எங்கிருந்தோ முளைத்தது. அதில் இயேசுவின் முகம் பதிந்திருப்பதாக சொல்லப்பட்டது. பொ.ச. 944-ல் அந்த உருவம் கான்ஸ்டான்டிநோப்பிளில் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அதுவும் ட்யூரினின் சவப்போர்வையும் ஒன்றே என்பதாக வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலானவர்கள் நம்புவது கிடையாது.
பிரான்சில் 14-வது நூற்றாண்டில் சவப்போர்வை ஒன்றை சோஃரா ட ஷார்னி வைத்திருந்தார். 1453-ல் அது ஸவாயின் கோமகன் கைக்கு வந்தது. இவர் இதை ஸவாயார்ட்டின் தலைநகரான கேம்பெரியில் ஒரு சர்ச்சில் வைத்தார். அங்கிருந்து அதை 1578-ல் எமானுவேல் ஃபிலிபர் ட்யூரினுக்கு எடுத்துச் சென்றார்.
பலரது கருத்துக்கள்
1988-ல் அப்போது ட்யூரினுக்கு பேராயராக இருந்த அனஸ்டாஸியோ பாலஸ்ட்ரேரோ என்பவர் ட்யூரினின் சவப்போர்வை எந்தக் காலத்திற்குரியது என்பதை கார்பன் டேட்டிங் மூலமாக கணிப்பதற்காக பரிசோதனைக்கு அனுப்பினார். ஸ்விட்ஸர்லாந்திலும் இங்கிலாந்திலும் ஐக்கிய மாகாணங்களிலும் உள்ள பிரசித்திப்பெற்ற மூன்று ஆய்வுக்கூடங்கள் பரிசோதனைகள் நடத்தின. அது வெளியிட்ட முடிவு என்ன? இது கிறிஸ்துவின் மரணத்துக்கு வெகு காலத்துக்கு பின் வந்த இடைநிலைக் காலத்துக்குரியது; பாலஸ்ட்ரேரோ இந்த ஆய்வின் முடிவை ஏற்றுக்கொண்டு அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்: “இந்த மதிப்பீட்டின் முடிவுகளை அறிவியலிடம் ஒப்படைக்கும் வேளையில், இன்னமும் மதப்பற்றுள்ளவர்களுக்கு பூஜிப்பதற்குரிய ஒரு பொருளாகவே இருந்துவரும் கனத்துக்குரிய இந்தக் கிறிஸ்துவின் உருவத்தை மதிக்க வேண்டும் என்றும் வணங்க வேண்டும் என்று சர்ச் திரும்ப வலியுறுத்துகிறது.”
தற்போதைய பேராயர் கியோவானி சால்டாரினி இவ்வாறு அறிவிக்கிறார்: “இந்த உருவம் சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட கிறிஸ்துவின் உருவம் என்று நாம் சொல்லமுடியாது” என்றும் மேலும் “சுவிசேஷங்களில் விவரிக்கப்பட்டிருக்கும் மனிதரின் உருவத்தை அந்தப் போர்வையில் ஒரு விசுவாசியால் பார்க்கமுடியும் என்பதில் சந்தேகமேதுமில்லை” என அடித்துக்கூறுகிறார். 1998, மே 24 அன்று, சவப்போர்வை காட்சிக்காக வைக்கப்பட்டபோது இரண்டாம் போப் ஜான் பால் அந்த உருவத்தைப் பற்றி இவ்விதம் குறிப்பிட்டார்: “சிலுவையில் மாண்டவரின் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சரீரம் பதிந்திருக்கிறது” என்று சொன்னார்.
ட்யூரினிலுள்ள சவப்போர்வை இயேசுவின் உடலைச் சுற்றி இருந்த துணி அல்ல என்பதற்கு பலமான அத்தாட்சி இருப்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் அது அப்படியே இருந்தால்கூட என்ன வித்தியாசம்? பைபிளின் போதனைகளுக்குக் கீழ்ப்படிய விரும்பும் எவரும் அந்தத் துணியை வணங்குவது சரியாக இருக்குமா?
ரோமன் கத்தோலிக்க பைபிள் மொழிபெயர்ப்பின்படி பத்து கற்பனைகளில் இரண்டாவது கற்பனை என்ன சொல்லுகிறது என்பதை கவனியுங்கள்: ‘மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக்கொள்ள வேண்டாம். அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம்.’ (யாத்திராகமம் 20:4, 5, தமிழ் கத்தோலிக்க பைபிள்) ஆம், உண்மைக் கிறிஸ்தவர்கள் அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கிறார்கள். அவர் இவ்வாறு சொன்னார்: “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.”—2 கொரிந்தியர் 5:6; 1 யோவான் 5:21.
[பக்கம் 24-ன் பெட்டி]
சவப்போர்வையும் சுவிசேஷமும்
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு இயேசுவின் உடலை கழுமரத்திலிருந்து இறக்கிய பின்பு அதை ‘தூய்மையான மெல்லிய துணியால்’ சுற்றினான் என்பதாக சுவிசேஷ எழுத்தாளர்கள் கூறுகின்றனர். (மத்தேயு 27:57-61, பொ.மொ.; மாற்கு 15:42-47; லூக்கா 23:50-56) அப்போஸ்தலன் யோவான் கூடுதலாக ஒரு குறிப்பைக் கொடுக்கிறார்: “நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான். இவ்வாறு அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.”—யோவான் 19:39-42.
மரித்தவரைக் குளிப்பாட்டி நறுமணப் பொருட்களையும் தைலத்தையும் உடலில் பூசுவது யூதர்களின் பழக்கமாக இருந்தது. (மத்தேயு 26:12; அப்போஸ்தலர் 9:37) ஓய்வுநாளுக்குப் பின்பு அடுத்த நாள் காலை ஏற்கெனவே கல்லறையில் வைக்கப்பட்டுவிட்ட இயேசுவின் சரீரத்தை ஆயத்தம் செய்யும் வேலையை முடிக்க அவருடைய நண்பர்கள் கூட்டத்திலிருந்த பெண்கள் வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் இயேசுவின் சரீரத்துக்கு ‘சுகந்தவர்க்கமிடுவதற்கு’ தேவையான பொருட்களோடு வந்து சேர்ந்தபோது இயேசுவின் உடல் கல்லறையில் இல்லை!—மாற்கு 16:1-6; லூக்கா 24:1-3.
அதற்குப்பின், பேதுரு வந்து கல்லறைக்குள் பார்த்தபோது எதைக் கண்டார்? நேரில் பார்த்த யோவான் அதைப்பற்றிச் சொல்கிறார்: “சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.” (யோவான் 20:6, 7, பொ.மொ.) சீலைகளும் தலையில் சுற்றியிருந்த சீலையும் மாத்திரமே இங்கே குறிப்பிடப்படுவதை கவனியுங்கள், தூய்மையான மெல்லிய துப்பட்டியைப்பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. சீலைகளையும் தலையில் சுற்றிய சீலையையும்பற்றி யோவான் தனித்தனியாக குறிப்பிட்டு பேசுவதால், அங்கே தூய்மையான மெல்லிய துப்பட்டி அல்லது சவப்போர்வை இருந்திருந்தால் அதையும் அவர் குறிப்பிட்டிருப்பார் அல்லவா?
அதோடு கூடுதலாக இதையும் யோசித்துப்பாருங்கள்: இயேசுவின் பிரேத சீலைகளில் அவருடைய உருவம் பதிந்திருந்தால் அதை கவனித்து அதைப்பற்றி பேசியிருப்பார்கள் அல்லவா? சுவிசேஷ பதிவுகளில் இருப்பதைத் தவிர பிரேத சீலைகளைப்பற்றி பைபிள் முழுமையான மெளனம் சாதிக்கிறது.
கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் எண்ணற்ற நினைவுச் சின்னங்களையும் அவற்றால் நிகழ்ந்ததாக கூறப்படும் அநேக அற்புதங்களையும்பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள்கூட இயேசுவின் உருவம் பதிந்த சவப்போர்வைப் பற்றி குறிப்பிடவே இல்லை. இதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது, ஏனென்றால் ஹெர்பர்ட் தர்ஸ்டன் என்ற ஜெசூட் அறிஞர் ஒருவர் சொல்லுவதாவது, “சவப்போர்வையில் பதிந்திருக்கும் உருவம் மிகத் தெளிவாகவும் வர்ணம் கண்ணைப் பறிப்பதாகவும் இருக்கிறபடியால் அது புதிதாக பதித்திருக்க வேண்டும்” என்பதாக 15-வது, 16-வது நூற்றாண்டு பார்வையாளர்களின் விவரிக்கின்றனர்.
[பக்கம் 23-ன் படத்திற்கான நன்றி]
David Lees/©Corbis