நினைவுச்சின்னங்களுக்குப் பக்தி கடவுளைப் பிரியப்படுத்துகிறதா?
வருடத்தில் மூன்றுமுறை திரவமாவதாகச் சொல்லப்படுகின்ற “சான் ஜேனாரோ”வின் இரத்தமானது, அநேக மத நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவின் உடல் சுற்றப்பட்டிருந்ததாகக் கருதப்படுகிற ஷ்ரொவுட் ஆப் ட்யுரின் இது போன்றதுதான். இயேசுவுடன் தொடர்புகொண்ட நினைவுச்சின்னங்களில் அவருடையதாகக் கருதப்படும் பாலகன் படுக்கை (ரோமில் உள்ள ஒரு பெரிய நெடுமாடக் கோயிலில் உள்ளது), அவருடைய தொடக்கக் கல்விச்சுவடி, அவருடைய மரணதண்டனையில் உபயோகப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆணிகள் ஆகியவையும் உள்ளன! மத நினைவுச்சின்னங்கள், முழுக்காட்டுபவனாகிய யோவானின் பல தலைகளையும், ஐரோப்பாவில் பல்வேறு இடங்களில், “சான்டா லூசியா”வினுடையதாகச் சொல்லப்படும் நான்கு உடல்களையும் உட்படுத்துகின்றது.
நினைவுச்சின்னங்களுக்காகக் குறிப்பாகப் பிரசித்திப்பெற்ற நகரங்களில், ஒன்று ஜெர்மனியின் ட்ரையர். இங்கே “புனிதத் தளர் அங்கி”களில் ஒன்று—இயேசு கிறிஸ்துவினால் அணியப்பெற்ற தையலற்ற உள்ளாடை ஒன்று பாதுகாக்கப்பட்டிருக்கிறது. வத்திக்கன் நகரத்திலேயே ஒரு தனியான ஆவணக் காப்பகத்தில் ஆயிரத்துக்கும் மேலான நினைவுச்சின்னங்கள் உள்ளன. ஜெர்மனியின் கொலோனில் “புனிதர் அர்சலாவின்” சர்ச்சில், சொல்லர்த்தமாகவே ஆயிரக்கணக்கான மத நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன. பட்டியல் நீண்டுகொண்டே போகக்கூடும். ஏன், இத்தாலியில் மட்டுமே மத நினைவுச்சின்னங்களுள்ள புனித இடங்களாகச் சொல்லப்படும் 2,468 இடங்கள் உள்ளன!
“புனிதர்களை” வணங்குவது போன்றே, நினைவுச்சின்னங்களுக்குப் பக்தி காட்டுவதும் நம்முடைய பொது சகாப்தத்தின் நான்காவது நூற்றாண்டிலிருந்து தொடங்கியதாக நம்பப்படுகிறது. மத, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காகவும்கூட, நூற்றாண்டுகளினூடே, நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கையானது படிப்படியாக வளர்ந்து கொண்டே போய் இன்று ஆயிரக்கணக்காகக் காணப்படுகிறது. இரண்டாவது வத்திக்கன் ஆட்சிக் குழு, “சர்ச், அதன் பாரம்பரியத்தின்படியே புனிதர்களை வணங்குகின்றது மற்றும் அவர்களுடைய நம்பத்தகுந்த நினைவுச்சின்னங்களையும் அவர்களுடைய உருவங்களையும் கனப்படுத்துகிறது” என்று மீண்டும் உறுதிப்படுத்துகிறது. (Constitution “Sacrosanctum Concilium” sulla sacra Liturgia, in I Documenti del Concilio Vaticano II, 1980, Edizioni Paoline) 1983-ல் இரண்டாம் ஜான் பால் பிரகடனப்படுத்திய கோடெக்ஸ் லூரிஸ் கனான்சியில் (சட்டத் தொகுப்பேடு) “முதன்மையான மற்றும் மிகப்பிரசித்திப் பெற்ற கடவுள் பற்றுள்ளவர்களால் கனப்படுத்தப்பட்ட நினைவுச்சின்னங்களும்” குறிப்பிடப்பட்டுள்ளன. (சட்டம் 1190) ஆங்கிலிக்கன் மற்றும் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளின் உறுப்பினர்களும் நினைவுச்சின்னங்களைக் கனப்படுத்துகின்றனர்.
கிறிஸ்துவை அறைய பயன்படுத்திய ஆணிகள் மற்றும் முழுக்காட்டுபவனாகிய யோவானின் தலைகள் என்றும் இத்தனைக் காணப்படுகிற பொழுது, மத நினைவுச்சின்னங்கள் பெரும்பாலும் மோசடி என்பது வெளிப்படையாகும். உதாரணமாக, ரேடியோ கார்பன் கணிப்பு, ஷ்ரொவுட் ஆப் ட்யூரின் ஒரு மோசடி என்று நிரூபித்துள்ளது. அக்கறையூட்டும் விதமாக, 1988-ல் அதன் மீதான சூடான விவாதத்தின் போது, நன்கு அறியப்பட்டுள்ள வத்திக்கன் கருத்தறிவிப்பாளர் மார்கோ டொஸாட்டி கேட்டார்: “ஷ்ரொவுடின் மீது பயன்படுத்தப்பட்ட விஞ்ஞானப் பரிசோதனையானது, பிரசித்திப் பெற்ற வழிப்பாட்டுக்குரிய மற்றப் பொருட்களின் மீது பிரயோகிக்கப்பட்டால் தீர்ப்பு என்னவாயிருக்கும்?”
தெளிவாகவே, ஞானமுள்ள எந்த நபரும் ஒரு பொய்யான நினைவுச்சின்னத்தை வணங்க விரும்பமாட்டார். ஆனால் கருதுவதற்கு இது ஒன்றுதான் விஷயமா?
பைபிள் என்ன சொல்கிறது?
கடவுளுடைய ஆதரவைப் பெற்ற ஜனங்களாகிய பூர்வ இஸ்ரவேலர்கள், எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்த பொழுது, மத நினைவுச்சின்னங்களை வணங்கியதாக பைபிள் சொல்லவில்லை. உண்மைதான், கோத்திர தகப்பனாகிய யாக்கோபு எகிப்தில் மரித்துப் போனார். ‘மக்பேலா என்னும் நிலத்திலே’ அடக்கம் பண்ணப்படும் பொருட்டு அவருடைய உடல் கானான் தேசத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அவருடைய மகன் யோசேப்பும் எகிப்தில் மரித்தார், அவருடைய எலும்புகள் கடைசியாக அடக்கம்பண்ணப்பட கானானுக்குக் கொண்டுவரப்பட்டது. (ஆதியாகமம் 49:29–33; 50:1–14, 22–26; யாத்திராகமம் 13:17) என்றபோதிலும் இஸ்ரவேலர், யாக்கோபு மற்றும் யோசேப்பின் உடலை மதநினைவுச்சின்னங்களாக வணங்கியதாக எந்தக் குறிப்பும் வேதாகமத்தில் இல்லை.
தீர்க்கதரிசியாகிய மோசேயின் விஷயத்தில் என்ன நடந்தது என்பதையும்கூட சிந்தித்துப் பாருங்கள். கடவுளுடைய கட்டளையின்படி, அவர் இஸ்ரவேலரை 40 வருடங்கள் வழிநடத்தி வந்தார். பின்னர் 120-வது வயதில், அவர் நேபோ மலையின் மேல் ஏறி அங்கிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கண்ணால் பார்த்துவிட்டு பின்னர் மரித்துப் போனார். பிரதான தூதனாகிய மீகாவேல் மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசோடு தர்க்கித்துப் பேசினார். இஸ்ரவேலரை நினைவுச்சின்ன வணக்க கண்ணியிலகப்படுத்த சாத்தான் எடுத்திருக்கக்கூடிய எந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டது. (யூதா 9) அவர்கள் மோசேயின் மரணத்தைக் குறித்து துக்கங்கொண்டாடியது உண்மையாக இருந்தபோதிலும், அவருடைய மரித்த உடலை அவர்கள் ஒருபோதும் வணங்கவில்லை. உண்மையில் மோசேயைக் குறிக்கப்படாத ஒரு கல்லறையில் மனிதர்கள் அறியாத ஓர் இடத்தில் புதைப்பதன் மூலம் கடவுள் இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் சாத்தியமற்றதாக்கினார்.—உபாகமம் 34:1–8.
நினைவுச்சின்னங்களை வணங்குவதை ஆதரிக்கும் சிலர் 2 இராஜாக்கள் 13:21-ஐ மேற்கோள் காட்டுகிறார்கள். அது சொல்வதாவது: “அப்பொழுது அவர்கள் ஒரு மனுஷனை அடக்கம் பண்ணப் போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் [தீர்க்கதரிசி] கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின் மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.” இது கடவுளுடைய தீர்க்கதரிசிகளில் ஒருவருடைய உயிரற்ற எலும்புகளை உட்படுத்திய ஓர் அற்புதமாக இருந்தது. ஆனால் எலிசா மரித்தவராயும், அற்புதம் நடந்தேறிய சமயத்தில் “ஒன்றும் அறியாத”வராகவும் இருந்தார். (பிரசங்கி 9:5, 10) ஆகவே, தம்முடைய பரிசுத்த ஆவி அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தியின் மூலமாக அதை நடப்பித்த யெகோவா தேவனின், அற்புதங்களை நடப்பிக்கும் வல்லமையே இதற்கு காரணமாக இருந்தது. எலிசாவின் எலும்புகள் எப்போதாவது வணங்கப்பட்டதாக வேதாகமம் குறிப்பிடாதிருப்பதும்கூட குறிப்பிடத்தக்கதாகும்.
கிறிஸ்தவமண்டலத்திலுள்ள சிலர், அப்போஸ்தலர் 19:11, 12-ல் சொல்லப்பட்ட காரியத்தைக் கருத்தில் கொண்டு, நினைவுச்சின்னங்களுக்குப் பக்தியை ஆதரித்து பேசுகிறார்கள். அங்கே நாம் இவ்விதமாக வாசிக்கிறோம்: “பவுலின் [அப்போஸ்தலன்] கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர் மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப் போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன.” அந்த அசாதாரணமானச் செயல்களைப் பவுலின் மூலமாக நடப்பித்தது கடவுளே என்பதை தயவு செய்து கவனியுங்கள். அப்போஸ்தலன்தானே சுயேச்சையாக இப்படிப்பட்ட கிரியைகளை நடப்பிக்கவில்லை, அவர் ஒருபோதும் வணக்கத்தை எந்த மனிதரிடமிருந்தும் ஏற்றுக்கொள்ளவில்லை.—அப்போஸ்தலன் 14:8–18.
பைபிள் போதகங்களுக்கு முரணாக உள்ளது
உண்மையில், மத நினைவுச்சின்னங்களுக்குப் பக்தி அநேக பைபிள் போதகங்களுக்கு முரணாக உள்ளது. தவிர்க்கமுடியாத ஒரு காரியம், மனித ஆத்துமா அழியாமையில் நம்பிக்கையாக இருக்கிறது. புனிதர்களாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு “புனிதர்களாக” வணங்கப்படுகிறவர்களின் ஆத்துமாக்கள் பரலோகத்தில் உயிரோடிருப்பதாக இலட்சக்கணக்கான பக்தியுள்ள சர்ச் உறுப்பினர்கள் நம்புகிறார்கள். உண்மை மனதுள்ள இந்த ஆட்கள், இப்படிப்பட்ட “புனிதர்களிடம்” தங்களுக்குப் பாதுகாப்பளிக்கும்படியும், விண்ணப்பஞ் செய்கிறவர்கள் சார்பாக அவர்கள் கடவுளிடம் பரிந்து பேசவேண்டும் என்றும் ஜெபிக்கிறார்கள். உண்மையில் திருச்சபை தொடர்பான ஒரு நூலின்படி, கத்தோலிக்கர்கள், “கடவுளிடம் புனிதர்கள் பரிந்துரை செய்யும் சக்தியை” நினைவுச்சின்னங்களுக்கு உரித்தாக்குகின்றனர்.
ஆயினும் பைபிளின் பிரகாரம், மனித ஆத்துமா அழியாமையுள்ளது இல்லை, மரணத்துக்குப் பின் சாவாமலிருப்பதும் சரீரத்தினின்று பிரிந்து வேறாக வாழும் திறமையுள்ளதுமான ஆத்துமாக்களை மனிதர்கள் தங்களுக்குள் கொண்டில்லை. மாறாக வேதாகமம் சொல்வதாவது: “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” (ஆதியாகமம் 2:7) மனிதர்களுக்குச் சாவாமையுள்ள ஓர் ஆத்துமா இருக்கிறது என்பதாகக் கற்பிப்பதற்குப் பதிலாக பைபிள் சொல்கிறது: “பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்.” (எசேக்கியேல் 18:4) இது பின்னால் “புனிதர்களாக” அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் உட்பட எல்லா மனிதர்களுக்கும் பொருந்துகிறது. ஏனென்றால் நாம் அனைவருமே முதல் மனிதனாகிய ஆதாமிலிருந்து பாவத்தையும் மரணத்தையும் சுதந்தரித்துக்கொண்டிருக்கிறோம்.—ரோமர் 5:12.
“புனிதர்”களிடமாக பக்தி தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் அவர்கள் யாருக்காகவும் கடவுளிடம் பரிந்து பேச ஒருபோதும் அதிகாரமளிக்கப்பட்டில்லை. யெகோவா தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்து மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று முடிவு செய்திருக்கிறார். இயேசு “நமக்காக மரித்தது மாத்திரமல்லாமல்—மரித்தோரிலிருந்து எழுந்துமிருக்கிறார், அங்கே தேவனுடைய வலது பாரிசத்தில் நின்று நமக்காக வேண்டுதல் செய்கிறார்.”—ரோமர் 8:34, எருசலேம் பைபிள்; யோவான் 14:6, 14 ஒப்பிடவும்.
“புனிதர்”களிடமாகவும் அவர்களோடு சம்பந்தப்பட்ட மத நினைவுச்சின்னங்களிடமாகவும் பக்தியை தவிர்ப்பதற்கு மற்றொரு காரணம், விக்கிரகாராதனையை பற்றி பைபிள் சொல்லும் விஷயத்தைச் சார்ந்திருக்கிறது. இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட பத்துக் கற்பனைகளில் ஒன்று இவ்விதமாகச் சொன்னது: “மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள [தனிப்பட்ட பக்தியை விரும்புகிற, NW] தேவனா”யிருக்கிறேன். (யாத்திராகமம் 20:4, 5) பல நூற்றாண்டுகளுக்குப் பின் அப்போஸ்தலனாகிய பவுல் உடன் கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.” (1 கொரிந்தியர் 10:14) அதேவிதமாகவே அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார்: “பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக் கொள்வீர்களாக.”—1 யோவான் 5:21.
அதிகாரப்பூர்வமாக “புனிதர்”களாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கும் மத நினைவுச்சின்னங்களுக்கும் பக்தியை செலுத்துவற்கு பைபிளில் ஆதாரம் எதுவுமில்லை. என்றபோதிலும் சில ஆட்கள் பரிசுத்தமாகக் கருதப்படுகிறதும், கண்ணால் பார்க்க முடிகிறதும், தொட்டு உணர முடிகிறதும், பாதுகாக்கும் வல்லமையுடையதுமாக கருதப்படுகிற எதோவொன்றை விரும்புகிறார்கள். ஆம், அநேகர் மத நினைவுச்சின்னங்களைப் பரத்துக்கும் பூமிக்கும் இடையில் உள்ள சங்கிலியில் ஒரு காணக்கூடிய வளையமாக கருதுகின்றனர். தயவு செய்து இந்தக் குறிப்பை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
மத நினைவுச்சின்னங்களைப் பார்ப்பது மற்றும் தொடுவதன் மூலமாக, கடவுள் விரும்புகின்ற வணக்கத்தைப் பற்றிய இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாக ஒருவர் செயல்படுவதில்லை. இயேசு சொன்னார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.” (யோவான் 4:23, 24) யெகோவா தேவன் ஓர் “ஆவி”யாக மனித கண்களுக்குப் புலப்படாதவராக இருக்கிறார். அவரை “ஆவியோடு” வணங்குவது என்பது கடவுளுக்கு நம்முடைய பரிசுத்த சேவை அன்பும் விசுவாசமும் நிறைந்த ஒரு இருதயத்தால் தூண்டப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. (மத்தேயு 22:37–40; கலாத்தியர் 2:16) நினைவுச்சின்னங்களை வணங்குவதன் மூலம் நாம் கடவுளை ‘உண்மையோடு’ தொழுது கொள்ள முடியாது. ஆனால் மத சம்பந்தமான பொய்களை ஏற்க மறுத்து, பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவருடைய சித்தத்தை கற்றறிந்து அதைச் செய்வதன் மூலமாக மட்டுமே நாம் அதைச் செய்ய முடியும்.
ஆகவே கல்விமான் ஜேம்ஸ் பென்ட்லி, ‘பூர்வ எபிரெயர்கள் நினைவுச்சின்ன வழிபாட்டைக் கடைபிடிக்கவில்லை’ என்பதை ஒப்புக்கொள்வது ஆச்சரியமாயில்லை. ஸ்தேவானின் மரணத்துக்கும் லூஷியனினால் அவருடைய சரீரம் தோண்டி வெளியே எடுக்கப்பட்டதற்கும் இடையே இருந்த நான்கு நூற்றாண்டுகளின் போது, மத நினைவுச்சின்னங்களிடமாக கிறிஸ்தவர்களின் மனநிலை முழுவதுமாக மாறிவிட்டிருந்தது என்பதாகவும்கூட அவர் சொல்கிறார். என்றபோதிலும் ஐந்தாம் நூற்றாண்டுக்குள், விசுவாச துரோக கிறிஸ்தவமண்டலம், விக்கிரகாராதனை, மரித்தோரின் நிலை, “நமக்காக வேண்டுதல்” செய்பவராக இயேசு கிறிஸ்துவின் பங்கு ஆகியவற்றைப் பற்றியதில் தெளிவான பைபிள் போதகங்களைப் பற்றிக் கொண்டிருப்பதை ஏற்கெனவே கைவிட்டிருந்தது.—ரோமர் 8:34; பிரசங்கி 9:5; யோவான் 11:11–14.
நம்முடைய வணக்கம் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டும் என்று நாம் விரும்பினால், அது எவ்வகையான விக்கிரகாராதனையோடும் சம்பந்தப்பட்டில்லாமல் இருப்பதைக் குறித்து நாம் நிச்சயித்துக் கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு, நம்முடைய வணக்கம் எந்த ஒரு நினைவுச்சின்னத்துக்கோ அல்லது சிருஷ்டிக்கோ அல்ல, சிருஷ்டிகராகிய யெகோவா தேவனுக்கே செல்ல வேண்டும். (ரோமர் 1:24, 25; வெளிப்படுத்துதல் 19:10) நாம் பைபிளின் திருத்தமான அறிவை முயன்று அடைந்து பலமான ஒரு விசுவாசத்தையும்கூட வளர்த்துக்கொள்ள வேண்டும். (ரோமர் 10:17; எபிரெயர் 11:6) நாம் மெய் வணக்கத்தின் வழியில் நடந்திடுவோமானால், நினைவுச்சின்னங்களுக்குப் பக்தி கடவுளைப் பிரியப்படுத்துவதில்லை என்பதற்கிருக்கும் ஏராளமான வேதப்பூர்வமான அத்தாட்சிக்கு இசைவாக நாம் நடந்துகொள்வோம். (w91 11/15)
[பக்கம் 5-ன் படம்]
எலிசாவின் எலும்புகள் உயிர்த்தெழுதல் ஒன்றில் உட்பட்டிருந்த போதிலும் அவை வணங்கப்படவில்லை