அவர்கள் ஏன் வணக்கத்தில் நினைவுச்சின்னங்களைப் பயன்படுத்துகிறார்கள்
நேபிள்ஸ், இத்தாலி. நம்முடைய பொது சகாப்தத்தின் 18-வது நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் நீங்கள் அங்கே இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் கத்தீட்ரலில் ஒரு பிரசித்திப் பெற்ற மத நினைவுச்சின்னத்தின் முன்பு ஐரிஷ் தத்துவ அறிஞரான ஜார்ஜ் பெர்க்கலி நிற்கிறார். கத்தோலிக்க “புனிதர்” ஜனுவேரியஸ், “சான் ஜேனாரோ”வின் இரத்தம் திரவமாவதாய்த் தெரிவதை அவர் சந்தேகத்துடன் பார்க்கிறார்.
நேபிள்ஸ் இந்த விஷயத்தில் சிறிதும் மாறவில்லை. உதாரணமாக, சமீப வருடங்களில் ஒரு நிகழ்ச்சியில், மோசமான சீதோஷணத்தையும் பொருட்படுத்தாது, சர்ச்சானது மறுபடியும் மக்களால் நிரம்பி வழிந்தது. மற்றும் ஒரு தெளிவான அற்புதம் நிகழ்ந்தது. அந்த நினைவுச்சின்னமும், போப்புக்கு அடுத்த பேராயரால் வழிநடத்தப்பட்ட ஊர்வலமும் அனலான ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டன. ஆம், “சான் ஜேனாரோ”வின் இரத்தம் திரவமாவதாகத் தோன்றிய அநேக சமயங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த மத நினைவுச்சின்னத்தை உட்படுத்திய அற்புதங்கள் 14-வது நூற்றாண்டிலிருந்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கப் பாரம்பரியத்தின்படி, ஒரு நினைவுச்சின்னம், (“பின்விட்டுச் செல்லுதல்” என்ற அர்த்தமுள்ள லத்தின் ரெலின்குவரி-யிலிருந்து) புனிதராகக் கருதப்பட்ட ஒரு நபர் விட்டுச்சென்ற ஒரு பொருளாகும். டீட்சீயோனாரியோ எக்லீசியஸ்டிகோ குறிப்பிடுகிறபடி, நினைவுச்சின்னங்கள், “துல்லிபமான விளக்கத்தின்படி அந்த வார்த்தை, புனிதரின் உடல் அல்லது உடலின் பாகம் மற்றும் சாம்பலும், விரிவான அர்த்தத்தில், புனிதரின் உடலுடன் தொடர்புகொண்டதால் வழிப்பாட்டிற்குத் தகுதியானதாகிய பொருளும்” ஆகும்.
போப்பின் அங்கீகாரம்
சந்தேகமின்றி, மத நினைவுச்சின்னங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கும் தெளிவாக காணமுடிகிற அற்புதங்களின் காரணமாக, அநேகர் அவற்றைப் பயபக்தியுடன் கையாளுகிறார்கள். போப்பின் அங்கீகாரம் சந்தேகமின்றி அவைகளின் பிரசித்திக்கு மற்றுமொரு காரணமாகும்.
கடந்த 70 வருடங்களில், குறைந்தது நான்கு போப்புகள் நினைவுச்சின்னங்களுக்கு விசேஷித்த கவனத்தைக் கொடுத்துள்ளனர். அவருக்கு முந்தினவராகிய பயஸ் XI-ஐ போன்றே, போப் பயஸ் XII-ம் “புனிதர் லிஸியக்ஸின் நினைவுச்சின்னங்களைத் தன் மேல் வைத்திருந்தார்,” என்று ஒரு கத்தோலிக்க பத்திரிகை வெளிப்படுத்துகிறது. பால் VI, “அவருடைய படிக்கும் அறையில் மேசையில் அப்போஸ்தலனின் (தோமாவின்) விரலை வைத்திருந்தார்” மற்றும், ஜான் பால் II, “புனிதர் பெனடிக்ட்” மற்றும் “புனிதர் ஆண்ட்ரூ” ஆகியோரின் “எஞ்சிய . . . உடல் பாகங்களைத் தன்னுடைய சொந்தத் தனி அறையில் வைத்திருக்கிறார்.”—30 ஜேயார்னீ, மார்ச் 1990, பக்கம் 50.
இத்தகைய போப்பின் அங்கீகாரத்தை நோக்கும் போது தனிப்பட்ட மற்றும் பொதுவான வழிபாட்டிற்காக நினைவுச்சின்னங்களுக்குக் கிராக்கி அதிகரித்திருப்பது ஆச்சரியமாக இல்லை. ஆனால் மத நினைவுச்சின்னங்களுக்கு இப்படிப்பட்ட பக்தி கடவுளைப் பிரியப்படுத்துகிறதா? (w91 11/15)
[பக்கம் 3-ன் படம்]
ஒரு நினைவுச்சின்ன பேழை, மத நினைவுச்சின்னங்கள் பாதுகாத்து வைக்கப்படும் ஒரு கொள்கலம்
[படத்திற்கான நன்றி]
Courtesy of The British Museum