“புனிதர்கள்” மீதான தற்கால மோகம்
“ஹீரோக்களை பற்றி பேசினாலே சலித்துக்கொண்டதாக தோன்றிய காலம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆனால், செப். 13-ம் தேதி அன்னை தெரஸாவின் மரண ஊர்வலத்தை பார்த்த 42 லட்சம் அமெரிக்கர்களை அது பாதித்ததாகவே தெரியவில்லை. அவர், செப். 5-ம் தேதி மரித்ததிலிருந்து அவரை அதிகாரப்பூர்வமாய் புனிதராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வத்திகனை தாக்கிய வண்ணம் உள்ளன. அது நடக்காது என வெகு சிலரே சந்தேகிப்பர்.”—சன்-சென்டினல், ஐக்கிய மாகாணங்கள், அக்டோபர் 3, 1997.
கத்தோலிக்க மிஷனரியான அன்னை தெரஸா செய்த மனிதாபிமான, அறக்கொடை செயல்களே உண்மையான புனிதராய் இருப்பதன் சாரம் என்று அநேகர் கருதுகின்றனர். மற்ற மதங்களிலும் ஹீரோ போன்றோர் இருக்கின்றனர். என்றாலும், புனிதர்கள் என ரோமன் கத்தோலிக்க சர்ச் அறிவிப்போரை தவிர ஒருவேளை வேறு யாருமே அதிகாரப்பூர்வமாய் அங்கீகரிக்கப்படுவதில்லை.
இரண்டாம் ஜான் பால் போப்பாக ஆண்ட சமயத்தில் 450-க்கும் அதிகமானோரை புனிதர்களாக அறிவித்திருக்கிறார்; இது, 20-ம் நூற்றாண்டில் மற்ற அனைத்து போப்புகளும் புனிதர்களாக அறிவித்தவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகமாகும்.a ‘புனிதர்களில்’ அநேகரை சாதாரண கத்தோலிக்கர்கள் அதிகம் அறியாதிருந்தபோதிலும் இவர்கள்மீது இப்படியொரு மாறாத பயபக்தி நிலவ காரணம் என்ன?
“இந்த உலகிலும் பரிசுத்தம் இருக்கலாம் என்ற எண்ணமே மக்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. இன்றும்கூட ஹீரோ போன்ற வாழ்க்கை சாத்தியமே என்பதை புனிதர்கள் நிரூபிக்கின்றனர்” என்று நோடர் டேம் பல்கலைக்கழக இறையியல் வல்லுனர் லாரன்ஸ் கன்னிங்ஹம் விவரிக்கிறார். அதோடு, கடவுளிடம் அணுக ‘புனிதர்களுக்கு’ விசேஷ அனுமதி இருப்பதால் உயிரோடு இருப்பவர்களுக்காக பரிந்துபேச திறம்பட்ட நிலையில் இருப்பதாகவும் கருதப்படுகிறார்கள். ஒரு ‘புனிதரின்’ நினைவுச்சின்னங்கள் அல்லது உடலின் எஞ்சிய பாகங்கள் கிடைத்தால், அவற்றிலிருந்து வல்லமை வெளிப்படுவதாக கருதி அவற்றை வணங்குகின்றனர்.
கத்தோலிக்க கொள்கைகளை உறுதி செய்வதற்காக 16-வது நூற்றாண்டில் பிரசுரிக்கப்பட்ட கேட்டகிஸம் ஆஃப் த கவுன்சில் ஆஃப் ட்ரென்ட் இவ்வாறு ஆணையிட்டது: “‘கர்த்தருக்குள் உறங்குகிற’ புனிதர்களை மதிப்பது, பரிந்துபேசும்படி அவர்களிடம் வேண்டிக்கொள்வது, அவர்களுடைய புனித நினைவுச்சின்னங்களையும் சாம்பலையும் வணங்குவது போன்றவை கடவுளின் மகிமையை குறைப்பதற்கு பதிலாக, அதனால் அந்தக் கிறிஸ்தவரின் நம்பிக்கை எந்தளவிற்கு உயிரடைந்து, பலப்படுகிறதோ அந்த அளவிற்கு கடவுளின் மகிமையை அதிகரிக்கிறது என்ற முடிவிற்கு வருவது நியாயமானதே; மேலும், புனிதர்களின் நற்குணங்களை பின்பற்ற அந்தக் கிறிஸ்தவரையும் அது தூண்டுகிறது.” (த கேட்டகிஸம் ஆஃப் த கவுன்சில் ஆஃப் ட்ரென்ட், 1905) உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழவும், சரியான முறையில் கடவுளை அணுகவும், தெய்வீக உதவியை பெறவும் விரும்புகிறார்கள். (யாக்கோபு 4:7, 8) ஆகவே, கடவுளுடைய வார்த்தையின்படி உண்மையான புனிதர்களாய் தகுதி பெறுபவர்கள் யார்? அவர்களுடைய வேலை என்ன?
[அடிக்குறிப்பு]
a புனிதராக அறிவிப்பது என்றால் மரித்த ரோமன் கத்தோலிக்கர் ஒருவரை சர்வலோக, கட்டாய வணக்கத்திற்கு தகுதியானவராக அதிகாரப்பூர்வமாய் அங்கீகரிப்பதாகும்.