‘தேவனுடைய ஆலயத்துக்கும்’ கிரீஸிலுள்ள விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?
இந்த மிக வெப்பமான வேனிற்கால நாளில், பளபளப்பானக் கற்களை வெயில் தாக்கிக்கொண்டிருக்கிறது. எனினும் அந்த மிகக் கடும் வெப்பம், அந்தக் குன்றின் உச்சியிலுள்ள சிறிய கோயிலை நோக்கிச் செல்லும் பக்தியுள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் யாத்திரிகர் கூட்டத்தின் ஆர்வத்தையும் திடத்தீர்மானத்தையும் குறைப்பதாகத் தெரியவில்லை.
அந்த நாட்டின் மறுமுனையிலிருந்து பயணப்பட்டு வந்து, முற்றிலுமாய்க் களைத்துப்போயிருக்கிற வயதான ஒரு முதிர்வயதான அம்மாள் சோர்வுற்ற தன் பாதங்களுடன் தள்ளாடி செல்வதை நீங்கள் காண்கிறீர்கள். இதற்குச் சிறிது தூர உச்சியில், ஆர்வம் மிகுந்த ஒரு மனிதர், அந்த நெருக்கமான கூட்டத்தின் வழியே நுழைந்து செல்ல கஷ்டத்தோடு முயற்சி செய்கையில் சொட்ட சொட்ட வியர்த்துக் கொட்டிக்கொண்டிருக்கிறார். ஓர் இளம் பெண், கடும் வேதனையுடனும் கவலைதோய்ந்த முகத்துடனும், இரத்தம் கசிய கசிய முழங்கால்களில் தவழ்ந்து சென்றுகொண்டிருக்கிறாள். அவர்களுடைய இலக்கு என்ன? பேர்பெற்ற அந்தப் “பரிசுத்த” சிலைக்கு முன்னால் சென்று வேண்டுதல் செய்யவும், கூடுமானால் அதைத் தொட்டு முத்தமிடவும் தவறிவிடாதபடி சீக்கிரமாய் அங்கு போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்பதே.
இதைப் போன்ற காட்சிகள், உலகமுழுவதிலும், “பரிசுத்தவான்களை” வணங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள இடங்களில் எப்போதும் காணப்படுகின்றன. இவ்வாறு, கடவுளை அணுகுவதற்குரிய வழியைத் தாங்கள் பின்பற்றி, தங்கள் பக்தியையும் விசுவாசத்தையும் காட்டுகிறார்கள் என்று இந்த யாத்திரிகர்கள் எல்லாரும் நம்புகிறார்களெனத் தெரிகிறது. எங்கள் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ விசுவாசம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: நாங்கள் [“பரிசுத்தவான்களின்”] நினைவுவிழா கொண்டாடி, அவர்களுடைய பரிசுத்த ஆளுருவங்களுக்கு மகிமையையும் கனத்தையும் கொடுக்கிறோம். . . . , கடவுள் முன்னிலையில் எங்கள் சார்பாக ஜெபிப்பதற்காகவும் எங்கள் வாழ்க்கைகளின் பல தேவைகளில் எங்களுக்காக வேண்டுதல்கள் செய்வதற்காகவும் நாங்கள் கேட்கிறோம். . . . அற்புதம் நடப்பிக்கும் பரிசுத்தவான்களிடம் . . . எங்கள் ஆவிக்குரிய மற்றும் சரீரத்திற்குரியத் தேவைகளுக்காக உதவியை நாடுகிறோம்.” மேலும், ரோமன் கத்தோலிக்கச் சர்ச்சின் குருமார் சட்டங்களின்படி, “பரிசுத்தவான்களை” கடவுளிடம் பரிந்துபேசுபவர்களாக வணங்கி வேண்டிக்கொள்ள வேண்டும், மற்றும் “பரிசுத்தவான்களின்” நினைவுச் சின்னங்களையும் சிலைகளையும் வணங்க வேண்டும்.
கடவுளை “ஆவியோடும் சத்தியத்தோடும்” வணங்குவதே உண்மையான கிறிஸ்தவர்களின் முதலாவது அக்கறையாக இருக்க வேண்டும். (யோவான் 4:24, NW) இந்தக் காரணத்தினிமித்தம், கிறிஸ்தவமண்டலத்தின் மத பழக்கவழக்கங்களின் பாகமாக “பரிசுத்தவான்களை” வணங்குதல் உட்புகுத்தப்பட்ட முறையைப் பற்றிய சில உண்மைகளை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். கடவுள் ஏற்கத்தகுந்த முறையில் அவரை அணுக விரும்பும் எல்லாருக்கும் இத்தகைய ஓர் ஆராய்ச்சி மிகுந்த அறிவொளியூட்டுவதாக இருக்க வேண்டும்.
“பரிசுத்தவான்கள்” உட்புகுத்தப்பட்ட முறை
கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டும் எதிர்காலத்தில் கிறிஸ்துவோடு உடன்சுதந்தரவாளிகளாக இருக்கும்படி கடவுளுடைய சேவைக்காக ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுமான அந்தப் பூர்வக் கிறிஸ்தவர்கள் எல்லாரையும் “பரிசுத்தவான்கள்” என்று கிறிஸ்தவ கிரேக்க வேதவாக்கியங்கள் குறிப்பிடுகின்றன. (அப்போஸ்தலர் 9:32; 2 கொரிந்தியர் 1:1; 13:13)a சபையில் முக்கியமானவர்களாகவும் தாழ்மையானவர்களாகவும் இருந்த ஆண்களும் பெண்களுமான எல்லாரும், இங்கே பூமியில் வாழ்கையில் “பரிசுத்தவான்கள்” என்று விவரிக்கப்பட்டனர். வேதப்பூர்வமாய் அவர்கள் பரிசுத்தவான்களாகக் கருதப்பட்டது, அவர்கள் மரிக்கும் வரையில் தள்ளிப்போடவில்லை என்பது தெளிவாயிருக்கிறது.
எனினும், பொ.ச. இரண்டாம் நூற்றாண்டுக்குப்பின், விசுவாசத் துரோகக் கிறிஸ்தவம் உருவாகிக்கொண்டு வருகையில், கிறிஸ்தவத்தைப் பொதுமக்கள் விரும்புவதற்கும், புறமத ஜனங்களுக்கு வசீகரமானதாக்குவதற்கும், அவர்களுக்கு ஏற்கத்தகுந்ததாக்குவதற்கும் முயற்சி செய்யும் போக்கு உருவாகிக்கொண்டிருந்தது. பல தெய்வங்களைப் புறமத்தினர் வணங்கினர்; இந்தப் புதிய மதமோ ஒரே கடவுளை வணங்கும் கோட்பாட்டை உடையதாக இருந்தது. ஆகையால் “பரிசுத்தவான்களை” ஏற்படுத்துவதன்மூலம் இணக்கம் உண்டாக்குவது சாத்தியமாயிருக்கும். இவர்கள், அந்தப் பூர்வ தெய்வங்களும், தெய்வீக மானிடர்களும், அல்லது காவிய புருஷர்களுமானவர்களின் இடத்தை ஏற்பார்கள். இதன்பேரில் விளக்கம் அளிப்பதாய், எக்லீஸியாஸ்டீக்கே இஸ்டோரியா (திருக்கோயில் சார்ந்த சரித்திர) புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “புறமதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டிருப்பவர்களுக்கு, தாங்கள் விட்டுவிலகி வந்த வீரர்களைப் புனிதத் தியாகிகளோடு சம்பந்தப்படுத்தி, முந்திய மகா புருஷர்களுக்கு கொடுத்துவந்த மதிப்பை இவர்களுக்குக் கொடுக்கத் தொடங்குவது எளிதாக இருந்தது. . . . எனினும், பரிசுத்தவான்களுக்கு அத்தகைய கனத்தைச் செலுத்துவது, அடிக்கடி வெறும் விக்கிரக வணக்கமாகவே ஆகிவிட்டது.”
“பரிசுத்தவான்கள்” கிறிஸ்தவமண்டலத்திற்குள் புகுத்தப்பட்ட விதத்தைக் குறித்து மற்றொரு தகவல் ஆதாரம் இவ்வாறு விளக்குகிறது: “புறமதத்தின் பலத்த செல்வாக்கின் அறிகுறித் தடங்களை, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் ‘பரிசுத்தவான்களுக்கு’ கனத்தைச் செலுத்துவதில் நாங்கள் காண்கிறோம். [ஜனங்கள்] கிறிஸ்தவத்திற்கு மதமாற்றப்படுவதற்கு முன்பாக ஒலிம்பிய தெய்வங்களுக்குரியவையாகக் குறிக்கப்பட்ட பண்புகள், இப்போது பரிசுத்தவான்களுக்குப் பொருத்திக் கூறப்பட்டன. . . . இந்தப் புதிய மதத்தின் தொடக்க ஆண்டுகளிலிருந்தே அதைக் கடைப்பிடித்தவர்கள் சூரிய கடவுளுக்குப் பதிலாக (ஃபீபஸ் அப்பொல்லோ) அதன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாகிய எலியாவை வைத்து, இந்தத் தெய்வத்தினுடைய பூர்வ ஆலயங்களின் அல்லது கோயில்களின் பாழிடங்களுக்கு அடுத்தாற்போல் சர்ச்சுகளைக் கட்டியிருப்பதை நாம் காண்கிறோம். இவை பெரும்பாலும் குன்றுகளின் மற்றும் மலைகளின் உச்சியில், ஒளி தருபவனாக ஃபீபஸ் அப்பொல்லோவை பூர்வ கிரேக்கர் கனப்படுத்தின ஒவ்வொரு இடத்திலும் காணப்படுகின்றன. . . . கன்னித் தேவதை அத்தீனாவை கன்னி மரியாளுடனுங்கூட அவர்கள் அடையாளப்படுத்துகின்றனர். இவ்வாறு, அத்தீனாவின் சிலை உடைத்து வீழ்த்தப்பட்டபோது, அதனால் உண்டான வெறுமை, மதமாற்றப்பட்ட விக்கிரகாராதனைக்காரனின் ஆத்துமாவுக்குள்ளிருந்து நீக்கப்பட்டது.”—நியோட்டரன் என்கிக்ளோப்பேடிக்கன் லெக்ஸிக்கன் (நியூ என்ஸைக்ளோப்பீடியா அகராதி). தொகுதி 1, பக்கங்கள் 270-1.
உதாரணமாக, பொ.ச. நான்காம் நூற்றாண்டின் முடிவு சமயமான அவ்வளவு பிந்தியபோதுங்கூட ஆதன்ஸில் இருந்து வந்த நிலைமையை ஆராய்ந்து பாருங்கள். அந்தப் பட்டணத்தின் குடியிருப்பாளரில் பெரும்பான்மையர் இன்னும் பலதெய்வ வணக்கத்தினராக இருந்தனர். அவர்களுடைய மிக புனித சடங்குகளில் ஒன்று எலூஸினியன் மர்மங்கள், ஓர் இரட்டை சம்பவம்,b என்பதாக இருந்தது. இது, ஆதன்ஸின் வடமேற்கில் 23 கிலோமீட்டருக்கு அப்பால், எலூஸியா என்ற பட்டணத்தில் வருடந்தோறும் பிப்ரவரியில் நடத்தப்பட்டது. இந்த மர்மங்களுக்கு ஆஜராவதற்கு, அந்தப் பலதெய்வ வணக்கத்தாரான அத்தேனியர்கள் அந்தப் பரிசுத்த வழியைப் (ஹீரா ஹோடஸ்) பின்பற்ற வேண்டும். வணக்கத்திற்காக வேறு ஒரு இடத்தை அளிப்பதற்கு முயற்சி செய்து, அந்தப் பட்டணத்தின் தலைவர்கள் மிக புத்திசாலிகளாக இருந்தனர்; பலதெய்வ வணக்கத்தாரை கவர்ச்சிக்கவும், மர்மங்களுக்கு வராதபடி அவர்களைத் தடுக்கவும் அதே பாதையில், ஆதன்ஸுக்கு ஏறக்குறைய 10 கிலோமீட்டர் தூரத்தில் டாஃப்னி மடம் கட்டப்பட்டது. கிரேக்க தெய்வம் டாஃப்னியாஸுக்கு அல்லது பித்தியாஸ் அப்பொல்லோவுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட பூர்வ ஆலயத்தினுடைய அஸ்திபாரத்தின்மீதே அந்த மடத்தின் சர்ச் கட்டப்பட்டது.
பலதெய்வங்களின் வணக்கத்தை “பரிசுத்தவான்களின்” வணக்கத்திற்குள் இணைத்ததன் அத்தாட்சி, கிரீஸின் கித்திரா தீவிலும் காணக்கூடியதாக இருக்கிறது. அந்தத் தீவின் மலை சிகரங்கள் ஒன்றின்மீது, இரண்டு சிறிய பைஸன்டைன் கிறிஸ்தவ கோயில்கள் இருக்கின்றன—அவற்றில் ஒன்று “பரிசுத்த” ஜார்ஜுக்கும் மற்றொன்று கன்னி மரியாளுக்கும் அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றன. இதுவே, 3,500 ஆண்டுகளுக்கு முன்பாக வணக்கத்திற்குரிய இடமாகச் சேவித்த மினோயன் மலை சிகர கோயிலாக இருந்ததென்று புதைபொருள் ஆராய்ச்சி தோண்டியெடுப்புகள் வெளிப்படுத்தின. பொ.ச. ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டின்போது, மலை சிகர கோயில் இருந்த அதே இடத்தில் “கிறிஸ்தவர்கள்,” “பரிசுத்த” ஜியார்ஜுக்குத் தங்கள் சிறிய கோயிலைக் கட்டினார்கள். இந்த நடவடிக்கை மிகுந்த அடையாள அர்த்தமுடையதாக இருந்தது. மினோயன் மதத்தினுடைய நாகரிகத்தில் மேம்பட்ட முக்கிய இடம், ஈஜியன் கடலின் கடற்பாதைகளைக் கட்டுப்படுத்தியது. மாதாவின் மற்றும் “பரிசுத்த” ஜார்ஜின் தயவைப் பெறுவதற்கு இந்த இரண்டு சர்ச்சுகளும் அங்கு கட்டப்பட்டன. “பரிசுத்த” ஜார்ஜின் நாள், “கப்பலோட்டிகளின் பாதுகாப்பாளர்” ஆகிய “பரிசுத்த” நிக்கலஸின் நாளிலேயே கொண்டாடப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பின்பேரில் அறிக்கை செய்வதாய் ஒரு செய்தித்தாள் இவ்வாறு சொன்னது: மத ஆராதனைகளை நடப்பிப்பதற்காக, “பூர்வ காலங்களில் மினோயன் குரு செய்ததுபோல், இன்று [கிரேக்க ஆர்த்தடாக்ஸ்] குரு மலையில் ஏறுவார்!”
விசுவாசத்துரோகக் கிறிஸ்தவம், பலதெய்வ வணக்க கிரேக்க மதத்தால் எந்தளவுக்கு செல்வாக்கு செலுத்தப்பட்டது என்பதை சுருக்கமாய்க் கூறுபவராக, ஒரு பெண் சரித்திர ஆராய்ச்சியாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்: “கிறிஸ்தவ மதத்தின் இந்தப் பலதெய்வ வணக்க அஸ்திபாரம், மக்கள் விருப்பத்திற்கேற்ற நம்பிக்கைகளில் பெரும்பாலும் மாறாமல் நிலைத்திருக்கிறது; இவ்வாறு பாரம்பரியத்தின் விடாது நிலைத்திருக்கும் இயல்புக்கு சாட்சி பகருகிறது.”
‘நாம் அறிந்து வணங்குவது’
சமாரிய பெண்ணிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “நாங்கள் அறிந்து வணங்குகிறோம். . . . உண்மையான வணக்கத்தார் பிதாவை ஆவியோடும் சத்தியத்தோடும் வணங்குவார்கள், நிச்சயமாகவே, அத்தகையோரானவர்களே தம்மை வணங்குவதற்கு பிதா விரும்புகிறார்.” (யோவான் 4:22, 23, NW) சத்தியத்தோடு வணங்குவது இன்றியமையாதது என்பதைக் கவனியுங்கள்! ஆகையால் சத்தியத்தின் திருத்தமான அறிவு இல்லாமலும், சத்தியத்தின்பேரில் ஆழ்ந்த அன்பில்லாமலும் கடவுளை அவர் ஏற்கத்தகுந்த முறையில் வணங்குவது முடியாதக் காரியம். உண்மையானக் கிறிஸ்தவ மதம், சத்தியத்தின்மீது ஆதாரம் கொண்டிருக்க வேண்டும்; பாரம்பரியங்களின்மீதும் பலதெய்வ வணக்கத்தினிடமிருந்து வருவித்த பழக்கவழக்கங்களின்மீதும் அல்ல. தவறான வழியில் தம்மை வணங்க ஆட்கள் முயற்சி செய்கையில் யெகோவா எவ்வாறு உணருகிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். பூர்வ கிரேக்க நகரமாகிய கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? . . . தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?” (2 கொரிந்தியர் 6:15, 16) கடவுளுடைய ஆலயத்தை விக்கிரகங்களோடு இசைவுபடுத்த செய்யும் எந்த முயற்சியும் அவருக்கு வெறுப்பாயுள்ளது.
மேலுமாக, கடவுளிடம் பரிந்துபேசுபவர்களாய்ச் செயல்படும்படி ‘பரிசுத்தவான்களிடம்’ ஜெபிக்கும் எண்ணத்தை வெகு தெளிவாகவே வேதவசனங்கள் கண்டிக்கின்றன. பிதாவை நோக்கி மாத்திரமே ஜெபங்கள் செய்யப்பட வேண்டுமென்று இயேசு தம்முடைய மாதிரி ஜெபத்தில் கற்பித்தார். ஆகவே தம்முடைய சீஷர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” (மத்தேயு 6:9) இயேசு மேலும் கூறினார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். . . . என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.” அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு கூறினார்: “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. . . . மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.”—யோவான் 14:6, 14; 1 தீமோத்தேயு 2:5, 6.
நம்முடைய ஜெபங்களுக்கு கடவுள் செவிகொடுக்க வேண்டுமென்று நாம் உண்மையில் விரும்பினால், அவருடைய வார்த்தை கட்டளையிடுகிற முறையில் அவரை அணுகுவது முக்கியமானது. யெகோவாவை அணுகுவதற்குத் தகுதியான ஒரே முறையை அறிவுறுத்தி கூறுபவராய் பவுலும் இவ்வாறு எழுதினார்: “[இயேசு] கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே.” “தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.”—ரோமர் 8:34; எபிரெயர் 7:25.
‘ஆவியோடும் சத்தியத்தோடும் தொழுதுகொள்ளுதல்’
விசுவாசத்துரோகக் கிறிஸ்தவம், பலதெய்வ வணக்கத்தாரை அவர்களுடைய பொய் வணக்கத்தை கைவிடவும், இயேசு கிறிஸ்துவின் உண்மை போதகங்களைப் பின்பற்ற உந்துவிக்கவும் ஆவிக்குரிய பலத்தையும் கொண்டில்லை; கடவுளுடைய பரிசுத்த ஆவியின் ஆதரவையும் கொண்டில்லை. அது மதமாற்றம் செய்யவும், அதிகாரம்பெறவும், பிரபலமாகவும் வேண்டும் என்ற தீவிர வெறியினால், பலதெய்வ வணக்கத்தின் நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் தங்களுடையதாக மாற்றிக்கொண்டது. இதன் காரணமாகவே, அது கடவுளும் கிறிஸ்துவும் ஏற்றுக்கொள்ளத்தக்க உறுதியான கிறிஸ்தவர்களை உண்டாக்கவில்லை. மாறாக, போலியான விசுவாசிகளை, ராஜ்யத்திற்குத் தகுதி பெறாத ‘களைகளை’ உருவாக்கி இருக்கிறது.—மத்தேயு 13:24-30.
இருந்தாலும், இந்தக் கடைசி காலத்தில், யெகோவாவின் வழிநடத்துதலின்கீழ், உண்மை வணக்கத்தை மறுபடியும் நிலைநாட்டுவதில் கிளர்ச்சியூட்டும் சமயம் இருக்கிறது. உலகெங்கும் உள்ள யெகோவாவின் மக்கள் தங்களுடைய பண்பாட்டுப் பின்னணி, சமூகப் பின்னணி, அல்லது மதப் பின்னணி சாராமல், பைபிளின் தராதரங்களுக்கு இசைவாக தங்கள் வாழ்க்கையையும் நம்பிக்கைகளையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்கின்றனர். கடவுளை எவ்வாறு ‘ஆவியோடும் சத்தியத்தோடும்’ வணங்க வேண்டும் என்று அறிந்துகொள்ள விரும்பினால், நீங்கள் வாழும் இடத்தில் உள்ள யெகோவாவின் சாட்சிகளிடம் தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள். கடவுள் ஏற்றுக்கொள்ளத்தக்க பரிசுத்த சேவையை, அதாவது உங்கள் நியாயப்படுத்தும் வல்லமையிலும், கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவிலும் ஆதாரம் கொண்ட சேவையை செய்வதற்கு உங்களுக்கு உதவிசெய்ய அவர்கள் அதிக மகிழ்ச்சியடைவார்கள். பவுல் எழுதினார்: “சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை [“உங்களுடைய நியாயப்படுத்தும் வல்லமையோடுகூடிய பரிசுத்த சேவை,” NW]. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” மேலும் கொலோசெயர்களிடம் அவர் சொன்னார்: “நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும் ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற [“திருத்தமான,” NW] அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற [“திருத்தமான,” NW] அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப்பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.”—ரோமர் 12:1, 2; கொலோசெயர் 1:9, 10.
[அடிக்குறிப்புகள்]
a கிரேக்கச் சொல்லாகிய ஹாகியாஸ் (haʹgi·os) என்பதை பைபிள் மொழிபெயர்ப்புகள் சில “பரிசுத்தவான்கள்” என்றும், மற்றவை “செயின்ட்” (ஆங்கிலம்) என்றும் மொழிபெயர்க்கின்றன.
b அதைப் பார்க்கிலும் பெரிய எலூஸினியா ஆதன்ஸிலும் எலூஸியாவிலும் வருடந்தோறும் செப்டம்பரில் நடத்தப்பட்டது.
[பக்கம் 28-ன் பெட்டி/படம்]
பார்த்தினான் என்பதன் பொருத்தமற்ற உபயோகம்
“கிறிஸ்தவ” பேரரசராகிய இரண்டாம் தியோடோசியஸ், ஆதன்ஸ் நகர (பொ.ச. 438) சம்பந்தமான அரசாணைகளைக் கொண்டு, புறமத சடங்குகளையும் மறைபொருள் சார்ந்த மத சடங்குகளையும் ஒழித்துக்கட்டிவிட்டு, புறமத கோயில்களை மூடிவிட்டார்; அதன் பின்பு அவை கிறிஸ்தவ சர்ச்சுகளாக மாற்றப்பட முடியும். ஒரு கோயிலை வெற்றிகரமாக மாற்றுவதற்கு செய்யவேண்டிய ஒரேவொரு காரியம், அதில் ஒரு சிலுவையை பொருத்தி அதைச் சுத்திகரிப்பதாகவே இருந்தது!
முதலாவதாக மாற்றப்பட்ட கோயில்களில் ஒன்று பார்த்தினான். பார்த்தினானை ஒரு “கிறிஸ்தவ” கோயிலாக பயன்படுத்துவதற்கு ஏற்ற விதமாக மாற்ற நிறைய புதுப்பித்தல் வேலைகள் நடந்தேறின. பொ.ச. 869 முதற்கொண்டு, ஆதன்ஸின் கத்தீட்ரலாக அது சேவித்தது. ஆரம்பத்தில் “பரிசுத்த ஞான” கோயில் என கெளரவிக்கப்பட்டது. அத்தேனே கோயிலுக்கு முதன்முதலான “சொந்தக்காரி” ஞானத்திற்கு தேவதையாய் இருப்பவளே என்ற உண்மையை இது வேண்டுமென்றே நினைவுபடுத்துவதாக இருந்திருக்கலாம். பிற்பாடு அது “நம் அத்தேனிய மாதாவுக்கு” அர்ப்பணிக்கப்பட்டது. எட்டு நூற்றாண்டுகளாக ஆர்த்தடாக்ஸ் பயன்படுத்திய பிறகு, அந்தக் கோயில் ஆதன்ஸின் புனித மரியாளுடைய கத்தோலிக்க சர்ச்சாக மாற்றப்பட்டது. பார்த்தினானுடைய இப்படிப்பட்ட மத சம்பந்தமான “மறுசுழற்சி” தொடர்ந்து நடைபெற்று வந்தது; அதாவது 15-ம் நூற்றாண்டில் ஒட்டாமன் துருக்கியர்கள் அதை ஒரு மசூதியாக மாற்றினார்கள்.
இன்று அந்தப் பார்த்தினான், கிரேக்க ஞான தேவதையாகிய அந்தப் பூர்வீக அத்தேனே பார்த்தினாஸின் (“கன்னி”) டோரிக் கோயில், கிரேக்க கட்டடக்கலையின் ஒரு தலைசிறந்த படைப்பாக ஆயிரக்கணக்கான உல்லாசப் பயணிகள் விஜயம் செய்யும் இடமாக இருக்கிறது.
[பக்கம் 26-ன் படம்]
டாஃப்னி மடம்—பூர்வ ஆதன்ஸின் பலதெய்வ வணக்கத்தாரின் மாற்று வழிபாட்டு இடம்