சீனாய் மலை—பாலைவனத்தில் ஒரு மணிக்கல்
பாரம்பரிய புகழ்மிக்க சீனாய் மலையை நான் முதல் முதலாக பார்த்தபோது பரவசத்தில் மெய்மறந்தேன். அது என் நெஞ்சிலே நீங்காத நினைவுகளாய் இன்னும் நிற்கிறது. எகிப்தில் உள்ள சீனாய் தீபகற்பத்தின் அனல் பறக்கும் புழுதி நிறைந்த நிலப்பகுதியினூடே காரில் சென்றோம். திடீரென்று, பரந்து விரிந்து கிடந்த எர்-ரெஹா சமநிலம் வரவேற்றது. அங்கே, வானத்தை தொட்டுவிடுவது போல் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் சீனாய் மலையின் முகப்பைக் கண்டு மலைத்து நின்றோம். பாலைவனத்தில் பதித்த, ஜொலிக்கும் மணிக்கல் போல் அது காட்சி அளித்தது. கடவுளிடம் இருந்து நியாயப்பிரமாண சட்டத்தை மோசே பெற்ற மலை இதுதான் என்று நினைக்கும் அந்தக் கணமே மெய்சிலிர்த்தது!
பைபிளில் சொல்லப்பட்டுள்ள சீனாய் மலையின் சரியான இடத்தைப் பற்றி காரசாரமான வாக்குவாதம் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. என்றபோதிலும், பல நூற்றாண்டுகளாக, இம்மலையைக் காண யாத்திரீகர்கள் இங்கு வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றனர். ஏன்? இது பிரசித்திப் பெற்ற மலை என்ற நம்பிக்கையில். பொ.ச. மூன்றாம் நூற்றாண்டிலேயே, துறவிகள் தனிமையில் மத போதகங்களை ஆழ்ந்து தியானிக்கும் நோக்கத்துடன் இங்கு வந்தனர். இந்த துறவிகளின் பாதுகாப்பிற்காகவும் ரோம ஆதிக்கத்தின் செல்வாக்கு அங்கு தொடர்ந்து இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் அரண் போன்ற மடத்தை கட்ட பைஸன்டைன் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் ஆறாம் நூற்றாண்டில் ஆணை பிறப்பித்தார். சீனாய் மலையின் அடிவாரத்தில் இருக்கும் இந்த மடம், இப்போது செயின்ட் கேதரீன் மடம் என்று அறியப்பட்டு வருகிறது. என்னோடு சேர்ந்து சீனாய் மலையை சுற்றி வலம் வர உங்களுக்கும் ஆசையா? வாருங்கள்!
மலைப் பயணம்
வறண்ட பள்ளத்தாக்கின் வழியே எங்கள் பிரயாணம் முடிந்த பிறகு, அராபிய இனத்தவரான எங்கள் டாக்ஸி டிரைவர், என்னையும் என்னுடைய நண்பரையும் மடத்திற்கு நேர்கீழே இறக்கிவிட்டார். மழுங்கலான பாறைகளின் முகடுகளும் மரங்கள் நெடுக அலங்கரித்த மடத்தின் மதில்சுவர்களும் பச்சைப் பசேலென்ற சோலையும் எங்கள் கண்களுக்கு விருந்தளித்தன. ஆனால், அவற்றைத் தாண்டி, தெற்கு முகட்டில் ஏறி, அங்கே ராத்தங்க வேண்டும் என்பதே எங்கள் பயணத்தின் நோக்கம். “மோசேயின் மலை” என்று அர்த்தப்படும் ஜெபல் மூசா மலை, சீனாய் மலையோடு பாரம்பரியமாக அடையாளப்படுத்தப்படுகிறது.
இரண்டு மணிநேர மலை ஏற்றத்திற்கு பிறகு, எலியாவின் பள்ளம் என்றழைக்கப்படும் சிறிய ஒரு பள்ளத்தாக்கை அடைந்தோம். மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள சீனாய் மலையை இது இரண்டாகப் பிரிக்கிறது. இதற்கு அருகிலுள்ள குகை ஒன்றில்தான் எலியா கடவுளுடைய குரலைக் கேட்டதாக வழிவழியாக வந்த பாரம்பரியம் சொல்லுகிறது. (1 இராஜாக்கள் 19:8-13) அங்கே இருந்த 500 வருடம் பழமையான பைன் மரத்தின்கீழே சிறிது ஓய்வெடுத்தோம். அங்கே இருக்கும் பழங்கால கிணறு ஒன்றின் கண்ணாடி போன்ற தெளிந்த, ஜில்லென்ற தண்ணீரை அராபிய நாடோடி ஒருவன் தோழமையோடு தர, அதைப் பருகி நாங்கள் அகம் மகிழ்ந்தோம்.
சுற்றுலாப் பயணிகள் வழக்கமாக செல்லும் வழியிலே நாங்களும் போனோம். அடுத்த 20 நிமிடங்கள், மலையின் உச்சிக்கு கொண்டு போய் சேர்க்கும் கல்லால் ஆன 750 படிகளில் முக்கி முனகி ஏறினோம். உச்சியை அடைந்ததும் ஒரு சிறிய சர்ச்சை பார்த்தோம். நியாயப்பிரமாண சட்டத்தை மோசே பெற்றுக் கொண்ட இடத்தில்தான் அந்த சர்ச் கட்டப்பட்டுள்ளதாக துறவிகள் உறுதியாக கூறுகின்றனர். அந்த சர்ச்சுக்கு முட்டுக்கொடுத்தாற்போல் அமைந்துள்ள பாறைப் பிளவில்தான், கடவுள் மோசேக்கு முன்பாக கடக்கும்போது அவர் ஒளிந்து கொண்டதாக அவர்கள் உரிமை பாராட்டுகின்றனர். (யாத்திராகமம் 33:21-23) இந்த சம்பவங்கள் நடந்த இடம் சரியாக யாருக்குமே தெரியாது என்பதுதான் உண்மை. எது எப்படியிருந்தாலும், மலை உச்சியில் இருந்து காணும் காட்சி பிரமிக்க வைக்கும் காட்சிதான்! பாறைகள் நிறைந்த சமவெளிக்கு பின்னே, கண்ணுக்கெட்டிய தூரம்வரை அடுக்கி வைத்தாற்போல் வரிசையாக இருக்கும் செந்நிற கிரானைட் மலைகளை பார்த்தோம். தென்மேற்கில் உயர்ந்து நிற்கும் ஜெபல் கேதரீனா அல்லது கேதரீன் மலைதான் அங்கு உள்ளதிலேயே மிக அதிக உயரமானது. அதன் உயரம் 2,637 மீட்டர்.
அருகில் உள்ள ராஸ் ஸாஃப்ஸேஃபாவில் ஏறுதல்
ஜெபல் மூசாவைப் போலவே, மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள அதே சீனாய் மலைத்தொடரில் உள்ள மற்றொரு முகடு ராஸ் ஸாஃப்ஸேஃபா. இதில் ஏறுவதற்கான வாய்ப்பும் மறு நாள் கிட்டியது. இம்மலைத்தொடரின் வடக்கு முகடு ராஸ் ஸாஃப்ஸேஃபா. இது ஜெபல் மூசாவைவிட உயரம் குறைவானது. எர்-ரெஹா சமநிலத்தில் இருந்து ஸாஃப்ஸேஃபா திடுதிப்பென்று கம்பீரமாய் உயருகிறது. யெகோவாவிடம் இருந்து நியாயப்பிரமாண சட்டத்தைப் பெற மோசே மலை மேலே சென்ற போது, இஸ்ரவேல் ஜனங்கள் இங்கு கூடாரமடித்து தங்கி இருந்திருக்கலாம்.
சின்னஞ்சிறு முகடுகளையும் பள்ளத்தாக்குகளையும் பாழடைந்த சர்ச்சுகளையும் தோட்டங்களையும் நீரூற்றுகளையும் தாண்டி, ராஸ் ஸாஃப்ஸேஃபாவில் ஏறினோம். ஒரு காலத்தில் இங்குள்ள குகைகளும் கல்லால் ஆன அறைகளும் நூற்றுக்கும் அதிகமான துறவிகளுக்கும் சாமியார்களுக்கும் உறைவிடமாக இருந்தன. ஆனால், இப்பொழுதோ அங்கே ஒரே ஒரு துறவிமட்டுமே இருக்கிறார்.
உயரமான முட்கம்பி வேலியால் சூழப்பட்ட தோட்டத்தில் தன்னந்தனியே இருக்கும் இந்த துறவியை நாங்கள் சந்தித்தோம். உள்ளே எங்களை அனுமதித்த அவர், ஐந்து வருடங்களாக அந்த தோட்டத்தில் வேலை செய்வதாகவும் வாரத்தில் ஒரு நாளே மடத்துக்கு செல்ல கீழே இறங்குவதாகவும் விளக்கினார். ராஸ் ஸாஃப்ஸேஃபாவுக்கு அவர் வழி சொல்ல, நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். எறும்பு ஊறுவது போல் மெல்ல மெல்ல ஊர்ந்து கடைசியில் முகட்டை எட்டிப்பிடித்தோம்; அருகில் இருந்த முகடுகளைவிட நாங்கள் இப்போது உயரமான இடத்தில் நின்றுகொண்டிருந்தோம். அங்கிருந்து கீழே பரந்து விரிந்து கிடந்த விசாலமான எர்-ரெஹா சமநிலத்தை பார்க்க முடிந்தது. மோசே, இஸ்ரவேலர்களுடைய கூடாரத்தைவிட்டு கிளம்பி கடவுளின் பிரசன்னத்தில் நிற்பதற்கு மலை மேல் ஏறினார். இந்த உயரமான இடத்திலிருந்து கவனிக்கும்போது, இந்த இடத்திற்குத்தான் அவர் ஏறியிருப்பார் என்பதை என்னால் கற்பனை செய்யமுடிந்தது. இந்த விசாலமான சமநிலத்தில் 30 லட்சம் இஸ்ரவேலர்கள் “மலைக்கு முன்பாக” கூடியிருந்த அந்த காட்சி என் மனத்திரையில் ஓடியது. பத்து கட்டளைகள் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை வைத்துக்கொண்டு, மலையை ஒட்டியிருக்கும் பெரிய பள்ளத்தாக்கில் மோசே இறங்கிவருகிற காட்சி என் மனத்திரையில் படமாக ஓடியது.—யாத்திராகமம் 19:2; 20:18; 32:15.
கதிரவன் கண்ணயரவே, எங்களுடைய கடும்பிரயாசம் வீண்போகவில்லை என்ற மனதிருப்தியோடு சாவதானமாக எங்கள் கூடாரம் இருந்த இடத்திற்கு இறங்கினோம். சிறிய நெருப்பின் வெளிச்சத்தில், மோசேயின் அனுபவங்களை விவரிக்கும் யாத்திராகம புத்தகத்தின் சில பகுதிகளை படித்துவிட்டு, நாங்களும் கண்ணயர்ந்தோம். அடுத்த நாள் விடிந்த பிறகு காலைப்பொழுதில் செயின்ட் கேதரீன் மடத்தின் கதவுகளை தட்டிக்கொண்டு நின்றோம்.
மடத்தினுள்ளே
கிறிஸ்தவமண்டலத்தின் மிக முக்கியமான நினைவுச் சின்னங்களுள் ஒன்றாக கருதப்படுவது செயின்ட் கேதரீன் மடம். கிரேக்க ஆர்த்தடாக்ஸ் துறவிகளால் நடத்தப்பட்டு வரும் இந்த மடம், அது அமைந்திருக்கும் இடத்திற்காக மட்டுமல்ல, அதனுடைய விக்கிரகங்கள், நூலகத்திற்காகவும் பெயர்பெற்றது. செயின்ட் கேதரீனுடைய சரித்திரத்தை நோக்கும்போது, அது அவ்வளவு தனிமையான இடத்தில் இருந்ததால், ஒருகாலத்தில் அதைப் பார்க்க வருபவர்கள் வெகு சிலரே. எனவே அவர்கள் வரவேற்கப்பட்டனர். ஆகவே, வரும் விருந்தாளிகளை துறவிகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அவர்கள் பாதங்களைக்கூட கழுவி வரவேற்றனர். அங்கு வந்த விருந்தாளிகள், 14 மீட்டர் உயரமுள்ள மடத்தின் மதில்சுவர்களுக்குள் அங்கங்கே இருக்கும் கட்டிடங்களில் எப்படி வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம். ‘ஒரு வாரத்திற்கு, ஒரு மாசத்திற்கு, எத்தனை நாள் நீங்கள் விரும்புகிறீர்களோ அத்தனை நாள் தங்கலாம்’ என்பதே துறவியின் பணிவான பல்லவி. ஆனால், இப்பொழுது நிலைமை தலைகீழ். இந்த மடத்தை சுற்றிப் பார்க்க ஆண்டுக்கு கிட்டத்தட்ட 50,000 பேர் வருகின்றனர். அங்கிருக்கும் சுமார் பன்னிரண்டு துறவிகள் இவர்களை உபசரிக்க முடியாமல் திணறுகின்றனர்.
பெருந்திரளாக மக்கள் வருவதால், சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படும் நேரம் வாரத்தில் ஐந்து நாட்களாகவும் ஒரு நாளைக்கு மூன்று மணிநேரமாகவும் குறைக்கப்பட்டு இருக்கிறது. மோசேயின் கிணறு (பழங்கதையின்படி மோசே தன்னுடைய வருங்கால மனைவியை இங்கு சந்தித்தார்) அடங்கிய முற்றம், மறுரூபமாதல் சர்ச் (பொதுவாக நிலவும் கருத்தின்படி, உலகின் மிகப் பழமையான சர்ச்), ஒரு புத்தகக்கடை என மடத்தின் சிறு பகுதியைத்தான் பயணிகள் பார்க்கலாம். எரியும் புதர் சர்ச்சையும்—மோசே முதன்முதலாக கடவுளின் பிரசன்னத்தை தரிசித்ததாக துறவிகள் சொல்லும் இடத்தை—சுற்றுலாப் பயணிகள் பார்க்கலாம். இப்போதும் பூமியிலேயே மிக பரிசுத்தமான இடமாக இதை துறவிகள் கருதுகின்றனர். எனவே, மோசேக்கு கடவுள் கட்டளையிட்டது போல், பயணிகளும் தங்களுடைய காலணிகளை கழற்றும்படி சொல்லப்படுகின்றனர்.—யாத்திராகமம் 3:5.
நாங்கள் முக்கியமாக பார்க்க நினைத்தது மடத்தினுடைய பிரசித்திப் பெற்ற நூலகத்தை. ஆனால் அனுமதி கிடைக்காதபடியால் ஏமாற்றத்தால் எங்கள் மனம் வாடியது. எங்களை மட்டுமாவது உள்ளேவிட முடியுமா என்று நாங்கள் கேட்டதற்கு “முடியவே முடியாது! இன்னும் சில நொடிகளில் மடம் மூடப்படும்” என்று கைடு சொன்னார். ஆனால், சற்று நேரத்தில், பயணிகளின் குழுவில் இருந்து தனியே நாங்கள் வந்த பிறகு “இந்த வழியா வாங்க!” என்று கைடு எங்களிடம் கிசுகிசுத்தார். தடுப்பு கயிற்றுக்கு கீழே நுழைந்து, படிகளில் ஏறி செல்லும்போது அங்கே ஒரு ஃபிரெஞ்சு துறவி வந்துவிட்டார். ஆனால் நாங்கள் அவரை கடந்தபோது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. உலகின் பழமையான, பிரசித்திப் பெற்ற நூலகங்களுள் ஒன்றில் நாங்கள் நின்றுகொண்டிந்தது எங்களுடைய சுற்றுலாவுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது! 4,500-க்கும் மேற்பட்ட கிரேக்கு, அராபிக், சிரியாக், எகிப்திய புத்தகங்கள் அதில் இருக்கின்றன. ஒரு சமயத்தில், விலைமதிப்பிலா கோடெக்ஸ் சைனய்டிகஸ் இந்நூலகத்தில் இருந்தது.—பக்கம் 18-லுள்ள பெட்டியைக் காண்க.
பிரியா விடை
மடத்தின் மதில்சுவர்களுக்கு வெளியே உள்ள எலும்புக் கிடங்கை பார்வையிட்டதோடு எங்கள் சுற்றுப்பயணம் இனிதே முடிவுற்றது. அங்கே, பல தலைமுறை துறவிகள், சாமியார்களின் எலும்புகள் குவியல் குவியலாக இருந்தன. கால் எலும்புகள், கை எலும்புகள், மண்டை ஓடு என ஆணிவேறு அக்குவேறாக குவிக்கப்பட்டு இருந்தன. மண்டை ஓடுகளின் குவியல் கூரையை தொடும் அளவுக்கு உயர்ந்து இருந்தன. இப்படிப்பட்ட குலையையே நடுங்க வைக்கும் ஓர் இடம் அவசியம்தானா? கல்லறைக்காக சிறிய இடமே இருந்தது துறவிகளுக்கு. எனவே, ஒருவர் இறந்தால், கல்லறையில் ஏற்கெனவே இருக்கும் பழைய எலும்புகளை அகற்றிவிட்டு சடலத்தை புதைத்து விடுவது வழக்கம். எலும்புக் கிடங்கில் இருக்கும் உடன் துறவியின் எலும்புகளோடு தங்களுடைய எலும்பும் ஒரு நாள் சேரும் என்று எல்லா துறவிகளுமே எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு சோக ஸ்வரத்தோடு எங்களுடைய சுற்றுப்பயணம் முற்றுப் பெற்றது. எங்களுடைய எல்லா கடும்பிரயாசத்திற்கும் கைமேல் பலன் கிட்டியது. பிரசித்திப் பெற்ற மடத்தையும் பிரமிப்பூட்டும் காட்சிகளையும் கண்டு ரசித்தோம். 3,500 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரவேல் தேசத்தாரும் மோசேயும் சீனாய் மலையின் மேல் நடந்த அதே பாதையில்தான் நாங்களும் ஒருவேளை நடந்திருக்கிறோம் என்ற மனநிறைவான எண்ணத்தோடு அந்த இடத்தைவிட்டு நடந்தோம். ஆம், சீனாய் மலை, பாலைவனத்தில் ஜொலிக்கும் ஒரு மணிக்கல்தான்.—அளிக்கப்பட்டது.
[பக்கம் 18-ன் பெட்டி]
விசேஷித்த ஒரு கண்டுபிடிப்பு
கான்ஸ்டான்டீன் வான் டிஷ்யென்டார்ஃப், கடந்த நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மானிய பைபிள் வல்லுநர். நான்காம் நூற்றாண்டு கிரேக்க பைபிள் கையெழுத்துப்பிரதி ஒன்றை செயின்ட் கேதரீன் மடத்தில் இவர் கண்டுபிடித்தார். இது கோடெக்ஸ் சைனய்டிகஸ் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது. கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பின் எபிரெய வேதாகமத்தின் பெரும்பகுதியும் கிரேக்க வேதாகமம் முழுவதும் இதில் அடங்கியிருக்கிறது. கிரேக்க வேதாகமத்தின் மிகப் பழமையான பிரதிகளுள் இதுவும் ஒன்று.
“ஈடிணையற்ற மணிக்கல்” என்று டிஷ்யென்டார்ஃப் இதனை அழைத்தார். இதை பிரசுரிக்கவும் விரும்பினார். கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் கார்டியனான ரஷ்ய ஜாரிடம் இப்பிரதியைக் கொடுக்கவேண்டும்; அப்போதுதான் அவர் தன்னுடைய செல்வாக்கை மடத்துக்கு சாதகமாக பயன்படுத்துவார் என்பதை தான் முன்பே துறவிகளிடம் பரிந்துரைத்ததாக டிஷ்யென்டார்ஃப் கூறுகிறார்.
டிஷ்யென்டார்ஃப்பினுடைய ஒரு கடிதத்தின் மொழிபெயர்ப்பே மடத்தின் சுவரில் காட்சிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. அதில், ‘சீனாய் மலையின் பரிசுத்தக்குழு கேட்டால் உடனே சேதமடையாத, நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் அதைத் திருப்பித் தருவதாக’ எழுதப்பட்டிருந்தது. இருப்பினும், அந்தப் பிரதியின் மதிப்பையோ அல்லது அதை பிரசுரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையோ துறவிகள் புரிந்துகொள்ளவில்லை என டிஷ்யென்டார்ஃப் எண்ணினார். அதனால், அதை செயின்ட் கேதரீனுக்கு அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. அப்பிரதிக்காக ரஷ்ய அரசாங்கத்திடம் இருந்து 7,000 ரூபிள்களை துறவிகள் ஏற்றுக்கொண்டனர். என்றாலும் இந்நாள்வரையாக, அவர்களது புதையல்களை ஆராய்வதற்காக நிபுணர்கள் எடுக்கும் எந்தவொரு முயற்சியையுமே அவர்கள் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கின்றனர். கோடெக்ஸ் சைனய்டிகஸ் கடைசியில் எப்படியோ பிரிட்டிஷ் மியூஸியத்தைப் போய் சேர்ந்தது. இன்று, அதை அங்கே பார்க்கலாம்.
1975-ல், 47 பெட்டிகள் நிறைய விக்கிரகங்களும் தோல்சுருள்களும் செயின்ட் கேதரீன் மடத்தின் வடக்கு சுவருக்கு கீழே கண்டுபிடிக்கப்பட்டது. கோடெக்ஸ் சைனய்டிகஸில் இருந்து காணாமற்போன ஏராளமான ஏடுகள் இவற்றில் உள்ளன. இதுவரை, இந்த ஏடுகளை நிபுணர்களின் ஒரு சிறு குழுவினரைத்தவிர வேறு யாரும் பார்ப்பதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை.
[பக்கம் 17-ன் வரைப்படம்]
சீனாய் மலை
[படத்திற்கான நன்றி]
NASA photo
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 16, 17-ன் படம்]
எர்-ரெஹா சமநிலமும் ராஸ் ஸாஃப்ஸேஃபா
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 18-ன் படம்]
ஜெபல் மூசாவும் செயின்ட் கேதரீன் மடமும்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
Photograph taken by courtesy of the British Museum