உங்கள் மூளை—நன்கு உபயோகிப்பது எப்படி?
இந்த வார்த்தைகளை நீங்கள் வாசிக்கும்போது முதன் முதலில் நீங்கள் அ, ஆ, இ, ஈ வாசிக்கக் கற்றுக்கொள்ளும்போது சேர்த்துவைக்கப்பட்ட அதே நினைவாற்றல்களை உங்கள் மூளை மீண்டும் தூண்டி இயக்குகிறது. நீங்கள் கற்கும் தகவல்களை அறிவுப்பூர்வமாக யோசித்து பார்க்க வேண்டுமென்றால் உங்கள் மூளையின் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மூளையில் உள்ள நியூரான்களின் இணைப்புகள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கின்றன என்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த இணைப்புகளை பலப்படுத்தாமலிருந்தாலோ அல்லது புதுப்பிக்காமலிருந்தாலோ நியூரான்கள் இறந்துவிடுகின்றன. சமீபத்தில் வெளிவந்த அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டது: “தொடர்ந்து உபயோகித்துக்கொண்டே இருந்தால்தான் மூளை ‘சூப்பராக’ செயல்படும். தங்களுடைய மூளை எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறதோ என்று கவலைப்படுபவர்களுக்கு அல்லது தங்களுடைய மூளையை நல்ல முறையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு இதோ மிகச்சிறந்த அறிவுரை: அறிவுஜீவியாக திகழ அறிவாற்றல் சார்ந்த பல்வகையான ஊட்டச்சத்தும் ஏராளமான மனப்பயிற்சியும் மூளைக்கு அளிக்க வேண்டும்.”
மனப்பயிற்சி அவசியம்
‘ஏராளமான மனப்பயிற்சியின்’ அவசியத்தை புரிந்துகொள்வதற்கு விஞ்ஞானிகள் குழந்தைகளை வைத்து செய்த ஆய்வை சற்றே கவனிக்கலாம். பிறக்கும்போது குழந்தைகள் பொதுவாக குருடாய் இருப்பதில்லை. அவர்கள் பார்க்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். ஆரம்பத்தில் தங்களுக்கு அருகே இருக்கும் பொருட்களை மட்டுமே அவர்களால் பார்க்க முடியும். போகப்போக, அவர்களுடைய கண்கள் பார்க்கும் பொருட்களின் பிம்பத்தில் வித்தியாசத்தை பகுத்து உணர கற்றுக்கொள்ளும்போது அவர்களால் மூன்று டைமென்ஷனில் பார்க்கும் திறமையை வளர்த்துக்கொள்ள முடிகிறது. இந்த வளர்ச்சி நடக்கும் சமயத்தில் பிள்ளையின் ஒரு கண்ணில் பேண்டேஜ் கட்டப்பட்டிருந்தால் வளர்ந்த பிறகும் அந்தப் பிள்ளையின் ஒரு கண்ணில் பார்வை அவ்வளவு நன்றாகத் தெரியாது. ஏன்? காரணம் மற்றொரு கண்ணிலிருந்து வந்த தகவல்கள் மூளையில் விஷுவல் கார்டெக்ஸ் என்ற பார்வைக்கான பகுதியை ஆக்கிரமித்துக்கொள்ளும்.
குழந்தையின் ஆர்வத்தைத் தூண்டும் பொம்மைகள் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மூளையைத் தயார்படுத்தும்.
மொழி, சமுதாயத்தில் ஒத்துப்போவதற்கான திறமைகள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள இசை உதவும் என்பதாக சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. அதிக இசைப் பயிற்சி பெற்ற பிள்ளைகள் இசைப் பயிற்சி பெறாத பிள்ளைகளைவிட மொழியை சுலபமாகக் கற்றுக்கொண்டனர், வாசிப்பதிலும் கெட்டிக்காரர்கள் ஆயினர். மற்றவர்களோடு சேர்ந்து இசைக் கருவிகளை இசைக்க கற்றுக்கொண்ட பிள்ளைகள் ஒருவரோடொருவர் நன்கு ஒத்துழைத்தனர்.
மூளை இடது, வலது என்று இரண்டு பாகமாக பிரிந்திருப்பது உண்மைதான், என்றாலும் இரண்டு பாகங்களும் முக்கியமான பணிகளை நிறைவேற்றுகின்றன. வலது பாகம், சாதாரணமாக உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும் இன்னிசையை உணரவும் பயன்படுகிறது. ஆனாலும் இரண்டு பாகங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. ஓர் ஆய்வின்படி இசைக் கல்லூரியில் மாணவர்கள் தங்களுடைய படிப்பை ஆரம்பித்த சமயத்தில் இசையைக் கேட்டபோது அவர்களது வலது மூளைதான் தூண்டுவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இசையமைப்பதைப் பற்றியும் இசையைப் பற்றியும் ஏட்டறிவைப் பெற்ற பிறகு அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்து தகவலைத் தொகுக்க அவர்களுக்கு உதவியது இடது மூளைதான். இதன் காரணமாக, மூளை முழுவதையும் தூண்டுவிக்க மனப்பயிற்சி அவசியம் என்பது தெளிவாகிறது; இதனால் மூளையின் பகுத்தாராயும் பகுதியும் உணர்ச்சிப் பகுதியும் தூண்டுவிக்கப்பட வேண்டும்.
“அறிவாற்றல் சார்ந்த பல்வகையான ஊட்டச்சத்து”
அநேக மக்கள், தங்கள் குடும்பம் காலகாலமாக பின்பற்றிய மதத்தின் கோட்பாடுகளை கற்றிருக்கின்றனர். ஆனால் காலம் போகப்போக இந்த மத போதகங்களை தாங்களே ஆய்வு செய்கையில் அவை முன்னுக்குப்பின் முரண்படுவதையும் உண்மையான நோக்கம் ஏதுமின்றி இருப்பதையும் அறிந்தனர். இதுவே சிலரை, தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கும், எதிர்காலத்தைப் பற்றிய உறுதியான நம்பிக்கையளிக்கும் போதனைகளைத் தேடத் தூண்டியது.
ஜீன் என்ற பெண் பின்வருமாறு கூறுகிறாள்: “நான் டீன் ஏஜில் காலடியெடுத்து வைச்ச அந்த சமயத்திலிருந்தே பிரச்சினைகளும் வேதனைகளும் கணக்குவழக்கில்லாம தலைதூக்க ஆரம்பிச்சுடுச்சு. அப்ப நான் சர்ச் ஆஃப் இங்லண்டுக்கு போயிட்டு இருந்தேன்; அங்கே எனக்கு சரியான வழிநடத்துதலும் கெடைக்கல, என் மனசுக்கு சமாதானமும் இல்ல. நரக அக்கினி, செத்தவங்களோட நிலை போன்ற சர்ச்சில் சொல்லிக்கொடுத்த அநேக போதனைகள் எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்ல. இதனால, கடவுள்தான் என்னை தண்டிக்கிறதா எங்க பாதிரியாரெல்லாம் சொன்னாங்க.
“இந்த சமயத்தில நான் சர்ச் ஆஃப் இங்லண்டை விட்டு விலகணுன்னு முடிவு செஞ்சேன். பின்னர் மத நம்பிக்கை இல்லாத ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். இதன் பிறகு அவரால வீட்டில் ஏகப்பட்ட வன்முறை ஆரம்பமானது; நான் நொந்துபோயிட்டேன்.” பிறகு ஜீன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாள். அதற்கு முன் கடைசியாக கடவுளிடம் ஒரு ஜெபம் செய்தாள். அதே நிமிஷம் அவளது வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது இரண்டு பெண்கள் நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள்; அவர்கள் யெகோவாவின் சாட்சிகள். வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது என்பதைப் பற்றி பேசி, அவர்களுக்கு உதவும் விதத்தில் சில பைபிள் பிரசுரங்களை படிப்பதற்காகவும் கொடுத்துவிட்டுச் சென்றனர்.
ஜீன் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறார்கள்: “அவங்க போனதுதான் தாமதம் உடனே அந்தப் புஸ்தகத்தை படிக்க ஆரம்பிச்சேன். இத்தன நாளா என்னோட கண்ணை மறச்சிக்கிட்டிருந்த ஒரு முக்காடு விலகி என்னால எல்லாத்தையும் தெளிவா பாக்க முடிவது போல தோணிச்சு. படிக்கப் படிக்க இது தான் சத்தியம்னு ஊர்ஜிதமாகிட்டே இருந்தது.” ஆம் ஜீனுடைய மனதை ஆரோக்கியமாக வைப்பதற்கு தேவையான ‘ஊட்டச்சத்து’ கிடைத்துவிட்டது.
பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகள் பகுத்துணர்வையும் கடவுளைப் பற்றிய ஞானத்தின் மதிப்பையும் உயர்த்திக் காண்பிக்கிறது. ஆனால் இவற்றை கண்டடைவதற்கு தனிப்பட்ட முயற்சியும் கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஒன்றுக்குள் ஒன்று என்பதுபோல் அவசியம் தேவை. ஆகவே ஒரு பெரிய சவாலை சந்திக்க தயாராகும் விதத்தில் நீதிமொழிகள் இரண்டாம் அதிகாரம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும் பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் [“யெகோவாவுக்கு,” NW] பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். கர்த்தர் [“யெகோவா,” NW] ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.”—நீதிமொழிகள் 2:1-6.
பைபிளைப் பற்றி, கல்வியாளர் வில்லியம் லையான் ஃபெல்ப்ஸ் இவ்வாறு எழுதினார்: “பைபிளை திருத்தமாக அறிந்திருக்கும் ஒருவரை கரைகண்ட கல்விமான் என்று குறிப்பிடுவது சாலப் பொருந்தும்.” உங்கள் நகரத்தில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளோடு அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரியோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் கேள்விகளுக்கு பைபிள் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதையும் உங்கள் மனம் மிகச்சிறந்த முறையில் தூண்டப்பட ஏராளமான, நம்பத்தகுந்த தகவலை அது கொடுக்கிறது என்பதையும் நீங்கள் கண்டுபிடிக்க அவர்கள் சந்தோஷமாக உதவுவார்கள். ஒன்றுக்கொன்று தொடர்புள்ள பைபிள் சத்தியத்தின் தகவல்களை புரிந்துகொள்ள உங்களது மூளையின் யோசிக்கும் திறமையை உபயோகியுங்கள். உங்களது மூளையை இவ்வாறு மிகச்சிறந்த முறையில் உபயோகித்தால் நீங்கள் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கான வழியை அது திறந்து வைக்கலாம்.