எங்கே அந்தப் புராண வின்லேண்ட்?
கனடாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
இயற்கையாகவே விதைக்கப்பட்ட பொன்னிற கோதுமை, வஞ்சிர மீன்கள் துள்ளி விளையாடும் ஓடைகள், “புளிப்பான செந்நிற சிறுகொட்டை” தரும் காட்டுச் செடிகள், உறைபனி இல்லாத பனிக்காலம் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டது அந்தத் தேசம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பூங்காவனம் என்றால் இதுதான். அஞ்சா நெஞ்சம் கொண்ட 36 ஆண்கள் இந்த தேசத்தில் பிரயாணம் செய்து பல தகவல்களை கொண்டு வந்தனர். இருபதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சிக்கு வித்திட்டவை இத்தகவல்களே. வட அமெரிக்காவில், ஐரோப்பியர்கள் முதன்முதலாக காலடி வைத்ததாக நம்பப்படுகிற இந்த இடத்தில்தான் அந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
பொ.ச. சுமார் 990-1000-க்கு இடைப்பட்ட காலத்தில், ஸ்காண்டினேவிய கடற்கொள்ளை வீரர் லேவ் எரிக்சன் என்பவரும் அவருடைய ஆட்களும் தங்களுடைய 2,000 கிலோமீட்டர் ஆய்வுப்பயணத்தை துவக்கினர். கிரீன்லாந்தின் மேற்குக் கரையோரமாக வடக்கு நோக்கியும், பின்னர் மேற்கிலும் பிரயாணம் செய்தனர். அப்போது, இரண்டு நிலப்பகுதிகளை எரிக்சன் கண்டார். அவற்றிற்கு, ஹெலுலாண் என்றும் மார்க்லாண் என்றும் பெயரிட்டார். இன்று அவை, பேஃபின் தீவு, லாப்ரடார் என்று அறியப்படுகின்றன. அவர்கள் மூன்றாவதாக கண்ட நிலப்பகுதிதான் பெரும் புதிராகியது. அந்தப் புராண வின்லேண்ட் எங்கே?
1959-ல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஹெல்கே இங்ஸ்டாவும் அவருடைய துணைவி ஆன் ஸ்டீன் இங்ஸ்டாவும் தங்கள் ஆராய்ச்சியைத் துவக்கினர். ஐஸ்லாந்திய வீர காவியம் என்றழைக்கப்பட்ட, நார்வே நாட்டினரின் பழங்காலப் பதிவுகளே அவர்களிடம் இருந்த ஒரே தடயம். உண்மையும் கட்டுக்கதைகளும் பின்னிப்பிணைந்தது அது. வட அமெரிக்காவின் கிழக்கு கரைநெடுக, கடல், நிலம், ஆகாய மார்க்கமாய் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பிரயாணத்தை இது உட்படுத்தியது. கடைசியாக, நியூஃபௌண்ட்லாந்து தீபகற்பத்தின் வடக்கில் உள்ள சிறிய, லான்ஸ் ஓ மெடோ சமுதாயத்தினரை எதிர்பாராதவிதமாக சந்தித்தபோதுதான் அவர்களுடைய பிரயாணத்தின் முழு பலனை அடைந்தனர். ஜார்ஜ் டெக்கர் என்ற பெயருடைய உள்ளூர்வாசி, புதர்களுக்கிடையே பாழடைந்த வீடுகள் போல் காட்சியளித்த ஓர் இடத்திற்கு அவர்களை கூட்டிச் சென்றார்.
ஏழு வருடங்களாக நடந்த தொல்பொருள் ஆராய்ச்சி, அந்த இடத்தின் சரித்திரத்தை உறுதிப்படுத்தியதோடு முழு உலகின் கவனத்தையும் ஈர்த்தது. எட்டு மண்கட்டிடங்களையும் உடையை இணைக்க உபயோகிக்கும் வெண்கல குண்டூசி ஒன்றையும் இங்ஸ்டா தம்பதியினர் கண்டெடுத்தது குறிப்பிடத்தக்கது. இவை கடற்கொள்ளையருக்கு சொந்தம் என்பதற்கான நிரூபணமளித்தன. இந்தக் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமான ஒன்று, இரும்பை உருக்க பயன்படுத்திய ஒரு சிறிய சூளை. அதில் மீதமிருந்த உலோகக் கசடு, மேற்கு அரைக்கோளத்தில் எரிக்சன் காலடி பதித்ததாக பழங்காலப் பதிவுகளில் குறிக்கப்பட்டிருக்கும் காலத்திற்குரியதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கையிருப்பில் இருக்கும் நிரூபணங்கள் எல்லாம், கடற்கொள்ளையர் வட அமெரிக்காவில் இருந்ததை உறுதிப்படுத்துவதுபோல் தோன்றின.
இப்போது லான்ஸ் ஓ மெடோ என்று நாம் அறிந்திருக்கிற இந்த இடம், வின்லேண்ட்டைப் பற்றி புராணக்கதைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரிப்புகளுக்கு சற்றும் பொருந்தவில்லை. அந்தத் தேசம் இருந்த இடத்தை நம்மால் ஒருபோதும் சரியாக சுட்டிக்காட்ட முடியாது என்றே தோன்றுகிறது. வட அமெரிக்காவில் முதன்முதலாக காலெடுத்து வைத்தது இந்தக் கடற்கொள்ளையராக ஒருவேளை இல்லாதிருக்கலாம். இருந்தபோதிலும், கொலம்பஸ் செல்வதற்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வந்தனர்.
இன்று நீங்கள் அந்த இடத்திற்கு சென்றால், கடற்கொள்ளையரின் வாழ்க்கை முறையைப் பற்றியும் அறிந்துகொண்டு வரலாம். மறுபடியும் கட்டப்பட்ட மண் வீடுகளையும் எரிக்சன் வீர காவியம் படைத்த கடற்கொள்ளையர் கப்பலின் மாதிரி உருவத்தையும் நீங்கள் பார்க்கலாம். அந்த காலத்திற்குரிய உடைகளில் இருக்கும் வழிகாட்டிகளையும் பார்க்கலாம். இது, ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி உங்களைக் கொண்டு செல்லும். நீங்களே ஒரு கடற்கொள்ளையராக வாழ்வதாக கற்பனை செய்து பார்க்கவும் உங்களுக்கு இது உதவும்.
[பக்கம் 12-ன் வரைப்படம்]
(For fully formatted text, see publication)
கிரீன்லாந்து
பேஃபின் தீவு
லாப்ரடார்
லான்ஸ் ஓ மெடோ
நியூபௌண்ட்லாந்து
[பக்கம் 12-ன் படம்]
“க்னார்” என்ற கடற்கொள்ளை வியாபார கப்பலின் 54 அடி நீளமான நகல், “ஸ்னாரி”
[படத்திற்கான நன்றி]
Nordfoto/Carl D. Walsh
[பக்கம் 13-ன் படம்]
மறுபடியும் கட்டப்பட்ட மண் வீடுகள், லான்ஸ் ஓ மெடோ
[படத்திற்கான நன்றி]
L’Anse aux Meadows National Historic Site/UNESCO World Heritage Site
[பக்கம் 13-ன் படம்]
லேவ் எரிக்சன்