நலமுடன் நீடூழி வாழ்தல்?
மனித வாழ்க்கையே நீண்ட தூர தடை ஒட்டம் என்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். தடைச்சட்டங்களைத் தாவிக் குதித்து ஓடும் பந்தயமிது. போட்டியில் கலந்து கொள்ளும் ஓட்டக்காரர்கள் எல்லாரும் ஒரே சமயத்தில்தான் ஓட்டத்தை துவங்குகின்றனர். ஆனால், அப்படித் தாவிக் குதித்து ஓடும்போது, சில சமயத்தில் தடைச்சட்டங்களில் இடறி, சிலர் வேகத்தை இழந்துவிடுவர், பலர் ஓட்டத்தில் இருந்தே விலகி விடுவர்.
அதைப் போலவே, மனித வாழ்க்கை ஓட்டத்திலும் ஆரம்பிக்கும் ஓர் இடமும் வழி நெடுக உயரமான தடைச்சட்டங்களும் இருக்கின்றன. மனிதன் தன் வாழ்க்கையினூடே ஒன்றன்பின் ஒன்றாக பல தடைகளை எதிர்ப்படுகிறான். ஒவ்வொரு தடையையும் தாவிக் குதிக்கும்போதும், அவன் வலிமை குன்றிப் போகிறான். காலப்போக்கில், தளர்ந்து விடுகிறான். எவ்வளவுக்கெவ்வளவு தடைகள் உயரமாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு விரைவில் வாழ்க்கைப் பந்தயத்தில் இருந்து விலகி விடுகிறான் அல்லது இறந்து விடுகிறான். வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒருவர் வாழ்கிறார் என்றால், பந்தயத்திலிருந்து விலகிச் செல்லும் நேரம் சுமார் 75 வயதில் வருகிறது. இதுவே, ஓட்டக்காரர்களில் பெரும்பாலானோர், வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடும் தூரம். இந்த வயதே, மனிதனின் சராசரி வயது. a (சங்கீதம் 90:10-ஐ ஒப்பிடுக.) என்றபோதிலும், சிலர் வெகு தூரம் ஓடுகின்றனர். மேலும் ஒருசிலர் அதிகபட்ச வயதென சொல்லப்படும் சுமார் 115 முதல் 120 வயதை எட்டிப் பிடிக்கின்றனர். உலகச் செய்திகளில் தலைப்புச் செய்தியாக இடம்பெறும் அரும்பெரும் சாதனை இது.
தடைகளை அடையாளங் கண்டுகொள்ளுதல்
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்ததைவிட, இப்போது மக்கள் வாழ்க்கைப் பந்தயத்தில் இருமடங்கு அதிக காலம் இருக்க முடிகிறது. ஏன்? ஏனென்றால், மனிதன் வாழ்க்கை ஓட்டப் பந்தயத்தில் தடைகளின் உயரத்தை குறைத்துக் கொள்ள முடிந்ததே இதற்குக் காரணம். இந்தத் தடைகள் என்ன? அவற்றை இன்னும் குறைக்க முடியுமா?
மனிதனின் ஆயுட்காலத்தை குறைக்கும் முக்கியமான தடைகளில் அல்லது காரணங்களில் சில, அவர்களுடைய பழக்க வழக்கங்கள், சுற்றுப்புறச் சூழல், மருத்துவ வசதி போன்றவையே என சர்வதேச சுகாதார அமைப்பைச் (WHO) சேர்ந்த பொது சுகாதார நிபுணர் ஒருவர் விவரிக்கிறார். b எனவே, எந்தளவு நல்ல பழக்க வழக்கங்கள், சுகாதாரமான சுற்றுப்புறம், சிறப்பான மருத்துவ வசதி உடையவர்களாய் இருக்கிறீர்களோ அந்தளவு தடைகளை குறைத்து, நீண்ட காலம் நீங்கள் வாழலாம். மக்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலைகளும் வித்தியாசப்படுகின்றன. எனவே, தனிப்பட்ட ஒவ்வொருவரும்—சிட்னியில் இருக்கும் வங்கி இயக்குநர் முதல் சாவோ போலோவில் இருக்கும் தெரு வியாபாரி வரை எல்லாரும்—தங்களுடைய வாழ்க்கையில் எதிர்ப்படும் தடைகளைக் குறைக்க ஏதாவது செய்ய முடியும். எப்படி?
உங்கள் வாழ்க்கைப் பாதையை பாதிக்கும் பழக்க வழக்கங்கள்
“நல்ல, ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை உடையவர்கள் நெடுநாட்கள் வாழ்கின்றனர். அதோடு, இவர்களது வாழ்க்கையில் வயோதிபத்தால் ஏற்படும் இயலாமையை தள்ளிப்போடுகின்றனர். அதனால் கொஞ்ச காலத்திற்கு மட்டுமே வயோதிபத்தின் இயலாமை அவர்களை தாக்குகிறது” என தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற பத்திரிகை அறிவிக்கிறது. உணவு, குடிப் பழக்கம், தூக்கம், புகைப்பிடித்தல், உடற்பயிற்சி போன்றவற்றில் மாற்றங்களைச் செய்வதால் முதல் தடையின் உயரத்தை குறைக்க முடியும். உதாரணமாக, உடற்பயிற்சி குறித்து சற்று சிந்திப்போம்.
உடற்பயிற்சி பழக்க வழக்கங்கள். மிதமான உடற்பயிற்சி மிக மிக நல்லது. (“எப்படிப்பட்ட உடற்பயிற்சி எந்தளவு?” என்ற தலைப்பிட்ட பெட்டியைக் காண்க) ‘படு வயோதிபர்கள்’ உட்பட, வயதானவர்கள் வீட்டிற்குள்ளேயும் வீட்டைச் சுற்றியும் செய்யும் எளிய உடற்பயிற்சிகள், பலத்தையும் ஆற்றலையும் திரும்பப் பெற உதவும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக, 72 முதல் 98 வயதுடைய வயோதிபர்களின் ஒரு குழு, பளு தூக்கும் உடற்பயிற்சிகள் சிலவற்றை வெறுமனே பத்து வாரங்களுக்கு செய்த பிறகு, வேகமாக நடக்கவும் படிகளில் சுலபமாக ஏறவும் முடிந்தது. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை! இந்த உடற்பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டவர்களுடைய தசை பலம் இருமடங்கு அதிகரித்திருப்பதாக, இந்தத் திட்டத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனைகள் காட்டுகின்றன. 70 வயது நிரம்பிய, பெரும்பாலும் உட்கார்ந்தே இருக்கும் பெண்களின் மற்றொரு குழு, வாரத்திற்கு இருமுறை உடற்பயிற்சி செய்தனர். ஒரு வருடத்திற்கு பிறகு, பலம், நிதானம், தசைத்திரட்சி, எலும்பு பருமன் ஆகியவை இவர்களுக்கு அதிகரித்திருந்தன. “நாங்கள் இந்த உடற்பயிற்சி திட்டத்தை ஆரம்பிக்கும்போது, எங்கள் தசைநார்களையும், தசை இழைகளையும், தசைகளையும் கிழித்துக் கொள்வோம் என்றே பயந்தோம்” என இந்த ஆய்வுகளை நடத்திய உடலியல் நிபுணர் மிரீயம் நெல்சன் சொல்கிறார். “ஆனால், அதற்கு பதிலாக, அந்தப் பெண்கள் பலமுள்ளவர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் ஆனார்கள்.”
வயோதிபம் அடையும்போது உடற்பயிற்சி செய்வது குறித்து மேற்கொள்ளப்பட்ட பல விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகளைப் பற்றி ஒரு புத்தகம் பின்வருமாறு சுருக்கமாக விவரிக்கிறது: “உடற்பயிற்சி, வயோதிபத்தை ஒத்திப் போடுகிறது, வாழ்நாளை நீடிக்கிறது, மரணத்துக்கு முன் மற்றவர்களால் பராமரிக்கப்பட வேண்டிய காலப்பகுதியைக் குறைக்கிறது.”
மனப்பயிற்சி பழக்க வழக்கங்கள். “உபயோகப்படுத்துங்கள், இல்லையென்றால் இழந்து விடுவீர்கள்” என்ற முதுமொழி, தசைகளுக்கு மட்டுமல்ல மூளையின் இயக்கத்திற்கும் பொருந்தும். வயோதிபம் என்றாலே ஞாபக மறதி இல்லாதிருக்காது என்றாலும், வயதானவர்களின் மூளை, வயோதிபத்தின் சவால்களை எதிர்ப்படுவதற்கு, வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாகவே இருக்கிறதென ஐக்கிய மாகாணங்களின் வயோதிபர்கள் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, “வயோதிபர்கள், வளமுள்ள, ஆரோக்கியமான மனதைத் தொடர்ந்து கொண்டிருக்க முடியும்” என நரம்பியல் பேராசிரியர் டாக்டர். அன்டோனியோ ஆர். டாமாஸ்யோ குறிப்பிடுகிறார். வயதானவர்களுடைய மூளைகளும் இப்படி வளைந்து கொடுக்கும் தன்மையோடு இருப்பதற்கு காரணம் என்ன?
10,000 கோடி உயிரணுக்கள் அல்லது நியூரான்களையும் ஒன்றிற்கொன்று பல லட்சம் கோடி இணைப்புகளையும் உடையது மூளை. இந்த இணைப்புகள், தொலைபேசி இணைப்புகளைப் போலவே இயங்குகின்றன. நியூரான்கள் ஒன்றோடொன்று “பேசிக்” கொள்ளவும், அதனால் அவை செய்யும் காரியங்களில் ஒன்றாக ஞாபக சக்தியையும் ஏற்படுத்த இவை உதவுகின்றன. மூளைக்கு வயதாகும்போது, நியூரான்கள் சாகின்றன. (“மூளை உயிரணுக்கள்—புதிய கண்ணோட்டத்தில்” என்ற தலைப்பிட்ட பெட்டியைக் காண்க) இருந்தாலும், இந்த இழப்பை வயதான மூளையால் சரிகட்ட முடிகிறது. எப்போது ஒரு நியூரான் சாகிறதோ, அப்போதெல்லாம் அதனுடைய அண்டை நியூரான் மற்ற நியூரான்களோடு புதிய இணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, செத்த நியூரானுடைய வேலைப்பளுவை ஏற்றுக் கொள்கின்றன. இந்த வகையில், வேலைப்பளுவை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு மூளை மாற்றுகிறது. எனவே, அநேக வயோதிபர்கள், இளைஞர்களைப் போலவே அதே அளவு மூளையை உபயோகிக்கின்றனர். ஆனால், மூளையின் பல்வேறு பாகங்களை பயன்படுத்தி இதைச் சாதிக்கின்றனர். சொல்லப் போனால், ஒரு வயதான டென்னிஸ் ஆட்டக்காரரைப் போலவே, வயதான மூளையும் வேலை செய்கிறது. வயதான ஆட்டக்காரர் குறைந்து போன தன்னுடைய வேகத்தை ஈடுகட்ட, தன்னுடைய அனுபவத்தால் வந்த திறமையை பயன்படுத்துகிறார். இந்தத் திறமையில்தான் இளைஞர்கள் குறைவுபடுகின்றனர். இளைஞர்களுடைய ஆட்ட நுணுக்கங்களில் இருந்து வித்தியாசமான முறைகளைக் கையாண்டாலும், வயதான ஆட்டக்காரர்கள் விளையாட்டில் வெற்றிப்புள்ளிகளை எடுப்பதில் சளைத்தவர்கள் அல்ல.
வெற்றிப்புள்ளிகளை எடுக்க வயதானவர்கள் என்ன செய்யலாம்? வயோதிபம் குறித்து ஆய்வு நடத்தும் ஆராய்ச்சியாளர் டாக்டர். மெரிலின் ஆல்பர்ட், 70 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள் 1,000-க்கும் அதிகமானோரை ஆய்வு செய்தார். வயதானவர்கள், தங்களுடைய புத்தி மழுங்கி விடாமல் கூர்மையாக வைத்திருக்க உதவும் அம்சங்களுள் ஒன்று மனப்பயிற்சியாகும் என அவர் கண்டார். (“இசைந்து கொடுக்கும் மனதைக் கொண்டிருத்தல்” என்ற தலைப்பிட்ட பெட்டியைக் காண்க.) மூளையின் ‘தொலைபேசி இணைப்புகளை’ உயிர்த்துடிப்போடு வைத்திருப்பது மனப்பயிற்சியே. அதற்கு மாறாக, “மக்கள் ஓய்வு பெற்றதும், எந்த வேலையுமே செய்யாமல் சோம்பலாக நேரத்தைக் கழிக்கவும், வெளி உலகத்தோடு தங்களுக்கு எந்தவிதத் தொடர்புமே இல்லாததுபோல் இருக்க தீர்மானிக்கும்போதுதான்” மன ஆரோக்கியம் குறைய ஆரம்பிக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்—இன்ஸைட் தி ப்ரெய்ன்.
“நம் சக்திக்குட்பட்ட அல்லது நாம் மாற்றியமைக்கக்கூடிய அம்சங்கள், வயோதிபத்தை வெற்றிகரமாக சமாளிக்கும் நம் திறமையை அதிகரிக்கும்” என்பதே நற்செய்தி என வயோதிபத்தைப் பற்றி ஆய்வு செய்யும் டாக்டர். ஜேக் ரோ விளக்குகிறார். மேலும், நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதற்கு காலம் ஒரு தடையல்ல. “உங்களுடைய வாழ்க்கையின் பெரும்பகுதி கெட்ட பழக்க வழக்கங்களில் நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்து, பிற்காலத்தில் அவற்றை நீங்கள் மாற்றிக் கொண்டாலும்கூட, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றியதன் பலன்களில் சிலவற்றையாவது பெறுவீர்கள்” என ஓர் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சுற்றுப்புறச் சூழல்
இன்று லண்டனில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையை, இடைநிலைக் காலத்தில் இருந்த லண்டனுக்கே மாற்றினால், அந்தப் பிள்ளையின் ஆயுட்காலம் இன்று இருப்பதில் பாதிதான் இருந்திருக்கும். இந்த வித்தியாசம், திடீரென நிகழ்ந்த இட மாற்றத்தால் ஏற்பட்டதல்ல. ஆனால், இன்னும் இரண்டு தடைகளின் உயரம் திடீரென அதிகரித்ததால் விளைந்ததே. ஒன்று, சுற்றுப்புறச் சூழல். மற்றொன்று, மருத்துவ வசதி. முதலில் சுற்றுச் சூழலைப் பற்றி சிந்திப்போம்.
சுத்தமான சுற்றுப்புறம். கடந்த காலங்களில், உடல்ரீதியான சுற்றுச்சூழல்—உதாரணமாக, ஒரு மனிதனுடைய வீடு—ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பெரிய ஆபத்து. ஆனால், சமீப ஆண்டுகளில், இந்த ஆபத்து குறைக்கப்பட்டிருக்கிறது. சாக்கடை கழிவுநீக்க வசதிகள், சுத்தமான நீர், வீட்டில் ஈ, கொசு தொல்லையைக் குறைத்தல் ஆகியவை மனிதனின் சுற்றுப்புறத்தை முன்னேற்றுவித்து இருக்கின்றன. அவனுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவன் வாழ்நாளை நீடித்திருக்கின்றன. அதன் காரணமாக, உலகின் பல்வேறு பாகங்களில், மனிதனின் ஆயுட்காலம் நீடித்திருக்கிறது. c இருந்தாலும், இந்தத் தடையின் உயரத்தை குறைப்பதென்பது, வீட்டிற்குள் குழாய்களையும் கழிவு நீர் போவதற்கான வசதிகளை பொருத்துவதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. நன்மை அளிக்கும் சமுதாய, மத சுற்றுச்சூழலை காத்துக் கொள்வதையும் அது குறிக்கிறது.
சமுதாய சூழல். உங்களோடு வாழ்பவர்கள், வேலை செய்பவர்கள், சாப்பிடுபவர்கள், வணக்கத்தில் ஈடுபடுபவர்கள், விளையாட்டுகளில் கலந்து கொள்பவர்கள் எல்லாரையும் உங்கள் சமுதாய சூழல் உள்ளடக்குகிறது. உங்களுக்கு சுத்தமான நீர் கிடைக்கிறதென்றால், உங்களுடைய வீட்டைச் சுற்றியிருக்கும் சுற்றுப்புறம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதற்கு அடையாளம். அதைப் போலவே, முக்கியமான ஓர் அம்சத்தை குறிப்பிட வேண்டுமெனில், நம்பத்தகுந்த நண்பர்களை உடையவர்களாய் இருப்பது, உங்கள் சமுதாய சூழலை முன்னேற்றுவிக்கும். உங்கள் சந்தோஷங்களையும் துக்கங்களையும், கனவுகளையும் ஏமாற்றங்களையும் பகிர்ந்து கொள்ள நம்பத்தகுந்த கூட்டாளிகளைக் கொண்டிருப்பது, உங்கள் சுற்றுச்சூழலில் உள்ள தடைகளின் உயரத்தை குறைத்து, நீண்ட நாட்கள் வாழ உங்களுக்கு உதவும்.
இருந்தபோதிலும், இதற்கு எதிர்மாறான நிலையும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நல்ல நண்பர்கள் இல்லாதிருப்பது, தனிமையையும் சமுதாயத்தைப் பொருத்தமட்டில் மரித்த நிலையையே ஏற்படுத்துகிறது. உங்களைச் சுற்றி இருக்கும் ஆட்களிடம் இருந்து, பரிவான சொற்களே கிடைக்கவில்லை என்றால், நீங்கள் தளர்ந்து போவீர்கள். முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒரு மூதாட்டி, தனக்கு பரிச்சயமான ஒருவருக்கு பின்வருமாறு எழுதினார்: “எனக்கு 82 வயசாகுது. 16 வருஷமா இந்த இல்லத்துலதான் இருக்கேன். என்னை இங்கே ரொம்ப நல்லா கவனிச்சுக்கறாங்க. ஆனா, சில சமயத்துல தனிமை என்ன ரொம்ப வாட்டியெடுக்குது.” வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில், மேற்கத்திய நாடுகளில் இருக்கும் பெரும்பாலான வயோதிபர்களின் நிலை, இந்த மூதாட்டியின் நிலையைப் போலத்தான் இருக்கிறது. வயோதிபர்களை போற்றி, பாராட்டும் சமுதாய சூழலுக்கு பதிலாக அவர்களை சகித்துக் கொள்ளும் சமுதாய சூழலில்தான் வாழ்கிறார்கள். இதன் காரணமாக, “வளர்ச்சியடைந்த நாடுகளில் இருக்கும் வயோதிபர்களின் நலனைத் தொடர்ந்து அச்சுறுத்தும் நிலைமைகளில் மிக முக்கியமான ஒன்று, தனிமையே” என வயோதிபம் பற்றிய சர்வதேச நிறுவனத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் காயெகா குறிப்பிடுகிறார்.
கட்டாய ஓய்வு, யார் உதவியுமின்றி தனியே நடமாடுவது குறைதல், நீண்டநாள் நண்பர்களை இழத்தல் அல்லது துணையின் மரணம் போன்ற தனிமைக்கு ஆளாக்கும் சந்தர்ப்பங்களை உங்களால் அறவே நீக்க முடியாது என்பது மெய்யே. ஆனால், இந்தத் தடைகளின் உயரத்தை ஓரளவுக்கு குறைக்க சில முயற்சிகளை நீங்கள் எடுக்க முடியும். முக்கியமாக, தனிமையாக உணர்வது வயோதிபத்தால் ஏற்படுவதல்ல என்பதை மனதில் வையுங்கள். சில இளைஞர்களும்கூட தனிமையாக உணர்கின்றனர். சமுதாயத்தால் தனிமைப்படுத்தப்பட்டதே பிரச்சினையின் காரணமேயன்றி வயதானது காரணமல்ல. தனிமையில் வழுவி விழுந்துவிடாதிருக்க எப்படி போராடலாம்?
“உங்களோடு இருப்பதை மற்றவர்கள் விரும்பும்படி செய்யுங்கள். எப்போது பார்த்தாலும் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் ஒருவரோடு கூட்டுறவு கொள்ள யாரும் விரும்பமாட்டார்கள். சந்தோஷமாக இருப்பதற்கு முயற்சி அவசியம். இது விடாமுயற்சியை தேவைப்படுத்துகிறது என்பது மெய்யே. ஆனால், நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பலன் கைமேல் கிட்டும். இரக்கம் இரக்கத்தை பிறப்பிக்கும். இளைஞராய் இருந்தாலும்சரி முதியோராய் இருந்தாலும்சரி, நான் சந்திக்கும் எல்லா ஆட்களிடமும் பேசுவதற்காக சில விஷயத்தை மனதில் வைத்திருப்பேன். இதற்காகவே, அன்றாட செய்திகளையும் தகவல் நிறைந்த பத்திரிகைகளையும் படிக்கிறேன்” என வயதான விதவை புத்தி சொல்கிறார்.
இதோ! மற்றும் சில ஆலோசனைகள்: மற்றவர்களுடைய விருப்பங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமுடன் இருங்கள். கேள்விகளைக் கேளுங்கள். முடிந்தவரை தாராளமாய் இருங்கள். பொருள்சம்பந்தமாக உங்களால் கொடுக்க முடியவில்லை என்றால், உங்களையே கொடுங்கள். கொடுப்பதிலேதான் அதிக மகிழ்ச்சி உண்டு. கடிதங்கள் எழுதுங்கள். ஓய்வாக நேரத்தைக் கழிக்க விருப்பவேலை ஏதாவது ஒன்றை செய்யுங்கள். மற்றவர்கள் உங்களை அவர்கள் வீடுகளுக்கு கூப்பிட்டாலோ அல்லது அவர்களோடே வெளியே எங்காவது செல்ல கூப்பிட்டாலோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டிற்கு வருபவர்களுக்கு உங்கள் வீட்டை சந்தோஷமான, இனிமையான இடமாக்குங்கள். உதவி தேவைப்படுகிறவர்களுக்கு நீங்களாகவே முன்வந்து உதவுங்கள்.
மத சூழல். வயோதிபர்கள், “வாழ்க்கையில் அர்த்தத்தையும் நோக்கத்தையும்” பெற மத நடவடிக்கைகள் உதவுவதாக பல சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதோடு, “சந்தோஷம்,” “பிரயோஜனமுள்ளவர்கள் என்ற உணர்வு,” “வாழ்க்கையில் பெரும் திருப்தி,” “நலமாய் இருக்கிறோம் என்ற உணர்வையும் சமுதாய உணர்வையும்” இது அளிக்கிறது. ஏன்? “வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்ள, விளக்க உதவும் நம்பிக்கைகளையும் மனப்பான்மைகளையும் மதிப்புகளையும், மத நம்பிக்கை அளிக்கிறது” என லேட்டர் லைஃப்—தி ரியலிடீஸ் ஆஃப் ஏஜிங் புத்தகம் விளக்குகிறது. மேலும், மத நடவடிக்கைகள், வயதான ஆட்களை மற்ற ஜனங்களோடு பழகுவதற்கான சந்தர்ப்பத்தைத் தருகிறது. இது, “தனிமையையும் சமுதாயத்தில் இருந்து தனித்து விடப்பட்ட நிலையையும் குறைக்கிறது.”
லூயிஸும் ஈவ்லினும் 80 வயது விதவைகள். இவர்கள் இருவருமே யெகோவாவின் சாட்சிகள். இவர்கள் பல ஆண்டுகளாக அறிந்திருக்கும் விஷயங்களைத்தான் இந்த ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. “எங்களுடைய ராஜ்ய மன்றத்தில், d இளைஞர் முதியோர் எல்லாரோடும் பேசுவதை நான் விரும்புகிறேன்” என லூயிஸ் சொல்கிறார். “கிறிஸ்தவ கூட்டங்கள் அறிவு புகட்டுபவை. கூட்டங்களுக்குப் பிறகு, ஒருவரோடு ஒருவர் நாங்கள் நன்றாக சிரித்து பேசுவோம். அது மிகவும் சந்தோஷமான நேரம்” என மேலும் தெரிவிக்கிறார். மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் ஈவ்லினும் பல நன்மைகளை பெறுகிறார். “பைபிளைப் பற்றி என்னுடைய அயலகத்தாரோடு பேசுவது, என் தனிமையை விரட்டி அடித்துவிடுகிறது. ஆனால், அதைவிட முக்கியமான காரணம், அதில்தான் என் சந்தோஷமே இருக்கிறது. வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது திருப்தி தரும் வேலை” என அவர் சொல்கிறார்.
லூயிஸூம் ஈவ்லினும் வாழ்க்கையில் நோக்கம் உடையவர்களாய் இருக்கின்றனர் என்பதில் சந்தேகமே இல்லை. இதனால் கிடைக்கும் திருப்தி, அந்த இரண்டாவது தடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. சுற்றுச்சூழல் என்ற இந்தத் தடையை குறைத்து, வாழ்க்கை எனும் ஓட்டப்பந்தயத்தில் தளராமல் ஓட அவர்களுக்கு உதவுகிறது.—ஒப்பிடுக சங்கீதம் 92:13, 14.
அதிக நிவாரணம் அளிக்கும் மலிவான மருத்துவ வசதி
இந்த நூற்றாண்டில் மருத்துவ விஞ்ஞானம் அடைந்துள்ள வளர்ச்சி, மருத்துவ வசதி இல்லாமை என்னும் மூன்றாவது உயர்ந்த தடையின் அளவை பெரிதும் குறைத்திருக்கிறது. ஆனால், உலகம் முழுவதிலும் அல்ல. சில ஏழை நாடுகளில், “1975-1995 வரையான காலப்பகுதியில், மனிதனின் ஆயுட்காலம் குறைந்திருக்கிறது” என உலக சுகாதார அறிக்கை 1998 (ஆங்கிலம்) சுட்டிக்காட்டுகிறது. “நலிவுற்ற நாடுகளில், 50 வயதை தொடுவதற்கு முன்னரே நால்வரில் மூவர் இன்று இறக்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த மனித ஆயுட்காலம் இது” என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை-இயக்குநர் குறிப்பிட்டார்.
என்றபோதிலும், ஏழை நாடுகளில் இருக்கும் வயோதிபர்களும் இளைஞர்களும் தங்கள் வசதிக்கு தகுந்த, கிடைக்கக்கூடிய மருத்துவ வசதியை பயன்படுத்தி இந்தத் தடையின் உயரத்தைக் குறைத்திருக்கின்றனர். காசநோயை (TB) குணப்படுத்த மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மருத்துவ சிகிச்சை இதற்கு ஓர் உதாரணம்.
உலகம் முழுவதும், எய்ட்ஸ், மலேரியா, வெப்பமண்டல நோய்கள் எல்லாம் சேர்த்து கொல்லும் ஆட்களைவிட அதிகமானோரை காசநோய் கொல்லுகிறது. ஒவ்வொரு நாளும் 8,000 பேர் சாகின்றனர். ஒவ்வொரு 100 டிபி நோயாளிகளில் 95 பேர் வளர்ந்து வரும் நாடுகளில் இருக்கின்றனர். சுமார் இரண்டு கோடி மக்கள் இப்போது டிபி நோய் முற்றிய நிலையில் பீடிக்கப்பட்டு இருக்கின்றனர். அடுத்த பத்து வருடங்களில், சுமார் மூன்று கோடி பேர் டிபியால் சாக நேரிடலாம். இந்த எண்ணிக்கை, பொலிவியா, கம்போடியா, மலாவி ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகைக்கு சமம்.
1997-ல், டிபியைக் குணப்படுத்த புதிய ஒரு சிகிச்சை முறையை உலக சுகாதார அமைப்பு (WHO) மிக சந்தோஷத்தோடு அறிவித்தது. இது, ஆறே மாதத்தில் குணப்படுத்தவல்லது. இந்த முறை சிகிச்சையில், ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய அவசியமோ அல்லது உயர் தொழில்நுட்ப மருத்துவ முறைகளை பயன்படுத்த வேண்டிய அவசியமோ இல்லை. “முதல் தடவையாக, டிபி கொள்ளைநோயின் தாக்குதலை மடங்கடிக்கும் முறைகளையும் நேர்த்தியான உபகரணங்களையும் உலகம் தன்கைவசம் வைத்திருக்கிறது. ஆனால், பணக்கார நாடுகளில் மட்டுமல்ல, உலகின் மிக மிக ஏழை நாடுகளிலும் இவை இருக்கின்றன” என உலக சுகாதார அமைப்பின் (WHO) தி டிபி ட்ரீட்மெண்ட் அப்சர்வர் எனும் பத்திரிகை குறிப்பிடுகிறது. “இந்தப் பத்தாண்டுகளில், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட மாபெரும் சாதனை இது” என சிலர் இந்த முறையை விளக்கியுள்ளனர். டாட்ஸ் சிகிச்சை முறை (DOTS) e என இது அழைக்கப்படுகிறது.
பழைய டிபி சிகிச்சை முறைகளைவிட இது மலிவானது. இருந்தாலும், இதில் கிடைக்கும் பலன் அமோகம். குறிப்பாக, வளர்ந்து வரும் நாடுகளில் இருப்பவர்களுக்கு இது மிக பலனளிக்கும் முறை. “இந்தளவுக்கு அதிகமான பலன்களை வேறெந்த டிபி தடுப்பு முறையும் கொடுக்கவில்லை” என உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய காசநோய் திட்டத்தின் இயக்குநர் டாக்டர். அராடா கோசீ குறிப்பிடுகிறார். “ஏழை நாடுகளிலும்கூட, 95 சதவீதம் குணப்படுத்தும் சக்திமிக்கது இந்த டாட்ஸ் முறை.” 1997-ன் முடிவில், 89 நாடுகள் டாட்ஸ் முறையை பின்பற்ற ஆரம்பித்து விட்டன. இன்றோ, இந்த எண்ணிக்கை 96 ஆக உயர்ந்திருக்கிறது. வளர்ச்சியடையா நாடுகளில் இருக்கும் கோடிக்கணக்கான ஏழை மக்களை இந்த முறை சென்றெட்டிடும் என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது. இதன்மூலம், வாழ்க்கைப் பந்தயத்தின் மூன்றாவது தடையின் உயரத்தை குறைக்க முடியும்.
பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதாலும், சுற்றுப்புறத்தை இன்னும் சுத்தமாக வைத்திருப்பதாலும், மருத்துவ வசதியை முன்னேற்றுவிப்பதாலும், மனிதன் தன்னுடைய சராசரி வாழ்நாளையும் ஆயுட்காலத்தையும் அதிகரித்திருக்கிறான். எனவே, நாம் எதிர்ப்படும் கேள்வி இதுவே: மனிதன் தன்னுடைய ஆயுட்காலத்தை அதிகபட்சமாக, அதாவது, எல்லைக் கோடே இல்லாமல் நீடிக்க முடியுமா?
[அடிக்குறிப்புகள்]
a “ஆயுட்காலம்” என்ற பதமும் “சராசரி வயது” என்ற பதமும் பெரும்பாலும் ஒரே அர்த்தத்தில் உபயோகிக்கப்படுகின்றன. என்றபோதிலும், இவ்விரண்டு பதங்களுக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. ஒருவர் வாழ்வார் என எதிர்பார்க்கப்படும் வருடங்களையே “ஆயுட்காலம்” என்ற பதம் குறிக்கிறது. “சராசரி வயது” என்ற பதமோ, மக்கள் தொகையில் ஒரு பகுதியினர் உண்மையில் வாழும் சராசரி வருடங்களையே குறிக்கிறது. எனவே, சராசரி வயதின் அடிப்படையில்தான் ஆயுட்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
b சரிசெய்யத்தக்க இப்படிப்பட்ட அம்சங்களோடுகூட, மாற்றியமைக்கப்பட முடியாத மனிதனின் மரபு வழிப் பண்பியல் சார்ந்த அம்சங்களும் அவனுடைய ஆரோக்கியத்தையும் வாழ்நாளையும் பாதிக்கிறது. இதைப் பற்றி அடுத்த கட்டுரை விளக்கும்.
c எளிமையான முறைகளைக் கொண்டு வீட்டு சுற்றுப்புறத்தை எப்படி முன்னேற்றுவிக்கலாம் என்பதற்கான கூடுதல் தகவல்களுக்கு, 1988, செப்டம்பர் 22, 1995, ஏப்ரல் 8, ஆங்கில விழித்தெழு! பிரதிகளில் வெளிவந்துள்ள, “சுத்தம் என்ற சவாலைச் சந்தித்தல்,” “உங்கள் உடல்நலத்தை தீர்மானிப்பது—உங்களால் செய்ய முடிவது” என்ற கட்டுரைகளைக் காண்க.
d யெகோவாவின் சாட்சிகள், தங்களுடைய வாராந்தர கூட்டங்களை நடத்தும் இடத்தை ராஜ்ய மன்றம் என அழைக்கின்றனர். இந்தக் கூட்டங்களுக்கு எல்லாரும் வரலாம். இதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
e டைரக்ட்லி அப்சர்வ்ட் ட்ரீட்மெண்ட், ஷார்ட்கோர்ஸ் என்பதன் சுருக்கமே டாட்ஸ் (DOTS). இந்த முறையைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, 1999, மே 22, விழித்தெழு! பிரதியில் வெளிவந்த “காசநோயை எதிர்க்க புதிய கவசம்” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
எப்படிப்பட்ட உடற்பயிற்சி, எந்தளவு?
“ஒவ்வொரு நாளும் முப்பது நிமிடங்களுக்கு மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுதல் நல்ல இலக்கு” என வயோதிபம் பற்றிய தேசிய நிறுவனம் (NIA) குறிப்பிடுகிறது. ஆனால், ஒரே சமயத்தில், 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டுமென இது அர்த்தப்படுத்தவில்லை. பத்து, பத்து நிமிடங்களாக மூன்று தடவை இதைச் செய்யலாம். ஒரே சமயம் 30 நிமிடங்கள் செய்வதால் ஏற்படும் அதே நன்மைகளைத்தான் இதுவும் கொடுக்கிறது. நீங்கள் எந்த வகையான உடற்பயிற்சிகளை செய்யலாம் என்பது பற்றி NIA நிறுவனத்தின், உடற்பயிற்சியை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! என்ற சிறுபுத்தகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது. “லிஃப்டில் போவதற்கு பதிலாக படிகளில் ஏறுவது அல்லது காரில் போவதற்கு பதிலாக நடந்து செல்வது போன்ற சுறுசுறுப்பான செயல்களில் ஈடுபடுவது போன்றவையும்கூட ஒரு நாளைக்குரிய 30 நிமிட உடற்பயிற்சியில் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். தோட்டத்திலுள்ள சருகுகளை பெருக்குதல், பிள்ளைகளோடு விளையாடுதல், தோட்டவேலை, ஏன் வீட்டு வேலையும்கூட உங்களுடைய 30 நிமிட உடற்பயிற்சியின் பாகமாக செய்யப்படலாம்.” இருந்தாலும், ஓர் உடற்பயிற்சி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன் உங்கள் டாக்டரை அணுகுவது ஞானமான காரியம்.
[படம்]
மிதமான உடற்பயிற்சி முதியோருக்கு பலத்தையும் ஆற்றலையும் பெற உதவும்
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
இசைந்துகொடுக்கும் மனதைக் கொண்டிருத்தல்
வயோதிபர்கள் தங்கள் மூளையை, வளைந்து கொடுக்கும் தன்மையோடு வைத்திருக்க சில அம்சங்கள் அவர்களுக்கு உதவியிருப்பதாக, ஆயிரக்கணக்கான வயோதிபர்களை வைத்து நடத்திய விஞ்ஞான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. “வாசித்தல், பயணம் செய்தல், கலைநிகழ்ச்சிகள், புதியதாக ஏதாவது பயிலுதல், சமூக சேவை மன்றங்கள், பொதுநல சங்கங்கள் ஆகியவற்றில் சுறுசுறுப்பாக ஈடுபடுதல்” போன்றவையே. “முடிந்தளவு, வித்தியாசமான காரியங்களில் ஈடுபடுங்கள்.” “ஏதாவது வேலை செய்துகொண்டிருங்கள். வேலை செய்வதில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றுவிடாதீர்கள்.” “டிவியை நிறுத்திவிடுங்கள்.” “வேறே ஏதாவது பொருளைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக அளிக்கப்படும் உரைகளில் கலந்துகொள்ளுங்கள்.” இப்படி செய்வது, சமூக அந்தஸ்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், மூளையில் புதிய இணைப்புகளை ஏற்படுத்தவும் உதவுகிறது.
[படம்]
இசைந்து கொடுக்கும் மனதை உடையவர்களாய் இருப்பதற்கு மனப்பயிற்சி அவசியம்
[பக்கம் 8-ன் பெட்டி/படம்]
வயோதிபர்களுக்கு ஆரோக்கியக் குறிப்புகள்
நல்ல, அறிவுப்பூர்வமான ஆலோசனைகளை பின்பற்றுவதன்மூலம், “ஆரோக்கியமாக, நீண்ட நாட்கள் வாழ்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கப்படலாம்” என ஐ.மா.-வின் ஆரோக்கியம், மனித வளத் துறையின் பிரிவாகிய, வயோதிபம் பற்றிய தேசிய நிறுவனம் குறிப்பிடுகிறது. இதோ! அந்த ஆலோசனைகள்:
• காய்கறிகள், பழங்கள் உட்பட, சமச்சீரான உணவை சாப்பிடுங்கள்.
• மதுபானங்களை அருந்தும் பழக்கம் இருந்தால், மிதமாக அருந்துங்கள்.
• புகைப்பிடிக்காதீர்கள். புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்துங்கள்.
• தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். ஓர் உடற்பயிற்சி திட்டத்தை ஆரம்பிக்கும் முன், டாக்டரிடம் ஆலோசனை கேளுங்கள்.
• குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்காதீர்கள்.
• வேலை, விளையாட்டு, சமூக சேவை மூலம் சுறுசுறுப்பாக இருங்கள்.
• வாழ்க்கையைப் பற்றி சாதகமான மனநிலையை கொண்டிருங்கள்.
• உங்களை சந்தோஷப்படுத்தும் காரியங்களில் ஈடுபடுங்கள்.
• தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
[பக்கம் 9-ன் பெட்டி]
மூளை உயிரணுக்கள்—புதிய கண்ணோட்டத்தில்
“உங்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும், மூளையின் எல்லா பாகத்திலும் உயிரணுக்கள் சாகின்றன என்றே இதுவரை நினைத்தோம்” என மனநோய் மருத்துவம் மற்றும் நரம்பியல் பேராசிரியர் டாக்டர். மெரிலின் ஆல்பர்ட் சொல்கிறார். “ஆனால், அது சரியல்ல. நல்ல ஆரோக்கியமுள்ள ஒருவரும்கூட வயோதிபம் அடையும்போது, சில மூளை உயிரணுக்கள் சாவது இயல்பே. ஆனால், அது மிக அதிக அளவில் அல்ல. மூளையின் சில பாகங்களில் மட்டுமே இது நிகழ்கிறது.” மேலும், மூளையில் புதிய உயிரணுக்கள் உருவாகுவதில்லை என்பதே வெகு காலமாக நிலவி வருகிற கருத்து. ஆனால், இது மூளையின் திறனை, ஒரேயடியாக, மட்டந்தட்டுவதாக “அத்தாட்சியின்றி சொல்லப்பட்டதாக” இருக்கிறதென சமீப கண்டுபிடிப்புகள் காட்டுவதாக நவம்பர், 1998, சையன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகை அறிவிக்கிறது. வயோதிபர்களின் மூளையும்கூட “நூற்றுக்கணக்கில் மேலுமதிகமான நியூரான்களை உற்பத்தி செய்யமுடியும்” என சமீபத்திய சான்றுகள் நிரூபிப்பதாக நரம்பியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
[பக்கம் 11-ன் பெட்டி]
வயோதிபர்கள் புத்திசாலிகள்?
“முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே” என பைபிள் கேட்கிறது. (யோபு 12:12) பதில்? வயோதிபர்களுக்கு இருக்கும் “உட்பார்வை, நிதானமாக தீர்மானித்தல், முரண்பாடான காரியங்களை தெளிவாக புரிந்துகொண்டு மதிப்பிடும் திறமை, பிரச்சினைகளை தீர்க்கும் நல்ல முறைமைகளை கண்டுபிடித்தல்” போன்ற தன்மைகளைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். “ஞானத்திலும், முன்யோசனையோடு, நடைமுறைக்கு ஒத்துவரும் ஆலோசனைகளைக் கொடுப்பதிலும், இளைஞர்களை முதியோர் விஞ்சிவிடுகின்றனர்” என ஆய்வுகள் காண்பிப்பதாக யு.எஸ். நியூஸ் அண்ட் உவேர்ல்ட் ரிப்போர்ட் குறிப்பிடுகிறது. “ஒரு தீர்மானத்தை எடுக்க இளைஞர்களைவிட முதியோருக்கு நீண்ட நேரம் எடுக்கிறது. இருந்தாலும், அவர்கள் எடுக்கும் தீர்மானம் பொதுவாக, நல்லவையாகவே இருப்பதாக” ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, பைபிள் புத்தகமாகிய யோபு சொல்கிறபடி, ஞானத்தின் அறிகுறி முதுமையே.
[பக்கம் 5-ன் படம்]
மனித வாழ்க்கை தடைஓட்டம் போன்றது
[பக்கம் 9-ன் படம்]
“மற்றவர்கள் உங்களோடிருப்பதை விரும்பும்படி செய்யுங்கள்” என ஒரு விதவை ஆலோசனை சொல்கிறார்
[பக்கம் 10-ன் படம்]
“வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை மற்றவர்கள் தெரிந்துகொள்ள உதவுவது திருப்தியளிக்கும் வேலை.” —ஈவ்லின்
[பக்கம் 10-ன் படம்]
“நம் ராஜ்ய மன்றத்தில், இளைஞர் முதியோர் ஆகிய எல்லாரோடும் பேசுவதை நான் விரும்புகிறேன்.”—லூயிஸ்