உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்
புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஜோன் ஓட்ஸ் குறிசொல்வதைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: பண்டைய காலத்தில், “குறிசொல்வதுதான் புத்திசாலித்தனத்தின் அடையாளம் என்று உலகமே நினைத்த சமயத்தில் எபிரெய தீர்க்கதரிசிகள் அதனை வெறுக்கத்தக்க கலை” என்றே கருதினர். ஏன்?
வாழ்க்கையை ஒரு நோக்கமில்லாத சக்தி கட்டுப்படுத்துவதாகவும், எழுதப்பட்ட தலைவிதியின் வழியில் மனிதன் செல்வதாகவும், இஸ்ரவேலரைச் சுற்றியிருந்த தேசத்தவர்கள் நம்பியபோதிலும் அப்படிப்பட்ட நம்பிக்கையை இஸ்ரவேலர்கள் வெறுத்து ஒதுக்கினர். அவர்களுக்கு அளித்த ஆலோசனையில் தேவன் இவ்வாறு சொன்னார்: “குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும் . . . உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.”—உபாகமம் 18:10, 11.
விதி என்ற போதனையின் ஆதிக்கம் இல்லாமலும், ஜோதிடர்களும் இல்லாமலேயே இஸ்ரவேலர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கமுடிந்தது. இதைப்பற்றி டேவோ என்ற பிரெஞ்சு கத்தோலிக்க என்சைக்கிளோப்பீடியா பின்வரும் விளக்கம் அளித்தது. “மனிதர்களும் உலகமனைத்தும் நோக்கமற்ற ஒரு சக்தியின் இரும்புப்பிடியில் சிக்கியிருக்கவில்லை. மனிதனைக் குறித்து கடவுளுக்கு ஒரு நோக்கம் இருந்தது” என இஸ்ரவேல் தேசத்தினர் நம்பினர். அந்த நோக்கம் என்ன?
விதியும் சுயாதீனமும்
தம்முடைய கட்டளைகளுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிந்திருந்தால் அவர்கள் சமாதானமும் செழுமையும் அனுபவிப்பார்கள் என்பதாக தேவன் வாக்குக்கொடுத்திருந்தார். (லேவியராகமம் 26:3-6) இதோடுகூட நீதியுள்ள நிலைமைகளை பூமியில் நிலைநாட்டும் மேசியாவையும் அவர்கள் எதிர்பார்த்தனர். (ஏசாயா 11-ஆம் அதிகாரம்) இவ்வாறு தேவன் வாக்குறுதியளித்திருந்தமையால், தனிநபர்கள் ஏனோதானோ என்று இருக்கலாம் என்பதை இது அர்த்தப்படுத்தாது. அதற்கு பதிலாக அவர்களிடம் பின்வரும் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது: “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்.”—பிரசங்கி 9:10.
இதன் சாராம்சம்தான், தானே தேர்ந்தெடுக்கும் சுயாதீனம். இஸ்ரவேலர்கள் தேவனை சேவித்து, தங்களது எதிர்காலத்தை தாங்களே வடிவமைக்கும் சுதந்திரம் அவர்களுக்கிருந்தது. அவர்களிடம் தேவன் இவ்வாறு வாக்களித்திருந்தார்: ‘நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து, யெகோவாவை சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால், நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணுவேன்.’ (உபாகமம் 11:13, 14) இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிந்து நடந்தபோது தேவனுடைய ஆசீர்வாதங்கள் அவர்களுக்கு இருந்தன.
கடவுள் இஸ்ரவேலர்களுக்கு வாக்களித்திருந்த தேசத்தில் கால் வைப்பதற்கு முன் அவர்கள் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுப்பதற்கான பின்வரும் வாய்ப்பை அளித்தார்: “இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.” (உபாகமம் 30:15) ஒவ்வொருவருடைய நடத்தை மற்றும் தீர்மானங்கள்தான் அவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும். தேவனை சேவித்தால் ஜீவனையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு செய்ய மறுத்தால் வாழ்க்கையே அவஸ்தைதான். அப்படியென்றால் இன்றைய நிலை என்ன?
காரணகாரியம்
நம்மை ஏராளமான இயற்கைச் சட்டங்கள் கட்டுப்படுத்துகின்றன, அவை நம்முடைய நன்மைக்காகவே இயங்குகின்றன. அவற்றில் ஒன்றுதான் காரணகாரியம் என்ற சட்டம். அதை பைபிள் இவ்விதமாக விளக்குகிறது, “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” (கலாத்தியர் 6:7) இந்த நியமத்தை நாம் மதித்து ஏற்றுக்கொள்வோமென்றால் எதிர்காலத்தில் நடக்கும் சில நிகழ்ச்சிகளின் போக்கு எவ்வாறு இருக்கும் என்று கணிக்க முடியும்.
வாகனத்தை ஜாக்கிரதையாக ஓட்டுவதற்கு பதில், வருவது வரட்டும் என்று படுவேகமாக ஓட்டுவோமென்றால் விபத்து நடக்கும் வாய்ப்புகள் அதிகம். நாம் புகைபிடிக்காதிருப்பதற்கு பதில் புகைபிடிப்பவர்களாக இருந்தால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தக் கட்டுரைகளின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலைப் போன்ற தாக்குதலில் நாம் சிக்கும் வாய்ப்புகள் மிகக்குறைவே. ஆகவே அப்படியொரு சம்பவம் நம் வாழ்க்கையில் நடக்குமா நடக்காதா என்று சிந்திப்பது தேவையற்றதே. ஆனால், விதியால்தான் என் வாழ்க்கையே இப்படியிருக்கிறது என்று நினைப்பதால் நமக்கு எந்த நன்மையும் இல்லை. அது நிகழ்காலத்தையோ அல்லது எதிர்காலத்தையோ ஒளியூட்டுவதில்லை. ஒரு பொய்யை நம்புவதால் எதிர்காலத்தில் எந்தவித பாதுகாப்பும் கிடைக்கப்போவதில்லை. அவ்விதமாகவே, எல்லா சம்பவங்களையும் கடவுள்தான் நடத்துகிறார் என்று நினைப்பதிலும் எந்தப் பயனும் இல்லை.
உங்கள் எதிர்காலம் எப்படியிருக்கும்?
நம்முடைய எதிர்காலம் ஏற்கெனவே நம் தலையில் எழுதப்படவில்லை; ஆனால் நிகழ்கால நடத்தையால் வடிவமைக்கப்படுகிறது. ஜீவன் என்பது கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு என்பது உண்மைதான்; இருந்தாலும், நம்முடைய நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதில் நமக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று பைபிள் தெளிவாகவே எடுத்துக்காட்டுகிறது. நம்முடைய நடத்தையால் நாம் கடவுளை சந்தோஷப்படுத்த முடியும் அல்லது துக்கப்படுத்தவும் முடியும் என்பது தெளிவான உண்மை. இதிலிருந்து நம்முடைய வாழ்க்கையை ஓரளவிற்கு நாமே கட்டுப்படுத்துவதற்கான திறமையை கடவுள் அளித்திருக்கிறார் என்பது தெரிகிறது.—ஆதியாகமம் 6:6; சங்கீதம் 78:40; நீதிமொழிகள் 27:11.
கூடுதலாக, நமது வாழ்க்கையில் நாம் காட்டும் சகிப்புத்தன்மை, நாம் வாழும் முறை இவற்றுக்கு ஏற்றாற்போல்தான் நமது எதிர்காலமும் அமையும் என்பதாக வேதவாக்கியங்கள் அழுத்திக்கூறுகின்றன. ஒருவேளை எல்லாம் முன்பே எழுதப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட வாக்குறுதிகளுக்கு எந்த அர்த்தமும் இருக்காது. (மத்தேயு 24:13; லூக்கா 10:25-28) அப்படியென்றால், நாம் கீழ்ப்படிதலுடன் தேவனுக்கு உண்மையாக நடக்கும் தீர்மானத்துடன் இருந்தால் நமக்கு என்ன எதிர்காலம் காத்திருக்கிறது?
மனிதகுலத்திற்கு மிக அருமையான எதிர்காலம் காத்திருப்பதாக பைபிள் அறிவிக்கிறது. இந்த பூமி சமாதானமும் பாதுகாப்பும் நிறைந்த ஒரு பரதீஸாக மாற்றப்படும். (சங்கீதம் 37:9-11; 46:8, 9) அப்படிப்பட்ட எதிர்காலம் நிச்சயமாக வரும், ஏனென்றால் சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகர் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். (ஏசாயா 55:11) பூங்காவனமாக்கப்பட்ட பூமியில் நாம் வாழ்வதற்கும் அல்லது அந்த ஆசீர்வாதம் நமக்கு கிடைக்காதிருப்பதற்கும் நம் தலையெழுத்து காரணமில்லை. அப்படிப்பட்ட நிலைமைகளில் சந்தோஷமாக இருப்பதற்கு இப்போதே கடவுளுடைய சித்தத்தை கீழ்ப்படிதலுடன் செய்ய வேண்டியது அவசியம். (2 தெசலோனிக்கேயர் 1:6-8; வெளிப்படுத்துதல் 7:14, 15) கடவுள், தேர்ந்தெடுக்கும் சுயாதீனத்தை நமக்கு அளித்திருக்கிறார், ஆகவே நம்மை பின்வருமாறு உற்சாகப்படுத்துகிறார்: ‘நீ . . . பிழைக்கும்படிக்கு நீ ஜீவனைத் தெரிந்துகொள்.’ (உபாகமம் 30:19) நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்கள் எதிர்காலம் விதியின் கரங்களில் இல்லை; அது உங்கள் கைவசம்தான் இருக்கிறது.
[பக்கம் 10-ன் படம்]
கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு ஓர் அருமையான எதிர்காலத்தை அளிப்பதே கடவுளின் நோக்கம்